மெய்யாலுமா
ஆடல்வல்லான் நடனம் புரிந்த பஞ்ச சபைகள்- ரத்தின சபை, கனக சபை, ரஜத சபை, தாமிர சபை, சித்திர சபை ஆகியவை. இந்த ஐந்து சபைகளில் நடராஜப் பெருமான் இடது பாதத்திற்கு பதிலாக வலது காலைத் தூக்கி ஆடியது எந்த சபையில் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அந்த சபை இருக்கும் நகரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அமைச்சரவையிலும் முக்கியமான துறைக்கு அமைச்சராக இருப்பவர் அவர். அவரை சந்திக்க அந்த மாநகரத்து வியாபாரிகள் சங்கத்தினர் தலைநகரத்துக்குச் சென்றார்களாம். அமைச்சரைப் பார்க்க நேரம் கேட்டபோது, உதவியாளர் சொன்ன பதில் அவர்களை அதிர்ச்சி அடைய வைத்துவிட்டதாம்.
“அமைச்சர் கிரிக்கெட் பெட்டிங்கில் பிஸியாக இருக்கிறார், இப்போது பார்க்க முடியாது’ என்கிற பதிலைக் கேட்டு, தொழிலதிபர்கள், “புணே வாரியர்ஸ்’, “டெக்கான் சார்ஜர்ஸ்’, “சென்னை சூப்பர் கிங்ஸ்’, “பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ்’, “டெல்லி டேர்டெவில்ஸ்’, “கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ பாணியில் “மதுரை அஞ்சா நெஞ்சர்ஸ்’ என்று அடுத்த ஐபிஎல் போட்டியில் இவரது குடும்பத்தினர் களமிறங்கப் போகிறார்களோ என்னவோ என்று தங்களுக்குள் சொல்லிச் சிரித்தார்களாமே, மெய்யாலுமா?
*******************
“ஆ’வென்று அனைவரையும் வாயைப் பிளக்க வைத்த ராஜ முறைகேடில் முதல் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு இப்போது ஜாமீனில் வந்திருப்பவருக்கு இத்தனை வரவேற்பும் மரியாதையும் கொடுப்பதற்குக் காரணம், அவர் தங்களைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காகத் தானாம். “என் வீட்டிலும், என் உறவினர்கள் வீட்டிலும் சோதனை இட்டும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை, எதையும் கைப்பற்றவில்லை’ என்று அவர் பத்திரிகையாளர்களிடம் சொன்னதன் பொருள், தான் இந்த விஷயத்தில் வெறும் இணைப்பாக மட்டுமே இயங்கி இருக்கிறேன் என்பதுதானாம். மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் தனது உதவியாளர் வீட்டிற்குச் சென்றது முதல், சுப்பிரமணிய சுவாமி சொன்னதுபோலத் தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்கிற பயத்தில் தன்னைச் சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறாராமே அவர், மெய்யாலுமா?
*******************
புதுவையில் அந்த ஹோண்டா அக்கார்ட் காரையும் அதன் பதிவு எண்ணான 1600ஐயும் பார்த்துக் காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். அந்த யூனியன் பிரதேசமே அவரது அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது என்பதால் அவரது கார் அங்குள்ள காவல் துறையினருக்குப் பரிச்சயமானதுதான். அவர்கள், காரைப் பார்த்ததில் அதிர்ச்சி அடையவில்லை. அந்தக் காரில் உற்சாக பானம் ஏற்றப்படுவதைப் பார்த்ததில்தான் அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.
கதர்ச்சட்டைக் கட்சிக்காரர், அவ்வப்போது காந்தி குல்லாய் அணிந்து “போஸ்’ கொடுப்பவர், தில்லி அரசியல் தலைவர்கள் மத்தியில் வெள்ளை வெளேரென்று வேட்டி சட்டையில் வலம் வருபவர், நாடாளுமன்றத்தில் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் திருக்குறளைக் கூறித் தமிழின் பெருமையைப் பறை சாற்றுபவர், அவரது காரில் உற்சாக பானம் ஏற்றப்படுகிறதே என்பதுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம்.
பக்கத்து மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அந்த அமைச்சர் ரயிலேறித் தனது தொகுதிக்குப் பயணமாகிவிட, அவரது கார் மட்டும் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்ததாம். அதில், ஓட்டுநருடன், இந்நாளில் அமைச்சருக்கும் மகனுக்கும் அணுக்கத் தொண்டராக இருக்கும் பெரும் செல்வத்துக்கு அதிபதியான ஒரு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பயணித்துக் கொண்டிருந்தாராம். அவர்கள் இருவரும்தான் உற்சாக பானம் வாங்கி அமைச்சரின் காரில் சென்னைக்குக் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறதே, மெய்யாலுமா?
*******************
சென்னை மாநகரப் போக்குவரத்துக் காவல் பிரிவுக்காக ஒருங்கிணைந்த போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, எல்லா போக்குவரத்து சிக்னல்களிலும் பொருத்தப்பட இருக்கும் கேமராக்கள் மூலம் விதிகளை மீறும் வாகனங்களின் எண்கள் படம் பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான டெண்டரை எடுத்திருக்கும் நிறுவனம், கடந்த ஆட்சியில் செல்வாக்காக வளைய வந்த இரண்டு உளவுத் துறை அதிகாரிகளின் பினாமி நிறுவனமாமே… இந்த நிறுவனத்துக்காக டெண்டரை முடிவு செய்த அதிகாரியின் மகனுக்குக் கடந்த ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு கோட்டாவில் இடம் வாங்கிக் கொடுத்ததற்குக் கைமாறாக அவர் செய்திருக்கும் உதவிதானாமே இது… “பாருய்யா, ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை’ என்று காவல் துறை வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்களாமே, மெய்யாலுமா?
*******************
இந்திய அரசுப் பணி மற்றும் இந்தியக் காவல் துறைப் பணியில் இருக்கும் அதிகாரிகளுக்காகக் கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் சர்ச்சையில் சிக்கின. ஏற்கெனவே அரசு கோட்டாவில் வீடு ஒதுக்கீடு பெற்ற அதிகாரிகளுக்கு இந்தத் திட்டத்தில் மீண்டும் வீடுகள் ஒதுக்கக்கூடாது என்று எதிர்ப்பு வலுத்தது. அப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட 70 அதிகாரிகளின் ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டன.
இப்போது, இந்தத் திட்டத்தையே ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. ஒருவேளை, உயர்நீதிமன்றம் இந்தத் திட்டத்தையே ரத்து செய்துவிட்டால் என்ன செய்வது என்கிற குழப்பத்தில் இருக்கிறார்களாம் உயர் அதிகாரிகள். இப்படி ஒரு இடத்தில் இத்தனை மலிவான விலையில் வீடு கிடைக்காது என்பதால், உயர்நீதிமன்றம் ஒட்டுமொத்தத் திட்டத்தையே ரத்து செய்யாமல் இருக்க என்ன வழி என்று அதிகாரிகள் மத்தியில் கலந்தாலோசனை நடந்து வருகிறதாம்.
ரத்து செய்யப்பட்ட வீடுகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஒதுக்க அரசு முடிவெடுத்திருப்பதாக விசாரணையின்போது நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் என்று யோசிக்கிறதாமே அதிகாரிகள் தரப்பு… இந்த விஷயத்தில் முதல்வரின் சம்மதம் பெறுவது யார் என்பதுதான் இன்னும் முடிவு செய்யப்படவில்லையாமே, மெய்யாலுமா?
*******************
சென்னை மெரீனா கடற்கரையில் காலாற நடக்கலாமே என்று போனால், முன்னே கம்பீரமாக எழுந்து நிற்கும் அந்த சரித்திரப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தைப் பார்க்காமல் இருக்க முடியுமா? இந்தியாவில் 1857-ல் மூன்று பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன.. முதலாவதாக ஜனவரி 24 ஆம் தேதி கொல்கத்தா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. அடுத்தாற்போல, மும்பையில் ஜூலை 18 ஆம் தேதி பாம்பே பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. மூன்றாவதாக, செப்டம்பர் 5 ஆம் தேதி சென்னைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இப்போது தமிழகத்தில் அரசுப் பல்கலைக்கழகங்கள் மட்டுமே 16.
இந்தப் பல்கலைக்கழகங்களில் தோல்வி அடைந்தவர்களை வெற்றி பெறச் செய்ய ஒரு சுலப வழி இருக்கிறதாமே… மதிப்பெண்கள் மறு ஆய்வுக்கு விண்ணப்பித்துவிட்டுப் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விட்டால், தோல்வி அடைந்தவர்கள் வெற்றி பெற்று விட முடியும் என்று மெரீனாக் கடற்கரையில் பட்டாணி சுண்டல் விற்றவர்களுக்குக்கூடத் தெரிந்திருக்கிறதாமே.. இந்த முறைகேடில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் துணைவேந்தர் தவிக்கிறாராமே.. பல்கலைக்கழகச் சட்ட விதிகளின்படி, காவல் துறைக்கோ, விசாரணைக்கோ உத்தரவிட முடியாதாமே… இதே நிலைமைதான் ஏனைய பல்கலைக்கழகங்களிலும் இருப்பதாகச் சொல்கிறார்களே, இவையெல்லாம் மெய்யாலுமா?
நன்றி தினமணி