மற்ற பிராந்தியக் கட்சிகளும், தேசியக் கட்சிகளும், குடியரசுத் தலைவர் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்று, குழம்பிக் கொண்டிருக்கையில், பி.ஏ.சங்மாவை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக நிறுத்துவதற்கு அதிமுக ஆதரவு என்று ஜெயலலிதா, நவீன் பட்நாயக்கோடு சேர்ந்து, திடீரென்று அறிவித்தார்.
இதுவரை நடந்த ஜனாதிபதி தேர்தல்களை ஒப்பிடுகையில் இந்த ஜனாதிபதி தேர்வு சிக்கலான நிலையைத் தோற்றுவித்திருக்கிறது. ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கோ, எதிர்க்கட்சியாக உள்ள பாஜக கூட்டணிக்கோ, குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்க முழுமையான வாக்குகள் இல்லாத நிலையில், கணிசமான வாக்குகளை வைத்திருக்கும் பிராந்தியக் கட்சிகளான, சமாஜ்வாதிக் கட்சி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், அதிமுக போன்ற கட்சிகள் முன்னிலைப்படுத்தும் வேட்பாளரை, காங்கிரசோ, பாஜகவோ ஆதரித்தால் அந்த வேட்பாளருக்கு வெற்றி உறுதி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் தவிர, இன்று ஆண்டுகொண்டிருக்கும் காங்கிரஸோ, பாஜகவோ, பாராளுமன்றத் தேர்தலில் பிராந்தியக் கட்சிகளின் தயவு இல்லாமல் தனிப்பெரும்பான்மை பெற வாய்ப்பே இல்லாத ஒரு சூழலில், பிராந்தியக் கட்சிகளின் கை மேலோங்கி இருக்கும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. 1998 முதலாகவே கணிசமான எம்.பிக்களை வைத்திருக்கும் பிராந்தியக் கட்சிகளின் தயவிலேயே மத்திய ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வருவதால், மத்தியில் செல்வாக்கு செலுத்தவோ, மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கவோ, பிராந்தியக் கட்சித் தலைவர்களுக்கான ஆசை மேலோங்கத் தொடங்கியிருக்கிறது.
பிரதமர் பதவிக்கான கனவில் இருப்பவர்களில் முன்னணியில் இருப்பவர்கள் முலாயம் சிங் யாதவ், மம்தா பானர்ஜி மற்றும் தமிழகத்தை ஆளும் அகிலாண்டேஸ்வரி (நன்றி பத்மன்). பிரதமராகும் கனவிலேயே உத்தரப்பிரதேசத்தில் பிரம்மாண்டமான வெற்றி பெற்றும், மகனை முதல்வராக்கினார் முலாயம் சிங் யாதவ்.
2014ம் ஆண்டு, பல அரசியல் கட்சித் தலைவர்களை பல்வேறு கனவுகளில் ஆழ்த்தியிருக்கிறது. ஆளும் அகிலாண்டேஸ்வரியின் தற்போதைய ராசி எண் ஏழில் 2014ன் கூட்டுத் தொகை வருவதால், அகிலாண்டேஸ்வரியின் ஆசை பன்மடங்கு பெருகியிருக்கிறது.
இந்த ஆசை மற்றும் பகற்கனவை நனவாக்கும் முயற்சியின் வெளிப்பாடே, பி.ஏ.சங்மாவை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று வெளியிடப்பட்ட அறிவிப்பு. அந்த அறிவிப்போடு நிற்கவில்லை ஜெயலலிதா. பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் இது வரை ஜனாதிபதி ஆகவில்லை என்பதால், சங்மா ஜனாதிபதியாக அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று மற்ற கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த பூர்னோ ஏ.சங்மா, மேகாலாய மாநில இளைஞர் காங்கிரஸ் கட்சித் தலைவராக 1973ல் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கி 1977ல் எம்.பியாகிறார். 1988ல் மேகாலாய மாநில முதல்வரான சங்மா 1991ல் மீண்டும் எம்.பியாகி, மீண்டும் 1996ல் எம்.பியாகி பாராளுமன்ற சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999ல், இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சரத்பவார் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியபோது, இவரும் காங்கிரஸிலிருந்து பிரிந்தார். 2004ல், தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து, தனிக் கட்சி தொடங்க முயற்சி செய்து, பின்னர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2006ல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து, தாய்க் கழகத்திலேயே – தேசியவாத காங்கிரஸ் கட்சியிலேயே இணைந்தார்.
சங்மாவைப் பற்றிப் பாராட்டிச் சொல்ல வேண்டுமென்றால் இவர் அணுசக்தியை தீவிரமாக எதிர்ப்பவர். 1998ல், பாஜக அணு ஆயுத சோதனை நடத்தி, இந்தியா முழுக்க “இந்து பாம்” என்று கொண்டாடிக் கொண்டிருந்த போது, அந்த அணு ஆயுத சோதனையை எதிர்த்து, பாராளுமன்றத்தில் நீண்ட உரையாற்றினார் சங்மா.
அதைத் தவிர்த்துப் பார்த்தால், இவருக்கும் கருணாநிதிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இவருக்கு ஒரு மகன். ஒரு மகள். இவரது மகள் அகதா சங்மாவை எம்.பியாக்கினார். அகதா சங்மா தற்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் இணை அமைச்சராக உள்ளார். இவரது மகன் கான்ராட் சங்மா, மேகாலயா சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். இப்படிப்பட்ட ஒரு நபர்தான் ஜனாதிபதி ஆக வேண்டும் என்ற ஆசையில், குடும்பத்தோடு ஜெயலலிதாவைச் சந்தித்து ஆதரவு கேட்டுச் சென்றுள்ளார்.
அகதா சங்மா
ஜெயலலிதா சங்மாவை ஆதரிப்பதற்கு ஒரே காரணம் 2014ல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல்தான். தற்போது காங்கிரஸ் கட்சி உள்ள நிலையில், அடுத்த தேர்தலில் 150 இடங்களைப் பெறுவதே பெரும் சிரமம். உத்தரப்பிரதேசத்தில், ராகுல் காந்தியின் மாயாஜாலம் வேலை செய்யும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போயுள்ள காங்கிரசுக்கு, 2014ல் எதிர்க்கட்சிப் பதவியை தக்கவைப்பதே பெரும்பாடு என்பது தெரியும்.
ஊழலுக்கு எதிரான ஒரு மாற்றுக் கட்சி என்று சித்து விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கும் பாஜக, கர்நாடகத்தில் எடியூரப்பா, ராஜஸ்தானில் விஜயராஜே சிந்தியா என்று உட்கட்சிக் குழப்பங்கள் ஒரு பக்கம், யார் அதன் தலைவர் என்று ஈகோ மோதல்கள் ஒரு பக்கம் என்று ஏதோ, வேறு வழியின்றி வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறது.
இந்த பின்புலத்தில் நடைபெற உள்ள 2014 தேர்தலில், 40க்கு 40ஐ கைப்பற்றினால் நாம்தான் பிரதமர் அல்லது துணைப் பிரதமர் என்ற கனவிலேயே ஜெயலலிதா உள்ளதாக நம்பத் தோன்றுகிறது. கடந்த வாரம், மக்களின் வரிப்பணத்தில் இந்தியா முழுக்க வெளியிடப்படும் அனைத்து ஆங்கில நாளிதழ்களிலும் கொடுக்கப்பட்ட நான்கு பக்க வண்ண விளம்பரங்களே இதற்குச் சான்று. பயனீர், பினான்சியல் டைம்ஸ், எகனாமிக் டைம்ஸ், டெலிகிராப், இந்தியன் எக்ஸ்பிரஸ் (டெல்லி), ஸ்டேட்ஸ்மேன் என்று அனைத்து நாளிதழ்களிலும் கொடுக்கப்பட்ட விளம்பரங்களுக்கு ஆன செலவு மக்களின் வரிப்பணம் 25 கோடிக்கும் மேல். கொல்கத்தாவில் ஸ்டேட்ஸ்மேன் பத்திரிக்கையைப் படிப்பவர்களுக்கு, ஜெயலலிதா கறவை மாடுகள் கொடுத்ததும், காவல்துறையினருக்கு கேன்டீன் திறந்ததும், சித்திரையை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்ததும் எந்த அளவுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பது ஜெயலலிதாவின் அறிவுக்கே வெளிச்சம்.
குஜராத் இந்தியாவுக்கே வழிகாட்டி என்று நரேந்திர மோடி, மோடி வித்தை காட்டுவது போல, ஜெயலலிதாவும் மோடி வித்தை காட்டுவதற்கு எடுத்த முயற்சியே இது. இந்த விளம்பரங்களின் உண்மையான உள்நோக்கம், தேசிய அளவில், மோடிக்கு இணையாக அம்மாவும் புறப்பட்டு விட்டார் என்று அறிவிப்பதே.
இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒதிஷா முதல்வர் நவீன் பட்நாயக் வருகை தந்து, பாசமலர் சிவாஜி சாவித்திரி போல, இருவரும் என் சகோதரி என்றும், சகோதரன் என்றும் பாச மழை பொழிந்ததும், ஜெயலலிதா முதல்வராக விரும்பினால் நவீன் பட்நாயக்கின் ஆதரவு அவருக்குத்தான் என்பதை உலகுக்கு அறிவிப்பதே.
ஏற்கவே ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவோடும், நரேந்திர மோடியோடும் ஜெயலலிதாவுக்கு நல்ல நட்பு உள்ளதால், எப்படியாவது டெல்லியை ஒரு கை பார்க்கலாம் என்ற உத்வேகத்திலேயே ஜெயலலிதா இருப்பதாகத் தோன்றுகிறது.
பி.ஏ.சங்மாவை ஜனாதிபதி ஆக்குவதற்கு தற்போது தெரிவித்துள்ள ஆதரவின் பின்னணி, நாளை 2014ல், தொங்கு பாராளுமன்றம் அமைந்து, எந்தக் கட்சியை ஆட்சியமைக்க அழைப்பது என்ற நிலை ஏற்பட்டால், அப்போது ஜனாதிபதியாக உள்ள பி.ஏ.சங்மா, ஜெயலலிதாவை ஆதரிப்பார் என்ற உள்நோக்கமே. இதற்காக ஜெயலலிதா கையாளும் பசப்பு நாடமே, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக வேண்டும் என்பது.
துணைப் பிரதமர் ஆகலாம். கொடநாட்டுக்கு டெல்லி தலைமைச் செயலகத்தை மாற்றலாம். இந்தியா முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ட்ரான்ஸ்பர் போடலாம். வெளிநாடுகளுக்கு தன் உடன் பிறவா சகோதரியோடு துணைப் பிரதமர் என்ற தகுதியில் சுற்றுப்பயணம் செல்லலாம். வெளிநாட்டுப் பல்கலைகழகங்களை மேலும் பல டாக்டர் பட்டங்களை வழங்கச் சொல்லலாம். பரமக்குடி போல நாடெங்கும் தலித்துகளைக் கொல்லலாம். இந்தியா முழுவதும் ப்ளெக்ஸ் போர்டுகளை வைக்கச் சொல்லாம். இந்தியா முழுவதும் நில அபகரிப்புப் பிரிவு தொடங்கலாம். திரிபாதியை அகில இந்திய காவல்துறையின் தலைவராக்கலாம். வாரம் ஒரு உள்துறை அமைச்சர். பத்து நாட்களுக்கு ஒரு வெளியுறவுத்துறை அமைச்சர் என்று மியூசிக்கல் சேர் நடத்தலாம். கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தை பாகிஸ்தானுக்கு மாற்றலாம். அந்த நீதிமன்றத்தின் நீதிபதி மல்லிகார்ஜுனையாவையும், சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவையும் நாடுகடத்தலாம் என்பது போன்ற பல்வேறு கனவுகளில் ஆழ்ந்துள்ளார் ஜெயலலிதா.
ஆனால் ஜெயலலிதாவின் கனவில் மண்ணைப் போட முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், மாயாவதி, மம்தா பானர்ஜி ஆகியோர் இருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு இருக்கும் அதே கனவு அவர்கள் அனைவருக்கும் இருக்கிறது. ஜெயலலிதா போல விபத்தில் அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல அவர்கள். சினிமாப்புகழ் மூலமாகவும் அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல. அரசியல் அவர்கள் ரத்தத்திலேயே ஊறியது. கருணாநிதியைப் போன்றவர்கள் அவர்கள். அவ்வளவு எளிதில் ஜெயலலிதாவை துணைப் பிரதமராக்க விட்டு விட மாட்டார்கள். அப்படியே ஆனாலும், ஜெயலலிதா அமைச்சரவையில் இருக்கும் மந்திரிகளின் பதவிக்காலம் போலத்தான், ஜெயலலிதாவின் துணைப் பிரதமர் பதவியும் இருக்கும்.
தற்போது ஒரு பழங்குடியினத்தவரை ஜனாதிபதியாக்கத் துடிக்கும் ஜெயலலிதாவுக்கு பழங்குடியினத்தினர் மீது இருக்கும் பாசம் நாடறிந்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்த 1992ம் ஆண்டு, வீரப்பனைத் தேடுகிறோம் என்ற பெயரில் சேலம் மாவட்டத்திலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலிருந்த வாச்சாத்தி என்ற கிராமத்தில் நுழைந்த ஜெயலலிதாவின் காவல்துறையினரும் வனத்துறையினரும் செய்த அட்டகாசங்கள் நாடறிந்தது. சந்தன மரங்களைக் கடத்துவதை தன்னுடைய அரசியல் பின்னணியின் காரணமாக தொடர்ந்து செய்து வந்தவர், இன்று ஜெயலலிதா அமைச்சரவையில் இருக்கும் கே.ஏ.செங்கோட்டையன். அன்று வனத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையனுக்குத் தெரியாமல், சந்தன மரங்கள் கடத்தப்பட்டிருக்கவே முடியாது. ஆனால் வாச்சாத்தி கிராமப் பழங்குடியின மக்கள் அரசு தரும் ரேஷன் உணவுப்பொருட்களை நம்பி தங்கள் வாழ்க்கையை ஓட்டி வந்தவர்கள். அந்த மக்கள் மரக்கடத்தலில் ஈடுபட்டிருந்தால், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அங்கு வசித்திருந்த அந்த மக்கள், வனத்தையே மொட்டையடித்திருக்க முடியும்.
ஆனால், அந்த அப்பாவி பழங்குடியின மக்கள் கடத்தலில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டி, அந்தக் கிராமத்தில் இறங்கிய காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர், ஒட்டுமொத்த கிராமத்தையே சூறையாடினர். இரவு நேரத்தில் அங்கு இறங்கிய அந்த வெறிபிடித்த காவல்துறையினர், வயதுக்கு வந்த பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 20க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கினர். அந்த மக்களின் குடிநீர்க் கிணறுகளில் டீசல் ஊற்றப்பட்டது. ஆடு, மாடு, கோழி போன்ற உயிரினங்கள் கொல்லப்பட்டு அந்தக் கிணறுகளில் வீசப்பட்டன.
வனத்துறை அமைச்சராக இருந்த கே.ஏ.செங்கோட்டையன் இறுமாப்போடு, காவல்துறையினரின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தினார். எவ்வித விசாரணையும் நடத்தப்படாமல் அந்த கொடிய காவல் மற்றும் வனத்துறையினரை காப்பாற்றியவர் இன்று பழங்குடியினத்தவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் ஜெயலலிதா. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் அந்தப் பிரச்சியையைக் கையில் எடுக்காமல் இருந்திருந்தால் அந்தப் பழங்குடியின மக்களுக்கு நியாயமே கிடைக்காமல் போயிருக்கும். அப்போதைய சிபிஎம் செயலாளர் நல்லசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பாலேயே இவ்வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ நடத்திய விசாரணையின் முடிவில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு,
வீரப்பனைத் தேடுகிறோம் என்ற பெயரில் கர்நாடகா மற்றும் தமிழக கூட்டுப் படைகள் 1993ம் ஆண்டு முதல் நடத்திய போலி என்கவுன்டர்களில் பலியான பழங்குடியின மக்களின் எண்ணிக்கை விவரிக்க முடியாத அளவுக்கு வேதனையானது. அப்போது அமலில் இருந்த கொடிய சட்டமான தடா சட்டத்தின் கீழ் 121 பழங்குடியினத்தவர்கள் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகள் சிறையில் வாடினார்கள். அந்த 121 நபர்களில் 4 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீதம் உள்ள 117 நபர்களின் வாழ்க்கை சிறைக்கொட்டிகளிலேயே கழியக் காரணமானவர் ஜெயலலிதா.
அந்தப் பழங்குடியின மக்கள், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினரின் கையில் சிக்கிச் சீரழிந்த கதையை தோழர் பாலமுருகன், “சோளகர் தொட்டி” என்ற நாவலில் எழுதியிருக்கிறார் படித்துப்பாருங்கள். பிறப்புறுப்புக்களில் மின்சாரம் பாய்ச்சுவது, பாய்ச்சிய இடத்தில் மிளகாய்ப்பொடியைத் தேய்ப்பது, எட்டு மாத கர்ப்பிணிப் பெண்ணை வன்புணர்ச்சி செய்வது, தலைகீழாகக் கட்டித் தொங்க விட்டு அடிப்பது, வலிதாங்காமல் மலம் கழித்தால், அதை உண்ண வைப்பது என்று அந்தப் பழங்குடியின மக்கள் அடைந்த வேதனைகளை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.
சோளகர் தொட்டி நாவலைப் படித்து முடிக்கையில், மரண தண்டனையை தீவிரமாக எதிர்ப்பவர்கள் கூட, அந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினரை தூக்கிலிட்டால் என்ன என்று எண்ண வைக்கும் அளவுக்கு கொடுமைகள் நடந்துள்ளன. அந்தக் காவல்துறையிருக்கு, வீரப்பன் இறந்ததும், தலா இரண்டு க்ரவுண்டு நிலம், இரண்டு லட்ச ரூபாய் ரொக்கம், ஒரு படி பதவி உயர்வு என்று வாரி வழங்கி அழகு பார்த்தவர்தான் இன்று பழங்குடியினருக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் ஜெயலலிதா.
கடந்த காலத்தை விடுங்கள். சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் கிராமத்தில், இருளர் சமூகத்தைச் சேர்ந்த நான்கு பழங்குடியினப் பெண்களை, இரவு நேரத்தில் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், அப்பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியதாக அப்பெண்கள் புகார் தெரிவித்தனர். லட்சுமி, கார்த்திகா, வைகேஸ்வரி, ராதிகா என்ற அந்த நான்கு பெண்களும் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதற்குக் கூட, காவல்துறை காலம் தாழ்த்தி வந்தது. (சவுக்கு கட்டுரை தோட்டம் காக்க போட்ட வேலி பயிரைத் தின்பதோ )சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பிறகு, அப்பெண்களுக்கு அவசர அவசரமாக தலா ஐந்து லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக வழங்கியது ஜெயலலிதா அரசு. அதன்பின், அச்சம்பவத்தில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் சீனிவாசன், சிறப்பு காவல் ஆய்வாளர் ராமனாதன், தலைமைக் காவலர் தனசேகர் மற்றும் காவலர்கள் கார்த்திகேயன் மற்றும் பக்தவச்சலம் ஆகியோரை பணிஇடைநீக்கம் செய்து உத்தரவிட்டது ஜெயலலிதா அரசு.
இன்று பழங்குடியினர் ஒருவரை ஜனாதிபதியாக்க உரத்துக் குரல் கொடுக்கும் ஜெயலலிதா, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்காவிட்டால் இந்தக் காவல்துறையினரை பணி இடைநீக்கம் செய்திருப்பார் என்றா நினைக்கிறீர்கள் ? அவ்வழக்கில், நான்கு பெண்களையும் இரவு நேரத்தில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதை அரசே ஒப்புக் கொண்டது. அப்பெண்கள் பாலியல் தொடர்பாக பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்ததாக ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர், பெண்களை இரவு நேரத்தில் கைது செய்த ஒரே காரணத்துக்காக துறை நடவடிக்கை மூலமாக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அவர்கள் மீது துறை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பழங்குடியினத்தவரோ, தாழ்த்தப்பட்டவரோ, அவர்ளை வைத்து அடையாள அரசியல் செய்வதற்குத்தான் அரசியல்வாதிகள் முனைப்பாக இருக்கிறார்களே ஒழிய, அவர்களின் வாழ்க்கை நிலையை சீரடைய வைக்க யாருமே தயாராக இல்லை. கே.ஆர்.நாராயணன் என்ற ஒரு தலித்தை ஜனாதிபதியாக்கினால், நாட்டில் உள்ள அனைத்து தலித்துகளின் வாழ்க்கைப் பிரச்சியையும் தீர்ந்து விடும் என்பது போல, கே.ஆர்.நாராயணனை வைத்து அப்போதும் அடையாள அரசியல் செய்தவர்கள்தான் இந்த அரசியல்வாதிகள்.
பழங்குடியினர் மீது இவ்வளவு அக்கறை செலுத்தும், ஜெயலலிதா, அவரது உடன் பிறவா சகோதரர் நவீன் பட்நாயக் ஆட்சி நடத்தும் ஒதிஷா மாநிலத்தில், பழங்குடியினர் நிலங்களை அபகரித்து எஸ்ஸார், பாஸ்கோ, வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்கு தாரை வார்க்கிறாரே அவரது சகோதரர்…. அதனால்தானே அந்த மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் கை ஓங்கியிருக்கிறது. அந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு பழங்குடியின மக்களின் நிலத்தை தாரை வார்த்துக் கொடுத்து, அங்கு ஏராளமாக கொட்டிக் கிடக்கும் பாக்சைட் கனிமத்தை அந்நிறுவனங்கள் கொள்ளையடிப்பதை மாவோயிஸ்டுகள் எதிர்க்கிறார்கள் என்பதால்தானே, அப்பழங்குடி மக்களையும் மாவோயிஸ்டுகளையும் வேட்டையாடுகிறது நவீன் பட்நாயக்கின் காவல்துறை ?
ஜெயலலிதா, நவீன் பட்நாயக் சகோதர சகோதரி ஜோடி முதலில் அவர்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் பழங்குடியினரின் நலனைப் பாதுகாக்கட்டும். அதன் பிறகு பழங்குடியினத்தவரில் ஒருவரை ஜனாதிபதி ஆக்குவதைப் பற்றிப் பேசலாம்.
பழங்குடியினர் மீது ஜெயலலிதாவும், நவீன் பட்நாயக்கும் காட்டி வரும் அக்கறையைப் பார்த்திருப்பீர்கள். பழங்குடியின மக்களை இப்படி நடத்தும் ஜெயலலிதாவும், நவீன் பட்நாயக்கும், “பழங்குடி” என்ற பெயரை உச்சரிப்பதற்கே வெட்கப்பட வேண்டுமா வேண்டாமா ?