1967ல் சட்டமன்றத் தேர்தலை திமுக சந்தித்த போது, அப்போது இருந்த விலைவாசி உயர்வையொட்டி திமுக வைத்த முழக்கங்கள் “கும்பி எரியுது, குளு குளு ஊட்டி ஒரு கேடா”, ”பக்தவச்சலம் அண்ணாச்சி, அரிசி விலை என்னாச்சி”, ”காமராஜ் அண்ணாச்சி, பருப்பு விலை என்னாச்சி”, ”கூலி உயர்வு கேட்டான் அத்தான், குண்டடிபட்டுச் செத்தான்” என்பது போன்ற முழக்கங்களை வைத்துத்தான் ஆட்சியைப் பிடித்தனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி தருவோம் என்றனர் திமுகவினர். அறிஞர் அண்ணா “ஒரு ரூபாய்க்கு மூன்று படி லட்சியம், ஒரு படி நிச்சயம்” என்றார். ஆட்சிக்கு வந்த பிறகு, ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி வழங்க தேவையான மானியத்தை வழங்க மத்திய அரசு மறுக்கிறது, ஏழைகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்றனர். இதற்கு பதிலாக காஷ்மீரில் மானிய விலையில் கோதுமை வழங்கையில், தமிழ்நாட்டுக்கு மானியத்தை மறுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று எதிர்க்கேள்வி கேட்டனர்.
இப்படி அரிசியை வைத்தே ஆட்சியைப் பிடித்தவர்கள் திமுகவினர் என்றால் அது மிகையாகாது. 1967ல் தொடங்கிய அரிசி குறித்த பிரச்சினை ஸ்பெக்ட்ரத்தை போன்ற பூதாகரமான அரிசி ஊழலில் திமுக ஈடுபட்டுள்ளதில் வந்து நிற்கிறது.
2006-2011 திமுக ஆட்சியின் மிகப்பெரிய சாதனையாக அறிவிக்கப்பட்டது ஒரு ரூபாய்க்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்ட அரிசி. 2006ல் ஆட்சிக்கு வந்ததும் ஒரு கிலோ இரண்டு ரூபாய்க்கு வழங்கப்பட்ட அரிசி, 2008ல் ஒரு ரூபாயாக விலை குறைக்கப்பட்டது.
தமிழகத்தில் மொத்தம் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இக்கடைகளின் மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழே இயங்கி வருபவர்களுக்கு தொடக்கத்தில் ஒரு கிலோ 2 ரூபாய்க்கும், பிறகு ஒரு ரூபாய்க்கும் அரிசியை திமுக அரசு வழங்கி வந்தது.
இந்த ஒரு கிலோ ஒரு ரூபாய் அரிசி மத்திய அரசின் உணவுத் தொகுப்பிலிருந்து மத்திய அரசின் உணவுக் கழகத்தில் மூலமாக (Food Corporation of India), வழங்கப்படுகிறது. 2006ம் ஆண்டு முதல் 2011 வரை, வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு ஒரு கிலோ அரிசி ரூபாய் 5.65க்கும், வறுமைக் கோட்டுக்கு மேலே இருப்பவர்களுக்கு ஒரு கிலோ அரிசி ரூபாய் 8.30க்கும் மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்குகிறது.
இந்த அரிசியை திமுக அரசு, முதலில் இரண்டு ரூபாய்க்கும், பிறகு ஒரு ரூபாய்க்கும் மானியம் கொடுத்து வழங்கியது. இந்த மானியம் மூலமாக தமிழக அரசுக்கு வருடம்தோறும் நான்காயிரம் கோடி வரை செலவாகிறது.
இந்த கடைகள் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் அட்டைதாரர்களில் ஒரு கோடியே 78 லட்சம் பேருக்கு ரேசன் மூலம் ஒரு ரூபாய் அரிசி வாங்குவதாக தமிழக அரசு கணக்கு காண்பித்து வருகிறது. இதில் 20 சதவீதம் ரேசன் கார்டுகள் போலியானவை என்பதை அப்போதைய உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலுவே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய கணக்காயரின் அறிக்கைப்படி, மாநிலத்தின் மக்கள் தொகை 7.21 கோடி என்று 2011 மக்கள் தொகை அறிக்கை கூறும்போது, மாநிலத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கையின்படி ரேஷன் கார்டுகளில் இடம்பெற்றுள்ள மொத்த மக்கள்தொகை 8.37 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே 2011 சென்சஸ் கணக்குப்படி, மாநிலத்தில் உள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 1 கோடியே 67 லட்சத்து 77 ஆயிரம் என்றால், வழங்கப்பட்டுள்ள ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை 1 கோடியே 95 லட்சத்து 83 ஆயிரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணக்குப்படியே எடுத்துக் கொண்டாலும் கூட, 28 லட்சத்து 6 ஆயிரம் போலி ரேஷன் கார்டுகள், தமிழகத்தில் புழக்கத்தில் இருந்து வருகின்றன.
இந்த குடும்ப அட்டைகள் அத்தனைக்கும் ரேஷன் அரிசி வழங்கப்பட்டு வந்துள்ளதாகவே தமிழக அரசு தெரிவித்து வந்துள்ளது. புழக்கத்தில் உள்ள இந்த போலி குடும்ப அட்டைகளுக்கு உரித்தான அரிசி கடத்தப்பட்டே வந்திருக்கிறது. இந்த போலி குடும்ப அட்டைகளை ஒழிக்க திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றே சிஏஜி அறிக்கை கூறுகிறது.
28 லட்சத்து 6 ஆயிரம் போலி குடும்ப அட்டைகள் இருந்தன என்றால் ஒரு குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி என்ற விகிதத்தில் ஒரு மாதத்துக்கு 4 கோடியே 1 லட்சத்து 20 ஆயிரம் கிலோ அரிசி கடத்தப்பட்டிருக்கிறது. கடந்த காலத்தில் நடந்த இந்த அரிசிக் கடத்தலைச் செய்தது யார் ? ஏன் இந்த அரிசிக் கடத்தலைத் தடுப்பதற்கும், போலி குடும்ப அட்டைகளை ஒழிப்பதற்கும் திமுக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற கேள்விகளுக்கான விடை கிடைத்துள்ளது. அரிசிக் கடத்ததில் ஈடுபடுவது தனது துணைவி என்கிறபோது எப்படி நடவடிக்கை எடுப்பார் கருணாநிதி ?
அதுவும் பக்கத்து மாநிலங்களுக்குக் கூட இந்த அரிசி கடத்தப்படவில்லை. மாலத்தீவுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது தெரிந்தால் வயிறு எரிகிறதா இல்லையா ? இந்த அரிசிக்கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது, தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்ட ஹரி அன்ட் கோ என்ற நிறுவனம். ஹரி அன் கோ நிறுவனம் தங்களை கஸ்டம் ஹவுஸ் ஏஜென்டுகள் என்று அழைத்துக் கொள்கிறார்கள். இறக்குமதி ஏற்றுமதியில் ஈடுபடும் இந்நிறுவனத்தின் உரிமையாளர் மீனாட்சி சுந்தரம் நாடார், கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாளுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று தகவல்கள் கூறுகின்றன. ராசாத்தி அம்மாள் நடத்தி வந்த ராயல் பர்னிச்சருக்காக வெளி நாடுகளிலிருந்து மரம் இறக்குமதி செய்வதிலும் இந்நிறுவனம் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் ஈடுபடும் கடத்தல் விவகாரங்கள் வெளி வராமல் இருப்பதற்காக கஸ்டம்ஸ் துறையில் கமிஷனராக இருந்த சி.ராஜன் என்பவர் தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வந்துள்ளார்.
ஐஆர்எஸ் அதிகாரியான ராஜன், 8 லட்ச ரூபாயும் ஒரு பேடும் லஞ்சமாக வாங்குகையில் சிபிஐ அதிகாரிகளால் கையும் களவுமாக சமீபத்தில் பிடிபட்டார். வழக்கமாக ஐஆர்எஸ் அதிகாரிகள் ஒரு மண்டலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வைக்கப்படமாட்டார்கள். சென்னையில் பணியாற்றினால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மும்பைக்கோ, வேறு நகரத்துக்கோ மாற்றப்படுவார்கள். ஆனால், ராஜன், மூன்று ஆண்டுகளுக்கு விமான நிலையத்துக்கான கஸ்டம்ஸ் கமிஷனராக இருந்தார். பிறகு, துறைமுகத்துக்கான கஸ்டம்ஸ் கமிஷனராக ஆனார். அந்தப் பதவியில் மூன்று ஆண்டுகள் இருந்த பிறகு, வருவாய்ப் புலனாய்வுத் துறையின் ஆணையராக (Directorate of Revenue Intelligence) மாறினார். இந்த ராஜனும் நாடார் வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜன் சென்னையை விட்டு மாற்றப்படாமல் இருப்பதை ராசாத்தி அம்மாள் உறுதி செய்தார். மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருக்கும் திமுகவைச் சேர்ந்த எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் ராஜனுக்கு அருட்தந்தையாக விளங்கினார். கருணாநிதியின் துணைவியார் விடுத்த கட்டளையை மீறினால் பழனிமாணிக்கம் அமைச்சரா இருக்க முடியுமா ?
ஹரி அன்ட் கோ நிறுவனம் மூலமாக ரேஷன் அரிசி, தொடர்ந்து மாலத்தீவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. எல்லாமே நல்லாத்தான் போயிக்கிட்டு இருந்துச்சு.
திடீரென்று ஒரு நாள் தூத்துக்குடி துறைமுகத்தில் உதவி ஆணையராக இருந்த மாதவராஜ் என்பவருக்கு ஒரு ரகசியத் தகவல் வருகிறது. அது என்னவென்றால் தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எம்.வி போந்தி 2 (M.V.BONTHE II) என்ற கப்பலில், மாலத்தீவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அவருக்கு தகவல் கிடைத்தது. தகவல் வந்ததும், ரேஷன் அரிசி போன்ற உணவுப் பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரியான மாவட்ட கலெக்டருக்கு இத்தகவலை அளிக்கிறார். மாவட்ட கலெக்டர் கோ.பிரகாஷ் என்ற ஐஏஎஸ் அதிகாரி, உடனடியாக பறக்கும் படை தாசில்தாரை அக்கப்பலைச் சோதனையிட்டு மாதிரிகளை எடுத்து வருமாறு உத்தரவிடுகிறார். தாசில்தார் கப்பலை சோதனையிட்டு, அக்கப்பலிலும், அக்கப்பலில் ஏற்றுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 லாரிகளிலும், ஹரி அன்ட் கோ கிடங்கிலும் இருந்த மூட்டைகளில் இருந்து அரிசி மாதிரிகளை எடுத்து, தமிழ்நாடு உணவு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் அந்த மாதிரிகளை அனுப்பி, அந்த அரிசி ரேஷன் அரிசியா என்று ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறார்.
அந்த மாதிரிகளை உணவு நுகர்பொருள் வாணிபக் கழகத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். அப்துல் சலாம், ஜோசப், வேணுகோபால், பிரகாஷ் பாபு என்ற நான்கு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் அந்த அரிசி மாதிரிகளை சோதனையிட்டு, அறிக்கை அளிக்கின்றனர். அந்த அறிக்கையில், மாதிரி அரிசி இரட்டை அவியல் (Double Boiled) செய்யப்பட்டுள்ளது. பூஞ்சானம் பிடித்துள்ளது. சேமிப்பினால் ஏற்படும் உயிருள்ள நிலையில் உள்ள பூச்சித்தாக்கம் உள்ளது. நீண்ட நாள் கிடங்கில் வைத்துள்ளதால் ஏற்படும் வாடை (Storage Smell) உள்ளது. இக்காரணங்களினால் 2212 மெட்ரிக் டன் அரிசியும் தமிழக பொது வினியோகத் திட்டத்துக்கான அரிசியே என்று சான்றளித்தனர்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் பிரகாஷ், கஸ்டம்ஸ் கமிஷனருக்கு 25.01.2010 அன்று ஒரு கடிதம் எழுதுகிறார். அக்கடிதத்தில் எம்.வி.போந்தி கப்பல், ஹரி அன்ட் கோ கிடங்கு, மற்றும் 18 லாரிகளில் இருந்த அத்தனை அரிசியும், ரேஷன் அரிசி என்பதால், 2212 மெட்ரிக் டன் அரிசியையும் கைப்பற்றி, பறக்கும் படை தாசில்தாரிடம் ஒப்படைக்குமாறும் அக்கடிதத்தில் தெரிவிக்கிறார்.
இதையடுத்து தமிழக உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு (Civil Supplies CID) காவல்துறையினரிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்பட்டவுடன், அவர்கள் வழக்கு எண் 30/2010ல் ஒரு வழக்கு பதிவு செய்கின்றனர். இந்த வழக்கு விசாரணைக்கு ஹரி அன்ட் கோ மதுரை உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெறுகின்றனர்.
இந்த நேரத்தில்தான் அரிசி தொழிலதிபர் ராசாத்தி அம்மாளுக்குச் சொந்தமானது என்பது தெரிய வருகிறது. உடனே கலெக்டர் பிரகாஷ் களத்தில் இறங்குகிறார். ஒட்டு மொத்த தமிழக நிர்வாகமும் சிக்கிய இந்த அரிசியை விடுவிக்க களத்தில் இறங்குகிறது.
கைப்பற்றப்பட்ட அரிசி, ரேஷன் அரிசி அல்ல அது ஹரி அன்ட் கோ நிறுவனம் ஆந்திராவிலிருந்து கொள்முதல் செய்து, மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வைத்திருந்த அரிசி என்று ஆவணங்கள் தயார் செய்யப்படுகின்றன.
சிவில் சப்ளைஸ் சிஐடி மற்றும், உணவு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் ஆந்திராவுக்குச் சென்றதாகவும், அங்கே பட்டியல்களைச் சரிபார்த்ததில், அந்த அரிசி ஆந்திராவிலிருந்து கொள்முதல் செய்தது என்பது தெரிய வந்ததாகவும் ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன.
கலெக்டர் பிரகாஷ், 15.02.2010 அன்று சுங்கத்துறை ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அக்கடிதத்தில், தமிழக அரசு அதிகாரிகள், ஆந்திராவுக்குச் சென்று விசாரித்ததில், பறிமுதல் செய்யப்பட்ட அரிசி ஆந்திராவிலிருந்து ஹரி அன்ட் கோ கொள்முதல் செய்தது என்றும், கைப்பற்றப்பட்ட அரிசி ரேஷன் அரிசி அல்ல என்பதும் தெரிய வந்துள்ளதாகவும், இதன் காரணமாக பறிமுதல் செய்யப்பட்ட 2212 டன் அரிசி முழுவதையும் ஏற்றுமதி செய்வதற்கு அனுமதிக்குமாறும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், அத்தனை அரிசியும் மாலத்தீவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
2212 டன் அரிசியையும் பறிமுதல் செய்த சுங்கத்துறை ஆணையர் ராஜன், 25.01.2010 அன்று பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக எம்.பி.போத்தி 2 என்ற கப்பலில் வைக்கப்பட்டிருந்த அரிசியை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்ததில் அந்த அரிசி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட இருந்த அரிசி என்பது தெரிய வந்ததாகவும், அதனால் அந்த அரிசியைக் கைப்பற்றியதாகவும்” தெரிவித்துள்ளார். ராஜன் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்த இரண்டு முக்கிய விஷயங்கள், ஏற்றுமதி செய்த நிறுவனம் அந்த அரிசியை ஆந்திராவிலிருந்து கொள்முதல் செய்ததாக தெரிவித்திருந்ததாகவும், பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு தடை இருந்ததாகவும் தெரிவித்திருந்த விஷயமே.
மத்திய அரசு, உள்நாட்டுத் தேவை கருதி பிற நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதை தொடர்ந்து தடை செய்து வந்துள்ளது. 2008 முதல் பாசுமதி அல்லாத அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டு இருந்த சூழலில், 10 ஜுன் 2010 அன்று, அதிகாரமிக்க மத்திய அமைச்சரவைக் குழு கூடி, மாலத்தீவுகளுக்கு 30 ஆயிரம் டன் அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி அளித்தது. 2010 ஜுன் மாதம் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் ஜனவரி மாதம் ஹரி அன்ட் கோ பாசுமதி அல்லாத அரிசியை ஆந்திராவிலிருந்து ஏற்றுமதி செய்திருந்தால் அது சட்டவிரோதமே.
மற்றொரு விஷயம், 25.01.2010 அன்று பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் சுங்கத்துறை ஆணையர் ராஜனே அந்த அரிசி வகைகள் ஆந்திராவிலிருந்து தருவிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். அப்படி இருக்கையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், ஹரி அன்ட் கோ, ஆந்திராவிலிருந்து முறையாக அரிசி கொள்முதல் செய்துள்ள விஷயத்தை புதிதாக கண்டுபிடித்தது போல தெரிவித்ததன் காரணம் என்ன என்பதை நேர்மையான அதிகாரி பிரகாஷ் ஐஏஎஸ் மற்றும் அதை ஏற்றுக் கொண்டு அரிசியை விடுவித்த ராஜனும்தான் விளக்க வேண்டும்.
அப்படியே இந்தக் கூற்றை உண்மை என்று ஏற்றுக் கொண்டாலும், கிருஷ்ணப்பட்டினம் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த துறைமுகங்கள் ஆந்திராவிலேயே இருக்கையில், எந்த முட்டாளாவது 2212 டன் அரிசியை ஆந்திராவிலிருந்து லாரியில் வரவழைத்து தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி செய்வானா ?
சுங்கத்துறை ஆணையர் ராஜனால் நிறுத்தி வைக்கப்பட்ட பல்வேறு கன்டெய்னர்கள் மாதக்கணக்கில் துறைமுகத்தில் நின்றதுண்டு. அப்படி இருக்கையில், இந்தக் கப்பலை மட்டும் 20 நாட்களில் துரிதமாக நடவடிக்கை எடுத்து விடுவித்த மர்மம் என்ன என்பதை ராஜன்தான் விளக்க வேண்டும். மேலும், இந்திய கஸ்டம்ஸ் சட்டம், 1967ன் பிரிவுகள் 108 மற்றும் 110ன் படி, இந்த அரிசி கைப்பற்றப் பட்டவுடன், கஸ்டம்ஸ் விசாரணை தனியாக நடந்திருக்க வேண்டும். அந்த விசாரணை எதையுமே ராஜன் நடத்தவில்லை. அது ஏன் என்ற மர்மத்தையும் ராஜன்தான் விளக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் பிரகாஷைப் பொறுத்தவரை அவர் சுங்கத்துறைக்கு அரிசியை ஏற்றுமதி செய்ய அனுமதிக்குமாறு எழுதிய கடிதத்திலும் சரி, இவ்விஷயத்தில் மேல் நடவடிக்கையை கைவிட்டு, 12.02.2010 அன்று வெளியிட்ட ஆணையிலும் சரி, ஆந்திராவில் எந்த நிறுவனத்திலிருந்து ஹரி அன்ட் கோ நிறுவனத்தினர் அரிசியை கொள்முதல் செய்தனர் என்ற விபரத்தை குறிப்பிடவே இல்லை. இப்படி அவசர அவசரமாக அரிசியை விடுவித்து ஆணை பிறப்பித்தன் காரணம் என்ன என்பதை பிரகாஷ் ஐஏஎஸ் தான் விளக்க வேண்டும்.
ஏற்கனவே இந்தக் கட்டுரையில் பிரகாஷ் ஐஏஎஸ் நேர்மையானவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறு குறிப்பிட்டதற்கான காரணம், பிரகாஷ் ஐஏஎஸ்க்கு ஏப்ரல் 2008ல் சென்னை திருவான்மியூரில் 3829 சதுர அடி வீட்டு மனை “அரசு விருப்புரிமைக் கோட்டாவின்” கீழ் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த மனை “அப்பழுக்கற்ற அரசு ஊழியர்” என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டிருந்தது. பிரகாஷ் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்று சான்றளித்தது யார் தெரியுமா ? அவரே அவருக்கு சான்று அளித்துள்ளார். என்ன காரணம் தெரியுமா ? தன்னைப் போன்ற ஒரு நேர்மையான அதிகாரிக்கு சான்று அளிப்பதற்கு வேறு யாருக்குத் தகுதி இருக்கிறது ? இதனால்தான் பிரகாஷ் ஐஏஎஸ் ஒரு நேர்மையான அதிகாரி.
பிரகாஷ் ஐஏஎஸ்
ஹரி அன்ட் கோ நிறுவனத்தின் நடவடிக்கைகள் அரிசிக் கடத்தலோடு நிற்பதில்லை. ராசாத்தி அம்மாளின் ராயல் பர்னிச்சர்ஸ் நிறுவனத்திற்காக மரங்களை இறக்குமதி செய்ததும் ஹரி அன்ட் கோ தான். இதில் என்ன தில்லு முல்லு தெரியுமா ? வெளிநாட்டிலிருந்து மரம் அல்லது மரச்சாமான்கள் இறக்குமதி செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்டால் அதற்கு விற்பனை வரி கட்ட வேண்டும். வாட் எனப்படும் இந்த விற்பனை வரி 12.5 சதவிகிதமாகும். ஹரி அன்ட் கோ இறக்குமதி செய்யும் மரச்சாமான்கள் மற்றும் மரங்கள் வெளிநாட்டிலிருந்து வரும் வழியிலேயே அதாவது சர்வதேச கடல் எல்லையிலேயே விற்பனை செய்யப்பட்டதாக ஆவணம் தயாரிக்கப்படும். சர்வதேச கடல் எல்லையில் நடக்கும் வியாபாரத்திற்கு தமிழக அரசு வரி விதிக்க இயலாது. இப்படி ஆயிரக்கணக்கான டன் மரங்களும், மரச்சாமான்களும் நடுக்கடலில் வியாபாரம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களோடு சென்னை துறைமுகத்தில் இறக்கப்பட்டு கிடங்கில் வைக்கப்படும். இதை சரிபார்த்து வரி ஏய்ப்பை கண்டு பிடிக்க வேண்டிய சுங்கத்துறை அதிகாரிகள் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த சி.ராஜன் நாடார் இருக்கையில் ராயல் பர்னிச்சர்சுக்கும், ராசாத்தி அம்மாளுக்கும் என்ன கவலை ?
தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசிக்கு அரசு தரும் மானியம் ஒரு கிலோவுக்கு ரூபாய் 5.65 என்று பார்த்தோம். மற்ற கணக்குகளை விட்டு விடுவோம். மாலத்தீவுக்கு கடத்தப்பட்ட 2212 டன், அதாவது 22 லட்சத்து 12 ஆயிரம் கிலோ அரிசியால் மட்டும் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு என்ன என்று கணக்கிட்டால் 1 கோடியே 24 லட்சத்து 97 ஆயிரத்து 800 ரூபாய். இது போல மாதந்தோறும் பல லோடு அரிசி மாலத்தீவுக்கு ஹரி அன்ட் கோ நிறுவனத்தால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
2006 முதல் 2011 வரை, எத்தனை லோடுகள் போயிருக்கும், எத்தனை லட்சம் டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டிருக்கும் என்பது ஆண்டவருக்கும், அவர் துணைவியாருக்குமே வெளிச்சம்.
இந்தத் தகவலை அறிந்த உங்களுக்கு கும்பி எரிகிறதா இல்லையா ?