இந்தத் திரிபாதி வேறு யாருமல்ல… …. சென்னை மாநகர ஆணையாளர் ஜலதகுமார் திரிபாதிதான்.
யாரிடம் சரிபாதி பெற்றார் என்றால், இந்த மாதம் ஓய்வு பெற இருக்கும் முன்னாள் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரும் கூடுதல் டிஜிபியுமான துக்கையாண்டியிடம்தான். துக்கையாண்டி எதற்காக திரிபாதிக்கு சரிபாதி கொடுக்க வேண்டும் ? இதில்தான் சுவையான தகவலே அடங்கியிருக்கிறது. இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன்பாக, துக்கையாண்டியைப் பற்றி, ஏற்கனவே சவுக்கில் வந்த இரண்டு கட்டுரைகளைப் படித்தீர்களென்றால், துக்கையாண்டி எப்படிப்பட்டவர், எவ்வளவு சிறப்பானவர், என்பது போன்ற விபரங்கள் தெரியும்.
படித்து விட்டீர்களா… ஓரளவுக்கு துக்கையாண்டி யார் என்பது புரிந்திருக்கும். இந்த மாதம் 30 ஜுன் அன்று, துக்கையாண்டி வயது மூப்பின் காரணமாக பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டும். அப்படி ஓய்வு பெரும்போது, எல்லா அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்படும் பென்ஷன், ஈட்டுறுதித் தொகை எல்லாம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் துக்கையாண்டி இவற்றையெல்லாம் பெறுவாரா என்பது சந்தேகம்தான். ஏன் பெறமாட்டார்… ? துக்கையாண்டி நேர்மையான அதிகாரியாயிற்றே.. என்று சில காவல்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பக் கூடும். துக்கையாண்டி எப்போதுமே நேர்மையானவர் அல்ல. காவல்துறையில் நேர்மையானவர்கள் என்று பசுத்தோல் போற்றிக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் சிபி.சிஐடி கூடுதல் டிஜிபி நரேந்திர பால் சிங் போல இவரும் ஒரு பசுத்தோல் போர்த்திய புலி. அவ்வளவே.
துக்கையாண்டி இப்போது என்ன சிக்கலில் சிக்கியிருக்கிறார் தெரியுமா ? நில அபகரிப்பு வழக்கில். எப்படி என்பதை விரிவாகப்பார்போம்.
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜையா என்பவர், ரவி என்பவரோடு ஒரு நிலத்தை வாங்க ஒப்பந்தம் போடுகிறார். அந்த ஒப்பந்தத்துக்காக முன்பணமாக 5 லட்சத்தைத் தருகிறார். அந்த நிலம், சென்னை நீலாங்கரையில் மனை எண் 257. இதன் மொத்தப் பரப்பளவு 12 ஆயிரம் சதுர அடி. இந்த வியாபார ஒப்பந்தம், நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் 08.09.2008 அன்று பதிவு செய்யப்படுகிறது. மொத்த விற்பனை மதிப்பு 30 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்படுகிறது.
வியாபார ஒப்பந்தம் போட்ட இந்த ரவி என்பவர், மும்பையைச் சேர்ந்த மகேந்திர குமார் கம்பானி (குஞ்ஞானி அல்ல கம்பானி) மற்றும் மாலினி மகேந்திர குமார் நவீன் சந்திர கம்பானி ஆகியோரின் ஒரே வாரிசான சந்திரேஷ் கம்பானி ஆகியோரின் அதிகாரப் பத்திரத்தைப் பெற்ற நபர் என்ற அடிப்படையில் இந்த ஒப்பந்தம் போடப்படுகிறது. இந்தக் கம்பானி தம்பதியர் 1967ம் ஆண்டில் சொக்கலிங்கம் முதலியார் என்பவரின் அதிகாரப் பத்திரம் பெற்ற கணேசன் என்பவரிடமிருந்து 25.02.1967 அன்று வாங்குகிறார்கள். கம்பானி தம்பதியர் இறந்து போகும் முன், தங்கள் ஒரே மகனான சந்திரேஷ் கம்பானிக்கு இந்தச் சொத்தை எழுதி வைத்து விடுகின்றனர். இந்த சந்திரேஷ் கம்பானி, ரவியை தன்னுடைய அதிகாரம் பெற்ற முகவராக பத்திரம் பதிவு செய்ததன் அடிப்படையிலேயே ராஜைய்யாவோடு ரவி ஒப்பந்தம் போடுகிறார்.
ஒப்பந்தம் போட்டு முடித்ததும் பத்திரப்பதிவு செய்யும் முன்பாக, அந்தச் சொத்துக்கு வில்லங்கக் சான்று போட்டுப் பார்க்கிறார் ராஜைய்யா. வில்லங்கச் சான்று போட்டுப் பார்த்த ராஜைய்யாவுக்கு அதிர்ச்சி. நீலாங்கரை சார்பதிவகத்தில் வழங்கப்பட்ட வில்லங்கச் சான்றைப் பார்த்தால், அந்தச் சொத்து ஏற்கனவே விற்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
மும்பையைச் சேர்ந்த மகேந்திரக் குமார் கம்பானி என்பவரும், அவர் மனைவி மாலினி மகேந்திரக் குமார் நவீன் சந்திரக் கம்பானி என்பவரும் சேர்ந்து 12.04.2007 அன்று மகாலிங்கம் என்பவரின் மனைவி தனலட்சுமி என்பவருக்கு அதிகாரப்பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்கள். இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால், மாலினி கம்பானி 07.02.1980 அன்று இறந்து விடுகிறார். அவரது கணவர் மகேந்திர குமார் கம்பானி 26.08.1997 அன்று இறந்து விடுகிறார். இப்படி இறந்து போன இந்தத் தம்பதியர் தனலட்சுமிக்கு 12.04.2007 அன்று அதிகாரப்பத்திரம் எழுதித் தருகிறார்களாம்.. … எப்படி இருக்கிறது ?
இந்த அதிகாரப்பத்திரத்தை திருச்சி இணை சார்பதிவாளர், ஆவண எண் 210/2007ல் பதிவு செய்து தருகிறார். இந்த கடமை தவறாத இணைச் சார்பதிவாளர், இதைப் பதிவு செய்யும் தனலட்சுமி அவர் கொடுத்த முகவரியில் வசிக்கிறாரா என்பதை சரிபார்க்கவில்லை. மும்பையில் இருக்கும், கம்பானி தம்பதியர் உண்மையிலேயே தனலட்சுமிக்கு அதிகாரப்பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்களா, அவர்கள் உயிரோடாவது இருக்கிறார்களா என்பதைக் கூட சரிபார்க்கவில்லை. நீங்கள் ஏதாவது சொத்து பதிவு செய்ய பதிவாளர் அலுவலகம் சென்றால், என்னென்ன ஆவணம் கேட்கிறார்கள் ? இதில் ஏன் எவ்வித சரிபார்த்தலும் இல்லாமல், அவசர அவசரமாக பதிவு செய்து கொடுத்தார் அந்த சார்பதிவாளர். பின்னால் பார்ப்போம்.
நிலத்தை வாங்க நினைத்த ராஜைய்யா, யார்தான் இந்த தனலட்சுமி என்று கண்டுபிடிப்போம் என்று விசாரித்தால், மேலும் சில தகவல்கள் வருகின்றன. இதே தனலட்சுமி, அந்தப் பத்திரத்தை பதிவு செய்த அதே நாளில், அதே அலுவலகத்தில் மற்றொரு அதிகாரப்பத்திரத்தை தயார் செய்கிறார். மும்பையைச் சேர்ந்த மற்றொரு தம்பதி மோதிலால் கரம்தாஸ் தலால் மற்றும் அவரது மனைவி குணவந்திரி கரம்தாஸ் தலால் ஆகிய இருவரும், சென்னை நீலாங்கரையில் உள்ள ப்ளாட் எண் 277க்கு தனலட்சுமிக்கு அதிகாரப்பத்திரம் வழங்குகிறார்கள். இந்தப் ப்ளாட் எண்ணின் மொத்த சதுர அடி 12 ஆயிரம். இந்த ப்ளாட் எண் 277 ஏற்கனவே பதிவு செய்த ப்ளாட் எண் 257க்கு அருகாமையில் உள்ள ப்ளாட். இரண்டையும் சேர்த்தால் மொத்தம் 24 ஆயிரம் சதுர அடி. பத்து க்ரவுண்டுகள்.
இவ்வாறு அதிகாரப் பத்திரம் பெற்ற தனலட்சுமி, அடுத்த மாதமே சுப்புலட்சுமி என்பவருக்கு விற்கிறார். அந்தப் பத்திரம், நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எண் 3052/2007ல் பதிவாகிறது. இந்த நீலாங்கரை சார்பதிவாளரும், எந்த ஆவணங்களையும் சரிபார்க்கவில்லை. திருச்சியில் பதிவு செய்யப்பட்ட அதிகாரப் பத்திரத்தில், தனலட்சுமி தான் குடியிருக்கும் முகவரியாக, பதிவு செய்திருந்தது எண் 30, வாளையார் கோயில் தெரு, டாக்டர் அம்பேத்கர் லே அவுட், திருச்சி.3. சென்னையில் சுப்புலட்சுமிக்கு விற்பனை செய்கையில் பதிவு செய்திருந்த முகவரி, எண் 7, 2வது தளம், ராமமூர்த்தி அபார்ட்மென்ட்ஸ், விருகம்பாக்கம், சென்னை 92. நீலாங்கரை சார்பதிவாளராவது இதை சரிபார்த்தாரா என்றால் இல்லை.
இவர் ஏன் சரிபார்க்கவில்லை ? லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியின் மனைவி சொத்து வாங்கும்போது இதையெல்லாம் சரிபார்க்க முடியுமா ? அதிர்ச்சி அடையாதீர்கள். இந்த 10 கிரவுண்டு நிலத்தையும் வாங்கியது தற்போது கூடுதல் டிஜிபியாக உள்ள துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமி. இந்த 10 கிரவுண்டுகளையும் வாங்கிய சுப்புலட்சுமி, 22.04.2008 அன்று நீலாங்கரை சார் பதிவகத்தில், 10 கிரவுண்டுகளையும் தனது மகள் யூபு என்பவருக்கு தானமாக வழங்குகிறார். என்ன ஒரு பெருந்தன்மை ? திருச்சியில் உள்ள சார்பதிவாளரும், நீலாங்கரை சார்பதிவாளரும், துக்கையாண்டியின் இந்த அயோக்கியத்தனங்களுக்கு துணை போகாமல் இருந்தால், அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்கு பாய்ந்திருக்கும்.
எப்படி இருக்கிறது ஒரு கூடுதல் டிஜிபியின் சிறப்பான சேவை பார்த்தீர்களா ?
சரி.. துக்கையாண்டி நில அபகரிப்பு செய்கிறார். அவருக்கு உதவியாகவும், பங்குதாரராகவும் ஒருவர் வேண்டாமா ? வேண்டுமல்லவா ? அந்தப் பங்குதாரர் யாரென்றால் அவர்தான் காமராஜ். குருமாராஜ் என்று சவுக்கு வாசகர்களால் அன்போடு அழைக்கப்படும் நக்கீரன் காமராஜ் இன்று முதல் காண்ட்ராக்டர் காமராஜ் என்று அழைக்கப்படுவார்.
துக்கையாண்டிக்கும், காமராஜுக்குமான உறவு என்பது, துக்கையாண்டி சிபி.சிஐடியில் எஸ்.பியாக இருந்து, ப்ரேமானந்தா வழக்கை விசாரித்தபோதே தொடங்கி விட்டது. அப்போது துக்கையாண்டி கொடுத்த பிரத்யேக படங்களை வைத்து, நக்கீரன் தங்கள் விற்பனையை பல மடங்கு அதிகரித்தது.
2ஜி ஊழல் என்பது, நாம் அனைவரும் முழுமையாக தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு ஒரு பெரிய மாயச்சுழல். 2ஜி ஊழலில் மொத்தம் எவ்வளவு தொகைதான் சம்பந்தப்பட்டுள்ளது என்பதையும், எவ்வளவுதான் கருணாநிதி குடும்பத்தாரும், ஆ.ராசாவும் சம்பாதித்தார்கள் என்பதையும் நம்மால் என்றுமே தெரிந்து கொள்ள முடியாது. வண்டியில் தள்ளிச் சென்று துணிகளை விற்கும் ஒரு சாதாரண மனிதனாக இருந்த சாதிக் பாட்சா எப்படி மிகப்பெரிய தொழில் அதிபர் ஆனார் ? (சவுக்கு கட்டுரை படியுங்கள்). இது போல 2ஜி ஊழலில் உள்ள ஏகப்பட்ட பணம் எங்கே சென்றது என்றே நமக்குத் தெரியாது. மே 2007ல் ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆனதுமே இத்துறையில் எவ்வளவு பணம் கொட்டப் போகிறது என்பதை நன்கு அறிந்து கொண்டார். கருணாநிதி குடும்பத்துக்கு பெரும் பங்கை கொடுத்தாலும், தனக்கென்று பணம் வேண்டுமல்லவா ? அவ்வாறு ராசா சேர்த்துக் கொண்ட தொழில் கூட்டாளிகள்தான் சாதிக் போன்றவர்கள்.
ராசாவோடு சேர்ந்து தொழிலதிபரான மற்றொருவர்தான் காண்ட்ராக்டர் காமராஜ். 22 ஜனவரி 2008 அன்று காமராஜ், அய்ந்திரம் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தை தொடங்குகிறார். இந்த நிறுவனத்தில் காமராஜோடு சேர்ந்து பங்குதாரராக இருந்தவர் பி.எஸ்.சுமதி என்பவர். இவர் யாரென்ற விபரங்கள் தெரியவில்லை. சாதிக் தொடங்கிய நிறுவனங்கள் மற்றும் காமராஜ் தொடங்கிய நிறுவனங்களின் உண்மையான நோக்கமே, 2ஜி ஊழலில் வந்த கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதே. சாதிக்குடைய நிறுவனங்கள் குறுகிய காலத்தில் எப்படி பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்தனவோ, அதே போல கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்காக தொடங்கப்பட்ட நிறுவனம்தான் அய்ந்திரம் கட்டுமான நிறுவனமும்.
இந்த நிறுவனம் பெரிய அளவில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டதற்கான விபரங்கள் தெரியவில்லை என்றாலும், ராசாவின் செயலாளராக இருந்த அகிலன் ராமநாதனுக்காக திருச்சியில் இரண்டரை லட்சம் சதுர அடியில் ஒரு பொறியியல் கல்லூரி கட்டப்பட்டுள்ளது என்கின்றன தகவல்கள். ஒரு சதுர அடி 850 ரூபாய் என்ற விலையில் 2.5 லட்சம் சதுர அடிக்கு, 35 கோடியே 50 லட்சம் பெற்றுள்ளது இந்த நிறுவனம் என்கின்றன தகவல்கள். அதே போல, திருச்சியில், இளங்கோவன் என்ற ஒரு கல்லூரியை ஒரு சதுர அடி 950 ரூபாய் என்ற விலையில், ஒன்றரை லட்சம் சதுர அடி கட்டிடத்தை கட்டித் தந்து 14 கோடியே 25 லட்சம் ரூபாய் லாபம் பார்த்துள்ளதாகத் தெரிகிறது.
இது தவிரவும், காமராஜ் திருச்சி பொதுப்பணித்துறையில் முதல் வகுப்பு ஒப்பந்ததாரராக பதிவு செய்துள்ளார். இதற்கான ஒப்பந்தக் கடிதம், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் தங்ககப்பிரகாசம் என்பவரால் வழங்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு ஒப்பந்ததாரர் என்றால், 75 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள அரசுக் கட்டுமானப் பணிகளைப் பெறுவது. காமராஜ் கருணாநிதியோடு எந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். கருணாநிதிக்கும், திமுகவுக்கும் ஆதரவாக நக்கீரன் இதழில் எப்படியெல்லாம் எழுதினார் என்பதும் சவக்கு வாசகர்களுக்கு நன்கு தெரியும்.
பொதுப்பணித்துறையை தன்னுடைய பொறுப்பில் கருணாநிதி நான்கு ஆண்டுகளுக்கு மேலாக வைத்திருந்த நிலையில், காமராஜ் முதல் வகுப்பு ஒப்பந்ததாரராக பொதுப்பணித்துறையில் பதிவு செய்திருந்தது மானமுள்ளவன் செய்யும் செயலா ? இப்படி ஒரு செயலைச் செய்த காமராஜ், அவருடைய வீட்டில் சிபிஐ சோதனை மேற்கொண்டது தொடர்பாக வெளியிடப்பட்ட ஒரு செய்தியில், அவர் மனைவி ஜெயசுதா, நீரா ராடியாவின் சென்னை அலுவலகத்தில் வேலை பார்க்கிறார் என்று ஒரு செய்தி வெளியிட்டதற்காக அந்நிறுவனத்தின் பத்திரிக்கை நிருபர் ஒருவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து, அதைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். காமராஜெல்லாம் மானத்தைப் பற்றி யோசிக்கலாமா ?
இப்படி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தொழில் நடத்தி வந்த அய்ந்திரம் கட்டுமான நிறுவனம் சம்பாதித்த லாபத்துக்கு இதுவரை தமிழக அரசுக்கு மட்டும் 50 லட்ச ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. தன்னுடைய தொழிலை சிறப்பாக நடத்தி வந்த காண்ட்ராக்டர் காமராஜ், தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கு தடையாக வந்தது, சிபிஐ விசாரணை. 2009 இறுதி முதலே சூடு பிடிக்கத் தொடங்கிய 2ஜி ஊழல், ஜுன் 2010ல் நீரா ராடியா டேப்புகள் வெளியானபோது மிகவும் பரபரப்படைந்தது. ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி என்று மொத்த நஷ்டத்தை நிர்ணயம் செய்த சிஏஜி அறிக்கை 10 நவம்பர் 2010 அன்று வெளியான பிறகு, நாடெங்கும் எழுந்த கடும் எதிர்ப்புக்களைத் தொடர்ந்து ராசா ராஜினாமா செய்தார். நவம்பர் 25 அன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, நீதிபதிகள் ராசாவை விசாரிக்காத சிபிஐக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இனி விசாரணையில் சிக்குவதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற நிலை ஆனது ராசாவுக்கு.
அந்த நேரத்தில், 1 டிசம்பர் 2010 அன்று காமராஜ், தான் தொடங்கிய அய்ந்திரம் கட்டுமான நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்கிறார். அவர் ராஜினாமாவை மற்ற இயக்குநர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். இதுதான் காண்ட்ராக்டர் காமராஜின் கதை.
இப்போது துக்கையாண்டிக்கும் காமராஜுக்குமான உறவு என்ன என்பது புரிகிறதா ? துக்கையாண்டி நிலத்தை அபகரிப்பார். காமராஜ் அதில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வார். சரியான ஜோடிதான் அல்லவா ?
சரி இப்போது தலைப்புக்கு வருவோம். திரிபாதி பெற்றாரா திரிபாதி என்று ஏன் சொல்ல வேண்டும் ? துக்கையாண்டியின் மனைவி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நாள் 23 ஏப்ரல் 2012. இது வரை இந்த வழக்கில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா ? 60 நாட்களாக திரிபாதி என்ன செய்து கொண்டிருக்கிறார் ? துக்கையாண்டி 30 ஜுன் 2012ல் ஓய்வு பெற உள்ளார். ஓய்வு பெறுகையில் அவருக்கு ஓய்வு காலப் பயன்களாக எப்படியும் 15 லட்ச ரூபாய் வரும். அவர் பணியில் இருக்கும் போது நடவடிக்கை எடுத்தால் அந்த 15 லட்ச ரூபாயும் வராது. ஓய்வூதியமும் வராது. ஓய்வு பெற்ற பிறகு நடவடிக்கை எடுத்தால், ஓய்வூதியத்தை பெற முடியும்.
மேலும், இரண்டு மாதமாக துக்கையாண்டி மீதும், அவர் மனைவி மற்றும் மகள் மீதும் நடவடிக்கை எடுக்காமல், எதற்காக அமைதியாக இருக்கிறார் ? இது மட்டுமல்ல. சவுக்குக்கு கிடைத்திருப்பது ஒரே ஒரு முதல் தகவல் அறிக்கை மட்டுமே. இது ஏப்ரல் மாதத்தில் பதியப்பட்டது. மே மாதம், துக்கையாண்டியின் மனைவி மீதும், மகள் யூபு மீதும், மற்றொரு மகள் யாமினி மீதும், மேலும் இரண்டு எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவை எதிலுமே நடவடிக்கை எடுக்காமல் திரிபாதியை தடுப்பது எது ? இந்த முதல் எப்ஐஆரை ரத்து செய்யும்படி, துக்கையாண்டியின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, அந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கின் எப்ஐஆரை உயர்நீதிமன்றம் ரத்து செய்யும் வரை காத்திருக்கப் போகிறாரா திரிபாதி ? இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து செய்திகள் துளி கூட கசியாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார் திரிபதி என்றால், துக்கையாண்டி மீது அவருக்கு அப்படி என்ன அக்கறை -?
இந்த வழக்கில் புலனாய்வு மேற்கொண்டு, திருச்சி சார் பதிவாளரையும், நீலாங்கரை சார்பதிவாளரையும் விசாரித்தாலே, இந்த வழக்கில் துக்கையாண்டியின் பங்கு என்ன என்பது துல்லியமாகத் தெரியும். நில அபகரிப்பில் ஈடுபட்ட துக்கையாண்டியின் மனைவி மற்றும் மகளை விட, லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிக் கொண்டு, பதிவுத் துறை சார் பதிவாளர்களை மிரட்டிய துக்கையாண்டியே பெரிய குற்றவாளி. இந்தத் துக்கையாண்டி இணை இயக்குநராக அமர்ந்து கொண்டு, ஐநூறும், ஆயிரமும் வாங்கும் விஏஓக்களையும், மின்சாரத்துறை ஊழியர்களையும் கைது செய்ய உத்தரவிட்டுக் கொண்டிருந்தார் என்பதை உங்களால் சகித்துக் கொள்ள முடிகிறதா ? சென்னை பனையூரில் இரண்டரை க்ரவுண்டில் வீடு வைத்திருக்கும் துக்கையாண்டி, போலி பத்திரம் தயார் செய்து 10 க்ரவுண்டுகளை அபகரித்திருக்கிறாரே… இவரை விடவா 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஓ தவறு செய்து விட்டார் ?
கடந்த திமுக ஆட்சியில் துக்கையாண்டி லஞ்ச ஒழிப்புத் துறையின் இணை இயக்குநராகவும், கூடுதல் இயக்குநராகவும் பணியாற்றினார். அப்படிப் பணியாற்றிய காலத்தில், துக்கையாண்டி முழு நேரமும் ஆற்றிய பணி, உச்ச நீதிமன்ற தடையுத்தறவு நீக்கப்பட்ட பிறகு, ஜெயலலிதா மீது உள்ள பெங்களுரு சொத்துக் குவிப்பு வழக்கை தீவிரப்படுத்தியதுதான். இப்படிப்பட்ட அதிகாரிகளை கருணாநிதியாவது மன்னிப்பார். ஜெயலலிதா ஒரு காலும் மன்னிக்க மாடடார். இந்தக் காரணத்தினால்தான் ஜெயலலிதா, கடந்த ஒரு ஆண்டாக துக்கையாண்டிக்கு எந்தப் பதவியும் வழங்காமல், கட்டாயக் காத்திருப்பில் வைத்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கு இந்த விஷயம் தெரிந்தால், திரிபாதியை கன்னியாக்குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு வாட்ச்மேனாக ஆக்கி விடுவார் என்பது திரிபாதிக்கு நன்கு தெரியும்.
ஜெயலலிதாவுக்குத் தெரிந்தால் தப்பிக்கவே முடியாது என்பது நன்கு தெரிந்தும் துக்கையாண்டி மீது நடவடிக்கை எடுக்காமல் திரிபாதி அமைதி காப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும் ?
அவர் சரிபாதி வாங்கி விட்டார் அல்லது வாங்கத் திட்டமிட்டிருக்கிறார் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் ?