செங்கல்பட்டு பூந்தமல்லியில் உள்ள அகதிகளுக்கான “சிறப்பு” முகாம்களை மூடக் கோரி தமிழக மக்கள் உரிமைக் கழகம் நடத்தும் ஐந்தாவது போரட்டமாக இன்று சென்னை மெமோரியல் ஹால் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு முன், அந்த அகதிகள் மீது கர்ண கொடூரமான முறையில் ஒரு காட்டுமிராண்டித் தாக்குதலை, தற்போதைய அண்ணா நகர் துணை ஆணையர் ப்ரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் தற்போதைய திருவாரூர் எஸ்.பி.சேவியர் தன்ராஜ் தலைமையில் நடந்த போதும், அதைக் கண்டித்து தமிழக மக்கள் உரிமைக் கழகம் ஆர்ப்பபாட்டம் நடத்தியது. அதன் பிறகு, தலைமைச் செயலக முற்றுகை போராட்டம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தியதன் தொடர்ச்சியாக, 10வது நாளாக இன்று உண்ணாவிரதம் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த அகதிகளின் வேதனையான நிலையை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லும் பொருட்டு, இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்றுப் பேசிய தோழர் புகழேந்தி, செங்கல்பட்டில் கிளைச்சிறையாக இருந்த கட்டிடத்தையும், ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை அடைத்து வைப்பதற்கென்றே கட்டிய பூந்தமல்லி சிறையும் எப்படி சிறப்பு முகாம்களாக மாற்றப்பட்டு, சிறையை விடக் கொடிய வதை முகாம்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை எடுத்துக் கூறினார். சில மாதங்களுக்கு முன், அங்கே 13 நைஜீரியர்கள் அடைக்கப்பட்டதையும், அவர்கள் கொடுத்த தொல்லை பொறுக்க முடியாமல், இந்திய அரசு, அவர்களை 3 லட்ச ரூபாய் செலவு செய்து, விமானத்தில் அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்ததை குறிப்பிட்டு, நைஜீரியர்களுக்கு கருணை காட்டும் அரசு, தமிழர்களை கொடுமைப் படுத்துவதைக் குறிப்பிட்டார்.
தமிழர்களை வதைப்பதற்கென்றே தமிழகத்தில் க்யூ பிரிவு காவல்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்ட புகழேந்தி, ஒரு நேர்வில், ஒரு ஈழத் தமிழரை ஒரு க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் செருப்பால் அடித்த சம்பவத்தையும் குறிப்பிட்டார். ராஜீவ் கொலைக்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிராக எந்த ஒரு வன்முறைச் சம்பவத்திலும், ஈழத் தமிழர்கள் இறங்காத நிலையில், அவர்களை இப்படி சித்திரவதை செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பினார். க்யூ பிரிவு காவல்துறையினரைப் போன்ற தமிழின விரோதிகளை எங்குமே பார்க்க முடியாது என்று குறிப்பிட்ட புகழேந்தி, அந்த ஈழ எதிலிகளிடம் பணம் பறிப்பதிலிருந்து, அவர்களை அடித்துத் துன்புறுத்துவது வரை, க்யூ பிரிவு காவல்துறையினர், ஜெர்மனியின் நாஜிப் படைகளை விட மோசமாக நடந்து கொள்வதாக குறிப்பிட்டார்.
அய்யா பழ.நெடுமாறன் பேசுகையில், ஈழத் தமிழர்கள் உலகெங்கும் நல்ல முறையில் நடத்தப்படுகையில், இந்தியாவில் மட்டும் அவர்கள் ஒதுக்கப்பட்டவர்களாக, ஒடுக்கப்பட்டவர்களாக நடத்தப்படுகிறார்கள் என்றும், ஐக்கிய நாடுகள் அவை அகதிகளுக்கென்று கொடுத்துள்ள உரிமைகள் கூட ஈழ அகதிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டார்.
மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் ஈழ ஏதிலிகளைப் பார்ப்பதற்காக செங்கல்பட்டு முகாமிற்கு, வைகோவின் உத்தரவுப்படி சென்று பார்க்க முயற்சி செய்த போது, அவர்களைப் பார்ப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டதையும், அரசின் பொதுத் துறைச் செயலாளர் உத்தரவின்படியே அவர்களைப் பார்க்க முடியும் என்றும் அவர்களைப் பார்க்க விடாமல் அனுமதி மறுக்கப்பட்டதைக் குறிப்பிட்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு பேசுகையில், 2009 பொதுத் தேர்தலின் போது, அதிமுகவுக்கு வாக்களித்தால், இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி தனி ஈழத்தை பெற்றுத் தருவேன் என்று வாக்குறுதி அளித்த ஜெயலலிதாவின் பேச்சைக் குறிப்பிட்ட வன்னி அரசு, ஜெயலலிதா தனி ஈழத்தைப் பெற்றுத் தர வேண்டாம், குறைந்த பட்சம், இந்த அகதிகள் முகாமை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தாலே போதும். இது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இதைச் செய்வதற்கு ஒரு நாள் போதும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், தஞ்சை மணியரசன், தமிழ்நேயன், தபசிகுமரன், திருமுருகன், செந்தமிழ்க்குமரன், காஞ்சி அமுதன், வழக்கறிஞர் ஜெயக்குமார், மணிகண்டன், ஜெய்னுலாபிதீன், அருண் சோரி ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.