யூனியன் கார்பைடு
1 நவம்பர் 1917 அன்று யூனியன் கார்பைடு என்ற நிறுவனம் உருவாகியது. லிண்ட் ஏர் ப்ராடக்ட்ஸ், நேஷனல் கார்பன், ப்ரஸ்டோ லைட் மற்றும் யூனியன் கார்பைடு ஆகிய நிறுவனங்கள் இணைந்து யூனியன் கார்பைடு உருவாகியது.
யூனியன் கார்பைடு நிறுவனத்தின் வளர்ச்சி, முதல் உலகப்போரின் விளைவாக உருவானது. போருக்குத் தேவையான உபகரணங்களைத் தயாரிப்பதில் முன்னணியில் இருந்தது யூனியன் கார்பைடு.
வானில் பறக்கும் பலூன்களுக்கான ஹீலியம், ஜெர்மன் பீரங்கிக் குண்டுகளில் இருந்து நேசப்படைகளின் டாங்கிகளைக் காப்பாற்றும் இரும்பு மற்றும் ஸிர்கோனியம் அடங்கிய தகடுகள், விஷ வாயுக்களில் இருந்து ராணுவ வீரர்களைக் காப்பாற்றும் கார்பன் துகள்கள் அடங்கிய முகமூடிகளைத் தயாரிப்பது என்று யூனியன் கார்பைடு நிறுவனத்தின் வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. இதே வியாபாரம், இரண்டாம் உலகப்போரிலும் நடந்தது.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, யூனியன் கார்பைடு ரசாயனம் தொடர்பான பல்வேறு பொருட்களைத் தயாரிக்கத் தொடங்கியது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, யூனியன் கார்பைடின் வளர்ச்சி அசுரத்தனமாக இருந்தது. 20ம் நூற்றாண்டின் இறுதியில், யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு 40 நாடுகளில் 130க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள் உருவாகின. 1976ம் ஆண்டில், யூனியன் கார்பைடு நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களின் எண்ணிக் 1 லட்சத்து இருபதாயிரம். அந்த ஆண்டில் யூனியன் கார்பைடின் மொத்த டர்ன் ஓவர் ஆறரை பில்லியன் டாலர்கள்.
பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் நைட்ரஜன் வாயு, ஆக்சிஜன் வாயு, கார்பானிக் வாயு, மீதேன், எதிலின், ப்ரோபேன் ஆகியவற்றைத் தயாரிப்பதில் யூனியன் கார்பைடு முன்னணியில் இருந்தது. இது மட்டுமல்லாமல் உரத்தயாரிப்பிலும் யூனியன் கார்பைடு நிறுவனமே முன்னோடியாக இருந்தது.
பல்புகளுக்குப் பயன்படுத்தப்படும் டங்ஸ்டன், மெட்டலர்ஜிக்கல் பொருட்களான கோபால்ட், க்ரோம், விமான உதிரிபாகங்கள் போன்றவையும் கார்பைடு நிறுவனத்தின் ஏகபோகமாக இருந்தது. இது தவிர, பாலிதீன் பைகள் என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பில், கார்பைடு நிறுவனம், அமெரிக்காவில் ஒரு புரட்சியையை உண்டாக்கியது. பத்தில் எட்டு அமெரிக்க குடும்பங்கள், கார்பைடு நிறுவனம் தயாரித்துத் தரும் பிளாஸ்டிக் பைகளிலேயே ஷாப்பிங் செய்தனர். பாலிதீன் தயாரிப்பைப் போலவே, ப்ளாஸ்டிக் பாட்டில்கள், உணவுப் பொருட்களை பேக் செய்யும் பொருட்கள், தொலைபேசி வடங்களின் மேலே வரும் ப்ளாஸ்டிக் கோட்டிங்குகள், கார் பாட்டரிகள், அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படும் சிலிக்கான்கள், செயற்கை வைரங்கள் என்று யூனியன் கார்பைடு நிறுவனம் கால்பதிக்காத துறையே இல்லை எனலாம்.
1922ம் ஆண்டு வெளியிடப்பட்ட யூனியன் கார்பைடு நிறுவனத்தின் ஒரு விளம்பரம்.
270, பார்க் அவென்யூ, மான்ஹாட்டன் நகரில் அமைந்திருந்த யூனியன் கார்பைடு அலுவலகம் மூலமாக, அமெரிக்க நாட்டையே யூனியன் கார்பைடு நிறுவனம் தன் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தது என்றால் அது மிகையாகாது.
சுருக்கமாக சொன்னால், யூனியன் கார்பைடு நிறுவனத்தை நமது நாட்டின் ரிலையன்ஸ் நிறுவனத்தோடு ஒப்பிடலாம். பெட்ரோ கெமிக்கல் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பு மூலமாக தன் தொழிலைத் தொடங்கிய ரிலையன்ஸ் நிறுவனம், இன்று, மளிகைப் பொருட்கள், ஆடைகள், செருப்புகள், மின்னணு சாதனங்கள், காய்கறி வியாபாரம், இறைச்சி வியாபாரம், திரைப்படத் தயாரிப்பு, வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்தி சேனல்கள், கிரிக்கெட் டீம், என்று நம் வாழ்வின் அத்தனை துளைகள் வழியாகவும் நுழையவில்லையா… அதே போலத்தான் அன்று யூனியன் கார்பைடு நிறுவனம் இருந்தது.
இன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடங்காத பேராசை போலவே, யூனியன் கார்பைடுக்கும், ஆறரை பில்லியன் டர்ன் ஓவர் போதவில்லை. அடுத்து எந்தத் துறையில் இறங்கலாம் என்று ஆலோசனை செய்யும் போது, அவர்கள் தொழில் சார்ந்த பூச்சிக் கொல்லி மருந்து ஆராய்ச்சியில் இறங்கலாம் என்று முடிவு செய்கிறார்கள். யூனியன் கார்பைடின் நிர்வாகம் இதற்கென்று பிரத்யேக ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவ முடிவு செய்கிறது.
பாய்ஸ் தாம்ஸன் இன்ஸ்டிட்யூட் என்று தாவர ஆராய்ச்சிக்காக பிரத்யேகமாக நிறுவப்பட்ட ஒரு நிறுவனத்தில், ஒரு முழு வளாகத்தை வாடகைக்கு எடுக்கிறது யூனியன் கார்பைட். பூச்சியியலில் (Entomology) சிறந்த விஞ்ஞானிகளாக இருந்த ஹெர்பர்ட் மூர்பீல்ட் மற்றும் ஹேரி ஹெய்ன்ஸ் ஆகிய இருவரை 1954ம் ஆண்டில், பூச்சிக் கொல்லி ஆராய்ச்சிக்காக பாய்ஸ் தாம்சன் இன்ஸ்ட்டிட்யூட்டுக்கு அனுப்புகிறது, யூனியன் கார்பைட் நிர்வாகம். இவர்களோடு, வேதியியலில் முனைவர் பட்டம் பெற்ற மற்றொரு விஞ்ஞானி லாம்ப்ரெக் என்பவரும் சேர்ந்து கொள்கிறார்.
இந்த புதிய ஆராய்ச்சித் திட்டத்துக்கு “பரிசோதனை பூச்சிக்கொல்லி செவன் செவன்” (Experimental Insecticide Seven Seven) என்று பெயரிடப்படுகிறது. பாய்ஸ் தாம்ப்ஸன் ஆராய்ச்சி நிலையத்தில், ஆயிரக்கணக்கில் பூச்சிகள் வளர்க்கப்பட்டன. தாவரங்கள் தனியே வளர்க்கப்பட்டன. பல்வேறு பருவநிலைகளை உருவாக்கக் கூடிய கண்ணாடிக் கூடங்களில் பல்வேறு தாவரங்கள் வளர்க்கப்பட்டன. சிறந்த பூச்சிக்கொல்லியை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி தொய்வில்லாமல் தொடர்ந்து நடைபெற்றது.
மூன்றாண்டு ஆராய்ச்சியின் விளைவாக, 1957ம் ஆண்டு, இந்த மூன்று விஞ்ஞானிகளும், தண்ணீரில் கரையக்கூடிய, வெள்ளை நிற துகள் வடிவத்தில் இருந்த கார்பாமிக் ஆசிட் மற்றும் ஆல்பா நாப்தால் ஆகிய மூலப்பொருட்களின் மூலமாக ஒரு புதிய பூச்சிக்கொல்லியைத் தயாரிக்கின்றனர். அந்தப் பூச்சிக் கொல்லிக்கு “செவின்” என்று பெயரிடப்படுகிறது.
யூனியன் கார்பைடு நிறுவனம் மகிழ்ந்தது. அமெரிக்கா முழுவதும், இந்தப் புதிய கண்டுபிடிப்பைப் பற்றிய விளக்கப் பிரசுரங்களை விநியோகித்தது. டிடிட்டி என்ற பூச்சிக்கொல்லிக்கு மாற்றாக ஒரு புதிய மருந்து வந்து விட்டது, இது எந்த வகையிலும், இயற்கைக்கோ, மனிதருக்கோ கேடு விளைவிக்காது என்று பிரமாதமாக விளம்பரப்படுத்தியது.
பருத்தி, எலுமிச்சை, வாழை, பைன்ஆப்பிள், காபி, சூரியகாந்தி, அரிசி, கரும்பு என்று செவின் பாதுகாக்காத பயிர் வகைகளே உலகில் இல்லை என்று விளம்பரப்படுத்தியது.
அந்த செவின் தயாரிப்புத் தொழிற்சாலைதான் பின்னாளில் இந்தியாவில் ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்தது.
தொடரும்