பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 எப்படி பல்வேறு திருப்பங்களோடு அமைந்ததோ, அதைவிட அதிகமான திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த ஒரு வழக்குதான் 164/2006.
2006 சட்டமன்றத் தேர்தல்களையொட்டி, தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் இருந்த வேளையில் நடந்ததுதான் அந்தக் கொலை. 8 மே 2006 அன்று தேர்தல் பிரச்சாரம் முடிந்து தன் வீட்டில் கட்சியினரோடு பேசிக் கொண்டிருந்த சி.வி.சண்முகத்தை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு நடந்த தாக்குதல், அவர் உறவினர் முருகானந்தத்தின் பலியில் முடிந்தது.
சி.வி.சண்முகத்துக்கும், டாக்டர் ராமதாசுக்கும் ஏழாம் பொருத்தம். அதிமுக கூட்டங்களில் சண்முகம் ராமதாஸை பிடி பிடியென பிடிப்பார். வன்னியர் இனத்துக்கு என்ன செய்துள்ளார் ராமதாஸ், ஒரு சாதாரண கிளினிக் வைத்திருந்தவருக்கு எப்படி வந்தது கோடிக்கணக்கான சொத்துக்கள் என்று சண்முகம் பேசுவார். பாமக போட்டிக் கூட்டங்கள் போட்டு, சண்முகத்தை திட்டுவார்கள். பாமகவினரைப் பற்றித்தான் தெரியுமே. மரம் வெட்டிக் கொண்டிருந்தவர்கள் கொஞ்ச காலம் அரசியலில் இருந்து விட்டு, டாக்டர் சொன்னதும் ஆளையே வெட்டத் திட்டமிட்டனர்.
தேர்தல் நாளன்று, முருங்கப்பாக்கம் என்ற இடத்தில், அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த இடத்திற்கு சென்ற சண்முகம், தைரியம் இருந்தால் நேராக மோதுங்கள் என்று சவால் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். இதையடுத்தே அன்று இரவு சண்முகம் மீது தாக்குதல் நடந்தது.
சிவி ராதாகிருஷ்ணன் மற்றும் சிவி பாபு ஆகிய தனது இரு சகோதரர்களோடு வாசலில் போட்டிருந்த பந்தலின் கீழ் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் சிவி.சண்முகம். அப்போது வாகனத்தில் வந்த நபர்கள் திடீரென்று பீர் பாட்டில்களை வீசி எரிந்து தாக்குதல் நடத்தினர். அருகிலிருந்த வாகனங்களின் மீது கற்களையும் பாட்டில்களையும் வீசி தாக்கினர். உருட்டுக் கட்டைகள் மற்றும் அரிவாளோடு இறங்கிய அந்தக் கும்பல், கையில் கிடைத்தவர்களைத் தாக்கத் தொடங்கியது. அந்தக் கும்பலிடமிருந்து தப்பிக்க, அமைச்சர் சிவி.சண்முகம் அருகிலிருந்த வாகனத்தின் அடியில் படுத்துத் தப்பித்தார். சண்முகத்தின் சகோதரர் பாபு தாக்குதலில் காயமடைந்தார். பாபுவின் மைத்துனர் முருகானந்தம் என்பவர் கொலை செய்யப்பட்டார். தாக்கி விட்டு அந்தக் கும்பல் தப்பியோடியது.
சி.வி.சண்முகம் உடனடியாக ரோசனை காவல்நிலையத்தில், தன் மீது நடந்த தாக்குதல் முயற்சிக்கும், முருகானந்தம் கொலையானதற்கும் காரணம், டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ராமதாஸின் மருமகன் டாக்டர் பரசுராமன், மற்றும் பாமக வேட்பாளர் கருணாநிதி ஆகியோரே காரணம் என்று புகாரளித்தார். அந்தப் புகாரின் பேரில், வழக்கு எண் 164/2006 என்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு சந்தித்த திருப்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
அப்போது ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் ‘‘நிச்சயம் இது ராமதாஸ், அன்புமணியோட திட்டமிட்ட வேலைங்க. எனக்குக் குறிவெச்சாங்க. ஆனா பாவம்… முருகானந்தம் பலியாயிட்டாரு. அன்புமணி மேடையில பேசுறப்ப எல்லாம், ‘11ம் தேதிக்கு மேல நீ உயிரோட இருக்க மாட்டடா’னு பேசியிருக்கார். அதான் அன்னிக்கு நடக்கவேண்டிய சம்பவம் 8ம் தேதியே நடந்திருச்சு. அன்புமணி பேசுனதுக்கு எங்ககிட்ட ஆதாரம் இருக்கு. ஒரு அமைச்சர் வீட்டுக்கு முன்னால அவரைக் கொல்றதுக்கு ஆள் அனுப்புற தைரியம், ராமதாஸைத் தவிர வேற யாருக்குமே வராது” என்றார்.
அந்த முதல் தகவல் அறிக்கையில், டாக்டர் ராமதாஸின் தங்கை மகன் என்.ஆர்.ரகு மற்றும் பாமக வேட்பாளர் கருணாநிதி ஆகியோர் தலைமையில் 15 பேர் கொண்ட கும்பல் சண்முகத்தின் மீதான இத்தாக்குதலை அரங்கேற்றியதாகவும், தாக்குதலுக்கு முன்னதாக, ஒரு சிகப்பு நிற போர்டு காரில், ராமதாஸின் பேரன் ப்ரீதிபன் சண்முகம் இருக்கிறாரா என்பதை பார்வையிட்டுச் சென்றதாகவும் குறிப்பிடப்பட்டருந்தது.
தாக்குதல் நடந்த உடன், தாக்குதல் கும்பலைச் சேர்ந்த குமரன் என்கின்ற குமாரவேலை பிடித்த சண்முகம் தரப்பு, அவரை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளது.
இவ்வழக்கை முதலில் புலன் விசாரணை செய்தவர் சேகர் என்ற ஆய்வாளர். 09.05.2006 அன்று அதிகாலை தனது புலன் விசாரணையை தொடங்கியவர், சம்பவத்தை பார்வையிட்ட தேவனாதன் மற்றும் சேகர் என்பவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்கிறார். அவர்கள் தங்களது வாக்குமூலத்தில் சண்முகம் புகார் மனுவில் கூறியிருப்பது அத்தனையும் உண்மை என்று வாக்குமூலம் அளிக்கின்றனர். அன்றே, இவ்வழக்கின் விசாரணை கள்ளக்குறிச்சி டிஎஸ்பி பாலசுப்ரமணியத்திடம் மாற்றப்படுகிறது. அவரின் மாறுதலுக்குப் பிறகு, டிஎஸ்பி குமார் என்பவர் இவ்வழக்கை விசாரிக்கிறார்.
இதன் பிறகு டிஎஸ்பி, சம்பவ இடத்தில் இருந்த மகேஷ் என்பவரின் வாக்குமூலத்தை பதிவு செய்கிறார். அந்தத் தாக்குதலில் காயமடைந்த மகேஷ் தாக்குதல் நடந்தது எப்படி என்று விவரிக்கிறார். இதற்கிடையில் 13.05.2006 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகி, திமுக ஆட்சியைப் பிடிக்கிறது.
15 மே 2006 அன்று டிஎஸ்பி முன்பாக நந்தா என்கிற நந்தகுமார், சுதாகர், ரமேஷ், சுதாகர், பிரபு என்கிற பிரபாகரன் ஆகியோர் சரண் அடைகின்றனர். தாக்குதலில் ஈடுபட்டது தாங்கள்தான் என்று ஒப்புதல் வாக்குமூலமும் அளிக்கின்றனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சிவா மற்றும் குமரன் ஆகியோர் அளிக்கும் வாக்குமூலத்திலும், தாக்குதலுக்கு திட்டமிட்டுச் செயல்படுத்தியது ராமதாஸின் உறவினர் ரகு என்றும், தாக்குதலுக்கு முன்பாக ராமதாஸை அவரது வீட்டில் சென்று பார்த்தோம் என்றும், தாக்குதலுக்குப் பின்பு, ராமதாஸின் தம்பி சீனிவாசனை அவரது நெல்மண்டியில் சென்று பார்த்தோம் எனவும், சம்பவம் நடக்கையில், ராமதாஸோடு தொலைபேசியில் பேசினோம் எனவும் வாக்குமூலம் அளிக்கின்றனர்.
சரியான பாதையில் சென்று கொண்டிருந்த வழக்கின் புலனாய்வு, திமுக ஆட்சியைப் பிடித்ததும் தள்ளாடத் தொடங்கியது. அப்போது வடக்கு மண்டல ஐஜியாக இருந்த ஜாங்கிட், வழக்கின் புலனாய்வு அதிகாரியிடம், வழக்கு ஆவணங்களை மாற்றுமாறு உத்தரவிட்டதாகத் தெரிகிறது. வழக்கில் நடக்கும் புலன் விசாரணையில் ஏற்பட்ட முன்னேற்றம் அத்தனையும், வழக்கு நாட்குறிப்பு (Case Diary) என்று பதிவு செய்யப்படும். இந்த வழக்கில் நாட்குறிப்புகளை மாற்றச் சொல்லி ஜாங்கிட் உத்தரவிட்டு அதன்படி மாற்றப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்த மாற்றங்களுக்குப் பிரதிபலனாக ஜாங்கிட்டுக்கு சென்னை மாநகர கூடுதல் ஆணையாளர் பதவி பரிசாகக் கிடைத்தது. இந்தப் பேரங்களை நடத்தி, வழக்கு ஆவணங்களை மாற்றுவதற்கும், ஜாங்கிட்டுக்கு கூடுதல் ஆணையாளர் பதவியைப் பெற்றுத் தருவதற்கும் கருவியாக இருந்து செயல்பட்டவர், தற்போது தமிழர்களின் வாழ்வுரிமைக்காக கட்சி நடத்துபவர்.
22 மே 2006 முதல் பல்வேறு திருப்பங்கள் நடந்தன இவ்வழக்கில். சம்பவ இடத்தில் இருந்து காயம்பட்ட மகேஷ் என்பவரிடம் இரண்டாவது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. மகேஷ் தனது இரண்டாவது வாக்குமூலத்தில் தாக்குதல் நடக்கையில் ரகுவோ கருணாநிதியோ அங்கு வரவேயில்லை என்று கூறியதாக பதிவு செய்யப்பட்டது. ரகுவோ, கருணாநிதியோ அங்கு வரவில்லை என்று வினோத்குமார், செந்தில்குமார், அப்பாஸ் மந்திரி, டாக்டர் கணேசன், முரளிதரன், தீனதயாளன் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. ஏற்கனவே வாக்குமூலம் அளித்திருந்த தேவநாதன் என்பரிடம் மீண்டும் வாக்குமூலம் பெறப்பட்டது. இந்த வாக்குமூலத்தில் அவர் ரகு மற்றும் கருணாநிதியை தான் பார்க்கவில்லை என்று கூறினார்.
காவல்துறையின் “சிறப்பு” விசாரணை எந்த அளவுக்கு இருந்ததென்றால், சம்பவ இடத்தில் இருந்த சிவி.சண்முகத்தின் உதவியாளர் தரணி என்பவரும், மற்றொரு உதவியாளர் ராஜாராம் என்பவரும் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரைக் கூட அடையாளம் காண முடியவில்லை என்று வாக்குமூலம் அளித்ததாக பதிவு செய்யப்பட்டது. சிவி.சண்முகத்தின் டிரைவரைக் கூட விட்டுவைக்கவில்லை. சிவி.சண்முகத்தின் டிரைவர் சிவக்குமார் என்பவரும், சம்பவ இடத்தில் இருந்த கேவிஎன்.வெங்கடேசன் என்பவரும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண முடியவில்லை என்றே கூறினர். இந்த வாக்குமூலங்களை பதிவு செய்ததன் ஒரே நோக்கம், சம்பவ இடத்தில் ரகுவோ, கருணாநிதியோ இல்லை என்பதை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே.
அதையடுத்து, சம்பவம் நடந்த தெருவில் குடியிருந்தவர்கள், கடை வைத்திருந்தவர்கள், வியாபாரிகள் என்று அத்தனை பேரிடமும், சம்பவத்தை பார்க்கவே இல்லை என்று வாக்குமூலம் பதிவு செய்தது காவல்துறை.
எப்ஐஆர் போட்டு ஏழு மாதங்கள் கழித்து ரகு முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்கிறார். முன்ஜாமீன் கிடைப்பது கடினம் என்று தெரிந்ததும் வாபஸ் வாங்குகிறார். பிறகு மீண்டும் ஜனவரி மாதத்தில் மற்றொரு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்கிறார். அந்த முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், தனது தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிட்டது “பட்டப்பகலில் நடந்த ஒரு கொலை வழக்கில் முன்ஜாமீன் கோரியிருக்கிறார் மனுதாரர். முதல் தகவல் அறிக்கையிலேயே போதுமான துப்புகள் கிடைத்தும் காவல்துறை வேண்டுமென்றே விசாரணை நடத்தாமல் உறங்கியிருக்கிறது. விசாரணை நடத்தாமல் வழக்கு எப்படி மெத்தனமாக விசாரிக்கப்பட்டது என்பதற்கு வழக்கு நாட்குறிப்பே சாட்சி. ஒரு வருடம் நான்கு மாதமாகியும், காவல்துறை விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தியுள்ளது. ஒரு கொலை வழக்கை இது போல விசாரித்தால், பொது மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்து விடுவார்கள். காவல்துறை உடனடியாக வழக்கு விசாரணையை சரியான முறையில் நடத்த வேண்டும் என்ற உத்தரவோடு, முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன்” என்று உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
சம்பவம் நடந்தது மே 2006. ரகு என்பவர் இந்தத் தாக்குதல் சம்பவத்தை முன்னின்று நடத்தினார் என்று வலுவான ஆதாரங்கள் கிடைத்தும், ரகுவின் ஜாமீன் மனு இரண்டு முறை தள்ளுபடி ஆகியும், ரகுவை கைது செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை போலீசார். இறுதியாக, ரகு 26 பிப்ரவரி 2007 அன்று மர்மமான முறையில் இறந்து போகிறார். ரகு இறந்ததும் வழக்கில் ஒரு புதிய கோணத்தில் விசாரணை நடக்கிறது.
டிஎஸ்பி குமார் விசாரணையை முடித்து 29.12.2007 அன்று குற்றப்பத்திரிக்கையை திண்டிவனம் நீதிமன்ற நடுவர் முன்பு தாக்கல் செய்கிறார். அந்த குற்றப்பத்திரிக்கையில், நடந்த சம்பவம் அனைத்துக்கும் முழுப் பொறுப்பு இறந்து போன ரகு என்றும், ரகு உத்தரவின் பேரில் கூலிப்படையினர் தாக்குதல் நடத்தினர் என்றும் கூறியிருந்தார். முதல் தகவல் அறிக்கையில் இருந்த அத்தனை பேரில், ரகுவைத் தவிர, அத்தனை பேரின் பெயர்களும் நீக்கப்பட்டிருந்தது.
புகார் கொடுத்தபோது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் உள்ள பெயர்கள், இறுதியாக தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிக்கையில் நீக்கப்பட்டால், புகார்தாரருக்கு எழுத்துபூர்வமான தெரிவிக்க வேண்டும். இதற்கு ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா என்பதைக் கேட்க வேண்டும். ஆனால், சண்முகத்துக்கு தெரியாமலேயே, இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தார் டிஎஸ்பி குமார். இதைத் தாக்கல் செய்வதற்கு முன்பாகவே 15.11.2007 அன்று வழக்கு நாட்குறிப்பில், டாக்டர் ராமதாசுக்கோ, அவர் குடும்பத்தினருக்கோ, இந்தக் கொலை வழக்கில் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பதிவு செய்தார் குமார்.
குற்றப்பத்திரிக்கை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, மாவட்ட நீதிபதிக்கு மாற்றப்பட்டு, விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கும் வரை, புகார் கொடுத்த சி.வி.சண்முகத்துக்கு எந்த விபரமும் தெரியாது.
தாமதமாக இந்த விபரங்களை தெரிந்து கொண்ட சி.வி.சண்முகம், விரைவு நீதிபதி முன்பாக மீள் புலனாய்வுக்கு (Further investigation) உத்தரவிட வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்கிறார். அந்த மனுவைத் தள்ளுபடி செய்த அந்த மங்குனி நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்ததற்கான காரணத்தைக் குறிப்பிடுகிறார்.
இந்த வழக்கில் புலனாய்வு மிக மிக சிறப்பாக, தப்புத் தவறு ஏதுமின்றி நடைபெற்றிருக்கிறது. எப்ஐஆரில் உள்ள பெயர்கள் நீக்கப்பட்டதென்றால், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த உடனேயே மனுதாரர் நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது தனக்குத் தெரியாது என்று மனுதாரர் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. ஏனென்றால் 28.09.2007 நாளிட்ட தினமலரில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது குறித்து செய்தி வெளியாகியிருக்கிறது.
எப்படி இருக்கிறது தீர்ப்பு ? இதில் வினோதம் என்னவென்றால், எப்ஐஆரில் உள்ள பெயர்கள் இறுதி அறிக்கையில் நீக்கப்பட்டால், புகார் கொடுத்தவருக்கு தகவல் தெரிவித்து அவர் கருத்தைப் பெற வேண்டும் என்பது உச்ச நீதிமன்றம் பக்வந்த் சிங் என்ற வழக்கில் 1985ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு. இதை அனைத்து நீதிமன்றங்களும் பின்பற்றி வருகின்றன.
அந்த மங்குனி நீதிபதி இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார் என்றால் மருத்துவர் அய்யாவின் செல்வாக்கு எப்படி இருந்திருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
இதை எதிர்த்து சிவி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்கிறார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் 21 ஜனவரி 2010ல், அந்த நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து, மீண்டும் கீழமை நீதிமன்றத்துக்கே அனுப்புகிறது.
மீண்டும் கீழமை நீதிமன்றத்துக்கு வழக்கு சென்றதும், அங்கே எதிர்ப்பு மனுவை தாக்கல் செய்தார் சிவி.சண்முகம். 9 நவம்பர் 2010 அன்று அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்ற நடுவர், குற்றப்த்திரிக்கை முழுமையானதாக இல்லை. மீள் புலனாய்வு செய்ய வேண்டும்.
விசாரணையை டிஎஸ்பி, திண்டிவனம் நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த விசாரணையாவது ஒழுங்காக நடைபெறுகிதா என்று பார்த்தால், அதுவும் நடைபெறவில்லை. திண்டிவனம் டிஎஸ்பி வழக்கின் புலனாய்வை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டால், வழக்கின் புலனாய்வை கோட்டக்குப்பம் டிஎஸ்பிக்கு மாற்றி உத்தரவிட்டார் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. நீதிமன்றம் குறிப்பாக திண்டிவனம் டிஎஸ்பி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட பிறகு, விசாரணை அதிகாரியை மாற்ற ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கு என்ன துணிச்சல் இருக்க வேண்டும் ? இதுதான் தமிழ்நாடு காவல்துறை.
இதனால் தமிழக காவல்துறை விசாரணையில் நம்பிக்கை இழந்த சிவி.சண்முகம், சென்னை உயர்நீதின்றத்தில், இவ்வழக்கின் புலன் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதியரசர் ஹரிபரந்தாமன் 21 அக்டோபர் 2011 அன்று இவ்வழக்கின் புலன் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். இவ்வழக்கின் இறுதி விசாரணை நடக்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சியைப் பிடிக்கிறது. சிவி.சண்முகமும் மந்திரியாகி விட்டார். ஆட்சி நமது ஆட்சி என்ற எண்ணத்தில் சிவி.சண்முகம், வழக்கு விசாரணையின் போது, சிபி.சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டால் கூட போதும் என்று தெரிவித்தார்.
ஆனால், தனது தீர்ப்பில் நீதியரசர் ஹரிபரந்தாமன் “மாநில காவல்துறை பாரபட்சமற்ற விசாரணை நடத்தத் தவறி விட்டது. அதனால், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபி.சிஐடிக்கு உத்தரவிட விரும்பவில்லை. எனவே இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றுகிறேன்” என்று தெரிவித்தார்.
தெரிந்தோ தெரியாமலோ, நீதியரசர் ஹரிபரந்தாமன், நீண்ட காலமாக தமிழக அரசியலில் பச்சோந்தியாக வலம் வந்து கொண்டிருக்கும் மருத்தவர் ராமதாஸின் அரசியல் முடிவுரைக்கு, முன்னுரை எழுதியிருக்கிறார்.
சிவி.சண்முகத்துக்கு தமிழக காவல்துறையைப் பற்றித் தெரியவில்லை. ஆட்சி அதிமுக ஆட்சி என்பதால் நியாயமாக விசாரிக்கும் என்ற நம்பிக்கையிலேயே சிபி.சிஐடி விசாரணைக்கு சம்மதித்திருக்கிறார். அதிமுக ஆட்சியாவது… திமுக ஆட்சியாவது…. தமிழக காவல்துறை அதிகாரிகள், பணத்துக்காக, சிபி.சிஐடி அலுவலகத்தையே விற்று விடுவார்கள் என்பது சண்முகத்துக்கு தெரியவில்லை. கடப்பாறையை விழுங்கி ஏப்பம் விடுவார்கள். காற்றிலிருந்து கயிறு திரிப்பார்கள். சிபிஐக்கு மட்டும் இந்த விசாரணை மாற்றப்படாமல் இருந்திருந்தால், சண்முகத்துக்கு எந்த ஜென்மத்திலும் நியாயம் கிடைத்திருக்காது.
தாக்குதல் நடந்த அன்று சிவி.சண்முகம் காருக்கு அடியில் படுத்துத் தப்பிக்காமல் இருந்திருந்தால், இன்று அவர் அமைச்சராக இருந்திருக்க மாட்டார். அப்படி ஒரு கொடூரத் தாக்குதலை தொடுத்தவர்கள் மீது இவ்வளவு செல்வாக்கு இருந்த சண்முகத்தால் நடவடிக்கை எடுக்க வைக்க முடியவில்லை என்றால், பணமும் செல்வாக்கும் உள்ளவர்கள் சட்டத்தை எப்படியெல்லாம் வளைக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
தற்போது சிபிஐ இவ்வழக்கின் புலன் விசாரணையை மேற்கொண்டவுடன், வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இவ்வழக்கில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்பட்ட கூலிப்படையினரான கோபி, இளஞ்செழியன், நடராஜன் மற்றும் பன்னீர்செல்வத்தை உள்ளிட்ட எட்டு பேரை முதலில் கைது செய்தது. அடுத்து, டாக்டர் ராமதாஸின் தம்பி சீனிவாசன் என்கிற சீனிக்கவுண்டரையும், பாமக வேட்பாளராக இருந்த என்.எம்.கருணாநிதியையும் கைது செய்தது. இந்தக் கைதுகளைத் தொடர்ந்து, சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததும் பாமக தரப்பில், வழக்கின் விசாரணை முடிந்து விட்டது, என்ற தகவல் பரப்பப்பட்டது. ஆனால், சிபிஐ இவ்வழக்கில் புலன் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறது.
ராமதாஸ் சார்பில் இந்தத் தாக்குதல் மற்றும் கொலைக்கான ஏற்பாடுகைகளைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் பாமகவின் முன்னாள் எம்.பி தன்ராஜ் மற்றும் அவர் உறவினர் சிவக்குமார் ஆகியோரை கடந்த வியாழனன்று கைது செய்தது. தன்ராஜும், ராமதாஸின் உறவினர் என்பது குறிப்பிடத் தக்கது.
இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து இதே பாதையில் சென்றால், மருத்துவர் அய்யா, சிறைக் கைதிகளுக்கு மருத்துவம் பார்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் பெயரை விடுவித்து விட்டு, போலிக் குற்றவாளிகளைச் சேர்த்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த டிஎஸ்பி குமார் என்பவர் கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் என்று ஒருவர் இருக்கிறார். அவரிடம் பேசியவர்கள் அத்தனை பேரிடமும் கேட்டுப்பாருங்கள். உலகில் அவருக்குத் தெரியாத விஷயமே கிடையாது என்பது போல பேசுவார். அவரைத் தவிர அத்தனை பேரும் முட்டாள்கள் என்பது போலவே பேசுவார்.
தற்போது உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவில் கூடுதல் டிஜிபியாக உள்ள ராதாகிருஷ்ணன், இந்தக் கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது வடக்கு மண்டல ஐஜியாக இருந்தார். அந்தக் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த டிஎஸ்பி குமார்தான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். உலகில் அத்தனை விஷயங்களும் தெரிந்தது போல நடிக்கும் ராதாகிருஷ்ணனுக்குத் தெரியாமல், டிஎஸ்பி குமார் இந்த குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்திருக்க வாய்ப்பே இல்லை. ராதாகிருஷ்ணன் இந்தக் கொலைக்கு உடந்தையா இல்லையா ? ஆனால் இந்த ராதாகிருஷ்ணனை அதிகாரம் மிக்க பதவியான உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமித்தள்ளார் ஜெயலலிதா … …. என்ன செய்ய முடிந்தது சிவி.சண்முகத்தால் ? இதுதான் ஐபிஎஸ் அதிகாரிகளின் பலம்.
இந்த வழக்கில் முதலில் செய்திருக்க வேண்டிய காரியம், சம்பவ இடத்தில் இருந்த கண்ணால் பார்த்த சாட்சிகளை வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தியிருக்க வேண்டும். வாக்குமூலம் கொடுத்த குற்றவாளிகளில் சிலர், டாக்டர் ராமதாஸோடும், அவர் தம்பி சீனிவாசனோடும் தொலைபேசியில் பேசினேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர். உடனடியாக காவல்துறை செய்திருக்க வேண்டிய காரியம், அந்த தொலைபேசியைக் கைப்பற்றி, தொலைபேசி அழைப்புப் பதிவுகளை பெறுவதே. ஆனால், ஒரு குற்றவாளியிடம் கூட, தொலைபேசி கைப்பற்றப்படவில்லை. அழைப்புப் பதிவுகள் பெறப்படவில்லை. இந்த முக்கிய தடயத்தைக் கைப்பற்றாமல் விட்டதற்கு, முக்கிய காரணம் ஜாங்கிட்.
பலர் நேரில் பார்த்த ஒரு கொலைச் சம்பவம் நடந்த உடனேயே குற்றவாளிளைக் கைது செய்து, செல்பேசி மற்றும் முக்கிய தடயங்களை காவல்துறை கைப்பற்றியிருக்க வேண்டும். அப்படிக் கைப்பற்றாமல் தவறவிட்டதற்கு முழுப் பொறுப்பும், அப்போது விழுப்புரம் மாவட்ட எஸ்பியாக இருந்த பெரியய்யா, விழுப்புரம் டிஐஜி சஞ்சய் அரோரா மற்றும் வடக்கு மண்டல ஐஜி ஜாங்கிட் ஆகியோரையே சாரும். இவர்கள் கடமையிலிருந்து தவறியவர்கள் மட்டுமல்ல. கொலைக் குற்றத்திற்கு உடந்தையானவர்கள். பெரியய்யா டிஐஜி ஆகி விட்டார். சஞ்சய் அரோரா ஐஜி ஆகி விட்டார். ஜாங்கிட் கூடுதல் டிஜிபி ஆகி விட்டார். ஆனால் வழக்கு மீளா உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது, உயர்நீதிமன்ற உத்தரவு வரும்வரை.
இந்த நிர்வாக அமைப்பில் உயர் அதிகாரிகள் என்றுமே தண்டிக்கப்படுவதில்லை. அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு போலிக் குற்றவாளிகளை வைத்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த டிஎஸ்பி குமார்தான் இன்று கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு நடவடிக்கை எடுக்கச் சொல்லி அவருக்கு உத்தரவிட்ட உயர் அதிகாரிகள் உல்லாசமாக இருக்கிறார்கள்.
தமிழக காவல்துறையில் ஊடுருவியிருக்கும் லஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கான அற்புதமான எடுத்துக்காட்டு இந்த வழக்கு எண் 164/2006.
இந்த வழக்கில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. சிவி.சண்முகம் என்பவர் உங்களைப் போலவோ, சவுக்கைப் போலவோ சாதாரண நபர் கிடையாது. செல்வந்தர். அரசியல் செல்வாக்கு உள்ளவர். 2001 முதல் அமைச்சராகவும், எம்எல்ஏவாகவும் உள்ளவர். அவரையே இந்த காவல்துறை அதிகாரிகள் இப்படி அலைகழித்துள்ளனர் என்றால், நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கு நீதி கிடைக்கமா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
இந்த அளவுக்காவது இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதே என்று மன ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டியதுதான். பாரபட்சம் பார்க்காமல், இவ்வழக்கை சிறப்பாக விசாரித்து வரும், சிபிஐ அதிகாரிகளை பாராட்ட சவுக்கு கடமைப் பட்டுள்ளது. சிபிஐயில் உள்ள வட இந்திய உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்தாலும், டிஎஸ்பி குமார் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில். சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளையும் சிபிஐ விசாரிக்கும் என்று சவுக்கு நம்புகிறது.
Qw
படிக்கும் போதே பயம் வந்து விட்டது. அப்பப்பா என்ன கொடுமையான காவல்துறை. ஜாங்கிட் கைது மட்டுமே நீதியை நிலை நாட்ட உதவும். dsp கைது பரவாயில்லை. மேலும் dsp இடம் நன்றாக விசாரித்து அவரின் உயர் அதிகாரியை கைது செய்யவேண்டும்.