பிரமோத் குமார். ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் திருப்பூர் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டாலும், ஐஜி என்ற கோதாவிலேயே இன்னும் பிரமோத் குமார் நடந்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரின் தற்போதைய நிலை குறித்துப் பார்க்கும் முன், பிரமோத் கைது செய்யப்படுவதற்கான பின்புலத்தைப் பார்ப்போம். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் குமார் 1989ம் ஆண்டு நேரடியாக ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றவர். மேற்கு மண்டல ஐஜியாக இருந்தபோதுதான் இந்தச் சிக்கலில் மாட்டுகிறார்.
பேராசைப் பிடித்தவர்களுக்கென்றே உருவாக்கப்படும் பல்வேறு மோசடித் திட்டம் போலவே உருவானதுதான் பாசி பாரெக்ஸ் ட்ரேடிங் என்ற நிறுவனம். காந்தப்படுக்கை, ஆண்டுக்கு 24 சதவிகித வட்டி, ஒரே ஆண்டில் பணம் இரட்டிப்பு, கோல்டு க்வெஸ்ட் போன்ற திட்டங்களைப் போலவே உருவானதுதான் பாசி ட்ரேடிங்.
பாசி நிறுவனத்தார் கையாண்ட வழிமுறை எளிதானது. 50 ஆயிரத்தை எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரே ஆண்டில் 1,40,944 திருப்பித் தரப்படும் என்பதுதான் பாசி நிறுவனத்தார் அறிவித்த திட்டம். உழைக்காமல், சீக்கிரம் பணக்காரன் ஆக வேண்டும் என்று யாருக்குத்தான் ஆசையில்லை ? அறிவிப்பு வெளியானதும், அடித்துப் பிடித்துக் கொண்டு, பணத்தைக் கட்டினார்கள். தொடக்கத்தில் சொன்னபடி பணத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த பாசி நிர்வாகத்தினர், ஒரு கட்டத்தில் பணம் திருப்பிக் கொடுப்பதை நிறுத்துகின்றனர். பாசி நிறுவனம் கொடுத்த செக்குகள், பணமில்லாமல் திரும்புகின்றன.
டிஎஸ்பி ராஜேந்திரன்
இந்தச் சூழலில், பணத்தை இழந்த பொதுமக்கள், காவல்துறையிடம் புகார் தெரிவிக்கத் தொடங்குகின்றனர். அந்த நேரத்தில் மேற்கு மண்டல ஐஜியாக இருக்கிறார் பிரமோத் குமார்.
பாசி நிறுவனத்தை நடத்தி வந்த மோகன்ராஜ், கதிரவன் மற்றும் கமலவள்ளி ஆகியோர் மீது வழக்கு திருப்பூர் மத்தியக் குற்றப்பிரிவு குற்ற எண் 26 / 2009ல் வழக்கு பதியப்படுகிறது. இதையடுத்து, தலைமறைவான மோகன்ராஜ், கதிரவன் மற்றும் கமலவள்ளி ஆகியோரை கடுமையாக தேடுகிறது காவல்துறை. திருப்பூர் டிஎஸ்பியாக இருந்த ராஜேந்திரன் மற்றும், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் ஐஜி பிரமோத் குமார் உத்தரவின் பேரில், பாசி நிர்வாகிகளிடம் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர்.
இதற்கு இடைத்தரகராக செயல்பட்டவர் ஜான் பிரபாகர் என்பவர். இவர் ஒரு பாஸ்போர்ட் வழக்கில் 18 ஆண்டுகளாக சிபிஐயால் தேடப்பட்டு வந்தவர். இவரை தேடப்படும் குற்றவாளியாக சிபிஐ அறிவித்து பட்டியலில் இவர் பெயரைச் சேர்த்திருந்தது. ஆனால், ஜான் பிரபாகர் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா ? 15 ஆண்டுகளாக, இந்திய போலந்து வணிக அமைப்பின் (Indo-Polish Chamber of Commerce)ன் தலைவராக இருந்து, சென்னையில், போலந்து திரைப்பட விழாக்களை திறந்து வைத்துக் கொண்டு இருந்தார். இந்த நிலையில்தான், பாசி நிதி நிறுவன மோசடி நடந்ததும், பிரமோத் குமாருக்காக ஜான் பிரபாகர் தலையிட்டு, பாசி நிறுவன நிர்வாகிகளிடம் பேரம் பேசுகின்றனர்.
பிரமோத் குமாரின் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், ஜான் பிரபாகர் ஆகியோர், பாசி நிறுவனத்தின் நிர்வாகி கமலவள்ளியை ஒரு கருப்பு கலர் போர்டு என்டவர் காரில் கடத்திச் சென்று ஒரு ரகசிய இடத்தில் அடைத்து வைக்கின்றனர்.
அங்கே கமலவள்ளிக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரை ஜான் பிரபாகர் மற்றும், ஐஜி பிரமோத் குமார் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி, அரை குறை அவரை ஆடைகளோடு படம் பிடித்து, 10 கோடி தருமாறு மிரட்டுகிறார்கள். தனது பங்குதாரர் மோகன்ராஜுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி அதன் மூலம் தப்பிய கமலவள்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
மருத்துவமனையிலும், டிஎஸ்பி ராஜேந்திரன் வந்து மிரட்டுகிறார். அவர்கள் சொல்லியபடி, வாக்குமூலம் கொடுத்த கமலவள்ளி, இதுவரை அனுபவித்தது போதும் என்று, திருப்பூர் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் வாக்குமூலமாக கொடுக்கிறார்.
இதன் பிறகு, இந்த வழக்கு சிபி.சிஐடி பிரிவுக்கு மாற்றப்படுகிறது. அதன் பிறகு, இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கைது செய்யப்படுகிறார். கைது செய்யப்பட்ட மோகன்ராஜ், நீதிமன்ற நடுவர் முன்நிலையில், நடந்த உண்மைகள் அத்தனையையும் வாக்குமூலமாக கொடுக்கிறார். பிரமோத் குமார் உத்தரவின் பேரில் கமலவள்ளி உள்ளிட்டோரை மிரட்டி, பணம் பறித்ததை அப்படியே கூறுகிறார்.
சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டும், அங்கேயும், பிரமோத் குமாரை காப்பாற்ற சிபி.சிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் வேலை செய்கிறார்கள். சிபிஐ சிஐடி விசாரணைக்குப் போன இந்த வழக்கு எவ்வித முன்னேற்றமும் இல்லாமல், அப்படியே கிடப்பில் போடப்படுகிறது.
இதன்பிறகே, நீதிமன்ற உத்தரவின் பேரில், இவ்வழக்கின் புலனாய்வு சிபிஐக்கு மாற்றப்படுகிறது. சிபிஐக்கு மாற்றப்பட்ட பிறகும், சில வட இந்திய அதிகாரிகள் பிரமோத் குமாரை காப்பாற்ற தொடர்ந்து முயன்று வந்தனர். இது குறித்து சவுக்கில் “காப்பாற்றப்படுகிறாரா பிரமோத் குமார்” என்ற தலைப்பில் நவம்பர் 2011ல் ஏற்கனவே கட்டுரை எழுதப்பட்டுள்ளது, சவுக்கு வாசகர்களுக்கு நினைவிருக்கும்.
பிரமோத் குமார் அவ்வளவு செல்வாக்காகத் திகழ்ந்தார். தமிழகத்தில் உள்ள வட இந்திய ஐபிஎஸ் அதிகாரிகள் அத்தனை பேரும், பிரமோத் குமாரை காப்பாற்ற தங்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு முயற்சிகளை எடுத்தனர். சிபிஐக்கு இவ்வழக்கின் புலன் விசாரணை மாற்றப்பட்டு, கமலவள்ளி, மோகன்ராஜ், மற்றும் கதிரவன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்டனர். அதன் பிறகும், பிரமோத் குமாரை மட்டும் கைது செய்யாமல் இருக்க கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தானாக சென்று பொறியில் சிக்கும் எலி போல பிரமோத் குமார், முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததுதான் அவருக்கு வினையாக முடிந்தது. உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ததும், சிபிஐக்கு வேறு வழியில்லாமல் போய், பிரமோத் குமாரை கைது செய்ய நேர்ந்தது.
கைது செய்யப்பட்டு, ஐந்து நாள் சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்ட போது கூட, பிரமோத் குமார், தான் ஒரு கைதி என்பதை மறந்து விட்டு, சிபிஐ அதிகாரிகளிடம், நான் யார் தெரியுமா ? என்று மிரட்டியிருக்கிறார். “என்னை மட்டும் விசாரிக்கிறீர்களே…. நான் மட்டுமா பணம் வாங்கினேன்.. கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் வாங்கினார், லத்திக்கா சரண் வாங்கினார், வன்னியபெருமாள் வாங்கினார், அருண் வாங்கினார், நக்கீரன் காமராஜ் வாங்கினார், ஜாபர் சேட் வாங்கினார். அவர்களையெல்லாம் விசாரிக்காமல் என்னை மட்டும் ஏன் விசாரிக்கிறீர்கள்” என்று ஏக சவடால் விட்டுள்ளார்.
சிபிஐ காவல் முடிந்து, பிரமோத் குமார், கோவை சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, கோவை சிறை அதிகாரிகளிடம் கடுமையாக சண்டை போட்டிருக்கிறார். தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும், நெஞ்சு வலிக்கிறது என்றும் மிரட்டியிருக்கிறார். உடனடியாக இவரை மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்ததில், இவருக்கு நெஞ்சு வலியெல்லாம் இல்லை என்று மருத்தவர்கள் கூறி விட்டனர். தன்னை கோவை சிறையிலிருந்து, புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோவை சிபிஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் பிரமோத். அந்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், சிறை நிர்வாகமே, பிரமோத் குமாரை புழல் சிறைக்கு மாற்றி உத்தரவிட்டு, அதன் படி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளளார் பிரமோத்.
புழல் சிறையில் உயர்பாதுகாப்புப் பிரிவு 1ல் அடைக்கப்பட்டுள்ள பிரமோத் குமார், வழக்கமாக கைதிகளை அடைப்பது போல 6 மணிக்குத் தன்னை அடைக்கக் கூடாது என்றும், எட்டு மணிக்குத்தான் அடைக்க வேண்டும் என்றும் அடம் பிடித்து தகராறு செய்திருக்கிறார். சிறை நிர்வாகமும், வேறு வழியின்றி 8 மணிக்கே இவரை அடைத்து வருகிறார்கள். இரவு எட்டு மணிக்கு மேல், கோதண்டராமன் என்ற சிறை வார்டர், பிரமோத் குமாருக்கு செல்போன் வழங்குவதாகவும், அதை வைத்து இவர் இரவு முழுவதும் செல்போனில் பேசி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புழல் சிறை 2ன் கண்காணிப்பாளராக உள்ள, கருப்பண்ணன் என்ற அதிகாரி, பிரமோத் குமாருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வருவதாகவும் சிறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைக் கைதியாக இருந்தாலும், தனது செல்வாக்கு குறையாமல், தன்னை இன்னும் ஐஜி என்றே கருதிக் கொண்டு பிரமோத் குமார் நடந்து கொண்டு வருவதாகத் தெரிகிறது.
ஒரு ஐபிஎஸ் அதிகாரி, ஒரு பெண்ணைக் கடத்திச் சென்று, அவளை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி, இந்தத் தகவலை அந்தப் பெண்ணும் மற்றவர்களும் புகாராகக் கொடுத்தும், இரண்டு ஆண்டுகளாக பிரமோத் குமாரை சஸ்பெண்ட் செய்யாமல், 20 ஆயிரம் காவலர்கள் அவருக்குக் கீழ் பணியாற்றும் வகையில், அவரை ஆயுதப்படை ஐஜியாக நியமித்து அழகு பார்த்து வரும், தமிழக டிஜிபி ராமானுஜம், நேர்மையான அதிகாரியா ?
ராமானுஜம் நினைத்திருந்தால், பிரமோத் குமாரை ஒரே நாளில் சஸ்பென்ட் செய்திருக்க வேண்டாமா ? இப்படிப்பட்ட நபரை, ஆயுதப்படை ஐஜியாக நியமித்து, அவருக்கு மருத்துவ விடுப்பு வழங்கி, சிபிஐ அவரைக் கைது செய்யும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அளவில்தான் இருக்கிறது தமிழக காவல்துறை.
இத்தனை ஆதாரங்கள் இருந்தும், இப்படிப்பட்ட ஒரு நபர் மீது நடவடிக்கை எடுக்க எத்தனை நாள் ஆகிறது பாருங்கள் ? இதே தவறை ஒரு சாதாரண நபர் செய்திருந்தால், தமிழக காவல்துறையும் இந்த அதிகாரிகளும் இப்படி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்களா ?
தவறு செய்த ஒரு நபர் மீது நடவடிக்கை எடுக்க வைக்க எத்தனை நாள் போராட வேண்டியிருக்கிறது பாருங்கள்.