அவள் ஒரு பள்ளி ஆசிரியை. அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருந்தாள். அவள் குடும்பம் மற்ற பழங்குடியினக் குடும்பத்தைப் போல கல்வியறிவு இல்லாத குடும்பம் அல்ல. அவள் தந்தை மத்ருராம் சோரி 15 வருடங்களாக பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார். அவர் மாமா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏவாக இருந்தார். அவள் தம்பி லிங்கா, டெல்லியில் ஊடகத்துறையில் பயின்று கொண்டிருந்தான். சோனி சோரிக்கு 5, 8 மற்றும் 12 வயதில் மூன்று குழந்தைகள்.
சோனி சோரி
புதுதில்லியில் எஸ்ஸார் குழுமத்தைச் சேர்ந்த அதிகாரிகளிடமிருந்து மாவோயிஸ்டுகளுக்காக 20 லட்ச ரூபாய் பணம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டாள் சோனி சோரி. அவளோடு அவள் தம்பி லிங்காவும் கைது செய்யப்பட்டான். சத்தீஸ்கர் சிறையில் இருந்த அவளை சத்தீஸ்கர் எஸ்.பி அன்கித் கார்க் என்பவர் எப்படி சித்திரவதை செய்தார் என்பதை அவளே விவரிக்கிறாள். 08.10.2011 அன்று நள்ளிரவு முதல் விடியற்காலை 2.30 மணி வரை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்ற எஸ்பி அன்கித் கார்க், சோனி சோரிக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்தும் சித்திரவதை செய்துள்ளார். சோரியை நிர்வாணப்படுத்தி தொடர்ந்து சித்திரவதை நடந்துள்ளது. சோனி சோரி சார்பாக, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோனி சோரியை பரிசோதனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி நடந்த பரிசோதனையின் முடிவில், சோனி சோரியின் பிறப்புறுப்பில் இரண்டு கற்களும், அவர் ஆசனவாயில் ஒரு கல்லும் கண்டுபிடிக்கப் பட்டு அகற்றப்பட்டன. அந்த அளவுக்கு அவர் சித்திரவதை செய்யப்பட்டிருந்தார். இந்த அன்கித் கார்க் எஸ்.பிக்கு, குடியரசுத்தலைவரின் சிறந்த பணிக்காக விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
சோனி சோரியின் கதை ஒரிஸ்ஸாவில் மாவோயிஸ்ட் மற்றும் மத்திய பாதுகாப்புப் படைகளுக்கு நடுவே மாட்டிக் கொண்டு அவதிக்குள்ளாகும் பல்வேறு பழங்குடியின மக்களின் கதைகளில் ஒன்று. 8 செப்டம்பர் 2011 அன்று, லாலா மற்றும் லிங்கா என்ற இருவர் டெல்லியில் உள்ள பல்நார் என்ற சந்தையில் மாவோயிஸ்டுகளுக்காக பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, மங்கர் என்ற கான்ஸ்டபிள், சோனி சோரியை கிரந்தால் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்கிறார். அவரது தம்பி லிங்காவை காவல்துறைக்கு தகவல் கொடுக்கும் இன்பார்மராக மாற்றும்படி, சோனி சோரியை வற்புறுத்துகிறார். ஆனால், சோனி சோரி மறுக்கிறார். மறுத்தால், நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்கள் அனைத்திலும் சோனி சோரியும் குற்றவாளியாக சேர்க்கப்படுவார் என்று மிரட்டுகிறார். ஏற்கனவே நக்சலைட்டுகள் நடத்திய மூன்று தாக்குதல் வழக்குகளில் சோனி சோரியை குற்றவாளியாகச் சேர்த்திருப்பது அப்போது சோரிக்குத் தெரிந்திருக்கவில்லை.
அந்த வழக்குகளில் அவர் சேர்க்கப்பட்டிருப்பது, அவரை இன்பார்மராக மாற்றுவதற்கான மிரட்டுதலே. சோனி சோரி மற்றும் லிங்காவை காவல்துறையினர் குறிவைப்பதற்கான காரணம், அவர்கள் மற்ற பழங்குடியினரைப் போல இல்லாமல், பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடினர். மாவோயிஸ்டுகளை ஒழிப்பது என்ற பெயரில், காட்டில் உள்ள விலை உயர்ந்த தேக்கு மற்றும் மற்ற மரங்களை வெட்டி காவல்துறையினர் கொள்ளையடிப்பதற்கு எதிராக குரல் கொடுத்தனர். இவர்களின் இந்தப் பணியைப் பார்த்த மாவோயிஸ்டுகள் தங்களோடு சேருமாறு இவர்களை மிரட்டினர். ஆனால், சோரியும் லிங்காவும், நடுநிலையோடு பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்ததால் வந்த வினையே இவர்களின் இன்றைய நிலை.
இவரைப் போன்ற மற்றொரு கதைதான் டாக்டர் பினாயக் சென்னின் கதை. 14 மே 2007 அன்று பிலாஸ்பூரில், நக்சலைட்டுகளுக்கான தூதுவராக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டில் பினாயக் சென் கைது செய்யப்பட்டார். அவர் மீது உள்ள ஆதாரங்கள் என்று சத்தீஸ்கர் காவல்துறை சொல்லியவை, 3 ஜுன் 2006 தேதியிட்ட ஒரு போஸ்ட் கார்டு. அந்த போஸ்ட் கார்ட், ராய்ப்பூர் சிறையில் இருந்த நாராயண் சன்யால் என்பவர் பினாயக் சென்னுக்கு, தன்னுடைய உடல் நிலை குறித்தும், தன் வழக்கு குறித்தும் எழுதியது. சிபிஐ (மாவோயிஸ்ட்) மற்றும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் இடையே ஒற்றுமை என்ற ஒரு புத்தகம், சிபிஐ மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதன்லால் பன்சாரே என்பவர் பினாயக் சென்னுக்கு எழுதிய கடிதம் மற்றும் நக்சல்கள் தொடர்பான சில கட்டுரைகள். இந்த ஆதாரத்தை வைத்து, டாக்டர் பினாயக் சென், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். இந்த ஆதாரங்களை மட்டும் வைத்தே, டாக்டர் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது, சத்தீஸ்கர் நீதிமன்றம். தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கிய ஜாமீனில் உள்ளார் டாக்டர் பினாயக் சென்.
ஜுலியானா
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 30 அக்டோபர் 2010 அன்று ஜுலியானா பூர்த்தி, ஜஸ்மானி மற்றும் மக்தாலி முண்டு ஆகிய மூன்று இளம்பெண்கள் தங்கள் உறவினர் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். மாவோயிஸ்ட் இயக்க ஆதரவாளர்கள் என்று இவர்கள் மூவரையும் கைது செய்த காவல்துறையினர் மூன்று மாதங்களுக்கு இவர்களை சிறையில் அடைத்தனர். ஜுலியானா முருஹு என்ற ஊரில் உள்ள செயின்ட் மேரீஸ் என்ற பள்ளியில் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள், அவள் ஒரு சிறந்த மாணவி என்று அந்தப் பள்ளியின் ஆசிரியைகள் பள்ளி ஆவணங்களை காண்பித்த போது, அந்த ஆவணங்கள் போலியானவை என்று கூறி, காவல்துறையினர் ஜுலியானவை சிறையில் அடைத்தனர். மூன்று மாதங்கள் சிறையில் இருந்த வடுவோடு வாழ்ந்து வருகிறாள் ஜுலியானா.
ஒரிஸ்ஸா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஆபிரா பத்மாஜி என்பவர். கள்ளிக்கோட் அரசுக் கல்லூரியில் பிஎஸ்சி படித்துக் கொண்டிருந்த பத்மாஜி செய்த ஒரே குற்றம், சிஆர்பிஎப் படையினர் அவரின் சொந்த கிராமத்தை ரெய்டு செய்த போது வீட்டில் இருந்ததுதான். ஆங்கிலத்தில் பேசினால் விட்டு விடுவார்கள் என்று நினைத்து, ஆங்கிலத்தில் பேசியதே வினையாகப் போனது பத்மாஜிக்கு. 10 மாத சிறைவாசத்திற்கு பிறகு வெளியே வந்தார் பத்மாஜி.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுதிர் தாவாலே என்பவர் நக்சலைட்டுகளோடு தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு ஜனவரி 2011ல் கைது செய்யப்படுகிறார். தலித்துகளுக்காக பாடுபட்டு வரும் இவர் ஒரு ப்ரீலான்ஸ் பத்திரிக்கையாளரும் கூட. தலித் இலக்கியம் தொடர்பான ஒரு கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு திரும்பி வருகையில் வார்தா ரயில்நிலையத்தில் வைத்து இவர் கைது செய்யப்படுகிறார். இவர் மீது காவல்துறையினர் சுமத்திய குற்றச்சாட்டு, பீம்ராவ் போய்த்தே என்ற நக்சலைட்டிடம் இருந்து ஒரு கம்ப்யூட்டரை தாவாலே பெற்றார் என்பதுதான். தாவாலே வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினர் ஒரு கம்ப்யூட்டரையும் 80 புத்தகங்களையும் கைப்பற்றிச் சென்றனர். இது தவிரவும் இவர் மீது பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்து இவர் ஜாமீனில் வெளி வர முடியாதபடி செய்துள்ளது காவல்துறை.
சீத்தாராம் மெஹர்
சீத்தாராம் மெஹர். இவர் செருப்பு தைக்கும் ஜாதியைச் சேர்ந்தவர். மேற்கு ஒரிஸ்ஸாவைச் சேர்ந்தவர். அவர் ஊரில் செருப்பு தைக்கும் ஜாதியில் பிறந்து முதல் முறையாக வழக்கறிஞராக ஆனவர் சீத்தாராம் மெஹர் மட்டுமே. 17 மே 2011 அன்று பார்கர் ரயில் நிலையத்தில் ஒரு நக்சலைட்டோடு காணப்பட்டார் என்று குற்றம் சுமத்தி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 80 நாட்கள் சிறையிலிருந்தார் மெஹர். ஒரு சீனியரின் கீழ் வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டிருந்த மெஹர் மிகுந்த முயற்சிக்குப் பிறகு உயர்நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டு சிறையிலிருந்து வெளியில் வந்தார். காவல்துறையினர் தொடர்ந்து இவர் மீது செய்து வந்த பொய்ப்பிரச்சாரத்தின் காரணமாக, இவரால் வழக்கறிஞராக பணியாற்ற முடியாமல், தற்போது மீண்டும் செருப்பு தைக்கும் தொழிலுக்கே சென்று விட்டார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோத நில ஆக்ரமிப்புகளுக்கு எதிராக தொடர்ந்து போராடியவர் ரான்ச்சியைச் சேர்ந்த ஜீத்தன் மராண்டி. மனித உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஜீத்தன் மராண்டியை காவல்துறை அக்டோபர் 2007ல் கைது செய்தது. நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்ட வழக்கில் இவரைக் குற்றவாளியாகச் சேர்த்தது. இவருடைய பெயருடைய மற்றொரு நக்சலைட்டுக்குப் பதிலாக இவரை இந்த வழக்கில் சேர்த்தது காவல்துறை. கீழமை நீதிமன்றம் ஜீத்தன் மராண்டிக்கு மரண தண்டனை விதித்தது. ஆனால் உயர்நீதிமன்றம், மராண்டி மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் படவில்லை என்று விடுதலை செய்யப்பட்டார். நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்கென கொண்டு வரப்பட்ட சத்தீஸ்கர் சிறப்புப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஒரு சட்டவிரோதச் செயலை “வாய்மொழியாலோ, எழுத்தாலோ, சைகையாலோ” செய்தால் ஜாமீனின்றி அந்த நபரைக் கைது செய்யலாம் என்ற ஒரு கொடுங்கோல் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தால் மாவோயிஸ்டுகள் கைது செய்யப்படுவதில்லை. மனித உரிமைப் போராளிகள், பழங்குடியின மக்கள், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்களே இது போன்ற சட்டத்தால் கைது செய்யப்பட்டு ஜாமீனின்றி ஆண்டுக்கணக்கில் சிறையிலிருக்கிறார்கள்.
ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்களான பேகோ பீமே, குஞ்சம் ராம்வதி, மாதவி ஜோகா, முக்கா ஹங்கா, சுக்நாத், முச்சாகி ஜோகா, மக்தம் லக்மா, உய்க்கா பீமா மற்றும் பஞ்சம் பீமா போன்றோர் 2008ல், மாவோயிஸ்ட் பிரசுரங்களை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டனர். 15 மாதங்கள் கழித்து அவர்கள் மீதான வழக்குள் நிரூபிக்கப்படாமல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். ப்ரதீமா தாஸ் என்பவர் ஒரிஸ்ஸா நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர். 13 ஆகஸ்ட் 2008 அன்று நக்சலைட் ஆதரவாளர் என்று சந்தேகிக்கப்பட்டு இவர் கைது செய்யப்பட்டு, குற்றம் நிரூபிக்கப் படாததால் நவம்பர் 2010ல் விடுதலை செய்யப்படுகிறார்.
கோபா குஞ்சம் என்பவர், வனவாசி சேத்னா ஆஷ்ரம் என்ற அமைப்பின் மூலமாக ஊரக மக்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்து வந்தார். சல்வா ஜுடும் என்ற அமைப்பின் மூலமாக அரசே ஆயுதங்களை வழங்கி பழங்குடி மக்களை தாக்குவதை கடுமையாக எதிர்த்து வந்தார். 20 டிசம்பர் 2010 அன்று, அல்பான் டோபா என்ற வழக்கறிஞரோடு சேர்ந்து, சல்வா ஜுடும் அமைப்பைச் சேர்ந்த ஒரு நபரைக் கடத்தினார்கள் என்ற குற்றத்திற்காக இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களைப் பார்க்க மேதா பட்கர் சிறைக்கு வந்த போது, மேதா பட்கரை இவர் பார்க்க விரும்பவில்லை என்று ஒரு வெள்ளைத்தாளில் கையொப்பமிட வற்புறுத்தப் பட்டுள்ளார். இவர் மறுத்ததால், கடுமையாக தாக்கப்பட்டார். 22 மாதங்கள் கழித்து உச்ச நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் வழங்கியது.
போலி என்கவுன்டர்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி, பியுசிஎல் அமைப்பின் மூலம் வழக்குகளைத் தொடர்ந்து வந்தவர் வழக்கறிஞர் அமர்நாத் பாண்டே. இவர் மீது தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு இவரும் கைது செய்யப்பட்டார். நக்சலைட்டுகள் நடத்தம் தாக்குதல்களின் போது, பதியப்படும் எப்ஐஆர்களில், அடையாளம் தெரியாத நக்சலைட்டுகள் என்று எதிரிகள் என்ற இடத்தில் பதிவு செய்யப்படுகிறது. மனித உரிமைப் போராளிகளையும், காவல்துறைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களையும், இது போன்ற ஏதாவதொரு வழக்கில் சிக்க வைப்பதை காவல்துறை வழக்கமாக கொண்டிருக்கிறது. இது போல இந்தியா முழுக்க பல்வேறு சிறைகளில் நக்சலைட்டுகள் என்ற குற்றச்சாட்டிலோ, நக்சலைட் ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலோ ஆயிரக்கணக்கான மக்கள் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று அலெக்ஸ் பால் மேனன் என்ற ஐஏஎஸ் அதிகாரியை மாவோயிஸ்டுகள் கடத்தி விட்டார்கள் என்று நாடெங்கும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. சொகுசாக ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு, அரசு நிலங்களை எப்படி அபகரிக்கலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கும் பெரும்பாலான ஐஏஎஸ் அதிகாரிகளைப் போல அல்லாமல், மக்களோடு மக்களாக, மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்று நேரடியாக களத்தில் இறங்கிப் பணியாற்றிய அலெக்ஸ் பால் மேனனைக் கடத்தியது வருத்தத்திற்குரிய விஷயம்தான். இதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மாவோயிஸ்டுகளை ஒடுக்குகிறோம் என்ற போர்வையில், பழங்குடி மக்களை வேட்டையாடுவதையும், கையில் சிக்கும் நக்சலைட்டுகளை போலி என்கவுன்டரில் சுட்டுக் கொல்வதையும், நாம் கண்டிக்க வேண்டாமா ? ஒரு ஐஏஎஸ் அதிகாரி கடத்தப்பட்டால், 24 மணி நேரமும் அதை ஊடகங்களில் முக்கியச் செய்தியாக்கும் தொலைக்காட்சிச் சேனல்கள், பழங்குடியின மக்கள், பசுமை வேட்டை என்ற பெயரால் தொடர்ந்து வேட்டையாடப் பட்டு வருவதை ஒரு சிறிய செய்தியாகக் கூட வெளியிடுவதில்லை.
இந்தப் பசுமை வேட்டை நடைபெறுவதே, எஸ்ஸார், வேதாந்தா, டாடா போன்ற குழுமங்கள் ஒரிஸ்ஸா, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் இருக்கும் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பது எவ்வித எதிர்ப்பின்றி நடக்க வேண்டும் என்பதற்காகவே. மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டு விடுவிக்கப்படுகிறவர்களை, அவர்கள் நல்ல முறையில் நடத்தினார்கள் என்றே தெரிவிக்கிறார்கள். ஆனால் காவல்துறையினர் கையில் சிக்கும், பழங்குடியின மக்களின் கதி என்ன என்பது பல்வேறு சம்பவங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
சட்டபூர்வமாக செயல்பட வேண்டிய ஒரு அரசு, சட்டத்தை காற்றில் தூக்கிப்போட்டு விட்டு, போலி என்கவுன்டர்களை நடத்தியும், பொய் வழக்குகள் போட்டும், பாலியல் வன்முறைகள் நடத்தியும், பழங்குடியின மக்களை வதைக்கும் போது, சட்டவிரோதமாகவே தங்கள் இயக்கத்தை நடத்தி வரும் மாவோயிஸ்டுகள், நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது எந்த வகையில் நியாயம் ? ஆனால், மத்திய பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையினர் நடந்து கொள்வதை விட, மாவோயிஸ்டுகள் நியாயமாகவே நடந்து கொள்கின்றனர்.
சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர்தான், சட்டவிரோதமாக நடந்து கொள்கின்றனர்.