இந்த வாரம் ஆனந்த விகடன் இதழில், இனி ஹாய் மதன் கேள்வி பதில் மற்றும் மதன் கார்டூன்கள் இடம் பெறாது என்று, அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அது குறித்து ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த செய்தி அப்படியே தரப்படுகிறது.
க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்.
உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்?
ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது. உடனே என்ன செய்கிறீர்கள்? தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள். காரணம், அதில்தான் ஆபத்து ரொம்பக் குறைவு. ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாலோ, பெரிய மின்னல் தோன்றினாலோ தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தரையில் நடுங்கிப் படுத்துக்கொண்டான். பிறகு, சூரியன் போன்ற இயற்கை விஷயங்களின் முன்பு ‘எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதே’ என்பதை விளக்க, குப்புறப் படுத்தான். பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில் (‘பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அர்த்தம்!). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன. ‘நான் உனக்கு அடங்கிப்போகிறேன்!’ என்கிற ஓர் அர்த்தம்தான் அதற்கு உண்டு!
மேற்கண்ட கேள்வி – பதில் வெளியானதைத் தொடர்ந்து, அதில் இடம் பெற்ற படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விகடன் நிர்வாக இயக்குனருக்கு மதன் அனுப்பியுள்ள கடிதம்…
…பல ஆண்டுகளாக விகடனில் நான் எழுதி வரும் ‘ஹாய் மதன்’ பகுதியில் வரும் என் பதில்கள் பொது அறிவு பற்றியது என்பது தங்களுக்குத் தெரியும். ஆயிரக்கணக்கான விகடன் வாசகர்கள் – வரலாறு, விஞ்ஞானம், மருத்துவம், மனித இயல், விலங்கியல் சம்பந்தப்பட்ட கேள்விகளைத்தான் எனக்கு எழுதி அனுப்புகிறார்கள். அரசியலையும் சினிமாவையும் நான் அநேகமாகத் தொடுவதில்லை.
2.5.2012 இதழில் ‘காலில் விழுந்து வணங்குவது’ பற்றிய மனித இயல் (Anthropology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அதை ஆரம்பித்திருக்கக்கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு பதில் எழுதியிருந்தேன். ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது. ஆதிகாலத்திய சம்பிரதாயம் பற்றிய பொது அறிவுப் பதில் தான் அதுவேயன்றி, குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய பதிலே அல்ல அது!
ஜெயா டி.வி-யில் நான் சினிமா விமர்சனம் செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்களா? என்னிடம் ஜெயா டி.வி-யின் தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால், ‘அந்த புகைப்படம் வெளிவந்ததற்கு நான் காரணமல்ல’ என்று இதன் பின்னணியை விவரமாக விளக்க வேண்டி வராதா? அந்த தர்மசங்கடம் எனக்குத் தேவைதானா? முப்பதாண்டு காலம் விகடன் நிறுவனத்துக்காக உழைத்த எனக்கு இப்படியொரு பிரச்னையை ஏற்படுத்துவது நேர்மையான, நியாயமான செயல்தானா என்பதை தாங்கள் சிந்திக்க வேண்டும்.
முக்கியமான பிரச்னைகள் எத்தனையோ சந்தித்துக்கொண்டிருக்கும் தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டு, அவரைச் சந்தித்து, நான் செய்யாத தவறுக்கு விளக்கம் தந்துகொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏற்படுத்துவது முறையா என்று சிந்திக்க வேண்டுகிறேன்.
…வரும் இதழிலேயே ‘புகைப்படங்கள், லே – அவுட்டுக்கு மதன் பொறுப்பல்ல’ என்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
– மதன்
மதன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடி களுக்கும் நிர்பந்தங்களுக்கும் அவர் சமீப காலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.
‘ஹாய் மதன்’ பகுதியில் வாசகர்கள் கேட்ட கேள்வியிலோ, மதன் அளித்த பதிலிலோ நேரடி வார்த்தைகளில் இடம் பெறாத – அதே சமயம், அந்தக் கேள்வி – பதிலுக்கு மேலும் வலிமையும் சுவாரஸ்யமும் சேர்க்கக்கூடிய படங்களை இதற்கு முன் ஏராளமான சந்தர்ப்பங்களில் ஆசிரியர் குழு சேர்த்துள்ளது. அப்போதெல்லாம், எந்தக் காரணங்களைக் காட்டியும் ஒருபோதும் எந்த ஆட்சேபமும் அவர் தெரிவித்ததே இல்லை.
அதேபோல், ‘இது பொது அறிவுப் பகுதி மட்டுமே’ என்று இப்போது மதன் குறிப்பிடும் ‘ஹாய் மதன்’ பகுதியில் அரசியல் மற்றும் சினிமா பற்றிய நேரடியான, காரசாரமான பதில்களை அவர் தொடர்ந்து இதழ் தவறாமல் அளித்திருப்பதை வாசகர்களும் நன்கு அறிவார்கள். இப்போது திடீரெனத் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொள்வதற்கான காரணம், அவருடைய கடிதத்திலேயே உள்ளது.
இதையெல்லாம் பார்க்கும்போது… தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், ‘ஹாய் மதன்’ பகுதியை மட்டும் அல்ல… கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு தரப்பைப் பற்றிய நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங் களையோ தவிர்த்துவிட்டு… செய்திகளையும் கருத்துக்களையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்றே விகடன் கருதுகிறான்.
எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி – பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
– ஆசிரியர்
படித்து விட்டீர்களா ? “தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், ‘ஹாய் மதன்’ பகுதியை மட்டும் அல்ல… கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு தரப்பைப் பற்றிய நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங் களையோ தவிர்த்துவிட்டு… செய்திகளையும் கருத்துக்களையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்றே விகடன் கருதுகிறான்.”
விகடனின் பத்திரிக்கை தர்மத்தைப் பார்த்தால் புல்லரிக்கிற தல்லவா ? இப்படியன்றோ ஒரு பத்திரிக்கை நடத்தப்பட வேண்டும் என்று தோன்றுகிறதல்லவா ?
மாறன் விவகாரத்தில் விகடன் நிறுவனத்தின் “நடுநிலை” எப்படிப்பட்டது என்பதை சவுக்கு விபரமாகவே அம்பலப்படுத்தியிருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் நாடெங்கும் பற்றி எறியும் போது, ஆ.ராசாவும், கனிமொழியும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எந்த அளவுக்கு சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்து, நவம்பர் 2010 முதல் மார்ச் 2011 வரை 27 கவர் ஸ்டாரிகளை வெளியிட்டது ஜுனியர் விகடன். விகடன் உள் விவகாரங்களை அறிந்தவர்கள், இத்தனை கவர் ஸ்டோரியின் பின்புலத்திலும் இருந்தது கேடி சகோதரர்கள் என்று அப்போதே கூறினார்கள். கேடி சகோதரர்களின் 2ஜி ஊழல் குறித்து, வட இந்திய ஊடகங்களில் செய்திகள் பலமாக அடிபடத் தொடங்கிய பிறகு, தமிழ் ஊடகங்களும் இது குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியிடத் தொடங்கிய பிறகு, சம்பிரதாயமாக இரண்டே இரண்டு கவர் ஸ்டோரிகளை வெளியிட்டு, அதுவும் கேடி சகோதரர்களுக்கு வலிக்காதது போல, இரண்டு கட்டுரைகளை எழுதியது விகடன்.
ஆ.ராசா மற்றும் கனிமொழி இருவரும் இணைந்து இருக்கும் படங்களை தவறான பொருள் கொடுப்பது போல பல முறை வெளியிட்டிருக்கிறது விகடன். கேடி சகோதரர்களின் அழுத்தம் காரணமாக, தொடர்ந்து ராசாவுக்கு எதிராகவும், கனிமொழிக்கு எதிராகவும் செய்திகள் வெளியிட்டதும், பின்னர் கேடி சகோதரர்களைப் பற்றிய செய்திகளை மூடி மறைத்ததும், சன் டிவியில் ஒளிபரப்பாகும் “விகடன் ஒளித்திரை” தானே ஒளியற்று இருளாக்கியது ? இதுதான் விகடனின் நடுநிலையா ?
2ஜி விவகாரத்தில் கனிமொழியின் பங்கு குறித்து, பக்கம் பக்கமாக செய்திகளை வெளியிட்டு விட்டு, பிறகு கனிமொழியின் செலவிலேயே, டெல்லிக்கு சிறப்பு நிருபர் இரா.சரவணனை அனுப்பி, “நாளைய திமுகவின் அசைக்க முடியாத சக்தி கனிமொழி” என்று கட்டுரை வெளியிடுவதுதான் நடுநிலையா ?
கடந்த திமுக ஆட்சியில் ஆணவம் பிடித்து அலைந்த ஜாபர் சேட் என்ற அதிகாரியின் ஊழல்களையும், அவரின் அக்கிரமங்களும் 2007 முதல் தொடர்ந்து நடந்து வந்தாலும், அவருக்கு அஞ்சி, அவருக்கு எதிராக ஒரே ஒரு வரி கூட எழுதாமல், மார்ச் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், ஜாபர் சேட்டை தேர்தல் ஆணையம் விடுமுறையில் போகச் சொன்னவுடன், அவருக்கு எதிராக “விடுமுறையில் போகிறாரா வீழ்த்தப்பட்ட ஜாபர் சேட்” என்று போடுவதுதான் உங்கள் நடுநிலையா ? ஜாபர் சேட் விடுமுறையில் போகச் சொல்வதற்கு முன்பு நான்கு ஆண்டுகளாக எங்கே போனது விகடனின் நடுநிலை ?
ஆகஸ்ட் 2010ல் வெளி வந்த ஜுனியர் விகடன் இதழில் இன்று மதுரையில் பட்டாபட்டி அண்டர்வேரோடு இருக்கும், பொட்டு சுரேஷ் என்ற மு.க.அழகிரியின் அல்லக்கை பற்றி “மடக்கப்பட்ட மதுரை திலகம்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு விட்டு, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆனந்த விகடன் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறோம் என்று தினமலரில் விகடன் அலுவலகத்தை நொறுக்குவோம் என்ற பொருளில் விளம்பரம் வந்தவுடன், திடீரென்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் நினைவுக்கு வந்து, அங்கே அனைத்துப் பத்திரிக்கையாளர்களையும் அழைத்து கூட்டம் போட்டது விகடன். இந்த மிரட்டலை சந்திப்போம் என்று சவால் வேறு… மதுரையில் பொட்டு சுரேஷ் வழக்கு தொடுத்ததும் அதை சந்திக்க பத்திரிக்கையாளர்கள் ஆதரவு தர வேண்டும் என்று கோரிக்கை வேறு….
இவ்வளவு வீராவேசமாக பேசி விட்டு, அடுத்த இதழிலேயே பொட்டு சுரேஷின் காலில் விழுந்த விகடன் நடுநிலையைப் பற்றிப் பேசலாமா ? பொட்டு சுரேஷ் போன்ற ஒரு பொறுக்கியின் காலில் விழுந்த விகடன், அன்று ஆதரவு தெரிவித்த பத்திரிக்கையாளர் அனைவர் முகத்திலும் காறி உமிழ்ந்ததற்கு சமம்.
விகடன் பதிப்பகம் சார்பாக, வெளியிடப்பட்ட தமிழாக்கம் செய்யப்பட்ட பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தை தமிழக அரசின் நூலகத்துறை வாங்க வேண்டும் என்பதற்காகவே, கருணாநிதியை வைத்து வெளியிட வைப்பதற்காக, யார் யாரின் காலில் விகடன் நிர்வாகம் விழுந்தது என்பது நன்கு தெரியும். இந்த விகடன் நடுநிலையைப் பற்றிப் பேசலாமா ?
சமீபத்தில்தான், தேர்தல் ஆணையம் “பெய்ட் நியூஸ்” என்ற விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து, அதற்கு தடை விதித்துள்ளது. 2009 பாராளுமன்றத் தேர்தலின் போது, “வேட்பாளர் தம்பட்டம்” என்ற பெயரில், செய்திகளைப் போலவே விளம்பரங்களை வெளியிட்டு, பல கோடிகளை சம்பாதித்த விகடனா நடுநிலையைப் பற்றிப் பேசுவது ? அச்சில் வருபவற்றை உண்மை என்று நம்பும் அப்பாவி வாசகனை ஏமாற்றி இப்படி பணம் சம்பாதிக்கும் ஒரு நிறுவனம் நடுநிலை பற்றிப் பேசலாமா ?
ஊரில் இருப்பவர்களின் ஊழல்களை அம்பலப்படுத்துகிறோம் என்று வரிந்து கட்டும் விகடன் நிறுவனத்தின் கட்டிடம் இருக்கும் அண்ணாசாலையின் பின்புறம், கூவம் நதிக்கரையோரம் இருக்கும் இடத்தை ஆக்ரமித்து விட்டு, அதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக, விகடன் நிறுவனத்தின் அசோசியேட் எடிட்டராக இருந்தவரை விட்டு, அதிகாரிகளுடன் பேரம் பேசச் சொன்ன விகடன் நிறுவனம் நடுநிலையைப் பற்றிப் பேசலாமா ?
ஜுனியர் விகடன் இதழில், திமுக ஆட்சியில் புறநகர் கமிஷனராக இருந்த ஜாங்கிட்டைப் பற்றிய ஊழல் செய்தி வெளியானதும், அதை எதிர்த்து ஜாங்கிட் விகடன் நிறுவனத்தின் மேல் வழக்கு தொடுத்ததும், ஜுனியர் விகடனில் இருந்த விகேஷ் என்பவரை பணி நீக்கம் செய்த பிறகு, ஜுனியர் விகடன் ஆசிரியர் குழுவிலிருந்து இருவரை அனுப்பி, ஜாங்கிட் காலில் விழுந்து வழக்கை வாபஸ் பெறச் சொன்னதும், அதற்கு பிரதிபலனாக, ஜாங்கிட் புறநகர் கமிஷனராக ஆனதும், சென்னைப் புறநகரில் குற்றமே இல்லாமல் போய்விட்டது போலச் செய்தி வெளியிட்டதும் விகடனின் நடுநிலைக்குச் சான்று.
ஜெயலலிதா ஆட்சியில் வங்கிக் கொள்ளையர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட 5 பேரை காவல்துறையினர் என்கவுன்டர் என்ற பெயரில் சுட்டுக் கொன்றதும், ஜுனியர் விகடன் இதழில் என்கவுன்டர் சில சந்தேகங்கள் என்று அற்புதமான கட்டுரை ஒன்று வந்திருந்தது. காவல்துறையினர் செய்தது என்கவுன்டர் அல்ல, கொலை என்று மக்கள் எண்ணும் அளவுக்கு அந்தக் கட்டுரை வந்திருந்தது.
அதே வாரம் வந்த ஆனந்த விகடன் இதழின் தலையங்கம் இதோ…..
வங்கியில் கொள்ளை அடித்த ஐவர் போலீஸாரால் சுட்டுக் கொலை!’ என்னும் செய்தி பொதுமக்களிடையே வரவேற்பையும் விமர்சனங்களையும் ஒருசேர பெற்று இருக்கிறது. காவல் துறையினர் இவ்வளவு துரிதமாகச் செயல்பட்டதை அனைவருமே பாராட்டும் சூழலில், ‘ஐவருமே கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்தானா?; அவர்களை உயிரோடு பிடித்திருக்கக் கூடாதா?’ என்பது விவாதமாகி இருக்கிறது!
“பொதுவாகவே என்கவுன்டர் சம்பவங்களின்போது, மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்புக் குரல்கள் உரத்து ஒலிப்பது வழக்கம்தான். இந்த முறை கூடுதலாகச் சற்று மாறுதலான ஒரு காட்சியையும் காண முடிந்தது. துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தைப் பார்வையிட்டு, தகவல் திரட்டச் சென்ற மனித உரிமைக் குழுவினருக்கு அந்தப் பகுதி மக்கள் ஒத்துழைக்க மறுத்ததோடு, அவர்களைத் திரும்பிச் செல்லும்படி வற்புறுத்தியும் இருக்கிறார்கள். நாளுக்கு நாள் பெருகிவரும் குற்றச் சம்பவங்களைக் கண்டு, ‘போலீஸாருக்கு குறுக்கீடற்ற அதிகாரங்களை அளிக்க வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கும் சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகளுக்கு அச்சம் பிறக்கும்; குற்றங்கள் குறையும்’ என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன!
இந்தக் குரல்கள் நியாயமானவைதான். சமூகத்தில் தவறு செய்தால் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் இருந்தால்தான் குற்றங்கள் குறையும். போலீஸாரைக் குற்றவாளிகள் துப்பாக்கிகளால் எதிர்கொள்ளும்போது போலீஸார் மட்டும் லத்திகளால் அவர்களை எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்ல முடியாது. அதேசமயம், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அத்துமீறும் கறுப்பு ஆடுகள் எங்கே இருந்தாலும் அவை களையப்பட வேண்டியவை. காவல் துறைக்குள் அப்படி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் கறுப்பு ஆடுகளைத் தண்டிக்கும் பொறுப்பு நீதித் துறையைச் சேர்ந்தது.
இந்தத் தருணத்தில் மனித உரிமை ஆர்வலர்களுக்கு நாம் சொல்ல வேண்டிய செய்தி ஒன்று உண்டு. மனித உரிமைகளுக்குப் பாதிப்பு ஏற்பட அனுமதிப்பது நிச்சயம் ஆபத்துதான். அதேநேரம், காவல் துறை எதைச் செய்தாலும் முன்முடிவோடு அவர்கள் மீது குற்றஞ்சாட்டுவது காவல் துறையினரை ஒட்டுமொத்தமாக பலவீனப்படுத்திவிடும். இது அதைவிட பெரிய ஆபத்து!”
இதுதான் மீனுக்குத் தலையையும், பாம்புக்கு வாலையும் காட்டுவது என்பது. வியாபாரத்திற்காக என்கவுன்டரை கண்டித்து ஒரு கட்டுரை. திரிபாதியின் கடைக்கண் பார்வை வேண்டும் என்பதற்காக என்கவுன்டரை ஆதரித்து தலையங்கம் !!! நடுநிலை பற்றிப் பேச வெட்கமாக இல்லை ?
மதன் போன்றவர்கள் விகடனின் சொத்து. விகடன் நிறுவனத்தின் தற்போதைய வளர்ச்சியில் மதனுக்கு பெரும்பங்கு இருக்கிறது. ஏறக்குறைய 30 ஆண்டுகாலமாக மதன் விகடனில் பணியாற்றி வருகிறார். விகடன் நிறுவனத்தின் பழைய ஆட்களிடம் கேட்டால், விகடன் நிறுவனத்தில் மதனுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்திற்கு எதிராக அப்போதைய சேர்மேன் பாலசுப்ரமணியத்தோடு நடந்த தற்போதைய நிர்வாக இயக்குநர் நடத்திய மோதல்களையும், மதனுக்கு சீட்டை கிழிக்க நடத்திய முயற்சிகளையும் கூறுவார்கள்.
மற்ற பத்திரிக்கையாளர்களைப் பற்றி பல்வேறு புகார்கள் கூறப்படுகையில், அரசியல் தலைவர்களோடு தனக்கு இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு காரியம் சாதித்தார் என்றோ, கான்ட்ராக்டுகளைப் பெற்றார் என்றோ, அதிகாரிகளின் காலில் விழுந்து தன் பிள்ளைகளுக்கு என்ஜினியரிங், மெடிக்கல் சீட் வாங்கினார் என்றோ, மதன் மீது எந்தப்புகாரும் இதுவரை எழுந்ததில்லை.
தற்போதைய சர்ச்சையில் கூட, தனக்கு இருக்கும் சங்கடத்தை மதன் எழுத்துபூர்வமாக கடிதமாக எழுதியிருப்பதன் மூலம், உள்நோக்கம் இல்லாத தனது இயல்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மதன் நினைத்திருந்தால், எழுத்துபூர்வமாக இல்லாமல், நேரடியாகவோ, தொலைபேசியின் மூலமோ, இதைச் செய்திருக்க முடியும். தயக்கமில்லாமல் கடிதம் எழுதியதன் மூலம் தன்னிடம் மறைக்க ஒன்றுமில்லை என்பதையே காட்டியிருக்கிறார். இதே மதன் கடந்த ஆட்சிக் காலத்தில் கலைஞர் டிவியிலும் பணியாற்றியிருக்கிறார். அப்போது கருணாநிதிக்கும் அதன் அதிகாரிகளுக்கும், விகடன் குழுமமே பாதாபிஷேகம் செய்து கொண்டிருந்தது. அப்போது தவறாத மதனின் நடுநிலை, இப்போது தவறிவிட்டதாக குற்றம் சாட்டுவது, விகடன் நிறுவனத்தின் முன்முடிவை மட்டுமல்ல, அற்பத்தனத்தையும் காட்டுகிறது.
இறுதியாக விகடன் நிறுவனத்தின் நடுநிலைக்கு ஒரு முக்கிய சான்று. 5 நவம்பர் 2011 அன்று, சவுக்கில், “நாளைய திமுகவின் தவிர்க்க முடியாத சக்தி – கனிமொழி” என்று ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரையின் இறுதியில், கனிமொழி பற்றிய அந்தக் கட்டுரையை எழுதிய செய்தியாளர் இரா.சரவணன் என்பவர், பத்மா என்ற நடிகையைப் புகழ்ந்து எழுதிய கட்டுரைப் பற்றியும், அந்த நடிகையோடு சரவணன் நெருக்கமாக இருந்த புகைப்படமும் வெளியிடப்பட்டிருந்தது.
இரண்டு தனி நபர்களின் உறவுகள் குறித்து விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. ஆனால், இரா.சரவணன் என்ற நிருபர் பத்மாவோடு நெருக்கமாக இருந்தது, அவர் ஜுனியர் விகடன் நிருபர் என்பதாலும், அந்த நெருக்கத்தால் அவர் பத்மாவைப் புகழ்ந்து கட்டுரை எழுதியிருந்தார் என்பதாலுமே, அந்தப் புகைப்படம் சவுக்கு தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
இப்படி ஆதாரத்தோடு ஒரு செய்தி வெளியிடப்பட்டதும் என்ன ஆகியிருக்க வேண்டும் ? அந்த நிருபர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டுமா இல்லையா ? இதுதானே, நடுநிலை தவறாத நாணய விகடன் செய்ய வேண்டிய வேலை ?
என்ன நடந்தது தெரியுமா ? தனிப்பட்ட புகைப்படங்களை அலுவலக கணிப்பொறியில் வைக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சரவணன் மீது விசாரணை நடந்தது. சரவணனுக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டு, விகடன் பதிப்பகத்தின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். விகடன் பதிப்பகத்துக்கு ஆசிரியராக இருந்தாலும், சுட்டி விகடனின் “சஞ்சய்” என்ற பெயரில் தொடர்ந்து எழுதி வருகிறார். சரவணனை வைத்து, சிறை அனுபவங்களைத் தொடராக எழுதுமாறு, கனிமொழியிடம் பேச்சுவார்த்தை நடத்த வைத்தது விகடனின் “நடுநிலை நிர்வாகம்”. இரா சரவணன் தொடர்ந்து ஜுனியர் விகடனிலும் பல்வேறு பெயர்களில் எழுதி வருகிறார். பிடிக்காத அதிகாரிகளைப் பற்றி பொய்ச் செய்திகளையும் எழுதுகிறார்.
இதுவா விகடனின் நடுநிலை நிர்வாகம் ? இதற்குப் பெயர் நடுநிலை நிர்வாணம்.