செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களை விடுவிக்கக் கோரியும் அம் முகாம்களை மூடக் கோரியும் தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை.
தமிழகத்தில் 110க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் முகாம் உள்ளன. இவை சாதாரணமான மக்கள் வாழும் முகாம்கள். செங்கல்பட்டிலும், பூந்தமல்லியிலும் சிறப்பு முகாம் என்ற பெயரில் இரண்டு முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. செங்கல்பட்டில் இருந்த கிளைச் சிறையை 1991ம் ஆண்டு தமிழக அரசு, சிறப்பு முகாமாக மாற்றியது. இதே போல 2008 வரை பூந்தமல்லியில் சிறப்பு கிளைச் சிறையாக இருந்த சிறையை இலங்கைத் தமிழர்களின் சிறப்பு முகாமாக மாற்றப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து உயிருக்குத் தப்பி ஓடி வந்த தமிழர்களை மண்டபம் முகாமில் வைத்திருந்து பின்னர் அவர்கள் இயக்கம் தொடர்பானவர்களாக அடையாளம் காணப்பட்டாலோ, அல்லது தமிழகத்தில் ஏதாவது வழக்கில் சம்பந்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியோ, அவர்களை இந்த இரண்டு முகாம்களுக்குள் அடைத்து வைப்பதை தமிழக அரசு வழக்கமாக செய்து வருகிறது.
கடந்த 2007 முதல் 2009 வரையான காலகட்டங்களில் ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள அரசின் கொலைவெறித் தாக்குதலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்தபோது அவர்களுக்கான அத்தியாவசிய மருந்துகளை, உயிர்காக்கும் மருந்துகளை தமிழகத்திலிந்து இலங்கைக்கு கடத்த முயன்றதாக பலர் கைது செய்யப்பட்டு இந்த முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர். அதே போல, அத்தியாவசிய பொருட்களான பேட்டரி, டார்ச் லைட், சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகள், பெட்ரோல், டீசல் மற்றும் என்ஜின்கள் ஆகியவற்றை கடத்தியதாகவும், பீடி, போன்றவற்றை கடத்தியதாகவும் பலர் கைது செய்யப்பட்டு மேற்படி முகாம்களில் அடைக்கப்பட்டனர்.
இந்த சிறப்பு முகாம்கள் இலங்கையில் இருக்கும் முள்வேலி முகாம்களுக்கு எந்த வகையிலும் குறைவானதில்லை. பெயருக்கு முகாம் என்று அழைக்கப்பட்டாலும், இது ஒரு சிறையை விட கொடிய இடமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அடைக்கப்பட்டவர்கள், தங்களை இந்த கொடிய கொட்டடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு, பல்வேறு காலகட்டங்களில் உண்ணாவிரதம் போன்ற பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்தி வந்தனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முகாமிலிருக்கும் மரத்திலேறி, அதிலிருந்து குதித்து தற்கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளனர். பல்வேறு நேர்வுகளில், போராட்டங்களைத் தொடர்ந்து அவ்வப்போது சிலர் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டும் வந்துள்ளனர்.
02.02.2010 அன்று இது போல தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த ஈழத் தமிழர்களை நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் முகாம் உள்ளே புகுந்து அவர்களை அடித்து, காயப்படுத்தி அவர்களில் 15 பேர் மீது பொய்யான வழக்கை போட்டு அவர்களை வேலூர் சிறையில் அடைத்தனர்.
பலர் இலங்கையில் நடந்த சிங்களர்களின் தாக்குதலில் குண்டுக்காயத்தோடு வந்தவர்களுக்கு முகாமில் சரிவர சிகிச்சை அளிக்காமல் அவதிப்பட்டு இருந்தனர். இவ்வாறு பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட அவர்கள் தங்களின் உரிமைக் கோரிக்கைக்காக தொடர்ந்து உண்ணாவிரதம் என்ற காந்திய வழியில் போராடி வந்துள்ளனர்.
தற்போது செங்கல்பட்டு முகாமில் 32 ஈழத் தமிழர்களும், பூந்தமல்லி முகாமில் 5 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தில் அகதியாக வந்து தங்களுக்கு எந்தவொரு உரிமையும் கொடுக்கப் படாததால், வெளிநாடுகளுக்கு கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல முயன்றார்கள் என்பதும், இவர்களில் 6 பேர், குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர்கள். இவர்களில் சிலர் மீதான குற்றச்சாட்டு, பாஸ்பார்ட் போன்ற பயண ஆவணங்கள இல்லாமல் இந்தியாவிற்குள் வந்தார்கள் என்பதாகும். இன்னும் 8 பேர் மீது எந்தவொரு வழக்கும் நிலுவையில் இல்லை. இவர்களில் சிலர் மீது 2009 காலகட்டத்தில் உயிர்காக்கும் மருந்துகளையும், ரத்த உறைகளையும், இலங்கைக்கு அனுப்ப முயற்சித்தார்கள் என்பதாகும். இவ்விரண்டு முகாம்களில் அடைக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட, வெடி பொருட்களை கடத்தியதாகவோ, ஆயுதங்களை கடத்தியதாகவோ, குற்றச்சாட்டுகள் இல்லை.
செங்கல்பட்டு முகாமில் உள்ளவர்களில் இன்றைய தேதியில் 17 பேர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இன்றிலிருந்து 54 வயதான சந்திரகுமார் நீர் கூட அருந்தாமல், தனது உண்ணாவிரதத்தை துவங்கியிருக்கிறார். அவர்களின் கோரிக்கை மற்ற முகாம்களில் இருக்கும் தங்களுடைய உறவினர்களோடு தங்களை சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்பது மட்டுமே. இல்லாவிட்டால், இலங்கை அல்லாத வேறு நாட்டிற்கு செல்வதற்கு தங்களை அனுமதிக்க வேண்டும் என்பதே.
இவர்களில் யாரேனும் இலங்கைக்குச் செல்ல நேரிட்டால், அவர்களைப் பற்றிய தகவல்களை இலங்கை உளவுத்துறைக்கு தமிழக க்யூ பிரிவு காவல்துறையினரே கொடுத்து விடுவதால் அவ்வாறு முகாமிலிருந்து செல்பவர்கள் அங்கு கைது செய்யப்பட்டு அவர்கள் குறித்த விபரமே தெரியாத சம்பவங்கள் நடந்துள்ளன.
இலங்கையில் சிங்கள உளவுத்துறை ஈழத் தமிழர்களை பிடித்து சித்திரவதை செய்து, துன்புறுத்துவதற்கு ஈடாக, தமிழகத்தில் உள்ள உளவுத்துறையான க்யூ பிரிவு காவல்துறையினர் ஈழத் தமிழர்களை தொடர்ச்சியாக பொய் வழக்கு போட்டும், பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து சித்தரவதை செய்தும், அவர்களிடம் பணம் பறிப்பதுமான வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் க்யூ பிரிவு காவல்துறையினர், இந்த ஏதிலிகளை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே, அவர்கள் நீதிமன்றத்தின் மூலம் உத்தரவு பெற்று, பிணையில் வந்தால் கூட, அவர்களை செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லியில் உள்ள சித்திரவதைக் கூடங்களில் அடைத்து வைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.
இதற்கு முன்பு உண்ணாவிரதம் இருந்தால், அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி விடுவித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், கடந்த ஆறு மாத காலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இது வரை யாரும் விடுவிக்கப்படவில்லை. அதிகாரிகள் பல்வேறு உறுதிமொழிகள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இலங்கையில் முள்வேலி முகாம்களில் ஈழத்தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டு சிங்கள இனவெறி அரசால் சித்திரவதை செய்யப்படுவது போலவே தமிழகத்தில் இந்த இரண்டு முகாம்கள் இருப்பதென்பது அனைத்து ஜனநாயக சக்திகளாலும், மனித உரிமை அமைப்புகளாலும், அரசியல் கட்சிகளாலும் கண்டிக்கப் பட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், இந்த இரண்டு முகாம்களை மூடுவதற்கு தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்த வேண்டும்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லியில் இயங்கி வரும் இரண்டு முகாம்களையும் மூடுவதோடு, அதில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்து, அவர்களுடைய உறவினர்களோடு அவர்களை தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். இனியும் எந்த ஈழத் தமிழர்களும் வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ், தடுப்புக் காவலில் வைக்கப் படக் கூடாது. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, உண்ணாவிரதப் போராட்டத்தில் இருக்கும் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லியில் உள்ள ஈழ ஏதிலிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்.