திமுகவினர் மீது தொடரும் வழக்குகளைக் கண்டித்து சமீபத்தில் முகநூலில் சவுக்கு ஒரு கருத்து வெளியிட்டிருந்தது. அந்தக் கருத்து.. …
“மின் கட்டணமும், பேருந்துக் கட்டணமும், பால் விலையும் உயர்ந்தபோது மறியல் செய்து சிறை நிரப்பாத திமுக, வீரபாண்டி ஆறுமுகத்தையும், இதர திமுக ரவுடிகளையும் கைது செய்கையில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துகிறது. வீரபாண்டி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படக் கூடாதென்றால், தமிழகத்தில் வேறு யாரையுமே கைது செய்ய முடியாதே… ? திமுக என்ற கட்சி மக்களுக்கா இருக்கிறதா திமுக ரவுடிகளின் பாதுகாப்புக்கா ?”
அதற்கு நண்பர் யுவகிருஷ்ணா இப்படி ஒரு பதிலை எழுதியிருந்தார்.
“Yuva Krishna” ஆட்சி மாறி ஒன்றரை வருஷம் ஆவப்போவுது. இன்னும் திமுகவையே நொட்டிக்கிட்டு திரியுது நம்ம சவுக்கு. அதிமுக பக்கம் சவுக்கை திருப்பினா சங்கை நொங்கிடுவாங்கன்னு தெரியாத லெவலுக்கு அப்பாவியா என்ன நம்ம சவுக்கு. ம்ம்.. இதெல்லாம் ஒரு பொழைப்பு.. 🙁 “
சமூக வலைத்தளங்கள் இன்று கணினி அறிவுபெற்றோரின் வாழ்வில், ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக வளர்ந்துள்ளது என்றால் அது மிகையல்ல. க்ரீஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு இத்தகைய சமூக வலைத்தளங்கள் பெரிதும் உதவியாக இருந்தன என்பதை விட, அதை அந்த நாடுகளில் பயன்படுத்துபவர்கள், சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்கள்.
தமிழ்ச் சூழலில் இத்தகைய சமூக வலைத்தளங்கள் சமூகப் பயன்பாட்டுக்குப் பயன்படுவதை விட, தனிமனித துதிபாடல்கள் அல்லது மோசமான வசைபாடல்களுக்கே பயன்பட்டு வருகிறது என்பது வேதனையான விஷயம். மக்களுக்காக பணியாற்றுவோர், மக்கள் பிரச்சினைகளை எடுத்து போராடுவோர், அவர்களுக்காக வழக்கு போடுவோர், அமைப்புகள் ஆகியவை இத்தளங்களை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. பொது நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுப்பதையும் தாண்டி, பலரின் திருமண அழைப்புகளே இது போன்ற தளங்களில் நடத்தப்படுகின்றன. பல ஆண்டுகளாக தொடர்பு அற்றுப்போன நண்பர்களோடு தொடர்பு கொள்ளவும், பிரிந்தவர் கூடவும் இவ்வலைத்தளங்கள் பயன்படுகின்றன.
தமிழ்ச்சூழலில் இவ்வலைத்தளங்களின் பயன்பாடு மிகவும் வேதனையளிப்பதாகவே இருக்கிறது. சமூக அவலங்களை புகைப்படங்களாகவும், செய்திகளாகவும் மற்றவர்களோடு பகிருபவர்கள் இருக்கிறார்கள் என்றாலும், அவதூறு செய்வதையே அன்றாட வேலையாகக் கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவை ஒருபக்கம் என்றால், சாதிப்பெருமை பேசுவதற்கும் இவ்வலைத்தளங்கள் பெரிய அளவில் பயன்படுகின்றன.
இத்தளங்களில் பெரிதும் விவாதிக்கப்படும் பொருட்கள், சாதி, ஈழம், பெண்கள். தலித்துகளுக்கான ஆதரவு நிலைபாடும், இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நிலைபாடும் கடுமையாக விவாதிக்கப்படுகின்றன. ஈழம் குறித்த விவாதங்கள், பல்வேறு அரசியல்கட்சிகளின் நிலைபாட்டை குறை சொல்வதாகவும், அமைகின்றன. இந்த விவாதங்கள் அனைத்தும் வரவேற்கத்தக்கவையே. கருத்துப்பரிமாற்றமும், விவாதங்களும் நம்மைப் பண்படுத்துவதற்காகவே… …
ஆனால், ஒரு சிலரின் விவாதங்கள், நாகரீக சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக உள்ளன. பார்ப்பனீயம் சாதிக் கட்டமைவை நிறுவி அதைக் காப்பாற்றியது என்பதும், பார்ப்பனீயம் கண்டிக்கப்பட வேண்டியது என்பதும் மறுக்க முடியாதது. அதே நேரத்தில் ஒருவர் பிறப்பால் பார்ப்பனராக இருந்துவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை இழித்துப் பேசுவதும், நீ பார்ப்பான் எனச் சாடுவதும், பிறப்பால் தலித்துகளை இழித்துப் பேசுவதற்கு ஒப்பானதே. இது போன்ற பார்ப்பனச் சாடல்கள் இச்சமூக வலைத்தளங்களில் நிரவிக் கிடக்கின்றன. ஒரு மனிதனின் செயல்பாடுகளை வைத்து மட்டுமே அவனை அளவிட முடியும். பிறப்பாலும், தோற்றத்தாலும் அவனை அளவிடத் தொடங்கினோமேயானால், அதற்கு யார்தான் தப்ப முடியும் ?
“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்ட ளைக் கல்” என்கிறார் வள்ளுவர்.
சாதி உணர்வையும், சாதித் திமிரையும், சாதிப்பாசத்தையும் நாம் சாடவேண்டுமா என்றால் நிச்சயம் சாடியே தீர வேண்டும். சாதியற்ற சமூகம் அமைய வேண்டும் என்று விரும்புவோர் இதை மறுக்கமாட்டார்கள். ஒருவர் சாதிப்பாசத்தோடோ, மற்ற சாதியின் மீது வெறுப்போடோ நடந்து கொள்கிறார் என்றால், அதை கண்டித்தே தீர வேண்டும். ஆனால் பிறப்பால் ஒருவர் ஒரு சாதியில் பிறந்து விட்டார் என்பதற்காகவே அவரைச் சாடுவது என்பது சாதீய மனோபாவமே ஆகும்.
ஒரு கவிஞரோ, ஒரு ஓவியரோ, வேறொரு படைப்பாளியோ ஏதாவது தலித்துக்கு எதிராக பொருள்படும்படி ஒரு கருத்து சொல்லிவிட்டால், அவரை கடித்துக் குதறி, அக்கு அக்காக பிரித்து, அவர் பின்புலத்தையும் அவர் குடும்பத்தினரையும் இழுத்து, முகநூலில் நடக்கும் விவாதங்கள் குமட்டலை வரவழைக்கத் தக்கன. சாதி மறுப்பு என்பதும், சாதி ஒழிப்பு என்பதும் பேச்சிலா இருக்கிறது ? செயலில் இருக்க வேண்டாம் ? நேரத்தை செலவழித்து மாங்கு மாங்கென்று நிலைச் செய்திகளும், பின்னூட்டங்களும் போடுவதால் சாதி ஒழிந்து விடப்போகிறதா என்ன ? அப்படியே நாம் விவாதிக்கிறோம் என்றே வைத்துக் கொண்டாலும், அந்த விவாதங்கள் நாகரீகமாக இருக்க வேண்டாமா ?
ஒடுக்கப்பட்டவர்கள் என்பதாலேயே தலித்துகள் கடவுள்களாகி விட மாட்டார்கள். அவர்களும் மனிதர்களே… மற்றவர்கள் செய்யும் தவறைச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்யும் அதே வேளையில், தலித்துகள் செய்யும் தவறையும் சுட்டிக் காட்ட வேண்டியது நியாய உணர்வுள்ள அத்தனை பேரின் கடமை. ஆனால் தலித்துகளில் யாராவது ஒருவர் செய்த தவறை முகநூலில் சுட்டிக் காட்டியவர்கள் தொலைந்தார்கள். அதிலும் அவர் பார்ப்பனராக இருந்தால் … … சொல்லவே வேண்டியதில்லை.
ஒரு கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளாமல், அவர் பிறப்பைச் சுட்டிக்காட்டிச் சாடுவது எந்த வகையிலான ஜனநாயகம் ? இவ்வாறு பிறப்பைச் சுட்டிக்காட்டியோ, அல்லது அந்தக் கருத்தை எதிர்கொள்ளாமல் அவர் மீது முற்சாய்வு (Prejudice) குற்றச்சாட்டைச் சொல்லுவதோ, அக்கருத்தை எதிர்கொள்ள முடியவில்லை என்பதைத்தானே காட்டுகிறது ?
முகநூலில் இருந்த பெண் கவிஞர் ஒருவர், தற்போதெல்லாம் முகநூலுக்கு வருவதே அச்சமாக இருக்கிறது என்கிறார். அங்கே நடக்கும் குழாயடிச் சண்டைகள் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கிறது என்பதால், தான் முகநூலிலிருந்து விலகியே இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
சமீபத்திய சர்ச்சை லீனா மணிமேகலை என்ற கவிஞர் டாடா நிறுவனத்துக்காக பழங்குடிப் பெண்களுக்காக டாடா நிறுவனம் பாடுபடுவதாக எடுக்கப்பட்ட ஆவணப்படம் பற்றியது. இயற்கை வளங்களை சூறையாடுவதற்குத் தடையாக இருக்கும் பழங்குடி மக்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனம் டாடா நிறுவனம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்நிறுவனத்தின் கையாளாக லீனா செயல்பட்டிருக்கிறார் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. அதற்காக லீனா மணிமேகலை விமர்சனம் செய்யப்படக் கூடியவரா என்றால் நிச்சயம் செய்யப்படக்கூடியவரே. அதற்காக, அவர் மீது பாலியல் ரீதியான அவதூறுகளை அள்ளி வீசுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா ?
இது குறித்து முகநூலில் உள்ள ஒரு நிலைச்செய்தி
“உன் முற்போக்கு ஊளைச் சத்தத்தை விட தன் குழந்தையின் பாலுக்காக நெடுஞ்சாலை புளிமரத்தடியில் தன்னை 20 ரூபாய்க்கு விற்றுக் கொள்கிற ஏழைத் தாய் மேலானவள்”
இதுவா விமர்சனம் ? இதற்கு 93 லைக்குகள் வேறு.. !!! போலிக் கம்யூனிச வேஷம் போட்டுக் கொண்டு கார்ப்பரேட்டுகளின் முகவர்களாகச் செயல்படுபவர்கள் அம்பலப்படுகையில் நாம் ஏன் அவர்களை உதாசீனப்படுத்தி, புறக்கணிக்கக் கூடாது ? அந்தப் புறக்கணிப்பை விடவா அவதூறு வார்த்தைகள் காயத்தை ஏற்படுத்தி விடும் ? இதுபோன்ற அவதூறுகள் லீனா மணிமேகலையை சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் ஆக்கி விடாதா ?
இதைத்தானே கார்ப்பரேட்டுகள் விரும்புகிறார்கள் ? முற்போக்குச் சக்திகள் ஒன்றுபட்டு விடக் கூடாது என்பதைத்தானே கார்ப்பரேட்டுகள் உறுதி செய்து கொண்டிருக்கிறார்கள் ? இந்தியாவையே சூறையாடும் பொது எதிரியான கார்ப்பரேட்டுகளை எதிர்ப்பதில் நம் குரல் ஒற்றுமையாக ஒலிக்க வேண்டாமா ? நமக்குள் நடக்கும் குழாயடிச் சண்டைகளை கார்ப்பரேட்டுகள் எவ்வளவு விருப்பத்தோடு ரசிப்பார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்.
இன்றைய தாராளமய பொருளாதார உலகில் கார்ப்பரேட்டுகள் நுழையாத இடமே இல்லை. எது சரி, எது தவறு என்பதற்கான எல்லைகள் மங்கி வருகின்றன. கருப்புப்பணம் எல்லா இடங்களிலும் பரவிக்கிடக்கிறது. தோழர் அருந்ததி ராய் எழுதியிருந்த முதலாளித்துவம் ஒரு பேய்க்கதை என்ற கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“1957இல் ராக்பெல்லர் அறக்கட்டளை இரமோன் மகசேசே விருதை ஆசிய நாட்டின் சமூகத் தலைவர்களுக்கு வழங்குவதற்கென ஏற்படுத்தியது. இரமோன் மகசேசே என்பவர் பிலிப்பைன்சு நாட்டின் அதிபராக இருந்தவர். இவர் ஆசியாவில் கம்யூனிஸ்டுகளை ஒடுக்குவதற்கான செயல்பாடுகளில் அமெரிக்காவின் அடியாளாகச் செயல்பட்டவர். 2008ஆம் ஆண்டு போர்டு அறக்கட்டளை, பல துறைகளில் சிறப்பாகப் பணிபுரிபவர்களுக்கென்று மகசேசே விருது வழங்கத் தொடங்கியது. இந்தியாவில் கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர் ஆகியோரிடையே மகசேசே விருது மிகவும் மதிப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
எம்.எஸ். சுப்புலட்சுமி, சத்தியஜித்ரே, செயப்பிரகாஷ் நாராயணன், சிறந்த ஊடகவியலாளரான பி. சாய்நாத் முதலானோர்க்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மகசேசே பட்டத்தால் கிடைத்ததைவிட, இவர்கள் சமூகத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய் துள்ளனர்.”
இந்து நாளிதழில் பணியாற்றும் தோழர் பி.சாய்நாத்தின் செயற்பாடுகளைப் பற்றி நம் அனைவருக்கும் நன்கு தெரியும். பெரு முதலாளிகள் ஊடகங்களை எப்படிக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது குறித்தும், விவசாயிகளின் தற்கொலைகள் குறித்தும், சாய்நாத்தைப் போல யாராவது ஆய்வு செய்து உழைத்திருக்கிறார்களா என்றால் இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். மகசேசே விருது பெற்றார் என்ற ஒரே காரணத்துக்காக நாம் சாய்நாத்தைப் புறக்கணிக்க முடியுமா ? ஆனால் அதே நேரத்தில் சாய்நாத்தும், லீனா மணிமேகலையும் ஒன்றல்ல. ஆகையால் லீனா மணிமேகலை விமர்சனத்துக்கு உட்பட்டவரே.. …. அவரை விமர்சனம் செய்கையில் பண்பைக் கடைபிடிக்காவிட்டால், அந்த விமர்சனம் நீர்த்துப் போவது மட்டுமல்ல… அது விமர்சித்தவர்களையே திருப்பித் தாக்கும்.
இந்த அவதூறுகளையும், வசைச்சொற்களையும் பார்க்கும் போது, நமக்குள் இவ்வளவு குரோதமா … … இவ்வளவு வன்மையா ….. இவ்வளவு அநாகரீகமா … …. என்றே கேட்கத் தோன்றுகிறது.
வன்முறை என்பது மற்றொருவரை தாக்குவது மட்டுமல்ல.. … இது போன்ற வசைச்சொற்களை வன்முறையோடு வீசுவதும் வன்முறையே. தத்துவ ஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி வன்முறை பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்
“So we are examining together this living thing, which is you, life, whatever that is; that means we are looking at this phenomenon of violence, first at the violence in ourselves and then at the outward violence. When we have understood the violence in ourselves then it may not be necessary to look at the outward violence, because what we are inwardly, we project outwardly. By nature, through heredity, through so-called evolution, we have brought about this violence in ourselves. That is a fact: we are violent human beings.”
நமக்குள் இவ்வளவு வன்முறையை வைத்துக் கொண்டு, குஜராத்தின் நரேந்திர மோடியையும், ராஜபக்ஷேவையும், அரச பயங்கரவாதத்தையும் குறை கூற நமக்கு என்ன அருகதை இருக்கிறது ?
நண்பர் யுவகிருஷ்ணாவின் கருத்துக்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை சவுக்கு வாசகர்கள் அறிவார்கள். ஈழத்தமிழர்கள் கொன்றழிக்கப்படுவதற்கும், இந்தியாவையே சூறையாடியதற்கும் காரணமான கருணாநிதியை இன்னும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பவர் எப்படிப்பட்ட நபர் என்பதை வாசகர்கள் அறிவார்கள். சவுக்கின் நடுநிலைத்தன்மை குறித்தும் அறிவார்கள். திமுகவை இப்படித் தூக்கிப் பிடிக்கும் யுவகிருஷ்ணா, அதிமுக அரசை எதிர்த்து என்ன செய்து விட்டார் ? அதிமுக அரசுக்கு எதிராக நடக்கும் எந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார் ? அதிமுக அரசுக்கு எதிராக எத்தனை வழக்குகள் போட்டிருக்கிறார் ? குறைந்தபட்சம் வரும் ஜுலை 4 அன்று திமுக நடத்தும் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை செல்வாரா ?
குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு முகநூலில் நிலைச் செய்திகள் போடுவதையே பெரிய சாதனையாக நினைத்துக் கொள்ளும் இவரைப் போன்ற முகநூல் புரட்சியாளர்களுக்கும், கோயிலில் மணியாட்டிக் கொண்டு கடவுளிடம் பேசுவது போல மந்திரம் ஓதும் புரோகிதருக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இவர் முகநூலில் நிலைச்செய்தியிடுவதால் பெரிய கடமையாற்றுகிறோம் என்று நினைத்துக் கொள்கிறார். புரோகிதர் மந்திரம் சொல்லி கடவுளோடு பேசுகிறோம் என்று நினைத்துக் கொள்கிறார். இவ்வளவுதான் வேறுபாடு.