ரசனை என்பது தனி நபர் சம்பந்தப்பட்டது. ஒருவருக்குப் பிடித்த, கதையோ, கவிதையோ, மற்றொருவருக்கு சாதாரணமாகத் தோன்றலாம். ஒரு சில படைப்புகள் உங்கள் மனசாட்சியைப் போட்டு உலுக்கி உங்கள் தூக்கத்தைத் துறக்க வைக்கலாம். பலரின் மனதையும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் படைப்புகள் வெகு சிலவே.
ஜெயகாந்தனின் பல கதைகளை படித்து விட்டு, வாழ்வையே பறிகொடுத்த சோகம் ஏற்பட்டதுண்டு. கதையின் இறுதியில், “சார் அவன் ஒரு கேரக்டர்” என்று ஜெயகாந்தன் முடிக்கும் போது, மனதில் ஏற்படும் அழுத்தத்தை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. “சோற்றுச் சுமை” கதையில் ஆண்டாளு, தன் பிள்ளைக்கு ஐந்து ரூபாய் கல்விக் கட்டணம் கட்டமுடியாமல், பசியாலேயே சோற்றுக் கூடையோடு விழுந்து இறந்து போகும் போது, ஆண்டாளுக்காக அழாத மனங்கள் இருக்க முடியாது.
அப்படி ஒரு சில படைப்புகளே சவுக்கை கடுமையாக பாதித்திருக்கின்றன. இன்று சவுக்கால், விளிம்பு நிலை மக்களை, அன்போடும், கருணையோடும் பார்க்க முடிவதோடு, அவர்களின் உரிமைக்காக நம்மால் முடிந்த ஏதாவதொன்றைச் செய்ய வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது, ஜெயகாந்தனின் படைப்புக்களால் மட்டுமே என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.
சவுக்கு தளத்தில், சவுக்கால் எழுதப்பட்ட ஒரே திரைப்படக் கட்டுரை வசந்தபாலனின் “அங்காடி தெரு” படத்துக்காக மட்டுமே. அதன் பிறகு, எழுதியே தீர வேண்டும் என்று தோன்ற வைத்த ஒரு திரைப்படம் தான் “வழக்கு எண் 18/9”.
இயக்குநர் பாலாஜி சக்திவேலுவை முதலில் பாராட்ட வேண்டியது பாத்திரத் தேர்வுக்காகத்தான். வண்டிக்கடையில் பணியாற்றும் வேலு, வீட்டு வேலை செய்யும் ஜோதி, பணக்கார வீட்டுப்பெண் ஆர்த்தி, அவளை நாசம் செய்ய முயற்சிக்கும் தினேஷ், இன்ஸ்பெக்டர் குமாரவேலு என்று பல்வேறு பாத்திரங்களை சிறப்பாக பொருந்தும்படி தேர்வு செய்திருக்கிறார்.
பிளாட்பாரத்தில் வண்டிக்கடைகள், பல்வேறு திரைப்படங்களில் ஓரிரு காட்சிகளாக வந்து போயிருந்தாலும், அந்த பிளாட்பார வண்டிக்கடையில் பணியாற்றும் ஒருவனை கதையின் நாயகனாக்கியிருப்பது சிறப்பாக இருந்தது. வீட்டு வேலை செய்யும் ஒரு பெண்ணைப் பார்த்து வேலு முதலில் அப்போது நடந்த சில சம்பவங்களின் காரணமாக கோபப்படுவதும், பிறகு அவள் மீது காதல் வயப்படுவதும், அந்த பதின்பருவத்தில் ஏற்படும் இயல்பான உணர்வுகள். விலைமகளிரோடு பழகுகிறான் என்ற காரணத்தால், ஜோதி அவன் மீது அருவருப்போடு இருப்பதும், திரைக்கதையில் அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஜோதியின் தாயார், ஆண் துணை இல்லாமல் தனியாக ஒரு பெண்ணை வளர்ப்பதில் இருக்க வேண்டிய கவனத்தோடே இருக்கிறார். பார்க்கும்போதெல்லாம், வேலுவை கன்னாபின்னாவென்று திட்டுவது இயல்பாகவே உள்ளது. ஜோதியின் மீது வெறுப்பு இருக்கையில், அவள் தாய் திட்டுவது வேலுவுக்கு கோபத்தை ஏற்படுத்துவதும், அவள் மீது காதல்வயப்பட்டதும், அவள் தாய் திட்டுவது அவனுக்கு பெரிதாகத் தோன்றாததும், மனித குணங்களை நன்கு புரிந்து எடுக்கப்பட்ட காட்சிகள்.
வண்டிக்கடையின் முதலாளி, ஒரு வண்டிக்கடை நடத்துபவனின் வாழ்க்கை பார்வை எப்படியிருக்கும் என்பதை அழகாக உணர்த்துகிறார். நல்லா வேலை செஞ்சு, என்னை மாதிரி தனியா கடை போட்டு, கல்யாணம் கட்டி நல்லா இருக்கனும் என்று, வேலுவுக்கு அவர் சொல்லும் அறிவுரை, விளிம்புநிலை மக்களுக்கு வாழ்க்கையின் லட்சியமாக இருப்பது, மிக மிக எளிதான விஷயங்களே என்பதை எடுத்துக் காட்டுகிறது.
ஆர்த்தியைக் காட்டும் முதல் காட்சியே, உயர்நடுத்தர வர்க்கத்துக்கும், சேரி மக்களுக்குமான வாழ்க்கை எவ்வளவு வேறுபாடானது என்பதைக் காட்டுகிறது. ஒரு குடிசைக்குள் வாழ்க்கையை நடத்தும் ஜோதிக்கு, அவள் தாய் திட்டித் திட்டி தலையை வாரி விடுவதும், உயர் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஆர்த்தி, தனி அறையில், ட்ரெஸ்ஸிங் டேபிளின் முன் உட்கார்ந்து, தன் தலைமுடியை கலைத்துப் போட்டு அழகு பார்ப்பதும், ஆங்கிலப்பாடலை முணுமுணுத்துக் கொண்டே நடனமிடுவதும், வாழ்க்கையில் இந்த இரண்டு வர்க்கங்களுக்கு இடையே எத்தனை வேறுபாடுகள் என்பதை துல்லியமாகக் காட்டுகிறது.
அதே குடியிருப்பில் இருக்கும் ஒரு “கல்வித்தாயின்” மகன் தினேஷ், ப்ளஸ்டூ படிக்கும் ஆர்த்தியை, வளைத்து, அவளை சூறையாடுவதற்காக கையாளும் தந்திரங்களும், அந்தத் தந்திரத்துக்கு, படிப்படியாக ஆர்த்தி பலியாவதும், மிக மிக இயல்பான காட்சிகள். ஆர்த்தியை அவளோடு படிக்கும் தோழிகள் உசுப்பேற்றி விடும் காட்சிகள், பதின்பருவத்தினரின் இயல்பான நடத்தைகளை அற்புதமாகக் காட்டுகின்றன. வளர்ந்த தொழில்நுட்பத்தை வக்கிர எண்ணங்களுக்கு பயன்படுத்துவது ஒன்றும் புதிதல்ல. தற்போது செல்போன்கள் இருப்பதால், செல்போன்களில் படம் பார்க்கும் மாணவர்கள், 20 ஆண்டுகளுக்கு முன்னால் வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட, வண்ண வண்ண படங்களை உடைய போர்னோ மேகசின்களை ப்ளஸ்டூ படிக்கும் மாணவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பதின்பருவ வயதில் ஏற்படும் குறுகுறுப்பு, இப்படி ஏதாவது ஒன்றைச் செய்யத்தான் தூண்டும்.
தினேஷ் கேரக்டர், அந்தப் பெண்ணை வளைப்பதற்கு எடுக்கும் முயற்சிகளும், அவற்றை அவன் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு, இறுமாப்பு கொள்வதும் சிறப்பான காட்சிகள்.
இத்திரைப்படத்தின் மிக மிகச் சிறப்பான காட்சியாக எடுக்கப்பட்டிருப்பது, காவல்துறை சம்பந்தப்பட்ட காட்சிகளே. இன்ஸ்பெக்டர் குமாரவேலுவாக வருபவர், உண்மையான காவல்துறை ஆய்வாளர் போலவே நடித்திருக்கிறார். பணத்தை பறிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, தினேஷின் கைரேகையை எடுக்கச் சொல்வதும், மிரட்டினால்தான் பணம் வரும் என்பதால், தினேஷின் தாயை அரட்டுவதும், அவன் தாய் எப்படியும் மந்திரியை அணுகுவார் என்பது தெரிந்தே அவ்வாறு செய்தேன் என்று, கூலாக சொல்வதும் இயக்குநரின் உழைப்பு.
காவல்துறையில் ஒரு போலியான குற்றவாளியை எப்படி உண்மையை ஒப்புக் கொள்ள வைப்பார்கள் என்பதை துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். வேலுவை மற்ற காவலர்களை விட்டு அடித்துத் துவைக்கச் சொல்வதும், பிறகு நல்லவன் போல, “என்னய்யா இந்த அடி அடிச்சிருக்கீங்க” என்று கேட்பதும், காவல்துறையைப் பற்றி தெரியாத ஒரு குற்றவாளியின் மனதை, இந்த ஆள் நல்லவர் என்று நம்பவைக்கும். வேலுவிடம், ஒன்றும் கவலைப்படாதே, எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நம்பிக்கை கொடுப்பதும், பிறகு, அவன் சிறைக்குப் போய் விடுவான், யார் நம்மைக் கேட்பது என்ற உண்மை அனுபவம் மூலமாகத் தெரிந்து திட்டமிடுவதும், அற்புதமான காட்சி அமைப்புகள்.
வேலுவின் நண்பனாக கூத்துக் கலைஞனாக வரும் சின்னச்சாமிக்கும், வேலுவுக்கும் இருக்கும் நட்பும், தினேஷின் பணக்கார நண்பர்கள், “என்ன மச்சான் மேட்டர முடிச்சிட்டியா” என்று கேட்கும் நட்பும், வர்க்கங்களிடையே இருக்கும் வேறுபாட்டை காட்டுகிறது.
அதிகார வர்க்கம் எப்படி சட்டத்தையும், காவல்துறையையும் ஏமாற்றும் என்பதற்கு நாம் அனைவரும் அறிந்த சிறப்பான உதாரணம், ஜெஸ்ஸிக்கா லால் கொலை வழக்கு.
29 ஏப்ரல் 1999 அன்று ஒரு மாடலாக பணியாற்றிக் கொண்டிருந்த ஜெஸ்ஸிக்கா லால் என்ற இளம்பெண், குதுப் மினார் அருகே இருந்த டேமரின்ட் கோர்ட் என்ற ஒரு பாரில் பகுதி நேர ஊழியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். நள்ளிரவில் அந்த பாரில், சரக்கு தீர்ந்து விட்டது. விடியற்காலை 2 மணிக்கு அங்கே வந்த மனு ஷர்மா என்ற நபர், தனது மூன்று நண்பர்களோடு வந்து, சரக்கு வேண்டும் என்று கேட்கிறார். சரக்கு இல்லை என்று ஜெஸ்ஸிக்கா பதில் சொன்னதும், 1000 ரூபாயை எடுத்துக் கொடுத்து, சரக்கு கொடு என்று கேட்கிறார். அப்போதும் அவர் இல்லை என்றதும், பிஸ்டலை எடுத்து, இரண்டு முறை சுடுகிறார். முதல் குண்டு, சுவற்றில் படுகிறது. இரண்டாவது குண்டு, ஜெஸ்ஸிக்கா லாலின் தலையில் பட்டு, அதே இடத்தில் இறக்கிறார் ஜெஸ்ஸிக்கா.
அந்தச் சம்பவம் நடந்த இடத்தில் ஒரு பணக்கார பார்ட்டி நடந்து கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கானோர் அந்த இடத்தில் இருக்கிறார்கள். அனைவருக்கும் அந்தக் கொலை நடந்தது தெரியும். நெடுநாட்கள் கழித்த கைது செய்யப்பட்ட மனு ஷர்மா, காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் வினோத் ஷர்மாவின் மகன். மனு ஷர்மாவோடு இருந்த நண்பர்கள் அனைவருமே முக்கிய புள்ளிகள். காவல்துறையினரின் பல்வேறு குளறுபடிகளையும் மீறி, இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் பிப்ரவரி 2006ல் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்து விடுதலை செய்யப்பட்டார்கள்.
ஊடகங்களிலும், நாடெங்கிலும் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக, உயர்நீதிமன்றத்தில் நடந்த மேல் முறையீட்டில், மனு ஷர்மாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இது போல குடித்து விட்டு, வண்டி ஓட்டி, சாலையில் படுத்திருந்த ஏழைகளை கொன்ற பல வழக்குகளில், செல்வந்தர்களின் பிள்ளைகள் தப்பித்தே வந்திருக்கிறார்கள்.
அது போலவே ஒரு “கல்வித்தாயின்” பிள்ளை எப்படி எளிதாகத் தப்பிக்கிறான் என்பதை சிறப்பாக காட்டியிருக்கிறார் இயக்குநர். மந்திரியோடு உரையாடுகையில், “யோவ் அவ நம்ப சாதிய்யா” என்று மந்திரி சொல்வது, அதிகார வர்க்கம், சட்டத்தை வளைப்பதற்கு எதையெல்லாம் பயன்படுத்தும் என்பதைக் காட்டுகிறது. இன்ஸ்பெக்டர், “சார் அவ ஒரு பிம்ப் சார்.. நானே அவள அரெஸ்ட் பண்ணிருக்கேன்” என்று சொல்வதும், அதற்கு மந்திரி “யோவ், அவ இப்போ ஸ்கூல் நடத்துறாய்யா” என்று பதிலளிப்பதும், நாட்டின் யதார்த்த நிலையைக் காட்டுகிறது.
இத்திரைப்படத்தில் காட்டுவது போல, ஆயிரக்கணக்கில் இல்லையென்றாலும், நூற்றுக்கணக்கில், தமிழக சிறைகளில் அப்பாவிகள் இன்னும் வாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தின் சிறப்பான அம்சங்களில் ஒன்று, ஜோதியின் பாத்திரப்படைப்பு. முதல் பாதியிலும் சரி, இரண்டாவது பாதியிலும் சரி, ஜோதிக்கு அந்த அளவுக்கு வசனங்கள் கூட கிடையாது. சேரிகளில் இருக்கும் ஏழை பெண் பிள்ளைகள், உடுத்துவதற்கு நல்ல உடை கிடைக்காமல், ஆண்களின் சட்டையையும், ஒரு பாவாடையையும் உடுத்துவதை இயல்பாக காட்டியிருக்கும் இயக்குநர், ஜோதியை பேசா மடந்தையாகவே படைத்திருக்கிறார்.
ஆனால், திரைப்படம் முடிந்ததும், அனைவரின் மனதிலும், ஜோதி மட்டுமே நிற்கிறாள்.
உலகத் திரைப்பட விழாக்களில் நடப்பது போல, பெரும்பாலான திரையரங்குகளில் படம் முடிந்ததும் அவசர அவசரமாக வெளியேறும் மக்கள் எழுந்து நின்று கைதட்டுவதைப் பார்க்கும் போது, இப்படி ஒரு படத்தை உருவாக்கிய பாலாஜி சக்திவேலை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.
இந்தப்படம், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். வெறும் புதுமுகங்களை வைத்து, புது இசையமைப்பாளரை வைத்து, அதிக செலவில்லாமல், மக்கள் எழுந்து நின்று கைதட்டும் அளவுக்கு படத்தை தயாரிக்கும் திறமையோடு ஏராளமான இளைஞர்கள், இயக்குநர் கனவுகளோடு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நட்சத்திரங்களின் தலையில் பல கோடிகளைக் கட்டத் தயாராக இருக்கும் தயாரிப்பாளர்கள், இந்த இளைஞர்களை நம்புவதற்கு தயாராக இல்லை என்பது வேதனையான விஷயம். இந்தப் படமாவது, பாலாஜி சக்திவேல் போல, மேலும் பல இயக்குநர்களை உருவாக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.
என்னை உலுக்கிய திரைப்படம்