“ஊரான் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே” என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தப் பழமொழி யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் நன்கு பொருந்தும். சமீபத்தில் உலக செஸ் சேம்பியனாக ஐந்தாவது முறையாக வெற்றி பெற்ற விஸ்வநாதன் ஆனந்துக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசாக வழங்கியதே இதற்கு சாட்சி.
விஸ்வநாதன் ஆனந்த் ஒரு திறமையான செஸ் வீரர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில், மக்களின் வரிப்பணத்தில் இரண்டு கோடி ரூபாயை வழங்கியது நியாயமா ?
சோவியத் குடியரசு, சீனா போன்ற நாடுகளில் கம்யூனிச நாடுகளில் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பெறும் பரிசுத் தொகைகளில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை மட்டுமே அவர்கள் வைத்துக் கொள்ள முடியும். மீதம் உள்ள அனைத்தும் அரசக்கே சொந்தம். கம்யூனிச நாடுகளாக இருந்த சோவியத் குடியரசிலும், சீனக் குடியரசிலும், விளையாட்டுக்கு மிக மிக அதிகமான முக்கியத்துவம் அளித்து, அனைத்து விளையாட்டுத் துறைகளிலும் திறமையானவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து அவர்களை உலக அரங்கில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கச் செய்வதில் இரண்டு நாட்டு அரசுகளுமே சளைத்ததல்ல. சோவியத் குடியரசு, சீனா தவிர்த்து பெரும்பாலான கம்யூனிச நாடுகளிலும், விளையாட்டுக்கு மிக அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, பயிற்சி அளிப்பதில் அரசுத் துறைகளே ஈடுபட்டு வருகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, விளையாட்டுத் துறையிலும் அரசியலின் பங்கு அதிகமாகவே இருக்கிறது. ஒரு நாள் கூட கிரிக்கெட் மட்டையைப் பிடித்திராத லல்லு பிரசாத் யாதவ் பீகார் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகிறார். அரசியலையே ஒழுங்காகச் செய்யத் தெரியாத சரத் பவார், அகில இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகும் அவலமெல்லாம் இந்தியாவில்தான் நடக்கும். ராணுவத்தில் பணியாற்றி விட்டு, பாஸ்ட் புட் கடை நடத்திக் கொண்டிருந்து விட்டு அரசியலுக்கு வந்த சுரேஷ் கல்மாடி போன்ற நபர்கள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகும் அதிசயமெல்லாம் இந்தியாவில் மட்டுமே நடக்கும்.
மேலும் பெரும்பாலான விளையாட்டு வீரர்களின் அதிகபட்ச குறிக்கோளாக இருப்பது, ஒரு மாவட்டத்துக்கோ, அல்லது மாநிலத்துக்கோ விளையாடி, அதன் மூலம் “ஸ்போர்ட்ஸ் கோட்டாவில்” ஏதாவதொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலோ, தென்னக ரயில்வேயிலோ, மத்திய அரசு நிறுவனங்களிலோ வேலை வாங்குவது மட்டுமே லட்சியமாக உள்ளது. அவ்வாறு வேலை கிடைத்த பிறகு, மற்ற அரசுத் துறை நிறுவனங்களில் உள்ள கிளர்க்குகள் போல மூளை மழுங்கி, தொந்தியும், தொப்பையுமாக சராசரி மனிதராகி விடுகிறார்கள்.
இதையும் தாண்டி விளையாட்டை தங்கள் வாழ்க்கையாகவே எடுத்துக் கொண்டு அதற்காகவே வாழ்ந்து வருபவர்கள் வெகு சிலரே. இதற்கு முக்கியமான காரணம், கிரிக்கெட்டைத் தவிர்த்து மற்ற விளையாட்டுக்களை இந்தியாவில் யாரும் மதிப்பதேயில்லை என்பதுதான். கிரிக்கெட் வீரர்களை விளம்பரங்களில் நடிக்க பிரபல நிறுவனங்கள் அழைத்துப் பணத்தைக் கொட்டிக் கொடுப்பது போல மற்ற எந்த விளையாட்டைச் சேர்ந்த வீரர்களையும் அழைப்பதில்லை என்பதே மற்ற விளையாட்டுக்களை யாரும் முழு நேர பணியாக எடுத்துக் கொள்ள முன்வருவதில்லை என்பதற்கான காரணம்.
விஸ்வநாதன் ஆனந்தை எடுத்துக் கொண்டால், அவர் இந்தியாவுக்காக விளையாடுவது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வு. மயிலாடுதுறையைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், தனது தாயார் செஸ் விளையாடச் சொல்லிக் கொடுத்ததை வைத்து, விளையாடத் தொடங்கியவர், சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதெல்லாம், தன்னுடைய தனிப்பட்ட வெற்றிக்காகத்தானே ஒழிய, இந்தியாவைப் பெருமைப்படுத்த வேண்டுமென்றெல்லாம் இல்லை. ஆனந்த் இந்தியாவில் இல்லாமல் வேறு எங்காவது பிறந்திருந்தால், அந்த நாட்டுக்காக விளையாடியிருப்பார். ஆனந்த் இந்தியாவைப் பெருமைப் படுத்துவதற்காகவே செஸ் விளையாடியது போல ஒரு மாயை கட்டமைக்கப்படுகிறது. இதில் துளியளவும் உண்மை கிடையாது. இல்லையென்றால் ஸ்பெயின் நாடு வழங்கிய குடியுரிமையை ஆனந்த் ஏன் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் ? ஆனந்த் ஸ்பெயின் நாட்டுக்குடியுரிமையை ஏற்றுக் கொண்ட காரணத்தாலேயே அவருக்கு ஐதராபாத் பல்கலைக்கழகம் வழங்கவிருந்த டாக்டர் பட்டம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும், ஆனந்த் உலக செஸ் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று, அதனால் 120 கோடி இந்தியர்களில் அவர் குடும்பத்தினரைத் தவிர வேறு யாராவது பயன்பெற்றார்களா என்றால் ஒருவரைக் கூட காட்ட முடியாது. அதற்காக வெற்றி பெற்ற ஆனந்தைப் பாராட்டக் கூடாதா என்றால் கண்டிப்பாக பாராட்டலாம். வாழ்த்தலாம். அதற்காக நமது வரிப்பணத்திலிருந்து எதற்காக 2 கோடியை எடுத்துத் தர வேண்டும் ? தற்போது உலக செஸ் சேம்பியன் ஆனதற்காக விஸ்வநாதன் ஆனந்துக்கு கிடைத்துள்ள பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா 1.40 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இன்றைய மதிப்புப் படி 7.70 கோடி ரூபாய். இந்த 7.70 கோடி ரூபாயிலிருந்து, விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர்களுக்கு பங்கு போட்டுத் தர வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. தமிழகத்தில் பிறந்ததால், ஆனந்த் தமிழக அரசுப் பள்ளிகளுக்கு நன்கொடை தரவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், சாலைகள் போடுவதற்கும், நமது அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், நமது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பதற்கும் வைத்திருக்கும் வரிப்பணத்திலிருந்து 2 கோடி ரூபாயை வாரி வழங்க ஜெயலலிதாவுக்கு யார் உரிமை கொடுத்தது ? இந்தப் பைத்தியக்காரத்தனத்தின் உச்சமாக, ஆனந்துக்கு பாரத ரத்னா வேறு கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறார் ஜெயலலிதா.
கருணாநிதியும் இந்த விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு சளைத்தவர் அல்ல. 1996ல் பதவியேற்றதும், கருணாநிதி செய்த முதல் காரியம் என்ன தெரியுமா ? நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்கு அரசுப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை வழங்கியதுதான். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கடனை அடைக்க முன்வரமாட்டார்களாம். ஆனால், ஏழைப்பாழைகள் கட்டும் வரிப்பணத்தில், நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பார்களாம். ‘
இது மட்டுமல்ல.. 1996ல் ஆட்சியில் இருந்த கருணாநிதி விஸ்வநாதன் ஆனந்தின் தந்தை விஸ்வநாத ஐயருக்கு அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்ற அடிப்படையில் சென்னை பெசன்ட் நகரில் இரண்டு க்ரவுண்டுகள் நிலத்தை அரசு விருப்புரிமைக் கோட்டாவில் ஒதுக்கினார். அப்போது விஸ்வநாதன் தந்தையோடு பெசன்ட் நகரில் ஒதுக்கீடு பெற்றவர்கள், அப்போது வீட்ட வசதித் துறைச் செயலாளராக இருந்து, சமீபத்தில் கூடங்குளம் அணு உலை குறித்து தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு உறுப்பினராக இருந்த எல்.என்.விஜயராகவனின் சகோதரி மற்றும் சகோதரர், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி காளிமுத்துவின் மகன், கவிப்பேரரசு வைரமுத்து, சன் டிவியில் செய்தி வாசிக்கும் நிர்மலா பெரியசாமி உள்ளிட்டோர்.
ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சர். ஒட்டுமொத்த தமிழகத்தின் வரி வருவாயை நிர்வகிக்கும் பொறுப்பு அவருக்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அரசு கஜானாவில் இருக்கும் பணம் அவரது சொந்தப் பணம் அல்ல. ஜெயலலிதாவுக்கு தனிப்பட்ட முறையில் விஸ்வநாதன் மீது அபிமானம் இருக்கலாம். செஸ் விளையாட்ட பிடித்தமானதாக இருக்கலாம். அப்படி இருந்தால், அவர் தன்னுடைய கொடநாடு எஸ்டேட்டையே விஸ்வநாதன் பெயருக்கு எழுதி வைக்கலாம். அது அவரது உரிமை. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால், மக்களின் வரிப்பணத்திலிருந்து இப்படி வாரி இறைப்பதற்கு ஜெயலலிதாவுக்கு மட்டுமல்ல.. … யாருக்குமே உரிமை இல்லை. எதற்கெடுத்தாலும் கஜானா காலி, மைனாரிட்டி திமுக அரசு கஜானாவை காலியாக வைத்து விட்டுப் போய் விட்டது என்று புலம்பும் ஜெயலலிதா, கஜானாவில் இருக்கும் ஒவ்வொரு பணத்தையும் கவனமாக செலவழிக்க வேண்டாமா ? இந்த இரண்டு கோடி ரூபாயை தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் கிராமங்களில் செஸ் பயிற்சி மையம் அமைக்க ஜெயலலிதா பயன்படுத்தியிருந்தால் அவரை சிறந்த நிர்வாகி எனலாம். ஒரு விஸ்வநாதன் போல ஓராயிரம் ஆனந்துகளை உருவாக்க ஜெயலலிதா முயற்சி எடுத்தால் அவரை வாழ்த்தலாம்.
விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்ற அன்றே அவருக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் ஜெயலலிதா.
இதுதான் ஒரு முதலமைச்சர் செய்ய வேண்டியது. நீங்கள் பெற்ற வெற்றியால் தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் என்று கூறியுள்ளார் அந்தக் கடிதத்தில். ஒரு முதலமைச்சர் இதை விட வேறு என்ன செய்ய வேண்டும். இத்தோடு விட்டிருக்கலாமே… அதை விடுத்து, கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் ஜெயலலிதாவின் நடவடிக்கை அவரின் பொறுப்பின்மையையே காட்டுகிறது.