அரசியல்வாதிகளில் இரட்டைக் குழல் துப்பாக்கி வைத்திருப்பது சகஜமே.. அதிலும் கலைஞர் கருணாநிதி பல ஆண்டு காலமாகவே இரட்டைக் குழல் துப்பாக்கி வைத்திருப்பவர். அதில் ஒரு குழலை மனைவி என்றும், மற்றொரு குழலை துணைவி என்றும் அழைத்து, தமிழுக்கே பெருமை சேர்த்தவர்.
தலைவர் எவ்வழியோ அவ்வழியில்தானே தொண்டரும் இருக்க வேண்டும் ? அப்படித்தான் இருக்கிறார் ஜெகதரட்சகன். ஆனால் இருவருக்கும் ஒரு பெரும் வித்தியாசம். முத்தமிழ் அறிஞர், மூத்த வித்தகர், தமிழினத் தலைவர், தனது இரண்டாவது குடும்பத்தைப் பற்றி எப்போதும் மறைத்தது இல்லை. தேர்தலில் தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரத்தில் கூட, அழகாக துணைவி என்றும் மனைவி என்றும் வெளிப்படையாகக் கூறுவார். அச்சப்படமாட்டார், அவமானப்படமாட்டார். இந்தக் கருமத்தையெல்லாம் பார்த்துக் கொண்டு, இந்த நபருக்கு வாக்களிக்க வேண்டுமேயென்று, தமிழ் கூறும் நல்லுலகம்தான் வெட்கப்பட வேண்டும்.
சரி விஷயத்துக்கு வருவோம். ஜெகதரட்சகனின் இரட்டைக் குழல் துப்பாக்கிதான் இந்தக் கட்டுரையின் மையம். ஜெகதரட்சகன் எப்படிப்பட்ட கல்வித்தந்தை என்பதை சவுக்கு வாசகர்கள் அறிவீர்கள்.
அறியாதவர்கள் கீழ்கண்ட கட்டுரையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஆகிய கட்டுரைகளைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். ஜெகதரட்சகனை கருணாநிதி திமுகவில் சேர்த்துக் கொண்டதே, அவரிடம் அளவில்லாமல் இருக்கும் பணம் காரணமாகத்தான். அவர் நடத்தும் கல்விக் கொள்ளைக்கூடங்கள், 2ஜி ஊழலில் வந்த பணத்தை முதலீடு செய்யப் பயன்பட்டன. கனிமொழி திஹார் சிறையில் இருந்த காலம் முழுக்க, அத்தனை செலவுகளையும் ஏற்றுக் கொண்டது ஜெகதரட்சகன்தான். அதனால், திமுகவில் பல காலமாக இருக்கும் தலைவர்களை விட, ஜெகதரட்சகனுக்கு கட்சியில் செல்வாக்கு மிக மிக அதிகம்.
கடந்த திமுக ஆட்சியின் போது, ஜெகதரட்சகனுக்கு முக்கிய வேலை கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்துவதே. கருணாநிதிக்கு ஜால்ரா அடிப்பதில் ஜெகதரட்சகனை மிஞ்ச யாருமே கிடையாது. வாலி, வைரமுத்து, ரஜினிகாந்த், கமலஹாசன் எல்லாம் பிச்சை வாங்க வேண்டும். ஜுலை 2009ல், தனது கோபாலபுரம் வீட்டை தான் இறந்த பிறகு மருத்துவமனையாக மாற்ற கருணாநிதி உயில் எழுதினார். அதை வாழ்த்தி ஜெகதரட்சகன் எழுதிய கடிதத்தை பொறுமையோடு படியுங்கள்.
“கோடிகள் (வீடு) கொடுத்த உனக்கு பாடிடுவோம் பல்லாண்டு! மெக்காவையும் மெதினாவையும் புனிதத்தலம் என்பார்கள் – இஸ்லாமிய சகோதரர்கள்; கிறிஸ்துவப் பெருமக்களுக்கு புனிதத்தலம் ஜெருசலேம் என்பார்கள். இந்துக்களுக்கோ திருப்பதி, காசி, ராமேஸ்வரம். ஆனால் எங்களுக்கு மட்டுமல்ல, ஏழு கோடி தமிழனுக்கும் கோபாலபுரம் தானே புனிதத்தலம்.
இந்த மண்ணில் கால்பதித்த குடியரசுத் தலைவர்கள் உண்டு, பிரதமர்கள் உண்டு, முதல்வர்கள் உண்டு, அயல்நாட்டு தலைவர்கள், அறிஞர்கள் உண்டு, அருந்தமிழ் வாணர்கள் உண்டு, சமயச் சான்றோர்கள் உண்டு, தத்துவ மேதைகள் உண்டு. இதற்கு மேல் இன்றைக்கு கோடிக் கோடி உடன்பிறப்புகளின் இதயங்கள் குடியிருப்பது கோபாலபுரத்தில் தானே! அந்தக் கருணைக் கோயிலின் மூலவரும் நீதான். முதல்வரும் நீதான்!
தமிழனின் அறியாமை நோயை அகற்றிய அந்த இடம் இனி ஏழை மக்களின் உடல்நோயை தீர்க்கும் இடமாக திகழப்போகிறது. தன் மூதாதையர்கள் சம்பாதித்த சொத்தை தன் கட்சிக்கு தந்தவர்கள் உண்டு, கல்விக்குத் தந்தவர்கள் உண்டு, மயிலுக்கு ஆடை தந்தவர்கள் உண்டு, முல்லைக்குத் தேர் தந்தவர்கள் உண்டு. தன்னை புகழ்ந்து பாடிய புலவர்களுக்கு நாட்டைக் கொடுத்தவர்கள் உண்டு, அரசில்கிழாரின் அருந்தமிழ் கேட்டு பரிசு தந்த பெரும்சேரல் இரும்பொறை உண்டு, வாடிய பயிரைக் கண்ட வள்ளல் பெருமான் உண்டு.
ஆனால், தன் முயற்சியால், வியர்வையால், ரத்தத்தால் இரவும், பகலும் அயராது உழைத்து ஈட்டிய செல்வத்தில் வாங்கிய ஒரு வீட்டையும், இந்த நாட்டிற்கு அர்ப்பணித்து, ஏழைகள் ஏற்றம்பெற தந்த உங்கள் கொடை ஈடு இணையற்றதல்லவா! உலகத்தில் மக்கள் துயர்தீர வீட்டையே கொடுத்த வள்ளல் நீங்கள் மட்டும்தானே!
தங்கள் மூச்சுக்காற்றால் சூழப்பட்டிருக்கும் கோபாலபுரம், எதிர்காலத்தில் ஏழைகளின் சுவாசக் காற்றல்லவா சூழப் போகிறது. கண்ணை, கருத்தை கடன் கொடுத்து நின்ற மக்களை தன்னை உணர்ந்து தலை நிமிர வைத்த எங்கள் தத்துவத்தின் தேரோட்டமே!
மழைத்துளி சிப்பியில் விழுந்தால் முத்தாகிறது, பூவில் விழுந்தால் தேனாகிறது, புல்லில் விழுந்தால் நட்சத்திரமாகிறது. ஆனால், எங்கள் இதயத்தில் விழுந்து என்றும் தேனாய் இனிக்கின்றத் தலைவா! பள்ளத்தில் கிடப்பவர்கள் மீது உள்ளத்தைச் செலுத்தும் கருணைக்கடலே!
சொல்லோடும், பொருளோடும், புல்லோடும், கல்லோடும், பொன்னோடும், மணியோடும் வாழ்கின்ற தமிழனை காக்க வந்த எங்களின் நந்தா விளக்கே! குலவிளக்கே! சிறைச்சாலைகள் செதுக்கித்தந்த சிந்தனை சிற்பியே! நெருக்கடிநிலை பிரசவித்த நெருப்புச் சூரியனே!
21ம் நூற்றாண்டின் வரலாற்றுச் சாசனத்தை இளைஞர் தளபதியைக் கொண்டு செதுக்கப் புறப்பட்டிருக்கும் புதிய புறநானூறே!
கடைகோடித் தமிழனுக்கும், கடைமடைத்தமிழனுக்கும் கடைசி நம்பிக்கையாய் திகழும் எங்களின் கற்கண்டுத் தலைவா! உன்னை சொற்கொண்டு வாழ்த்த சுந்தரத்தமிழில் வார்த்தைகள் இல்லை! நீ நடந்துவரும் பாதையில் அன்று கல்லும், முள்ளும் இருந்தது, இன்று எங்கள் இதயமல்லவா இருக்கிறது.
என்றைக்கும் ஒரு தாயின் பரிவுடனும், ஒரு போர் வீரனின் ஆவேசத்துடனும் காட்சித்தரும் 86 அகவை இளைஞனே! உலகத்தில் உன் வரலாற்றைப்போல் இதுவரை இருந்ததுமில்லை, இனி இருக்கப் போவதுமில்லை. இதுவரையில் நாங்கள் உன் பாதங்களைத்தான் பார்த்தோம். இன்று நீ கொடுத்த கொடையால் உன் படிவங்களையே பார்க்கிறோம்.
குணத்திலே குழந்தை நீ! கொடுப்பதிலே தந்தை நீ! அணைப்பதிலே அன்னை நீ! அன்புக்கோர் தெய்வம் நீ! ஏழ்மையில் பிறந்து, ஏழ்மையை உணர்ந்து, ஏழைகள் உயர இதயம் விரித்தத் தலைவா! தமிழனின் அறிவாலயமே! வாசமலரிட்டு வணங்கிய தங்களின் திருவடிகளை அடியேன் பாசமலரிட்டு பணிந்து வணங்குகிறேன். நன்றி மலர்களைக் குவிக்கின்றேன்”
படித்து முடித்து விட்டீர்களா ? (கடிதத்தை தாங்க முடியாமல் வாந்தி எடுப்பவர்கள், கம்ப்யூட்டரின் கீ போர்டை சேதப்படுத்தாமல் பாத்ரூம் சென்று வாந்தி எடுத்து விட்டு வரவும்.)
இதுதான் ஜெகதரட்சகன். அதிமுகவில் எம்.பியாக இருந்து விட்டு, பிறகு ஜெயலலிதா சேர்த்துக் கொள்ள மாட்டார் என்று தெரிந்ததும், வீர வன்னியர் பேரவை என்று ஒரு கட்சியை தொடங்கி, பின்னர் கருணாநிதியின் அரவணைப்பில் வந்த அல்லக்கைதான் ஜெகதரட்சகன். கட்சி மாறி வந்தவர் அடிக்கும் ஜால்ராவைப் பார்த்தீர்களா ?
பாராளுமன்ற உறுப்பினராக தற்போது உள்ள ஜெகதரட்சகன், சுற்றுலா மற்றும் செய்தி ஒளிபரப்புத் துறையின் இணை அமைச்சராகவும் உள்ளார். பாராளுமன்ற உறுப்பினரான பின், தனது குடும்பம் மற்றும் சொத்து விபரங்களை அளித்துள்ளார் ஜெகதரட்சகன். அவரது மனைவி பெயர் அனுசுயா என்று விபரம் அளித்துள்ளார்.
ஜெகதரட்சகனின் அசுர வளர்ச்சியே ஒரு பெரும் கொள்ளை மூலமாகத்தான் என்கின்றன தகவல்கள். 18ம் நூற்றாண்டில் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் “க்ரோம் லெதர் கம்பெனி” என்ற நிறுவனத்தை ஜார்ஜ் அலெக்சாண்டர் சேம்பர்ஸ் என்ற பிரிட்டிஷ் நாட்டுக் குடிமகன் தற்போதைய குரோம்பேட்டையில் நடத்தி வந்தார். அந்த க்ரோம் லெதர் நிறுவனத்தின் பெயரிலேயே அந்த இடம் குரோம்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. அந்த நிறுவனத்துக்கு சொந்தமாக தற்போதைய குரோம்பேட்டையில் 200 ஏக்கர் நிலம் இருந்தது. சேம்பர்ஸின் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி இடா சேம்பர்ஸ் பெயரில் அந்த இடம் இருந்து வந்தது. அந்த குரோம் லெதல் நிறுவனத்தில் பணியாற்றிய நாகப்ப செட்டியார் என்ற நபர், 1968ம் ஆண்டு, குரோம் லெதர் நிறுவனத்தின் ஷேர்களை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் அடமானம் வைக்கிறார். அடமானம் வைத்த செட்டியார் 1982ம் ஆண்டில் இறந்து போகிறார்.
அடமானம் வைத்த செட்டியார் இறந்து போனதால் 1995ம் வருடம், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி, அந்த ஷேர்களை ஏலம் விடுகிறது. அந்த ஏலத்தை எடுத்தது, திருச்செந்தூரில் வைர வேலைத் திருடியவர் என்ற புகழுக்குச் சொந்தக்காரரான ஆர்.எம்.வீரப்பன். ஜெகதரட்சகன் அப்போது ஆர்.எம். வீரப்பனோடு தான் இருந்தார். வீரப்பனும் ஜெகதரட்சகனும் சேர்ந்து, க்ரோம் லெதர் நிறுவனத்துக்கு சொந்தமான அனைத்து நிலங்களையும் அபகரித்தனர். இவர்கள் இந்த நிலத்தை அபகரிக்கையில், ஜார்ஜ் அலெக்சாண்டர் சேம்பர்ஸ் மற்றும் இடா சேம்பர்ஸ் தம்பதியின் ஒரே வாரிசான, ஜார்ஜ் ஜோசப் சேம்பர்ஸ் உயிரோடு இருக்கிறார். 2008ல் இறந்து போன ஜார்ஜ் ஜோசப் சேம்பர்ஸ், 5000 கோடி மதிப்பிலான தனது அத்தனை சொத்துக்களையும் டாசன் என்பவருக்கு எழுதி வைக்கிறார். இந்த டாசன் இன்னும் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அலைந்து கொண்டிருக்கிறார் என்கின்றன தகவல்கள்.
க்ரோம் லெதர் நிறுவனத்தின் நிலங்களை அபகரித்த ஜெகதரட்சகன், அந்த இடத்தில் பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் பாலாஜி பல் மருத்தவக் கல்லூரியைக் கட்டி, ஒரு சீட்டுக்கு 20 முதல் 40 லட்சம் வரை வசூலித்துக் கொண்டிருக்கிறார். இது கல்வித்தந்தையின் வரலாற்றின் ஒரு பக்கம் என்று எடுத்துக் கொள்ளலாம்.
இது தவிரவும் அனுசுயா மூலமாக, ஜெகதரட்சகனுக்கு ஸ்ரீனிஷா என்ற மகளும், சந்தீப் ஆனந்த் என்ற மகனும் உள்ளனர். இந்த விபரங்களையும், மனைவி அனுசுயா மற்றும் மகன் சந்தீப் ஆனந்த் மற்றும் மகள் ஸ்ரீனிஷா ஆகியோர் பெயரில் உள்ள சொத்துக்களின் விபரங்களையும், ஜெகதரட்சகன் அளித்துள்ளார். இந்த சந்தீப் ஆனந்த், கல்வித்தந்தை ஜெகதரட்சகனின் பாரத் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் தாளாளராக உள்ளார்.
இந்த விபரங்களையெல்லாம் அளித்த ஜெகதரட்சகன், சென்னை, எண் 25/3, மகாலிங்கம் தெரு, மகாலிங்கபுரம், நுங்கம்பாக்கம், சென்னை என்ற முகவரியில் வசிக்கும் அவரது மற்றொரு மனைவி மாலாவின் விபரங்களை ஏன் கொடுக்க மறந்தார் என்பதை ஜெகதரட்சகன்தான் விளக்கவேண்டும்.
மற்றுமொரு மகிழ்ச்சிகரமான செய்தி. கல்வித்தந்தையான ஜெகதரட்சகன், தனது 59வது வயதில், ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகியிருக்கிறார் என்பதுதான் அந்த மகிழ்ச்சிகரமான செய்தி. அந்தக் குழந்தைக்கு ரக்ஷனா என்று பெயரிட்டிருக்கிறார் ஜெகத். ஊருக்கெல்லாம் தமிழ் தமிழ் என்று உபதேசம். ஆனால் குடும்பத்தில் பெயர் வைக்கும்போது மட்டும், ஸ்ரீநிஷா, சந்தீப் ஆனந்த், ரக்ஷனா என்று வடமொழிப் பெயர்கள். நல்லா நடிக்கறீங்கடா….
ஜெகதரட்சகனின் இளைமைத் துடிப்புக்குச் சான்று
இரண்டாவது மனைவி மாலா குடியிருக்கும் வீட்டில் பாதி பங்கு தன்னுடையது என்று தனது சொத்துக் கணக்கில் குறிப்பிடும் ஜெகதரட்சகன்
வாழ்த்துக்கள் ஜெகதரட்சகன் அவர்களே. 59வது வயதில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்த ஜெகதரட்சகன், அந்த விஷயத்தை மக்களிளிடம் பகிர்ந்து கொண்டிருக்கலாம். வயோதிக வாலிப அன்பர்கள், சேலம் சிவராஜ் சித்த வைத்தியரிடம் சிகிச்சைக்கு செல்வதற்குப் பதிலாக, ஜெகதரட்சகனிடம் ஆலோசனைக்காக வருவார்கள். கல்விக் கொள்ளை அடிப்பதோடு கூடுதலாக, இந்த ஆலோசனைக்கும் வசூல் செய்யலாம் அல்லவா ? இது தவிரவும், இரவு நேரத்தில் பாரபட்சம் இல்லாமல் அனைத்து தொலைக்காட்சிகளிலும், சொப்பன ஸ்கலிதம், ஆண்மைக் குறைவு போன்ற சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் வாலிப வயோதிக அன்பர்களுக்கு ஆலோசனை வழங்கலாம். மொத்தத்தில் ஆண்களுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்கியிருக்கலாம். இதையெல்லாம் உலகத்தை ரட்சிக்கும் ஜெகதரட்சகன் ஏன் செய்யாமல் விட்டு விட்டார் என்ற கேள்வி சவுக்கைப் போல அதன் வாசகர்களுக்கும் எழாமல் இருக்காது. இந்தக் கேள்விகளை நீங்கள் ஜெகதரட்சகனிடமே கேளுங்கள். அப்படிக் கேட்கும்போது, கூடுதலாக இன்னொரு கேள்வியையும் கேளுங்கள். மக்களவையில் ஜெகதரட்சகன் தாக்கல் செய்துள்ள விபரங்களில் அவர் 10வது படித்துள்ளார் என்று இருக்கிறது.. திமுகவின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அவர் பிஎச்டி பட்டம் வாங்கியுள்ளார் என்று இருக்கிறது. சார் நீங்க டாக்டரா இல்லையா என்பதையும் சேர்த்துக்க் கேளுங்கள்.
தமிழன் என்றால் இளக்காரமாகப் பார்க்கும் வடநாட்டு அரசியல்வாதிகளைப் பார்த்து சவுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறது. திராவிடக் கட்சித் தலைவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். மதிமுகவின் முன்னாள் எம்.பி. செஞ்சி ராமச்சந்திரனின் இரண்டாவது மனைவிக்கு குழந்தை பிறக்கும் போது அவரது வயது 61. ஜெகதரட்சகனின் இரண்டாவது மனைவிக்கு குழந்தை பிறக்கும்போது அவரது வயது 59. தமிழர்களைப் போல உங்களால் ஊழல் செய்ய முடியும். இப்படி என்றும் இளமையாக இருந்து காட்ட முடியுமா ?
சரி.. அப்பிடி என்னய்யா தப்பு செஞ்சுட்டார் ஜெகதரட்சகன். இரண்டாவது மனைவி இருக்கறத சொல்லாம விட்டுட்டார். இது ஒரு தப்பா என்று வாசகர்கள் கேள்வி எழுப்பலாம். இதைத் தவறு என்று சவுக்கு சொல்லவில்லை. மத்திய அரசு இயற்றியுள்ள சட்டம்தான் சொல்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சொத்து மற்றும் கடன் குறித்த விபரங்களை வெளியிடுவது தொடர்பான 2004ம் ஆண்டுச் சட்டம், தவறான விபரங்களை அளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சொல்கிறது.
பிரதமர் அலுவலகத்துக்கு ஜெகதரட்சகன் தாக்கல் செய்த சொத்துக் கணக்கு. இதில்
எங்கேயும் இரண்டாவது மனைவி மாலா பற்றியோ, அவர் குழந்தை ரக்ஷனா பற்றியோ குறிப்டப்படவில்லை
அந்தச் சட்டத்தின் படி, தவறான விபரங்களை அளித்த பாராளுமன்ற உறுப்பினர் குறித்த புகாரை, உரிய ஆதாரத்தோடு, மக்களவை சபாநாயகருக்கு அனுப்ப வேண்டும். அந்தப் புகாரை பரிசீலித்த பின்னர், சபாநாயகர், அதை பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவுக்கு அனுப்பி வைப்பார். அந்தக் குழுவின் பரிந்துரையின் படி, சம்பந்தப்பட்ட உறுப்பினர், தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து மக்களவை சபாநாயகர் முடிவு செய்வார். 2012 ஆகி விட்டது. இன்னும் சரியாக இரண்டே இரண்டு ஆண்டுகள்தான் இருக்கிறது நடப்பு மக்களவையின் ஆயுட் காலம் முடிய. மேலும், இது குறித்து புகார் கொடுக்கும் வழிமுறையே தலையைச் சுற்றுவதாக இருக்கிறது என்றாலும், நாம் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார் ? வழக்கறிஞர்களோடு கலந்தாலோசித்த பின்னர், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தச் சட்டம் தவிரவும், மத்திய அமைச்சரவை மற்றும் மாநில அமைச்சரவையில் அமைச்சர்களாக உள்ள அனைவரும், தங்கள் சொத்து குறித்த விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இதில் தவறான தகவல்களைத் தந்தால் அதற்கு என்ன தண்டனை என்று குறிப்பிடப்படவில்லை.
ஒரு அரசுத்துறையில் சாதாரண ப்யூனாக பணியாற்றுபவனுக்குக் கூட நடத்தை விதிகள் உண்டு. அந்த நடத்தை விதிகளை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விதிகளில் இடம் உண்டு. ஆனால், நமது தலையெழுத்தை தீர்மானிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், அமைச்சர்களுக்கு எவ்வித நடத்தை விதிகளும் இல்லை. இருக்கும் விதிகளை மீறினாலும் தண்டனை இல்லை. எப்படி இருக்கிறது நமது ஜனநாயகம் ?