யார் இந்த இளைஞர்களின் ஆதர்சம் என்று நினைக்காதீர்கள். வேறு யார் ? தமிழினத்தின் தன்னிகரில்லாத, தரணி போற்றும், தன்னலமற்ற, தமிழினத்தின் தவமாய் தவமிருந்து பெற்ற தலைவன் கருணாநிதிதான். ஏன் அவர் இளைஞர்களின் ஆதர்சமாக இருக்கக் கூடாது ? இந்த 87 வயதில், இப்படி பல்டி அடித்து இளைஞர்களை உற்சாகப்படுத்துகிறாரே… என்னைப் போல பல்டி அடிக்க முடியுமா ? அதுவும் ஒரே மணி நேரத்தில் இப்படி பல்டி அடிக்க முடியுமா என்று சவால் விட்டிருக்கிறாரே…. இதை விட இளைஞர்களை ஆகர்ஷிக்க ஒரு தலைவன் என்னதான் செய்ய முடியும் ?
இனி… தன்னிகரில்லா தலைவன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியிலிருந்து.
கேள்வி : ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து கொண்டே பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்துகிறீர்களே…
கருணாநிதி : இந்த போராட்டம் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்துத்தான். மத்திய அரசை எதிர்த்து அல்ல.
கேள்வி : மத்திய அரசுதானே பெட்ரோல் விலையை நிர்ணயிக்கிறது.
கருணாநிதி : மத்திய அரசு பெட்ரோல் விலையை நிர்ணயித்தாலும், பெட்ரோலை அது உற்பத்தி செய்யவில்லையே. அப்படி இருக்கையில் இந்த ஆர்ப்பாட்டம் எப்படி மத்திய அரசுக்கு எதிரானதாக இருக்க முடியும் ?
கேள்வி : இந்தப் போராட்டம், கச்சா எண்ணை விலையை நிர்ணயம் செய்யும் ஓபெக் நாடுகளான அல்ஜீரியா, அங்கோலா, ஈரான், குவைத் உள்ளிட்ட நாடுகளை எதிர்த்தா ?
கருணாநிதி : மாநிலங்களின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவதை எப்படி திமுக தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளதோ, அதே போல மத்திய அரசின் அதிகாரமான வெளியுறவு கொள்கையில் திமுக தலையிடாது.
கேள்வி : அப்போது இப்போராட்டம் தாறுமாறாக விலையேற்றம் செய்யும் எண்ணை நிறுவனங்களை எதிர்த்தா ?
கருணாநிதி : பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் சொத்து. அந்த நிறுவனங்கள் நலிவடையாமல் பாதுகாப்பதில் திமுக எப்போதும் முன்னின்று வந்துள்ளது. அந்த நிறுவனங்களுக்கு எதிராக திமுக ஒரு போதும் செயல்படாது.
கேள்வி : யாரை எதிர்த்துத்தான் இந்தப் போராட்டம் ?
கருணாநிதி : காவிரிப்படுகையில், நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணத்தில் எடுக்கப்படும் கச்சா எண்ணை தமிழகத்திற்குச் சொந்தமல்லவா ? தமிழக எல்லையில் இருக்கும் அந்த நரிமணப் படுகையில் எடுக்கப்படும் கச்சா எண்ணையை தமிழக மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக வழங்கத் தவறிய அந்த அம்மையாரை எதிர்த்தே இந்தப் போராட்டம்.
கேள்வி : இந்தியாவில் எந்த இடத்தில் கச்சா எண்ணை எடுக்கப்பட்டாலும் அது மத்திய அரசுக்கு சொந்தமல்லவா ? மாநில அரசு எப்படி அதை எடுக்க முடியும் ?
கருணாநிதி : ரிலையன்ஸ் போன்ற ஒரு தனியார் நிறுவனம் கிருஷ்ணா கோதாவரிப் படுகையில் கச்சா எண்ணை எடுக்க அனுமதிக்கப்படுகையில், ஒரு மாநில அரசுக்கு அந்த உரிமை கிடையாதா ? தமிழன் என்றால் இளிச்சவாயனா ?
கேள்வி : நீங்கள் ஆட்சியில் இருந்தபோது இதைச் செய்திருக்கலாமே ?
கருணாநிதி : கழக ஆட்சியில் நாகப்பட்டினம் நரிமணப்படுகையில் உள்ள கச்சா எண்ணையை ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த வேளையில் தேர்தல் வந்ததால் அத்திட்டத்திற்கு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், அத்திட்டத்தை செயல்படுத்தலாம் என்று இருந்தபோது, தமிழக மக்கள் அறியாமையால் அம்மையாரைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், தம்பி துரை முருகன், கலைஞர் கச்சா எண்ணை திட்டம் என்று அந்தத் திட்டத்துக்கு பெயரே வைத்து விட்டார்.
கேள்வி : திமுக தேர்தல் அறிக்கையில் இது பற்றிச் சொல்லவில்லையே ?
கருணாநிதி : திமுக அரசின் பல திட்டங்களை அந்த அம்மையார் காப்பியடித்து அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலே வெளியிட்டுள்ளளார். அதைத் தவிர்ப்பதற்காகவே அத்திட்டத்தைப் பற்றி திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை. 356 பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசைக் கலைப்பதை திமுக என்றுமே எதிர்த்து வந்திருக்கிறது என்றாலும், தமிழக நலன் கருதி மத்திய அரசு அம்மையாரின் ஆட்சியைக் கலைத்து, என்னை ஆட்சிப் பொறுப்பிலே அமர வைக்குமேயானால், கலைஞர் கச்சா எண்ணை திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவோம். மேலும், திமுகவின் கொள்கையே, “சொல்வதைச் செய்வோம். சொல்லாததையும் செய்வோம்” என்பதுதானே.
கேள்வி : சொல்லாததை எதைச் செய்துள்ளீர்கள் ?
கருணாநிதி : ஸ்பெக்ட்ரத்தில் கோடிக் கணக்கில் கொள்ளையடித்ததை சொல்லி விட்டா செய்தோம் ? சொல்லாமல் செய்யவில்லை ? மேலும், செய்த பிறகு கூட சொல்லவில்லையே.. சிபிஐதானே கண்டுபிடித்துச் சொல்லியது ?
கேள்வி : பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால் மத்திய அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் பெறுவீர்களா ?
கருணாநிதி : கசப்போடு ஆதரவு தருவோம்.
கேள்வி : பெட்ரோல் விலையைக் குறைத்தால் ?
கருணாநிதி : இனிப்போடு ஆதரவு தருவோம்.
கேள்வி : மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்தினால் ?
கருணாநிதி : வருத்தத்தோடு ஆதரவு தருவோம்.
கேள்வி : டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தினால் ?
கருணாநிதி : கண்ணீரோடு ஆதரவு தருவோம்.
கேள்வி : அப்படியென்றால் மத்திய அரசுக்கு உங்கள் ஆதரவு எப்போதும் தொடருமா ?
கருணாநிதி : மாநில சுயாட்சிக்கு பங்கம் வந்ததென்றால் திமுக அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. தமிழக உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திமுக அந்த உரிமைகள் பாதிக்கப்பட்டால், ஆதரவை வாபஸ் பெற ஒரு நொடியும் தயங்காது.
கேள்வி : முல்லைப் பெரியாறு விவகாரத்திலும், காவிரி விவகாரத்திலும், மத்திய அரசு மெத்தனமாக இருக்கிறதே…
கருணாநிதி : பிரதமர் நடவடிக்கை எடுப்பதாக என்னிடம் உறுதி அளித்துள்ளார்.
கேள்வி : ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பதவிக்காலம் முடியும் வரை ஆதரவை வாபஸ் பெற மாட்டீர்கள்… ?
கருணாநிதி : வாபஸ் பெற்றால், அழகிரிக்கு நீங்களா பதில் சொல்வீர்கள்… தனியாக இருக்கும்போது அழகிரி பேசுவதை நீங்கள் கேட்டிருந்தால் இப்படிக் கேள்வி கேட்க மாட்டீர்கள்.
கேள்வி : திடீரென்று டெசோ அமைப்பை தொடங்கியுள்ளீர்களே ?
கருணாநிதி : யாருமே பாராட்டு விழா நடத்தவில்லையென்றால் நான் என்னதான் செய்வது ? வீட்டுக்கு வந்தால் குடும்பப் பஞ்சாயத்து. அறிவாலயம் சென்றாலும் குடும்பப் பஞ்சாயத்து. கலைஞர் டிவிக்கு சென்றாலும் குடும்பப் பஞ்சாயத்து. நான் என்னதான் செய்வது ?
கேள்வி : ஏற்கனவே இருந்த டெசோ அமைப்பை யாரிடமும் கலந்தாலோசிக்காமல் கலைத்தது நீங்கள்தான் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளாரே.
கருணாநிதி : கலைப்பதற்கு நான் மகப்பேறு மருத்துவன் அல்ல.
கேள்வி : தனி ஈழத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா ?
கருணாநிதி : தனி ஈழத்தை நானும் திமுகவும் எப்போதும் ஆதரித்தே வந்துள்ளோம்.
கேள்வி : ஆனால் கடந்த காலத்தில் இலங்கை ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்காமல் ஒரு தீர்வு ஏற்படவேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்களே…
கருணாநிதி : இப்போதும் அதில் மாற்றமில்லை. தனி ஈழத்தின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்காமல் இலங்கை இருக்க வேண்டும். இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்காமல் தனி ஈழம் இருக்க வேண்டும்.
கேள்வி : புரியவில்லையே…
கருணாநிதி : எனக்கும்தான் புரியவில்லை. நான் உங்களிடம் விளக்கமா கேட்கிறேன் ?
கேள்வி : நீங்கள் புலிகளை ஆதரிக்கிறீர்களா ?
கருணாநிதி : புலிகளை ஆதரிப்பதற்காகத்தான் முதுமலை வன விலங்குகள் சரணாலயத்தையே ஏற்படுத்தினேன். கடந்த கழக ஆட்சியின்போது கூட, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இரண்டு புலிக்குட்டிகள் பிறந்தன என்பதை மறந்து விடாதீர்கள்.
கேள்வி : நான் கேட்டது தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி.
கருணாநிதி : நான் புலி எதிர்ப்பாளன் அல்ல. அந்த அம்மையார் காலத்தில்தான் புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிக்கப்பட்டது. பிரபாகரன் என் நண்பர் என்று எப்போதோ சொல்லியிருக்கிறேன். புலிகள் இயக்கம் தொடங்கப்படும் முன்பு இயக்கத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தம்பி பிரபாகரன் என்னிடம்தான் கேட்டார். நான்தான், புறநானூற்றிலிருந்து பல உதாரணங்களை எடுத்துக் கூறி, விடுதலைப் புலிகள் இயக்கம் என்று பெயர் வைக்குமாறு யோசனைக் கூறினேன்.
கேள்வி : ஆனால் புலிகள் இயக்க வரலாறு வேறு மாதிரி இருக்கிறதே ?
கருணாநிதி : தம்பி பிரபாகரனிடமே உங்கள் சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
கேள்வி : பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லையே ?
கருணாநிதி : அந்த தைரியத்தில்தானே நான் இப்படிப் பேசுகிறேன்.
கேள்வி : ஆனால் உங்கள் ஆட்சிக் காலத்தில்தானே புலிகள் இயக்கம் மீதான தடை இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது.
கருணாநிதி : புலிகள் இயக்கத்தை பாதுகாப்பதற்காகத்தான் தடை நீட்டிக்கப்பட்டது. தடை இல்லாவிட்டால், புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகம் வந்து, நான் கதை வசனம் எழுதிய “பெண் சிங்கம்”, “இளைஞன்” “பொன்னர் சங்கர்” போன்ற படங்களைப் பார்க்க தமிழகம் வந்து, அந்தப் படங்களில் லயித்து தமிழகத்திலேயே தங்கி, தனி ஈழம் அமைக்கும் தங்களின் நோக்கத்திலிருந்து வழுவி விடுவார்கள் என்பதாலேயே அந்தத் தடை நீட்டிக்கப்பட்டது.
(பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்து கொண்டிருந்தபோதே, பிரியங்கா வதேராவின் மகளிடமிருந்து கருணாநிதிக்கு தொலைபேசி அழைப்பு என்று உதவியாளர் தெரிவித்ததும், பேட்டியை ரத்து செய்துவிட்டு, தொலைபேசி அழைப்பை ஏற்க விரைந்தார் கருணாநிதி)