16 மாத சிறைவாசத்திற்குப் பிறகு ஆ.ராசாவின் வருகை படோடாபமாக, ஏகப்பட்ட தடபுடலுடன் இனிதே நடந்து முடிந்தது. ஆண்டிமுத்து ராசாவை சிலுவையில் அறையப்பட்ட தலித் போராளியாக சித்தரிக்கும் முயற்சியில் திமுக இறங்கியிருப்பதைப் பார்க்க முடிந்தது. ராசாவும் தன் பங்குக்கு தன்னை கட்சிக்காக சிறை சென்ற தியாகியாக சித்தரித்துக் கொள்கிறார்.
கடந்த முறை கனிமொழியை வரவேற்க விமானநிலையத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்ட அளவுக்கு தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்படவில்லையென்றாலும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பெரம்பலூரிலிருந்தும் சென்னையிலிருந்தும் வரவழைக்கப்பட்டிருந்தனர். இதற்கு மேலும் தொண்டர் கூட்டத்தை திரட்டியிருக்க முடியுமென்றாலும் கனிமொழியை விட கூட்டம் அதிகமாகக் கூடினால் நன்றாக இருக்காது என்பதால், சற்றே அடக்கி வாசித்ததாக கூறப்படுகிறது.
சிறைவாசத்திற்குப் பிறகு நடந்துள்ள ராசாவின் சென்னை வருகை, திமுகவில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகைச்சொல் அல்ல. கருணாநிதியின் வாரிசுகளைத் தவிர்த்து, திமுகவின் தலைமைப் பொறுப்புக்கு இதுவரை யாருடைய பெயரும் விவாதிக்கப்பட்டது கூட கிடையாது. கருணாநிதிக்கு அடுத்த தலைவர் என்று வைகோவுக்கு தொண்டர்கள் ஆதரவு பெருகியபோது, என்னைக் கொல்ல விடுதப்புலிகளோடு சேர்ந்து சதி செய்கிறார் என்று கட்சியை விட்டு வெளியேற்றினார். ஒரு வேளை பேராசிரியர் அன்பழகன் கட்சித் தலைமைப் பதவிக்கு ஆசைப்பட்டிருப்பாரேயானால், அன்பழகனின் பிணம் ஏதாவது ஒரு ஆற்றில் மிதந்திருக்கும். தனக்கு போட்டியாக மதுரையில் அதிகாரம் செய்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக, மு.க.அழகிரி, தா.கிருஷ்ணனை கொலை செய்து, அந்தக் கொலையை ஒன்றுமே இல்லாமல் செய்துவிட்டது ஒரு நல்ல உதாரணம்.
அறுபதுகளில் திமுகவின் தொடக்க காலங்களில் இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் துரைமுருகன், பேராசிரியர் அன்பழகன், வீரபாண்டி ஆறுமுகம், நாஞ்சில் மனோகரன் போன்றவர்கள் திமுகவின் மூத்த தலைவர்கள். இந்தத் தலைவர்கள் திமுகவின் அசுரவளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார்கள். ஆரம்பகாலத்தில் இவர்களின் உழைப்பு கட்சியின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, மு.க.ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக் கொள்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்ற நிலையை கருணாநிதி திட்டதிட்டு உருவாக்கினார். ஆனால் இவர்கள் யாருக்கும் இல்லாத ஒரு பேறு ஆ.ராசாவுக்கு கிடைத்திருக்கிறது.
கருணாநிதி மற்றும் கட்சியின் வாரிசுகளாக அறியப்படும், மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.கனிமொழி ஆகிய மூவரும் ராசாவை தங்கள் பக்கம் இழுப்பதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றார்கள். கட்சியைக் கைப்பற்றுவதற்கு இந்த வாரிசுகளுக்கு இடையில்தான் போட்டி நிலவுகிறதே ஒழிய, வாரிசுகைளைத் தவிர்த்து யாரும், கட்சித் தலைமைப் பதவிக்கு போட்டியிடாத நிலையில், இந்த வாரிசுகள் ராசாவை இழுப்பதே, ராசா திமுகவில் ஒரு தவிர்க்கமுடியாத சக்தியாக உருவாகியிருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது. மூத்த திமுக தலைவர்களால் ஐம்பது ஆண்டுகளாக சாதிக்க முடியாததை, கத்துக்குட்டியாக அரசியலில் நுழைந்த ஆ.ராசா பதினைந்தே ஆண்டுகளில் சாதித்திருக்கிறார்.
அண்ணாமலைத் திரைப்படத்தில் ரஜினி ஒரே பாடலில் பெரும் பணக்காரர் ஆவது போன்ற வளர்சிதான் ஆ.ராசாவுடையது. திமுகவில் சட்டமன்றத் தேர்தல் அல்ல. சாதாரண உள்ளாட்சித் தேர்தலில் டிக்கட் வாங்குவது கூட எளிதான காரியம் அல்ல. பணபலம், சாதிப் பின்னணி, கட்சியில் மூப்பு, குடும்பப் பின்னணி போன்ற அத்தனை விஷயங்களையும் அலசி ஆராய்ந்த பின்னரே டிக்கெட் கொடுக்கப்படும். ஒரு பழைய லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டு, வழக்குகள் கூட இல்லாமல், பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்திலும், கீழமை நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு 33 வயது இளைஞர் 1996 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது திமுக கட்சியே அதிர்ந்துதான் போனது.
ஆனால் ஒரு பிறவி அரசியல்வாதியான ஆ.ராசா, பதவி கிடைத்தபின், நீண்டநாள் அரசியலில் ஊறிய ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி போலவே நடந்து கொண்டார். 1996ல் பெரம்பலூர் எம்.பியான ஆ.ராசா திமுக சார்பில் போட்டியிட 1999 தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் எம்.பியான ராசாவை மத்திய ஊரக வளர்சித்துறையின் இணை அமைச்சராக்குவதற்கு கருணாநிதி பரிந்துரைத்தார். அதுவரை ராசாவின் வளர்ச்சியை மழைக்கு முளைத்த காளானுக்கு சமமாகப் பாவித்து வந்த திமுக கட்சித் தலைவர்கள், இந்த நபர் கருணாநிதியின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார் என்பதை உணரத் தொடங்கினார்கள். அமைச்சரான ராசா, திமுகவின் அதிகார மையங்கள் எவை என்பதை கண்டறிந்தார். கோபாலபுரம் குடும்பத்தில் போட்டிகள் அதிகம் என்ற விஷயத்தை புரிந்த ராசா, சிஐடி காலனியில் தஞ்சம் புகுந்தார்.
கட்சி, ஆட்சி போன்ற எல்லா விஷயங்களிலும் மாற்றாந்தாய்ப் பிள்ளைகள் போல நடத்தப்படுவதாக கடும் வருத்தத்தில் இருந்த ராசாத்தி அம்மாளும், கனிமொழியும், ராசாவின் வருகையை பலமாக வரவேற்றனர். ராசாவின் விசுவாசமும், பணிவும், டெல்லியில் அமைச்சராக இருக்கும் அவரது நிலையும், சிஐடி காலனி குடும்பத்திற்கு பெரிதும் உதவியாக இருந்தன. குடி உயரக் கோன் உயரும் என்பது போல, ராசா வளர்ந்தால் நம் குடும்பமும் வளரும் என்று சமயம் கிடைக்கும்போதெல்லாம், ராசாவுக்கு நல்ல பதவியைப் பெற்றுத்தருவதில், சிஐடி காலனி அதிகார மையம் கவனமாகவே இருந்தது.
2004 பாராளுமன்றத் தேர்தலில், முரசொலி மாறனின் மறைவால் ஏற்பட்ட காலியிடத்தில் யார் போட்டியிடுவது என்று விவாதிக்கப்பட்ட போது, கனிமொழியின் பெயரே முதலில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், தாம் ஒரு வரலாற்றுத் தவறைச் செய்கிறோம் என்பதை அப்போது உணராத கனிமொழி அந்த வாய்ப்பை நிராகரித்தார். இந்தியாவின் மிகப்பெரிய கொள்ளைக்காரனிடம் சாவியை ஒப்படைக்கிறோம் என்பதைத் தெரியாமல் அந்தத் தவறைச் செய்தார் கனிமொழி. அந்த இடத்தில் தயாநிதி மாறன் போட்டியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. அத்தனை நாளாக டெல்லியில் திமுகவின் தொடர்பாக இருந்த கட்சியின் மூத்த தலைவர் டி.ஆர்.பாலுவை ஓரங்கட்டி அதிகாரத்தை கையில் எடுத்தார் தயாநிதி. 2004ல், திமுகவின் தயவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இருந்ததால், தன் பேரனை தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக்கி அழகு பார்த்தார் கருணாநிதி.
தயாநிதி மாறனுக்கு புதிதாக கிடைத்த தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பதவி தங்க முட்டையிடும் வாத்தாகத் தெரிந்தது. தங்கள் குடும்பத் தொலைக்காட்சி மற்றும் இதர ஊடக வியாபாரங்களை அப்பதவியைப் பயன்படுத்தி அபிவிருத்தி செய்வதிலும், டெல்லியில் தனது தொடர்புகளை விரிவாக்கிக் கொள்வதிலும் தனது முழுக் கவனத்தையும் செலுத்தினார் தயாநிதி. இதில் கவனத்தை செலுத்தியதிலும், புதிதாக கிடைத்த தங்கு தடையற்ற அதிகாரத்திலும், தயாநிதியின் அகங்காரம் பன்மடங்கு பெருகியது. இந்த மமதையில் தயாநிதி மாறனும், கலாநிதி மாறனும், திட்டமிட்டு, சிஐடி காலனியை தொடர்ந்து புறக்கணித்து வந்தார்கள். இந்தப் புறக்கணிப்பை சிஐடி காலனி அதிகார மையம் கவனிக்காமல் இல்லை. உரிய வாய்ப்பு வரும் என்று காத்திருந்தனர்.
தயாநிதிக்கு தொலைத்தொடர்புத்துறை கிடைத்தபோது, அதற்குப் போட்டியாக, சிஐடி காலனியின் பரிந்துரையின் அடிப்படையில் ராசாவுக்கு கேபினெட் அந்தஸ்துடன் கூடிய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை கிடைத்தது. பிறவி அரசியல்வாதியான ஆ.ராசா, அந்தத் துறை ஒரு வளம் கொழிக்கும் துறை என்பதை விரைவாகவே அறிந்து கொண்டார்.
பல நூறு கோடிகள் சம்பந்தப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க, டெல்லியின் இடைத்தரகர்கள் ராசாவின் அலுவலகத்தை மொய்த்தார்கள். தனது தொடர்புகளை விரிவுபடுத்திக் கொண்ட ராசா, தங்க முட்டையிடும் அந்த வாத்தை அறுத்து விடாமல் கவனமாக போஷித்தார். அந்த வாத்தும் பல்வேறு தங்க முட்டைகளை ராசாவுக்கு வழங்கியது. தனது லாபத்தில் விளைந்த பங்குகளை கவனமாக சிஐடி காலனிக்கு கொடுத்தார் ராசா. ஏற்கனவே அபரிமிதமாக இருந்த ராசாவின் மீதான நம்பிக்கை, பல்மடங்கு பெருகியது. தன் எதிர்காலத்தை மனதில் வைத்து ராசாவும், இந்த உறவை போற்றிப் பாதுகாத்தார்.
ராசாவின் ஜாதகத்தில் குரு உச்சத்துக்குச் சென்றது, மதுரை தினகரன் நாளிதழ் ஊழியர்கள் மூன்று பேர் எரித்துக் கொல்லப்பட்டபோதுதான். மாறன் சகோதரர்களின் தினகரன் நாளிதழ், கருணாநிதியின் வாரிசு யார் என்று பதிப்பித்த ஒரு கருத்துக்கணிப்பில், அழகிரிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்று முடிவுகள் வெளியிட்டனர். இதனால் கடுப்படைந்த, அழகிரியின் தொண்டர் அடிப்பொடிகள், மதுரை தினகரன் அலுவலகத்தை அடித்து நொறுக்கி, அப்பாவி ஊழியர்கள் மூன்று பேரை எரித்துக் கொன்றனர். இதையடுத்து, அமைச்சராக தயாநிதி நீடிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது.
ஏற்கனவே தயாநிதிமாறன் மீது கடுப்பில் இருந்த சிஐடி காலனி குடும்பம், இதுதான் சரியான தருணம் என்ற முடிவெடுத்து, ராசாவை தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக்கியது. யாரை எப்படி மசிய வைப்பது என்ற கலையை டெல்லிக்குச் சென்றதும் நன்கு கற்றுத் தேர்ந்த ராசா, தொலைத்தொடர்புத்துறையின் அமைச்சரான முதல் வாரத்திலேயே செய்த ஒரு காரியம், ஒரு பெரும் தொகையை எடுத்து வந்து கருணாநிதியின் காலடியில் சமர்ப்பித்தது. இந்த விபரங்கள் நீரா ராடியா டேப்புகளில் பதிவாகியுள்ளன.
பெரும் தொகையைப் பார்த்த கருணாநிதியின் மனதில் உடனடியாக ஏற்பட்ட எண்ணம், இத்தனை நாள் தயாநிதி மாறன் நம்மை ஏமாற்றியிருக்கிறார் என்பதும், ராசாவைப்போல விசுவாசமான நபர் கிடையாது என்பதும். தன் ரத்த சொந்தம், தன் உறவு தன்னை ஏமாற்றுகையில், தலித் சமூகத்தில் பிறந்த ஒருவன், தன்னிடம் இப்படி விசுவாசமாக இருக்கிறானே என்ற மலைப்பே ஏற்பட்டது கருணாநிதிக்கு. இந்த முறை, ராசா கொடுத்த பெரும் தொகை கோபாலபுரம் குடும்பத்துக்குச் சென்றதால், கோபாலபுரத்திலும் ராசா ஏற்றுக் கொள்ளப்பட்டார். பணம் பாதாளம் வரை பாயும்போது, கோபாலபுரத்தில் பாயாதா என்ன ?
2007 வாக்கில், நடமாடுவதற்கு சிரமப்பட்ட கருணாநிதி அருகில் தோளைக் கொடுத்து நடக்கும் நிலை ஏற்பட்டது. அது வரை, கருணாநிதிக்கு தோள் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் இருந்த மாறன் விலக்கப்பட்டதும், அந்த இடத்துக்கு ஆ.ராசா வந்தபோது, திமுக தலைவர்களே, ராசாவை மரியதையோடு பார்க்கத் தொடங்கினார்கள்.
சிறகை விரித்து வானில் உயர உயர ராசா பறந்து கொண்டிருந்த போதுதான், அந்த வானத்தில் கண்ணுக்குத் தெரியாமல் இருந்த அலைக்கற்றை எனப்படும் ஸ்பெக்ட்ரம் ராசாவின் ராஜ்ஜியத்தை அசைத்துப் பார்த்தது. எப்படியாவது தப்பித்து விடலாம் என்று பகீரதப்பிரயத்தனம் செய்த ராசாவின் கெட்ட நேரம், குரு நீசத்தில் இருந்தான். 2009 பாராளுமன்றத் தேர்தல், காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களைக் கொடுத்து, திமுகவுக்கு கடந்த அரசில் இருந்த, மிகப்பெரிய செல்வாக்கை அடியோடு சாய்த்தது. தனக்கு வேண்டிய இலாக்காக்களை பெற முடியாமல், பதவியேற்பு வைபவத்தை கருணாநிதி புறக்கணித்து தமிழகம் திரும்பும் நிலையை ஏற்படுத்தியது அந்தத் தேர்தல் முடிவுகள்.
மீண்டும் ஆட்சியமைத்த ஒரு சில மாதங்களில் காங்கிரஸ் அரசு செய்த முதல் காரியம், ராசா தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருக்கும்போதே, ராசாவின் அமைச்சகத்தில், சிபிஐ சோதனைகளை நடத்தியதுதான். 2009 இறுதியில் தொடங்கி, மெள்ள மெள்ள, ஸ்பெக்ட்ரம் என்ற பூதம் வெளியே வரத் தொடங்கி ராசாவை விழுங்கத் தொடங்கியது. திமுக, ஸ்பெக்ட்ரம் குறித்து குற்றச்சாட்டுகள் எழத்தொடங்கியபோது, ராசாவை ஆதரித்து மாநிலம் முழுவதும் கூட்டம் போட்டது. கருணாநிதி கூட, ராசாவை தலித் இனத்தின் பிரதிநிதி, “தகத்தகாய கதிரவன், பொட்டல் காட்டில் பூத்த மலர்” என்றெல்லாம் வக்காலத்து வாங்கினார். ஆனால், இறுதியில் யாரும் காப்பாற்ற முடியாமல் ராசா சிறை சென்றார். கருணாநிதியின் மகள் கனிமொழி கைது செய்யப்பட்டபோது ராசாவுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச ஆதரவும் மாயமானது.
ராசா முதன் முதலில் கைது செய்யப்பட்டபோது அரசியல் நோக்கர்களும், ஊடகங்களும் ராசா முடிந்த ஒரு அத்தியாயம் என்றே கருதினார்கள். இனி எப்போதும் ராசா வெளிவர முடியாது, அவருக்கு எதிர்காலம் அஸ்தமனமாகி விட்டது என்றே கூறினார்கள். ஆனால், எந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு ராசாவை சிறைக்கு அனுப்பியதோ, எந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு ராசாவின் அரசியல் எதிர்காலத்தை சூனியம் ஆக்கும் என்று கணித்தார்களோ, அதே ஸ்பெக்ட்ரம் வழக்கு ராசாவுக்கு இன்று புத்துயிர் ஊட்டியிருக்கிறது.
சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த திமுகவின் வாரிசு மோதல்கள் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. பதவி என்ற பசை உலர்ந்து விட்டதால், ஒட்டப்பட்டு இருந்த ஒற்றுமையில் வெடிப்புகள் வெளிப்படையாக தெரியத் தொடங்கியுள்ளன. அழகிரிக்கும், ஸ்டாலினுக்குமான மோதல் வெட்டவெளிச்சமாகி, கட்சியை யார் கைப்பற்றுவது என்று மோதத் தொடங்கியுள்ளனர். இதன் வெளிப்பாடாக, யார் பக்கம் ராசாவை இழுப்பது என்று இரு சகோதரர்களும் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் வந்த பணத்தை ராசா மட்டும் அனுபவிக்கவில்லை, கருணாநிதி குடும்பமும், மூத்த திமுக தலைவர்களும் அனுபவித்தார்கள் ஆனால் சிறை சென்றது ராசா மட்டுமே என்ற உணர்வு பல திமுக தொண்டர்களிடம் பரவியிருக்கிறது. மேலும், திமுகவில் கணிசமாக உள்ள தலித்துகளிடம் ராசாவுக்கான ஆதரவு பெருகியிருக்கிறது. ராசாவை திமுகவின் தலித் பிரதிநிதியாகப் பார்க்கிறார்கள். இந்தப் பின்னணியை உணர்ந்தே, அண்ணனும் தம்பியும் ராசாவை இழுக்க போட்டியிடுகிறார்கள். அண்ணன் தம்பி இருவரும் அடித்துக் கொள்ளட்டும், உரிய நேரம் வருகையில் களத்தில் இறங்கலாம் என்றே கனிமொழி காத்திருப்பதாகத் தெரிகிறது.
ஆனால், கருணாநிதியிடம் உள்ள அரசியல் சாதுர்யத்தைப் படைத்தவராகத் தெரியும் ராசா, தான் யார் பக்கம் என்பதை வெளிப்படையாகக் கூறாமல் கவனமாக தவிர்த்து வருகிறார். இன்று தன்னைக் கொண்டாடும் கட்சியும், தன் பக்கம் வருமாறு அழைக்கும், அழகிரியும் ஸ்டாலினும் கனிமொழியின் கைதுக்குப் பிறகு தன்னை உதாசீனப்படுத்தினார்கள் என்பதை ராசா மறந்திருக்க வாய்ப்பில்லை. தன் மகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற ஆதங்கத்தில், கனிமொழியின் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியை, “அனைத்துத் தவறுகளுக்கும் ராசாதான் பொறுப்பு” என்று கருணாநிதி வாதாட வைத்ததையும் ராசா மறந்திருக்க முடியாது. ஆனால், ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியான ராசா, இத்தனை அவமானங்களையும், துரோகங்களையும், மென்று விழுங்கிவிட்டு, கட்சிக்கோ, தலைமைக்கோ எதிராக ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக இருந்தார்.
ராசா எப்படிப்பட்ட ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்பது, அவர் தமிழகம் வந்து, கருணாநிதியோடு நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியபோது தெரிந்தது. “ஓராண்டுக்கும் மேலாக சிறையிருந்தபோது திமுகவின் அரவணைப்பில் பாதுகாப்பாக உணர்ந்தேன். தற்போது பனிக்குடத்தில் இருந்து வந்த குழந்தையைப் போல, தலைவர் கையில் குழந்தையாக உணர்கிறேன்” என்று கூறினார். ராசா, “சிறையில் திமுக தலைவர் கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி நூலை 10 முறைக்கும் மேல் படித்தேன். அந்த நூல் எனக்கு நெஞ்சுரம் அளித்தது. எத்தனை சோதனைகள் வந்தாலும் தாங்கக்கூடிய வல்லமையை அளித்தது“ என்று ராசா கூறியபோது, அவர் கருணாநிதியையே விஞ்சி விடுவாரோ என்றே எண்ணத் தோன்றியது.
2009ல் நீரா ராடியாவோடு நடைபெற்ற உரையாடல்களில் ராசாவின் பேச்சு, அவர் எப்படிப்பட்ட கைதேர்ந்த அரசியல்வாதியானார் என்பதை வெளிப்படுத்தியது. கட்சியில் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலுவை காங்கிரஸ் விரும்பவில்லை என்பதை எப்படியாவது கருணாநிதியிடம் தெரியப்படுத்துமாறு ராசா கேட்டுக் கொண்டதும், ஏர்டெல் முதலாளி சுனில் மிட்டலிடம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு என்னோடுதான் அவர் தொழில் நடத்தியாக வேண்டும் என்பதை சொல்லுங்கள் என்று ராசா பேசியபோதும் அவர் எப்படிப்பட்ட மனிதராக உருவாகியிருக்கிறார் என்பது புரிந்தது.
அவர் 16 மாத சிறைவாசம் ராசாவுக்கு தன்னுடைய வழக்கின் ஆவணங்களையும், சாட்சிகளையும், ஆதாரங்களையும் அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய அவகாசத்தை அளித்திருக்கிறது. வழக்கறிஞராக இருந்த ராசா இந்த ஆதாரங்களை பரிசீலித்துவிட்டு, அவர் மீதான வழக்கு நிற்காது என்று கூறுவதில் தவறேதுமில்லை. பிரதமருக்கு தவறான தகவலைச் சொல்லி ராசா ஏமாற்றினார் என்று குற்றம் சுமத்தும் சிபிஐ, பிரதமரை சாட்சியாக விசாரிக்காத ஒரே காரணம், இக்குற்றச்சாட்டை தூக்கி எறிய போதுமானது. “இந்த விவகாரத்திற்கு (ஸ்பெக்ட்ரம் விலை தொடர்பாக) இத்தோடு முற்றுப்புள்ளி வைக்கலாம்” என்று குறிப்பு எழுதிய அப்போதை நிதி அமைச்சரும் சாட்சியாக விசாரிக்கப்படவில்லை. ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ஊழல் என்று சொன்னாலும், 40 ஆயிரம் கோடி இழப்பு என்று சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்திருந்தாலும், இதில் லஞ்சப்பணமாக சிபிஐ சுட்டிக்காட்டியிருப்பது கலைஞர் டிவிக்குக் கொடுத்த 200 கோடி மட்டுமே. லஞ்சப்பணம் பெற்றதற்கு வேறு ஆதாரங்கள் இல்லை என்று சிபிஐ நீதிமன்றத்திலேயே ஒப்புக் கொண்டுள்ளது.
கிரிமினல் சட்டத்தில் அடிப்படை அறிவு உள்ள எந்த நீதிபதியும், கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் கொடுத்தற்கு ராசாதான் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார். ஸ்பெக்ட்ரம் வழங்குவதற்கான கடைசித் தேதியை மாற்றி ராசாவின் தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட பத்திரிக்கை செய்திதான் இவ்வழக்கின் அடிப்படை. அந்த பத்திரிக்கை செய்தி “நியாயமாகவும், சீராகவும் இருக்கிறது” என்று சான்றளித்த, அரசுத் தலைமை வழக்கறிஞர் ஜி.இ.வானாவதியை இவ்வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்க சிபிஐ தவறியது, ராசாவுக்கே சாதமாக அமையும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் முக்கிய புள்ளிகளாக ஆதாயம் பெற்ற ரிலையன்ஸ், டாடா, சிஸ்டெமா ஷ்யாம் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட்டு விட்டு, யூனிடெக் மற்றும் ஸ்வான் நிறுவனங்களின் மீது மட்டும் குற்றம் சுமத்தியிருப்பதை, ராசாவின் தரப்பு ராசாவுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் நிச்சயம் சுட்டிக்காட்டுவார்கள். இவையெல்லாம் அறிந்த காரணத்தாலேயே ராசா, ஸ்பெக்ட்ரம் வழக்கைப் பற்றி துளியும் கவலைப்படாமல் இருக்கிறார்.
ராசாவின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, ஒரு தலைவராக உருவாகி, கட்சியைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு தனக்கு இருப்பதாக நம்புகிறார் என்றே தோன்றுகிறது. அழகிரியும், ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு, கட்சியை பிளப்பதற்கு துளியும் தயங்கமாட்டார்கள். கனிமொழியும் தன் பங்குக்கு ஆள் சேர்க்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளார். இப்படி ஒரு குழப்பமான ஒரு சூழல் ஏற்படுகையில், தன்னைத் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கு தன்னுடைய தலித் பின்புலமும், கட்சிக்காக சிறை சென்ற தியாகி என்ற அடையாளமும் நிச்சயம் உதவும் என்றே ராசா நம்புகிறார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பாதித்துப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம், ராசாவின் முயற்சிகளுக்கு நிச்சயம் துணை நிற்கும். ராசாவுக்குப் போட்டியாக, அழகிரியோ, ஸ்டாலினோ பணம் செலவு செய்ய முடியாத நிலை கூட நாளை ஏற்படலாம்.
அப்போது நடக்கும் பதவிப்போட்டியில் வெல்லும் குதிரையாக நாம் இருப்போம் என்ற நம்பிக்கை ராசாவுக்கு உறுதியாக இருப்பதாகவே தோன்றுகிறது. ராசாவின் நம்பிக்கை நிஜமாகுமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும் என்றாலும், தற்போது ராசாவுக்கு ஏற்பட்டுள்ள கிராக்கி, அவர் நம்பிக்கை அடிப்படை ஆதாரம் அற்றது இல்லை என்பதை மட்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இப்போதைக்கு, அவர் ராஜாதி ராஜாதான் !!!