17 ஜுலை 2008 அது அவன் வாழ்வில் திருப்புமுறை ஏற்படுத்திய நாள். இனி சரிசெய்ய முடியாதபடி அவன் வாழ்வை புரட்டிப் போட்ட நாள். அன்றுதான் அவன் தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில் சிபி.சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டான்.
எல்லோரையும் போல, சிறப்பான வாழ்வுதான் அவனுக்கும் அமைந்தது. சிறப்பான வேலை. தேவைகள் குறைவாக இருந்ததால், போதுமான அளவு ஊதியம். சிறிய குடும்பம் என்று வாழ்க்கை அமைதியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அது அவன் சுழியா இல்லை அவன் திமிரா என்று சொல்ல இயலவில்லை.
1991ல் லஞ்ச ஒழிப்புத் துறையில், தந்தை இறந்ததால் கிடைத்த பணியில் 16 வயதில் சேர்ந்தான் அவன். 2001 வரை, லஞ்ச ஒழிப்புத்துறை ஓரளவு சரியாகத்தான் செயல்பட்டு வந்தது. 2001ல் ஜெயலலிதா ஆட்சி அமைந்தபிறகு, அத்துறையின் போக்கே திசை மாறிப் போனது. திமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகளை மூடுவதற்கும், ஊழல் பெருச்சாளிகளை பாதுகாப்பதற்குமான துறையாக அத்துறை மாறிப்போனது கண்டு, அவன் உள்ளம் குமுறியது. ஊழல் ஒழிப்பில் முனைப்பாக ஈடுபட வேண்டிய அதிகாரிகள், ஜெயலலிதாவின் அடிவருடிகளாக மாறி, அந்த வழக்குகளை மூடுவதற்கு அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது கண்டு ஆத்திரமடைந்தான். ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திரபால் சிங் ஆகிய இரண்டு ஐஜிக்களும், ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களின் மீதான வழக்குகளை நடவடிக்கையை மூடி விட்டு, ஜெயலலிதாவிடமே, அவர்களின் பிள்ளைகளுக்கு அண்ணா பல்கலைகழகத்தில் இடம் வாங்கியது பல அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தாலும், எந்த அதிகாரியும் அந்த அநியாயத்தை எதிர்த்துக் கேட்க முன்வராதது கண்டு எரிச்சலடைந்தான். ஒரு சாதாரண கிளர்க்கான அவனால் அந்த அதிகாரிகளை என்ன செய்து விட முடியும் ?
2006ல் தமிழகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் செயலுக்கு வந்தது. அந்த சட்டத்தின் அடிப்படையில், அண்ணா பல்கலைகழகத்தில் இந்த அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்ட இடங்கள் குறித்து, தகவல் பெறலாம் என்றால், அரசு ஊழியனான அவன் எப்படி அந்தத் தகவல்களைப் பெற முடியும் ? அவன் நண்பனின் உதவியை நாடி, அண்ணா பல்கலைகழகத்தில் அது குறித்த தகவல்களைப் பெறலாம் என்று முயற்சித்தால், அந்த நண்பருக்கு காவல்துறை மூலமாக பல்வேறு மிரட்டல்களை விடுத்தார்கள் ஐஜிக்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங். கடும் முயற்சிகளுக்குப் பிறகு, அந்தத் தகவல்களைப் பெற்று, இந்த இரண்டு அதிகாரிகள் மீதும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிப் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோதுதான், அவன் பணியாற்றிய அலுவலகம் தொடர்பாக ஒரு பெரும் சர்ச்சை எழுந்தது.
14.04.2008 நாளிட்ட டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழ், அப்போதைய தலைமைச் செயலாளர் திரிபாதி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாய் ஆகிய இருவருக்கும் இடையே நடந்த உரையாடலை வெளியிட்டது. அந்த உரையாடல், தமிழக உளவுத்துறையை கடுமையாக தாக்கியது. அந்த உரையாடல், உளவுத்துறையின் தலைவராக இருந்த ஜாபர் சேட்டால் ஒட்டுக் கேட்கப்பட்டது என்று தகவல் வெளியாகியது. இதையடுத்து சட்டசபையில் இப்பிரச்சினை கடும் புயலைக் கிளப்பியது. நீதிபதி சண்முகம் என்பவர் தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷனை நியமித்தார் கருணாநிதி.
விசாரணைக் கமிஷனின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கையிலேயே அமைச்சர் பூங்கோதை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாயிடம், ஊழல் வழக்கில் சிக்கிய தனது உறவினர் ஜவஹர் என்பவரை வழக்கிலிருந்து தப்புவிக்க உதவுமாறு பேசிய உரையாடலை சுப்ரமணிய சுவாமி வெளியிட்டார். இதையடுத்து பூங்கோதை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. ஒரு நபர் விசாரணைக் கமிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, திடீரென்று ஒரு நாள் அவன் விசாரணை ஆணையத்தின் காவல்துறையால் அழைக்கபபட்டான். அழைக்கப்பட்டவுடன், வழக்கறிஞர்களைச் சந்தித்த அவனுக்கு உடனடியாக வந்து உதவினார் வழக்கறிஞர் விஜயக்குமார். நீதிபதி சண்முகம், அந்த விசாரணையில் உண்மை வெளி வந்து விடாமல் இருப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அத்தனையும் செய்தார். கருணாநிதிக்கு சாதமாக அவரது அடிமை போல நடந்துகொண்டார். அந்த விசாரணையின் முக்கிய சாட்சியான தலைமைச் செயலாளர் திரிபாதியை கூட விசாரணைக்கு அழைக்காமல் தவிர்த்தார் கருணாநிதியின் அடிமை சண்முகம்.
மூன்று மாதங்கள் கழித்து 14 ஜுலை 2008 அன்று தன் அறிக்கையை தன் எஜமான் கருணாநிதியிடம் அளித்தார் சண்முகம். இதன் நடுவே அவன் தொடர்ந்து பணியாற்றி வந்த தலைமையகத்திலிருந்து, மாற்றப்பட்டான். சென்னை நகரிலேயே உள்ள வேறு ஒரு பிரிவுக்கு மாற்றப்பட்டு பணியாற்றிக் கொண்டிருந்தான்.
17 ஜுலை 2008 அன்று மதிய உணவு உண்டு விட்டு, பிற்பகலில் அலுவலகத்தில் அமர்ந்திருந்த அவனை மதியம் 2 மணிக்கு சிபி.சிஐடியிலிருந்து ஒரு டிஎஸ்பி வந்து பார்த்தார். அவரிடம் என்ன என்று கேட்பதற்குள், அவன் கையைப் பிடித்து கீழே அழைத்துச் சென்றார். கீழே சென்று பார்த்தால், விஜயகாந்தின் ஊமை விழிகள் படத்தில் வருவது போல 14 டாடா சுமோ ஜீப்புகளில் காவல்துறையினர் வந்திருந்தனர். அவன் கைது செய்யப்படுவோம் என்பதை எதிர்ப்பார்த்தே காத்திருந்ததால், அவனுக்கு அது அதிர்ச்சியாக இருக்கவில்லை.
சிபிஐ சிஐடி அலுவலகத்தில் அவனிடம், விசாரணை மதியம் 3 மணிக்கு தொடங்கயிது. ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து விசாரணை. அப்போதெல்லாம் மரியாதையாகத்தான் நடத்தினார்கள். எப்ஐஆர் போட்ட பிறகுதான் கைது செய்யவேண்டும் என்ற சட்டத்தை மீறி, அவனைக் கைது செய்து விட்டு வந்த பிறகு எப்ஐஆர் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான்.
மாலை நான்கரை மணிக்கு, அவனை வண்டியில் ஏற்றி அவன் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். செல்லும் வழி நெடுக, அவனிடம் விசாரணை நடந்தவண்ணம் இருந்தது. அவன் வீட்டுக்கு சென்றதும் அவனது வயதான தாயார் மட்டும் வீட்டிலிருந்தார். அவன் தாயாரை ஒரு பெண் இன்ஸ்பெக்டர் விசாரணை என்ற பெயரில் வரவேற்பறையிலேயே தடுத்து வைத்து விட்டார். அவன் மட்டும் அவனது படுக்கையறைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். ஏதோ முக்கியமான தடயத்தை அவன் அந்த வீட்டில் விட்டு வைத்திருப்பது போல வீட்டை தலைகீழாக்கித் தேடினார்கள். அவனிடம் மீண்டும் விசாரணை தொடங்கியது. அது வரை மரியாதையாக நடந்த விசாரணை, திசை மாறியது. அவனிடம் அது வரை கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்த டிஎஸ்பி பாலு, “டேய்……………………… பையா… உண்மைய சொல்லிடு.. இல்லன்னா இதே எடத்துல உன்னை மிதிச்சே கொன்னுடுவேன்” என்றார். அவனுக்கோ அதிர்ச்சி. அரசுத் துறையில், அதுவும் காவல்துறையில் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் இருக்கும் தன்னையா இப்படிப் பேசுகிறார்கள் என்று. அவன் அதிர்ச்சி விலகாமல், எனக்குத் தெரியாது என்று சொல்லி முடித்ததும் பொளேர் என்று அறை விழுந்தது. அடித்த டிஎஸ்பி “டேய்……… பையா.. நீ இத செஞ்சுருக்க மாட்டன்னு தெரியும்…. உனக்கு பின்னாடி இருக்க அதிகாரி பேரைச் சொல்லிடு.. உனக்கு அடி மிச்சம்” என்றார். அவன் எனக்குத் தெரியாது என்றதும், சராமாரியாக முகத்தில் அடியும் குத்துக்களும் விழுந்தன. டிஎஸ்பி அடிக்கும் போது இன்ஸ்பெக்டர்கள் வேடிக்கை பார்க்கலாமா ? பாலுவோடு வந்திருந்த இன்ஸ்பெக்டர்கள் சரவணக்குமார் மற்றும் வேல்முருகன் முகம், முதுகு, கை கால் என்று சராமாரியாக தாக்கத் தொடங்கினர். உடனே, பாலு, “அவன் ட்ரெஸ்ஸை கழட்டுய்யா” என்று உத்தரவு போட்டதும், உள்ளாடை முதற்கொண்டு அனைத்து உடைகளும் களையப்பட்டன. அவன் அப்போது ஒரே ஒரு கோரிக்கை வைத்தான். “சார் கதவை சாத்திடுங்க. எங்க அம்மாவுக்கு தெரிய வேணாம்” என்ற அவனது கோரிக்கை ஏற்கப்பட்டு, கதவு சாத்தப்பட்டது. அவன் நிர்வாணமாக சுவற்றோரம் தள்ளப்பட்டு, மூன்று பேராலும் சராமாரியாக மிதிக்கப்பட்டான்.
“டேய்… …………………..பையா.. உனக்கு பின்னாடி இருக்கற அந்த அதிகாரி பெயரைச் சொல்லிடு… ஒளிச்சு வச்சுருக்கற அந்த பென் ட்ரைவ எடுத்துக் கொடுத்துடு… வீணா அடி வாங்கிச் சாகாத..” என்றபடி பூட்ஸ் காலால் அவன் வாயிலேயே மிதித்தார் அந்த டிஎஸ்பி. அவன் எனக்குத் தெரியாது என்பதை மீண்டும் மீண்டும் சொல்லி வந்தான்.
“டேய் உன்ன இப்படியே அம்மணக்கட்டையா இழுத்துட்டு போவேன்.. உன்னை போற வழியிலே என்கவுன்டர்ல சுட்டுடுவேன்… உண்மையச் சொல்லிடு.. வண்டியிலே துப்பாக்கி வச்சுருக்கேன்.” என்று அந்த டிஎஸ்பி மிரட்டியபோது, அவர்களிடம் துப்பாக்கி இல்லை என்பது அவனுக்குத் தெரியாதா… அந்த டிஎஸ்பி வழக்கமான கிரிமினல்களை மிரட்டுவது போலவே மிரட்டிக் கொண்டிருந்தபோது, அவன் மனதுக்குள் “அட முட்டாள்களா” என்ற எண்ணமே வந்தது.
சோதனை என்ற பெயரில் சின்னாபின்னப்படுத்தப்பட்ட வீடு
இரண்டு மணி நேரம் சோதனை என்ற பெயரில் வீட்டை அலங்கோலப்படுத்தி விட்டு, அவனை அடித்து துவைத்த பிறகு, ஆடை கொடுத்து, வண்டியில் ஏற்றி மீண்டும் சிபி.சிஐடி அலுவலகம் அழைத்துச் சென்றார்கள். வழியில், வடபழனி அருகே வண்டி உணவுக்காக நிறுத்தப்பட்டது. அப்போது மீண்டும் “டேய்…………………… பையா.. தப்பிச்சு போக முயற்சி பண்ணுனன்னு உன்ன இங்கயே சுட்டுடுவேன்… உண்மையச் சொல்லிடு” என்று மிரட்டியபோது, துப்பாக்கியே இல்லாமல் எப்படிச் சுடுவேன் என்று மிரட்டுகிறான் இந்த முட்டாள் என்றே அவனுக்குத் தோன்றியது. வேண்டுமென்றால் உணவுக்காக நிறுத்திய அந்த ஹோட்டலில் தோசையோ சப்பாத்தியோ சுடலாம்.
இரவு 10.30 மணிக்கு சிபி.சிஐடி அலுவலகம் சென்ற வாகனத்திலிருந்து இறக்கப்பட்ட அவன், அங்கே இருந்த அடைப்பு அறையில் தள்ளப்பட்டான். தான் எந்த நேரமும் கைது செய்யப்படுவோம் என்பதை எதிர்ப்பார்த்து இருந்த அவன், தான் தினமும் மாலை 7 மணிக்கு போன் செய்யவில்லை என்றால், தான் கைது செய்யப்பட்டு விட்டோம் என்பதை புரிந்து கொண்டு, அனைத்து பத்திரிக்கையாளர்களுக்குத் தகவல் சொல்ல வேண்டும் என்று அவனது நண்பனிடம் அறிவுறுத்தியிருந்தபடி, அவன் நண்பன் அனைத்துப் பத்திரிக்கையாளர்களுக்கும் தகவல் சொல்லியிருந்தார். இரவு 10.30 மணிக்கு பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்ட நபர் எங்கே என்று தேடி வந்ததும், அவனை ஒளித்து வைத்த விட்டு, எப்படி இந்த விஷயம் பத்திரிக்கைகளுக்கு தெரிந்தது என்று அதிர்ச்சியடைந்தார் அந்த டிஎஸ்பி. அவனை சாதாரண க்ளெர்க் என்றல்லவா நினைத்திருந்தார் அந்த டிஎஸ்பி.
இரவு 11 மணிக்கு மீண்டும் தாக்குதல் தொடங்கியது. மீண்டும் நிர்வாணப்படுத்தப்பட்ட அவனது கால்களை இரண்டு புறமும் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் பிடித்து விரிக்க, டிஎஸ்பி பாலு, அவன் தொடைகள் மீது ஏறி குதித்தார். “………………. பையா.. சொல்லுடா. அந்த அதிகாரி பேரைச் சொல்லிடு.. உனக்கு அடி உடனே நின்னுடும். அந்த அதிகாரிய காப்பாத்தறேன்னு வீணா அடி வாங்கிச் சாகாத.. அந்த அதிகாரியோட உனக்கு என்ன தொடர்புன்னு தெரியும். எனக்கு எல்லா உண்மையும் தெரியும். நீயா ஒத்துக்க.. இல்லன்னா இன்னைக்கு நைட்டே உன்ன என்கவுன்டர்ல கொன்னடுவேன்” என்று அந்த டிஎஸ்பி சொன்னபோது, இவனுக்கு எதுவுமே தெரியாது என்பது அவனுக்கு புரிந்தது. எல்லாம் தெரிந்தவன் எதற்காக சொல் சொல் என்று கூறி அடிக்கிறான் ? அப்போது அவன் மனதில் தோன்றியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். எவ்வளவு வேண்டுமானாலும் அடியுங்கள். என் வாயிலிருந்து ஒரு உண்மையைக் கூட வாங்க முடியாத என்பதே அது. காலை விரித்து சித்திரவதை செய்தபிறகு, அவனை அங்கிருந்த டேபிளில் விலங்கால் இணைத்து, லத்தியை எடுத்து மூன்று பேர் சராமாரியாக அடித்தார்கள்.
காலை 4.30 மணி வரை தொடர்ந்தது அந்த சித்திரவதை. மறுநாள் மதியம் 12.30 மணிக்கு வழக்கறிஞர் புகழேந்தி மற்றும் சிலர் வந்து பார்த்தனர். உணவு வாங்கிக் கொடுத்தார்களா என்று கேட்டார் புகழேந்தி. இரவு முழுக்க அடி என்று சொன்னதும் புகழேந்தியால் அதை நம்ப முடியவில்லை. சரி. நடந்த அத்தனையும் மேஜிஸ்திரேட் முன்பு சொல்லுங்கள், பயப்படாமல் சொல்லுங்கள் என்று கூறினார் புகழேந்தி.
மாலை 5 மணிக்கு நீதிமன்றம் அழைத்துச் செல்லப்படுகையில், நீதிபதியிடம் எதையும் சொல்லவேண்டாம் என்று குழைவாக வந்து பேசினார் அந்த டிஎஸ்பி பாலு. உன்னை விரைவாக ஜாமீனில் வர ஏற்பாடு செய்கிறேன். ஜட்ஜ் கிட்டயெல்லாம் எதையும் சொல்லக்கூடாது என்று சொன்னார். நிச்சயம் சொல்லமாட்டேன் என்று அவன் உறுதி கூறினான்.
நீதிபதியிடம் ஆஜர்படுத்தப்பட்டதும், இரவு முழுவதும் தாக்கப்பட்டதையும், என்கவுன்டரில் கொல்லப்படுவாய் என்று மிரட்டப்பட்டதையும் கூறினான். அதன் பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவனுக்கு இரண்டு மாதங்கள் கழித்தே ஜாமீன் கிடைத்தது.
ஜாமீனில் வெளி வந்த அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. உலகமே புதிதாகத் தோன்றியது. பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டதால் அடுத்து என்ன செய்வதென்ற குழப்பமே மேலோங்கி இருந்தது. நேராக வழக்கறிஞர் புகழேந்தியின் அலுவலகத்துக்குச் சென்ற அவன், அங்கேயே தஞ்சமடைந்தான். இரண்டு மாதங்கள் புழல் சிறையில், கைதிகளோடு பழகியதால், அந்தக் கைதிகளின் நலனுக்காக பாடுபட வேண்டும் என்ற உறுதியோடும், காவல்துறையின் என்கவுன்டர்களுக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும் என்ற எண்ணத்தோடும், வழக்கறிஞர் புகழேந்தியோடு தனது பணியைத் தொடர்ந்தான்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், வீட்டு வசதித் துறையில் நடந்திருக்கும் மிகப்பெரிய ஊழலை வெளிக் கொணர முனைந்தான் அவன். அவன் முயற்சிகளால் கிடைத்த ஆதாரங்களை வைத்து, அப்போதை உளவுத்துறைத் தலைவர் ஜாபர் சேட் மீதான குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்த, ஏறக்குறைய அனைத்து ஊடகங்களையும் அணுகினான் அவன். அத்தனை ஊடகங்களும் ஜாபர் சேட்டுக்கு அடிபணிந்து சேவகம் செய்து கொண்டிருந்தபோது, அவன் கொடுக்கும் ஆதாரங்களை யார் சட்டை செய்வார்கள்.
நீங்கள் யாரும் இதை அம்பலப்படுத்தவேண்டாம். நானே அம்பலப்படுத்துகிறேன் என்று கங்கணம் கட்டி அவன் தொடங்கிய இணையதளமே சவுக்கு. ஜாபர் சேட்டின் வீட்டு வசதி வாரிய ஊழலை அம்பலப்படுத்தியதற்கு அவனுக்கு கிடைத்த பரிசு… … மீண்டும் கைது. காலையில் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்த அவனை மதுரவாயல் காவல்நிலையத்திற்கு வரச்சொல்லி, சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவரை கல்லால் அடித்தான் என்று வழக்கு போட்டு கைது செய்தார்கள். நான்கு நாட்கள் சிறை வாசத்திற்கு பிறகு வெளி வந்த அவன், முன்னையும் விடத் தீவிரமாக ஊழலை அம்பலப்படுத்த போராடினான். வாசகர்களின் அமோக ஆதரவு பெற்ற தனது சவுக்கு தளத்தில் ஆதாரத்தோடு ஊழலை அம்பலப்படுத்துவதில் அவன் சற்றும் சளைக்கவில்லை.
சும்மா இருக்கும்போதே வழக்கு போட்டு சித்திரவதை செய்த அரசு, ஊழலை அம்பலப்படுத்தினால் சும்மா இருக்குமா ? அவனை பணியிலிருந்து நீக்குவதற்கு தேவையான அத்தனை வேலைகளையும் லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்த அதிகாரிகள் செய்தார்கள். அவன் மீது புதிது புதிதாக குற்றச்சாட்டுகளை ஏற்படுத்தி அவனை பணி நீக்கம் செய்யத் துடித்தார்கள். வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், நீதிமன்றத்தில் அவனுக்காக 10க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தொடுத்து அவனை பணி நீக்கம் செய்ய விடாமல் தடுத்தார்.
பணி நீக்கம் செய்வதில் தோல்வியுற்ற நிர்வாகம், 2010 இறுதியில் அவன் மீதான வழக்கை துரிதப்படுத்தி அவனை ஒழித்துக் கட்ட முனைந்தது. தானாக முன்வந்து அவன் மீதான வழக்கை நடத்தித் தந்து, தங்களுக்கு வேண்டிய நீதிபதியை வைத்து, அவனுக்கு தண்டனை பெற்றுத் தர முனைந்த அதிகாரிகளின் திட்டத்துக்கு வேட்டு வைத்தார் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன். எவ்வளவோ விரைவாக அவர்கள் வழக்கை நடத்த முயற்சித்தும், அதில் வெற்றி பெற முடியாமல் போனார்கள். 1 மார்ச் 2011 அன்று தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அந்த வழக்கை மேற்கொண்டு நடத்த முடியாமல் பின்வாங்கினார்கள்.
நான்கு ஆண்டுகள் கடந்தோடி விட்டன. இக்கட்டுரை எழுதும்போது அவனுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன், இதே நேரம், சிபி.சிஐடி லாக்கப்பில் அடி வாங்கியது பசுமையாக நினைவிருக்கிறது. இந்த நான்காண்டுகள் கழித்த நடந்த சம்பவங்களுக்காக அவன் வருந்துகிறானா ? எல்லா அரசு ஊழியர்களையும் போல, சம்பளத்தை வாங்கிக் கொண்டு, அந்த மர நாற்காலியை தேய்த்துக் கொண்டு, அதிகாரிகளுக்கு கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டு இருந்திருக்கலாமே என்று நினைக்கிறானா ?
இல்லை. நடந்தவைகளை நினைத்து அவன் மகிழ்கிறான். இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் போயிருந்தால், அவன் நரை கூடி கிழப்பருவமெய்தி, கொடுங்கூற்றுக்கிரையனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப்போல வீழ்ந்திருப்பான்.
18 வருடங்களாக பணியாற்றிய அலுவலகத்தில் இருக்கும் நண்பர்களை அவன் இழந்திருக்கலாம். அமைதியான வாழ்வை இழந்திருக்கலாம். இன்று வரை வழக்குகளுக்காக நீதிமன்றம் ஏறி இறங்கலாம். அவன் தாயின் குன்றிய உடல் நிலை சரிசெய்ய முடியாத அளவுக்கு போயிருக்கலாம்.
ஆனால், நடந்த சம்பவங்கள், அநியாயத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற அவன் மன உறுதியை பல மடங்கு கூட்டியிருக்கிறது. மிரட்டல்களைக் கண்டு அஞ்சாத பக்குவத்தை அளித்திருக்கிறது. அவன் உருவாக்கி போற்றிப் பாதுகாக்கும் அவனது இணையதளம். ஆயிரக்கணக்கான அன்பு வாசகர்களை அவனுக்கு பெற்றுத் தந்திருக்கிறது கடல் கடந்து கண் காணாத தூரத்தில் இருந்து, அன்போடு அவனது நலம் விசாரிக்கும் உறவுகளைத் தந்திருக்கிறது. பத்திரிக்கையாள நண்பர்களைத் தந்திருக்கிறது. அவனின் நலம் பேணும் பல புதிய உறவுகளை அவனுக்குத் தந்திருக்கிறது.
இரண்டையும் பார்க்கையில் அவன் இழந்ததை விட பெற்றது அதிகம்தானே ? இந்த நான்கு வருடங்களாக அத்தனை அடக்குமுறைகளையும் தாக்குபிடித்து தொடர்ந்து போராட அவனுக்கு துணை நின்ற அதிகாரிகள், வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், நண்பர்கள், அவன் தாய் மற்றும் தங்கை ஆகியோருக்கு அவன் இந்த நான்காவது ஆண்டில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளான்.
Naangal intha samoogam intha naadu ungalukku nandri koora kadamaipattirukirathu…. Hats of to you… Proud of you…. Om Sai Ram
Bravo…..sir nan unngalathu thondan……..,,ungalathu tharriyam arrumai ……neegal upyarrukagavum support panni pessathathu migavum negizchi ……ezha thamizhargal patriya katturai nan ethir nokki ullen ,…… nandri