காவல்துறையின் முதுகெலும்பாக இருப்பவர்கள் உதவி ஆய்வாளர்களாக பணியில் சேர்ந்து பணியாற்றும் இடைநிலை அதிகாரிகள்தான். இந்த அதிகாரிகளின் பதவி உயர்வில் அரசு செய்யும் குளறுபடிகள் கொஞ்ச நஞ்சம் இல்லை. இந்தக் குளறுபடிகளால் பதவி உயர்வு கிடைக்காமல் குமுறிக்கொண்டிருக்கும் அதிகாரிகள் ஏராளம்.
அரசுப் பணியில் சேர்பவர்கள் அனைவரும் எதிர்ப்பார்ப்பது, உரிய நேரத்தில் கிடைக்கும் பதவி உயர்வையே. மற்ற துறைகளில் இல்லாத ஒரு பெரிய குழப்பம் காவல்துறையில் எப்போதும் உண்டு. இந்த குழப்பத்தில் சிக்கி பதவி உயர்வு இல்லாமல் 1976 மற்றும் 1979ம் தொகுதியைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
வழக்கமாக உதவி ஆய்வாளர்கள் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்படுவது வழக்கம். 1976 மற்றும் 1979ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உதவி ஆய்வாளர்கள் மட்டும் வழக்கத்துக்கு மாறாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உதவி ஆய்வாளர்களின் பணி மூப்பை எதை வைத்து நிர்ணயம் செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டது.
வழக்கமாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களின் பணி மூப்பு டிஎன்பிஎஸ்சி தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்ணை வைத்து முடிவு செய்யப்படும். சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் காவல்துறையினரின் பணி மூப்பு காவலர் பயிற்சிக் கல்லூரியில் அவர்கள் பெறும் மதிப்பெண்ணை வைத்து முடிவு செய்யப்படும்.
1976 மற்றும் 1979ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உதவி ஆய்வாளர்களின் பணி மூப்பை அவர்கள் டிஎன்பிஎஸ்சி மதிப்பெண்ணை வைத்து முடிவு செய்வதா, காவலர் பயிற்சிக் கல்லூரியில் பெற்ற மதிப்பெண்ணை வைத்து முடிவு செய்வதா என்ற குழப்பம் ஏற்பட்டது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், அந்த மதிப்பெண்ணை வைத்துதான் பணி மூப்பை முடிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள்.
காவலர் பயிற்சிக் கல்லூரியில் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் அந்த மதிப்பெண்ணை வைத்துதான் பணி மூப்பை முடிவு செய்ய வேண்டும் என்று வழக்கு தொடுத்தார்கள். இந்த இரண்டு முறைகளையும் ஆராய்ந்தால், காவலர் பயிற்சிக் கல்லூரியில் பெற்ற மதிப்பெண்ணை வைத்து பணி மூப்பை நிர்ணயம் செய்வதே பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் காவலர் பயிற்சிக் கல்லூரியில், உடற் தகுதி, சட்டக் கல்வி, ஆயுதப் பயிற்சி என்று முழுமையான பயிற்சிகள் வழங்கப்படும். ஆனால் டிஎன்பிஎஸ்சி தேர்வு வெறும் எழுத்துத் தேர்வு மட்டுமே.
இந்த வாதத்தை ஏற்று, சென்னை உயர்நீதிமன்றமும், காவலர் பயிற்சிக் கல்லூரியில் பெற்ற மதிப்பெண்ணை வைத்தே பணி மூப்பை முடிவு செய்ய வேண்டும் என்று தீர்ப்பும் வழங்கி விட்டது.
ஆனால், இந்தத் தீர்ப்பையும் உதாசீனப்படுத்தி விட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தப் பதவி உயர்வையும் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது அரசு.
1976ம் ஆண்டு உதவி ஆய்வாளர்களாகச் சேர்ந்தவர்கள் தற்போது, காவல் கண்காணிப்பாளர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு உதவி ஆய்வாளருக்கும் கனவு ஓய்வு பெறும் போது காவல் கண்காணிப்பாளராக ஓய்வு பெற வேண்டும் என்பதே. எஸ்.பி என்ற அந்தஸ்து மட்டும் காரணமல்ல, எஸ்.பி பதவியில் கூடுதலாக பணப்பயன் கிடைக்கும் என்பதும் ஒரு காரணம்.
1976ம் ஆண்டு பணியில் சேர்ந்த 250 உதவி ஆய்வாளர்களில் தற்போது எஞ்சியிருப்பது 14 பேர் மட்டுமே. இந்தப் 14 பேரும் தற்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அடுத்த ஆறு மாதங்களில் ஓய்வு பெற உள்ளனர். எஸ்பி பணியிடத்தில் 22 இடங்கள் காலியாக இருந்தும் இவர்களுக்கு என்ன காரணத்தாலோ இரண்டு ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாமலேயே உள்ளது.
ஏற்கனவே பதவி உயர்வு இல்லாமல் பெரும் மனக்குமைச்சலில் இருக்கும் இவர்களுக்கு அடுத்த இடியாக, க்ரூப் 1 தேர்வில் நேரடியாக டிஎஸ்பியாக பணியில் சேர்ந்தவர்களை தற்போது கூடுதல் எஸ்.பிக்களாக இருக்கும் 14 பேருக்கு மேல் வைத்து உத்தரவு போட்டுள்ளது அரசு. நேரடியாக டிஎஸ்பியாக நியமனம் பெற்றவர்களுக்கு குறைந்த பட்சம் இன்னும் 20 ஆண்டுகள் பணிக்காலம் இருக்கும். ஆனால் 1976ல் பணியில் சேர்ந்தவர்கள் அனைவரும் அடுத்த ஆண்டுக்குள் ஓய்வு பெற்று விடுவார்கள்.
இது தவிரவும், தற்போது இடையில் சேர்க்கப்பட்டுள்ள க்ரூப் 1 நேரடி டிஎஸ்பிக்கள், 1976ல் பணியில் சேர்ந்து டிஎஸ்பிக்களாக இருந்தவர்களிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த 1976ம் தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாததால், இவர்களுக்கு அடுத்த 1979ம் ஆண்டு தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் தற்போது டிஎஸ்பிக்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கூடுதல் எஸ்.பி பதவி உயர்வு வந்திருக்க வேண்டும். இவர்களும் பதவி உயர்வு கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாரகள்.
இந்தப் பதவி உயர்வு மட்டும் இல்லை. கீழ் நிலையில் உள்ள காவல்துறை அதிகாரிகளின் பதவி உயர்வில் எப்போதுமே குளறுபடிதான். 1999ம் ஆண்டு, நேரடியாக உதவி ஆய்வாளர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு 2009 அல்லது 2010ல் பதவி உயர்வு வந்திருக்க வேண்டும். முன்னாள் டிஜிபி அலெக்சாண்டரிடம் உதவி ஆய்வளாளர்களாக பணியாற்றிய இருவர், காவலர்களாக பணியில் சேர்ந்து உதவி ஆய்வாளர்களாக இருந்தவர்கள். அவர்கள் இருவருக்கும் சலுகை செய்ய வேண்டும் என்பதற்காக, அவர்களோடு 180க்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர்களின் பணி மூப்பை 1999ல் நேரடியாக பணியில் சேர்ந்த உதவி ஆய்வாளர்களுக்கு முன் வைத்து, அதன் மூலம் இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வை விரைவாகப் பெறுவதற்கு ஏற்பாடு செய்தனர். இதனால், 1999ல் பணியில் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் நீதிமன்றத்தை அணுக நேரிட்டது.
இது போல, ஒவ்வொரு தொகுதியிலும் ஏதோவதொரு குளறுபடியை ஏற்படுத்தி உரிய நேரத்தில் பதவி உயர்வு கிடைக்காமல் ஏதாவதொரு சிக்கலை இழுத்து விடுவார்கள்.
இந்த அதிகாரிகளின் பதவி உயர்வுகளில் இத்தனை சிக்கல்கள் இருந்தாலும், ஐபிஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு மட்டும் எவ்வித தங்கு தடையும் இன்றி உரிய நேரத்தில் கொடுக்கப்படும். ஐபிஎஸ் லாபி அப்படிப்பட்ட லாபி.
கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளின் பதவி உயர்வை கவனிக்க வேண்டியது இதே ஐபிஎஸ் அதிகாரிகள்தான். தங்கள் பதவி உயர்வுக்காக டெல்லிக்கும், தலைமைச் செயலகத்துக்கும் பல்வேறு லாபிகளைச் செய்யும் இந்த அதிகாரிகள், கீழ் நிலை அதிகாரிகளின் பதவி உயர்வு தொடர்பான சிக்கல்களை தீர்த்து வைப்பதில் சிறிதும் அக்கறை காட்டுவதில்லை.
காவல்துறையில் உயர் அதிகாரிகளாக இருப்பவர்கள் தங்கள் கீழ் பணியாற்றுபவர்களின் குறைகள் என்ன என்பதை கேட்டறிந்து, அந்தக் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்படி எடுப்பவரே சிறந்த அதிகாரி., ஆனால் குறைந்தபட்சம் அவர்கள் குறைககளை காது கொடுத்து கேட்பதற்கு கூட உயர் அதிகாரிகள் தயாராக இல்லை.
ஒரு உயர் அதிகாரியிடம் சப் இன்ஸ்பெக்டர் பணியாற்றினார். அந்த சப் இன்ஸ்பெக்டருக்கு வேலையே அந்த உயர் அதிகாரியின் விவசாய நிலத்துக்கு உரம் வாங்கிப் போடுவது, பூச்சி மருந்து அடிக்க ஏற்பாடு செய்வது, விளை பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்வது, இது போன்ற வேலைகள் தான். இது போக, அவர் மகளை மருத்துவக் கல்லூரியிலிருந்து அழைத்து வருவதற்கு வாகனம் ஏற்பாடு செய்வது. ஊரிலிருந்து வரும் அதிகாரியின் உறவினர்களை ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வர வாகனம் ஏற்பாடு செய்வது போன்ற வேலைகள் தான் அந்த உதவி ஆய்வாளருக்கு பிரதான வேலை.
அந்த உயர் அதிகாரி, பின்னாளில் காவல்துறை அதிகாரிகளின் பதவி உயர்வு தொடர்பான முடிவுகளை எடுக்கும் பதவிக்கு வருகிறார். அப்போது இவரிடம் நீண்ட நாளாக வேலை செய்த உதவி ஆய்வாளர், தன்னுடைய பதவி உயர்வு குறித்து இவரிடம் விண்ணப்பம் அளித்த போது, எந்த விதமான உதவியையும் செய்யாதது மட்டுமல்ல…. அந்த உதவி ஆய்வாளர் பணியாற்றிக் கொண்டிருந்த துறையில் உள்ள அதிகாரிக்கு போன் செய்து, “என்ன அந்த சப் இன்ஸ்பெக்டருக்கு நீங்கள் வேலை எதுவும் கொடுக்கவில்லையா ? வேலை நேரத்தில் என்னை வந்து பார்க்கும் அளவுக்கு அந்த ஆளுக்கு நேரம் இருக்கிறதா ?” என்று போட்டுக் கொடுத்தார். சொந்த வேலைகளையெல்லாம் செய்ததற்கும், விசுவாசமாக உழைத்தற்கும் கிடைத்த பரிசு இது.
1976ம் ஆண்டு தொகுதியைச் சேர்ந்த ஒரு அதிகாரி, தற்போது டிஜிபியாக இருக்கும் ராமானுஜத்தை சந்தித்து, “சார் எங்கள் பேட்சில் இன்னும் 14 பேர்தான் இருக்கின்றனர். அனைவரும் 6 மாதத்தில் ஓய்வு பெற்று விடுவார்கள். அவர்கள் பதவி உயர்வுக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கேட்டதற்கு ராமானுஜம் சொன்ன பதில் என்ன தெரியுமா ?
“நீங்கள் எஸ்பி ஆனால் எனக்கென்ன… ஆகாவிட்டால் எனக்கென்ன… இது போன்ற கோரிக்கைகளையெல்லாம் எடுத்துக் கொண்டு என்னிடம் வராதீர்கள்” என்று கூறியிருக்கிறார்.
தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, சட்டம் ஒழுங்கு மற்றும் உளவுத்துறை ஆகிய இரண்டு பதவிகளையும் கடந்த 11 மாதங்களாக கவனித்து வரும் ராமானுஜத்திற்கு தனக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகளின் மனக்குறை என்ன என்பது தெரிந்திருக்க வேண்டும். ராமானுஜம் நினைத்தால், ஒரே நாளில் முடியக் கூடிய காரியம் இது. ஆனால், அவர் சொன்ன பதிலைப் பார்த்தீர்களா ?
உண்மையில் காவல்துறையின் செயல்பாடுகளின் முதுகெலும்பாக இருப்பது, உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்தான். இவர்கள்தான் களத்தில் இறங்கி அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொள்பவர்கள். இந்த உயர் உயர் அதிகாரிகள் இருக்கிறார்களே…… ஏ.சி அறைக்குள் உட்கார்ந்து கொண்டு சம்பவ இடத்துக்கே செல்லாமல், தொலைபேசியில் அறிவுரை வழங்குவதற்குத்தான் இவர்கள் லாயக்கு. சம்பவ இடத்துக்குச் சென்றால் ஏதாவது சிக்கல் வந்து விடுமோ என்று, சம்பவ இடத்துக்கே போக மாட்டார்கள். ஆனால் இவர்களுக்கு உரிய நேரத்தில் பதவி உயர்வு…. உண்மையாக உழைப்பவர்களுக்கு ஏமாற்றம்.
காவல்துறையினரின் நலன்களைப் பேணுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஜெயலலிதா, இந்த அதிகாரிகளின் குறைகளைக் கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதையே இந்த அதிகாரிகள் விரும்புகிறார்கள்.
முதல்வரை நேரில் சந்தித்து, அவரிடம் தங்கள் குறைகளை எடுத்துரைக்க எடுத்த முயற்சிகளைக் கூட, தலைமைச் செயலகத்தில் இருக்கும் அதிகாரிகள் தடுத்திருப்பதாகத் தகவல்.
மனக்குறையோடு பணியாற்றி வரும் இந்த அதிகாரிகளின் குறைகளைத் தீர்க்க ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தால், பல்வேறு அதிகாரிகள் அவரை மனதார வாழ்த்துவார்கள்.