புதனன்று காலை கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் திமுக முன்னாள் அமைச்சரும் சேலம் மாவட்ட திமுக செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகத்தை சிறையில் சந்திக்க கருணாநிதி செல்வதாக இருந்தது. இதற்காக உரிய அனுமதி கடிதங்களை எழுதிக் கொடுத்து புழல் சிறைக்கு கருணாநிதி கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில் அவசர அவசரமாக வீரபாண்டி ஆறுமுகத்தை, புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றி உத்தரவிட்டது தமிழக அரசு. அதிகாலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, காலை 9 மணியளவில், காவல்துறை வாகனம் வீரபாண்டி ஆறுமுகத்தை ஏற்றிக் கொண்டு புழல் சிறையை விட்டுக் கிளம்பியது.
திமுகவில் இருக்கும் அமைச்சர்களிலேயே மோசமானவர்கள் என்று பட்டியல் எடுத்தால் அதில் முதலில் வருபவர் வீரபாண்டி ஆறுமுகமாகத்தான் இருக்க முடியும். வீரபாண்டி ஆறுமுகத்தின் அடாவடிகளை பட்டியல் போட்டால் இந்தக் கட்டுரை மிக நீண்டதொரு கட்டுரையாகி விடும். ஏழை உழைப்பாளி மக்கள் குடியிருந்த அங்கம்மாள் காலனி நிலத்தை சூறையாடியது ஒரு சிறப்பான உதாரணம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை சொத்துக்காக கொலை செய்த பாரப்பட்டி சுரேஷுக்கு இவர் கொடுத்த ஆதரவும் மக்கள் யாரும் மறக்க முடியாதது.
தமிழ்நாட்டில் விருப்புரிமைக் கோட்டா என்ற பெயரில் வீட்டு வசதி வாரிய வீடுகளை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கபளீகரம் செய்த விவகாரம் வெளியில் வந்து, அது குறித்து வீரபாண்டி ஆறுமுகத்திடம் கருத்து கேட்கச் சென்றபோது, “என்னய்யா… என் பொண்டாட்டி புள்ளைங்களுக்கு நான் வீடு வாங்கக் கூடாதா… அப்படித்தான் பண்ணுவேன் போய்யா” என்று கேமரா முன்பாகவே சொன்னவர் வீரபாண்டி ஆறுமுகம். நிரந்தரமாக சிறையிலேயே இருக்கத் தகுதியான ஒரு நபர் யாரென்றால், அது வீரபாண்டி ஆறுமுகமே.
வீரபாண்டு ஆறுமுகத்தின் மீது வரும் புகார்களை பரிசீலித்து, அதன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, ஆறுமுகத்தை கைது செய்வதற்கு காவல்துறைக்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது. ஆனால், தமிழக காவல்துறை வீரபாண்டியாரை சமீபத்திய கைதின் போது நடத்திய விதம் தமிழக அரசின் சிறுபிள்ளைத்தனத்தையே காட்டுகிறது. எவ்வளவு மோசமான குற்றவாளியாக இருந்தாலும் வீரபாண்டியாருக்கும் மனித உரிமைகள் உண்டு.
கருணாநிதி பிறந்தநாளுக்கு சென்னைக்கு வந்திருந்த வீரபாண்டி ஆறுமுகம், திங்களன்று காலை அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வீரபாண்டியாரை சாலை வழியாக சேலம் கொண்டு சென்று, திங்களன்று இரவு நீதித்துறை நடுவர் முன்பு முன்னிறுத்தி, சேலம் சிறைக்கு கொண்டு சென்றுள்ளனர். சேலம் சிறைக் கண்காணிப்பாளர் சேலம் சிறையில் இட நெருக்கடி (!!!???) என்று தெரிவித்த காரணத்தால், அன்று இரவே சேலத்திலிருந்து சென்னைக்கு சாலை வழியாக கொண்டு வந்து, செவ்வாய் அன்று விடியற்காலையில், சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகத்தை நேர்காணல் செய்ய, கருணாநிதி முடிவெடுத்து, செவ்வாயன்று மாலை இதற்கான விண்ணப்பம் மற்றும் இதர நடைமுறைகளை முடித்த பிறகு, புதனன்று காலை புழல் சிறைக்கு கிளம்ப கருணாநிதி எத்தனித்துக் கொண்டிருக்கையில், சென்னையிலிருந்து வேலூர் சிறைக்கு வீரபாண்டி ஆறுமுகத்தை மாற்றி உத்தரவிட்டிருக்கிறார்கள். வீரபாண்டி ஆறுமுகத்தை ஏற்றிக் கொண்டு வாகனம், காலை 9 மணிக்கே புழல் சிறையை விட்டுக் கிளம்பியிருக்கிறது.
வேலூர் சிறை வரை, சாலையில் பயணிக்க முடியாத காரணத்தால் கருணாநிதி அந்தச் சந்திப்பைக் கைவிட்டார்.
இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள கருணாநிதி, தனது அறிக்கையில் “ஆட்சிகள் வரும், போகும்; ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஜனநாயகப் போட்டியில் அது முடிவாகும். அது எந்த ஆட்சியாக இருந்தாலும், ஆட்சியிலே இருப்போர், மீண்டும் தாங்கள் மக்களைச் சந்திக்க நேரிடும் என்பதை மறந்து விட்டு பழி வாங்கும் செயலிலே தொடர்ந்து ஈடுபடுவது நல்லதல்ல.
குறிப்பாக தற்போது ஆட்சியிலே இருக்கும் அ.தி.மு.க., இப்படிப்பட்ட பழி வாங்கும் செயலிலே கச்சைக் கட்டிக் கொண்டு ஈடுபட்டுள்ளது. கழகத்தில் இருந்த அமைச்சர்கள் மீதும், முன்னணியினர் மீதும் அ.தி.மு.க. அரசு யாரிடமிருந்தோ ஒரு புகாரை எழுதி வாங்கிக் கொண்டு, சட்டப்படியான நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல், அவர்கள் மீது வழக்குத் தொடுத்து கைது செய்து சிறையிலே அடைக்கிறார்கள். அவர்களை நீதிமன்றம் ஜாமீனிலே வெளியே அனுப்பினால், அடுத்த சில மணி நேரத்தில் வேறு ஒருவரிடமிருந்து வேறு ஒரு புகாரைப் பெற்று, அந்தப் புகாரின் கீழே கைது செய்ததாகக் காட்டி சிறையிலே தொடர்ந்து இருக்கச் செய்கிறார்கள். இவ்வாறு இரண்டு மூன்று வழக்குகளில் ஜாமீனில் வெளியே வந்தால், உடனே அவர்கள் மீது “குண்டர்” சட்டத்தைப் பயன்படுத்தி ஜாமீனிலே வெளியே வரவிடாமல் செய்கிறார்கள்.
இந்த நிலையில் என்னுடைய பிறந்த நாளையொட்டி கழகத்தினரிடையே பெரிய எழுச்சி தோன்றியதைப் பொறுத்துக் கொள்ள முடியாமலும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு மக்களிடையே இருந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமலும், ஆளுங்கட்சியான அ.தி.மு.க. இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்துள்ளது. குறிப்பாக சேலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்திற்காக, அதே நாளில் சென்னையிலே என் பிறந்த நாள் விழாவிலே கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது இந்த ஆட்சியினர் ஆறாவதாக ஒரு வழக்கைத் தொடுத்து, சென்னையிலே அவரைக் கைது செய்து, சென்னையிலிருந்து காரிலேயே அவரை சேலத்திற்கு அழைத்துச் சென்று, அங்கே ரிமாண்ட் செய்த பிறகு, அவரை சேலத்திலேயே சிறையிலே அடைக்காமல், அங்கே சிறையில் இவர் ஒருவரை வைக்க இடம் இல்லை என்றொரு காரணத்தைக் கற்பித்து, அங்கிருந்து மீண்டும் காரிலேயே சென்னைக்கு அழைத்து வந்து புழல் சிறையிலே அடைத்திருக்கிறார்கள்.
இவ்வளவிற்கும் அவர் ஒரு இதய நோயாளி. மருத்துவர்களிடம் தொடர்ந்து சிகிச்சையிலே இருப்பவர். அவரை இந்த அளவிற்கு சென்னைக்கும் சேலத்திற்குமாக இழுத்தடித்திருக்கிறார்கள். ஏன் இந்த வெறுப்பு அரசியல்? இது அதிகார துஷ்பிரயோகம் அல்லாமல் வேறு என்ன? இந்த நிலையில் புழல் சிறையிலே இருந்த அவரைப் பார்ப்பதற்காக நான் நேற்றைக்கு முயற்சித்த போது செவ்வாய்க்கிழமையில் அவரைப் பார்க்க முடியாது, புதன்கிழமை தான் பார்க்க முடியும் என்று தெரிவித்தார்கள். எனவே இன்று (6-6-2012) காலையில் வீரபாண்டியாரைப் பார்ப்பதற்காக நானும், சட்டமன்ற தி.மு.க. தலைவர், மு.க. ஸ்டாலினும், சட்டப் பேரவை உறுப்பினர், முன்னாள் அமைச்சர் துரைமுருகனும், நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவனும் முறையாக உரிய அதிகாரிகளுக்கு 5-6-2012 அன்றே விண்ணப்பித்திருந்த நிலையிலே – அவரை நாங்கள் பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தோடு இன்றையதினம் காலை 7 மணி அளவிலே வீரபாண்டி ஆறுமுகத்தை புழல் சிறையிலேயிருந்து வெளியே அழைத்துச் சென்று விட்டார்கள்.
அவரைச் சேலம் சிறைச்சாலைக்கு கொண்டு செல்கிறார்களா, வேலூர் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்கிறார்களா என்றே தெரியாத நிலை. எந்த அளவிற்கு அ.தி.மு.க. ஆட்சியினர் நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு இதை விட வேறு எடுத்துக்காட்டுத் தேவையில்லை. ஏன் இந்த பழி வாங்கும் போக்கு? சேலத்திலே குற்றம் நடைபெற்றதாகச் சொல்லப்படும் நேரத்தில், வீரபாண்டி ஆறுமுகம் சென்னையிலே என் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியிலே கலந்து கொண்டிருக்கிறார்.
அப்படியிருந்தும் அவரை கைது செய்து இப்படியெல்லாம் இழுத்தடிப்பது முறை தானா என்பதை தமிழ்நாட்டு மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.” என்று கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சிகள் ஆளுங்கட்சியைக் குறை கூறுவதும் விமர்சனம் செய்வதும், வழக்கமான ஒன்றுதான் என்றாலும், தேவையற்ற விமர்சனங்களுக்கு வழிவகுக்காமல் ஆட்சி நடத்துவதே ஒரு ஆட்சியாளரின் சிறப்பு.
வீரபாண்டியார் விவகாரத்தை எடுத்துக் கொண்டால், அவரை சேலம் சிறையிலேயே அடைத்திருக்க வேண்டும். ஒரு கைதியை அவரது உறவினர்கள் இருக்கும் இடத்துக்கு அருகாமையில் அடைக்க வேண்டும் என்று பல உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன. வீரபாண்டி ஆறுமுகத்தை சேலம் சிறையில் அடைத்தால், திமுகவினர் அடிக்கடி சிறைக்கு வந்து, சிறை அதிகாரிகளுக்கு தொந்தரவு கொடுக்க நேரிடும் என்று கருதினாலும், புழல் சிறைக்கு எடுத்து வந்த பிறகு ஏன் மாற்ற வேண்டும் ?
புழல் சிறை கண்காணிப்பாளர் கருப்பண்ணன், சிறைத்துறை கூடுதல் டிஜிபி டோக்ராவுக்கு எழுதிய கடிதத்தில், புழல் சிறையில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் இருப்பதால் மற்றொரு முக்கியப் பிரமுகரான வீரபாண்டி ஆறுமுகத்தை வைக்க இடமில்லை என்பதே. புழல் சிறை மிகச் சிறப்பாக கட்டுமானம் செய்யப்பட்ட சிறை. வீரபாண்டி ஆறுமுகத்தைப் போல மேலும் 500 முக்கியப் பிரமுகர்களை வைப்பதற்கு புழல் சிறையில் இடமிருக்கிறது. மேலும், தற்போது புழல் சிறையில் இருக்கும் முக்கியப் பிரமுகர்கள் என்று எடுத்துக் கொண்டால் இரண்டே பேர்தான் இருக்கிறார்கள். ஒருவர் முன்னாள் அமைச்சர் கேபிபி.சாமி மற்றும் ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார். இவர்களைத் தவிர குறிப்பிடும்படியான முக்கியப் பிரமுகர்கள் புழல் சிறையில் இல்லை.
அப்படியே சிறை அதிகாரிகளின் கூற்றுப்படி விசாரணைக் கைதிகளை வைக்கும் புழல் சிறையில் முக்கியப் பிரமுகர்கள் அதிகம் இருந்தாலும், தண்டனைக் கைதிகளை வைக்கும் சிறை 1ல் வைத்திருக்கலாமே…
இந்தக் காரணம் பொய்யான காரணம் என்பது வெட்ட வெளிச்சம். வீரபாண்டி ஆறுமுகத்தை சிறையில் சந்திக்கச் செல்லும் கருணாநிதியை சந்திக்க விடாமல் தடுப்பது மட்டுமே. ஒரு அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் அதன் அற்பத்தனத்தையும் சிறுபிள்ளைத்தனத்தையுமே காட்டுகிறது.
1996ல் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ஜெயலலிதாவை அவரது கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட யாருமே சந்திக்க தடை செய்யப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் சட்டபூர்வமானதாக இருக்க வேண்டுமே ஒழிய, இது போல எதேச்சதிகாரமான நடவடிக்கைகளாக இருக்கக் கூடாது.
ஜெயலலிதா அவர்களே… வீரபாண்டி ஆறுமுகத்தை புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்ற வழங்கப்பட்ட உத்தரவுக்கான முடிவை நீங்கள் எடுத்திருப்பீர்கள் என்று நம்புவதற்கில்லை. ஒரு முதலமைச்சரான உங்களுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும். உங்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக உங்கள் அருகில் இருக்கும் அதிகாரிகள் செய்யும் சிறுபிள்ளைத்தனமான காரியமே இது. ஆனால், இது போன்ற காரியங்களை நீங்கள் அங்கீகரித்தீர்களேயானால், உங்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று மற்ற அதிகாரிகளும் இது போல அற்பத்தனமான காரியங்களில் ஈடுபட இது தூண்டுகோலாக அமையும். கைது செய்யப்பட்ட வீரபாண்டி ஆறுமுகத்தை இது போல அலைக்கழிப்பது, அவருக்கு அனுதாபத்தைக் கூட ஏற்படுத்தும்.
மேன்மேலும் வளர்ந்து அகில இந்திய அளவில் பெரிய அரசியல்வாதியாக வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு உண்டு. அப்படிப்பட்ட எண்ணத்தோடு இருக்கும் நீங்கள், இது போன்ற அற்பத்தனமான காரியங்களை அனுமதித்தீர்களேயானால், இருக்கும் ஆதரவையும் நீங்கள் இழக்க நேரிடும்.
ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.
கலைஞர் உரை:
மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்.
மு.வ உரை:
மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.