செங்கல்பட்டு – ஜூன் 22:
சிறப்பு முகாமில் அவதிப்படும்
அகதிகளைக் காக்க ஆர்ப்பாட்டம்!
புகழேந்தி தங்கராஜ்
அலைபேசி: 98419 06290
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சொந்தங்களைத் திறந்தவெளி முகாமுக்கு மாற்ற வேண்டும் – என்கிற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக முதல்வருக்குத் தந்தி கொடுக்க 19ம் தேதி சென்னை அண்ணாசாலை அஞ்சலகத்தில் திரண்ட உங்கள் ஒவ்வொருவருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
ஜூன் 5ம் தேதிக்குள் 15 பேரை விடுதலை செய்வதாக உறுதிமொழி கொடுத்திருந்தது அரசு. மற்றவர்களைப் படிப்படியாக விடுவிப்பதாகவும் கூறியிருந்தது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசுக்கு எது தடையாக இருக்கிறது என்பது தெரியவில்லை. சொன்னதைச் செய்யுங்கள் – என்று அரசுக்கு நினைவூட்டவே தந்திப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெருமளவில் திரண்டு முதல்வருக்குத் தந்தி கொடுத்ததன் மூலம் அறவழியில் தொடங்கிய இந்த அறப் போராட்டம், வெள்ளிக்கிழமை (22.6.12) காலை 9 மணிக்கு, செங்கல்பட்டு சிறப்பு முகாம் அருகே நடக்க இருக்கும் ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகையின் வாயிலாக, தொடரவுள்ளது.
அண்ணாசாலை அஞ்சலகத்தில் திரண்டதைப் போல், செங்கல்பட்டிலும் நாம் திரளவேண்டும். கட்சி எல்லைகளைக் கடந்து ஒருவரோடொருவர் கைகோர்க்க வேண்டும். நமக்குள் ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், நம்மை நம்பி கடல்கடந்து வந்து, இந்த மண்ணிலும் அவதிப்படுகிற நமது சொந்தங்களுக்காகக் குரல்கொடுப்பதில், இந்த முரண்பாடுகளைக் கடந்த உடன்பாடு என்றென்றும் நமக்குள் இருக்கவேண்டும். அதுதான், நமது சொந்தங்களின் நம்பிக்கை மூச்சாய் அமையும்.
செங்கல்பட்டு சிறப்புமுகாமில் கடந்த ஒருவாரமாக உண்ணாவிரதம் இருந்துவருவோரில் எத்தனைப் பேரின் உடல்நிலை மோசமடைந்திருக்கிறது என்பது தெரியவில்லை. முகாமிலிருந்து மனநோய் மருத்துவமனைக்கு அடிக்கடி அழைத்துச் செல்லப்படுகிறவர்களின் நிலை குறித்துக் கேள்விப்படும்போது, அங்கே என்னதான் நடக்கிறது என்கிற கோபம் இயல்பாகவே எழுகிறது. அந்தத் தார்மீகக் கோபத்தின் அடிப்படையில்தான் நாம் போராடுகிறோம்.
நம்மை நம்பி வந்துள்ள நமது சொந்தங்களைக் காப்பாற்றும் பொறுப்பு – அரசுக்கு மட்டுமில்லை, நமக்கும் இருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும். அந்தப் பொறுப்பை நிறைவேற்ற, 22ம் தேதி காலை 9 மணிக்கு செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே கூடுவோம். எங்கள் சொந்தங்களை விடுவியுங்கள், பொய்வழக்குகளைத் திரும்பப் பெறுங்கள் – என்று வலியுறுத்துவோம்.
யார் யார் வருவார்கள் – என்கிற ஆராய்ச்சி அவசியமற்றது. தமிழினத்துக்காகப் போராடும் அனைவரும் நிச்சயமாக செங்கல்பட்டில் திரளுவார்கள். முதல்வருக்குத் தந்தி கொடுக்கும் நிகழ்வில் பங்கேற்காத நண்பர்கள் கூட, செங்கல்பட்டுக்கு வர தயாராவதைப் பார்க்கும் போது, நம்முடைய நம்பிக்கை வலுப்படுகிறது.
செங்கல்பட்டு அறப்போர் தொடர்பான செய்திகளை ஊடகங்கள், முகப்புத்தகம், இணையதளங்கள், மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் மூலம் பரப்புவதில் நீங்கள் அனைவரும் பங்கெடுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
22ம் தேதி காலையில் செங்கல்பட்டில் சந்திப்போம்.
நன்றி!
என்றும் அன்புடன்,
புகழேந்தி தங்கராஜ்
ஜூன் 20, 2012..
=====================================================