அதிமுக ஆட்சி வந்தால் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் என்ற கூற்று, ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர்களால் சொல்லப்படுவது. ஜெயலலிதா என்ன செய்தாலும் ஜெயலலிதாவை தூக்கிப் பிடிக்கும் சோ போன்றவர்கள் எப்போதும் சொல்லும் விஷயம் இது. கருணாநிதியை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் சொல்லும் விஷயமும் இதுவே. ஜெயலலிதா என்ன நடந்தாலும் பொறுத்துக் கொள்வார், சட்டம் ஒழுங்கை மட்டும் சிறப்பாக நிலை நாட்டுவார் என்பது ஜெயலலிதா ஆதரவாளர்களால் நிலைநாட்டப்பட்டு வரும் ஒரு மாயை.
கடந்த ஒரு வருட காலமாக ஜெயலலிதா அரசு நடத்தும் விதத்தை கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு தெரியும் ஒரு உண்மை, ஜெயலலிதா சட்டம் ஒழுங்கை சரி வர நிலைநாட்டத் தவறி விட்டார் என்பது மட்டுமல்ல இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரால் அரசை எப்படி நிர்வாகம் செய்வது என்பதை கற்றுக் கொள்ளவே முடியாது என்பதுதான்.
முதலமைச்சர் பதவி என்பது, கடுமையான உழைப்பு தேவைப்படும் ஒரு பதவி. இப்பதவியில் அமர்ந்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் பணியாற்றினாலும் வேலைகள் முடியாமல் தேங்கி நிற்கும். அதுவும் தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தின் தேவைகளை பூர்த்தி செய்வது என்பது சாதாரண காரியம் அல்ல.
ஏற்கனவே சவுக்கில் குறிப்பிட்டது போல, ஜெயலலிதா ஒரு விபத்தில் அரசியல்வாதி ஆனவர். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் அல்ல… 8 மணி நேரம் உழைப்பதற்கு கூட ஜெயலலிதாவால் முடியாது. அவர் அப்படி செல்வச் செறுக்கோடு, சுகபோகமாக வளர்ந்தவர். யாரும் நெருங்காமல், தனிமையில் தனக்குப் பிடித்தவற்றை செய்து வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்ற தன்மை உடையவர். அப்படிப்பட்ட ஜெயலலிதாவுக்கு ஒரு நாளைக்கு 18 மணி நேர உழைப்பு தேவைப்படும் முதலமைச்சர் பதவியை நிர்வகிப்பது நடக்காத காரியம் என்றாலும், ஓரளவுக்கு முயற்சிகளை எடுத்தால்தான், மக்களிடம் அதிருப்தி ஏற்படாமல் அரசை நடத்த முடியும். ஆனால் ஜெயலலிதா, இதை நோக்கி ஒரு துரும்பைத் தூக்கிப் போடக்கூட முயலவில்லை என்பதையே கடந்த ஒரு ஆண்டு கால ஆட்சி காட்டுகிறது.
சட்டம் ஒழுங்கு தொடர்பாக 2011 அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த முக்கியமான விஷயங்களில் இரண்டு… …
“சட்டம் ஒழுங்கு எவ்வித தயவு தாட்சண்யமும் இல்லாமல், நிலை நாட்டப்படும், மக்கள் அமைதியாக வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். முதல் தகவல் அறிக்கையை (FIR) உடனடியாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்துறை சார்ந்த பணி, பதவி உயர்வு, ஊதியம் ஆகியவற்றில் உள்ள பிரச்சினைகள் களையப்படும்.”
சட்டம் ஒழுங்கு பிரச்சினையை எடுத்துக் கொண்டால், தமிழ்நாட்டில் நாள்தோறும் நடந்து வரும் கொலைகளின் பட்டியலை எடுத்துக் கொண்டால், ஜெயலலிதாவின் சிறந்த நிர்வாகம் பல்லிளிக்கிறது. தோழர் பழனியின் படுகொலை, தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ராஜ்மோகன் சந்திராவின் படுகொலை, ராமஜெயம் படுகொலை, மணற்கொள்ளையை தடுக்க முயன்ற நாகப்பட்டினம் திருமகல் ஊராட்சியைச் சேர்ந்த சதீஷ் குமார் படுகொலை என்று கொலைகள் அன்றாடம் அரங்கேறி வருகின்றன. ஊழலில் திளைத்துக் கொண்டிருந்த கருணாநிதி ஆட்சியில் கூட, இப்படி அராஜகமான கொலைகள் அரங்கேறியதில்லை. மற்றொருபுறம் பிஆர்பி க்ரானைட்ஸ் என்ற க்ரானைட் கொள்ளையன் மீது நடவடிக்கை எடுக்க முயன்ற ஒரே காரணத்துக்காக, ஆட்சியர் சகாயம், எஸ்.பி. ஆஸ்ரா கார்க் மற்றும் ஆணையாளர் கண்ணப்பன் ஆகியோ கூண்டோடு மாற்றப்படுகின்றனர்.
சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டிய காவல்துறையினர் நடத்தும் அராஜகங்கள் சொல்லி மாளாத வண்ணம் இருக்கிறது. ஆட்சிக்கு வந்த ஒருசில மாதங்களிலேயே பரமக்குடியில் நடந்த தலித்துகள் படுகொலை, சென்னை வேளச்சேரியில் வங்கிக் கொள்ளையர்கள் என்ற பெயரில் நடந்த ஐந்து இளைஞர்களின் படுகொலை, மதுரையில் நடந்த சினோஜி என்ற இளைஞனின் படுகொலை, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடந்த முத்து என்ற இளைஞனின் படுகொலை, மதுரை ஊமச்சிக்குளம் காவல் நிலையத்தில் நடந்த மார்க்கண்டேயன் என்பவரின் படுகொலை, சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் நடந்த நித்தியராஜ் என்ற இளைஞனின் படுகொலை, திண்டிவனம் அருகே ஐந்து பழங்குடியினப் பெண்களை இரவில் காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய பாலியல் வன்முறை, திண்டுக்கல் காவல் நிலையத்தில் நடந்த ராஜா என்ற இளைஞனின் படுகொலை, சமீபத்தில் கானாத்தூர் காவல் நிலையத்தில் நடந்த ஹுமாயூன் என்ற முதியவரின் படுகொலை, (காவல் நிலையத்தில் வைத்திருந்த மண்ணென்ணெய் கேனை எடுத்து தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு இறந்து விட்டாராம்) என்று காவல்துறையினரின் அராஜகங்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன.
சென்னை மாநகர ஆணையாளர் திரிபாதியின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கிறது. தமிழகத்தில் மற்ற பகுதிகளில் இல்லாதவண்ணம் சென்னையில் குவியும் நில அபகரிப்புப் புகார்களை, அலசி ஆராயந்து, எதில் எப்ஐஆர் போடலாம், எதில் போட வேண்டாம், எப்ஐஆர் போட்ட பிறகு எதில் கைது செய்யலாம், எதில் கைது செய்யாமல் கை நீட்டலாம், யாரை மிரட்டினால் எவ்வளவு கிடைக்கும் என்று அதகளம் செய்து கொண்டிருக்கிறார். சென்னை மாநகர ஆணையாளர் பதவியை பிடிக்க எப்போதும் நிலவும் போட்டி, இந்த ஆட்சியிலும் நிலவி வருகிறது. அந்தப் போட்டியை சமாளித்து, அதில் வெற்றி பெறுவதற்காகவே திரிபாதி வேளச்சேரி என்கவுண்டரை நடத்தினார் என்று காவல்துறை அதிகாரிகளே கூறுகிறார்கள். இந்தப் பதவிப் போட்டிக்கு பலிகடா ஆனவர், அடையாறு துணை ஆணையர் சுதாகர். திரிபாதியின் நயவஞ்சகம் புரியாமல், அவசரப்பட்டு, ஐந்து பேரை சுட்டு விட்டு, என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்று தெரியாமல், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு வரும்போதெல்லாம், பயமே இல்லாதது போல நடித்துக் கொண்டும், கையைப் பிசைந்து கொண்டும் காத்திருக்கிறார்.
தமிழகத்தில் தாமதமின்றி உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்பது கடவுளே முதலமைச்சராக வந்தாலும் நடக்காத காரியம். ஒரு புகார் வந்தால், புகார் கொடுத்தவர் யார், எதிரி யார், யாருக்கு செல்வாக்கு அதிகம், எப்ஐஆர் போட்டால் பணம் வருமா, போடாவிட்டால் பணம் வருமா, எப்ஐஆர் போடுவது போல மிரட்டினால் பணம் வருமா என்பது போன்ற பல்வேறு விஷயங்கயையும் ஆராயந்த பிறகே, எப்ஐஆர் போடுவதா வேண்டாமா என்ற முடிவு காவல்துறையால் எடுக்கப்படும்.
காந்தியின் கொள்ளுப்பேரன் ராதாகிருஷ்ணன் ராணி விருது வாங்குவதற்காக அரசுப் பணத்தில் உருவாக்கிய ஒரு திட்டம், அனைத்து காவல்நிலையங்களையும் கணினி மயப்படுத்துவது. 2001ல் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி, புகார் வந்தவுடன் கணினியில் பதிவு செய்யப்படும். உரிய புரிவுகளை பதிவு செய்தால், எப்ஐஆர் கணினியால் அச்சு எடுத்துக் கொடுக்கப்படும். அந்த வழக்கு நீதிமன்றத்தில் முடிவடையும் வரை, அனைத்து விபரங்களும் கணினியில் பதிவு செய்யப்படுமாறு, ஒரு தனியார் மென்பொறியாளரை வைத்து, ஒரு மென்பொருள் தயார் செய்தார் ராதாகிருஷ்ணன். சோதனை அடிப்படையில் அனைத்து மகளிர் காவல்நிலையங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் ஒரு காவல்நிலையத்தில் கூட, இத்திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களிடம் விபரங்களை கணினி மயப்படுத்தச் சொன்னால் நடக்கிற காரியமா ?
இது போல சாத்தியப்படாத விஷயத்தை அறிவித்து விட்டு, இன்று காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. அவ்வப்போது பிறப்பிக்கும் மாறுதல் உத்தரவுகளைத் தவிர, ஜெயலலிதாவால் காவல்துறையை ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பதே யதார்த்தம்.
மன்னார்குடி மாபியா கும்பலின் மீது பதியப்பட்ட நில அபகரிப்பு மற்றும் மோசடிப் புகார்கள், காவல்துறையை ஜெயலலிதா எப்படியெல்லாம் வளைத்து துஷ்பிரயோகம் செய்வார் என்பதற்கு அற்புதமான உதாரணம். ராவணன், திவாகரன், மிடாஸ் மோகன், நடராஜன் என்று பல்வேறு நபர்களின் மீது பாய்ந்த வழக்குகள் தொடக்கத்திலிருந்த வேகத்திலிருந்து சசிகலா மறுவீடு நுழைந்ததும் மந்த கதியை அடைந்துள்ளன. இந்த வழக்குகளை வேக வேகமாக பதிந்த காவல்துறை அதிகாரிகளின் கதி என்னவென்ற நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. எதற்காக இந்த வழக்குகள் பதியப்பட்டன, எதற்காக தற்போது மந்தகதியில் உள்ளன என்பது போன்ற கேள்விகளுக்கு விடையில்லை.
சசிகலாவை எடுத்துக் கொண்டால், ஜெயலலிதாவும், சசிகலாவும் நடத்தி வரும் நாடகம், சன் டிவியில் வரும் நெடுந்தொடர்களை விஞ்சும் வகையில் உள்ளது. முதலில் சசிகலா மீது கோபித்துக் கொண்டு அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதும், பிறகு சசிகலா நெஞ்சை உருக்கும் வகையில் ஒரு கடிதம் எழுதியதும், பிறகு சசிகலா மறு வீட்டு அழைப்புக்கு அழைக்கப்பட்டதும், வாரமிருமுறை பத்திரிக்கைகளுக்கு தீனி போடும் வகையில் இருந்தாலும், பொதுமக்களாகிய நமது வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ள இந்த நெடுந்தொடர் தவறவில்லை.
சமீபத்தில் கொடநாடு எஸ்டேட்டில் ராவணன், ஜெயலலிதாவை சந்தித்தாக உறுதியான தகவல்கள் கூறுகின்றன. ராவணன் சந்திப்பைத் தொடர்ந்து, மன்னார்குடி மாபியாவின் மற்ற உறுப்பினர்களும், மெள்ள மெள்ள போயஸ் தோட்டத்தின் அதிகார வளையத்துக்குள் வருவார்கள் என்றே தகவல்கள் கூறுகின்றன.
ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்குமான நட்பு, அவர்கள் இருவர் தனிப்பட்ட விஷயம் என்று கூறப்படும் வாதத்தை ஏற்றுக் கொள்வதற்கில்லை. சசிகலாவின் நட்பு தனிப்பட்ட விவகாரமாக இருந்தாலும், சசிகலா மற்றும் அவரது படை பரிவாரங்கள் அரசு நிர்வாகத்தில் தலையிட்டு, நடத்திய நடத்தி வரும் அட்டூழியங்களுக்கு அளவேயில்லை. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றுவதாக இருக்கட்டும், தமிழகத்தில் உருவாக்கப்படும் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதாகட்டும், எல்லா இடங்களிலும் இந்த மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கம் இருப்பதாலேயே நமக்கு இந்த விஷயத்தில் அக்கறை. இல்லாவிட்டால் நாம் ஏன் கவலைப்படப் போகிறோம் ? சில மாதகாலமாக அடங்கியிருந்த மன்னார்குடி மாபியாவின் இந்த அத்துமீறல் தற்பாது மீள எழுந்திருக்கிறது என்றே கூறுகின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள்.
காவல்துறை சார்ந்த பணி, பதவி உயர்வு, ஊதியம் ஆகியவற்றில் உள்ள பிரச்சினைகள் களையப்படும் என்பது, அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விஷயம்.
காவல்துறை சார்ந்த பணி, பதவி உயர்வில் உள்ள பிரச்சினைகளை களைவது இருக்கட்டும். புதிதாக பிரச்சினையை உருவாக்காமல் இருந்தால் போதாதா ? ஏற்கனவே சவுக்கில் ஏன் இந்த பாரபட்சம் ? என்ற கட்டுரையில் காவல்துறையில் 1976 மற்றும் 1979ம் ஆண்டில் பணியில் சேர்ந்த உதவி ஆய்வாளர்களுக்கு முறையே, காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (Additional Superintendent of Police) ஆகிய பதவி உயர்வுகள் வழங்கப்படாமல் தாமதிக்கப்பட்டு வருகிறது, 1976ம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஓய்வு பெற்று விடுவார்கள் என்பதை எழுதியிருந்தது. இவர்களுள் தற்போது எஞ்சியிருக்கும் 18 பேர், ஓய்வு பெற உள்ளனர். ஆனால், இந்தக் குறையை தீர்க்க ஜெயலலிதா அரசு எவ்வித முயற்சியையும் எடுக்கவில்லை. 1979ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்களும், பதவி உயர்வு இல்லாமலேயே ஓய்வு பெற்றவண்ணம் உள்ளனர். இதுதான் தேர்தல் அறிக்கையை அமல்படுத்தும் லட்சணமா ?
இதை விடுங்கள். ஜெயலலிதா அரசு, தற்போது புதிதாக ஒரு பிரச்சினையை தோற்றுவித்துள்ளது. 2005ம் ஆண்டில், வீரப்பனை சுட்டார்கள் என்ற காரணத்தைக் காட்டி, அதிரடிப்படையில் பணியாற்றிய 800 காவல்துறையினருக்கு 3 லட்ச ரூபாய் ரொக்கப்பணம், 2 க்ரவுண்டு வீட்டு மனைகள் மற்றும் ஒரு படி பதவி உயர்வு வழங்கினார் ஜெயலலிதா. அந்த ஒரு படி பதவி உயர்வு என்னவென்றால், 2000ம் ஆண்டு ஒருவர் உதவி ஆய்வாளராக பணியில் சேர்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் வீரப்பனை பிடித்ததற்காக 2005ம் ஆண்டில் ஆய்வாளராக பதவி உயர்வு பெறுவார். அவரோடு பணியில் சேர்ந்த மற்றவர்கள் ஆய்வாளராக பதவி உயர்வு பெற குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும்.
திமுக 2006ல் பதவிக்கு வந்ததும், இந்த உத்தரவில் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. அதாவது, 2000ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஒரு சப் இன்ஸ்பெக்டர், சிறப்பு பதவி உயர்வில் 2005ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக ஆனாலும், அவருக்கு அடுத்த பதவி உயர்வு 2000ம் ஆண்டு அவரோடு பணியில் சேர்ந்தவர்களுக்கு எப்போது வருகிறதோ அப்போதுதான் வரும். அதாவது, 2000ம் ஆண்டில் பணியில் சேர்ந்து, சிறப்பு பதவி உயர்வு கிடைக்காத ஒரு சப்.இன்ஸ்பெக்டர் 2012ல் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெறுவார். அவருக்கு அடுத்த பதவி உயர்வு 2020ல் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். வீரப்பனை சுட்டதற்காக 2005ல் இன்ஸ்பெக்டராக ஆன நபருக்கும் அடுத்த பதவி உயர்வு, 2020ல் தான் வரும்.
ஆனால், ஜெயலலிதா அரசு, தற்போது ஒரு புதிய உத்தரவை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, 2000ல் சப் இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்து, வீரப்பனை சுட்டதற்காக 2005ல் இன்ஸ்பெக்டராக ஆகும் நபர், அவரோடு இன்ஸ்பெக்டராக உள்ளவர்களுக்கு, (1995ல் பணியில் சேர்ந்தவர்கள் என்று வைத்துக் கொள்ளலாம்) எப்போது டிஎஸ்பி பதவி உயர்வு வருகிறதோ, அப்போது இவரும் டிஎஸ்பி ஆகி விடுவார் என்று உத்தரவிட்டிருக்கிறது.
இவர்கள் வீரப்பனை உண்மையிலேயே சுட்டுப் பிடித்தாலாவது பரவாயில்லை. கண் புரை விழுந்து, வலது கை சுத்தமாக செயலிழந்த நிலையில், மோரில் விஷம் வைத்து, வீரப்பனைக் கொன்று விட்டு, அதிகாரி வீட்டில் துணி துவைத்தவன், சப்பாத்தி சுட்டவனுக்கெல்லாம் பதவி உயர்வு அளித்து, அதிலும் தொடர் பயன்களை வழங்குவது, நேர்மையாக பணியாற்றி பதவி உயர்வுக்காக காத்திருக்கும் மற்ற காவல்துறை பணியாளர்களை பாதிக்காதா ? இதுதான் பணியில் இருக்கும் குறைகளை நீக்கும் லட்சணமா ?
இது போல பல்வேறு குறைகளை காவல்துறையினர் அடுக்கிக்கொண்டே செல்கிறார்கள். குறிப்பாக புதிய ஆட்சி பதவியேற்றதும், செல்வாக்கு மிக்கவர்கள், தங்களுக்கு சாதகமாக அரசாணைகளை வெளியிட்டு, பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெற்றுக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு காவல்துறையில் வலுத்து ஒலிக்கிறது.
ஐபிஎஸ் அதிகாரிகளின் பணி மூப்பிலோ, பதவி உயர்விலோ எந்தக் குறையும் இருப்பதில்லை. ஆனால், காவலர், தலைமைக் காவலர், உதவி ஆய்வாளர், ஆய்வாளர், காவல் துணைக் கண்காணிப்பாளர் போன்ற பதவிகளில் இருக்கும் குளறுபடிகள் சொல்லி மாளாது. விதிகளின் படி, வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும், பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடப்பட வேண்டும். அந்தப் பட்டியல் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். அந்தப் பட்டியலில் உள்ள குறைகள், சம்பந்தப்பட்டவர்களால், துறைத் தலைமைக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அந்தக் குறைகள் களையப்பட்ட பின்னர், ஏற்படும் காலியிடத்தின் அடிப்படையில் பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும். இந்த விதி, காவல்துறையில் மட்டும் பின்பற்றப்படுவதில்லை. டிஜிபி அலுவலகத்தில் என்ஜிபி மற்றும் ஜிபி என்ற பிரிவுகள் உள்ளன. இந்தப் பிரிவுகள்தான், காவல்துறையினரின் பதவி உயர்வு குறித்த கோப்புகளை பராமரித்து உத்தரவுகள் வெளியிட வேண்டும். இந்தப் பிரிவில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இருக்கிறார்களே… அவர்கள் தங்கள் மனதில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை விட பெரிய பதவியில் இருக்கிறோம் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
அவர்கள் வைத்ததுதான் சட்டம். அவர்கள் போடுவதுதான் விதி. அவர்கள் மனது வைத்தால்தான் பதவி உயர்வு. இவர்கள் செய்யும் அராஜகங்களுக்கு அளவே கிடையாது என்று புலம்புகிறார்கள் காவல்துறையினர். இதை விட்டால், தலைமைச் செயலகத்தில் உள்துறை. அந்த உள்துறையில் காவல்துணைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோரின் பதவி உயர்வு தொடர்பான கோப்புகள் பராமரிக்கப்படும். இவர்கள் டிஜிபி அலுவலகத்தின் அமைச்சுப் பணியாளர்களை விட, இரண்டு பங்கு உயர்ந்தவர்களாக தங்களை கருதிக் கொள்கிறார்கள். இவர்கள் தங்கள் பங்குக்கு, காவல்துறை அதிகாரிகளின் பதவி உயர்வு கோப்புகளை தாமதம் செய்வது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களை வந்துப் பார்க்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது, வந்து பார்க்கும் அதிகாரிகளிடம் மாமூல் வசூல் செய்வது என்று இவர்களின் அட்டகாசம் மறுபுறம்.
இது போல உரிய நேரத்தில் பதவி உயர்வு கிடைக்காமல் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகும் காவல்துறையினர், தங்கள் கோபத்தை கையில் கிடைக்கும் குற்றவாளி மீது காட்டுகின்றனர். இதுதான் தமிழக காவல்துறையின் இன்றைய பரிதாப நிலைமை.
இது போல ஆயிரம் குறைகள் உண்டு காவல்துறையில். ஆனால், தேர்தல் அறிக்கையில் மிகுந்த அக்கறையோடு இந்தக் குறைகள் களையப்படும் என்று அறிவித்துள்ள ஜெயலலிதா, இதற்கான எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை.
தொடரும்.