அரசுப் பணியில் நேர்மையாக நடந்து தங்கள் பணியை சிறப்பாகச் செய்த இரண்டு அதிகாரிகள் அரசியல் காரணத்துக்காக பழிவாங்கப்பட்டுள்ளனர். அரசுப் பணியில் நேர்மையாக நடக்கும் அதிகாரிகள் அரிதிலும் அரிதாக இருக்கும் இன்றைய சூழலில், நேர்மையான அதிகாரிகள் இப்படி பழிவாங்கப்பட்டு இருப்பது, மற்ற நேர்மையான அதிகாரிகளை மனச்சோர்வு அடைய வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறைத்துறையில் கண்காணிப்பாளராக இருந்து வருபவர் ராஜேந்திரன். துணை ஜெயிலராக பணியில் சேர்ந்து இன்று கண்காணிப்பாளர் நிலைக்கு உயர்ந்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அப்போது இருந்த மத்திய சிறையில் ஜெயிலராக ராஜேந்திரன் இருந்த போதுதான் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா, திமுக அரசால் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.
ஜெயலலிதாவை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அப்போது சிறையில் பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய அறையில் ஜெயலலிதாவை அடைத்தனர். சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே இருந்த பழைய சிறை கூவம் நதிக்கரையில் அமைந்துள்ளது. கூவம் நதிக்கரையில் அமைந்துள்ளதால், அந்தச் சிறையில் எலி, பெருச்சாளி, போன்றவை சாதாரணமாக நடமாடும்.
தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவை இருப்பதிலேயே மோசமான அறையில் அடைத்து, அவரை துன்புறுத்தி அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக அது வரை பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு அறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா முதல் நாள் இரவு தன்னுடைய அறைக்குள் பெரிய அளவில் உள்ள பெருச்சாளிகள் சர்வ சாதாரணமாக நடமாடுவது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த அதிர்ச்சியில் இரவு முழுவதும் தூங்காமல் அவதிப்பட்டார். பெருச்சாளிகள் தொல்லைகள் போக, ஆயிரக்கணக்கில் கொசுக்களும் தொல்லை கொடுத்தன.
மறுநாள் காலையில் சிறையை பார்வையிட வந்த அப்போது ஜெயிலராக இருந்த ராஜேந்திரனிடம், அறைக்குள் பெருச்சாளிகளின் நடமாட்டம் குறித்து புகார் தெரிவித்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவிடம் ராஜேந்திரன், சிறையில் முதல் வகுப்புக்கான உத்தரவை நீதிமன்றம் மூலமாக பெற்று விடுங்கள். அந்த உத்தரவு இல்லையென்றால், உங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பார்கள் என்று கூறியவுடன், ஜெயலலிதா நாவலர் நெடுஞ்செழியனை வரச் சொல்லுங்கள் என்று சொல்கிறார். நாவலர் நெடுஞ்செழியன் ஜெயலலிதாவை சிறைக்கு வந்து சந்தித்த பின், ஜெயலலிதாவுக்கு சிறையில் முதல் வகுப்பு வசதி பெறப்படுகிறது.
ஆனால் ராஜேந்திரன் முதல் வகுப்பு உத்தரவுக்காக காத்திருக்காமல், உடனடியாக, அந்த அறைக்குள் இருந்த ஓட்டைகளை தடுப்பு வைத்து அடைத்து, பெருச்சாளிகள் அறைக்குள் நுழையாமல் தடுப்புகளை ஏற்படுத்தினார் ராஜேந்திரன். இதன்பிறகுதான் அந்த அறையில் பெருச்சாளிகள் நுழையாது என்று அச்சமில்லாமல் ஜெயலலிதாவால் உறங்க முடிந்தது.
சிறைக்கைதிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டிய தன்னடைய கடமையைச் செய்ததன் பலனை ஒரே வாரத்தில் அனுபவித்தார் ராஜேந்திரன். உடனடியாக அவரை புதுக்கோட்டை சிறைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இத்தோடு ராஜேந்திரனுக்கு துன்பங்கள் ஓயவில்லை. 2006ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், கோவை சிறையில் அவர் கண்காணிப்பாளராக இருந்த போது, சிறைக்கு நூல் வாங்கியதில் விதி மீறல் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, அவருக்கு குற்றக்குறிப்பாணை வழங்கப்பட்டது. 2006ல் குற்றக்குறிப்பாணை வழங்கப்பட்டு, இந்த விசாரணை இன்னும் முடியாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரனோடு பணியில் சேர்ந்த மற்ற துணை ஜெயிலர்கள் 2008லேயே பதவி உயர்வு பெற்று விட்டனர். இவரை விட பணியில் இளையவர்கள் கூட டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற நிலையில், திமுக ஆட்சியில் பழிவாங்கும் நோக்கத்தோடு இவர் மீது தொடரப்பட்ட அந்தக் குற்றச்சாட்டுக் குறிப்பாணையால் டிஐஜி பதவி உயர்வு மறுக்கப்பட்டு இன்னும் கண்காணிப்பாளராகவே உள்ளார்.
தலைமைச் செயலகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக ராஜேந்திரனின் கோப்பை கவனித்து வரும் தினகர் என்ற சார்புச் செயலாளர், தன்னை உள்துறைச் செயலாளராகவே கருதிக் கொண்டு, ராஜேந்திரனின் கோப்பின் மீது நடவடிக்கை எடுக்காமல், அவருக்கு பதவி உயர்வு கிடைக்காமல் தொடர்ந்து தடுத்து வருகிறார்.
விசாணைக் கைதிகள் சிறையில் மர்மமான முறையில் இறந்ததற்கு பொறுப்பான சிறைத் துறை அதிகாரிகளே பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில், என்ன காரணத்தாலோ ராஜேந்திரனுக்கு மட்டும், பதவி மறுக்கப்பட்டுள்ளது ஏன் என்பது புரியவில்லை.
இவரைப்போலவே பழிவாங்கப்பட்டு உள்ள மற்றொரு அதிகாரி, எஸ்.கே.உபாத்யாய். இவர் 1976ம் ஆண்டு நேரடியாக ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எஸ்.கே.உபாத்யாய். சிபிஐ உட்பட பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்.
2008ல் இவருக்கு வந்த நெருக்கடி அப்போதைய தலைமைச் செயலாளர் திரிபாதியால் வந்தது. 2007ல் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்ட உபாத்யாய்க்கு தற்போதைய முதல்வர் ஜெயலலிதா மீது கொடநாடு எஸ்டேட் வாங்கியது தொடர்பாக ஒரு புதிய ஊழல் வழக்கை பதிவு செய்யுமாறு வற்புறுத்துகிறார். உபாத்யாய் இது போல வழக்கு தொடர்வதற்கு இந்த நேர்வில் ஆதாரங்கள் இல்லை, புதிய வழக்கு தொடர முடியாது என்று மறுக்கிறார். ஆனால், தலைமைச் செயலாளர் தொடர்ந்து உபாத்யாவை வற்புறுத்துகிறார். தலைமைச் செயலாளரின் நெருக்கடி தாங்க முடியாமல், உபாத்யாய், தலைமைச் செயலாளரின் இந்த தொலைபேசி நெருக்குதல்களை தன்னுடைய மடிக்கணினியில் பதிவு செய்கிறார்.
திரிபாதியின் நெருக்கடி ஒரு புறம் இருக்க, அப்போது சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பூங்கோதை, 50 ஆயிரம் லஞ்சம் வாங்கி லஞ்ச ஒழிப்புத் துறை வலையில் சிக்கிய தன்னுடைய உறவினர் ஜவஹர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கிறார்.
இந்த இரு உரையாடல்களும் ஜுலை 2008ல் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த உரையாடல்கள் வெளியானதை அடுத்து, தமிழக அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு ஆணையத்தை ஏற்படுத்தி, அந்த ஆணையம் உபாத்யாய் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடடிவக்கையில் உபாத்யாய் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று அறிக்கையளித்த பின்னும் கடந்த மூன்று ஆண்டுகளாக உபாத்யாய் டிஜிபி பதவி உயர்வு அளிக்கப்படாமல் கூடுதல் டிஜிபியாகவே உள்ளார். அவரை விட பணியில் இளையவரான லத்திக்கா சரண், டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஓய்வு பெற்று விட்டார். ஆனால் உபாத்யாய் இன்னமும் பதவி உயர்வு அளிக்கப்படாமல், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கண்காணிப்பு அதிகாரியாக, முக்கியத்துவம் இல்லாத பதவியில் கடந்த மூன்றாண்டுகளாக அமர்த்தப்பட்டுள்ளார்.
தலைமைச் செயலாளராக இருந்த திரிபாதியின் உத்தரவுப்படி, ஜெயலலிதா மீதும் புதிய வழக்கை பதிவு செய்யவில்லை, அமைச்சர் பூங்கோதையின் உறவினர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு உத்தரவிட்டார் உபாத்யாய்..
இந்த இரண்டு அதிகாரிகளும், மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொண்டிருப்பார்களேயானால், இவர்களுக்கு இந்தச் சிக்கல் வந்திருக்காது. 1996ல் இருந்த திமுக அரசின் மனதைக் குளிரவைக்கும் வகையில் ஜெயிலராக இருந்த ராஜேந்திரன், முதல்வர் ஜெயலலிதாவின் அறையில் பெருச்சாளி நுழைந்ததை கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால், இவருக்கு தற்போது மற்ற அதிகாரிகளைப் போல பதவி உயர்வு கிடைத்திருக்கும்.
தலைமைச் செயலாளர் உத்தரவின் படி, முதல்வர் ஜெயலலிதாவின் மீது கொடநாடு எஸ்டேட் வாங்கியது தொடர்பாக ஒரு புதிய வழக்கைத் தொடர சம்மதித்திருப்பாரேயானால் அவருக்கும் எந்தத் தொல்லையும் ஏற்பட்டிருக்காது. கடந்த மூன்றாண்டுகளாக டிஜிபயாக இருந்திருப்பார்.
நேர்மையான முறையில் தங்கள் கடமையைச் செய்ததற்காக பல ஆண்டுகளாக தொடர்ந்து நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்காமல் இரண்டு அதிகாரிகள் அல்லலுற்று வருகிறார்கள்.
ஆனால், திமுக ஆட்சியில் இருந்த இடம் தெரியாமல் ஒடுங்கிக் போய் கிடந்த அதிகாரிகளும், திமுகவுக்கு மறைமுகமாக உதவி செய்து வந்த பல அதிகாரிகளும், இன்றும் நல்ல பதவியில் திளைத்துக் கொண்டு இருக்கிறார்கள். நேர்மையான அதிகாரிகள் இது போலப் பழிவாங்கப்படுவதைக் கூட ஜெயலலிதா கண்டுகொள்ளாமல் இருப்பது, மற்ற அதிகாரிகளையும் அரசியல் சார்போடு நடக்கவோ, நமக்கு என்ன வந்தது, காற்று வீசும் பக்கம் சாய்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்துக்கு தள்ளி விடும்.