இன்று வெளிவந்த நக்கீரன் இதழில் கூடுதல் டிஜிபி துக்கையாண்டி பணி இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து ஒரு கட்டுரை வந்துள்ளது. அந்தக் கட்டுரையை பார்ப்போம்.
‘இவருக்கே இந்த நிலைமைன்னா, நம்முடைய நிலைமையும் எப்படி வேணும்னாலும் ஆகலாம். இதுக்கா இந்த வேலைக்கு வந்தோம்’ – தமிழக போலீஸ் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் சந்தித்துக்கொள்ளும்போது வெளிப்படும் வார்த்தைகள் இப்படித்தான் இருக்கிறது. இவர் என்று இவர்கள் சொல்வது கூடுதல் டிஜிபி துக்கையாண்டியைத்தான்.
1986ல் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நேரடி டிஎஸ்பியாக பணிக்கு வந்தவர் துக்கையாண்டி. 2012 ஜுன் 30ந் தேதி அவருடைய ரிடையர்மென்ட் நாள். டிஜிபி அந்தஸ்தில் இருக்கிறவங்களுக்கு கன்மேன் அணிவகுப்போடு ரிடையர்மென்ட் கொடுப்பாங்க. அதுதான் சர்வீசுக்கு கிடைக்கிற கௌரவம். அந்த கௌரவம் பெறக்கூடிய முழுத்தகுதியும் உள்ளவர்தான் துக்கையாண்டி. ஆனா, அந்த கௌரவம் கிடைக்கக் கூடாதுங்கிறதுக்காக, இப்படியா ரிடையர்மெண்டுக்கு முதல் நாள் சஸ்பெண்ட் பண்ணுவாங்க ?“ என அதிர்ச்சி விலகாமல் பேசிக்கொள்கிறார்கள். , இந்த ஆட்சியில் பவர்புல்லான போஸ்டிங்கில் இருக்கும் காக்கி அதிகாரிகள். துக்கையாண்டி மீதான சஸ்பெண்ட் நடவடிக்கைகளால் உறைந்து போயிருக்கும் உயர்அதிகாரிகள் பலரும், இந்த அரசாங்கம் செய்த பெரிய தவறு இது என்று சொல்வது ஆச்சரியமான உண்மை.
ரிடையர்மெண்ட்டுக்கு முன்னாடி அவரை சஸ்பெண்ட் பண்ணியாகணும் என்ன செய்வீங்களோ தெரியது என ஜெ.வின் நேரடி உத்தரவையடுத்துதான் இந்த நடவடிக்கை என்கிறது கோட்டை வட்டாரம். ஒரு போலீஸ் உயரதிகாரி மீது ஆட்சிக்குத் தலைமை வகிப்பவருக்கு ஏன் இத்தனை கோபம் ?
1996ம் ஆண்டு திமுக ஆட்சியில், ஜெ. மீது கலர் டி.வி ஊழல் வழக்கு பதிவாகிறது. உடனடியாக அவர் கைது செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அப்படியான அவசரம் எதுவும் காட்டப்படவில்லை. திமுகவின் கூட்டணியிலிருந்த த.மா.கா தலைவர் மூப்பனார், கலைஞரை சந்தித்து, ஜெ. ஆட்சியில் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லித்தானே மக்களிடம் ஓட்டு வாங்கினோம். கைது செய்ய ஏன் தாமதம் ? என்று கேட்குமளவுக்கு வழக்கு பரபரப்பாக இருந்தது. அப்போது சிபி.சிஐடி எஸ்.பியாக இருந்த துக்கையாண்டிதான், இந்த வழக்கை கவனித்தவர். குற்றம்சாட்டப்படடவர்கள் முன்ஜாமீன் போடுவார்கள். அதில் கோர்ட் என்ன உத்தரவிடுகிறது என்பதைப் பார்த்து நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றார். முன்ஜாமீன் மனு மீதான விசாரணை பல நாட்கள் நடந்தன. உயர்நீதிமன்ற நீதிபதி சிவப்பா, இந்த வழக்கில் முகாந்திரம் உள்ளது ஏன் இன்னும் கைது செய்யவில்லை எனக் கேட்டு மனுவைத் தள்ளுபடி செய்தார். இதன்பிறகே, அந்த ஆண்டு டிசம்பர் 7ம் தேதி ஜெ மீதான கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. போயஸ் கார்டனில் ஜெ. பூஜையில் இருந்ததால், 2 மணி நேரம் காத்திருந்து, கைது நடவடிக்கையை மேற்கொண்டவர் துக்கையாண்டிதான். ஜெ 2001ல் ஆட்சிக்கு வந்ததும், அவரை நாகர்கோவிலில் எவ்வித பவரும் இல்லாத நல்ல அலுவலகமும் இல்லாத போக்குவரத்துத் துறை விஜிலென்சுக்கு தூக்கியடித்தார்கள்.
பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் பொறுப்பு அதிகாரியாக, திமுக ஆட்சியில் பதவி வகித்த துக்கையாண்டியை நியமித்தார்க்ள. ஜெவும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களும் வாய்தா மேல் வாய்தா வாங்கிக் கொண்டிருந்த சமயத்தில் கோர்ட்டில் சரியாக ஆஜராகி விடுவார் துக்கையாண்டி. அவரால்தான் இந்த வழக்கு நெருக்கடியாகிறது என்று கார்டனுக்குத் தகவல் சொன்ன ஜெ தரப்பு வழக்கறிஞர்கள், கோர்ட் ஹாலிலேயே ஆட்சி மாறியதும் உன்னை உள்ளே வைக்கிறது நிச்சயம் என்று துக்கையாண்டியைப் பார்த்து கமென்ட் அடிப்பதும் வழக்கம் என்கிறார்கள் கர்நாடக வழக்கறிஞர்கள்.
துக்கையாண்டியை திமுக அரசின் ஆதரவாளர் என்றே கார்டன் தரப்பு முத்திரை குத்தி வைத்திருந்தது. ஆனால் விஜிலென்ஸ், சி.பி.சிஐடி என திமுக ஆட்சியில் பொறுப்பு வகித்த துக்கையோ, பவல்புல் நபர்கள் இன்னாரைக் கைது செய் என்றாலோ, விட்டுவிடு என்றாலோ கேட்கமாட்டார். சட்டப்படியான புகாரோ, நீதிமன்ற உத்தரவோ இருந்தால்தான் செய்ய முடியும் என நேரடியாக சொல்லிவிடுவார் என்கிறார்கள் நியாயமான ஐபிஎஸ் அதிகாரிகள்.
2011ல் அதிமுக ஆட்சி அமைந்ததும் 6 மாதத்திற்கு மேல் காத்திருப்பில் வைக்கப்பட்டார் துக்கையாண்டி. தனக்குப் போஸ்டிங் போடவேண்டும் என டிஜிபிக்கு அவர் கடிதம் எழுதியபிறகுதான் மாநகர போக்குவரத்தில் அதிகாரமோ, அலுவலக வசதிகளோ இல்லாத பதவிக்கு போஸ்டிங் போடப்பட்டார். அவர் மீதான நடவடிக்கை என்னவாயிற்று என்பதுதான் மேலிடத்தின் தொடர் கேள்வியாக இருந்தது என்கிறார்கள் டிப்பார்ட்மெண்டில் உள்ளவர்கள்.
கடந்த சனிக்கிழமை துக்கை ரிடையர்டாக வேண்டிய நிலையில், வியாழனன்று ஒரு நபர் அவர் மீது புகார் அளிக்கிறார். அவர் ஏற்கனவே டிபார்ட்மென்ட்டில் தவறாக நடந்து கொண்டதால் சிபி.சிஐடியில் இருந்தபோது துக்கையாண்டி அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டார். அந்தத் தவறு நிரூபணமானதால் விஜிலென்ஸில் இருந்தபோது டிஸ்மிஸ் செய்தார். இப்படிப்பட்டவர், தனது பணி நிறைவடையும் நேரத்தில் உள்நோக்கத்தோடு தரும் புகாரை ஏற்பது தவறு என விஜிலென்ஸ் அதிகாரிக்கும் உயரதிகாரிகளுக்கும் துக்கையாண்டி கடிதமும் எழுதியிருந்தார்.
புகாரின் நோக்கம் அறிந்த தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் உள்ளிட்டோர், அதில் நடவடிக்கை எடுக்க முடியாது எனத்தெரிவித்த போதும், அரசின் சட்டப் பிரிவைச் சேர்ந்த முக்கியப் பொறுப்பில் இருப்பவர், அவரைக் கம்பி எண்ண விடாமல் வெளியே விடக்கூடது. கேர்ட்டில் கேஸ் அடிபட்டாலும் பரவாயில்லை. அவரை அசிங்கப்படுத்தியாகனும் என்று மேலிடத்தின் எண்ணத்தை வெளிப்படுத்த, இதனையடுத்து, ரிடையர்மெண்டுக்கு முதல் நாளான ஜுன் 29 அன்று வேறு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் ஏடிஜிபி துக்கையாண்டி.
அவர் மீதான புகாரின் விபரம் என்னவென்று விசாரித்தோம். கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பனையூரில் 2007ம் ஆண்டு தனலட்சுமி என்பவர் தனக்குப் பவர் உள்ள 10 கிரவுண்ட் நிலத்தை விற்க, அதில் 5 கிரவுண்டு துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமி பெயரிலும், மீதி 5 கிரவுண்டு மூத்த மகள் யாமினி பெயரிலும் பதிவு செய்யப்பட்டு, இரண்டு வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. 2007ல் வீடு கட்டப்பட்ட நிலையில், 2010ல் சுப்புலட்சுமி பெயரிலான 5 கிரவுண்டு நிலம் தங்களுக்குச் சொந்தமானது என மும்பையைச் சேர்ந்த மகேந்திரகுமார் கம்பானி என்பவருடைய உறவினர் ஆலந்தூர் கோர்ட்டில் கேஸ் போடுகிறார். கமிஷனரிடமும் இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டது. இடம் தங்களுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆவணங்களை துக்கையாண்டித் தரப்பு கோர்டில் தாக்கல் செய்ய, மும்பை பார்ட்டியோ வழக்கில் ஆஜராகமல் வாய்தா வாங்கி இழுத்தபடி இருந்தது. கமிஷனரிடமும் துக்கைத் தரப்பு எல்லா ஆவணங்களையும் கொடுத்திருந்தது. இந்த இடம் தொடர்பாக துக்கைத் தரப்புக்கு ஆதரவாக கோர்ட் ஸ்டே கொடுத்ததுடன், புகார் மீது போலீஸ் பதிவு செய்த எப்ஐஆருக்கும் தடை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜய்யா என்பவர் இந்த இடத்தை வாங்குவதற்காக 2009ல் ரவி என்பவரிடம் அக்ரிமென்ட் போட்டதாகவும், ஆனால் நிலம் துக்கை குடும்பத்திடம் இருக்கிறது எனவும் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். 2007லேயே வீடு கட்டப்பட்ட நிலத்திற்கு 2009ல் எப்படி அக்ரிமென்ட் போட முடியும் எனக்கேட்டு, உரிய ஆவணஙகளை துக்கை தரப்பு கமிஷனரிடம் கொடுத்தது. போலீஸ் தரப்பில் ராஜய்யாவுடன் அக்ரிமென்ட் போட்ட ரவியிடம் புகார் கேட்டு நெருக்கடி தந்துள்ளனர். அவர் புகார் தரவில்லை. மேலும், துக்கையின் மூத்த மகள் பெயரில் உள்ள 5 கிரவுண்டு நிலம் தங்களுக்கு சொந்தமானது என் உபந்திர சலால் என்பவரின் வாரிசு புதிய புகார் ஒன்றை கமிஷனரிடம் அளித்தார். இதற்கும் பதில் ஆவணங்களை அளித்தது துக்கை தரப்பு. கமிஷனரிடம் புகார் தரப்பபட்டு, போலீசாரால் துக்கை குடும்பத்திற்கு எதிராகப் போடப்பட்ட எப்ஐஆர்கள் அனைத்திலும் ஸ்டே வாங்கப்பட்டுள்ளது என்கிறது வழக்கறிஞர்கள் தரப்பு.
கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தாரிடம் பேசியபோது, இங்குள்ள “இடங்களை வட மாநிலத்தவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே குறைந் விலைக்கு வாங்கி, லோக்கலில் உள்ளவங்ககிட்டே பவர் கொடுத்து நல்ல விலைக்கு விற்கச் சொல்லிட்டு போயிடுவாங்க. தனலட்சுமியும் அப்படி பவர் வாங்கியிருக்கலாம். அவர் மோசடியா விற்றிருந்தா, அவர் மேலத்தானே நடவடிக்கை எடுக்கணும், மோசடிக்குள்ளான துக்கையாண்டி குடும்பம் மேலே குறி வைப்பது எப்படி சரியாக இக்கும்” என்கிறார்கள்.
கடைசி நேரத்தில் பல புகர்கள் பெறப்பட்டுள்ள நிலையில், துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமி நடத்தும் ரியல் எஸ்டேட் பிசினெஸ் விவகாரத்திலும் நிலமோசடி என்றொறு எப்ஐஆரும் போடப்பட்டுள்ளளது. இந்த எப்ஐஆர்கள் எதிலும் துக்கையாண்டியை நேரில் தொடர்பு படுத்த முடியாததால் மத்திய குற்றப் புலனாய்வு டிஎஸ்பி நீலாங்கரை ரிஜிஸ்டிராரை துக்கை மிரட்டினார் என அறிக்கை தர, அதனடிப்படையில் அவர் பணி ஓய்வுக்கு முதல் நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அரசு ஊழியர்கள் மீதான புகார்கள் தொடர்பாக கடைசி நாளில் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பபட மாட்டாது என 2006 திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டதுடன், கலைஞர் முதல்வரானதும் இது தொடர்பாக தமிழக அரசு ஜி.ஓவுடத வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையையும் மீறி துக்கையாண்டியை சஸ்பெண்ட் செய்துள்ளது ஆள்வோரின் பழிவாங்கும் வெறி.
நமது நிருபர்.
படித்து விட்டீர்களா. கட்டுரையின் சாரம் என்னவென்றால், துக்கையாண்டி ரொம்ம்ம்பபபப நல்லவராம். அவர் மீது பழிவாங்கும் நடவடிக்கையாகவே சஸ்பெண்ட் செய்துள்ளார்களாம்.
இவருக்கே இந்த நிலைமைன்னா, நம்முடைய நிலைமையும் எப்படி வேணும்னாலும் ஆகலாம். இதுக்கா இந்த வேலைக்கு வந்தோம்’ – தமிழக போலீஸ் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் சந்தித்துக்கொள்ளும்போது வெளிப்படும் வார்த்தைகள் இப்படித்தான் இருக்கிறது. இவர் என்று இவர்கள் சொல்வது கூடுதல் டிஜிபி துக்கையாண்டியைத்தான்.
இதை ‘நமது நிருபர்’ என்ற பெயரில் எழுதிய காமராஜிடம் எந்த அதிகாரி தனிப்பட்ட முறையில் பேசியதை பகிர்ந்து கொண்டார் என்று தெரியவில்லை. எந்த அதிகாரியும் காண்ட்ராக்டர் காமராஜோடு தனிப்பட்ட முறையில் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை. இது ஜானி ஜான் கான் ரோட்டில் உள்ள நக்கீரன் அலுவலக மேசையில் அமர்ந்து கொண்டு வழக்கமாக எழுதும் கற்பனைக் கதைகளைப் போலவே எழுதியிள்ளார். வழக்கமாக ஓய்வு பெறும் டிஜிபிக்களுக்கு கொடுக்கப்படும் அணிவகுப்பு மரியாதை துக்கையாண்டிக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காகவே இப்படிச் செய்து விட்டார் என்கிறார் காண்ட்ராக்டர். இது எவ்வளவு அபத்தம் என்பது அவருக்கே தெரியும். துக்கையாண்டி சஸ்பெண்ட் நடவடிக்கையைப் பார்த்து உயரதிகாரிகள் எல்லாம் உறைந்து போயிருக்கிறார்களாம். எந்த அதிகாரி அப்படி உறைந்து போயிருப்பார் தெரியுமா ? துக்கையாண்டி போலவே, வாங்கிய சம்பளத்துக்கு வேலை பார்க்காமல், ரியல் எஸ்டேட் தொழில் செய்து கொண்டும், அடுத்தவர் நிலத்தை அபகரித்துக் கொண்டும் இருந்த அதிகாரிகளுக்கு சஸ்பெண்ட் நடவடிக்கை கிலியை ஏற்படுத்தியிருக்கும் என்பது உண்மைதான். எத்தனையோ பேர் மீது ஊழல் வழக்கிலும், மோசடி வழக்கிலும் நடவடிக்கை எடுத்த துக்கையாண்டிக்கு அல்லவா இது தெரிந்திருக்க வேண்டும் ? நம்மை யார் கேள்வி கேட்கப் போகிறார்கள் என்ற மமதையே அவரை இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது.
துக்கையாண்டி யாருடைய நெருக்குதலுக்கும் பணிய மாட்டார், சட்டப்படியே நடவடிக்கை மேற்கொள்வார் என்கிறார் காண்ட்ராக்டர். நெருக்கடிக்கெல்லாம் பணியாத அதிகாரி இன்று தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலேயே உள்ளனர். அதில் துக்கையாண்டி நிச்சயமாக இல்லை. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை திறம்பட கையாண்டார் அதனால் அவர் பழிவாங்கப்பட்டுள்ளார் என்று கூறும் காண்ட்ராக்டர், தங்க நாணய மோசடி (Gold Quest) துக்கையாண்டி எவ்வளவு வாங்கினார் என்பதை ஏன் எழுதவில்லை ? அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட புஷ்பம், நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட ஏதுவாக வழக்கு தயாரிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு துக்கையாண்டி மீது உள்ளதே… அதற்கு காண்ட்ராக்டரின் பதில் என்ன ? துக்கையாண்டிக்கு கீழ் பணியாற்றிய ஒரு இன்ஸ்பெக்டர் தங்க நாணய மோசடி வழக்கில் ஒன்றரை கோடி லஞ்சம் பெற்றார் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டதே… துக்கையாண்டிக்குத் தெரியாமல் அவர் லஞ்சம் வாங்கியிருப்பாரா ? சொல்லுங்கள் காண்ட்ராக்டர்.
அடுத்ததாக காண்ட்ராக்டர் குறிப்பிடும் விஷயம்தான் விஷமத்தனமானது.
“கடந்த சனிக்கிழமை துக்கை ரிடையர்டாக வேண்டிய நிலையில், வியாழனன்று ஒரு நபர் அவர் மீது புகார் அளிக்கிறார். அவர் ஏற்கனவே டிபார்ட்மென்ட்டில் தவறாக நடந்து கொண்டதால் சிபி.சிஐடியில் இருந்தபோது துக்கையாண்டி அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டார். அந்தத் தவறு நிரூபணமானதால் விஜிலென்ஸில் இருந்தபோது டிஸ்மிஸ் செய்தார். இப்படிப்பட்டவர், தனது பணி நிறைவடையும் நேரத்தில் உள்நோக்கத்தோடு தரும் புகாரை ஏற்பது தவறு என விஜிலென்ஸ் அதிகாரிக்கும் உயரதிகாரிகளுக்கும் துக்கையாண்டி கடிதமும் எழுதியிருந்தார்.“ என்று எழுதியிருக்கிறார் காண்ட்ராக்டர் காமராஜ்.
வியாழனன்று (28.06.2012) ஒரு நபர் புகார் அளிக்கிறார். ஓய்வு பெறும் ஒரு நாள் முன்பாக புகார் அனுப்பியிருக்கிறார் என்று கூறுகிறார் காண்ட்ராக்டர். இவர் குறிப்பிடுவது போல, வியாழனன்று (28.06.2012) புகார் அளிக்கவில்லை. அந்தப் புகார் அனுப்பப் பட்ட நாள் 22.06.2012. புகார் அனுப்பப்பட்ட விபரம் சவுக்கு வாசகர்களுக்குத் தெரியும். புகார் மனு அப்படியே சவுக்கில் வெளியிடப்பட்டது என்பதும் உங்களுக்குத் தெரியும்.
ஏற்கனவே டிபார்ட்மென்ட்டில் தவறாக நடந்து கொண்டதால், சிபி.சிஐடியில் இருந்தபோது துக்கையாண்டி கைது நடவடிக்கை மேற்கொண்டார் என்கிறார் காண்ட்ராக்டர்.
அந்த நபரின் மீது என்ன புகார். அந்த நபர், லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி வந்தார். 2008 ஏப்ரல் மாதத்தில் டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழ், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த உபாத்யாய் மற்றும் தலைமைச் செயலாளராக இருந்த திரிபாதிக்கும் இடையே நடைபெற்ற உரையாடலை வெளியிட்டது. அந்த உரையாடலில், திரிபாதி, ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட் வாங்கியது தொடர்பாக ஒரு புதிய ஊழல் வழக்கை பதிவு செய்வது குறித்து ஆராயுமாறு உபாத்யாயிடம் கேட்கிறார். உபாத்யாய் அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்கிறார். திரிபாதி விடுவதாக இல்லை. தொடர்ந்து வலியுறுத்துகிறார். இறுதியில், திரிபாதி என்னை நேராக வந்து பாருங்கள், இது குறித்து விவாதிப்போம் என்று கூறுகிறார்.
இதைத் தொடர்ந்து மேலும் ஒரு உரையாடல் வெளியானது. அந்த உரையாடல் என்னவென்றால், தற்போது மாநில தலைமைத் தகவல் ஆணையராக இருக்கும் ஸ்ரீபதிக்கும், உபாத்யாய்க்கும் இடையே நடைபெற்றது. ஸ்ரீபதி உபாத்யாயிடம், ஐஜிக்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங் ஆகியோர் மீது ஏதோ புகார் வந்திருக்கிறதாமே ? அதை உங்கள் இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறாராம். என்ன அது என்று கேட்கிறார். உபாத்யாய், திண்டிவனத்தைச் சேர்ந்த கல்யாணி என்ற பேராசிரியர் ஒரு ஊழல் புகார் அனுப்பியிருக்கிறார். அதில் இந்த இரண்டு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. உள்துறைச் செயலாளர் எங்கள் (லஞ்ச ஒழிப்புத் துறை) கருத்தை கேட்டுள்ளார். அதனாலேயே ஆய்வாளர் விசாரிக்கிறார் என்று கூறுகிறார். அந்தப் புகாரை விசாரிப்பது தவறு… நீங்கள் என்னை நேரில் வந்து பாருங்கள் என்று கூறுகிறார். இதுதான் இரண்டாவது உரையாடல்.
மூன்றாவது உரையாடல் டாக்டர் சுப்ரமணியர் சுவாமியால் வெளியிடப்பட்டது. அந்த உரையாடலில் அமைச்சர் பூங்கோதை லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய தனது உறவினர் ஜவஹர் என்பவர் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டாம், உதவி செய்யுங்கள் என்று கேட்கிறார். இந்த உரையாடல் வெளியானதை அடுத்து அமைச்சர் பூங்கோதை பதவியை ராஜினாமா செய்தார்.
காண்ட்ராக்டர் காமராஜ் குறிப்பிடும் அந்த நபர் இந்த உரையாடலை வெளியிட்டார் என்பதே அவர் மீதுள்ள குற்றச்சாட்டு. அந்த நபர் கைது செய்யப்பட்டு சிபி.சிஐடி காவலில் இரவு முழுவதும் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். அப்போது சிபி.சிஐடி ஐஜியாக இருந்த துக்கையாண்டி, இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் என்பதே தவறு. டெக்கான் கிரானிக்கிள் நாளிதழில் அந்த உரையாடல் வெளிவந்ததும் நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மூன்று மாதங்கள் கழித்து சண்முகம் பரிந்துரையின் அடிப்படையில் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். இதில் சித்திரவதையை மேற்பார்வை செய்தார் என்பதைத் தவிர துக்கையாண்டிக்கு எந்தப் பங்கும் இல்லை.
லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக துக்கையாண்டி இருந்தபோது அந்த நபரை டிஸ்மிஸ் செய்தார் என்பதும் உண்மையே. சென்னை உயர்நீதிமன்றம் துறை ரீதியான விசாரணைக்கு தடை விதித்திருந்ததை மீறி, துக்கையாண்டியின் சுய உருவம் சவுக்கு தளத்தில் அம்பலப்படுத்தப் பட்டதால் ஆத்திரமடைந்த துக்கையாண்டி, பழிவாங்கும் உணர்ச்சி காரணமாக நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி டிஸ்மிஸ் ஆணையை பிறப்பித்தார். அந்த நபர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்ததும், துக்கையாண்டி மண்டியிட்டு, அந்த டிஸ்மிஸ் ஆணையை வாபஸ் பெற்றார். தன்னால் முடிந்த துன்பத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக பணி இடை நீக்கத்தில் உள்ள அந்த நபருக்கு கிடைக்க வேண்டிய அரைச் சம்பளத்தை ஐந்து மாதங்கள் தராமல் நிறுத்தி வைத்திந்தார் துக்கையாண்டி.
இதுதான் உண்மையான விபரம். இந்த விபரங்கள் காண்ட்ராக்டர் காமராஜுக்கு தெரியாதவை அல்ல. ஆனால், தனது தொழில் பங்குதாரர் துக்கையாண்டிக்கு ஆதரவாக கட்டுரை எழுத வேண்டும் என்பதால் பொய்யையும், புரட்டையும் எழுதியிருக்கிறார் காண்ட்ராக்டர் காமராஜ்.
அந்த நபரின் புகார் பழிவாங்கும் நோக்கத்தோடு கொடுக்கப்பட்டது என்பதால், அது வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டார்களாம். பிறகு வேறு புகாரில் நடவடிக்கை எடுத்தார்களாம். காண்ட்ராக்டரின் கற்பனை வளத்துக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.
இதையடுத்து, துக்கையாண்டியின் நிலம் தொடர்பான புகார்கள் அத்தனையும் பொய் என்றும், அனைத்தும் ஏற்கனவே விசாரித்து முடிக்கப்பட்டவை என்றும் அனைத்து எப்ஐஆர்களுக்கும் ஸ்டே வாங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார் காண்ட்ராக்டர். மேலும், துக்கையாண்டியின் மனைவி பவர் பத்திரம் வைத்திருந்த தனலட்சுமியிடமிருந்து நிலம் வாங்கியுள்ளதால், துக்கையாண்டி ஏமாந்து போய்விட்டாராம். துக்கையாண்டியை ஏமாற்றிய தனலட்சுமி மீது நடவடிக்கை எடுக்காமல், துக்கையாண்டி மீது நடவடிக்கை எடுப்பது என்ன நியாயம் என்று கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தார் கூறினார்களாம்.
இந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தார் வேறு யாருமல்ல. காண்ட்ராக்டர் காமரேஜேதான்.
துக்கையாண்டி மனைவி நிலம் வாங்கியது தொடர்பாக ஆலந்தூர் கோட்டில் வழக்கு இருக்கிறது, அங்கு துக்கை தரப்பில் ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்கிறார் காண்ட்ராக்டர். துக்கையாண்டியின் மனைவி ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார் என்றும் காண்ட்ராக்டர் காமராஜ் சொல்லியிருக்கிறார்.
ஒரு சொத்தை வாங்குவதற்கு முன், ஆயிரம் முறை சரிபார்ப்பது அனைவரது வழக்கம். அதுவும் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் துக்கையாண்டியின் மனைவி சரிபார்க்காமல் இருப்பாரா ? எவ்வளவு ரியல் எஸ்டேட் விற்றிருப்பார் ? அவருக்குத் தெரியாதா ? ஆலந்தூர் கோர்ட்டில் என்றைக்கு வழக்கு வந்ததோ அன்றே தங்களை ஏமாற்றிய தனலட்சுமி மீது புகார் கொடுத்திருக்க வேண்டாமா ? 2008-2009ல் கொடிகட்டிப் பறந்த கூடுதல் டிஜிபி தன் மனைவியை ஏமாற்றி சொத்தை விற்ற நபரை உரித்திருக்க மாட்டார் ? ஏன் செய்யவில்லை துக்கையாண்டி ?
காண்ட்ராக்டர் காமராஜ் குறிப்பிட்டுள்ள “அந்த நபருக்கு” துக்கையாண்டி மீது கோபம் இருக்கிறதா என்றால் நிச்சயம் இருக்கிறது. அரைச் சம்பளத்தைக் கூட நிறுத்தினாரே என்று. தடையுத்தரவு இருக்கும் போது டிஸ்மிஸ் செய்தாரே என்ற கோபம் நிச்சயம் இருக்கிறது.
1980ல் இறந்து போன வட இந்தியரின் பெயரில் 2007ல் பவர் பத்திரம் தயார் செய்து 5 கிரவுண்டு நிலத்தை அபகரிக்க அந்த நபரா சொன்னார் ?
மும்பையைச் சேர்ந்த தலால் குடும்பத்திற்குச் சொந்தமான மேலும் 5 கிரவுண்டு நிலங்களையும் மோசடியாக அபகரிக்க அந்த நபரா சொன்னார் ?
ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி ரியல் எஸ்டேட் பிசினெஸ் செய்யலாமா ? நேர்மையான வழியில் தொழில் நடத்தினால் கூட அவதூறு பேசமாட்டார்களா ? ரியல் எஸ்டேட் தொழில் செய்துதான் சோறு தின்ன வேண்டும் என்ற அளவில்தான் துக்கையாண்டி குடும்பம் இருந்ததா ? இதற்கெல்லாம் அந்த நபரா காரணம் ?
ரியல் எஸ்டேட் பிசினெஸ் என்ற பெயரில், காவல்துறையில் இருக்கும் செல்வாக்கை துஷ்பிரயோகம் செய்து, பலரின் நிலங்களை அபகரித்து துக்கையாண்டி மனைவி பிசினெஸ் நடத்த அந்த நபரா காரணம் ?
அலுவலக வேலைக்காக கொடுத்திருக்கும் மணி என்ற காவலரை, எப்போதுமே ரியல் எஸ்டேட் பிசினெசுக்கு பயன்படுத்த அந்த நபரா காரணம் ?
மக்கள் வரிப்பணத்தில், அலுவலக வேலைக்காக கொடுக்கப்பட்ட ரகசிய நிதியை துக்கையாண்டி கையாடல் செய்ததற்கு அந்த நபரா காரணம் ?
ஒரு விஷயத்துக்கு அந்த நபரைக் காரணமாகச் சொல்லலாம். இரண்டு மாதங்களாக எப்ஐஆரை ரகசியமாக வைத்திருந்து, எப்படியாவது நைசாக ஓய்வு பெற்று, ஓய்வு பெறும் அன்றே ஓய்வூதியப் பலன்களாக வரும் பல லட்ச ரூபாயைப் பெற்றுக் கொண்டு, அதன் பிறகு இந்த வழக்கை ஊற்றி மூடலாம் என்று துக்கையாண்டி திட்டமிட்டிருந்தார்.
துக்கையாண்டி மனைவி மீது போடப்பட்ட எப்ஐஆரை மிகுந்த சிரமப்பட்டு எடுத்து, அதை ஒரு இணைய தளத்தில் அம்பலப்படுத்தி, துக்கையாண்டி மீது உடனடியாக ஒரு புகாரைக் கொடுத்து, மந்தமாக இருக்கும் மங்குணி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்பதற்காக பேச வேண்டிய இடத்தில் பேசி, துக்கையாண்டியின் ஓய்வூதியப் பலன்கள் அவருக்கு கிடைக்காமல் செய்ததற்கு “அந்த நபர்தான்” காரணம்.
காண்ட்ராக்டர் காமராஜுக்கும், துக்கையாண்டிக்கும் சவுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது. இது போன்ற கட்டுரைகளையெல்லாம் நக்கீரனில் எழுதுவதால், இதைப் படித்து விட்டு, நீங்கள் இருவரும் புளகாங்கிதம் அடைந்து கொள்ளலாம். போனில் பேசிச் சிரிக்கலாம். அதைத் தாண்டி நக்கீரனில் வரும் கட்டுரையால் எந்தப் பயனும் இல்லை. நக்கீரன் இதழ் காகிதங்களை வைத்து போண்டா பஜ்ஜி கூட மடிப்பதில்லை என்கிற அளவுக்குத்தான் நக்கீரன் இதழுக்கு மரியாதை.
எஸ்.பியாக துக்கையாண்டி.
படிச்சவன் சூதும் வாதும் பண்ணா போவான் போவான்…. அய்யோன்னு போவான் என்றான் பாரதி. படித்த துக்கையாண்டி க்ரூப் 1 அதிகாரிகள் பலருக்கு கிடைக்காத அரிய வாய்ப்பான கூடுதல் டிஜிபியாகும் அளவுக்கு அதிர்ஷ்டம் படைத்தவர். அடுத்தவர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கும் அளவுக்கு துணிந்திருக்கிறார் என்றால், நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற இறுமாப்பே. துக்கையாண்டிக்கு கிடைத்த தண்டனை, இவரைப் போலப் பேராசை படைத்த மற்ற அதிகாரிகளுக்குப் பாடமாக அமைய வேண்டும்.
காதற்ற ஊசியும் வாராது கண் கடைவழிக்கே..
பட்டினத்தார்.