சாத்தான்களின் ஆட்சி.
மனிதன் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய லட்சக்கணக்கான வகைகளில் உள்ள பூச்சிகள், விவசாயத்திற்கு கடும் எதிரியாகவே இருந்து வந்துள்ளன. இந்தச் சாத்தான்களை அழிப்பதற்கு மனித சமூகம் இன்று வரை தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. இந்தப் பூச்சிகள், ஒவ்வொரு பயிர்களையும் தாக்கி அழிப்பதற்கு வெவ்வேறு வகையாக தங்களை சூழலுக்கும் பயிர்களுக்கும் ஏற்றவாறு மாற்றிக் கொண்டு வளர்ந்து வந்துள்ளன.
சில பூச்சி வகைகள், பயிர்களின் கதிர்களை குறி வைத்துத் தாக்கி அழிக்கும். சில பயிர்களின் கதிர்களில் உள்ள மொட்டுக்களை தின்று விடும். சில இலைகளை உறிஞ்சி உண்ணும். சில, பயிர்களின் தண்டுகளுக்குள் புகுந்து பயிர்களையே பட்டுப்போக வைக்கும் தன்மை கொண்டன.
சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் தன்மை படைத்ததால், இந்தப் பூச்சி வகைகள் ஆப்பிரிக்க பாலைவனங்கள் முதல், ஆர்டிக் ஐஸ் கண்டம் வரை தாராளமாக புழங்குகின்றன. பூச்சிகளால் உங்களின் ஒரு மரம் கூட விடாமல் பட்டுப் போகச் செய்வேன் என்று கடவுள் சாபம் விட்டதாகவும், அவ்வாறு நிகழ்ந்தபோது, மோசஸ் வேண்டுகோளின்படி அந்தப் பூச்சிகளை கடவுள் கடலில் மூழ்கச் செய்ததாகவும் பைபிளில் ஒரு கதை உண்டு.
4500 ஆண்டுகளுக்கு முன்பு, மெசப்பட்டோமயாவில் சல்பர் பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தப்பட்டதாக ஆதாரஙகள் உள்ளன. 4000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ரிக் வேதத்தில், பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக விஷச் செடிகளை பயன்படுத்தியதாக சான்றுகள் உள்ளன. 17ம் நூற்றாண்டின் இறுதியில், புகையிலையிலிருந்து எடுக்கப்பட்ட நிக்கோட்டின் சல்பேட் பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது போல பூச்சிக் கொல்லி மருந்துகளை உருவாக்க தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போருக்கு இடையிலான காலத்தில் இது குறித்த ஆராய்ச்சிகள் ஏராளமாக நடந்தன. போருக்குத் தேவையான குண்டுகள், ரசாயன எறிகுண்டுகள் ஆகியவற்றுக்குத் தேவை அதிகமான போது, இது குறித்த ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடந்தன.
இவ்வாறு நடந்த ஆராய்ச்சிகளின் போதுதான், 1938ம் ஆண்டில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஹெர்மன் முல்லர் என்பவர், டிடிட்டி (DDT) என்று அழைக்கப்படும் டைக்ளோரோ டைபினைல் ட்ரைக்ளோரோஈதேன் (Dichloro Diphenyl Trichloroethane) என்ற பூச்சிக்கொல்லியை கண்டுபிடிக்கிறார். இந்தக் கண்டுபிடிப்புக்கு 1940ம் ஆண்டு பேடன்ட் உரிமை வழங்குகிறது ஸ்விஸ் அரசாங்கம். 1948ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, ஹெர்மன் முல்லருக்கு வழங்கப்படுகிறது.
ஹெர்மன் முல்லர்
இரண்டாம் உலகப்போரின் போது, ராணுவ வீரர்களை கடுமையாக தாக்கி மலேரியாவை உண்டாக்கும் கொசுக்களை ஒழிக்கவும் இது பயன்படுத்தப்பட்டது. போருக்குப் பிறகு, விவசாயத்திற்காக டிடிட்டி முழுமையாக பயன்படுத்தப்பட்டது. முல்லரின் கண்டுபிடிப்பான டிடிட்டி, உலக விவசாயத்தையே புரட்டிப் போட்டது என்றால் அது மிகையல்ல.
டிடிட்டி பயன்படுத்தப்பட்ட இடங்களிலெல்லாம், விளைச்சல் 60 சதவிகிதத்திற்கும் கூடுதலாக விளைந்தது தெரிந்ததும் மகிழ்ந்தார்கள் விவசாயிகள். நாற்பதுகளில் தொடங்கிய டிடிட்டியின் உற்பத்தி தங்கு தடையில்லாமல் தொடர்ந்தது.
1959ம் ஆண்டில், நியூயார்க் டைம்ஸ் நாளேடு, டிடிட்டி பயன்பாட்டுக்கு எதிராக நாசா கவுன்ட்டி என்ற இடத்தில் நடந்த போராட்டத்தைப் பற்றிய ஒரு செய்தியை வெளியிடுகிறது. இதைத் தொடர்ந்து, ரேச்சல் கார்சன் என்ற இயற்கை ஆர்வலர், இது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்குகிறார். அவரது தொடர்ந்த ஆராய்ச்சி “சைலென்ட் ஸ்பிரிங்ஸ்” என்ற நூலாக, 1962ம் ஆண்டு, டிடிட்டியின் தொடர்ந்த பயன்பாட்டால், இயற்கைக்கு நேரும் சீரழிவை பட்டியலிட்டது. இது அமெரிக்கா முழுக்க டிடிட்டிக்கு எதிரான போராட்டங்களை தூண்டியது. 1963ம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க அதிபர் கென்னடி, ரேச்சல் கார்சன் தனது நூலில் எழுதியிருப்பது உண்மையா என்று ஆராயுமாறு அவரது அமைச்சரவையில் இருந்த விஞ்ஞான ஆராய்ச்சிக் குழுவைப் பணிக்கிறார். அந்த ஆராய்ச்சிக் குழு, தனது அறிக்கையில், ரேச்சல் கார்சன், தனது நூலில் குறிப்பிட்டிருந்தவை அனைத்தும் உண்மையே, டிடிட்டி பயன்பாட்டால், சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தியது.
ரேச்சல் கார்சன்
அதன் பிறகு நடந்த பல்வேறு ஆராய்ச்சிகள், டிடிட்டி மலட்டுத்தன்மை மற்றும் கேன்சரை உண்டாக்கும் தன்மை படைத்தது என்பதையும், பறவைகளுக்கும், தண்ணீரில் வாழும் மீன் மற்றும் இதர உயிரினங்களுக்கும், கடும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, விஞ்ஞானிகளும், வழக்கறிஞர்களும் சேர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியம் (Environmental Defense Fund) என்ற அமைப்பை ஏற்படுத்துகின்றனர். இந்த அமைப்பு, அமெரிக்காவின் பல்வேறு நீதிமன்றங்களில், டிடிட்டியை தடை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடுக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏஜென்சி, இது தொடர்பான வழக்குகளை ஆராய்ந்து, டிடிட்டியின் பயன்பாட்டை படிப்படியாக குறைக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் மேல்முறையீடு செய்கிறார்கள். டிடிட்டியின் பயன்பாட்டை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள். டிடிட்டி தயாரிக்கும் ரசாயன நிறுவனங்களும், இதன் பயன்பாட்டை தடை செய்யக் கூடாது என்று நீதிமன்றத்தை அணுகுகிறார்கள்.
1972ம் ஆண்டு, இந்த வழக்கின் மீது தீர்ப்பு வழங்கிய கொலம்பியா நீதிமன்றம், டிடிட்டியை உடனடியாக தடை செய்து உத்தரவிட்டது.
அமெரிக்காவுக்கு முன்னதாகவே, 1968ம் ஆண்டு ஹங்கேரி, 1970ல் நார்வே மற்றும் ஸ்வீடன், 1972ல் ஜெர்மனி ஆகிய நாடுகள் டிடிட்டி தயாரிப்பை தடை செய்தன. 1984ம் ஆண்டில், இங்கிலாந்து டிடிட்டி பயன்பாட்டை தடை செய்தது. சீனா 2007ம் ஆண்டில் டிடிட்டி தயாரிப்பை நிறுத்தி விட்டது.
தற்போது உலகிலேயே டிடிட்டியை இன்று வரை தடை செய்யாமல் தொடர்ந்து தயாரித்து வரும் ஒரே நாடு எது தெரியுமா ? இந்தியா.