எது அரசின் வேலையா ? திருமணம் நடத்தி வைப்பது அரசின் வேலையா ? அரசு என்றால் என்ன என்று வள்ளுவர் விளக்குகிறார்.
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.
அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும். ஒரு அரசானது, மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களைத் தீட்ட வேண்டும். மக்களின் நலனைப் பேண வேண்டும். மக்களுக்காக உழைக்க வேண்டும். திருமணம் செய்வது, பிள்ளை பெற்றுக் கொள்வது இவையெல்லாம், தனி நபர்களின் வேலை. அரசின் வேலை அல்ல.
ஜெயலலிதா அரசு கடந்த வாரம், நடத்தி வைத்த 1006 திருமணங்களைப் பற்றியே இந்தக் கட்டுரை. ஜெயலலிதா இந்தத் திருமண விழாவில் பேசிய போது “1991 முதல் 1996 வரை நான் முதலமைச்சராக இருந்த போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிதம்பரத்தில் 2,500 திருமணங்களையும், திருச்சியில் 5,004 திருமணங்களையும் நடத்திக் காட்டினோம்.
இரண்டாவது முறையாக நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, இந்துசமய அறநிலையத் துறையின் சார்பில் 2002 ஆம் ஆண்டு 1,008 திருமணங்களையும்; 2003-ஆம் ஆண்டு 1,053 திருமணங்களையும் இதே திருவேற்காட்டில் நான் நடத்தி வைத்தேன். ”
இந்தியாவில் எங்காவது ஒரு அரசு இப்படி திருமணம் நடத்திக் கொண்டிருக்கிறதா என்பது சந்தேகமே. கட்சிக்காரர்கள் வீட்டுத் திருமணங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்வது என்பது வேறு. ஆனால், மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து, அரசுத் துறை சார்பில் திருமணம் நடத்துவது என்பது வேறு. இத்திருமண ஜோடிகளுக்கு 4 கிராம் தங்க திருமாங்கல்யம் 6 கிராம் எடையுள்ள 4 வெள்ளி மெட்டிகள்; முகூர்த்தப் புடவை; ரவிக்கை; ஜரிகை வேட்டி; ஜரிகை துண்டு; சட்டை; உள்ளிட்ட 28 வகையான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன ஆகியவை அரசு செலவில் வழங்கப்பட்டுள்ளன.
ஏழைகளுக்கும், வறுமைக் கோட்டுக்கும் கீழ் உள்ளவர்களுக்கு திருமணம் செய்வதற்கு உதவித்தொகை வழங்குவது என்பதைக் கூட ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அரசே திருமணம் நடத்துவது அரசின் பணி அல்ல. நாட்டில் வறுமையை ஒழிப்பது, வேலைவாய்ப்பு வழங்குவது, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது போன்ற பல்வேறு பணிகள் அரசுக்கு உள்ளன. அதை விடுத்து திருமணம் நடத்தி வைப்பது என்பது, தேவையற்ற வரிப்பணத்தை செலவிடுவதோடு மட்டுமல்லாமல், அரசு தன் கடமையிலிருந்து தவறி, தேவையற்ற பணிகளில் ஈடுபடுகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.
ஜெயலலிதா, எப்போது ஆட்சிக்கு வந்தாலும், இது போலத் திருமணங்கள் நடத்தி வைப்பது அவருக்கு ஏழைகளின் மீது உள்ள அக்கறை காரணமாக இல்லை. சோதிடத்தில் தீவிர நம்பிக்கை உள்ள ஜெயலலிதா, இத்திருமணங்களை நடத்துவது, சோதிடர்களின் அறிவைப்படி மட்டுமேயன்றி, ஏழைகளின் மீதான அன்பின் காரணமாக நிச்சயம் இருக்க முடியாது. அப்படி ஏழைகளின் மீது உண்மையான அக்கறை இருக்குமேயானால், இத்திருமணங்களை ஒரு பொது இடத்தில் வைத்து, ஏழை கிறித்துவர்களுக்கும், ஏழை இசுலாமியர்களுக்கும் சேர்த்து நடத்தி வைத்திருப்பார் ஜெயலலிதா. திருமணங்களை திருவேற்காடு இந்துக் கோயிலில் நடத்துவதும், திருமணங்களை “இந்து” சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தியதுமே ஜெயலலிதாவின் மூடநம்பிக்கைக்கு ஒரு சான்று. இது போல திருமணங்களை நடத்தினால், அது தனக்கு ஜோதிடர்களின் அறிவுரைப்படி பரிகாரமாக அமையும் என்று ஜெயலலிதா தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறாரோ என்றே தோன்றுகிறது. ஜோதிடர்களின் அறிவுரைப்படியே 1006 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தால், ஜெயலலிதாவுக்கு புண்ணியம் என்று எடுத்துக் கொண்டாலும் கூட, இத்திருமணங்களை ஜெயலலிதா தனது சொந்தப் பணத்தில் அல்லவா நடத்தி வைத்திருக்க வேண்டும் ? மக்கள் வரிப்பணத்தில் நடத்தி வைக்கும் திருமணங்களுக்கு உண்டான புண்ணியம் அவருக்கு எப்படி போகும் ?
திமுக மீதும், அதன் தலைவர் மீதும், அவர்களின் பரிவாரங்கள் மீதும் எழுந்த கடும் கோபத்தின் காரணமாக, ஜெயலலிதாவைப் பற்றி நன்கு தெரிந்தும் கூட, வேறு வழியின்றி மக்கள் மீண்டும் அவருக்கு அபிரிமிதமான ஒரு வெற்றியைத் தந்தார்கள். அந்த வெற்றி திமுக மீது உள்ள வெறுப்பால் வந்த வெற்றி என்பதை ஜெயலலிதா எப்போதுமே புரிந்துகொள்ள மாட்டார் போலிருக்கிறது. திமுக மீது இருந்த அந்த வெறுப்பு அதிமுக மீது திரும்ப நெடுநாட்கள் ஆகாது என்பதை ஜெயலலிதா உணர மறுக்கிறார்.
நேற்று மாநகராட்சியைக் கலைத்து விடுவேன் என்று ஜெயலலிதா சென்னை மாநகராட்சிக் கவுன்சிலர்கள் கூட்டத்தில் கடுமையாக பேசியிருக்கிறார் என்பதை ஊடகங்கள் புதனன்று பெரிய செய்தியாக வெளியிட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தல் முடிந்த மறுநாள் முதல், இந்தக் கவுன்சிலர்கள் கொள்ளையடிக்கத் தொடங்கி விட்டார்கள் என்பது ஊருக்கே தெரியும். சாலைகளில் செங்கல், மணல் கொட்டியிருப்பதைப் பார்த்தவுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் வசூல் செய்வதில் தொடங்கி, குப்பைகளைச் சரிவர அள்ளுவதற்குக் கூட பணம் வசூல் செய்வதாக பரவலான புகார்கள் உள்ளன.
கவுன்சிலர்கள் மட்டுமல்லாமல், அமைச்சர் பெருமக்களும் வசூல் வேட்டையைத் தங்கு தடையின்றி நடத்தி வருவது தலைமைச் செயலக வட்டாரத்தில் யாரைக்கேட்டாலும் தெரிகிறது. இந்த வசூல் வேட்டைகளைப் பற்றி எழுத வேண்டிய ஊடகங்கள், ஜெயலலிதா தரும் “அரசு விளம்பரங்கள்” என்ற லஞ்சத்தை வாங்கிக் கொண்டு, அமைதியாக இருக்கின்றன.
என்னமோ கவுன்சிலர்கள் லஞ்சம் வாங்குவது, கடந்த வாரம் தொடங்கியது போல, ஜெயலலிதா கடும் சினம் கொண்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. லஞ்சம் வாங்கும் கவுன்சிலர்களை எதற்காகத் திட்ட வேண்டும் ? உண்மையிலேயே நேர்மையான ஆட்சி வழங்க வேண்டும் என்ற எண்ணம் ஜெயலலிதாவுக்கு துளியாவது இருந்தால், லஞ்சம் வாங்கும் கவுன்சிலர்கள் மீது வழக்கு பதிவு செய்யச் சொல்லி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டியதுதானே ? அதைவிட்டு மாநகராட்சியைக் கலைத்து விடுவேன் என்ற வெற்று மிரட்டல் எதற்கு ? கோடிக்கணக்கான வரிப்பணத்தை செலவு செய்து, உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடித்த பிறகு, உள்ளாட்சிகளைக் கலைத்தால், அதனால் ஏற்படும் இழப்பை ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டை விற்று ஈடு செய்வாரா ? ஊழல் புரியும் கவுன்சிலர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கும் என்று ஜெயலலிதா அறிவித்தால் அதை மீறி கவுன்சிலர்கள் செயல்படுவார்களா ? அதை விடுத்து மாநகராட்சியை கலைப்பேன் என்று சொல்வது சரியான நிர்வாகமா ?
மேலும், இந்தக் கவுன்சிலர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் தானே, ஜெயலலிதா எங்கே சென்றாலும், பல கிலோமீட்டர்களுக்கு ப்ளெக்ஸ் போர்டுகளை வைத்து, வண்ண விளக்குகளைக் கட்டி, “தாயே… அம்மா… பிச்சைப் போடுங்கம்மா…” என்று பேனர்கள் வைக்கிறார்கள் ? இந்தக் கவுன்சிலர்களும், அமைச்சர்களும், தங்களுக்கு வரும் ஊதியத்தில் இது போன்ற விளம்பரங்களை வைக்க முடியுமா என்பது ஜெயலலிதாவுக்கு ஏன் உறைக்கவில்லை ? தாயே அம்மா என்று கூழைக்கும்பிடு போடும், அதிமுக அடிமைகள், எப்படியாவது குறுக்கு வழியில் சம்பாதிக்கவே இப்படி கூழைக்கும்பிடு போடுகிறார்கள் என்பது ஜெயலலிதாவுக்கு ஏன் புரியவில்லை ? வயது வித்யாசம் பாராமல், அதிமுக அடிமைகள் எப்போதும் காலில் விழுவது எதையாவது எதிர்ப்பார்த்தே என்பது ஜெயலலிதாவுக்கு ஏன் தெரியவில்லை ?
கடந்த ஒரு ஆண்டாக, தமிழகத்தில் தொழில் தொடங்க வரும், தொழிலதிபர்களும், ஏற்கனவே தொழில் செய்து கொண்டிருப்பவர்களும் அரசில் எந்த வேலையும் நடக்கவில்லை என்ற புலம்புவது ஜெயலலிதாவுக்குத் தெரியுமா ? ஜெயலலிதாவை அணுக முடியாததால், யாரை அணுகுவது, எப்படி அணுகுவது என்று புரியாமல் புலம்பி வருவது ஜெயலலிதாவுக்குத் தெரியுமா ? பெரும்பாலான தொழிலதிபர்கள், கருணாநிதி ஆட்சியே பரவாயில்லை, அப்போது வேலையாவது நடந்தது.. … இந்த ஆட்சியில் எந்த வேலையும் நடக்காமல் முடங்கிப்போயிருக்கிறது என்று புலம்புவது ஜெயலலிதாவுக்குத் தெரியுமா ?
13 அக்டோபர் 2011 அன்று உயர்பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை அனைத்து வாகனங்களுக்கும் எட்டு வாரங்களுக்குள் பொறுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு இன்னும் செயல்படுத்தப்படமல் இருப்பதற்கு, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர்தான் காரணம் என்பது ஜெயலலிதாவுக்கும் தெரியுமா ? அவர் சொன்ன நிறுவனத்துக்கு நம்பர் பிளேட்டுகள் தயாரிக்க டெண்டர் வழங்காத காரணத்தால், போக்குவரத்து ஆணையரும், போக்குவரத்துச் செயலாளரும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த இரு மாறுதல் ஆணைகளிலும் கையெழுத்திட்டது ஜெயலலிதாதானே ? அவருக்குத் தெரியாமலா இவையெல்லாம் நடந்து வருகிறது ? தான் மின்சார ஒழுங்குமுறை ஆணையராக வேண்டும் என்பதற்காக, கடந்த மூன்று மாதங்களாக அப்பதவியை காலியாகவே வைத்திருக்கிறாரே தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி… இவையெல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரியாமலா நடக்கிறது ? ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்த பரஞ்சோதி என்பவர், காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என்று ஜெயலலிதாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவிக்கிறது. ஒரு நேர்மையான ஆட்சியாளராக இருந்தால், பரஞ்சோதியை கைது செய்து விசாரிக்கவும் என்றல்லவா ஜெயலலிதா உத்தரவிட்டிருக்க வேண்டும் ? திமுக ஆட்சியில் நடந்த இடைத்தேர்தலில் பணம் கொடுக்கிறார்கள், என்று குற்றம் சுமத்தி விட்டு, புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அனைத்து அமைச்சர்களையும் புதுக்கோட்டைக்கு அனுப்பி விட்டு, ஒரு மாதத்துக்கு தலைமைச் செயலகத்தில் அனைத்துப் பணிகளையும் முடக்கிப் போட்டு, அத்தனை வீட்டுக்கும் வாக்குக்கு பணம் கொடுப்பதுதான் நேர்மையான ஆட்சி நடத்துவதன் லட்சணமா ? இப்படி மந்திரிப் பரிவாரங்களை ஒரு மாதத்துக்கு முகாம் போட வைத்து, பணம் கொடுத்து பெற்ற வெற்றியை ஒப்பிடுகையில், விஜயகாந்த பெற்ற 40 ஆயிரம் வாக்குகள், 4 லட்சத்துக்கு சமம். நேர்மையான ஆட்சி நடத்துவதை விட்டு விட்டு, திருமணம் நடத்தி வைப்பதுதான் அரசின் வேலையா ? தமிழ்நாட்டின் நிலையை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. ஆங்கிலத்தில், Jumping from the frying pan to fire என்று சொல்லுவார்கள். எண்ணைச் சட்டியிலிருந்து எரியும் நெருப்பில் விழுவது என்ற பொருளில். அதிமுக ஆட்சியை தேர்ந்தெடுத்த மக்கள், அதே எண்ணத்தில்தான் இருக்கிறார்கள்.
இந்த அநியாயங்கள், ஜெயலலிதாவுக்கு தெரிந்து நடந்தால் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது. தெரியாமல் நடந்தால், ஜெயலலிதா ஆட்சி நடத்த வக்கற்றவர் என்றே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
தன் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். அப்படித் தவறினால், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ஜெயலலிதாவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
திருமண ஆல்பம்.
அதிமுக அடிமைகள் வைத்திருந்த சில பேனர்கள்
விழாவுக்காக இயக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அரசுப்பேருந்துகளில் சில
திருமணம் முடிந்து அநாதையாக நடந்து வரும் மாப்பிள்ளை