அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள வேறுபாடுகள், கடந்த பத்தாண்டுகளாகவே மங்கி வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை, அதிகாரிகள் அரசியல்வாதிகளாகவே மாறிப்போனது தொடங்கியது 1991 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான். அதற்கு முன்பு, கருணாநிதி ஆட்சிக் காலத்திலும், சர்க்காரியா ஊழல் விசாரணை நடந்த போதும், இது போன்ற நிகழ்வுகள் நேர்ந்திருக்கின்றன என்றாலும், அதிகாரிகள் அரசியல்வாதிகளாகவே மாறிப்போன சதவிகிதம் மிக மிகக் குறைவு.
ஆனால் 1991ல் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றதும்தான், அதிகாரிகள் அரசியல்வாதிகளின் ஏவலாட்களாகவும், கூஜாக்களாகவும் மாறிப்போயினர். இவ்வாறு ஏவலாட்களாக மாறிய அதிகாரிகளுக்கு கிடைத்த ஏராளமான சலுகைகளும், பணப்பயன்களும், அதிகாரமும், இதர நேர்மையான அதிகாரிகளையும் மனம் மாறச் செய்தன. கொடைக்கானல் ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டலுக்கு விதிமுறைகளை மீறி அனுமதி கொடுக்க அப்போது இருந்த அத்துறையின் செயலாளர் பி.சி.சிரியாக் மறுத்ததால், அவர் கடுமையாக மிரட்டப்பட்டு, விருப்ப ஓய்வில் செல்லுமாறு நிர்பந்த்திக்கப்பட்டார். ஜெயலலிதாவின் சட்டவிரோத உத்தரவுகளுக்கு கீழ்படிய மறுத்த சந்திரலேகா ஐஏஎஸ் முகத்தில் ஆசிட் வீசப்பட்டது.
ஆனால், ஜெயலலிதா சொல்லியபடி கொள்ளையடிக்க உதவி செய்து, தாங்களும் கொள்ளையடித்த, எல்.என்.விஜயராகவன், தியானேஸ்வரன், ஹரிபாஸ்கர், ப்ரித்வி ராஜ் லங்தாசா, சதபதி, ஜே.டி.ஆச்சார்யலு, போன்ற அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் பணி நீட்டிப்பும் வழங்கப்பட்டது. வரலாறு காணாத அளவுக்கு ஹரிபாஸ்கர் தலைமைச் செயலாளராக இருந்தபோது அவருக்கு நான்கு முறை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த பணி நீட்டிப்புக்களுக்கு பிரதியுபகாரமாக, ஜெயலலிதா சொன்ன அத்தனை கோப்புகளிலும் கண்ணை மூடிக் கொண்டு கையொப்பமிட்டார் ஹரிபாஸ்கர். கையொப்பம் இட மறுத்த அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்தார். கண்டித்தார். மிரட்டினார். அரசு நிர்வாகம் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்ததென்றால் அது மிகையாகாது.
தன்னுடைய முதல் ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா தான்தோன்றித்தனமாக ஆட்சி செய்தார். தமிழகமே தனக்குச் சொந்தம் என்பது போல ஆட்சி செய்தார். எதிர்த்துப் பேசுபவர்களை ஆட்டோவை விட்டு அடிப்பது, சொத்துக்களை பறிப்பது, மறுத்துப் பேசினால் அடி உதை. மன்னார்குடி மாபியா முழு அளவில் உருவெடுத்து தமிழகத்தை ஆட்டிப்படைத்தது 1991-1996 காலத்தில்தான்.
1996ம் ஆண்டு பதவியேற்ற திமுக, ஜெயலலிதா அரசின் ஊழலை அம்பலப்படுத்துவதையே வாக்குறுதியாக அளித்து, பதவியேற்றது. ஜெயலலிதா அரசின் ஊழலைப் பார்த்து, அருவெறுப்படைந்த மக்கள், தற்போது ஜெயலலிதா பெற்ற வெற்றியை விட, பல மடங்கு வெற்றியைத் தந்தனர். அந்தத் தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதாவே தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய சட்டமன்றத்தில் அதிமுகவுக்கு இடமே இல்லாத அளவுக்கு மக்கள் திமுகவுக்கு வாக்களித்தனர்.
1996ல் பதவியேற்ற திமுக அரசில் ஊழலை ஒழிப்பதற்கென மிகப் பெரிய அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இளம் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த உமா சங்கர், விழிப்புப் பணி ஆணையத்தில் இணை ஆணையரா நியமிக்கப்பட்டார். அப்போது விழிப்புப் பணி ஆணையராக எஸ்.ஏ.சுப்ரமணி என்ற ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டார். உண்மையிலேயே கருணாநிதி அரசு ஊழலை ஒழிப்பதில் முழு முனைப்பாக இருக்கிறது என்று நம்பி ஆர்வக் கோளாறில் உமாசங்கர், அத்தனை கோப்புகளையும் ஆராய்ந்து, வழக்கு பதிவு செய்வதற்கான ஆதாரங்களை திரட்டித் தரும் பணியில் முனைப்பாக ஈடுபட்டு வந்தார். ஆனால் உமாசங்கர் திரட்டித் தந்த ஆதராங்களில் சில வழக்குகள் எவ்வித காரணமும் காட்டப்படாமல் மூடப்பட்டதைக் கண்ட உமாசங்கர் தன் இயல்பான குணத்தால் அந்த வழக்குகள் ஏன் மூடப்படுகின்றன என்பது குறித்து கேள்விகள் எழுப்பினார். உமாசங்கர் சில மாதங்களிலேயே விழிப்புப் பணியை விட்டு மாற்றப்பட்டார்.
ஜெயலலிதா அரசில் நடந்த ஊழல்கள் குறித்து வழக்குகள் பரவலாக பதிவு செய்யப்பட்டாலும், பார்ப்பன அதிகாரிகள் மீதான வழக்குகள் பல காரணமின்றி மூடப்பட்டன. லஞ்ச ஒழிப்புத் துறையில் அப்போது துணை இயக்குநராக இருந்த ரமணி என்ற ஐபிஎஸ் அதிகாரியும், பார்ப்பன அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளை நடவடிக்கையின்றி மூடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். அந்த ஊழல் ஒழிப்புக்குள்ளாகவே ஒரு ஊழல் தொடங்கியது.
அப்போதைய கருணாநிதி அரசில் பெரிய அளவில் ஊழல்கள் இல்லாவிட்டாலும், இங்கொன்றும், அங்கொன்றுமாக ஊழல்கள் நடந்தே வந்தன.
2001ல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், மடை திறந்த வெள்ளம் போல ஊழல் தொடங்கியது. 2001ல் அதிமுக ஆட்சி பதவியேற்றதும் நடந்த முதல் வேலை, லஞ்ச ஒழிப்புத் துறையில் கடந்த காலத்தில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஜெயலலிதா மீதான வழக்குகளை எப்படி ஒவ்வொன்றாக மூடுவது என்பதுதான். அப்பாது லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக இருந்த நாஞ்சில் குமரன், ஐஜிக்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங் ஆகியோர் போட்டி போட்டுக் கொண்டு வழக்குகளை எப்படி மூடுவது என்று அரசுக்கு யோசனைகளை கூறினர். தற்போதைய அமைச்சர் வளர்மதி, தவசி எம்எல்ஏ, செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணன் போன்றவர்கள் மீதான வழக்குகளை நரேந்திர பால் சிங் மூடினார். ஜெயலலிதா மீது இருந்த மீனா அட்வர்டைசர்ஸ், ஜெயலலிதா ராஜ்யசபா எம்.பியாக இருந்த காலத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு போன்றவற்றை ராதாகிருஷ்ணன் மூடினார். இவற்றுக்கு பிரதிபலனாக ராதாகிருஷ்ணனை லஞ்ச ஒழிப்புத் துறையினுள்ளாகவே கொள்ளையடிக்க ஜெயலலிதா அனுமதித்து, இவர்கள் இருவரின் பிள்ளைகளுக்கும் அண்ணா பல்கலைகழகத்தில் கவர்மென்ட் கோட்டாவில் சீட் ஒதுக்கி உத்தரவிட்டார். Two degrees and a clean chit
2001-2006 ஜெயலலிதா அரசு, எதைப்பற்றியும் கவலைப்படாமல், மனம் போன போக்கில் தான்தோன்றித்தனமாக நடந்தது. அப்போது அதிகாரிகளை விட, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிக அளவில் ஊழலில் ஈடுபட்டார்கள். அதிகாரிகள் பெரிய அளவில் ஊழலில் ஈடுபட்டதற்கான காரணம், அதிகாரிகள் யாரையும் இரண்டு மாதத்திற்கு மேல் ஜெயலலிதா ஒரு பதவியில் வைக்காததே. ஆனால் ஜெயலலிதாவின் உத்தரவுப் படி, இடைக்கால முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு தொழில் நிறுவனங்களிடம் வாரிக் குவித்தார். அதிகாரிகளும் தங்கள் பங்குக்கு சிறிய அளவில் வசூலித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.
கடலூல் மாவட்டத்தில் சப் கலெக்டராக நேரடி நியமனத்தில் நியமிக்கப்பட்ட தேவ் ராஜ் தேவ் என்ற அதிகாரி 2001ல் பணியாற்றினார். தமிழகத்தில் அப்போது இருந்த நிலைமையை நன்கு புரிந்த அதிகாரி, சாதாரண போலீஸ் ஸ்டேஷன் ஏட்டையாவைப் போல, வீதியில் இறங்கி வசூலில் இறங்கினார். வணிகவரித் துறை, வருவாய்த்துறை, காவல்துறை என்று எந்தத் துறையையும் விடாமல் அத்தனை பேர் வருவாயிலும் கை வைத்தார். கடலூர் மக்கள் இந்த வசூல் ராஜாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்க்ள். லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நேரடியாக புகார் வந்தது. தேவ் ராஜ் தேவ் லஞ்சம் கேட்கிறார். நாளை வந்தால் கையும் களவுமாக பிடிக்கலாம் என்று நேரடியாக புகார் வந்தது. அப்போது ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சர். ஐஏஎஸ் அதிகாரி கையும் களவுமாக லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டால், அரசுக்கு கெட்ட பெயர் என்று, அவரை கைது செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனால் தேவ் ராஜ் தேவ் மீது எப்ஐஆர் பதிவு செய்து, புலனாய்வு மேற்கொள்ளப்பட்டது. புலனாய்வின் இறுதியில், அவர் மீது வழக்கு தொடுக்க மத்திய அரசின் அனுமதி கேட்டபோது, தேவ் ராஜ் தேவ் மீது போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அனுமதி மறுக்கப்பட்டது. தேவ் ராஜ் தேவுக்கு எதிராக, போதுமான சாட்சியங்களும், ஆவணங்களும் இருந்தன. நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான வாக்குமூலங்களும் நீதிபதி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டன. இருப்பினும் இறுதியில் அந்த வழக்கு நடவடிக்கையின்றி மூடப்பட்டது. தேவ் ராஜ் தேவ், தற்போது மாநில மனித உரிமை ஆணையத்தில் துணைச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
இது 2001 அதிமுக ஆட்சி நடந்த லட்சணத்திற்கு ஒரு சான்று. 2006ல் நடைபெற்ற திமுக ஆட்சியைப் பற்றி சவுக்கு வாசகர்களுக்கு தனியாக விளக்க வேண்டியதில்லை. கருணாநிதி என்ற நீரோ மன்னன் பிடில் வாசிக்க, ஜாபர் சேட் என்ற இளவரசர் தலைமையில் நடைபெற்ற ஊழல்களும், முறைகேடுகளின் பட்டியலையும் வெளியிட்டால் பக்கங்கள் போதாது. வீட்டு வசதி வாரிய முறைகேட்டில் தொடங்கி, கருணாநிதியின் 2006 ஆட்சி காலத்தில் முறைகேடுகள் நடைபெறாத துறைகளே இல்லை எனலாம். அந்த முறைகேடுகளின் உச்சமாக, சட்டபூர்வமான ஒரு ஊழல் அரங்கேற்றப்பட்டது என்றால், அது உயர் உயர் அதிகாரிகளுக்கான நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டம்தான். இந்த நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டத்தைப் பற்றி, சவுக்கில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகளில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
இன்னும் எவ்வளவுதான் வேண்டும் ?
இந்த நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டத்தை எதிர்த்து தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்றும் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில், வீட்டு வசதி வாரியம் தொடர்பாக ஒரு கூடுதல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், விதி முறைகளை மீறி ஒதுக்கீடு பெற்ற 29 அதிகாரிகளின் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 29 அதிகாரிகள், அரசு விருப்புரிமைக் கோட்டாவில் ஒதுக்கீடு பெற்றவர்கள் நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டத்தில் ஒதுக்கீடு பெற தகுதியற்றவர்கள் என்பதை மீறி ஒதுக்கீடு பெற்றுள்ளார்கள் என்பதே அக்குற்றச்சாட்டு. அந்த 29 நபர்களின் பட்டியல் பின்வருமாறு.
இந்த நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டத்திற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டது 28.02.2011 அன்று. அந்த விதிமுறைகளில் விதி (xv) என்ன கூறுகிறதென்றால், ஏற்கனவே, அரசு விருப்புரிமைக் கோட்டாவில் (GDQ) பயன்பெற்றவர்கள், இத்திட்டத்தில் பயன்பெறத் தகுதியற்றவர்கள் என்பதே அந்த விதி.
இந்த விதியையும் மீறி, அரசுக்கு நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டத்தில் விண்ணப்பித்தது சட்டவிரோதமான காரியமா இல்லையா ? சாதாரண அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளை மீறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அந்த அரசு ஊழியருக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் இந்த அதிகாரிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. தங்கள் கீழ் பணிபுரியும், கீழ்நிலை அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் இந்த அதிகாரிகள் செய்த இந்தத் தவறுக்கு ஏன் அரசு இவர்கள் மீது இன்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை ? தெளிவாக ஒரு விதி வரையறுக்கப்பட்டிருந்தும், அந்த விதியை மீறி விண்ணப்பிப்பதே அடாத செயலில்லையா ? இப்படி ஒரு அடாத செயலைச் செய்த இந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல், வெறுமனே பட்டியலை மட்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறது அரசு. இந்தப் பட்டியலில் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரும் அடங்கும். தனக்கு இருக்கும் சொத்துக்களை மறைத்து, விருப்புரிமைக் கோட்டாவில் பெற்ற வீட்டு மனையை மறைத்து, பேராசை காரணமாக, நெற்குன்றத்தில் ஒதுக்கீடு பெற்ற இந்த அதிகாரியை பணி இடைநீக்கம் செய்தால் என்ன தவறு ? ஆனால் அவரை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமித்துள்ளது ஜெயலலிதா அரசு.
இதில் ஒதுக்கீடு பெற்ற மற்றொரு அதிகாரி ராதாகிருஷ்ணன் இருக்கிறாரே… அவர் பேசினால் மடியில் இருக்கும் பிள்ளை நழுவி கீழே விழுந்து விடும். அப்படிப் பேசுவார். 2002ல் அவருக்கு இங்கிலாந்தின் ராணி விருது வழங்கப்பட்ட போது, விஜய் டிவியில் அவரைப் பேட்டி கண்டார்கள். இவ்வளவு சிறப்பான காவல்துறை அதிகாரியாக இருக்கிறீர்களே… உங்களுக்கு உத்வேகம் (role model) யார் ? இந்த ராதாகிருஷ்ணன் யாரைக் கூறினார் தெரியுமா ? “மகாத்மா காந்தி”. அந்த ராதாகிருஷ்ணனும் ஏற்கனவே அரசு விருப்புரிமைக் கோட்டாவில் ஒதுக்கீடு பெற்றுவிட்டு, நெற்குன்றத்திலும் ஒதுக்கீடு பெற்றுள்ளார். மகாத்மா காந்தி செய்யும் காரியமா இது ? என்ன நடிப்பு நடிக்கிறார் பார்த்தீர்களா ராதாகிருஷ்ணன் ? இதே போல பொய் சொல்லி ஒதுக்கீடு பெற்றுள்ள மற்றொரு அதிகாரி முனைவர் சி.கே.காந்திராஜன். இவருக்கு காந்திராஜன் என்ற பெயருக்கு பதிலாக ‘காம’ராஜன் என்று வைத்திருக்கலாம். அப்படிப்பட்ட அதிகாரி இவர். இப்படிப்பட்ட பச்சையான அயோக்கியத்தனத்தை செய்து விட்டு, இந்த அதிகாரிகளெல்லாம் சமூகத்தில் பெரிய மனிதர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.
இந்த வீட்டு வசதித் திட்டத்தில் அதிக அளவு பரப்பளவு கொண்ட வகை வீடு ஏ டைப் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏ டைப் வீட்டைத்தான் பெரும்பாலான உயர் உயர் அதிகாரிகள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த வீட்டின் மொத்தப் பரப்பளவு 2458 சதுர அடி. இந்த வகை வீட்டுக்கு அரசு நிர்ணயித்துள்ள தோராயமான விலை 64 லட்சம். தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக உயர்நீதிமன்றத்தில் தொடுத்த பொது நல வழக்கில் குறிப்பிட்டிருந்த ஒரு விஷயம், நெற்குன்றம் பகுதியில் கட்டப்படும் தனியார் வீடுகள் ஒரு சதுர அடி 5 ஆயிரத்திற்கு விற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அரசு அதிகாரிகளுக்கு ஒரு சதுர அடி 2500 ரூபாய்க்கு, அதாவது பாதி விலைக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது அரசு தாக்கல் செய்துள்ள கூடுதல் பதில் மனுவில், இந்த வீட்டின் விலையாக தற்போது நிர்ணயிக்கப்பட்டிருப்பது உத்தேச விலைதான் என்றும், இந்த விலை வீடு கட்டி முடிக்கப்படுகையில் 25 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்படடுள்ளது. 64 லட்சத்தில் 25 சதவிகிதம் 16 லட்சம். ஆக ஏ டைப்பில் உள்ள ஒரு நான்கு படுக்கையறை வசதி கொண்ட வீட்டின் விலை 80 லட்சம். விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில அதிகாரிகளைத் தவிர, மீதம் உள்ள அதிகாரிகள், இந்த 80 லட்சத்தை வெள்ளையாக, வைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது.
டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிக்கு, வருமான வரிப் பிடித்தம் போக ஒரு மாதத்துக்கு கையில் 80 முதல் 90 ஆயிரம் வரை வரும். டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளைத் தவிர்த்து, மற்ற அதிகாரிகளுக்கு பிடிப்புப் போக இதை விட குறைவான தொகையே மாத ஊதியமாக வரும்.
சவுக்கு வாசகர்களில் பலர் வீட்டுக் கடன் வாங்கியிருப்பீர்கள். வீட்டுக் கடனுக்கு வட்டி எவ்வளவு என்பதும், மாதத் தவணை எவ்வளவு என்பதும் உங்களுக்கு நன்கு தெரியும். 80 லட்சம் மதிப்பிலான வீட்டுக்கு 70 லட்சம் கடன் வாங்கினால் கூட, மாதம் 70 ஆயிரம் தவணை கட்ட வேண்டி வரும். கணவன் மனைவி இருவரும் சம அளவில் சம்பாதிக்காத உயர் அதிகாரிகள் குடும்பத்தில் பெரும்பகுதி சம்பளம், இந்தத் தவணைக்கே போய் விடும்.
இப்படி மொத்த ஊதியத்தையும் வீட்டுக் கடனுக்கு செலுத்தும் ஒரு அதிகாரி தனது குடும்பத்தை எப்படி ஓட்டுவார் ? சவுக்குக்கு தெரிந்த உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் தனிப்பட்ட முறையில் பேசும்போது சொல்வது, தெரியாமல் இந்தத் திட்டத்தில் சேர்ந்து விட்டேன். எப்படி இதிலிருந்து மீள்வது என்பது புரியவில்லை. மாதத்தவணை கட்ட முடியவில்லை என்பதே. இது நேர்மையான அதிகாரிகளின் புலம்பல். ஊழல் அதிகாரிகளுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை.
நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களாக இருந்தால், மாதம் 5 முதல் 10 ஆயிரத்தில் குடும்பத்தை ஓட்டி விடலாம். இவர்கள் உயர் உயர் அதிகாரிகளாக இருப்பதால், நம்மைப் போல இவர்களால் வாழ்க்கையை சாதாரணமாக ஓட்டி இயலாது. இவர்களின் சமூக அந்தஸ்துக்கு ஏற்ப, இவர்கள் வாழ்க்கையை ஓட்ட வேண்டும். அதற்கேற்றார் போல செலவு செய்ய வேண்டும்.
அரசுக்கும், இந்த நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டத்தில் ஒரு வீடு எவ்வளவு விலை ஆகிறது. அந்த வீட்டுக்கு வீட்டுக் கடன் வாங்கினால் மாதம் எவ்வளவு செலவாகும். அந்த வீட்டுக் கடன் தவணை போக, அதிகாரிகள் வீட்டுச் செலவுக்கு எவ்வளவு சம்பளம் மீதம் இருக்கும், அதில் அவர்களால் எப்படித் தங்கள் குடும்பத்தை நடத்த முடியும் என்பது போன்ற அத்தனை விஷயங்களும் அரசுக்குத் தெரியும். வரும் சம்பளத்தில் வீட்டுக் கடன் தவணையைக் கட்டி விட்டு, லஞ்சம் வாங்கித்தான் குடும்பத்தை ஓட்டப்போகிறார்கள். இவை அத்தனையும் அரசக்கு தெரிந்தே இத்திட்டத்தை பாதுகாக்க முனைப்பாக இருக்கிறது.
தெரிந்தும், இப்படிப்பட்ட ஒரு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அரசு முனைப்பாக இருக்கிறது என்றால், ஜெயலலிதாவையும் மீறி, அரசை கட்டுப்படுத்துவதிலும், அரசின் முடிவுகளை எடுப்பதிலும் இந்த அதிகாரிகளே, அதிகாரம் படைத்தவர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை. இது போன்ற திட்டங்களை உருவாக்குவதிலும், செயல்படுத்துவதிலும், இத்திட்டத்தை உயிரோடு வைத்திருப்பதிலும், ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகளை விட, இந்த அதிகாரிகள் செல்வாக்கு படைத்தவர்களாக இருக்கிறார்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நெற்குன்றம் வீட்டு வசதித் திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, தொடரப்பட்ட பொது நல வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜராகி வாதாடுவதற்கு, இங்கே உள்ள அரசு வழக்கறிஞர்கள் சரிப்பட்டு வரமாட்டார்கள் என்று, தமிழக அரசின் டெல்லி வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் அவர்களை வரவழைத்துள்ளனர் இந்த அதிகாரிகள். கடந்த 3 ஜுலை மதியம் 2.15 மணிக்கு இறுதி விசாரணைக்காக இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அன்று மதுரை வழக்கறிஞர்களின் போராட்டம் காரணமாக இந்த வழக்கு விசாரணை நடைபெறவில்லை. இனி இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்பதை சொல்ல இயலாது. இவர்கள் வீடுகள் மொத்தத்தையும் கட்டி முடித்து, தலைமை நீதிபதி பதவி உயர்வில் உச்ச நீதிமன்றம் சென்று, உச்ச நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெறும்வரை இந்த வழக்கு விசாரணைக்கு வராமல் இருந்தாலும் ஆச்சயர்யப்படுவதற்கில்லை.
ஆனாலும், இந்த வழக்கு தொடர்ந்ததால் விளைந்துள்ள நன்மைகள், பொய் சொல்லி, அயோக்கியத்தனமாக வீடு ஒதுக்கீடு பெற்ற 29 கருப்பு ஆடுகளின் வீடு பறிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு 17 பேர் தாங்களாக முன்வந்து வீட்டை ஒப்படைத்துள்ளனர். சந்தை விலையை விட பாதி விலைக்கு வழங்கப்படும் என்ற இந்த வீடு சந்தை விலையில் 75 சதவிகிதத்திற்கு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை அரசு நீதிமன்றத்தில் வழங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்ந்ததால், இந்த அளவுக்காவது மக்கள் வரிப்பணத்தை சேமிக்க முடிந்தது என்பதில் உள்ளபடியே மகிழ்ச்சிதான்.
அயோக்கியத்தனமான இந்தத் திட்டத்தை ரத்து செய்வதற்கு முழு முனைப்போடு, சுணக்கமின்றி போராடுவோம் என்பதையும் இந்நேரத்தில் வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். நம்மிடம் இழப்பதற்கு என்ன இருக்கிறது ?