கழுதை தேய்ந்து கட்டெறும்பானதற்கு அற்புதமான உதாரணம் எது என்றால், அன்னா ஹசாரேவின் போராட்டம்தான். அன்னா ஹசாரே மற்றும் அவர் போராட்டம் மீது ஆயிரம் விமர்சனங்களைச் சொன்னாலும், ஊழலை ஒரு விவாதப்பொருளாக்கியதில், அவருக்கு முக்கிய பங்கு உண்டு.
தொலைக்காட்சி முன்பும், இன்டெர்நெட் முன்பும் அமர்ந்து கொண்டு, வெளியுலக வாழ்க்கையே தெரியாத, நடுத்தர வர்க்க படித்த இளைஞர்களை வீதிக்கு அழைத்த வந்து போராட வைத்ததில் அன்னா ஹசாரேவுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. ஐபிஎல் கிரிக்கெட் பார்த்துக் கொண்டு, இந்தியாவில் எதுவுமே சரியில்லை… ஒரு சர்வாதிகாரி ஆட்சிக்கு வந்தால்தான் எல்லாமே சரியாகும்… அமெரிக்கா போல இந்தியா இல்லை என்று பேசிக்கொண்டிருந்த இளைஞர்களை வீதிக்கு வந்து போராட வைத்ததில், அன்னா ஹசாரேவுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. பாரத மாதா கீ ஜே என்ற வெற்று கோஷங்கள், கிரிக்கெட் மேட்சில் வெற்றி பெற்றால் ஏற்படுத்தும் போலி தேசபக்தியைப் போலவே இருந்தாலும், வெற்றிடமாக இருந்த ஊழல் எதிர்ப்புக்கு ஒரு வடிவம் கொடுத்தது போலவே இருந்தது அன்னா ஹசாரேவின் போராட்டம்.
அந்தப் போராட்டம் பெரும் வெற்றியடைந்ததற்கும், அரசியல்கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்கும் 24 மணி நேர தொலைக்காட்சி சேனல்கள் ஒரு முக்கியப் பங்கு வகித்தன. அன்னா ஹசாரேவின் போராட்டத்தின் பின்னணியில் கார்ப்பரேட்டுகள் இருந்தன என்பதும் அன்னா ஹசாரே குழுவினர் ஆதரவு தெரிவித்த லோக்பால் வடிவத்தில், ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் கார்ப்பரேட்டுகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு போதுமான வழிவகைகள் செய்யப்படவில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும், சகிக்க முடியாத ஊழல் வாழ்வின் ஒரு அங்கம் என்று மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு நிலைமை ஏற்பட்ட நேரத்தில் தொடங்கப்பட்ட அந்தப் போராட்டம் வரவேற்கத்தக்கதே.
அன்னா ஹசாரேவின் ஒன்பது நாள் உண்ணாவிரதப்போராட்டத்துக்கு ஆகா ஓகோ என்று ஆதரவு தெரிவித்த அதே ஊடகங்கள், மும்பையில் நடந்த போராட்டத்தின் போது, கூட்டம் இல்லாததைச் சுட்டிக் காட்டின. மேலும், முதல் முறை போராட்டத்தின் போது, நாட்டில் வேறு எந்த செய்தியுமே நடைபெறாதது போல, அன்னா ஹசாரேவின் போராட்டத்தை மாத்திரம் 24 மணி நேரமும் காண்பித்துக் கொண்டிருந்த காட்சி ஊடகங்கள் மும்பை போராட்டத்தின் போது, கவனமாக இருந்தன. லோக்பால் மசோதாவை கொண்டு வந்தே தீருவோம் என்று அனைத்துக் கட்சிகளும் பல்வேறு குரல்களில் ஒரே பாடலை பாடியபோது, சரி… ஏதாவது ஒரு வடிவத்தில் லோக்பால் மசோதவைக் கொண்டு வருவார்கள் என்று சிறிது நம்பிக்கை இருந்தது. ஆனால், கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, இறுதி நாளில் இரவு 12 மணிக்கு ராஜ்ய சபை ஒத்தி வைக்கப் பட்டபோதும், ஒரு மக்களவை உறுப்பினர், வரைவு லோக்பால் மசோதாவை கிழித்த போதும், இது சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு நேர்ந்த கதியையே அடையும் என்பது புரிந்தது.
அதன்பிறகு சிறிது காலம் அமைதியாக இருந்த அன்னா ஹசாரே குழுவினர் 16 அமைச்சர்கள் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் மீதும் குற்றப்பத்திரிக்கை வாசித்தபோது, ஒரு பெரும் அதிர்ச்சி அலை எழத்தான் செய்தது. அன்னா ஹசாரே குழுவினர் மன்மோகன் சிங் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியதும், எழுந்த விமர்சனங்கள் என்னவென்றால், பிரதமர் நேர்மையானவர். அவர் தனிப்பட்ட முறையில் தவறு செய்யவில்லை. அவர் மீது போய் குற்றம் சுமத்துவதா … … … என்பது போன்ற விமர்சனங்கள்.
ஒரு விஷயம் மட்டும் புரியவேமாட்டேன்கிறது. மன்மோகன் சிங் நேர்மையானவர், நல்லவர் என்று கூறுபவர்களுக்கு நேர்மை என்றால் என்ன என்று தெரியுமா என்பது தெரியவில்லை.
ஒரு போலீஸ் ஸ்டேஷனில் ஒரு இன்ஸ்பெக்டர் இருக்கிறார். ரொம்ப நல்லவர். யாரிடமும் பணம் வாங்க மாட்டார். அவருக்கு கீழ் இருக்கும் சப் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள், ஹெட் கான்ஸ்டபிள் ஆகிய அனைவரும் அந்த ஸ்டேஷன் லிமிட் முழுக்க மாமூல் வசூல் செய்வார்கள். காவல்நிலையத்தில் உள்ள கைதியை வெளியே விடுவார்கள். பணத்தை வாங்கிக் கொண்டு பொய் வழக்கு போடுவார்கள். நகரில் நடக்கும் கொலை, கொள்ளை, கள்ளச்சாராயம், பாலியல் வன்முறைகளை கண்டு கொள்ள மாட்டார்கள். இந்த ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் நல்லவரா ? நேர்மையானவரா ? அந்த இன்ஸ்பெக்டருக்கு அந்தப் பதவியை கொடுத்து, மற்ற அனைவரையும் விடக் கூடுதல் சம்பளம் கொடுத்து வைப்பதற்கு காரணம், அவர் தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களிடம் ஒழுங்காக வேலை வாங்க வேண்டும் என்பதே.. தனக்குக் கீழ் பணியாற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஒரு குற்றவாளியிடம் பணம் வாங்கிவிட்டு அவரை கைது செய்யாமல் விட்டு விட்டார் என்பது தெரிந்தால், அந்த இன்ஸ்பெக்டர் அந்த கான்ஸ்டபிள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா இல்லையா ?
அப்படி யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் ஒரு இன்ஸ்பெக்டர் தொடர்ந்து அமைதியாக இருப்பார் என்றால், அவர், அந்த ஸ்டேஷனில் பணியாற்றும் மற்ற எல்லோரையும் விட, மிக மோசமான குற்றவாளி என்றே பொருள். அவர் மற்றவர்கள் செய்யும் அனைத்துத் தவறையும் கண்டும் காணாமலும் இருப்பதன் மூலம், அந்தத் தவறுக்கு உடந்தையாக இருக்கிறார். அவ்வாறு அவர் கண்டும் காணாமல் இருப்பதன் காரணம் தன்னுடைய பதவியை தக்கவைத்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் ?
தான் வாங்கும் ஊதியத்துக்கு நியாயம் செய்யாத ஒரு நபர், ஊழல் பேர்விழிகளை கட்டுப்படுத்த வேண்டிய ஒரு தவறிலிருந்து தவறிய ஒரு நபர் எப்படி நேர்மையான மனிதராக இருக்க முடியும் ?
இருப்பதிலேயே அயோக்கியத்தனமான ஒரு அரசியல்வாதி மன்மோகன் சிங்கே. அந்த வகையில் அவர் மீது குற்றப்பத்திரிக்கை சுமத்தியதை வரவேற்க வேண்டும். ஆனால், அதன் பிறகு, அன்னா ஹசாரே குழுவினர் தடம் புரண்டு போனதைக் பார்க்கையில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான் நினைவுக்கு வருகிறது.
கடந்த ஞாயிறன்று டெல்லியில் பாபா ராம்தேவ் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் அன்னா ஹசாரே மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே மற்றும் பிரசாந்த் பூஷண் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. அந்தக் கூட்டத்திலேயே சர்ச்சை வெடித்துள்ளது.
கூட்டத்தி பேசிய அர்விந்த் கேஜ்ரிவால், ஊழல் அரசியல்வாதிகளின் பெயர்களைக் கூறிப்பிட்டுப் பேசினார். அவர் பேசி முடித்ததும் அவருக்கு அடுத்துப் பேசிய பாபா ராம்தேவ், அரசியல்வாதிகளின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசுவது தவறு என்று பேசியிருக்கிறார். இது ஊடகங்களில் நேற்று முதல் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
பாபாராம்தேவ் போன்ற ஒரு திருட்டுச் சாமியாரோடு சேர்ந்து ஊழலுக்கெதிராக போராட்டம் நடத்தும் அன்னா ஹசாரேவின் நோக்கம் கட்டெறும்பு ஆனதா இல்லையா ?
யார் இந்த பாபா ராம்தேவ் ? ஹரியானா மாநிலத்தில் அலிப்பூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்த இந்த பாபா ராம்தேவ், எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன் பிறகு, சமஸ்கிருதம், யோகா போன்றவற்றை பயிற்ன பாபா, 2003ம் ஆண்டு வரை, ஒரு சாதாரண யோகா பயிற்சியாளராக மட்டுமே இருந்தா. 2003ம் ஆண்டில் ஆஸ்தா டிவி என்ற ஒரு சாமியார் சேனலில் தினமும் காலை யோகா பயிற்சி அளிக்கத் தொடங்கினார். அதே ஆண்டு திவ்ய யோகா மந்திர் ட்ரஸ்ட் என்ற ஒரு மையத்தை தொடங்கினார். 2003ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ட்ரஸ்டின் இன்றைய மதிப்பு 1100 கோடி. இது மட்டுமின்றி, ஸ்காட்லாந்து நாட்டில் 750 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு தீவை இந்திய வம்சாவளியில் பிறந்து, ஸ்காட்லாந்து நாட்டில் வசித்த ஒரும் ஒரு தம்பதியினர் இந்தத் திருட்டுச் சாமியாருக்கு பரிசாக கொடுத்துள்ளனர்.
இந்த நபர் எந்த அளவுக்கு டுபாக்கூர் என்பதற்கு யோகா மூலம் எய்ட்ஸை குணப்படுத்தலாம் என்று இந்த ஆள் கூறியதே ஒரு சான்று. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியதும், நான் அப்படிச் சொல்லவில்லை, எனது சீடர்கள் யாராவது அப்படிச் சொல்லியிருப்பார்கள் என்று மழுப்பினார்.
இந்தத் திருட்டுச் சாமியார் முதன் முதலாக ஊழலைப் பற்றிப் பேசத் தொடங்கியதே 27 பிப்ரவரி 2011ல்தான். அன்று ராம்லீலா மைதானத்தில் வெளிநாடுகளில் இந்தியர்களின் கருப்புப் பணம் 400 லட்சம் கோடி இருக்கிறது என்றார். அந்தக் கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தால், ஒரு இந்திய ரூபாயின் மதிப்பு 50 அமெரிக்க டாலராக மாறி விடுமாம். கருப்புப் பணத்தை ஒழிக்க இந்தத் திருட்டுச் சாமியார் சொன்ன ஆலோசனைகளைப் பார்ப்போம்.
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் சொத்து அத்தனையையும் நாட்டுடைமை ஆக்கவேண்டும்.
வெளிநாட்டு வங்கிகளின் க்ரெடிட் கார்டுகளை வைத்திருப்பவர்களை விசாரிக்க வேண்டும்.
கருப்புப் பணத்தை பதுக்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் அத்தனை வங்கிகளுடனான பரிவர்த்தனையை ரத்து செய்ய வேண்டும்.
ஊழல் புரிந்து தண்டனை பெற்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.
இதையெல்லாம் விட டாப் எது தெரியுமா ? 500 ரூபாய் நோட்டுக்களையும் 1000 ரூபாய் நோட்டுக்களையும் ஒழித்து விட்டால் கருப்புப் பணம் ஒழிந்து விடுமாம்.
இப்படிப்பட்ட ஒரு முட்டாள் சாமியாரைப் பார்த்து மன்மோகன் சிங் அரசாங்கம் பயந்து, அந்த ஆளை விமான நிலையத்திலேயே சந்தித்து போராட்டத்தைக் கைவிடுமாறு மன்றாடியது என்றால் இந்த அரசாங்கம் எப்படிப்பட்ட அரசாங்கம் என்பதைப் பாருங்கள்.
வெளிநாடுகளில் உள்ள கருப்புப்பணத்தைக் கொண்டு வர வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் இந்தத் திருட்டுச் சாமியாரின் யோக்யதை என்ன தெரியுமா ?
2003ல் தொலைக்காட்சிகளில் யோகா குருவாக காட்சியளிக்கத் தொடங்கியதும், திருட்டுச் சாமியார் தொடங்கிய திவ்யா பார்மசி மூலமாக ஆயுர்வேத மருந்துகளை விற்கத் தொடங்கினார். சாமியாரின் டிவி புகழால் ஆயுர்வேத மருந்துகளின் விற்பனை அமோகமாக நடந்தது. 2006ம் ஆண்டில் மருந்து விற்பனை செய்ததாக பாபா ராம்தேவின் திவ்யா பார்மசி கட்டிய விற்பனை வரி 53 ஆயிரம். அந்த ஆண்டு 6 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய்க்கு மருந்து விற்பனை செய்ததாக கணக்கு காட்டினார்கள். ஆனால், திவ்யா பார்மசியில் எப்போதும் மருந்து வாங்குவதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பார்கள்.
இவர்கள் கட்டும் வரிக்கும் மருந்து விற்பனைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பதாக உத்தராகாண்ட் மாநில வணிக வரித்துறையினருக்கு சந்தேகம் வந்தது. உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜக்தீஷ் ராணா என்ற ஒரு நேர்மையான வணிக வரித்துணை ஆணையர், திவ்யா பார்மசியில் சோதனை நடத்தினார். அந்தச் சோதனையில் அந்த ஆண்டு மட்டும் 2509.256 கிலோ மருந்துகளை 3353 பார்சல்கள் மூலம் திவ்யா பார்மசி விற்பனை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிரவும், தபால் மூலமாக மட்டும் மருந்துகளை விற்பனை செய்து அந்த ஆண்டு 17 லட்சத்து 50 ஆயிரதிற்கான மணி ஆர்டர்களை திவ்யா பார்மசி பெற்றிருந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஒரு நிதி ஆண்டில் மட்டும் 5 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. திவ்யா பார்மசியிலிருந்து திவ்யா யோகா ட்ரஸ்ட் என்ற பாபா ராம்தேவின் மற்றொரு நிறுவனத்திற்கு அந்த ஆண்டு மட்டும் 30 லட்சத்திற்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மருந்துகளுக்கும் வரி கட்டாமல் தவிர்க்கப்பட்டது. இதற்கு ஏழைகளுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன என்ற காரணம் கூறப்பட்டது. ஆனால், ஏழைகளுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
இப்படி வரி ஏய்ப்பு செய்வதன் மூலம்தானே கருப்புப் பணமே உருவாகிறது ?
அந்த சோதனைகளை நடத்திய ஜக்தீஷ் ராணாவுக்கு கடும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு அவர் விருப்ப ஓய்வில் சென்று விட்டார். அந்த அளவுக்கு பாபா ராம்தேவுக்கு செல்வாக்கு உண்டு.
மருந்துகளை விற்பனை செய்யும் பாபா ராம்தேவின் திவ்யா பார்மசியோ, யோக மந்திர் ட்ரஸ்டோ, பதஞ்சலி யோகபீட ட்ரஸ்டோ இன்று வரை உத்தராகண்ட் மாநில வணிக வரித்துறையிடம் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது போல பதிவு செய்யப்படாத ட்ரஸ்டுகள் எவ்வித வியாபாரத்திலோ, விற்பனையிலோ ஈடுபடக்கூடாது என்பது விதி. ஆனால் இன்று வரையில் இவர்கள் இணையதளத்தில் ஏராளமான மருந்துகள் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரப்படுத்தியுள்ளார்கள்.
இன்று வரை இந்த இணையதள விற்பனை எவ்வித வரி விதிப்புக்கும் ஆளாகாமல் நடைபெற்று வருகிறது.
இது மட்டுமல்ல. உத்தராகாண்ட் மாநிலத்தையே வளைத்துப் போடுவதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார் இந்தத் திருட்டுச் சாமியார். 2005ல் தொடங்கப்பட்ட பதஞ்சலி யோகப்பீத் ட்ரஸ்ட் புதுதில்லி மாடா தேசிய நெடுஞ்சாலையில் பல நூறு ஏக்கர் நிலங்ளை வாங்கியிருக்கிறது. இந்த இடத்தில் வாங்கப்பட்ட 59 ஏக்கர் நிலத்தில்தான் பதஞ்சலி பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
பதஞ்சலி யோகா நிலையம்
இந்த நிலத்தில் 20 ஏக்கரை மட்டும் விவசாயம் செய்யப்படாத நிலம் என்று அரசாங்கத்திடம் அறிவித்திருக்கிறார் பாபா ராம்தேவ். ஆனால் இவர் கைவசம் 60க்கும் மேற்பட்ட நிலங்கள் உள்ளன. உத்தராகாண்ட் மாநில விதிகளின்படி, விவசாயத்திற்கு பயன்படாத நிலங்கள் என்று அறிவிக்கப்பட்டவைகளில் மட்டுமே கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள இயலும். இந்த இடங்களில் பினாமி பெயர்களில் ஏகப்பட்ட நிலங்கள் வளைத்துப் போடப்பட்டுள்ளன. இந்த ட்ரஸ்டுகளை நிர்வகிக்கும் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் என்ற நபரின் உதவியாளர் ககன் குமார் என்பவர். இந்த ககன் குமாருக்கு மாத வருமானம் 8 ஆயிரம் என்று வருமான வரித்துறையிடம் கணக்குத் தாக்கல் செய்துள்ளார். ஆனால் இந்த ககன் குமார் பெயரில் மூன்றரை ஏக்கர் நிலம் ஷான்தார்ஷ் கிராமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு 35 லட்சம் என்று பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இதன் சந்தை மதிப்பு 5 கோடி. மேலும் ககன் குமார் வாங்கிய இந்த நிலம் உத்தராகாண்ட் அரசு, தலித்துக்காக ஒதுக்கிய நிலம். இந்நிலத்தை வாங்குவதற்கு, மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்ற பிறகே வாங்க வேண்டும் என்ற விதிக்கு ஏற்ப அனுமதி பெற்ற பிறகு வாங்கப்பட்டுள்ளது. மாதம் 8 ஆயிரம் வருமானம் உள்ள நபர் எப்படி இந்த நிலத்தை வாங்க முடியும் ? மே 2010ல், இதே ககன் குமார், ரூர்கி மாவட்டத்தில் 1 கோடியே 37 லட்ச ரூபாய்க்கு மற்றொரு நிலத்தை வாங்கியிருக்கிறார். இந்த நிலத்தின் சந்தை மதிப்பு 15 கோடி.
உத்தராகாண்ட் மாநில விதிகளின்படி, எந்த ஒரு தனி நபரும் 250 சதுர மீட்டருக்கு மேல் உள்ள விவசாய நிலத்தை வாங்க முடியாது. அப்படி வாங்குவதென்றால், அரசிடம் சிறப்பு அனுமதி பெற்ற பிறகே வாங்க முடியும். ஆனால் ஜுலை 2008ல் பாபா ராம்தேவின் பதஞ்சலி யோகா பீத், 185 ஏக்கர்களை அவுரங்காபாத், சிவதாஸ்பூர் ஆகிய கிராமங்களில் மருந்துத் தொழிற்சாலை அமைக்க என்று அனுமதி பெற்று வாங்கியிருக்கிறது. இப்படி சிறப்பு அனுமதி பெற்று வாங்கப்பட்ட இடத்தில், எந்த நோக்கத்துக்காக அனுமதி வாங்கப்பட்டதோ, அதைத் தவிர்த்து வேறு நோக்கத்துக்கு அந்த நிலத்தை பயன்படுத்த முடியாது. மருந்துத் தொழிற்சாலை அமைக்கவென்று அந்த இடத்தை வாங்கிய பாபா ராம்தேவ், அந்த இடத்தில் ஆயுர்வேத சிகிச்சைக்கான ஆசிரமம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு ஒரு நாள் தங்கும் கட்டணம் ரூபாய் 10 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை.
அவுரங்காபாத் என்ற மற்றொரு கிராமத்தில் 350 ஏக்கருக்கும் மேல் ராம்தேவ் மற்றும் அவரது கூட்டாளிகள் ஏழை விவசாயிகளை மிரட்டி வாங்கியிருக்கிறார்கள். ஆனால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஒரு நிலம் கூட இவர்கள் பெயரில் இருக்காது. ஏனென்றால், 350 ஏக்கர் நிலத்தையும் விவசாயமற்ற வேலைகளுக்கு பயன்படுத்துவதில், அரசிடம் அனுமதி வாங்குவதில் உள்ள சிரமம் கருதி, அந்த நிலத்தை விவசாயிகளின் பெயரிலேயே வைத்து விட்டு, நிலத்தை மட்டும் பாபா ராம்தேவ் மற்றும் அவரது கூட்டாளிகள் கையகப்படுத்தியுள்ளார்கள்.
ஹரித்வாரில் பதஞ்சலி ஆயுர்வேத யோகா ஆராய்ச்சி மையம் அமைக்கப்போகிறேன் என்று அரசிடம் அனுமதி வாங்கிய ராம்தேவ் 98 கோடியில் அந்த இடத்தில் புட் பார்க் அமைத்துள்ளார். இதைக் கட்டுவதற்கு அரசிடமிருந்து 50 கோடி வாங்கியுள்ளார். இந்த புட் பார்க்கின் முக்கிய பங்குதாரர்களாக பாபா ராம்தேவின் மைத்துனர், ராம்தேவுக்கு நெருக்கமான சுனில் குமார் சதுர்வேதி மற்றும் சஞ்சய் ஷர்மா ஆகியோர் உள்ளனர். இதன் திறப்பு விழாவில், உத்தராகாண்ட் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விழாவின் போது, பேசிய பாபா ராம்தேவ், எனக்கு நிலம் வழங்கிய உத்தாரகாண்ட் மாநிலத்துக்கு வருவாய் சேர்க்கும் வகையில், 1000 கோடி ரூபாய்க்கு மூலிகைகளும், காய்கறிகளும் வாங்குவேன் என்று அறிவித்தார். ஆனால் இது வரை ஒரு லட்ச ரூபாய்க்குக் கூட மூலிகை வாங்கவில்லை.
இந்த திருட்டுச் சாமியாரின் திருட்டுத்தனம் இதோடு நிற்கவில்லை. நிலத்தை வாங்கிப் பதிவு செய்வதிலும் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள். விவசாய நிலத்தை விவசாயத்திற்கு என்று வாங்கினால் வரி குறைவு. அதே நிலத்தை தொழிலுக்கென்று வாங்கினால் கூடுதல் வரி செலுத்த வேண்டும். மருந்துத் தொழிற்சாலைக்கென்று ஒதுக்கப்பட்ட நிலத்தை விவசாய நிலம் என்று போலியாக அறிவித்ததாக ஹரித்வாரில் இது போல 2009ல் வாங்கிய நிலத்துக்கு தீர்வை செலுத்தாமல் ஏமாற்றிய காரணத்துக்காக 55 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆச்சார்யா பாலகிருஷ்ணா
டெலிவிலா என்ற கிராமத்தில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. அந்த ஆச்சார்யா பாலகிருஷ்ணா பெயரிலும், திவ்யா யோகா மந்திர் என்ற பெயரிலும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டள்ளது. அந்த இடத்தில் ஆழ்துளைக் கிணறு மோட்டார் பொருத்துவதற்காக அந்த இணைப்பு பெறப்பட்டுள்ளது. ஒரு நபரின் பெயரில் நிலம் இருந்தாலே ஒழிய மின் இணைப்பு கொடுக்கப்படக் கூடாது என்பது எல்லா மாநிலத்திலும் உள்ள விதி. ஆனால், அந்த நிலம் பாலகிருஷ்ணன் பெயரில் இல்லாமலேயே மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிரவும், விவசாயத்திற்கான மின்சார இணைப்பு என்று இது வழங்கப்பட்டுள்ளதால் ஒரு யூனிட்டுக்கு 80 பைசா மட்டுமே கட்டி வருகின்றனர். தொழில் இணைப்பாக இருந்தால் உத்தராகாண்ட் மாநிலத்தில் ஒரு யூனிட்டுக்கு 4.50 கட்ட வேண்டும். இந்த வகையில் மட்டும், ஆயிரக்கணக்கான ரூபாய்களை தினந்தோறும் ஏமாற்றி வருகிறார் பாபா ராம்தேவ்.
அதே டெலிவலா கிராமத்தில் குடியிருந்தவர்களுக்கு திடீரென்று ஒரு நாள் மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அளிக்கிறார். அந்த நோட்டீஸில் என்ன இருக்கிறது என்றால், அரசாங்கம், விவசாயம் செய்வதற்கென்று உங்களுக்கு வழங்கிய நிலத்தை நீங்கள் பயன்படுத்தவில்லை. இதற்கான நில வரியும் கட்டவில்லை. ஆகையால் இந்த நிலத்தை அரசாங்கம் ஏன் திருப்பி எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டதற்கான காரணம், அந்த கிராம மக்கள் இவ்வாறு வரி செலுத்தவில்லை என்று புகார் வந்திருக்கிறது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
புகார் பெறப்பட்ட மூன்றாவது நாளில் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட நிலங்களை ஆய்வு செய்கிறார். புகார் பெறப்பட்ட ஒன்பதாவது நாளில் 27 குடும்பத்தினருக்கு அரசாங்கம் வழங்கிய நிலங்கள் வரி செலுத்தாததன் காரணமாகவும், விவசாயத்திற்கு பயன்படுத்தாத காரணத்துக்காகவும் ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பிக்கிறார்.
அந்த 27 குடும்பத்தினர் செலுத்தத் தவறிய ஆண்டு நில வரி எவ்வளவு தெரியுமா ? ரூபாய் 10 மட்டுமே. இதுபோல நிலவரி செலுத்தத் தவறியவர்களின் நிலங்களை அரசாங்கம் மீண்டும் எடுத்துக் கொள்வதற்கான வழிமுறைகளில் ஒன்று, அரசு அதிகாரி, கிராமப்பஞ்சாயத்துக் கூட்டத்தைக் கூட்டி, அவர்களோடு கலந்தாலோசித்த பின்னரே நிலத்தை அரசாங்கம் கையப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். இந்த நேர்வில் அப்படிப்பட்ட கூட்டம் எதுவுமே நடத்தப்படவில்லை.
நிலம் கையகப்படுத்தப்பட்ட 15வது நாளில், எதற்காக நிலம் கையப்படுத்தப்பட்டது என்ற உண்மை வெளிவந்தது. ஆச்சார்யா பாலகிருஷ்ணா, மாவட்ட ஆட்சியருக்கு பல்கலைக்கழகம் அமைக்கவும் பதஞ்சலி ட்ரஸ்டுக்காகவும் 803 ஏக்கர் நிலம் வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கைகளின் பின்னணியிலேயே இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணா நிலம் வேண்டி அனுப்பிய கோரிக்கையில் இந்த 27 குடும்பத்தினரின் நிலங்களும் உள்ளன.
அந்த கிராம மக்களில் சிலருக்கு பாபா ராம்தேவின் லீலைகள் தெரிந்து சமூக ஆர்வலர்கள் உதவியுடன் பொதுநல வழக்கு தொடர்ந்து பாபா ராம்தேவ் ட்ரஸ்டுக்கு நிலம் ஒதுக்குவதற்கு தடையுத்தரவு பெற்றார்கள். தடையுத்தறவு பெற்றாலும், இவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலம், பறிக்கப்பட்டதே…
இது மட்டுமல்லாமல், ஆச்சார்யா பாலகிருஷ்ணா, உத்தராகாண்ட் அரசுக்கு, ஹரித்வார் மாநிலத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நதியையும், மூலிகை தொடர்பான ஆராய்ச்சிக்காக ஒதுக்கும்படி கடிதம் எழுதியுள்ளார் என்றால், இவர்களின் பேராசையையும், நதியை நம்பி இருக்கும் ஏழைகள் மீதும் இவர்களுக்கு உள்ள அக்கறையைப் பாருங்கள். நிலத்தைப் பறிகொடுத்த அந்த 27 ஏழைக் குடும்பத்தினர் வீட்டில் தொலைக்காட்சி இல்லை. இருந்திருந்தால், பாபா ராம்தேவின் கருப்புப்பணத்துக்கு எதிரான போராட்டத்தைப் பார்த்து காறி உமிழ்ந்திருப்பார்கள்.
இதுதான் பாபா ராம்தேவ். இப்படிப்பட்ட நபரோடுதான் அன்னா ஹசாரே ஒரே மேடையில் தோன்றி ஊழலுக்கும் கருப்புப் பணத்துக்கும் எதிராக போராடுகிறார்கள். பாபா ராம்தேவ் நடத்தும் இந்தப் போராட்டம் யாருக்கானது என்பதை ராம்தேவ் தெளிவாகத் தெரிவித்து விட்டார். போராட்டம் நடந்த அன்று மறுநாள், பாஜக தலைவர் நிதின் கட்கரியை சந்தித்து, கருப்புப் பணத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் இருக்கும் ஊழலுக்கு எதிரான உணர்வை காங்கிரசுக்கு எதிரான உணர்வாக மாற்றி, பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதுதான் பாபா ராம்தேவின் நோக்கமாக இருக்க முடியும். அப்போதுதான் உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள மீதி நிலங்களையும் ஆயுர்வேதம் என்ற பெயரால் அபகரிக்க முடியும். இது போன்ற தொலைநோக்குத் திட்டத்தை மனதில் வைத்தே, கருப்புப்பணத்திற்கெதிரான போராட்டம் என்று கண்கட்டு வித்தை செய்து கொண்டிருக்கிறார் திருட்டுச் சாமியார் பாபா ராம்தேவ். அந்த நபரோடு ஒரே மேடையில் தோன்றி கருப்புப் பணத்துக்கும் ஊழலுக்கும் எதிராக பேசியதன் மூலம், அன்னா ஹசாரே, பாபா ராம்தேவின் ஊழலுக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறார். சொந்தநாட்டில் வரி செலுத்தாமல், ஏழைகளின் நிலங்களை அபகரித்து கொள்ளை லாபம் அடிக்கும் ஒரு நபருக்கு ஊழலுக்கு எதிராகப் பேச என்ன அருகதை இருக்கிறது ?
தேய்ந்து கட்டெறும்பான இந்தக் கழுதை எப்படியாவது பாஜகவின் ஊழல்களைப் பற்றிப் பேசாமல், பாஜகவை ஆட்சியில் அமரவைக்கவே முயற்சி எடுப்பதாகத் தோன்றுகிறது. அப்படி ஒரு முயற்றி நடைபெறுமானால், நாம் எதுவும் செய்யவேண்டியதில்லை. பாஜக தலைவர்களே, அந்த முயற்சியை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விடுவார்கள்.