சவுக்குக்கு மருத்துவமனை என்றாலே எப்போதும் அலர்ஜிதான். மருந்து வாசனை, துர்நாற்றம், இவை எல்லாவற்றையும் தாண்டி, மருத்துவமனைக்குச் சென்றாலே, துணிகளை அவிழ்த்து பட்டாபட்டி அண்டர்வேரோடு அனுப்பி விடுவார்கள் என்று எப்போதும் ஒரு எண்ணம் உண்டு.
நினைவு தெரிந்த நாளாக பெரிய மருத்துவமனைகளுக்குச் சென்றதில்லை. 90 மற்றும் 91ல், தந்தை சென்னை அரசுப் பொதுமருத்துவமனையில் இருந்தபோது, அரசு மருத்துவமனைகளின் லட்சணத்தையும், அந்த அரசு மருத்துவர்கள், நோயாளிகளை ஜந்துக்களைப் போல (விதிவிலக்குகள் உண்டு) நடத்துவதையும் பார்த்ததுண்டு. அதன் பிறகு மருத்துவமனைக்குச் செல்ல நேர்ந்ததில்லை.
98ல் என்று நினைவு. தாயாருக்கு முதுகெலும்பில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி, சென்னை, எருக்கஞ்சேரியில் உள்ள பவித்ரா என்ற மருத்துவமனையில் அனுமதிக்க நேர்ந்தது. பல்வேறு சோதனைகளைச் செய்த பிறகு, அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். அப்போது அரசுத் துறையில் இள நிலை உதவியாளர் பதவி. வரும் சம்பளம், வாழ்வை ஓட்டவே சரியாக இருக்கும். அந்த பவித்ரா மருத்துவமனை தொடங்கிய புதிது. அந்த மருத்துவமனையின் முதலாளியாக இருந்த இளைய மருத்துவர் அழைத்தார். “தம்பி. உங்கள் தாயாருக்கு அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும். நீ என்ன வேலை பார்க்கிறாய். குடும்பத்தில் எத்தனை பேர்” என்று கேட்டதற்கு, தந்தை இறந்து விட்டார். சம்பாதிப்பது நான் மட்டுமே என்று சொன்னதும், இந்த அறுவை சிகிச்சைக்கு, நிபுணர்கள் கட்டணம், தங்கும் கட்டணம், மருந்துகள் அனைத்தும் சேர்த்து 35 ஆயிரம் ஆகும் என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டதும், திரு திருவென்று விழித்ததைப் பார்த்த அவர், நிபுணர்களின் கட்டணத்தை என்னால் குறைக்க இயலாது. எங்கள் மருத்துவமனைக் கட்டணத்தைக் குறைத்துக் கொள்கிறேன். நாளை மாலைக்குள் 22 ஆயிரம் கட்டினால் போதும். நாளை மறுநாள் அதிகாலை அறுவை சிகிச்சை என்றார். மறுநாள் மாலைக்குள் 10 ஆயிரம் மட்டுமே புரட்ட முடிந்தது. ஆனால், அதற்கு மறுநாள் அதிகாலை அறுவை சிகிச்சை நடந்தது. இரண்டு தவணைகளில் அந்தத் தொகையை செலுத்தியபோது, அவர் ஒன்றுமே சொல்லவில்லை. அறுவை சிகிச்சை மற்றும், அதன் பிறகு தங்கும் நாட்கள் மொத்தம் ஏழு. ஆனால் கூடுதலாக இரண்டு நாட்கள் தங்கியிருந்ததற்கு அந்த மருத்துவர், அதிகப்படியான தொகை வாங்கவேயில்லை.
அதன் பிறகு மருத்துவமனைக்குச் செல்வதற்கு எவ்விதத் தேவையும் நேரவேயில்லை. சாதாரண ஜுரம், ஜலதோஷம் வந்தால், மருந்துக் கடைகளில் க்ரோசினோ அல்லது வேறு மாத்திரைகளோ வாங்கி சரிசெய்து கொள்வதுண்டு. அதிகம் போனால், வீட்டில் சுக்குக் கஷாயம் வைத்துக் குடிப்பதுண்டு. மருத்துவமனை பக்கம் தலைவைத்துப் படுப்பதேயில்லை.
1999ல், சென்னை அரும்பாக்கம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, வேகமாக குறுக்குச் சாலையிலிருந்து வந்த வாகனம் இடித்ததில், மயங்கிக் கீழே விழ நேர்ந்தது. அந்த விபத்தில் இடது கால் முட்டியில் ஜவ்வு கிழிந்து விட்டது. காரில் வந்து இடித்தவர், ஆந்திர மாநில கடற்பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு உயர் அதிகாரி. அவர் தன்னுடைய காரில், அருகாமையில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, மருத்துவமனையில் செலவான மொத்த தொகையையும் அவரே கட்டி, தின்பதற்கு கேக் வாங்கிக் கொடுத்து விட்டுச் சென்றார். மறுநாளே மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப நேர்ந்தது. அதன் பிறகு, நண்பர்கள், கிழிந்த அந்த ஜவ்வை அகற்றாவிட்டால் கடும் பிரச்சினை ஏற்படும் என்று கூறியவுடன், ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்த ஒரு மூட்டு சிகிச்சை நிபுணரை பார்க்க நேர்ந்தது. அவர், அப்போது ஆர்த்ராஸ்கோபி என்ற புதிய சிகிச்சை முறை வந்திருப்பதாகச் சொன்னார். அது என்னவென்றால், சிறிய கம்பியை அடிபட்ட மூட்டில் நுழைத்து, அந்த கிழிந்த ஜவ்வை உறிஞ்சி எடுத்து விடுவார்களாம். சரி. அதன்பிறகு நன்றாக நடக்கலாமா, ஓடலாமா என்று கேட்டால், வாழ்நாள் முழுமைக்கும், சுமை தூக்கக் கூடாது, ஓடக்கூடாது என்று கூறினார். சரி இந்த அறுவை சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டால் 40 ஆயிரம் ரூபாய் என்றார். 40 ஆயிரம் ரூபாயை செலவழித்து காலம் முழுமையும் ஓடாமல் இருப்பதற்கு 40 ஆயிரத்தை வங்கியில் போட்டு விட்டு இப்படியே இருந்து விடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. 40 ஆயிரம் என்பது 99ல் ஏழு மாதச் சம்பளம். அந்த அறுவை சிகிச்சை செய்யாமல் இன்று வரை நன்றாக ஓட முடிகிறது. எடை தூக்க முடிகிறது.
அதன்பிறகு எப்போதும் மருத்துவமனை பக்கம் செல்வதற்கு அவசியம் ஏற்பட்டதேயில்லை. வேறு ஏதாவது சிறிய உடல்நலக்குறைவு ஏற்பட்டால், சித்த மருத்துவமோ, ஹோமியோபதி மருத்துவமோ, அல்லது மருந்துக் கடையில் மருந்து வாங்கியோ சரிசெய்து கொள்வதே வழக்கமாக இருந்தது.
கடந்த ஒரு மாதகாலமாக இடது காதில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. அந்த அடைப்பு, ஜலதோஷம் பிடித்தாலோ, அல்லது குளிக்கையில் காதில் தண்ணீர் இறங்கினாலோ வரும் அல்லவா… அது போன்ற ஒரு அடைப்பு. அந்த அடைப்பு தொடர்ந்தும் இருப்பதில்லை. ஒரு நாளில் சில நிமிடங்கள் இருந்து விட்டுப் போய் விடும். வழக்கமாக இது போன்ற அடைப்பு வந்தால், ஓரிரு நாளில் போய் விடும். ஆனால் இந்த அடைப்பு ஒரு மாதமாக இருப்பதால், மருத்துவமனைக்குப் போகலாமா வேண்டாமா என்ற ஊசலாட்டத்தோடு மேலும் 15 நாட்கள் கடந்து விட்டன.
இந்த நேரத்தில், நண்பரின் மருமகனுக்கு இதே போல காதில் அடைப்பு ஏற்பட்டதும் அவர் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அவரைப் பரிசோதித்த மருத்துவர், இது போல அடைப்பு ஏற்பட்டால் உடனடியாக கவனிக்காவிட்டால் நிரந்தர செவிட்டுத்தன்மை ஏற்பட்டு விடும் என்று கூறிவிட்டு, அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். இந்தத் தகவலை அவர் கூறியதும், ஒரு ஸ்பீக்கர் அவுட்டாகி விட்டால், நிலைமை சிக்கலாகி விடும் என்று, உடனடியாக மருத்துவமனை செல்லலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
சரி எந்த மருத்துவமனை செல்லாம் என்றால், தினந்தோறும் நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் கேகேஆர் காது மூக்குத் தொண்டை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற ஒன்று இருக்கிறதே… அங்கே எல்லாம் நிபுணர்களாக இருப்பார்கள் என்ற எண்ணத்தில் அந்த மருத்துவமனைக்கு மாலை சென்றது சவுக்கு.
மருத்துவமனையில் நுழைய வண்டியை நிறுத்தும்போதே ஒரு பிஎம்டபிள்யூ கார், ஒரு ஹோண்டா சிட்டி கார், மற்றொரு ஸ்கார்பியோ ஆகிய வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. இதைப் பார்த்தவுடனேயே பணக்கார மருத்துவமனைக்கு வந்து விட்டோமோ என்ற தயக்கம் ஏற்பட்டாலும், சரி பார்த்து விடலாம் என்று உள்ளே நுழையும்போதே இடது பக்கத்தில் மருந்துக் கடை இருந்தது. இதைப் பார்த்தவுடன் இந்த கடையில் மருந்து வாங்காவிட்டால், சென்னை நகரில் எந்தக் கடையிலும் கிடைக்காத மருந்தை எழுதிக் கொடுப்பார்கள் என்ற எண்ணம் வந்ததை தவிர்க்க முடியவில்லை.
வரவேற்பில் அமர்ந்திருந்த இரு பெண்களுக்கும் ஒரு பச்சை நிறத்தில் இருந்து மைசூல் சில்க் போன்ற ஒரு புடவையை சீருடையாக கொடுத்திருந்தார்கள். அந்தப் பெண்ணிடம் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்றவுடன் அப்பாயின்ட்மென்ட் இருக்கிறதா என்றார். இல்லை என்றவுடன், இந்தப் படிவத்தை பூர்த்தி செய்யுங்கள். முதலில் உங்களை ஜுனியர் டாக்டர் பார்ப்பார். பிறகுதான் பெரிய டாக்டர் பார்ப்பார் என்றார். எல்லா டாக்டரும் ஈஎட்டி ஸ்பெஷலிஸ்ட்தானே என்றதும், இங்கே எல்லாருமே ஈஎன்டிதான் என்றார் (அப்ப நீங்க ?) அந்தப் படிவத்தில், பெயர், வயது, பிறந்த தேதி, முகவரி, நிரந்தர முகவரி, ஈமெயில் ஐடி, தொலைபேசி எண், வேலை ஆகிய அனைத்து விபரங்களையும் கேட்டிருந்தார்கள். வரும் நோயாளிகள் எந்தத் தேதியில் பிறந்தால் இவர்களுக்கென்ன ? என்ன தொழில் பார்த்தால் இவர்களுக்கென்ன ? ஒரு வேளை தொழிலுக்குத் தகுந்தாற்போல பீஸ் வாங்குவார்களோ…. ? கூலி வேலை செய்பவர் என்றால், கட்டணம் வாங்காமல் மருத்துவம் செய்யப்போவதில்லை. பிறகு ஆண்டிக்கு எதற்கு அம்பாரக் கணக்கு ?
அந்தப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்ததும் கட்டணம் செலுத்தி விட்டு வாருங்கள் என்றார். கட்டணம் எவ்வளவு என்று கேட்டதற்கு 350 ரூபாய் என்றார். பர்ஸில் 450 ரூபாய் இருந்ததும், தெம்பாக இருந்தது. பணத்தை கட்டி விட்டு வந்ததும் அமருங்கள், மருத்துவர் அழைப்பார்கள் என்றார். அந்த வரவேற்பறையில் அமர்ந்திருந்தபோது, குழந்தைகளை அழைத்து வந்தவர்கள், முதியோர் என்று பலதரப்பட்டவர்களும் இருந்தார்கள். வண்ண வண்ண மாடர்ன் உடை அணிந்து, வெள்ளைக் கோட்டு போட்டுக் கொண்டு, அழகான பெண் டாக்டர்கள், இங்கேயும் அங்கேயும் நடந்து கொண்டு இருந்தார்கள்.
இவ்வளவு இள வயதில் ஈஎன்டி ஸ்பெஷலிஸ்டாக இருக்கிறார்களே இவர்கள் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியிலோ அல்லது ஜெகதரட்சகன் கல்லூரியிலோ படித்திருப்பார்களோ என்று தோன்றியது. ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி என்ன இளப்பமா ? அது நல்ல மருத்துவக் கல்லூரி இல்லையா என்று கேட்பீர்கள். ராமச்சந்திரா பல்கலைகழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ஒரு மெடிக்கல் சீட்டுக்கு 40 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கேபிடேஷன் பீஸ் கேட்டதை 2009ம் ஆண்டு டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெட்ட வெளிச்சமாக்கியது.
இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த சிபிஐ, இதில் சம்பந்தப்பட்ட அக்கல்லூரியின் துணைப் பதிவாளர் சுப்ரமணியனைக் கைது செய்தது. சுப்ரமணியன் கல்லூரி வளாகத்துக்குள்ளேயே நுழையக்கூடாது என்ற நிபந்தனையில் இவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னாளில் விதிகளைத் தளர்த்தி, கல்லூரிக்குள் நுழையலாம், ஆனால் மாணவர் சேர்க்கை தொடர்பான எந்த வேலையும் செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றார் சுப்ரமணியன். கல்லூரிக்குள் நுழையலாமாம். ஆனால் மாணவர் சேர்க்கையை கவனிக்கக் கூடாதாம். அவர் கல்லூரிக்கு உள்ளே, மாணவர் சேர்க்கை தொடர்பான வேலைகளைப் பார்க்கிறாரா, அல்லது மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறாரா என்பதை உயர்நீதிமன்ற நீதிபதியோ, அல்லது சிபிஐ அதிகாரிகளோ கண்காணிக்க முடியுமா ? கல்லூரிக்குள் நுழையக்கூடாது என்று தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன். கல்லூரிக்குள் நுழையலாம் என்று உத்தரவு பிறப்பித்ததும் அவரே. நீதிபதி வாழ்க. அவர் கொற்றம் வாழ்க…. கொடை வாழ்க…
கல்லூரிக்குள் நுழையலாம் என்று அனுமதி கிடைத்த நாள் முதல், தன் வேலையைத் தொடங்கிவிட்டார் சுப்ரமணியன். முதலில் அவர் கை வைத்தது எம்பிபிஎஸ் படிப்புக்கு பிறகு, மாணவர்கள் மேற்கொள்ளும் நிபுணர்களுக்கான படிப்பு நுழைவுத் தேர்வில். தன் கைவரிசையைக் காட்டினார் சுப்ரமணியன். ட்ராப்பிக்கானா என்ற குளிர்பான நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருப்பவரின் மகள் ஷில்பா மேனன். இவர் எம்பிபிஎஸ் படிக்கையில் நான்கு தங்க மெடல்களை வாங்கிய ஒரு சிறந்த மாணவி. அவர் மேற்படிப்புக்கான நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று அறிவித்திருக்கிறது ராமச்சந்திரா பல்கலைக்கழகம். சரண்யா ரவீந்திரன் என்று மற்றொரு மருத்துவ மாணவி. அவரும் எம்பிபிஎஸ் தேர்வுகளில் நான்கு தங்க மெடல்களைப் பெற்றவர். இவரும் தேர்ச்சி பெறவில்லையாம். சரி. ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் மருத்துவ மேற்படிப்புக்கு யாருக்குத்தான் அனுமதி ? தலித் இனத்தின் போராளி மள்ளர் இனத்தின் வீரத் தலைவன், வீரத் தேவேந்திரன் ஜான் பாண்டியனின் மகள் வியான்கோ பாண்டியனுக்கு மருத்துவ மேற்படிப்புக்கு இடம் வழங்கப் பட்டுள்ளது. மேற்படிப்புக்கான நுழைவுத்தேர்வை இவர் எழுதவில்லை என்பது சிறப்பு. இந்த தில்லுமுல்லுகள் அத்தனையும் அரங்கேற்றி வருபவர்… … வேறு யார் சுப்ரமணியன்தான்..
சரி நம் கதைக்கு வருவோம். அந்த அழகான டாக்டர்கள் நடமாடிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும், நமக்கு வைத்தியம் பார்க்கும்போது மட்டும், இந்த டாக்டர்களுக்குப் பதிலாக, ஒரு முரட்டு மீசை வைத்த ஆண் டாக்டர் இருப்பார் என்று தோன்றியது. டாக்டர் அழைக்கும் முன், அருகில் இருந்த அறைக்குச் செல்லச் சொன்னார்கள். அந்த அறையில் உயரம், எடை, ரத்த அழுத்தம் ஆகிய அளவுகளை எடுத்துக் கொண்டார்கள். காது அடைத்ததற்கும் உயரத்திற்கும் என்ன சம்பந்தம் என்பது கடைசி வரை புரியவேயில்லை. உயரமாக இருந்தால் காது அடைக்காதோ ?
சிறிது நேரத்தில் அழைப்பு வந்ததும் டாக்டர் அறைக்குள் சென்றது சவுக்கு. வரவேற்பறையில் நடமாடியதை விட, அழகான ஒரு பெண் டாக்டர் இருந்தார். அமருங்கள். என்ன பிரச்சினை சொல்லுங்கள் என்றார்.
“டாக்டர்… இடது பக்க காது அடைத்திருக்கிறது.” காது நன்றாக கேட்கிறதா என்றார். கேட்பதில் ஒரு சிரமமும் இல்லை. ஆனால் அடைத்திருக்கையில், காதில் எக்கோ கேட்பது போல உள்ளது என்று பதிலளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் அது சரியாகி விடுகிறது என்றார்.
சரி காதில் வலி இருக்கிறதா என்றார். இல்லை என்றதும், செல்போனில் வலது காதில்தான் பேசுகிறீர்களா என்றார். இல்லை எனக்கு கேட்பதில் பிரச்சினை இல்லை என்று பதிலளிக்கப்பட்டது.
டாக்டர் உடனே, ரத்த அழுத்தம் பார்க்கும் போது அழுத்தும் ரப்பர் பலூனோடு இணைக்கப் பட்ட ஒரு குழாயை காதுக்குள் நுழைத்து அந்த பலூனை அழுத்தினார். சைக்கிளுக்கு காற்றடிக்கும் எந்திரத்தை காதில் நுழைத்து அழுத்தியதைப் போல இருந்தது. பிறகு விளக்கு பொருத்திய ஒரு குழாயை காதுக்குள் நுழைத்துப் பார்த்தார்.
பிறகு போர்செப்ஸ் போன்ற ஒரு கருவியை எடுத்து, நான் இதை காதுக்கருகிலும், காதின் மேலும் வைப்பேன். ஒலி எங்கே அதிகம் கேட்கிறது என்று சொல்லுங்கள் என்றார். அவர் முதல் முறை வைத்த போது சரியாக கவனிக்க முடியாததால் இன்னொரு முறை வையுங்கள் டாக்டர் என்று சொன்னதும், இவன் நம்மை சைட் அடிக்கிறானோ என்று சந்தேகப்பட்ட அந்த டாக்டர், கண்ணை மூடிக் கொண்டு நன்றாக கவனித்துச் சொல்லுங்கள் என்றார். கண்ணை மூடிக்கொண்டு நன்றாக கவனித்தபோது, இது போல பலமுறை சோதனை செய்தார். சோதனை முடிவில், உங்களின் இடது காதில் ஏதோ பிரச்சினை இருக்கிறது. வலது காதிலும் ஏதோ பிரச்சினை இருக்கிறது (தலைவலி போய் திருகுவலி) அதனால் சில சோதனைகள் எழுதித் தருகிறேன். அந்தச் சோதனைகளை முடித்து விட்டு வாருங்கள். தெளிவாகக் கண்டுபிடித்து விடலாம் என்றார். (இவர் கண்டிப்பாக ராமச்சந்திராவிலோ, ஜெகதரட்சகன் கல்லூரியிலோதான் படித்திருக்க வேண்டும்)
ஒரு காவல்துறை உயர் அதிகாரியின் மகன் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிறான். அந்த அதிகாரியைச் சந்திக்கச் செல்கையில் அவனிடம் பேசிக்கொண்டிருந்த போது, என்னுடைய வயிறு கல் போல இருக்கிறது. ஏதாவது பிரச்சினையா என்று பார் என்று அவனிடம் சொன்னதும், அவன் வயிற்றை அமுக்கிப் பார்த்து விட்டு இது சாதாரமாணதுதான். தண்ணீர் நிறையக் குடியுங்கள் என்றான். அவனிடம் கல்லூரிப் படிப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டபோது, மிக மிக கடினம் என்றான். நீங்கள் இப்போது என்னிடம் சொன்னீர்கள் அல்லவா. இதைப் போல ஒரு நோயாளி என்னிடம் வரும்போது, அவர் சொல்லும் அறிகுறிகளை வைத்து நான் அவர் உடலில் சரியான இடத்தில் சோதிக்க வேண்டும். இந்தச் சோதனையின் போது மூத்த பேராசிரியர் பார்த்துக் கொண்டு இருப்பார். தவறான இடத்தில் நான் கையை வைத்து அமுக்கினால் நான், மீண்டும் ஆறு மாதம் படிக்க வேண்டும். மறு வாய்ப்புக் கூடத் தரமாட்டார்கள் என்றான். இதுதான் அரசு மருத்துவக் கல்லூரி.
அந்த அழகான பெண் மருத்துவர் எழுதித் தந்த சீட்டுகளை எடுத்துக் கொண்டு வரவேற்பில் கேட்டவுடன், பில் கட்டி விட்டு வாருங்கள் என்றார்கள். பில் எவ்வளவு என்றதும் 1480 ரூபாய் என்றார்கள். ஏற்கனவே 350 ரூபாய்தானே ஆயிற்று என்று மகிழ்ந்தது எவ்வளவு தவறு !!!! பில் கட்டும் இடத்தில் க்ரெடிட் கார்ட் வாங்குவீர்களா என்று கேட்டதற்கு 2 சதவிகிதம் சர்வீஸ் கட்டணம் வரும் என்றார். அருகாமையில் இருந்த ஏடிஎம் சென்று, இருந்த பணத்தை சுரண்டி எடுத்துக் கொண்டு வந்து மூன்று 500 ரூபாய்த் தாள்களைத் தந்ததும் அவர் இரண்டு 10 ரூபாய்த் தாள்களை பதிலுக்குத் தந்தபோது, பொசுக்கென்று இருந்தது.
முதலில் எக்ஸ்ரே. டேபிளில் குப்புறப் படுக்கவைத்து தாடையை நிமிர்த்திக் கொண்டு, இரண்டு கைகளையும் பின்னால் கட்டிக் கொள்ளச் சொன்னார் அந்த எக்ஸ்ரே நிபுணர். அது போல படுத்துக் கொண்டிருந்தபோது, சிபி.சிஐடி போலீசார் சங்கிலியில் கட்டிப் போட்ட ஞாபகம்தான் வந்தது. பிறகு மேலும் பல்வேறு போஸ்களில் எக்ஸ்ரே எடுத்த பிறகு அறை எண் நாலுக்குச் செல்லுங்கள் என்றார்கள். அங்கே ஆடியோகிராஃபி சோதனை. பிசிஓ பூத் போல இருந்த ஒரு சிறிய அறைக்குள் போகச் சொன்னார்கள். காதில் ஹெட்போன் மாட்டினார்கள். அறைக்கு வெளியே கண்ணாடி வழியே பார்க்கும் இடத்தில் அமர்ந்திருந்த பெண், உங்கள் இரண்டு காதுகளிலும், ட்டிங், ட்டிக், ட்டக் என்று ஓசை வரும். வரும்போது கையைத் தூக்குங்கள் என்றார். இரண்டு காதுகளிலும் பல்வேறு அளவுகளில் ஓசை வந்தது. வரும்போது கையைத் தூக்கியதும் அவர் அறிக்கை தயார் செய்தார். பிறகு மற்றொரு அறைக்கு அனுப்பினார்கள். அந்த அறையில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் போடுவது போல, “யு” வடிவில் ஒரு நாமத்தைப் போட்ட இளம்பெண் இருந்தார். அவர், மொட்டையடித்த ஒரு சாமியார் எழுதிய, ஒரு தத்துவ புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். முதலில் நடந்த சோதனையைப் போலவே கம்ப்யூட்டர் மூலம் ஒலி எழுப்பி மீண்டும் இந்தச் சோதனையை நடத்தினார்கள். அதன் பிறகு, மற்றொரு அறையில், காதில் குழாயைப் பொருத்தி ஏற்கனவே வந்த ஓசை போல ஓசையை எழுப்பினார்கள்.
அடுத்ததாக அறை எண் ஒன்று. அந்த அறைக்குச் சென்றதும், முதலில் ரத்தம் எடுத்தார்கள். பிறகு சிறுநீர் சோதனை செய்தார்கள். எல்லா சோதனைகளும் முடிந்தன. வரவேற்பறையில் காத்திருங்கள். உங்களை அழைப்பார்கள் என்றார்கள்.
சரியாக 20 நிமிடங்களில், அனைத்துச் சோதனையின் முடிவுகளும் வந்தன. டாக்டர் அழைக்கிறார் என்றார்கள். மீண்டும் அந்த அழகான டாக்டரிடம்தான் அனுப்புவார்கள் என்று பார்த்தால், வேறொரு அறைக்கு அனுப்பினார்கள். இந்தி நடிகர் அமீர்கான் போன்ற தோற்றமுடைய மற்றொரு டாக்டர் அந்த அறையில் இருந்தார். கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த் தலையில் மாட்டியிருப்பது போன்ற ஒரு விளக்கை மாட்டியிருந்தார்.
“சொல்லுங்க. என்ன பண்ணுது” என்றார். டாக்டர், ஒரு பக்கக் காது அடைத்திருக்கிறது என்றதும், உங்களுக்கு இரண்டு காதுகளிலும் ஹை ப்ரீக்வென்சி ஹியரிங் லாஸ் இருக்கிறது என்றார். தூக்கி வாரிப்போட்டது. என்ன டாக்டர் சொல்கிறீர்கள்…. என்று கேட்டதும். எஸ்… உள்ளுக்குள்ள நெர்வ்ஸ் எல்லாம் டேமேஜ் ஆயிருக்கு என்றார். “ஈஸ் இட் ரிவர்சிபிள் ?” இதை சரி செய்ய முடியுமா என்றதற்கு, “நோ… நோ… இது பர்மனென்ட் டேமேஜ்” என்றார். நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் அதிக சத்தம் உள்ளதா என்று கேட்டார். நிச்சயம் இல்லை என்றதும் அமைதியாக இருந்தார்.
இதற்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு, உங்களுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளதா என்று கேட்டார். ஆம் என்றதும், அதுதான் காரணம் என்றார். (அதுதான் காரணம் என்பதற்கு முன்னால் “அப்போ” சேர்த்திருக்க வேண்டுமோ). சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லையென்றால் என்ன சொல்லியிருப்பார் ? உங்களுக்கு சளி பிடிக்குமா என்றார். ஆமாம் டாக்டர் அவ்வப்போது பிடிக்கும் என்றவுடன், சளி பிடிக்கும்போது என்ன பண்ணுகிறது என்றார். என்ன பண்ணுகிறது என்ற அவரது கேள்வியை கிரகித்து பதில் சொல்வதற்குள் அவர் மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். இதை ஒரு மாதம் சாப்பிடுங்கள். ஒரு மாதம் கழித்து வாருங்கள் (மறுபடியுமா ?????) சரியாகிவிடும் என்றார். (இவர் நிச்சயம் ஜெகதரட்சகன் கல்லூரியில்தான் படித்திருக்க வேண்டும்)
மருந்துக்கடையில் அந்த மருந்து எதற்கு என்று கேட்டதற்கு சளிக்கு என்று பதில் சொன்னார்கள்.
பின்னர் இணையத்தில் வந்து தேடிப்பார்த்த போது, ஹை ஃப்ரீக்வென்சி ஹியரிங் லாஸ் என்பது சாதாரணமான ஒரு விஷயம் என்பதும், சாதாரணமாக நமது கேட்கும் திறனை அது எப்போதும் பாதிக்காது என்பதும், டீன் ஏஜில் உள்ளவர்களுக்கு இருக்கும் கேட்கும் திறன், வயதாக ஆக குறைந்து கொண்டே வரும் என்றும் தகவல்கள் இருந்தன.
முதலில் பரிசோதனை செய்த அந்த அழகான பெண் டாக்டர், ஒரு வார்த்தை கூட இப்போது சளி பிடித்திருக்கிறதா, அடிக்கடி சளி பிடிக்குமா என்பதைக் கேட்கவேயில்லை. காது அடைத்திருப்பதற்கு சளி ஒரு காரமாக இருக்குமா என்பதை அவர் பரிசோதிக்கவேயில்லை. சளி பிடித்தால் காது அடைக்கும் என்பதற்காகத்தானே, காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றை ஒன்றாக இணைத்து ஒரு படிப்பாக வைத்திருக்கிறார்கள் ? ஒரு வேளை சளிதான் காரணமாக இருக்கும் என்றால் எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை, ஆடியோகிராம் சோதனைகளெல்லாம் நடத்த வேண்டியிருக்காதே… அங்கே வேலை செய்பவர்களுக்கு எப்படி சம்பளம் கொடுப்பது ?
மருத்துவமனையை விட்டு வெளியே வரும்போது பிக்பாக்கெட்டிடம் பணத்தை பறிகொடுத்த உணர்வே ஏற்பட்டது.
எண்பதுகளின் இறுதியில்தான் தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கான மோகம் தொடங்கியது. அதற்கு முன்பு ஆங்காங்கே இரண்டு அல்லது நான்கு, அதிகபட்சம் பத்து படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகள் மட்டுமே இருக்கும். சென்னையில் பெரிய மருத்துவமனைகள் என்றால், அப்போல்லோ மருத்துவமனைதான். அப்போல்லோ மருத்துவமனை கூட, பணம் கொழுத்த பணக்காரர்கள் மட்டுமே வந்து செல்லும் இடமாக இருந்தது. சாதாரண நடுத்தர வர்க்கத்தினர் கூட, அரசு மருத்துவமனைகளையே நம்பியிருந்தார்கள். எண்பதுகளின் இறுதியில் எம்.ஜி.ஆர், சிறுநீரகக் கோளாறுக்காக அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டபோதுதான் அப்போல்லோ உலகப்புகழ் பெற்றது. 1991ல் தாராளமய பொருளாதாரக் கொள்கை செயல்படுத்தப்பட்டதும், அது வரை மருத்துவமனை தொடங்குவதற்கு இருந்த பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. பணம் வைத்திருந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைத் தொழிலை ஒரு பெரும் லாபம் ஈட்டித் தரும் தொழிலாகக் கருதத் தொடங்கினார்கள். அப்போது தனியார் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காலம். தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைக்காத மக்கு மாணவர்களை, இரு கரம் கூப்பி வரவேற்றது, உடைந்து போன ரஷ்யா. 35 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். பணம் இருந்தால் ரஷ்யா சென்று டாக்டராகலாம் என்ற நிலை உருவாகியது.
தொண்ணூறுகளின் இறுதியில், புற்றீசல் போல தனியார் மருத்துவமனைகள் பெருகத் தொடங்கின. ஒரு கிரவுன்ட் இடம் இருந்தால் போதும். மூன்று மாடிகளைக் கட்டி, அதில் மருத்துவமனை, எக்ஸ்ரே கூடம், மற்ற பரிசோதனைகளைச் செய்ய தனித்தனி அறைகள் என்று ஒரு மருத்துவமனையைக் கட்டி, நோயாளிகளின் ரத்தத்தை உறிஞ்சலாம் என்ற நிலை உருவானது. இந்த மருத்துவமனைகளில் இரவு நேரப் பணியாற்றுவதற்கு, மாதம் நாலாயிரம் சம்பளத்தில் ரஷ்யாவில் படித்த டாக்டர்கள் தாராளமாகக் கிடைத்தார்கள்.
செவிலியர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டவுடன், தனியார் செவிலியர் கல்லூரிகள் பல்கிப்பெருகத் தொடங்கின. இந்த தனியார் செவிலியர் கல்லூரிகளை நடத்தும் 90 சதவிகித நிர்வாகங்கள் மருத்துவமனையை வைத்திருப்பார்கள். செவிலிய மாணவிகள், இதில் பயிற்சி என்ற பெயரில் ஊதியம் வாங்காமல் பணியாற்றுவார்கள்.
இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைக்கத் தொடங்கியதும், மருத்துவத் தொழில், லாபத்தைக் கொட்டிக் கொடுக்கம் தொழிலாக மாறத் தொடங்கியது. அப்போல்லோவின் அருகில் இருந்த சிந்தூரி ஹோட்டல், மருத்துவமனையாக மாற்றப்பட்டு, ஒரு நாளைக்கு 5 ஆயிரம் ஆகும் நட்சத்திர அறைகள், பணக்கார நோயாளிகளுக்கான அறைகளாக மாற்றப்பட்டன. நட்சத்திர ஹோட்டல்களின் அறைகளைத் தோற்கடிக்கும் அளவுக்கு சொகுசு மருத்துவமனைகள் உருவாகத் தொடங்கின. மருத்துவமனையின் உள்ளே நுழையும் நோயாளிகளின் அண்டர்வேர் வரை உருவியபின் வெளியே அனுப்பும் நிலை உருவானது.
பத்திரிக்கையாளர்களை விசாரித்தபோது, மற்ற எல்லா ப்ரெஸ் மீட்டுகளையும் விட, மருத்துவமனைகள் நடத்தும் ப்ரெஸ் மீட்டுகளில் அதிக பணம் தரப்படுவதாகச் சொல்கிறார்கள். மருத்துவமனைகள் அதிக வளம் கொழிக்கும் தொழிலாக மாறியதால்தான், அதன் வருமானத்தில் பங்கு பெற வேண்டும் என்று பிரபல ஊடகங்கள் ஹெல்த் பத்திரிக்கைகளை தொடங்கியுள்ளன. இந்த ஹெல்த் பத்திரிக்கைகளைப் பொறுத்தவரை, விளம்பரங்களுக்கு சற்றும் பஞ்சம் இருக்காது. மற்ற பத்திரிக்கைகளைப் போல விளம்பரங்களுக்கு அலைய வேண்டிய தேவையும் இருக்காது. “பேட் ஹெல்த்” என்ற பெயரில் நீங்கள் ஒரு வாரப் பத்திரிக்கையை தொடங்கினால் கூட, ஒரு இதழுக்கு 25 லட்சம் வரை விளம்பர வருமானம் நிச்சயம். அதில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு சம்பளம் கூடத் தரவேண்டியதில்லை. போய் கவர் வாங்கிக் கொள் என்று சொல்லிவிட்டால் சந்தோஷமாக வாங்கிக் கொள்வார்கள்.
இந்தத் தனியார் கொள்ளைக்கு உரம் போட்டு வளர்த்தது கருணாநிதிதான். ஏழைகளுக்குப் பயன்படும் அரசு மருத்துவமனைகளை சரிசெய்வதை விடுத்து, ஏழைகள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வகை செய்யும் “கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தைக்” கொண்டு வந்தார். இத்திட்டத்தை செயல்படுத்த, கருணாநிதி குடும்பத்தின் 40 ஆண்டு கால, தொழில் பங்குதாரரான ஸ்டார் குழுமம் நியமிக்கப்பட்டது. இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்வதற்கு ஒவ்வொரு தனியார் மருத்துவமனைக்கும் 2 லட்ச ரூபாய் கடந்த கால திமுக ஆட்சியில் வசூலிக்கப்பட்டது.
மாற்றம் செய்வார் என்று எதிர்ப்பார்த்த ஜெயலலிதா, இத்திட்டத்தை வேறு வடிவில் செயல்படுத்தி, தனியார் கொள்ளையை தொடர்ந்து நடக்க அனுமதித்தார்.
மக்களின் அத்தியாவசியத் தேவையான மருத்துவம், கல்வி போன்றவை தனியார் கட்டுப்பாட்டிலும், மக்களின் ரத்தத்தை உறிஞ்சும், மதுபான விற்பனையை அரசு செய்வதும் உலகில் எங்காவது நடக்குமா ?
மருத்துவர்களை மட்டும் குறை சொல்லி என்ன பயன் ? வாக்களிக்கப் பணம் வாங்கும் நம்மிலிருந்துதானே மருத்துவர்களும் வருகிறார்கள். அவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன ?