ஜெயலலிதா அரசு ஓராண்டில் நடத்திய நூறாண்டு சாதனைகளைப் பற்றி தினந்தோறும் நாளேடுகளில் வெளிவரும் முழுப்பக்க வண்ண விளம்பரங்கள், இந்தியாவில் மிகப்பெரிய நிர்வாகச் சீர்திருத்தங்களை கொண்டு வந்த வாரன் ஹாஸ்டிங்ஸ், லார்ட் பென்டிங்க், லார்ட் ரிப்பன், லார்ட் டல் ஹவுசி போன்றவர்களை விட, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மிகச் சிறந்த நிர்வாகி என்ற எண்ணத்தை உருவாக்கி வருகின்றன. நாள்தோறும் ஒவ்வொரு துறைகளைப் பற்றியும் வரும் விளம்பரங்கள், ஜெயலலிதா இவ்வளவு திறமையான நிர்வாகியா என்று பார்ப்போர் அனைவரையும் வியக்கவைப்பவை. இந்த விளம்பரங்களைப் பற்றி மற்றொரு நாள் பேசுவோம்.
சரி. ஜெயலலிதா உண்மையிலேயே சிறந்த நிர்வாகியா ? இந்த பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டை ஜெயலலிதா ஒரு மாநில அரசின் முதல்வராக இருந்து கொண்டு போக்கியிருக்க முடியுமா ? பெட்ரோல் டீசல் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விஷயம் இல்லையா ? எதற்கெடுத்தாலும் திமுககாரன் போல ஜெயலலிதாவை குறை சொல்லலாமா ? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியில் எழும்.
எரிபொருள் தட்டுப்பாடு பெட்ரோல் விலையேற்றப்பட்ட புதன் அன்று இரவு முதல் லேசாகத் தொடங்கியது. வியாழனன்று சற்றே முற்றியது. வெள்ளி மாலை முதல், பங்குகளில் கூட்டம் கூடத் தொடங்கியது. சனிக்கிழமையெல்லாம் நெருக்கடி முற்றியது. ஞாயிறன்று அடிதடி தொடங்கியது. திங்கட்கிழமை கைமீறிப் போனது.
பெட்ரோலியப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் (Essential Commodities Act, 1955) வருகிறது. இச்சட்டத்தின் பகுதி 4ல் பத்தி 4.1 கீழ் கண்டவாறு கூறுகிறது.
ESSENTIAL COMMODITIES ACT, 1955
4.1 The Essential Commodities Act, 1955 was enacted to ensure the easy availability of essential commodities to consumers and to protect them from exploitation by unscrupulous traders. The Act provides for the regulation and control of production, distribution and pricing of commodities which are declared as essential for maintaining or increasing supplies or for securing their equitable distribution and availability at fair prices. Exercising powers under the Act, various Ministries/Departments of the Central Government and under the delegated powers, the State Governments/UT Administrations have issued Control Orders for regulating production, distribution, pricing and other aspects of trading in respect of the commodities declared as essential. The enforcement/implementation of the provisions of the Essential Commodities Act, 1955 lies with the State Governments and UT Administrations.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955, கள்ளச் சந்தைக்காரர்களால் நுகர்வோர் அலைகழிக்கப்படாமல் அத்தியாவசியப் பொருட்கள், நுகர்வோருக்கு தங்கு தடையில்லாமல் கிடைப்பதற்காக உருவாக்கப்பட்டது. இச்சட்டம், அத்தியாவசியப்பொருட்களை, வரைமுறை செய்வதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும், விநியோகம் செய்வதற்கும், விலை நிர்ணயம் செய்வதற்கும், தடையில்லா விநியோகத்திற்காகவும் உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி மத்திய அரசின் பல்வேறு துறைகளும், மாநில அரசுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி, விநியோகம், விலை மற்றும் இதர விஷயங்கள் குறித்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும், பல்வேறு ஆணைகள் பிறப்பித்துள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கூறுகளை அமல்படுத்தும் பொறுப்பு மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களையே சாரும்.
இச்சட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளவை என்னவென்று பார்ப்போம்.
LIST OF COMMODITIES DECLARED ESSENTIAL UNDER THE ESSENTIAL COMMODITIES ACT, 1955
(As on February, 2005)
Declared under Clause (a) of Section 2 of the Act
- Cattle fodder, including oilcakes and other concentrates.
- Coal, including coke and other derivatives.
- Components parts and accessories of automobiles.
- Cotton and woollen textiles.
- Drugs.
- Foodstuffs, including edible oilseeds and oils.
- Iron and Steel, including manufactured products of Iron & Steel.
- Paper, including newsprint, paperboard and strawboard.
- Petroleum and Petroleum products.
- Raw Cotton, either ginned or unginned and cotton seed.
- Raw Jute.
இதில் பெட்ரோலியப் பொருட்கள் வரிசை எண் 9ல் வருகிறது. இப்போது சட்டத்தின் முதல் பகுதிக்கு வருவோம். “அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955, கள்ளச் சந்தைக்காரர்களால் நுகர்வோர் அலைகழிக்கப்படாமல் அத்தியாவசியப் பொருட்கள், நுகர்வோருக்கு தங்கு தடையில்லாமல் கிடைப்பதற்காக உருவாக்கப்பட்டது.”
இச்சட்டத்தின் கடைசி வரியைப் பார்ப்போம். “அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கூறுகளை அமல்படுத்தும் பொறுப்பு மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களையே சாரும்.”
இப்போது பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டிய பொறுப்பு யாருடையது என்பது புரிகிறதா ? பெட்ரோலியப் பொருட்கள் என்பதால், இது முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டைச் சேர்ந்தது என்ற எண்ணத்திலேயே நாம் இருக்கிறோம். கடந்த வாரம் ஏற்பட்ட தட்டுப்பாட்டைப் போக்க வேண்டிய பொறுப்பு முழுக்க முழுக்க மாநில அரசையே சார்ந்தது.
மேலும் இப்பெட்ரோலியப் பொருட்களுக்கு மாநில அரசு வரி விதித்து அதன் மூலம் வரி வருவாய் ஈட்டி வருகிறது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. இந்த அத்தியாவசியப் பொருட்கள் தடைச்சட்டத்தின் படி, மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் வானளாவிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரங்களில் நீதிமன்றங்கள் கூட தலையிட முடியாது என்பது குறிப்பிடத் தக்கது.
இந்தச் சட்டம் மட்டுமல்ல தோழர்களே.. மத்திய அரசு, பெட்ரோலியப் பொருட்களுக்கென்று பிரத்யேகமாக ஒரு சட்டம் இயற்றியுள்ளது. The Petroleum Products (Maintenance of Production, Storage and Supply) Order, 1999 என்று அழைக்கப்படும் இச்சட்டம், என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது என்பதை இச்சட்டத்தின் தொடக்கம் கூறுகிறது.
In exercise of the powers conferred by section 3 of the Essential Commodities Act, 1955, (10 of 1955), in Order to regulate production, storage and supply of petroleum products in the interest of sustaining public life, economy and protecting consumers interest.
பொதுமக்களின் நலன்கருதியும், பொதுவாழ்வு நலன் கருதியும், பொருளாதார நலன் கருதியும், நுகர்வோர் நலன் கருதியும், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, இந்த ஆணை பிறப்பிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆணையின் பிரிவு 6 என்ன கூறுகிறது தெரியுமா ?
6. Regulation of retail supply of petroleum products – (1) Where under any agreement between a dealer and an oil marketing company, a petroleum product is to be supplied at a retail outlet, and the central Government is of the opinion that such petroleum product may not be available at the retail outlet for any reason whatsoever, either wholly or partially to meet the demand of the general public, it may, by order in writing, direct any other oil marketing company to deliver, for such period as may be specified in the order or such period by which the original supplying company is able to restore the supply , such petroleum product at such retail outlet and thereupon it shall be the duty of the oil marketing company specified in the order to deliver, and of the dealer to receive and sell the petroleum product so ordered to be delivered against price and other charges.
”பெட்ரோலியப் பொருட்களை ஒரு டீலருக்கு வழங்க வேண்டிய ஒரு எண்ணை நிறுவனம், ஏதாவதொரு காரணத்திற்காக, பொது மக்களின் தேவைக்கு ஏற்ப வழங்க இயலாவிட்டால், அந்த எண்ணை நிறுவனத்தை தேவையான கால அளவுக்கு, வழங்குமாறு எழுத்து பூர்வமான உத்தரவு மூலம், தேவையான பொருட்களை வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வுத்தரவைப் பெற்ற சம்பந்தப்பட்ட எண்ணை நிறுவனம், சம்பந்தப்பட்ட டீலருக்கு அந்த பெட்ரோலியப் பொருட்களை வழங்கியே தீர வேண்டும்.” இந்தச் சட்டத்தில் உள்ள அதிகாரம், மாநில அரசுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
சரி. இப்போது, இப்பெட்ரோலியப் பொருட்களின் சீரான விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மற்றும் கடமை மாநில அரசினுடையது என்பதைப் பார்த்தோம்.
மாநில அரசு என்ன செய்தது என்பதைப் பார்ப்போம். தலைமைச் செயலக வட்டாரங்களில் விசாரித்தபோது கடந்த 24.05.2012 முதல் தமிழகத்தில் இருந்து வரும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து, ஜெயலலிதாவுக்கு தகவல் தெரிந்ததே நேற்றுதான் (29.05.2012). இத்தகவல் தெரிந்ததும் அதிகாரிகளை வறுத்தெடுத்த ஜெயலலிதா, உடனடியாக தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
அதிகாரிகள் கூட்டம் நேற்று காலை நடைபெற்ற உடனேயே துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த பங்குகள் நேற்று மாலை முதல் திறக்கப்பட்டதைப் பார்த்திருப்பீர்கள்.
துரிதமாக நடவடிக்கை எடுத்ததெல்லாம் சரி. கடந்த ஒரு வாரமாக என்ன செய்து கொண்டிருந்தது அரசு ? கடந்த வெள்ளியன்றே (25.05.2012) ஜெயலலிதாவுக்கு தகவல் தெரிந்தும் அவர் நடவடிக்கை எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருந்தார் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. ஜெயலலிதாவுக்கு தகவலே நேற்றுதான் தெரிந்தது என்பதே உண்மையாக இருக்க முடியும்.
அப்படி நேற்றுதான் ஜெயலலிதாவுக்கு தகவல் தெரிந்தது என்றால், உளவுத்துறை தினந்தோறும் அனுப்பும் அறிக்கைகள் எதையும் ஜெயலலிதா பார்ப்பதில்லை. உளவுத்துறை தலைவரை சந்தித்து நாட்டு நடப்புகளை பேசுவதில்லை. செய்தித்தாள்களை படிப்பதில்லை என்று தெரிய வருகிறது. உளவுத்துறை அறிக்கையை படிக்காவிட்டாலும், செய்தித்தாள்களைப் படித்தாலே தெரிந்திருக்குமே …. …. ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த “ஊடக வியாபாரி டைம்ஸ் ஆப் இந்தியாவை”ப் படித்தால் கூட தெரிந்திருக்குமே… ஆக ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து கொண்டு, நாள்தோறும் வரும் உளவுத்துறை அறிக்கைகளைப் படிக்காமல், உளவுத்துறை தலைவரையும் சந்திக்காமல், செய்தித்தாள்களைப் படிக்காமல், தொலைக்காட்சிகளைப் பார்க்காமல், வெறும் ஜெயா டிவியை மட்டும் பார்த்துக் கொண்டு, நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடி வழிகிறது, மக்கள் சுபிட்சமாக இருக்கிறார்கள், இன்னும் மைனாரிட்டி திமுக அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்ற செய்தியை மட்டுமே ஜெயலலிதா பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற முடிவைத் தவிர வேறு என்ன முடிவுக்கு வர முடியும் ?
ஒரு காவல்துறை உயர் அதிகாரி சவுக்கிடம் சொல்லியிருக்கிறார். 1996-2001 திமுக ஆட்சிக் காலத்தில் உளவுத்துறை ஐஜியாக ராமானுஜம் இருந்தார். அப்போது, அவருக்கு கீழ் பணியாற்றிய ஒரு அதிகாரிக்கு வேலை என்ன தெரியுமா ? காலை நான்கு மணிக்கு, அண்ணா சாலையில் அனைத்து நாளிதழ்களையும் பிரித்து ஏஜென்டுகள் எடுத்துச் செல்வார்கள். அந்த அதிகாரி காலை நான்கு மணிக்கு அத்தனை செய்தித்தாள்களையும் வாங்கி, முக்கிய செய்திகளை குறிப்பெடுத்து, நான்கரை மணிக்கு, ஐஜி ராமானுஜத்திடம் சொல்ல வேண்டும். அதிகாலை ஐந்து மணிக்கு ராமானுஜம் கருணாநிதியை தொலைபேசியில் அழைத்து, அந்தத் தகவல்களைச் சொல்லுவார். அதைக் கேட்ட கருணாநிதி, அந்த தொலைபேசியிலேயே அந்தச் செய்திகள் தொடர்பாக சில உத்தரவுகளை பிறப்பிப்பார். காலை பத்து மணிக்கு வேலை நாள் தொடங்கியதும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து, ‘என்னய்யா… பேப்பர்ல உன் டிப்பார்ட்மென்ட் பத்தி இப்படி வந்துருக்கு’ என்று கேட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரி, பேப்பரைக் கூட படிக்காமல், என்ன சொல்கிறார் என்பது புரியாமல் மேலும் ஏச்சு வாங்கிக்கட்டிக் கொள்வாராம். இது போல கருணாநிதியிடம் ஏச்சு வாங்கிய அதிகாரிகள், காலை ஐந்து மணிக்கு அவரைப் போலவே அனைத்து நாளிதழ்களையும் படித்துத் தயாராக இருப்பார்களாம்.
தமிழக காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீபாலைப் போல திறமைசாலி கிடையாது என்று சொல்லுவார்கள். அந்த ஸ்ரீபாலே சிறந்த நிர்வாகி என்று பாராட்டியவர் கருணாநிதி. ஒரு முறை ஸ்ரீபாலிடம், ஒரு நபரைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று அந்த நபரைப் பற்றிய முழுமையான விபரங்களை கொடுக்காமல், பாதி விபரங்களைக் கொடுத்து விசாரிக்கச் சொல்லியிருக்கிறார் கருணாநிதி. மற்றொரு அதிகாரியிடம் மீதிப் பாதி விபரங்களைக் கொடுத்து விசாரிக்கச் சொல்லியிருக்கிறார். அந்த நபர் யாரென்று ஸ்ரீபால் கண்டுபிடித்து விட்டாலும், யாரைப்பற்றி விசாரிக்கச் சொல்கிறோம் என்பது தெரியக் கூடாது என்பதற்காக சாமர்த்தியமாக விசாரிக்கச் சொன்ன கருணாநிதியின் அறிவைப் புகழ்ந்து பாராட்டியிருக்கிறார். இதுதான் கருணாநிதி.
சரி. ஜெயலலிதா மட்டுமே இந்த எரிபொருள் தட்டுப்பாட்டுச் சிக்கலுக்கு பொறுப்பா என்றால் இல்லை. ஜெயலலிதாவை விட கூடுதல் பொறுப்பு யாருக்கு இருக்கிறது என்றால், தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கிக்கும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலாளர் எம்.பி.நிர்மலாவுக்குமே. ஜெயலலிதா எப்படிப்பட்ட முதல்வர் என்பது, மற்ற அனைவரையும் விட தேபேந்திரநாத் சாரங்கிக்கு நன்கு தெரியும். அவர் அறிக்கைகளைக் கூட படிப்பதில்லை என்பதும் சாரங்கிக்கு நன்கு தெரியும்.
அப்படி இருக்கையில், உளவுத்துறை அறிக்கைகளை படிக்கும் சாரங்கியல்லவா நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் ? தன்னுடைய பதவிக்காலம் டிசம்பர் 2012ல் முடிவடைகிறது. அதன் பிறகு ஆறு மாதத்துக்கு மேல் பதவி நீட்டிப்புக் கிடைக்க வாய்ப்பு இல்லை. அதனால் மின்சார ஒழுங்கு முறை ஆணைய தலைவர் பதவிக்குச் சென்றால் ஐந்து வருடத்துக்கு நல்ல பதவியில் நீடிக்கலாம் என்பது புரிந்து தன்னை அந்தப் பதவியில் நியமிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் கேட்கத் தெரிந்த சாரங்கிக்கு இந்த எரிபொருள் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஏன் தோன்றவில்லை ? ஜெயலலிதாவே சொல்ல வேண்டியதில்லை. தலைமைச் செயலாளர் என்ற முறையில் சாரங்கி உத்தரவு பிறப்பித்தால் மற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கமாட்டார்களா என்ன ?
தனக்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையத் தலைவர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக, அந்தப் பதவியை கடந்த ஆறு மாதமாக காலியாக வைத்திருந்து, அது தொடர்பான கோப்பை எங்குமே நகர விடாமல், எப்படியாவது அந்தப் பதவியை அடையத் துடிக்கும் சாரங்கிக்கு, கொளுத்தும் வெயிலில் பெட்ரோலுக்காக வண்டியைத் தள்ளிக் கொண்டு அலையும் பொதுமக்களின் சிரமம் புரியாமல் போனது ஏன் ?
முன்னாள் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதியோடு வாரமிருமுறை, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் சரக்கடிக்கும் சாரங்கிக்கு, மனைவியையும், குழந்தைகளையும் வைத்துக் கொண்டு, பெட்ரோல் இல்லாமல் சாலையில் வண்டியைத் தள்ளிச் செல்லும் சென்னைவாசியின் வேதனை புரியாமல் போனது ஏன் ?
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குழந்தையை முன்னால் உட்கார வைத்துக் கொண்டு, வெயில் தாங்காமல் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு, கொளுத்தும் வெயிலில் வியர்வை வழிய, வண்டியைத் தள்ளிக் கொண்டு செல்லும் குடும்பத்தலைவர்களைப் பார்த்த போது, இந்த அரசின் மீது வந்த கோபம் கொஞ்சம் நஞ்சமல்ல தோழர்களே….
வரும் ஆத்திரத்திற்கு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் செயலர் எம்.பி.நிர்மலாவையும், தலைமைச் செயலாளர் சாரங்கியையும், மீண்டும் இதே போல ஒரு பெட்ரோல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, ஒரே ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் கிடைக்குமாறு செய்து, இந்தியன் ஆயில் பங்க் சீருடையான நீல நிற உடையை அணிவித்து 48 மணி நேரம் தொடர்ந்து வேலை பார்க்க வைக்க வேண்டும் போல இருக்கிறது.
ஜெயலலிதா அவர்களே…. கனவு காணவும், ஆசைப்படவும் எல்லோருக்கும் உரிமை உண்டு. பிரதமராகலாம் என்று கனவு காணும் நீங்கள் முதலில் மாநிலத்தை ஒழுங்காக நிர்வகியுங்கள். உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். தலைமைச் செயலகத்திலிருந்து, போயஸ் தோட்டம் செல்லும் வழியில் உள்ள கட்அவுட்டுகளையும், பேனர்களையும் கண்டு புளகாங்கிதம் அடையும் உங்களுக்கு, அதே சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ஏன் இவ்வளவு கூட்டம் என்று கேட்கத் தோன்றவில்லையே ?
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
கலைஞர் உரை:
சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்.
மு.வ உரை:
அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் கடமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம் கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர் கடமையாகும்.
தமிழகத்தில் முதலமைச்சர்தான் சரியில்லை என்று பார்த்தால், அறிவுரை கூற வேண்டிய அமைச்சர்கள் அடிமைகளாக இருக்கிறார்கள். அதிகாரிகள் சோம்பேறிகளாகவும், சுயநலமிகளாகவும் இருக்கிறார்கள்.
ஏற்கனவே விலையேற்றத்தால் கடும் அவதியில் இருக்கும் மக்களின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் இந்த அரசை என்னவென்று சொல்வது ?