நேற்று உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பானது, இந்தியாவில் ராணுவத்தின் பெயரால் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கெல்லாம் ஒரு பாடமாக இருக்கும் என்று நம்புவாம்.
20 மார்ச் 2000ம் அன்று இந்திய ராணுவ உடையணிந்த 15க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சத்திசிங்ப்போரா என்ற கிராமத்தில் நுழைந்து 34 சீக்கியர்களை கொன்று குவித்தனர். கொன்று விட்டு செல்லுகையில் தீவிரவாதிகள், இந்து அமைப்பினருக்குறிய கோஷங்களை எழுப்பிச் சென்றனர். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி, உடனடியாக சீக்கியர்களுக்கென்று, தனியாக பாதுகாப்பு ஏற்பாடு செய்வதாக அறிவித்தார். ஆனால், சீக்கியர்கள், இசுலாமியர்கள் தங்களுக்கு எதிராக என்றுமே செயல்பட்டதில்லை என்று சீக்கியர்கள் இந்த ஏற்பாட்டை நிராகரித்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனின் வருகையையொட்டி இந்த படுகொலை லஷ்கர் ஏ தொய்பா மற்றும் ஹிஜ்புல் முஜாஹீதின் அமைப்பினரால் நடத்தப்பட்டதாக இந்திய உளவுத்துறை அறிவித்தது. ஆனால், இரண்டு அமைப்புகளும், தாங்கள் சீக்கியர்களுக்கு எதிராக என்றுமே செயல்படமாட்டோம், சீக்கியர்கள் காஷ்மீரிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவாகவே இருந்து வந்திருக்கிறார்கள் என்று அறிவித்தன.
ஐந்து நாட்கள் கழித்து, அதே அனந்த்நாக் மாவட்டத்தில் பத்ரிபால் என்ற கிராமத்தில், சீக்கியர்களின் படுகொலைக்கு காரணமான 5 பாகிஸ்தானித் தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்று ராணுவம் அறிவித்தது.
காஷ்மீர் மாநிலமே கொந்தளித்தது. கொல்லப்பட்ட ஐந்து பேரும், அப்பாவிகள் என்றும், ராணுவம் பொய்யான நபர்களைக் கொன்றுள்ளது என்றும் காஷ்மீர் மாநிலம் முழுக்க கடுமையான போராட்டங்கள் நடந்தன.
இந்தப் போராட்டங்களுக்குக் காரணம், கொல்லப்பட்ட ஐந்து பேரின் உடல்களும் போஸ்ட் மார்ட்டம் கூடச் செய்யப்படாமல் அப்படியே புதைக்கப்பட்டன என்பதுதான்.
அப்போது காஷ்மீர் மாநில முதல்வராக இருந்த பரூக் அப்துல்லா உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, விசாரணையை முடக்க, ராணுவம் பல்வறு சதி வேலைகளில் ஈடுபட்டது.
தீவிரவதிகளைச் சுட்டுக் கொன்று, அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை ராணுவக் கிடங்கில் சேர்த்து விட்டோம் என்று, 7 ராஷ்ட்ரீய ரைபிளின் தளபதி அறிவித்தார். காவல்துறையின் விசாரணைக்கு அந்தத் துப்பாக்கிகளை கொடுக்கும்படிக் கேட்டபோது, காவல்துறையே அந்தத் துப்பாக்கிகளை எடுத்துச் சென்று விட்டார்கள் என்று ஒரு கதையை விட்டனர் ராணுவத்தினர்.
காஷ்மீர் மக்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக, புதைக்கப்பட்ட அந்த ஐந்து பேரின் உடல்களும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட டிஎன்ஏ சாம்பிள்களை, ராணுவம் மாற்றியதும் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. ஐந்து பேரின் டிஎன்ஏ சாம்பிள்களில் இரண்டு சாம்பிள்கள், பெண்களின் சாம்பிள்கள் என்பதும் தெரிய வந்தது.
19. டிசம்பர் 2000 அன்று காஷ்மீர் அரசு, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. சிபிஐ இந்த வழக்கை விசாரித்து, குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.
அந்தக் குற்றப்பத்திரிக்கையில், ராணுவத்தின் 7ம் ராஷ்ட்ரீய ரைபிள்கள் பிரிவைச் சேர்ந்த கர்னல் அஜய் சக்சேனா, மேஜர் ப்ரஜேந்திர ப்ரதாப் சிங், மேஜர் சவுரப் ஷர்மா, சுபேதார் இத்ரீஸ் கான் மற்றும் சிலர் சேர்ந்து, சதித்திட்டத்தில் ஈடுபட்டு, ஐந்து அப்பாவிகளை சுட்டுக் கொன்றுள்ளனர் என்பது சிபிஐ விசாரணையில் தெரிய வந்தது.
இதற்குப் பிறகுதான் நாடகமே தொடங்குகிறது. 2006 மே மாதத்தில் குற்றப்பத்திரிக்கையை சிபிஐ, சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது. அந்த சிபிஐ நீதிபதியால், இந்த வழக்கை விசாரிக்க இயலாது. ராணுவ அதிகாரிகளின் மீது உள்ள வழக்கை விசாரிக்க, Armed Forces J & K (Special Powers) Act, 1990 என்ற சட்டம், மத்திய அரசின் முன் அனுமதியோடு மட்டுமே ராணுவ அதிகாரிகளின் மீது உள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க (Sanction for prosecution) முடியும் என்று உள்ளதால், அந்த நீதிபதியால் இந்த வழக்கை தொடவே இயலும். அது போன்ற அனுமதி ஏதும் இல்லாததால், நீதிபதி, ராணுவத்தினரிடம், ஒரு ஆலோசனை சொல்கிறார். மத்திய அரசின் அனுமதி இல்லாததால், ராணுவச் சட்டத்தின் படி, Court Martial மூலம் நீங்களே இந்த வழக்கின் விசாரணையை நடத்துங்கள் என்று சொல்கிறார்.
இதற்கு பதில் மனு தாக்கல் செய்த ராணுவம், கோர்ட் மார்ஷல் முறைப்படி நடவடிக்கை எடுப்பதற்கும், மத்திய அரசின் அனுமதி வேண்டும், அதனால், சிபிஐயின் குற்றப்பத்திரிக்கையை சிபிஐயிடமே திருப்பி அளித்து, வழக்கை முடித்து விடுங்கள் என்று ராணுவம் பதில் மனு தாக்கல் செய்தது.
ஐந்து அப்பாவிகளை தீவிரவாதிகள் என்று கொலை செய்ததாக சிபிஐ விசாரணை செய்து கண்டு பிடித்த அறிக்கையை மூடி விடச் சொல்லி சிபிஐ மனுத் தாக்கல் செய்கிறது.
ராணுவத்தினரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறார் நீதிபதி. ராணுவம் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்கிறது. மேல் நீதிமன்றமும், ராணுவத்தின் மனுவை தள்ளுபடி செய்து, மீண்டும் ராணுவ விசாரணை (Court Martial) முறைப்படி, இந்த வழக்கை விசாரிப்பது குறித்து பரிசீலிக்கும்படி, ராணுவத்துக்கு உத்தரவிடுகிறது.
இந்த உத்தரவையும் ஏற்க மறுத்த ராணுவம், உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்கிறது. இந்த வழக்கில்தான், உச்ச நீதிமன்றம் 1 மே 2012 அன்று தீர்ப்பளித்தது.
ராணுவத்தலைமை, இன்றிலிருந்து எட்டு வாரங்களுக்குள் கோர்ட் மார்ஷல் முறைப்படி விசாரணை நடக்க வேண்டுமா, அல்லது நீதிமன்ற விசாரணை நடக்க வேண்டுமா என்பதை முடிவு செய்து, சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு தகவல் அளிக்க வேண்டும். கோர்ட் மார்ஷல்படி விசாரிப்பது என்று முடிவெடுத்தால், அந்த விசாரணை உடனடியாக தொடங்கி நடைபெற வேண்டும்.
நீதிமன்றம் மூலமாக விசாரணை நடைபெற வேண்டும் என்று முடிவெடுத்தால், வழக்கு தொடர அனுமதி வேண்டி, சிபிஐ மத்திய அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும், மத்திய அரசு, அந்த விண்ணப்பத்தின் மீது மூன்று மாத காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
காஷ்மீர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, ஏதாவது ஒரு பாகிஸ்தானிய தீவிரவாதிகளை இந்திய ராணுவம் தினந்தோறும் சுட்டுக் கொன்று கொண்டிருக்கிறார்கள். காஷ்மீர் முழுக்க தீவிரவாதிகளே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது போன்ற தோற்றத்தை, இந்திய நிர்வாகம் உருவாக்கி வைத்திருக்கிறது.
ஐந்து அப்பாவிகளை பிடித்துச் சென்று, சுட்டுக் கொலை செய்து விட்டு, அவர்களை தீவிரவாதிகள் என்று பட்டம் கட்டி, அதிலிருந்து தப்பிக்க மூத்த ராணுவ அதிகாரிகள் செய்த சதித்திட்டங்களைப் பார்த்தீர்களா ?
இறந்த அந்த ஐந்து பேரின் குடும்பத்துக்கும், இந்திய ராணுவமும், இந்திய அரசாங்கமும் வழங்கும் நீதியைப் பார்த்தீர்களா ? சிபிஐ விசாரணை நடத்தி, இது படுகொலையே என்று நிரூபித்த பின்னரும், இந்த வழக்கில் விசாரணையே இன்னும் தொடங்காமல், மத்திய அரசும், ராணுவமும் உறுதி செய்து கொண்டு வந்துள்ளன. இப்படிப்பட்ட அநியாயங்களை நிகழ்த்தும் இந்திய அரசையும், இந்திய ராணுவத்தையும் காஷ்மீர் மக்கள் நம்ப வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும் ?
காஷ்மீர் மட்டுமல்ல. தமிழகத்தையே எடுத்துக் கொண்டால் கூட, நூற்றுக்கணக்கில் நடந்துள்ள போலி என்கவுன்டர்களில், ஒரே ஒரு காவல்துறை அதிகாரியைக் கூட, நம்மால் இதுவரை தண்டிக்க முடியவில்லை என்பதே, அரசு, மக்கள் உயிரை எத்தனை துச்சமாக மதிக்கிறது என்பதும், அவர்கள் எத்தனை வலுவாக இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது.
இத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி, நாம் போராடத்தான் வேண்டும். நாம் போராடவில்லையெனில், இது போன்ற மனித உரிமை மீறல்கள், நாளை நம்மைப் போன்றவர்களையும் தாக்கும் அபாயம் மட்டுமல்ல, எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்கள் அத்தனை பேரையும் இது போல படுகொலை செய்யும் சூழலுக்கு அது இட்டுச் செல்லும். நியாயம் கிடைப்பது எளிதல்ல என்றாலும், அதை நோக்கிய நமது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்தின் இந்த சிறப்பு வாய்ந்த தீர்ப்பை, இந்து நாளேட்டைத் தவிர வேறு எந்த ஊடகமும் கவனம் செலுத்தி செய்தி வெளியிடவில்லை என்பது வருந்தத்தக்கது. முதல்பக்கத்தில் செய்தி வெளியிட்டதோடு அல்லாமல், தலையங்கமும் எழுதி, மன்மோகன் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்றும் எழுதியிருந்த, இந்து நாளேட்டுக்கு இந்த நேரத்தில் பாராட்டு தெரிவிப்பது பொருத்தமே.