தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக நிகழ்ந்து வரும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு என்பது, மத்திய மாநில அரசுகளின் பொறுப்பற்ற தன்மையின் உச்சக்கட்டத்தை வெளிப்படுத்துகிறது.
சென்னை பெட்ரோலியம் நிறுவனம் மற்றும் மங்களுர் பெட்ரோகெமிக்கல் நிறுவனம் ஆகிய இரண்டும், தங்கள் செயல்பாடுகளை பராமரிப்புப் பணிக்காக நிறுத்தியதால் இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன. டீசலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, கோடைக்காலத்தில் ஜெனரேட்டர்கள் பயன்படுத்துவதால் அதிகரித்த தேவை காரணமாக என்ற காரணமும் கூறப்படுகிறது.
ஆனாலும், இந்தத் தட்டுப்பாடு செயற்கையாக ஏற்படுத்தப்பட்டவை என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
சென்னை நகரில் கடந்த ஒரு வாரமாக இரு சக்கர வாகன ஓட்டிகளும், கார் வைத்திருப்பவர்களும் பட்டுக் கொண்டிருக்கும் பாடு சொல்லி மாளாது. சென்னை நகரெங்கும், பல்வேறு பெட்ரோல் பங்குகள் மூடிக் கிடக்கும் நிலையில், திறந்திருக்கும் ஒரு சில பங்குகளில் நிற்கும் நெடிய வரிசைகள், மத்திய மாநில அரசுகள் இம்மக்கள் மீது வைத்திருக்கும் அக்கறையைக் காட்டுகின்றன.
இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பொறியாளர்கள் மற்றும் மேலாண்மை பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கிடைக்கும் ஊதியம், அதிக லாபம் ஈட்டக்கூடிய தனியார் நிறுவனங்களுக்கு கொஞ்சமும் சளைத்தவை அல்ல. பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு இவ்வளவு ஊதியத்தை வழங்குவதன் பொருள், அவர்கள் தங்கள் பணிகளை திறம்படச் செய்ய வேண்டும் என்பதற்காகவே. இந்த நிறுவனங்களில் உயர்பதவிகளில் இருப்பவர்களின் வேலை தட்டுப்பாடின்றி பெட்ரோல் மற்றும் டீசல் கிடைக்க வேண்டியதை உறுதி செய்வதே. ஒவ்வொரு நாளும், சென்னை மற்றும் இதர பகுதிகளுக்கு தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு ஏற்கனவே உள்ள நடைமுறை மாறாமல் செவ்வனே நடைபெறுவது உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். லாரி வேலைநிறுத்தம், அல்லது எண்ணை சுத்திகரிப்பு ஆலைகளில் பழுது ஏற்பட்டதால் சப்ளையில் தட்டுப்பாடு ஏற்படுமென்றால், மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பும் இந்நிறுவனத்தில் உள்ள அதிகாரிகளையே சாரும். ஒரு நாள் தட்டுப்பாடு ஏற்படலாம். இரண்டு நாள் ஏற்படலாம். மூன்றாவது நாள் என்ன ஆகும் என்பதை ஊகித்து மாற்று ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். மாறாக, இந்தத் தட்டுப்பாடு மேலும் வலுவாகி, சென்னை நகரம் ஸ்தம்பிக்க வேண்டும் என்பதற்காக இத்தட்டுப்பாட்டை அமைதியாக இருந்து இந்த அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஒரு வாரமாக சென்னை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் நிகழ்ந்து வரும் இந்தத் தட்டுப்பாட்டை நீக்கத் தவறிய இவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதற்கு தகுதியானவர்களே.
அடுத்தபடியாக, டீசலின் தேவை அதிகரித்திருக்கிறது என்று இவர்கள் சொல்லும் காரணமும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. டீசல் போடாமல் பெட்ரோல் மட்டும் போடும் பல்வேறு பங்குகள் சென்னையில் உள்ளன. ஆனால் இந்த பங்குகளும் இரண்டு நாட்களாக மூடப்பட்டுள்ளன. டீசல் தேவை அதிகரித்தாலேயே இத்தட்டுப்பாடு என்பது முழுமையான பொய்.
மத்திய அரசை குறை சொல்வதற்கே அலுப்பாக இருக்கிறது. அரசு என்று ஒன்ற இருந்தால்தானே குறை சொல்வது. எவன் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்று எதைப்பற்றியுமே கவலைப்படாத ஒரு அரசு இது. பொருளாதாரம் அதள பாதாளத்தில் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ந்து கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் புதிது புதிதாக ஊழல் குற்றச்சாட்டுகள் புற்றீசல் போல புறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இது எதைப்பற்றியும் கவலைப்படாமல், பிரதமர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். மத்திய அமைச்சரவையில் உள்ள அமைச்சர் பாராளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா அமைச்சராக இருந்து கொண்டே, ஐபிஎல்லின் தலைவராகவும் இருந்து கொண்டு, தன் அமைச்சர் பதவியை விட, ஐபிஎல் நடத்தி முடிப்பதே முக்கியம் என்று அலைந்து கொண்டிருக்கிறார். இவரைப் போன்ற எந்த மந்திரியையும், ஏன், எண்ணை நிறுவனத்தின் தலைவரைக் கூட கட்டுப்படுத்த முடியாத ஒரு கையாலாகாத பிரதமர், மவுனச் சாமியாராய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். ஆகையால் மத்திய அரசை குறை கூறி, குறை கூறி சலித்து விட்டது.
சரி.. இந்தத் தட்டுப்பாட்தைடத் தவிர்ப்பதற்கு மாநில அரசு என்ன செய்ய முடியும் என்று கேட்கலாம். ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகளை அந்தந்த மாநில அரசுகளே பேண வேண்டும். தமிழகத்தில் இப்படி ஒரு தட்டுப்பாடு ஏற்படுவது தெரிந்ததும், உடனடியாக சம்பந்தப்பட்ட எண்ணை நிறுவன அதிகாரிகளோடு கலந்து பேசி, மாற்று ஏற்பாடுகளைச் செய்ய அவர்களை நிர்பந்திப்பது தமிழக அரசின் கடமை. தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பொதுத்துறைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோர், இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொறுப்பானவர்கள்.
நான்கு நாட்களாக கடும் தட்டுப்பாடு நிலவிய பின்னர், திங்கட்கிழமை அன்று, தமிழக அரசின் அதிகாரிகள் எண்ணை நிறுவன உயர் அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். இந்தப் பேச்சுவார்த்தை வெள்ளியன்றே நடைபெற்றிருக்க வேண்டும். சென்னையின் தீராத எரிபொருள் தேவை என்னவென்பதை மற்றவர்களை விட, நன்கு அறிந்திருக்க வேண்டியவர்கள் இந்த அதிகாரிகள். இந்த அதிகாரிகள் இவ்வளவு மெத்தனமாக இருப்பதற்கு காரணம், இந்த அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பெட்ரோலுக்கோ அல்லது டீசலுக்கோ எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்பதுதான். அரசு வாகனங்கள் நம்மைப் போல பெட்ரேல் பங்கில் சென்று, வரிசையில் நின்று எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியமே இல்லை. அரசு வாகனங்களுக்கென்று தனியாக பங்குகள் உள்ளன. காவல்துறை வாகனங்களுக்கென்று தனியாக பங்குகள் உள்ளன. சராசரியாக நமக்கு கிடைக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை விட, ஒன்றிரண்டு ரூபாய் குறைவாகவே அரசு வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படுகிறது. சென்னையில் பெட்ரோல் கிடைக்கும் ஒவ்வொரு பங்குகளிலும் அடிதடி நடந்து கொண்டிருக்கும் வேளையில், இந்த அரசு அதிகாரிகள், குளிர்சாதன வசதி உள்ள தங்கள் சொகுசு கார்களுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லாமல் எரிபொருள் நிரப்பிக் கொண்டு கடந்த ஒரு வாரமாக நகரை வலம் வந்தபடிதான் உள்ளார்கள். இந்த அரசு பங்குகளில் எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது.
சாமான்ய மக்களுக்கு கிடைக்கும் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, இந்த அரசு பங்குகளுக்கும்தானே ஏற்பட்டிருக்க வேண்டும் ? ஆனால் இந்த அரசு பங்குகளுக்கு மட்டும் தங்கு தடையின்றி எரிபொருள் எப்படி கிடைத்து வருகிறது ? இந்த உயர் உயர் அதிகாரிகளின் சொந்த தனியார் வாகனங்களுக்குக் கூட எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. அரசு வாகனங்களுக்காக, அரசு பங்குகளில் நிரப்பப்படும் எரிபொருள், அதிகாரிகளின் தனியார் வாகனத்துக்கு மாற்றப்பட்டு அரசு வாகனத்துக்கு அரசு பங்குகளில் மீண்டும் எரிபொருள் நிரப்பப்படும்.
இதனால் இந்தத்தட்டுப்பாடு இந்த உயர் உயர் அதிகாரிகளை எந்த விதத்திலும் பாதிக்கப்போவதில்லை. சாமான்ய மக்களின் சிரமம் இந்த எருமைமாட்டுத் தோல் படைத்த அதிகாரிகளுக்கு உரைப்பதில்லை. இதனால்தான், நாட்டில் எவன் குடி கெட்டு குட்டிச் சுவராய்ப் போனாலும், நெற்குன்றம் வீட்டு வசதி வாரியத்திட்டத்தை நீதிமன்றத்தில் உள்ள வழக்கிலிருந்து எப்படி பாதுகாப்பது… .. வழக்கு தொடர்ந்த புகழேந்தியை எப்படி வளைப்பது…. அல்லது, வழக்கை விசாரிக்கும் நீதிபதியை எப்படி வளைப்பது என்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தற்போது சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக உள்ள ஜார்ஜ், லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநராக இருந்த போது, அவரது பெரிய மேசையில் மேல் வைப்பதற்கு மேசை முழுவதையும் கவர் செய்யும் வகையில் ஒரு கண்ணாடி வேண்டும் என்றார். அந்தக் கண்ணாடியெல்லாம் வாங்குவதற்கு அரசு விதிகளில் இடமில்லை என்பதால், ரகசிய நிதியிலிருந்து வாங்க முடிவெடுத்து, அந்தக் கண்ணாடிக்கு சாம்பிள்களை கொண்டு வரச் செய்து பார்த்து, பல சாம்பிள்களிலிருந்து ஒரு இன்ச் உயரம் உள்ள கண்ணாடியை தேர்வு செய்தார். இவை நடந்து கொண்டிருந்த போது, தமிழகத்தில் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு தமிழகமே கொந்தளிப்பில் இருந்தது. அப்போது, ஜார்ஜின் இந்த நாடகத்தைப் பார்த்த ஒரு உயர் அதிகாரி, ஒரு நாள் மக்கள் புரட்சி ஏற்பட்டு, சேரிகளில் உள்ள மக்கள், அரசு அலுவலகங்களில் புகுந்து, ஜார்ஜ் போன்ற அதிகாரிகளை அந்தக் கண்ணாடியாலே அடிக்க வேண்டும் என்றார். இந்தத் தற்கால நீரோக்களைப் பார்க்கையில் அந்த ஆத்திரமே வருகிறது.
நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்த அதிகாரிகள்தான் இப்படி பொறுப்பற்று இருக்கிறார்கள் என்றால், இந்த அதிகாரிகளை மேய்க்க வேண்டிய ஜெயலலிதா, ரோமானிய சாம்ராஜ்யத்தை விட சிறந்த நிர்வாகம் வழங்கியது அதிமுக அரசு என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் தன் புகைப்படத்தோடு வரும் ஓராண்டு சாதனை விளம்பரங்களை நாள்தோறும் கண்டு களித்து வருகிறார்.
அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் இப்படி குறை சொல்கிறோமே, நாம் யோக்கியமா என்று விரலை நம்மை நோக்கித் திருப்பினால் ஏற்படும் வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. நேற்று காலை அண்ணா நகரில் ஒரு பங்கில் பெட்ரோல் போடச் சென்ற போது, பல சுவையான காட்சிகளைப் பார்க்க முடிந்தது. அந்த பங்கில் இருந்த நெருக்கடி காரணமாக, பங்கில் நுழையும் முன்பு சிறிது நேரம் தடுத்து கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே விட்டனர்.
அந்த பங்கில் தட்டுப்பாடு இல்லாமல் பெட்ரோல் உறுதியாக கிடைக்கும் என்ற நிலைதான் இருந்தது. ஆனால் வரிசையில் நின்றவர்கள் நடந்து கொண்டதைப் பார்த்த போது, நமக்கு அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் குறை சொல்வதற்கு என்ன தகுதி இருக்கிறது என்றே தோன்றியது. பத்து நிமிடம் நிற்கும் அந்த வரிசையில் எப்படி அடுத்த வண்டியை முந்தி குறுக்கே செல்லலாம் என்று பெரும்பாலானோர் நடந்து கொண்ட விதம் இருக்கிறதே… அவ்வளவு அருவருப்பாக இருந்தது. இரண்டு வாகனங்களுக்கு இடையே இரு சக்கர வாகனத்தின் முன் சக்கரத்தை நுழைத்து முன்னேற முயற்சி செய்வது, இல்லை நான்தான் உங்களுக்கு முன்னால் வந்தேன் என்று அடாவடி செய்வது, பெட்ரோல் போடும் ஊழியரைப் பார்த்து, எவ்ளோ நேரம்யா போடுவ என்று அதிகாரம் செய்வது, பெட்ரோல் போட்டு முடித்தவர்கள், டேங்க்கை மூடுவதற்குள் வண்டிய எடுங்க சார் என்று திமிர்த்தனமாக பேசுவது என்பதைப் பார்த்தால், ஒரு வரிசையில் நிற்பதற்குக் கூட குறைந்தபட்ச நேர்மை இல்லாத நாம் யாரைக் குறை சொல்ல முடியும் என்றே தோன்றியது.
சென்னை பெட்ரோல் பங்கில் நடந்த ஒரு சண்டைக் காட்சி (நன்றி தி இந்து)
இந்தத் தட்டுப்பாட்டை பயன்படுத்திக் கொண்டு, கள்ளச்சந்தையில் பெட்ரோலையும் டீசலையும் விற்றவர்களுக்கும் குறை இல்லை. ஆந்திராவிலிருந்து கேன்களில் டீசலை வாங்கி வந்து சென்னையில் கூடுதல் விலைக்கு விற்றவர்களும் உண்டு. கள்ளச்சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 200 ரூபாய் வரை விற்றதாகவும் சொல்கிறார்கள்.
இந்த அளவு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் மத்திய மாநில அரசுகளும், அதிகாரிகளும் நடந்து கொள்வது பொறுப்பின்மையின் உச்சக்கட்டம்.
இந்தத்தட்டுப்பாட்டிலும் ஒரே ஆறுதல் என்ன தெரியுமா ? பங்குகளில் பெட்ரோல் போடும் அந்த ஊழியர்களுக்கு திடீரென்று கிடைத்த அதிகாரம்தான். இவ்வளவு நாள் பெட்ரோல் போடச் செல்பவர்கள், அந்த பங்கின் ஊழியர்களை அதிகாரம் செய்து கொண்டிருப்பார்கள். “என்னய்யா இவ்வளவு நேரம்… ஒழுங்க செட் பண்ணுய்யா…. பில் குடுய்யா….” என்று ஏக வசனத்தில் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் நேற்று பெட்ரோல் போட்ட போது அந்த பங்கின் ஊழியர்கள் செய்த அதிகாரம் இருக்கிறதே… “சார்…. ஒழுங்கா வரிசையா நிக்கலன்னா நிறுத்திடுவேன்…. வரிசையா வாங்க… சீக்கிரம் டேங்க ஓபன் பண்ணுங்க சார்.. வண்டிய எடுங்க சார். அந்தப் பக்கம் போய் மூடிக்கங்க…. சார் கேஷை எடுத்து கையில வச்சுக்கங்க சார்… சேஞ் கரெக்டா வச்சுக்கங்க….” என்று அவர்களுக்கு திடீரென்று கிடைத்த அதிகாரத்தை அவர்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார்கள். ஆளாளுக்கு அதிகாரம் செய்யும் போது, அந்த ஊழியர்கள் ஒரு நாள் அதிகாரம் செய்தால்தான் என்ன ?