இந்தப் பாடலை யார் பாடுகிறார்கள் என்று பார்க்கிறீர்களா.. பெரும்பாலான தந்தையர் இந்தப் பாடலைப் பாடாமல் இருக்க மாட்டார்கள். சவுக்கின் தந்தை இருந்திருந்தால், இந்நேரம் “எனக்குன்னு வந்து பொறந்துருக்கு பாரு தறுதல, தறுதல. வேலையப் பார்றான்னா சவுக்கு எழுதறேன்.. சாணி அள்ளுறேன்னு… தறுதல தறுதல” என்று கண்டிப்பாக திட்டியிருப்பார். எல்லா தந்தைகளும் தங்கள் குழந்தைகள் பதின்பருவத்தை அடைகையில் இப்படி திட்டத்தான் செய்வார்கள்.
இப்போது ஒரு முக்கியப் பிரமுகர் இதே போல புலம்பிக் கொண்டு தென்னையப் பெத்தா இளநீரு என்று பாடிக்கொண்டிருக்கிறார். முக்கியப் பிரமுகர் என்றால் சாதாரண பிரமுகர் கிடையாது. மிக மிக முக்கியப் பிரமுகர். அவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையை முதலில் படித்து விடுங்கள்.
படித்து விட்டீர்களா ? இதே ஜாங்கிட் தான் சோக கீதம் இசைத்துக் கொண்டிருப்பவர். இவர் சோக கீதம் இசைப்பதன் காரணம் இவரின் புத்திரன் விக்ரம் சங்காராம் ஜாங்கிட் தான். இந்த விக்ரம் பட்டப்படிப்பு முடித்து விட்டு ஐபிஎஸ் தேர்வுக்காக தயார்படுத்திக் கொண்டு வருகிறார்.
என்ன இஷ்டைலா இருக்கறார் பாத்தீங்களா ?
ஜாங்கிட்டின் இளைய மகன் விக்ரம் ஜாங்கிட். இவர் படித்து முடித்து விட்டார். அவர் தந்தை ஜாங்கிட்டுக்கு இவரை எப்படியாவது ஐபிஎஸ் அதிகாரியாக்கி விட வேண்டும் என்று ஒரு தணியாத ஆசை. ஐபிஎஸ் என்ற பதவியை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது ஜாங்கிட்டுக்கு அல்லவா தெரியும் ? ஜாங்கிட் சென்னை மாநகரின் கூடுதல் ஆணையாளராக இருந்தபோது, நடந்த ஒரு சம்பவம் சுவையான சம்பவம்.
ஜாங்கிட்டின் மகன் சகாய் ஜாங்கிட், அமெரிக்கா செல்ல வேண்டும். அதற்காக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசா வேண்டி விண்ணப்பித்தார். ஏதோ ஒரு காரணத்தால், அமெரிக்க தூதரகம் ஜாங்கிட் மகனுக்கு விசா வழங்க மறுத்து விட்டது. வந்ததே கோபம் ஜாங்கிட்டுக்கு… என் மகனுக்கா விசா வழங்க மறுக்கிறீர்கள். உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று சென்னை மாநகர காவல்துறையைச் சேர்ந்த பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த வஜ்ரா வாகனம் மற்றும் ஆயுதம் தாங்கிய காவல்துறையினரை வாபஸ் பெற்று விட்டார்.
அமெரிக்க தூதரகம் என்ன சென்னைப் புறநகரில் பாய் வைத்திருக்கும் கசாப்புக் கடையா ? உடனே இந்திய வெளியுறவுத் துறை செயலரிடம் புகார் கூறப்பட்டது. வெளியுறவுத் துறை, மத்திய உள்துறைக்கு தகவல் சொல்ல, உள்துறைச் செயலாளர், தமிழக தலைமைச் செயலாளரிடம் தகவல் சொல்ல, உடனே வாபஸ் பெறப்பட்ட பாதுகாப்பு அத்தனையும் திரும்ப வழங்கப்பட்டது. எந்த நாட்டுத் தூதரகமாக இருந்தாலும் அதற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை. அதிலும் அமெரிக்க தூதரகம் என்றால் கேட்கவே வேண்டாம். இப்போது இல்லை. சில ஆண்டுகளுக்கு முன், சென்னை அண்ணா மேம்பாலத்தில் ஒரு போலீஸ் காரரை செல்ப் லோடிங் ரைபிளோடு ஒரு சிறிய கூரை மட்டும் கொடுத்து உட்கார வைத்திருப்பார்கள். அதாவது தூதரகத்தை யாராவது கீழிருந்து தாக்கினால், பாலத்தின் மேலிருந்து இவர் சுட்டுக் காப்பாற்ற வேண்டுமாம். நமது வாகனங்களின் புகையை சுவாசித்துக் கொண்டிருக்கும் அந்தப் போலீஸ் காரரைப் பார்த்தால் பாவமாக இருக்கும். தற்போது எடுத்து விட்டார்கள் போலிருக்கிறது.
அப்படிப்பட்ட அமெரிக்க தூதரகத்துக்கு தண்ணி காட்டுகிறார் என்றால் அது ஐபிஎஸ் என்ற அதிகாரம் தானே… தனக்கு உள்ள இந்த அதிகாரம் தன்னுடைய மகனுக்கும் கிடைக்க வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு ?
தவறில்லைதான். இளைய மகனை ஐபிஎஸ் அதிகாரி ஆக்க வேண்டும் என்று ஜாங்கிட் செய்த முயற்சிகள் ஒரு புறம் இருக்க விக்ரம் ஜாங்கிட்டோ உல்லாச புரியில், , “சரக்கு வெச்சுருக்கேன், எறக்கி வச்சுருக்கேன்.. கருத்த கோழி மொளகு போட்டு வருத்து வச்சுருக்கேன்” என்று பாடிக் கொண்டு, உல்லாசமாக இருப்பவர்.
விக்ரம் சஜாங்கிட் தன் இஷ்டம் போல தன் வாழ்க்கையை உல்லாசமாக நடத்திக் கொண்டிருந்தார். சரக்கடித்து விட்டு, வண்டி ஓட்டுவார். காவல்துறையினர் எங்கே பிடித்தாலும் தந்தையின் பெயரைச் சொல்லுவார். இவர் தந்தையின் பெயரை சொன்ன பிறகு கூட ட்ரங்கென் ட்ரைவ் கேஸ் போட யாருக்காவது தைரியம் வருமா ? விட்டு விடுவாரா ஜாங்கிட். இப்படி உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருந்தவர் வாழ்வில் ஒரு திருப்பம்….
என்ன திருப்பம்… ? கடந்த சனிக்கிழமை (07.07.2012) அன்று இரவு எப்போதும் போல சரக்கடித்து விட்டு, மகாபலிபுரம் சென்று விட்டு, ஒரு ஹ்யுண்டாய் ஐ20 காரில் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது விபத்து… …. எதிரே வந்த வாகனத்தோடு இவரது கார் மோதியதாகத்தான் பூர்வாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிரில் வந்த வாகனத்தில் இருந்தவர்கள் அனைவருக்கும் பலத்த காயம். காயம் பட்டவர்கள் அனைவரும் இளைஞர்கள். டேனியல், கிருஷ்ணன், குமரகுரு மற்றும் கவுஷிக் ஆகியோர் தான் பலத்த காயத்துக்கு உள்ளானவர்கள். அவர்கள் இரவோடு இரவாக செட்டிநாடு மருத்தவமனையில் அனுமதிக்கப் படுகிறார்கள்.
சரக்கடித்து விட்டு வண்டி ஓட்டிய, நம்ப விக்ரம் ஜாங்கிட்டுக்கும் அடி பட்டுள்ளது. அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் அறை எண் 401ல் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சரி இப்படி ஒரு விபத்து நடந்தால் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் காவல்துறையினர். உடனடியாக வண்டியை ஓரங்கட்டி விட்டு, காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். சுயநினைவோடு இருப்பவர்களிடம் வாக்குமூலம் பெறுவார்கள். யாரும் சுயநினைவோடு இல்லையென்றால் சிகிச்சை முடிந்தவுடன் வாக்குமூலம் பெறுவார்கள். உடனடியாக சம்பந்தப்பட்ட வாகனம் காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இவையெல்லாவற்றுக்கும் மேலாக, முதலில் எப்ஐஆர் போட வேண்டும். இதுதான் சவுக்குக் தெரிந்த காவல்துறையினரின் நடை முறை.
ஆனால் நீங்களோ மற்ற சாமான்யரோ இது போல ஓட்டியிருந்தால் இதைச் செய்யலாம்.. ஆனால் மாட்டியது விக்ரம் ஜாங்கிட்டாயிற்றே… உடனடியாக ஜாங்கிட்டிடமிருந்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் என்பவருக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. ஜாங்கிட் பேசியவுடன் எப்ஐஆர் போடாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட கார், மகாபலிபுரம் காவலர் குடியிருப்பின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை 10.30 மணிக்கு இந்த விபத்து பற்றித் தகவல் கிடைத்தது. விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவு எண் TN-10-AH-4666. இந்த வாகனம் யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று விசாரித்தால், எம்.செந்தில் குமார். த/பெ மாரிமுத்துசாமி, எண்.2642/NA ரிவர் வியூ என்க்ளேவ், ஐபிஎஸ் காலனி, யமுனா சாலை, மணப்பாக்கம், சென்னை என்ற முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செந்தில் குமார் யார், அவரும் உயர் அதிகாரியா ? அல்லது சாதாரமாணவரா ? சாதாரமாணவருக்கு ஐபிஎஸ் காலனியில் என்ன வேலை ? அல்லது இவர் ஜாங்கிட்டுடைய பினாமியா ? இவர் பெயரில் தமிழ்நாட்டில் எங்கெங்கு சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன என்ற விபரங்களை சவுக்கு வாசகர்கள் யாராவது பத்திரப் பதிவுத் துறையில் இருந்தால் சேகரித்து அனுப்புங்கள். லஞ்ச ஒழிப்புத் துறையின் பார்வைக்கு புகாரோடு அனுப்பி வைப்போம். புகார் அனுப்பினால்தான் நகருவார்கள். லஞ்ச ஒழிப்புத் துறை என்பது ஆமையின் வேகத்தில் 10ல் ஒரு பங்கு வேகத்தில் நகரும் ஒரு துறை. அதனால் நாமே முன் முயற்சி எடுப்போம்.
விஷயம் உறுதி செய்யப்பட்ட பின், முக்கிய பத்திரிக்கையாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு குறுந்தகவல் மூலம் செய்தி அனுப்பப் பட்டது. ஊடகங்களில் செய்தி வந்த பிறகாவது எப்ஐஆர் போடுகிறார்களா என்று பார்ப்போம்.
தனக்கு மிக மிக நெருக்கமான, தனக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய இரண்டு காவல் ஆய்வாளர்களை இந்த வழக்கை ஒன்றும் இல்லாமல் முடிப்பதற்காக நியமித்துள்ளார் ஜாங்கிட். ஒருவர் ஆரோக்கிய ரவீந்திரன். இவர் பள்ளிகரணையில் ஆய்வாளராக உள்ளார். மற்றொரு ஆய்வாளர் பெயர் அகஸ்டின் பால் சுதாகர். இவர் அயல் பணியாக சென்னை அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரோடு சேர்ந்து கோ ஆர்டினேட் செய்பவர் கிண்டி உதவி ஆணையர் மாணிக்கவேல்.
புலனாய்வுக்கு கூட இப்படி ஒரு குழு அமையவில்லை. ஆனால் புலனாய்வை முடக்குவதற்கு எப்படி டீம் அமைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா ?
உடனே சவுக்கு வாசகர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும். இதிலும் இந்த நபர் தப்பித்து விடுவார். அவ்வளவுதான் என்று மனச்சோர்வு ஏற்படும். அப்படியெல்லாம் கவலைப்படாதீர்கள்.
வடக்கு மண்டல ஐஜியாக மதுரையிருந்து மாற்றத்தில் கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட வரை அழுத்தங்களுக்கு அசைந்து கொடுக்காதவர் என்றே சொல்லப்படுகிறது. அவர் இந்த வழக்கை சிறப்பாக மேற்பார்வை செய்து, சம்பந்தப்பட்ட நபருக்கு உரிய தண்டனை வாங்கித் தருவார் என்று நம்புவோம்.
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ.
கண்ணப்பனுக்கு ஈடான அன்பு என்னிடம் இல்லாவிட்டாலும் கூட இறைவர் என்னையும் ஆட்கொண்டருளியதாகத் திரு கோத்தும்பியில் குறிப்பிடுகின்றார்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் கருணை போல, காவல்துறை அதிகாரி கண்ணப்பன் கடமையாற்றுவார் என்று நம்புவோம்.
இப்படிப்பட்ட சூழலில் ஜாங்கிட் இந்தப் பாடலைப் பாடுவது பொருத்தம் தானே ?
இதுவும் உங்க காரா சார்.. மொத்தம் எத்தனை கார் சார் வச்சுருக்கீங்க ?
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஒரு பிள்ளையென்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே