திமுக திட்டமிட்டுள்ள சிறை நிரப்பும் போராட்டத்துக்காக உடன்பிறப்புக்களை தயார் செய்யும் விதமாக, கருணாநிதி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டள்ளார். அந்த அறிக்கையில்,
“கடந்த ஓராண்டு காலத்தில் அ.தி.மு.க. ஆட்சியினர் நடத்தி வருகின்ற அராஜகங்கள் எத்தனை? கழகத்தினர் எத்தனை பேர் மீது பொய் வழக்குகள்? எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்? எத்தனை பேர் மீது அடுக்கடுக்கான புகார்களைச் சுமத்தி காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுத்திருக் கிறார்கள்? எத்தனை பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது? அந்தக் குண்டர் சட்டங்கள் பிறப்பித்தது சரியானது என்று ஏதாவது ஒரு வழக்கிலாவது சொல்லப்பட்டிருக்கிறதா? நீதிபதிகள் இந்தப் பொய் வழக்குகளுக்கு எதிராக எத்தகைய கண்டனங்களையெல்லாம் தெரிவித்திருக்கிறார்கள்? அதைப்பற்றி இந்த ஆட்சியினர் ஏதாவது பதில் சொல்கிறார்களா? அ.தி.மு.க. ஆட்சியினர் எதிர்க்கட்சியினரை மட்டுமா பழி வாங்குகிறார்கள்? தங்களுக்கு யார் யாரைப் பிடிக்கவில்லையோ, யார் யாரை அடக்கி ஆள வேண்டுமென்று எண்ணுகிறார் களோ அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக் கிறார்கள் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் அறிய மாட்டார்களா? உதாரணமாக அவருடைய உடன்பிறவாச் சகோதரி சசிகலா, இன்றைக்கும் அவருடனே, அவர் வீட்டிலேயே இருப்பவரின் கணவர் நடராசன் மீது 6 வழக்குகள் – விளார் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் தனக்குச் சொந்தமான 15 ஆயிரம் சதுர அடி நிலத்தை அபகரித்து விட்டதாக நடராசன் தரப்பு மீது புகார் கொடுத்தார். வின்சென்ட் ஆல்பர்ட் என்பவர் தனது மனைவி மேரி பெயரில் உள்ள 4200 சதுர அடி வீடு மற்றும் கடைகளை நடராஜன் தரப்பினர் இடித்துத் தள்ளி ஆக்கிரமிப்புச் செய்ததாக புகார் கொடுத்தார். தஞ்சை அன்பு நகரைச் சேர்ந்த ரங்கராஜன் என்ற ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் விளாரில் உள்ள தனது 25 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து விட்டதாகப் புகார் கொடுத்தார். திருச்சி கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த வரதராஜன் நிலத்தை விற்றதில் பண மோசடி செய்து ஏமாற்றியதாகப் புகார் கொடுத்தார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி அருகே சகுந்தலா என்பவருக்குச் சொந்தமான வீட்டை இடித்து ஆக்கிரமித்த தாகவும், விளார் கிராமத்தில் அமலபுஷ்ப மேரிக்குச் சொந்தமான 4,800 சதுர அடி பரப்பளவுள்ள இரு மனை இடங்களை நடராசன் தூண்டுதல் காரணமாக உறவினர் கள் மிரட்டி பத்திரம் பதிவு செய்து கொண்ட தாகவும் கூறப்பட்ட புகாரின் பேரில் நடராஜன் மற்றும் சிலர் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டு – இந்த வழக்குகளின் காரணமாக அவர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்குகள் எல்லாம் என்னவாயிற்று?
வீட்டை இடித்து ஆக்கிரமித்தது தொடர்பான புகாரைக் கொடுத்தவரே திடீரென்று வாபஸ் பெற்றார். எப்படி அவர் வாபஸ் பெற்றார்? முதலில் எதற்காக புகார் கொடுத்தார் ?
நீதிமன்றத்தின் நேரம் எவ்வளவு வீணடிக்கப் பட்டது? பொய்ப்புகார் என்றால் அதை நம்பி காவல் துறை எப்படி நடவடிக்கை எடுத்தது? அது பொய்ப்புகாரா? உண்மையான புகாரா ?
பூர்வாங்க ஆதாரம் ஏதும் உள்ளதா? என்று விசாரித்திருக்க வேண்டாமா ? உண்மையான புகார் என்று தெரியாத பட்சத்தில் கைது செய்யலாமா? உண்மையான எத்தனையோ புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்வராத போலீசார், பொய்ப்புகார் மீது எப்படி அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்தார்கள்? அதுவும் ஜெயலலிதா, சசிகலா மீது நடவடிக்கை எடுத்து நாளேடுகளில் அறிக்கை கொடுத்தவுடன், திடீரென்று புகார்கள் எப்படி வந்தன? சசிகலா மீண்டும் வந்து விட்டதால்தான், புகார் கொடுத்தவர்கள் அவற்றைத் திரும்பப் பெறுகிறார்களா? அவர்களாக திரும்பப் பெறுகிறார்களா அல்லது திரும்பப்பெற வைக்கப்படுகிறார்களா? அதற் குரிய விலை என்ன ?
அந்த நடராசன் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு 12-5-2012 அன்று கொடுத்த பேட்டியில் என்ன சொன்னார்? “என் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய் வழக்குகள். என் மீது போடப்பட்ட ஆறு வழக்கில் 2 பேர் தற்போது வாபஸ் பெற்றுள்ளனர்.
நில அபகரிப்புச் சட்டத்தை என்மீது மோசடியாகப் பயன்படுத்தி உள்ளனர். இதற்காக தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி., திருச்சி ஐ.ஜி., டி.ஐ.ஜி., உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டில் 3 ரிட் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளோம். ஜெ. வீட்டில் இருந்து நான் வெளியேறி 20 ஆண்டுகள் ஆகிறது. என்னை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிக்கை வெளியிட்டார்.
நான் கட்சியில் உறுப்பினராகவே இல்லை. அப்படி இருந்ததாக அவர்களால் நிரூபிக்க முடியுமா? அவர்கள் என்ன செய்தாலும் அமைதியாக இருந்தேன். இனி அப்படி இருக்க மாட்டேன். நேரடியாக அரசியலில் இறங்கு வேன். 2011 தேர்தல் அறிக்கையை தயாரித்துக் கொடுத்ததே நான்தான். பொன்ராஜ், பன்னீர் செல்வம் ஐ.ஏ.எஸ்., ஆகியோர்தான் லேப் டாப் உள்ளிட்ட இலவசங்களைச் சேர்த்தோம். அந்த அறிக்கையின் முதல் பிரதி என்கிட்டேதான் இருக்கு. சசிகலா மீண்டும் சேர்வதற்கு முன்னாடி அவர் பெயரில் வந்த அறிக்கை, அவர் கொடுத்த அறிக்கை அல்ல. என் மனைவிக்கு அறிக்கை தயாரிக்கத் தெரியாது. 3 முறை முதல்வராக இருப்பவராலேயே ஒரு அறிக்கை தயாரிக்க முடியாது.
என்னை மாதிரி ஒரு இளிச்சவாயன் தான் ரெடி பண்ணித்தரணும். அப்படிச் செய்தாலும் ஒரு குறிப்புக் கூட இல்லாமல் பேசத் தெரியாது. என்னை நில அபகரிப்பில் கைது செஞ்சீங்களே, எத்தனை ஏக்கரை மீட்டீங்க ? சார்ஜ் ஷீட்டாவதுபோட முடியுமா ?
சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு 5 மணி நேரத்தில் காரில் போயிடலாம். என்னை கைது செய்து 12 மணி நேரம் அலைக் கழிச்சாங்க. டி.ஐ.ஜி. அமல்ராஜ் தஞ்சாவூர் பக்கத்தில் செங்கிப் பட்டியில் ஒரு நடுக்காட்டில் வண்டியை நிறுத்தி வைத்துவிட்டார்.
எதற்கு? என்கவுண்டரில் என்னைச் சாகடிக்கவா? திருச்சி ஐ.ஜி. அலெக்சாண்டர் மோகன் தஞ்சாவூரில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் உட்கார்ந்துக்கிட்டு எல்லா இன்ஸ்பெக்டர்களையும் கூப்பிட்டு என்மேலே ஏதாவது ஒரு கேஸ் போட்டுட்டு வாங்கன்னு உத்தரவு போடுறாராம்””
இப்படியெல்லாம் பேட்டி கொடுத்து ஏடுகளில் எல்லாம் வெளிவந்ததே? இந்த அ.தி.மு.க. அரசு இதற்கு என்ன பதில் சொல்கிறது? இவர் ஒருவர் மட்டுமா? திவாகரன் மீதான வழக்கு என்னவாயிற்று? ராவணன் மீதான வழக்கு என்னவாயிற்று? இதைக் கேட்டால் குற்றமா? தினமணியும் தினமலரும் சீறுவதா?”
என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதி எழுப்பியுள்ள கேள்விகள் ஆதாரமற்றவை அல்ல. அடிப்படை அற்றவை அல்ல.
காவல்துறை என்பது, பொதுமக்களுக்காக இருக்கக் கூடிய ஒரு துறை. முதலமைச்சராக வரும் அத்தனைபேரும், காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உள்துறையை தங்கள் பொறுப்பிலேயே வைத்திருப்பதற்கு மிக முக்கிய காரணம் தங்கள் எதிராளிகள் மீது பொய் வழக்கு போட்டு அவர்களைக் கொடுமைப் படுத்துவதற்கே.
இன்று ஜெயலலிதாவின் காவல்துறையின் மீது கடும்புகார்களை அடுக்கி அதற்கெதிராக சிறை நிரப்பும் போராட்டம் நடத்தும் கருணாநிதி, தான் ஆட்சியில் இருந்த காலத்தில், இதே காவல்துறையை வைத்து தனக்கு வேண்டாதவர்கள் மீது பொய் வழக்கு போடுவதற்கும், போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்துவதற்கும் பயன்படுத்தியே வந்துள்ளார்.
குறிப்பாக 2008 இறுதி மற்றும் 2009 மே வரையிலான காலகட்டத்தில் ஈழத்தில் போரை நிறுத்தக் கோரி தமிழகத்தில் நடந்த அத்தனை போராட்டங்களையும் ஒடுக்குவதற்கு கருணாநிதி அரசு தயங்கியதே இல்லை. கருணாநிதி அரசு ஈழத்தில் போரை நிறுத்துவதற்கு எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்ற ஆத்திரத்தில், ஈழ ஆதரவாளர்கள் “இத்தாலி எருமைக்குத் தப்பாமல் தாளமிடும் சப்பாணிக் கழுதையே” என்ற வீடியோ பாடல் காட்சியைத் தயாரித்து இணையத்தில் வெளியிட்டனர். இந்தப் பாடல் காட்சிகளை வீடியோ சிடிக்களாக தயாரித்து வெளியிட முயன்ற 5 இளைஞர்களைத் தீவிரவாதிகள் போல பாய்ந்து பாய்ந்து கைது செய்தனர்.
ஈழத்தமிழருக்காக ஒரு மாதத்துக்கும் மேலாக நீதிமன்றப் புறக்கணிப்போடு சேர்த்து, பல்வேறு போராட்டங்களை அரங்கேற்றிய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீது தனது காவல்துறையை விட்டு கொடூர தாக்குதலை நடத்தியவர் இதே கருணாநிதிதான். தாக்குதலுக்கு மறுநாள் ராமச்சந்திரா மருத்துவமனையில் சென்று படுத்துக் கொண்டு, வழக்கறிஞர் தோழர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று உருக்கமான அறிக்கை வேறு வெளியிட்டார்.
க்யூ பிரிவு போலீசாரை வைத்து, தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்கள் ஏராளமானோர் மீது பொய் வழக்குகளைப் போட்டவர் இதே கருணாநிதிதான்.
செம்மொழி மாநாடு சிறப்பாக நடக்க வேண்டும். அந்த மாநாட்டில் ஈழ ஆதரவாளர்கள் இடையூறு ஏற்படுத்துவார்கள் என்று, அந்த மாநாட்டுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியவர்களைக் கூட கைது செய்தார். அந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் இன்றும் நீதிமன்றங்களில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். திறந்த முறையில் அமைந்திருக்கும் அகதிகள் முகாமில் இருந்தவர்கள் செம்மொழி மாநாடு நடக்கும் சமயத்தில் வெளியே செல்லக் கூடாது என்று தடையுத்தரவு பிறப்பித்து மீறிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை என்று தனது க்யூ பிரிவு காவல்துறையை வைத்து அடக்கியவர் இதே கருணாநிதிதான்.
தோழமைக் கட்சியாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரைக் கூட, கருணாநிதியின் காவல்துறை விட்டுவைக்கவில்லை. அக்கட்சியினரில் பல்வேறு நபர்களை தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தவர் இதே கருணாநிதிதான். இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்துப் பேசிய சீமானை தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது இதே கருணாநிதிதான்.
செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருந்தவர்கள் தங்களை மற்ற முகாம்களில் உள்ள தங்கள் குடும்பத்தினரோடு தங்க அனுமதியுங்கள் என்று கோரி, பல்வேறு போராட்டங்களை ஆண்டுக்கணக்கில் நடத்தி வருகின்றனர். உண்ணாவிரதம் இருந்த இவர்கள் மீது, காவல்துறையை விட்டு, கடுமையாக தாக்குதல் நடத்தியவர் இதே கருணாநிதி. அவர்களை கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கி, அவர்கள் காவல்துறையினரைத் தாக்கியதாக வழக்கும் பதிவு செய்து, தாக்குதலுக்கு மறுநாள் அவர்களை சிறையில் சந்தித்த வழக்கறிஞர் புகழேந்தி, “இது போல இவர்களை நான் பார்த்ததே இல்லை. அவர்கள் அநாதைகளாக உணர்கிறார்கள். எங்கள் தாய்த்தமிழகத்தில் எங்கள் மீதா தாக்குதல் ? சிங்களன் தாக்கினால் புரிந்து கொள்வோம். தமிழர்களா எங்களைத் தாக்குவது ?” என்று அவர்கள் அதிர்ச்சியோடு சொன்னதைச் சொன்னார். இதற்கும் காரணம் கருணாநிதியே.
ஈழப்போரின் இறுதி நேரத்தில், போரில் காயமடைந்தவர்கள் இறந்தற்கு முக்கிய காரணம், உயிர் காக்கும் மருந்துகள் இல்லாததே. எவ்வளவு பணம் செலவானாலும் சரி என்று புலிகள் இயக்கம் தமிழகத்திலிருந்து மருந்துகளையும், ரத்த உறைகளையும் கடத்த முயற்சித்தபோது, இன்று நீலிக்கண்ணீர் வடிக்கும் கருணாநிதி, தனது காவல்துறையை விட்டு, அந்த மருந்துகளையும், ரத்த உறைகளையும் கைப்பற்றி அழித்தார். சிக்கியவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act) கீழ் வழக்கு தொடுத்தார். ஈழத்தை பூர்வீகமாகக் கொண்டு, லண்டன் சென்று இங்கிலாந்துக் குடிமகனான தமிழர் ஒருவர், சென்னையில் அவர் நண்பர் திருமணத்துக்காக வருகையில் ஒரே ஒரு லேப்டாப் வாங்கி வந்த போது, அவரை திருமண மண்டப வாசலிலேயே வைத்துக் கைது செய்து, விடுதலைப்புலி என்று முத்திரை குத்தி சிறையில் அடைத்தது இதே கருணாநிதிதான். அவர் இந்தியா வரும்போது அவர் மனைவி 7 மாத கர்ப்பம். தற்போது அவர் மகளுக்கு 3 வயது ஆகிறது. சென்னையில், ஹோட்டலில் தங்கி இன்னும் வழக்குக்காக நீதிமன்றத்தில் அலைந்து கொண்டிருக்கிறார்.
இது போல இன்னும் ஏராளமான சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். கருணாநிதி அவரது காவல்துறையை வைத்து கடந்த காலத்தில் செய்த அத்தனை அயோக்கியத்தனங்களும் அவரை இன்று திருப்பித் தாக்குகின்றன. ஜெயலலிதா அரசின் காவல்துறை திமுகவினர் மீது தொடர்வழக்குகளைப் போட்டு அலைக்கழித்து வருகிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை உண்மையான வழக்குகளே என்றாலும், இந்த வழக்குகளால் கட்சி நிலைகுலைந்து போயிருப்பதென்னவோ உண்மை. நிலைகுலைந்து போயிருக்கும் கட்சியினரை மீட்டெடுப்பதற்காகவும், குடும்பத்தில் நடக்கும் வாரிசு சண்டையை சரி செய்வதற்காகவுமே தற்போது சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்திருக்கிறார் கருணாநிதி.
கருணாநிதி செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டும் அதே வேளையில், ஜெயலலிதா அரசின் காவல்துறை செய்து வரும் அராஜகங்களைக் கண்டிக்காமல் இருக்க முடியாது. கருணாநிதி என்ன செய்தாரோ, அதே தவறுகளை இரட்டிப்பாக செய்து வருகிறார் ஜெயலலிதா. ஜெயலலிதா அரசு எப்போதுமே போலீஸ் அரசாக இருந்து வருகிறது என்பதை சவுக்கு தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறது. அது தற்போதைய ஜெயலலிதா ஆட்சியிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பரமக்குடியில் நடந்த தலித் படுகொலைகள், ஒரே ஆண்டில் ஆறு பேரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்தது, என்று காவல்துறையின் அராஜகங்கள் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கின்றன. இந்த அராஜகங்களைக் கட்டவிழ்த்து விடும் அதிகாரிகளை ஜெயலலிதா தொடர்ந்து பாதுகாத்து வருகிறார். அந்த அதிகாரிகள் செய்யும் அராஜகங்களை நியாயப்படுத்தி வருகிறார்.
மன்னார்குடி மாபியா மீது காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து கருணாநிதி எழுப்பிய அத்தனை கேள்விகளும் நியாயமானதே… மன்னார்குடி மாபியா மீது தொடரப்பட்ட பெரும்பாலான வழக்குகள் மிரட்டிப் புகார் வாங்கப்பட்டவை. ஜெயலலிதாவின் மனதைக் குளிரவைக்க வேண்டும் என்பதற்காகவே புனையப்பட்ட வழக்குகள் அவை. மன்னார்குடி மாபியா உறுப்பினர்கள் தவறுகள் செய்திருந்தாலும் கூட, அவர்கள் ஜாமீனில் வெளி வர முடியாத அளவுக்கு வழக்குக்கு மேல் வழக்காகப் போட்டது அதிகார துஷ்பிரயோகமேயன்றி வேறு இல்லை. மன்னார்குடி மாபியாவைச் சேர்ந்தவர்களைக் கைது செய்வதற்கும், அவர்கள் மீது வழக்கு நடத்துவதற்கும் எத்தனை வரிப்பணம் வீணாகியது என்பதை மறந்து விடக் கூடாது. தனிப்பட்ட காரணத்துக்காக காவல்துறையை ஜெயலலிதா எப்படி தவறாகப் பயன்படுத்தினார் என்பதையும் மறக்கக் கூடாது. சசிகலா வெளியேறியவுடன் பாய்ந்த வழக்குகள், சசிகலா மீண்டும் திரும்பியவுடன் சுருட்டி ஓரம் வைக்கப்பட்டுள்ளன.
பழிவாங்கும் உணர்ச்சியிலும், காவல்துறையை எதிரிகளைப் பழிவாங்கப் பயன்படுத்துவதிலும், கருணாநிதிக்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல ஜெயலலிதா. அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி நடக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள், ஜெயலலிதாவின் மனதைக் குளிர வைப்பதற்காக, சட்டத்தை காலில் போட்டு மிதிக்கிறார்கள். காவல்துறையின் இந்த அராஜகங்கள் அத்தனையும், ஜெயலலிதாவின் சம்மதத்தோடே நடக்கின்றன. ஜெயலலிதாவின் கண்ணசைவு இல்லாமல், இந்த அட்டூழியங்களை அரங்கேற்ற காவல்துறையினருக்கு துணிச்சல் வராது.
இந்த அதிகார துஷ்பிரயோகத்தையும், அட்டூழியங்களையும் கண்டிக்க கருணாநிதிக்கு எவ்விதமான தார்மீக உரிமையும் இல்லை என்பதுதான் வேதனையான விஷயம். இந்த அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்து எழுத வேண்டிய ஊடகங்கள், ஜெயலலிதா அரசு தரும் விளம்பரங்களுக்காக பல்லை இளித்துக் கொண்டு மவுனம் சாதிக்கின்றன. ஜெயலலிதா அரசை விமர்சிக்கவோ, அதன் தவறுகளைச் சுட்டிக்காட்டவோ, திமுக குடும்ப ஊடகத்தைத் தவிர்த்து ஒரு ஊடகம் கூட இல்லை என்பது மிக மிக வேதனையான விஷயம்.
ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள நம்மைப் போன்ற நடுநிலையாளர்கள், ஜெயலலிதாவின் அதிகார துஷ்பிரயோகத்தை கடுமையாக கண்டிக்க வேண்டும். இன்று காவல்துறையின் அத்துமீறல்களைக் கண்டிக்காமல் விட்டால், இந்த அதிகார துஷ்பிரயோகம், நம்மைத் தாக்குவதற்கு நெடுநாட்கள் ஆகாது.