போபால் 5 : மீதைல் ஐசோ சயனைடு
செவின் கண்டுபிடித்த பிறகு அதைத் தயாரிக்க ஒரு தொழிற்சாலை வேண்டுமே… அதற்காக யூனியன் கார்பைடு நிர்வாகம் தேர்ந்தெடுத்த இடம்தான் அமெரிக்காவில் உள்ள மேற்கு விர்ஜினியா மாகாணம். மேற்கு விர்ஜினியா மாகாணம் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம். அங்கு ஓடும் கனவாஹா நதி, அமெரிக்காவின் பெரிய நதிகளான ஓஹியோ மற்றும் மிஸ்ஸிஸ்ஸிப்பி நதிகளோடு இணையும் ஒரு நதி.
முதலாம் உலகப்போருக்கு முன்பு ஒரு சாதாரண இடமாக இருந்த மேற்கு விர்ஜினியாவில், நிலக்கரி, கச்சா எண்ணை, இயற்கை எரிவாயு போன்றவை கிடைப்பது முதலாம் உலகப்போரை ஒட்டி தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இருபதுகளில், பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கால்களை வலுவாக அந்த இடத்தில் ஊன்றின. டூபான்ட், மான்சாண்டோ, யூனியன் கார்பைடு போன்ற நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை அங்கே நிறுவத்தொடங்கின.
அந்த இடத்தில் அமைந்திருந்த தனது ஆராய்ச்சி நிலையத்திலேயே செவின் உற்பத்தி செய்ய தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்தது யூனியன் கார்பைடு. செவின் கண்டுபிடிக்கப்பட்ட போது கையாண்ட பார்முலா அதிக செலவு பிடிக்கும் என்பதால், அதிக செலவு பிடிக்காத ஆனால் ஆபத்தான ஒரு பார்முலா மூலம் செவினைத் தயாரிக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.
பாஸ்ஜீன் வாயுவை மோனோமீதாலமைன் வாயுவோடு சேர்த்தால் ஒரு புதிய பொருள் கிடைத்தது. அதுதான் மீதைல் ஐசோ சயனைட். இந்த மீதைல் ஐசோ சயனைடை ஆல்பா நாப்தாலோடு சேர்த்தால் செவின் தயாரிக்கலாம் என்ற புதிய பார்முலாவை கண்டுபிடித்தார்கள். புதிய பார்முலாவில் ஆபத்து இருந்தால் என்ன ? முதலாளிகளுக்கு ஆபத்தை விட லாபம் முக்கியமல்லவா ?
மனிதன் கண்டுபிடித்த ரசாயனங்களிலேயே மிக மிக ஆபத்தான ஒரு ரசாயனம்தான் மீதைல் ஐசோ சயனைட். யூனியன் கார்பைட் விஞ்ஞானிகள் மீதைல் ஐசோ சயனைடை பரிசோதனைக் கூடங்களில் இருந்த எலிகளின் மீது பரிசோதித்த போது, எலிகள் உடனடியாக இறந்ததைக் கண்டார்கள். எம்ஐசி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த மீதைல் ஐசோ சயனைடு காற்றில் பரவியபோது சுவாசித்தால் உடனடியாக சுவாசப்பையை கருக்கும். கண்களை குருடாக்கும் உடல் தோலை எரிக்கும் என்பதெல்லாம் யூனியன் கார்பைடு விஞ்ஞானிகளுக்குத் தெரியாததல்ல. ஆனால் லாபத்துக்கு முன் இந்த ஆபத்துக்கள் அவ்வளவு பெரியதா என்ன ? மேலும் எந்த முதலாளியும் அந்த தொழிற்சாலைக்குள் அமர்ந்து பணிபுரியப் போவதில்லையே .. …
மீதைல் ஐசோ சயனைடின் இந்த ஆபத்துக்களை நன்கு உணர்ந்திருந்த யூனியன் கார்பைடு நிறுவனம், ஆபத்துக்களை தவிர்ப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்கத்தான் செய்தது. ஒரு துளி எம்ஐசி தண்ணீரோடோ அல்லது இரும்புத் துகளோடோ சேர்ந்தால் கடுமையான விஷ வாயுவைப் பரப்பும் தன்மை படைத்தது என்பதை யூனியன் கார்பைடு நிர்வாகம் உணர்ந்தே இருந்தது. சிறு துளி வெளியானாலும் அதன் தாக்கம் மிக மோசமானதாக இருக்கும் என்பதை அந்நிறுவனம் உணர்ந்திருந்ததால் எப்போதும் அதனை உறை நிலையிலேயே (ஜீரோ டிகிரி) வைத்திருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தது. எம்ஐசி இருக்கும் எந்த கன்டெய்னராக இருந்தாலும், குளிர்சாதன வசதியோடு இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளப்பட்டது. மீதைல் ஐசோ சயனைடை வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லுகையில் லாரி ஓட்டுனர்களுக்கு ஏகப்பட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன. அந்த லாரி ஓட்டுனர்கள் வாகனத்தை ஓட்டிச் செல்கையில் போக்குவரத்து அதிகம் இல்லாத, பொதுமக்கள் அதிகம் வசிக்காத வழித்தடங்களில் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. கண்களில் எரிச்சல் ஏற்பட்டால் உடனடியாக வண்டியை நிறுத்தி அருகாமையில் உள்ள தொலைபேசியிலிருந்து யூனியன் கார்பைடின் எமெர்ஜென்சி எண்ணான 744 34 85 என்ற எண்ணை அழைக்க வேண்டும். உடனடியாக வாகனத்தை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்துச் சென்று நிறுத்த வேண்டும் என்பது போன்ற பல அறிவுரைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
இப்படி பல்வேறு அறிவுரைகளை யூனியன் கார்பைடின் ஊழியர்களுக்கு வழங்கிய அந்நிறுவனம், இதன் மூலம் ரசாயன உலகில் வெளிப்படையான முறையில் செயல்படும் நிறுவனமாக தன்னைக் காட்டிக் கொண்டது. ஆனால், எம்ஐசியின் பக்க விளைவுகள் குறித்து, யூனியன் கார்பைடு நிறுவனம் கார்னஜி மெல்லான் பல்கலைகழகம் மூலமாக நடத்திய ஆய்வின் முடிவுகளை யூனியன் கார்பைடு நிறுவனம் வெளியிடாமல் ரகசியமாகவே வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், குளிர் நிலையில் எம்ஐசி வைக்கப்படாமல் போனால் வெப்பத்தில் பல்வேறு துகள்களாக எம்ஐசி உடைந்து, அதிலிருந்து ஹைட்ரோ சயனைட் ஆசிட் என்ற வாயு உருவாகி அது உடனடியாக மரணத்தை விளைவிக்கத்தக்கது என்று கண்டறிந்தனர். இது தவிரவும் மேலும் பல்வேறு பக்கவிளைவுகள் குறித்து தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
எம்ஐசி தயாரிக்கப்படும், எடுத்துச் செல்லப்படும் எல்லா இடங்களிலும் ஒரு கையேடு ஒன்றை வழங்கி, அதன் ஆபத்துக்களையும், ஆபத்து நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லியிருந்தது யூனியன் கார்பைடு நிறுவனம். அந்தக் கையேட்டை பைபிள் போல எல்லா இடத்திலும் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்தக் கையேட்டில் கார்னஜி மெல்லான் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வு குறித்து எவ்வித குறிப்பும் இல்லை. பல்கலைகழகத்தில் அறிக்கையில் இருந்த ஆபத்துக்களை குறிப்பிடாமல் விட்டது கூட பரவாயில்லை. ஆனால் அந்த அறிக்கையில் ஒரு வேளை மீதைல் ஐசோ சயனைட்டை சுவாசித்தால் அதற்கான மருந்து என்னவென்பதைக் கண்டறிந்து சொல்லியிருந்தார்கள். சுவாசித்தவர்களுக்கு சோடியம் தியோசல்பேட் என்ற மருந்தை, ஊசி மூலம் செலுத்த வேண்டும் என்பதே அந்தப் பரிந்துரை. இந்த முக்கியமான பரிந்துரையை அந்தக் கையேட்டில் யூனியன் கார்பைட் சேர்க்காமல் விட்டது.
போபால் விபத்து நடந்த அன்று இரவு, போபாலில் இருந்த மருத்துவர்களுக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன சிகிச்சை கொடுக்க வேண்டும் என்பதே தெரியவில்லை. ஒரு வேளை, இந்தத் தகவல் அவர்களுக்குத் தெரிந்திருந்தால், சில நூறு உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாமோ ?
தொடரும்
பழைய பகுதிகளைப் படிக்க..