ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் 2004 முதல் பதவியில் இருந்தது முதல், ஊழல், ஊழல், ஊழல் என்று நாள்தோறும் பல்வேறு ஊழல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்திய சுதந்திரம் அடைந்ததிலிருந்த இப்படி ஒரு ஊழல் மலிந்த அரசாங்கத்தைப் பார்த்திருக்குமா என்பது சந்தேகமே.
எழுபதுகளின் இறுதியில் அமைந்த ஜனதா அரசாங்கமும், அதன் பிறகு அமைந்த ஐக்கிய முன்னணி அரசாங்கமும், அதன் பிறகு அமைந்த பாரதீய ஜனதா அரசாங்கத்தையும் தவிர்த்து, காங்கிரஸ் கட்சியே இந்தியாவை தொடர்ந்து ஆண்டு வந்திருக்கிறது.
A party with a difference என்ற கோஷத்தோடு ஆட்சிக்கு வந்ததுதான் பாரதீய ஜனதா கட்சி. பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில்தான், இந்தியாவையே உலுக்கிய டெஹல்கா ஸ்டிங் ஆபரேஷன் நடந்து, அப்போது அதன் தேசிய தலைவராக இருந்த பங்காரு லட்சுமண் தற்போது நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
பங்காரு லட்சுமணுக்கு தண்டனை விதித்த நீதிபதி தனது தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Corruption, to my mind, is worse than prostitution as latter might endanger the morals of individual, wheras, the former invariably endangers the entire society. It is virulent for the nation and makes people full of ire. However, the problem is that, when a society which publicily rues corruption, but privately indulges in it, then we need to ask ourselves, do we really want a corruption-free society.
என்னுடைய கருத்துப்படி, ஊழல் விபச்சாரத்தை விட மோசமானது ஏனென்றால், ஊழல் ஒட்டுமொத்த சமுதாயத்தையே ஆபத்துக்குள்ளாக்குகிறது. அது ஒரு விஷத்தன்மையோடு மக்களை சினமடைய வைக்கிறது. ஆனால், ஒரு சமுதாயம் வெளிப்படையாக ஊழலுக்கு எதிராக பேசிக்கொண்டு, தனிப்பட்ட முறையில் அதில் ஈடுபடுமானால், நமக்கு உண்மையிலேயே ஊழலற்ற சமுதாயம் வேண்டுமா என்ற கேள்வியை நம்மையே கேட்டுக் கொள்ள வேண்டும்.
டெஹல்கா என்ற இணையதளம், இந்திய பத்திரிக்கை உலகில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல. இந்து நாளேடு மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் போபர்ஸ் ஊழல் குறித்து ஆதாரங்களை எண்பதுகளின் இறுதியில் வெளியிட்ட பிறகு, இந்தியாவில் ஆதாரங்களோடு எந்த ஊடகமும் ஊழல்களை அம்பலப்படுத்தியதில்லை. இந்தச் சூழலில்தான் தருண் தேஜ்பால் என்ற பத்திரிக்கையாளர், இணையதள ஊடக வடிவம் வளர்ந்து வரும் அந்த வேளையில், இணையதளம் வாயிலாக ஒரு பத்திரிக்கையை தொடங்கலாம் என்று உத்தேசிக்கிறார்.
அதன்படி, பர்ஸ்ட் க்ளோபல் என்ற பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஒரு நிறுவனத்தின் முதலீட்டில், டெஹல்கா டாட் காம் என்ற இணையதளத்தை தொடங்குகிறார். இந்த இணையதளம் Fallen Heroes என்ற தங்களின் முதல் ஸ்டிங் ஆபரேஷனை வெளியிடுகிறது. அந்த ஆபரேஷன், இந்தியக் கிரிக்கெட்டில் சூதாட்டம் எந்த அளவு ஊடுருவிப் போயிருக்கிறது என்பதை அம்பலப்படுத்தியது.
அதையடுத்து, அடுத்த ஊழலை அம்பலப்படுத்தலாம் என்ற திட்டமிடும்போதுதான், பரத்பூர் ராணுவ தளவாட கிடங்கில் வெடிவிபத்து ஏற்படுகிறது. அந்த கிடங்கில் ராணுவ தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் என்று செய்திகள் பரவிய ஒரு சூழலில் மர்மமான முறையில் ஏற்பட்ட அந்த வெடிவிபத்து, அனைத்து ஆவணங்களையும் அழித்து விட்டது, டெஹல்கா குழுவினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
அனிருத்த பெஹல் மற்றும் மேத்யூ சாமுவேல் ஆகிய இருவர் வெஸ்ட் என்ட் என்ற ராணுவத் தளவாடங்களைத் தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனத்தின் இந்திய முகவர்களாக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, டெல்லி தலைமை செயலகத்தில் உள்ள கீழ் மட்ட அதிகாரியான செக்ஷன் ஆபீசரை முதலில் அணுகுகிறார்கள். உலகில் யாரிடமுமே இல்லாத தெர்மல் கேமராக்களை தங்கள் நிறுவனம் தயாரிப்பதாகவும், அது இந்திய ராணுவத்துக்கு பெரும் அளவில் உதவி செய்யும் என்றும் சொல்கிறார்கள். அந்த செக்ஷன் ஆபீசர் மூலமாக, ஒவ்வொருவராக தொடர்பு கிடைத்து, பாரதீய ஜனதாவின் கூட்டணிக் கட்சியும், ராணுவ அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்ணான்டஸின் கட்சித் தலைவருமான ஜெயா ஜெய்ட்லி, அப்போது ஆண்டு கொண்டிருந்த பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் பங்காரு லட்சுமண் உள்ளிட்டோர் வரை சந்தித்து லஞ்சம் கொடுத்தனர்.
ஜெயா ஜேட்லி மற்றும் வாஜ்பாய்
இந்த இரண்டு அரசியல் கட்சித் தலைவர்களைத் தவிர, ராணுவத்தைச் சேர்ந்த டெப்டினென்ட் ஜெனரல் மஞ்சித் சிங் அலுவாலியா, ராணுவத் தளவாட இயக்குநர் மேஜர் ஜெனரல் பிஎஸ்கே.சவுத்ரி, மேஜர் ஜெனரல் முருகாய், பிரிகேடியர் இக்பால் சிங், பிரிகேடியர் அனில் செகல், பாதுகாப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் எல்.எம்.மேத்தா ஐஏஎஸ், ஆர்எஸ்எஸ்-ன் ட்ரஸ்டி ஆர்.கே.குப்தா மற்றும் அவர் மகன் தீபக் குப்தா ஆகியோர் இதில் சிக்குகிறார்கள்.
இதில் ராணுவ அதிகாரிகள் பணத்தை மட்டும் பெற்றுக் கொள்ளாமல், பெண்களையும் சப்ளை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். அதையும் டெஹல்காக புலனாய்வுக்குழு செய்கிறது.
13 மார்ச் 2001 அன்று டெஹல்கா நிறுவனம், இந்த ஸ்டிங் ஆபரேஷனின் விபரங்களை நான்கரை மணி நேர படமாக வெளியிடுகிறது. நாடெங்கும் அதிர்ச்சி அலைகள். இப்படியும் நடக்குமா என்று வியந்தனர்.
செய்திகள் வெளிவந்த மூன்றாவது நாள், அன்றைய பிரதமர் வாஜ்பாய் ஆபரேஷன் வெஸ்ட் என்ட் இந்தியா விழித்துக் கொள்வதற்கான ஒரு எச்சரிக்கை மணி என்றார். ஆயுத வியாபாரிகள் என்ற போர்வையில் நடித்த ஒரு சிலரால் எப்படி ராணுவ அதிகாரிகளை அணுக முடிகிறதென்றால் இந்தப் புற்றுநோய் எந்த அளவுக்கு பரவியிருக்கிறது என்பது தெரிகிறது. நான் இதை சரி செய்வேன் என்றார்.
இப்போது காங்கிரஸ் அரசின் ஊழலுக்கு எதிராக வாய் கிழிய பேசும் அருண் ஜேட்லி, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்படும். அந்தக் கமிஷன் இந்த டேப்புகள் பொய் என்பதை நிரூபிக்கும் என்றார். விசாரணை தொடங்கும் முன்னரே விசாரணையின் முடிவை சொல்லும் சட்ட அமைச்சர் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
எமர்ஜென்சியை எதிர்த்து இந்தியா முழுவதும் தொழிலாளர்களை திரட்டிய மிகப் பெரிய சோஷலிஸ்டான ஜார்ஜ் பெர்ணான்டஸ், டெஹல்கா ஆபரேஷன் ஐஎஸ்ஐயின் சதி என்றார். நான் ராணுவ அமைச்சரான பிறகு, ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் ஊழல் நடைபெறாமல் பார்த்துக் கொண்டு, இடைத் தரகர்களை நீக்கியதால், அவர்கள் எனக்கு எதிராக செய்த சதி என்றார். ராணுவ அதிகாரிகள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களி விருந்து சாப்பிடுவதைக் கூட கண்டுபிடிக்காத உளவுத்துறையை குறை கூறினார்.
ஒரிஸ்ஸா உயர்நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று பொது நல வழக்கு தொடுக்கப்பட்ட போது, மத்திய அரசு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்போவதாக பதில் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, அரசுக்கு ஆதரவை வாபஸ் வாங்கப்போவதாக ஜார்ஜ் பெர்ணான்டஸ் அச்சுறுத்தியதும், அது வாபஸ் பெறப்பட்டது.
ஜார்ஜ் பெர்ணான்டஸ் பதிவி நீக்கம் செய்யப்படவில்லையென்றால், ஆதரவு வாபஸ் என்று மம்தா பானர்ஜி மிரட்டியதும், வேறு வழியில்லாமல் பாதுகாப்பு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஜார்ஜ் பெர்ணாண்டஸ், ஏழு மாதங்கள் கழித்து மீண்டும் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வெங்கடசாமி தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்தக் கமிஷன் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போதே ஜார்ஜ் பெர்ணான்டஸை பாதுகாப்பு அமைச்சராக மீண்டும் நியமித்தது பாஜக அரசு. இதற்கு அவர்கள் சொன்ன காரணம், தேசத்தின் பாதுகாப்புக் கருதி, ஜார்ஜ் பெர்ணான்டஸ் தொடர வேண்டுமாம்.
பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த பங்காரு லட்சுமண், தான் ஒரு தலித் என்பதால், தனக்கு எதிராக செய்யப்பட்ட சதி என்றார்.
இது தொடர்பாக மத்திய கண்காணிப்பு ஆணையம் ஒரு விசாரணை நடத்தி அந்த அறிக்கையை அரசுக்கு அளித்தது. பாஜக அரசு, அந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல், தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அதை மூடி மறைத்தது.
டெஹல்கா ஆபரேஷன் வெளியிடப்பட்டதற்குப் பிறகு, அதன் ஆசிரியர் தருண் தேஜ்பாலைப் பற்றி அவதூறான பல்வேறு துண்டுப் பிரசுரங்கள் பாஜகவால் வெளியிடப்பட்டன. அப்படிப்பட்ட ஒரு மிக மிக அவதூறான ஒரு பிரசுரத்தை வெளியிட்டவர் நரேந்திர மோடி.
தருண் தேஜ்பால்
டெஹல்காவின் முதலீட்டாளர்களில் ஒருவரான சங்கர் சர்மா என்பவர் 18 மாதங்களுக்கு முன்பு காலாவதியான ஒரு சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது புலனாய்வு நடந்து வருகிறது என்பதால் ஜாமீனில் வெளிவந்தால், சாட்சிகளை கலைத்து விடுவார் என்று அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
அவர் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. வெங்கடசாமி கமிஷனின் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது ஜார்ஜ் பெர்ணான்டசை பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமித்த பாஜக அரசு, சங்கர் சர்மாவை ஜாமீனில் விடக் கூடாது என்பதற்காக அரசு தலைமை வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேயை வைத்து வாதாடியது.
வெங்கடசாமி கமிஷனின் வரைமுறைகளில் ஒன்று, டெஹல்கா இன்வெஸ்டிகேஷன் தொடர்பான அத்தனை அம்சங்களையும் ஆராய்வது என்பது. புகார் கொடுத்தவர்களையே விசாரிப்பதென்பது, இந்திய வரலாற்றிலேயே இல்லாத ஒன்று.
டெஹல்கா நிறுவனம் மீதும், அதன் முதலீட்டாளர் பர்ஸ்ட் க்ளோபல் மீதும், வருமான வரித்துறை, செபி, ஆர்பிஐ, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற பல்வேறு அரசு நிறுவனங்கள் பல முறை சோதனை நடத்தின. வெங்கடசாமி கமிஷன் முன்பு, சமதா கட்சித் தலைவர் ஜெயா ஜெய்ட்லி சாட்சியம் சொல்ல வந்த அதே நாளில் டெஹல்கா அலுவலகத்தில் 25க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சஹாரன்பூரில், மான் ஒன்றைக் கொன்று விட்டார்கள் என்ற வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, அது தொடர்பாக டெஹல்கா பத்திரிக்கையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். ஆபரேஷன் வெஸ்ட் என்ட்ஐ நடத்திய பத்திரிக்கையாளர்களில் ஒருவரான அனிருத்த பெஹல், சிபிஐ அதிகாரியை தாக்க முயன்றதாக கைது செய்யப்பட்டார்.
பர்ஸ்ட் க்ளோபல் நிறுவனமே மூடப்படும் அளவுக்கு அரசு இயந்திரங்கள் கடும் நெருக்கடி கொடுத்தன. 150 பத்திரிக்கையாளர்களோடு செயல்பட்டு வந்த டெஹல்கா, ஊதியம் கொடுக்க முடியாத அளவுக்கு கடும் நெருக்கடியில் சிக்கியதால் 15 பேர் கொண்ட குழுவாக சுருங்கியது.
டெஹல்கா பத்திரிக்கையாளர்கள் சாட்சியம் அளிக்கையில், அரசுத் தலைமை வழக்கறிஞர் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் பல மணி நேரம் குறுக்கு விசாரணை செய்தனர். ஆனால், இதில் பணம் வாங்கி கேமராவில் மாட்டியவர்கள் யாரும் குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. இரண்டு வருடங்கள் வெங்கடசாமி கமிஷனோடு போராடிய டெஹல்கா, இறுதியாக, இந்தக் கமிஷனை புறக்கணிப்பதாக அறிவித்து வெளியேறியது.
இதன் நீதிபதி வெங்கடசாமியும், அரசின் போக்கைப் பார்த்து மனம் வெதும்பி வெளியேறினார். அதன் பிறகு, ஓய்வு பெற்ற உச்ச நிதிமன்ற நீதிபதி பூக்கான் தலைமையில் இந்தக் கமிஷன் இயங்கியது. நீதிபதி பூக்கான், அவரால் விசாரிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் ஜார்ஜ் பெர்ணான்டஸிடமிருந்து, ராணுவ விமானத்தைப் பெற்று அதன் மூலம் இந்தியா முழுக்க குடும்பத்துடன் சுற்றிப்பார்த்தார் என்ற செய்தியை அவுட்லுக் அம்பலப்படுத்தியது.
காங்கிரஸ் அரசு 2004ல் பதவியேற்ற பிறகுதான், இறுதியாக 2006ல் டெஹல்கா விவகாரம் தொடர்பாக எப்ஐஆர் போடப்பட்டு, சிபிஐ விசாரணையை தொடங்கியது. அதன் தொடர்ச்சியே, பங்காரு லட்சுமணின் தண்டனை.
ஊழல் செய்வதில் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி ஆகியவற்றுக்கு துளியும் வேறுபாடு இல்லை. ஒரு ஊழல் அம்பலப்பட்டதால், அதை அம்பலப்படுத்தியவர்களை பாரதீய ஜனதா கட்சி என்ன பாடு படுத்தியது என்பதை விரிவாகப் பார்த்தீர்கள். ஊழல் செய்யாதவர்கள் என்று சொல்லக்கூடிய இடது சாரிகளே, லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் ஒரு கோடி ரூபாய் நன்கொடை பெறுகிறார்கள்.
மத்திய அரசைப் பொறுத்தவரை, நமது தமிழகத்தில் இருப்பது போலவே திமுக அதிமுக ஆகிய இரண்டுக்கும் நடுவில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்று லெனின் சரியாகத்தான் சொன்னார் போலிருக்கிறது.
இது போன்ற சூழ்நிலைகள், மனதுக்கு மிகுந்த சோர்வையும் அயர்ச்சியையும் ஏற்படுத்தவே செய்கின்றன. போபர்ஸ் ஊழல் அம்பலப்பட்டதற்கு காரணமாக இருந்து, தற்போது தான் யார் என்பதை அடையாளம் காண்பித்துக் கொண்ட, ஸ்டென் லின்ட்ஸ்டார்ம் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியின் இறுதியில் சொன்னது மிகச் சிறப்பானது. 25 வருடங்களாக போராடியும், போபர்ஸ் ஊழலில் யாருமே தண்டிக்கப்படவில்லை என்பதை அவர் தனது பேட்டியில் சொல்லியிருந்தார்.
ஸ்டென் லின்ட்ஸ்டார்ம்
இறுதியாக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு…
There cannot be final thoughts on something like this. False closures of corruption bleed the system. Every day has to matter. When something like the scale and violence of Bofors happens, you begin to question your own faith as a professional and a human being. When you start losing faith, you begin to lose hope. When hope is lost, everything is lost. We cannot afford to let that happen. Maybe we will get nowhere, but silence cannot be the answer. என்று பதிலளித்திருந்தார்.
இது போன்ற விவகாரங்களில் இறுதியான எண்ணங்கள் என்று எதுவும் இருக்க முடியாது. ஊழல் வழக்குகள் விசாரணையின்றி மூடப்படுவது, நிர்வாக அமைப்பையே அழிக்கும். ஒவ்வொரு நாளும் முக்கியமே. போபர்ஸ் போன்ற ஒரு பெரிய, பூதாகர ஊழல் நடக்கும் போது, ஒரு மனிதனாகவும், ஒரு அதிகாரியாகவும் உங்களை நீங்களே கேள்வி கேட்கத் தொடங்குகிறீர்கள். உங்கள் மீதான நம்பிக்கை இழக்கையில், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையையும் இழக்கிறீர்கள். எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை இழந்தால், எல்லாமே போய் விட்டது. நாம் அதை நடக்க விடக் கூடாது. நாம் தோல்வியடையலாம். ஆனால், அதற்காக அமைதியாக இருப்பது அதற்கு மாற்றாகாது.
இது போன்ற நம்பிக்கையில்தானே நாம் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.