கடந்த இரண்டு நாட்களாக பாராளுமன்றமே என்சிஇஆர்டி பாடப்புத்தகக்தில் அம்பேத்கரை இழிவு படுத்தும் வகையில் உள்ள ஒரு கார்ட்டூன் காரணமாக ஸ்தம்பித்தது. இடது சாரிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பி.க்களும், இந்தக் கார்ட்டூனை உடனடியாக பாடப்புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், இந்தக் கார்டூன் வெளிவரக் காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தனர்.
மத்திய அரசும் உடனடியாக பணிந்தது. பிரணாப் முகர்ஜி, மற்றும் கபில் சிபல் ஆகியோர், இந்தக் கார்டூன் வெளி வந்ததற்காக மன்னிப்புக் கேட்டனர்.
அப்படி என்னதான் இருந்தது அந்தக் கார்டூனில் ?
1949ம் ஆண்டு, சங்கர்ஸ் வீக்லி என்ற பத்திரிக்கையில் வெளி வந்த கார்டூன்தான் அது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது அமர்ந்திருக்கும் அம்பேத்கரை, நேரு சாட்டையால் அடித்து விரைவாக அரசியல் அமைப்புச் சட்டத்தை தயார் செய்யுமாறு சொல்வது போன்ற கார்டூன் அது. அரசியல் அமைப்புச் சட்டம் தயார் செய்யப்பட்ட சூழல், அப்போது இருந்த அரசியல் சூழல், அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக் குழுவுக்கு இருந்த நெருக்கடிகள், அம்பேத்கருக்கும் நேருவுக்கும் இடையே இருந்த உறவு ஆகியவற்றை தற்கால மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா ?
அந்த அடிப்படையில்தானே அந்தக் கார்டூன் பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டது ? இன்று பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோரை மாவீரர்கள் என்று கொண்டாடுகிறோம். மஹாத்மா காந்தியை தேசப்பிதா என்று புகழ்கிறோம். இதே தேசப்பிதா தானே, அவர்கள் மூவரையும், காங்கிரஸ் மாநாட்டுக்கு முன்பாக தூக்கிலிடுங்கள் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார் ? இந்த உண்மையை மறைத்து விட முடியுமா ? சுபாஷ் சந்திர போசையும், காங்கிரஸ் மற்றும் காந்தி தொடர்ந்து எதிர்த்துத்தானே வந்தனர். இன்று சுபாஷ் சந்திரபோஸை நாம் கொண்டாடவில்லையா ? இதே போல வெளிவந்ததுதானே அந்தக் கார்டூனும் ?
அந்தக் கார்டூன் ஒன்றும் தடை செய்யப்பட்ட கார்டூன் இல்லையே ? பிறகு எதற்காக இத்தனை கூப்பாடுகள். விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட மனிதன் யாராவது இருக்க முடியுமா ? அம்பேத்கரும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்தானே ? புத்த மதம், தலித்துகளை சாதீயத் தளையிலிருந்து விடுவிக்கும் என்று அம்பேத்கர் போட்ட கணக்கு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கிறதே ….
இந்தப் பாடப்புத்தகங்களைத் தயார் செய்த யோகேந்திர யாதவ் மற்றும் சுகாஸ் பல்சிகர் ஆகியோர் மிகச் சிறந்த அறிஞர்கள். நம் மாணவர்கள், அனைத்து துறையிலும் கற்றுத் தேர்ந்து மிகச் சிறந்த அறிஞர்களாக உருவாக வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.
யோகேந்திர யாதவ்
யோகேந்திர யாதவ், ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் முதுகலை தத்துவம் பயின்று விட்டு, பஞ்சாப் பல்கலைகழகத்தில் எம்.பில் பயின்றவர். சிஎன்என் ஐபிஎன் போன்ற தொலைக் காட்சிகளில், தொடர்ந்து தேர்தல் கருத்துக் கணிப்புகளை நடத்தி வருபவர்.
சுகாஸ் பல்சிகர் அரசியல் மற்றும் பொது நிர்வாகத்தில் முனைவர் பட்டம் வாங்கியவர். பூனே பல்கலைகழகத்தில், சமூகவியல், அரசியல், அரசியல்பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் தொடர்ந்து பாடம் எடுத்து வருபவர்.
இதில் வினோதமான விஷயம் என்னவென்றால், இவர்கள் இருவருமே, கடுமையான தலித் ஆதரவாளர்கள். இந்திய சமூக அமைப்பை நன்கு புரிந்து, தலித்துகளுக்கும் பிற்பட்டவர்களுக்கும், அரசியல் அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்கள்.
பாராளுமன்றத்தில், இந்தக் கார்டூன் பற்றிய சர்ச்சை எழுந்ததால், இவர்கள் இருவருமே, என்சிஇஆர்டி பாடக்குழுவிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
சனிக்கிழமை அன்று மதியம், சுகாஸ் பல்சிகரின் பூனே அலுவலகம், குடியரசுக் கட்சித் தொண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த யோகேந்திர யாதவ், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, அம்பேத்கரின் ஆழமான கருத்துக்களை நான் சுகாஸ் பல்சிகரிடமே பயின்று வந்தேன். அப்படிப்பட்டவரின் அலுவலகத்தை அம்பேத்கர் பெயரால் தாக்கியுள்ளது, வருந்தத்தக்கது, வேதனை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
அம்பேத்கரைப் பற்றிய இந்தக் கார்டூனை தடை செய்ய வேண்டும் என்றால், இந்தியாவில் அத்தனை கார்டூன்களையும் தடை செய்ய வேண்டும். எந்த அரசியல்வாதியைப் பற்றியும் கார்டூன் வரையவே முடியாது.
சங்கர் என்று அழைக்கப்படும் சங்கர் பிள்ளை, கேரள மாவட்டம் காயாம்குளம் என்ற பகுதியில் பிறந்தவர். சிறிய வயதில், இவரது ஆசிரியர் படுத்திருப்பது போல ஒரு கார்டூன் வரைந்ததற்காக தலைமை ஆசிரியரால் கண்டிக்கப்பட்டார். ஆனால் இவரது மாமா, இவரது திறமையை ஊக்குவித்து, தொடர்ந்து கார்டூன் வரைய உற்சாகப்படுத்தினார். மாவேலிக்கராவில் ஓவியம் பயின்ற சங்கர், திருவனந்தபுரம் மஹராஜா கல்லூரியில் பட்டம் பயின்றார். பிறகு மும்பைக்குச் சென்ற சங்கர், இந்துஸ்தான் டைம்ஸ், தி ப்ரீ ப்ரெஸ் ஜர்னல் போன்ற பத்திரிக்கைகளில் தொடர்ந்து கார்டூன் வரைந்தார்.
சங்கர் பிள்ளை
மற்ற பத்திரிக்கைகளில் பணியாற்றி விட்டு, சுதந்திரத்துக்குப் பிறகு, சங்கர்ஸ் வீக்லி என்ற பத்திரிக்கையை தொடங்குகிறார். அந்தப் பத்திரிக்கையை தொடங்கி வைத்தது யார் தெரியுமா ? ஜவஹர்லால் நேருதான். ஆனால், நேருவைப் பற்றி சராமாரியாக கார்டூன்களை வரைந்து தள்ளியவர் சங்கர் பிள்ளை.
நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட பிறகு, கார்டூனிஸ்டுகளை அரசு கைது செய்யும் என்று அறிந்து, இவராகவே முன் வந்து சங்கர்ஸ் வீக்லி பத்திரிக்கையை நிறுத்தினார். இந்திரா காந்தி, இவரது பத்திரிக்கையை நிறுத்தியதற்கு வருத்தம் தெரிவித்து சங்கருக்கு கடிதம் எழுதினார்.
இப்படிப்பட்ட சிறப்பான பின்புலம் உள்ளவர்தான் கார்டூனிஸ்ட் சங்கர். அந்தக்கால அரசியல் சூழலை வைத்து, வரைந்த கார்டூனை இன்றைய அரசியல்வாதிகள் அத்தனை பேரும் சேர்ந்து அவதூறு செய்வது, இறந்த கார்டூனிஸ்ட் சங்கருக்கு செய்யும் அவமரியாதையே ஆகும். இந்திய அரசாங்கம், அவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் என்று வழங்கிய பல்வேறு பட்டங்கள் அனைத்தையும், பாராளுமன்றத்தில் நடந்த சம்பவங்கள், சாக்கடையில் எரிந்து விட்டன.
இந்தியாவில் தொடர்ந்து கார்டூன்களையும், கார்டூனிஸ்டுகளையும் சாடும் போக்கு இருந்து வருகிறது. ஆனந்த விகடனில் அட்டைப்படத்தில் வந்த ஒரு நகைச்சுவை துணுக்குக்காக, ஆனந்த விகடன் ஆசிரியருக்கு சிறைத்தண்டனை விதித்தார் “வானளாவிய அதிகாரம்” படைத்த அன்றைய சபாநாயகர் பி.எச்.பாண்டியன்.
சமீபத்தில், ஒரு கார்டூன் வரைந்து அதை இணையத்தில் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டதற்காக, ஒரு பேராசிரியரையும், அவர் நண்பரையும் சிறையிலடைத்தார் மம்தா பானர்ஜி.
தமிழகத்திலும், கார்டூன்களை ரசிக்காமல் கோபப்படும் போக்குக்கு, கருணாநிதி ஜெயலலிதா ஆகிய இருவருமே விலக்கல்ல. உதயநிதி ப்ரொடக்ஷன்ஸ், துரை தயாநிதி தயாரிப்பு, கலைஞர் கதை வசனம், அருள் நிதி ஹீரோ என்று ஒரு கார்டூன் போட்டதற்காக, தினமணி பத்திரிக்கையை ஒரு பொதுக்கூட்டத்தில் வறுத்து எடுத்தார் கருணாநிதி. அப்போது அரசு விளம்பரத்தையும் நிறுத்தச் சொன்னதாகத் தகவல்.
இப்படி சகிப்புத்தன்மையை சுத்தமாக இழந்து கொண்டே வந்தால், நாளை இந்தச் சமுதாயம் மிருகங்களின் சமுதாயமாகவே மாறி விடும். நகைச்சுவை உணர்ச்சி இல்லாத நமக்கும் மிருகங்களுக்கும் என்ன வேறுபாடு ?
சங்கரின் சில கார்டூன்கள்