இப்படி நீதிக்கே அவமானத்தை ஏற்படுத்தியது யார் என்று யோசிக்கிறீர்களா ? சவுக்கு வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான நிதியரசர் கர்ணன்தான் அது. புதிதாக வந்துள்ள சவுக்கு வாசகர்கள் சவுக்கின் உள்ளத்தில் நள்ள உள்ளம் என்ற கட்டுரையை படிக்கவும்.
படித்து விட்டீர்களா ? நிதியரசர் கர்ணன் மீது லஊழல் புகார் என்ற அடிப்படையில் அவரை கட்டாய விடுப்பில் போகச் சொன்னார் தற்போதைய தலைமை நீதிபதி இக்பால். இதையடுத்து தான் ஒரு தலித் என்பதால், தன்னை சக நீதிபதிகள் அவமானப்படுத்தினார்கள் என்று தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு ஒரு புகார் அளித்து, அந்தப் புகாரை பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்து, அது தொடர்பாக பேட்டியும் அளித்தார் நீதிபதி கர்ணன்.
இந்தப் பேட்டியை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள தலித் வழக்கறிஞர்கள் பலர், தலைமை நீதிபதியின் அறைக்குச் சென்று, அவரிடம் முறையிட்டனர். முறையிடுவது என்ற பெயரில், தலைமை நீதிபதி இக்பாலை மிரட்டினர். அவர்களின் மிரட்டலையடுத்து தலைமை நீதிபதி, நிதியரசர் கர்ணனுக்கு உடனடியாக பணி வழங்கினார்.
நிதியரசர் கர்ணன் விவகாரம் நடைபெறுவதற்கு சற்று முன் – ஏப்ரல் 2011ல் நடந்த மற்றொரு சம்பவம், திருவள்ளுர் மாவட்ட நீதிபதியின் பணி இடைநீக்கம். திருவள்ளுர் மாவட்ட நீதிபதியாக சின்னப்பன் என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இக்பால், திடீரென்று ஒரு நாள் அதிரடியாக திருவள்ளுர் மாவட்ட நீதிமன்றத்துக்கு சென்று பார்வையிட்டபோது, நீதிபதி சின்னப்பன் நீதிமன்றத்திலும் இல்லை, திருவள்ளுரிலும் இல்லை. எங்கே என்று விசாரித்தபோது வெளியூர் சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கப்பட்டது. மாவட்ட நீதிபதிகள் வெளியூர் செல்ல வேண்டும் என்றால், தலைமை நீதிபதியிடம் முன் அனுமதி பெற வேண்டும். வேலை நாட்களில் விடுமுறை என்றால் முன் அனுமதி பெற்று மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஆனால், திருவள்ளுர் மாவட்ட நீதிபதி சின்னப்பன், விடுமுறையும் கேட்காமல், முன் அனுமதியும் பெறாமல், சித்தம் போக்கு சிவன் போக்கு என்று கிளம்பி எங்கேயோ போய் விட்டார். ஆய்வு மேற்கொண்ட தலைமை நீதிபதி, மாவட்ட நீதிபதியை காணவில்லை என்றதும், சென்னை திரும்பியவுடன், அவரை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டார். இந்து செய்தி. இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சின்னப்பனும், ஓரிரு மாதங்களிலேயே மீண்டும் பணியமர்த்தப்பட்டார். இந்த சின்னப்பனும் ஒரு தலித் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது விஷயத்துக்கு வருவோம். கடந்த வாரம், ஒரு வழக்கு, நீதிபதி சுதந்திரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி சுதந்திரம், அவர் வழக்கறிஞராக இருந்தபோது ஒரு வழக்கில் மனுதாரர் சார்பாக, ஆஜராகியிருப்பதால், தன்னால் அந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று தெரிவித்து, வேறு நீதிபதிக்கு இந்த வழக்கை மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, கடந்த திங்களன்று, நிதியரசர் கர்ணன் முன்னிலையில் இந்த வழக்கை விசாரணைக்கு அனுப்புமாறு தலைமை நீதிபதி கோப்பில் உத்தரவிட்டார். இன்று (19/07/2012) காலை 10.30 மணிக்கு நீதிமன்றம் தொடங்கியதும், கிரிமினல் வழக்குகளில் நீதிமன்றங்களுக்கு வழக்குகளைப் பட்டியலிடும் பிரிவின் அலுவலர் லட்சுமணன் என்பவரை வரவழைத்தார் நிதியரசர் கர்ணன். நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள், கட்சிக்காரர்கள் என அனைவரும் குழுமியிருந்தார்கள்.
அப்போது கர்ணன், பிரிவு அலுவலர் லட்சுமணனைப் பார்த்து, “அந்த குறிப்பிட்ட வழக்கை ஏன் என் முன்பு போடவில்லை” என்று கேட்டார். அதற்கு லட்சுமணன், “மை லார்ட் நேற்று மதியம் இது குறித்து தங்களைப் பார்க்க வந்தேன். அப்போது மை லார்ட் நேரம் இல்லாததால் பிறகு வருமாறு கூறினீர்கள். மை லார்ட் உத்தரவு ஏதும் பிறப்பிக்காததால், அந்த வழக்கை போடவில்லை” என்று கூறினார்.
“என்னைப் பற்றி என்ன கமென்ட் அடித்தாய் ?” என்று அவரைப் பார்த்து கோபமாகக் கேட்டார் கர்ணன். லட்சுமணன் மை லார்ட் நான் எதுவும் பேசவில்லை என்று கூறியதும், “எனக்கு எதுவும் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா ? நீ என்ன கமென்ட் அடித்தாய் என்பது எனக்குத் தெரியும். உன் மீது எஸ்சி எஸ்டி ஆக்டில் கம்ப்ளெய்ன்ட் கொடுப்பேன். உன் மீது விஜிலென்ஸ் விசாரணைக்கு புகார் கொடுப்பேன்” என்றார். இதைக் கேட்டதும், லட்சுமணன் கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது. இதைப் பார்த்த கர்ணன், வெளியே போ என்று லட்சுமணனை அனுப்பி விட்டார்.
இந்தச் சம்பவத்துக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்று (19.07.2012) காலை 10.30 மணிக்கு 31வது நீதிமன்றத்தில் இருந்த அத்தனை பேரும் சாட்சி.
என்ன நடந்தது என்று விசாரித்தபோது, பிரிவு அலுவலர் லட்சுமணன், நேற்று மதியம் தலைமை நீதிபதி உத்தரவின் படி, அந்த வழக்கை வியாழனன்று போடலாமா என்று கேட்பதற்காக, நிதியரசர் கர்ணனை சந்திக்கச் சென்றிருக்கிறார். சவுக்கு வாசர்களுக்கு ஒரு சந்தேகம் வரும். தலைமை நீதிபதி, நிதியரசர் கர்ணன் முன்பு இந்த வழக்கை விசாரணைக்கு போடவும் என்று உத்தரவிட்ட பிறகு, எதற்காக நிதியரசர் கர்ணனிடம் கேட்க வேண்டும் என்ற சந்தேகம் எழும்.
சவுக்கு அரசுத் துறையில், அதுவும் காவல்துறையில் 18 ஆண்டு காலம் பணியாற்றியிருக்கிறது. காவல்துறையில் உள்ள பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகளால் அடிமை போல நடத்தப்படுவார்கள் என்று பொதுவாக ஒரு கருத்து உண்டு. இதில் ஓரளவுக்கு உண்மையும் உண்டு. ஆனால், நீதிமன்றத்தைப் போல, அதன் ஊழியர்களை அடிமைகளாக நடத்தும் ஒரு துறையை எங்கேயும் பார்க்க முடியாது. என்ன காரணம் என்றால், மற்ற துறைகளில் ஒரு ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கையோ, பணி இடைநீக்க நடவடிக்கையோ எடுக்கப்பட்டால் நீதிமன்றத்துக்கு வரலாம். நீதிபதிகளே ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால், அந்த ஊழியர்கள் எங்கே செல்ல முடியும் ? ஒரு நீதிபதி எடுத்த ஒழுங்கு நடவடிக்கையை மற்ற நீதிபதி யாராவது ரத்து செய்வாரா ? அப்படியே ரத்து செய்வார்கள் என்று நம்பி ஊழியர்கள் நீதிமன்றத்தை அணுக முடியுமா ? இந்தக் காரணத்தால், தமிழகமெங்கும் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தங்கள் முதுகெலும்பை வீட்டிலேயே கழற்றி வைத்து விட்டுத்தான் பணிக்கு வருவார்கள்.
கர்ணன் போன்ற நபர்களையும் “மைலார்ட்” என்றே அழைக்க வேண்டும். சார் என்று கூப்பிட்ட ஊழியர், அத்தோடு தொலைந்தார். மனிதாபிமானமுள்ள சில நீதிபதிகள், தங்கள் ஊழியர்களை மனிதர்களாக, மரியாதையோடு நடத்துகிறார்கள். ஆனால், கர்ணன் போன்ற நிதியரசர்களுக்கு, ஊழியர்கள் என்றால், கிள்ளுக்கீரை. அந்த ஊழியர்களை ஈனப்பிறவிகளாகவே நடத்துவார்கள். சமீபத்தில் ஓய்வு பெற்ற சொக்கலிங்கம் என்ற மற்றொரு நீதிபதி இதற்கு சிறந்த உதாரணம். நீதிமன்றம் நடந்து கொண்டிருக்கையில், ஊழியரை அழைத்து, அனைத்து வழக்கறிஞர்களும் பார்க்கும்போது அவரை அவமானப்படுத்தி அனுப்புவதில் சொக்கலிங்கத்துக்கு அலாதி இன்பம்.
இந்தப் பிரிவு அலுவலர் லட்சுமணனோடு சவுக்குக்கு அறிமுகம் கிடையாது. ஆனால் அவரைப்பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. ஒரு சில வழக்குகளுக்காக அவரோடு உரையாடிய போதெல்லாம், அவர் நீதிபதிகளை “லார்ட்ஷிப் வரச்சொன்னார். லார்ட்ஷிப்பை இப்போதுதான் பார்த்து வருகிறேன்” என்றுதான் பேசுவார். அவர் பேசுவதைப் பார்க்கும் போது வித்தியாசமாக இருக்கும். காவல்துறையில் இதுபோன்ற அடிமைத்தனம் உண்டு. அதிகாரிகள் எவ்வளவு முட்டாள்த்தனமாக உத்தரவிட்டாலும் அதைச் செய்தே ஆக வேண்டும். ஊழியர்களும், அதிகாரிகள் குறித்துப் பேசிக்கொள்ளுகையில், ஐஜி வரச்சொன்னார், கூடுதல் டிஜிபி அழைத்தார், டிஐஜி சத்தம் போட்டார் என்றுதான் சொல்லுவார்கள். சவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றியபோது இந்தச் சொல்லாடல்களை கடைபிடிப்பதே வழக்கம். இந்த மரியாதையெல்லாம், அதிகாரி நியாயமான உத்தரவுகளைப் பிறப்பிக்கும்போதுதான். லூசுத்தனமான உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரிகளுக்கு எப்படி மரியாதை தர முடியும் ?
தற்போது சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருக்கிறாரே ஜார்ஜ்… …. ? இந்த ஜார்ஜ், 2002ல் லஞ்ச ஒழிப்புத் துறையில் இணை இயக்குநராக இருந்தார். நாஞ்சில் குமரன் அப்போது இயக்குநர். இந்த அதிகாரிகளுக்கு பொழுது போகவில்லையென்றால் அவர்கள் செய்யும் வேலை, ஆய்வுக்கூட்டம் நடத்துவது. அலுவலக செலவில் முந்திரி பக்கோடாவும், கோழி பிரியாணியும் தின்று கொண்டு, அந்தக் காலாண்டிலோ, அரையாண்டிலோ நடந்த வேலைகளை பவர் பாயின்ட் பிரசன்டெஷனில் பார்த்துக் கொண்டு, ஆங்கிலத்தில் பெரிய வெண்ணைகள் மாதிரி பேசுவார்கள். தன் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் சிரமத்தைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல், அறிக்கைகள் மற்றும் புள்ளி விபரங்கள், இப்படி வேண்டும், அப்படி வேண்டும் என்று இஷ்டத்துக்கு கேட்பார்கள்.
ஜார்ஜ் இணை இயக்குநராக இருந்தபோது, அஷோக் குமார் மற்றும் ராதாகிருஷ்ணன் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் ஐஜிக்களாக இருந்தார்கள். இதில் ராதாகிருஷ்ணனும், அஷோக் குமாரும் ஒரு டீம். ஜார்ஜ் மற்றொரு டீம். இந்த இரண்டு டீமுக்கும் எப்போதும் பனிப்போர். இரண்டு டீமும், ஒருவரைப் பற்றி ஒருவர் மாற்றி மாற்றி பத்திரிக்கைகளில் செய்தி வரவழைப்பார்கள். இவர்களே செய்தியை கொடுத்து விட்டு, ஊழியர்களை அழைத்து, செய்தி எப்பபடி வெளியானது என்று மிரட்டுவார்கள். நாஞ்சில் குமரனிடம் யார் நல்ல பெயர் வாங்குவது என்ற போட்டியில், ஜார்ஜ், கடந்த பத்து ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை செய்த வேலைகள் அனைத்தும் பவர் பாயின்ட் பிரசன்டேஷனாக வேண்டும் என்று கூறி விட்டார். மற்றொரு பக்கம் அஷோக்குமார் டீமும் பவர் பாயின்ட் தயார் செய்து கொண்டிருந்தது.
சவுக்கு வேலை செய்தது, ஜார்ஜின் டீமுக்கு கீழே என்பதால், பவர் பாயின்ட் தயார் செய்யும் வேலை முழுக்க சவுக்கின் தலையில் விழுந்தது. சவுக்கோடு பணியாற்றிய மற்ற ஊழியர்களுக்கு, பவர் பாயின்ட் தயார் செய்வதில் அறிமுகம் இல்லை என்பதால், மொத்த வேலையையும் செய்ய வேண்டியதாயிற்று. மூன்று நாட்கள் இரவு பகலாக இந்த வேலை நடந்தது. பல்வேறு அனிமேஷன்களுடன், பவர் பாயின்ட் தயார் செய்யப்பட்டு, மூன்றாவது நாள் மாலை 4 மணிக்கு, ஜார்ஜ் மன்னருக்கு அந்த ஸ்லைடுகள் போட்டுக் காண்பிக்கப்பட்டன. ஸ்லைடுகளை ஜார்ஜுக்கு போட்டுக் காண்பித்த எஸ்.பிக்களும், மேலாளரும், இரண்டு மணி நேரம் கழித்து திரும்பி வந்தனர். திரும்பி வந்து, ஸ்லைடுகளில் இணைஇயக்குநருக்கு திருப்தி இல்லை. மொத்த ஸ்லைடுகளையும் மாற்றி அமைக்கச் சொன்னார் என்று சொன்னார்கள். மூன்று நாட்களாக இரவு பகலாக வேலை செய்த பிறகு இப்படி சொன்னால் எப்படி இருக்கும் ?
“சார் இந்த லூசுப்பயல் சொல்ற மாதிரியெல்லாம் என்னால வேலை செய்ய முடியாது. என்ன பண்ண முடியுமோ பண்ணச் சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு அலுவலகத்தை விட்டு அகன்றாகிவிட்டது. பின்னர், வேறு ஒரு தனியார் மென்பொறியாளரை அழைத்து அந்த வேலையை செய்து முடித்தார்கள். அரசுத் துறையில் பல நாட்கள் செய்த வேலைகளையெல்லாம் எண்ணிப் பார்த்தால் எவ்வளவு வெட்டி வேலை செய்திருக்கிறோம் என்று வியப்பாக இருக்கிறது.
லட்சுமணன், “லார்ட்ஷிப்” என்று பேசியபோது, இந்தச் சம்பவம்தான் நினைவுக்கு வந்தது. வேலை செய்யும் இடம், அரசு ஊழியர்களின் தன்மையை எப்படி மாற்றியுள்ளது என்பதைக் காணமுடிந்தது.
நீதிமன்ற ஊழியர்கள் இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான நிலையில் வாழ்வதால், எந்த உத்தரவாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட நீதிபதியைச் சந்தித்து, கோப்பில் இப்படி எழுதலாமா என்பதை கேட்டறிந்த பிறகே, கோப்பை அவரிடம் அனுப்ப இயலும். தலைமை நீதிபதி உத்தரவிட்டிருந்தாலும், அவரிடம் தங்கள் கோபத்தை காட்ட முடியாத மற்ற நீதிபதிகள், தங்கள் கோபத்தை காட்டுவது, நீதிமன்ற ஊழியர்களிடமே.. இந்தக் காரணத்தாலேயே, லட்சுமணன், நிதியரசர் கர்ணனிடம் நேரில் சென்று உத்தரவு கேட்பதற்காகச் சென்றார். நிதியரசர் அன்று “முக்கிய” கோப்புகளை பார்வையிட்டாரோ என்னமோ தெரியவில்லை, லட்சுமணனை பார்க்க முடியாது என்று அனுப்பி விட்டார்.
இன்று காலை நீதிமன்றம் தொடங்கியதும், லட்சுமணனை அழைத்து உன் மீது எஸ்.சி எஸ்.டி ஆக்டில் புகார் கொடுப்பேன் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து, இன்று மதியம், நிதியரசர் கர்ணனை அவரது அறைக்குச் சென்று பார்க்க முயற்சித்துள்ளார் லட்சுமணன். நிதியரசர் பார்க்க முடியாது என்று மறுத்து விட்டார்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது ஒரு அற்புதமான சட்டம். சாதி இந்துக்கள், தாழ்த்தப்பட்டவர்களை இழிவு படுத்துவதிலிருந்தும், அவர்கள் மீது வன்கொடுமைகளை ஏவி விடுவதிலிருந்தும், ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டம். இச்சட்டம் எந்த அளவுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறதென்றால், இச்சட்டத்தால் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூட வழி இல்லை. இந்தச் சட்டம் சில நேர்வுகளில் தவறாக பயன்படுத்தப்படுவது உண்மைதான் என்றாலும், இச்சட்டம் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கு பெரும் பாதுகாப்பாக இருக்கிறது என்பதே உண்மை.
இந்தச் சட்டம் சாதீய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் மக்களைப் பாதுகாக்கவே உருவாக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களை எடுத்துக் கொண்டீர்கள் என்றால், இங்கே தலித்துகளே பெரும்பான்மை.. மருத்துவம் பொறியியல் போன்ற மற்ற படிப்புகளுக்கு, தலித்துகளுக்கான கட் ஆப் மதிப்பெண் குறைவாக இருக்கும் என்றால், சட்டப்படிப்பை பொறுத்தவரை, தலித்துகளுக்கான கட் ஆப் மதிபெண் அதிகமாக இருக்கும். அறிஞர் அம்பேத்கர் வழியைப் பின்பற்றி, தலித்துகள் அதிமாக சட்டக்கல்வியை பயில்வதே இதற்கு காரணம். இது மிக மிக வரவேற்கத் தகுந்த ஒரு அம்சம். இந்தக் காரணத்தால், நீதிமன்றங்களில் தலித்துகள் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். இதற்கு சென்னை உயர்நீதிமன்றமும் விதிவிலக்கல்ல. மற்ற இடங்களில் நடப்பது போல, நீதிமன்ற வளாகங்களில் தலித்துகளை இழிவுபடுத்திவிட்டு ஒரு நபர் உயிரோடு வெளியே செல்வதே இயலாத காரியம். அந்த அளவுக்கு நீதிமன்றங்கள் தலித்துகளின் கோட்டையாக இருக்கிறது. இதைத் தவறு என்று சொல்ல முடியாது. மற்ற துறைகளில் ஒடுக்கப்பட்டு இருக்கும் தலித்துகள், நீதிமன்றங்களிலாவது, வலுவாக அதிகாரம் செலுத்துவது வரவேற்கத்தகுந்த ஒரு அம்சம்.
அதற்காக, பெரும்பான்மையாக இருக்கிறோம் என்பதற்காக, தலித்துகள் அடாவடிகளில் ஈடுபட்டால், அது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதே.
நீதிமன்றங்களின் இந்த யதார்த்த நிலைமையை மனதில் கொண்டே, நிதிபதி கர்ணனின் செய்கையைப் பார்க்க வேண்டும். தலித்துகள் வலுவாக இருக்கும் ஒரு இடத்தில், தலித்தல்லாத நீதிபதிகள் அவரை இடித்தார்கள், கிள்ளினார்கள் என்று சொல்லுவதே அபத்தம். அதையும், பல ஆண்டுகளாக அமைதி காத்து விட்டு, அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தவுடன் “தலித்” என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ள முயற்சித்தது, ஆ.ராசாவின் செய்கைக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை.
ஒரு உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கும் ஒருவரை, சக நீதிபதிகள் தலித் என்பதால் சிறுமைப் படுத்தினர் என்ற குற்றச்சாட்டே நம்ப முடியாமல் இருக்கும் நிலையில், அவரது அதிகாரத்தின் முன் சிறு துரும்பாக இருக்கும் ஒரு கடைநிலை ஊழியரைப் பார்த்து “உன் மீது எஸ்சி எஸ்டி சட்டத்தில் புகார் கொடுப்பேன்” என்று சொல்வது எப்படிப்பட்ட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ? நிதிபதி கர்ணனைப் பற்றி அந்த ஊழியர் ஏதோ ஒரு கமென்ட் அடித்திருந்தார் என்று வைத்துக் கொண்டாலும், யாரோ ஒருவர் சொல்வதை வைத்து, எஸ்சி எஸ்டி சட்டத்தின் கீழ் புகார் கொடுத்து விட முடியுமா ? அப்படி புகார் கொடுப்பதாக இருந்தாலும், திறந்த நீதிமன்றத்தில் மிரட்டுவது சரியாக இருக்குமா ? தலித்தல்லாத நீதிபதிகள் சிலர் அவரைக் கிள்ளினார்கள், உரசினார்கள் என்று புகார் கூறிய நிதிபதி கர்ணன், அந்த நீதிபதிகள் யார் என்பதை இன்று வரை வெளியிடவில்லை. அவர் கூறிய புகார் ஒரு அப்பட்டமான பொய் என்பது அம்பலமான பின்னும், இன்று நடந்த சம்பவத்தைப் போல ஒரு ஆணவ நடவடிக்கையில் கர்ணன் இறங்கியிருக்கிறார் என்றால், பெரும்பான்மையான தலித்துகள் இருக்கும் இடத்தில் தன்னை எதுவுமே செய்ய முடியாது என்ற அகந்தையே.
கர்ணனின் அகந்தை பொருளற்றது அல்ல. நீதிபதிகள் ஊடகங்களில் பேசக்கூடாது, என்று தெளிவான நடத்தை விதிகள் இருந்தபோதும், நீதிமன்றத்தில், தனது அறைக்கு பத்திரிக்கையாளர்களை அழைத்து, சக நீதிபதிகள் மீது பொய்யான குற்றச்சாட்டை சொல்லிய ஒரு நீதிபதியை பணம் கொழிக்கும் ஒரு பிரிவுக்கு நீதிபதியாக்கி அழகு பார்க்கிறார் தலைமை நீதிபதி இக்பால். ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஒரே காரணத்துக்காக பணி நீக்கம் செய்யப்படவேண்டியவர் நிதியரசர் கர்ணன். சக நீதிபதிகள் தலித் என்பதால் தன்னைச் சிறுமைப் படுத்தினர் என்ற குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறினால், அந்த காரணத்துக்காகவும் பணி நீக்கம் செய்யபபடவேண்டியவர் நிதியரசர் கர்ணன். சக நீதிபதிகள் மீது பொய்யான புகார் கொடுத்த காரணத்துக்காவும் பணி நீக்கம் செய்யப்படவேண்டியவர் நிதியரசர் கர்ணன். அவர் மீது எழும்பிய ஊழல் குற்றச்சாட்டுகள் முறையாக விசாரிக்கப்பட்டிருந்தால், அதற்காகவும் பணி நீக்கம் செய்திருக்கப்பட வேண்டியவர் நிதியரசர் கர்ணன். தனக்கு ஆதரவாக, தலித் வழக்கறிஞர்களை வைத்து, தலைமை நீதிபதியை மிரட்டிய காரணத்துக்காவும் பணி நீக்கம் செய்யப்படவேண்டியவர் நிதியரசர் கர்ணன்.
இந்தக் காரணங்களுக்காக பணி நீக்கம் செய்யப்படவில்லை என்றாலும், தனக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர் மீது எஸ்சி எஸ்டி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பேன் என்று திறந்த நீதிமன்றத்தில் அனைவர் முன்பாக மிரட்டிய காரணத்துக்காகவே பணி நீக்கம் செய்யப்படவேண்டியவர் நிதியரசர் கர்ணன்.
இன்று அனைவர் முன்னாலும் நீதிமன்ற ஊழியர் லட்சுமணனுக்கு, நிதியரசர் கர்ணன் ஏற்படுத்திய அவமானம், தலைமை நீதிபதிக்கு நேர்ந்த அவமானம். சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியரும், தலைமை நீதிபதியின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள். அப்படிப்பட்ட ஒரு ஊழியரை ஒரு ஊழல் கறைபடிந்த நீதிபதி, நீதித்துறையின் எந்த ஒழுக்கங்களையும் கடைபிடிக்காத ஒரு நீதிபதி, இப்படி அவமானப் படுத்தியுள்ளாரேயென்றால், அந்த நீதித்துறை ஊழியரின் கண்ணீரைத் துடைக்க வேண்டியது தலைமை நீதிபதியின் கடமை. உரிய விசாரணை நடத்தி நிதியரசர் கர்ணனை தண்டிக்க வேண்டியதும் அவர் கடமை. அதை அவர் செய்யத் தவறுவாரேயானால், அவர் நிதியரசர் கர்ணனின் ஒவ்வொரு செயலுக்கும் உடந்தையானவர் ஆவார். உடந்தையாக இருப்பது மட்டுமல்ல, ஊக்கப்படுத்தவும் செய்கிறார் என்றே பொருள் கொள்ள வேண்டும்.
நிதியரசர் கர்ணன் அவர்களுக்கு.. …. ஒரு நீதிபதி எப்படி இருக்க வேண்டும் என்று, டி.கே.பாரிஹார் என்ற வழக்கில் ராஜஸ்தான் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு கூறியுள்ளது.
Judicial office is essentially a public trust. Society is, therefore, entitled to expect that a Judge must be a man of high Integrity, honesty and required to have moral vigour, ethical firmness and impervious to corrupt or venial influences. He is required to keep most exacting standards of propriety in judicial conduct. Any conduct which tends to undermine public confidence in the integrity and impartiality of the Court would be deleterious to the efficacy of judicial process. Society, therefore, expects higher standards of conduct and rectitude from a Judge. Unwritten code of conduct is writ large for judicial officers to emulate and imbibe high moral or ethical standards expected of a higher judicial functionary, as wholesome standard of conduct which would generate public confidence, accord dignity to the judicial office and enhance public Image, not only of the Judge but the Court itself. It is, therefore, a basic requirement that a Judge’s official and personal conduct be free from impropriety; the same must be in tune with the highest standard of propriety and probity. The standard of conduct is higher than that expected of a layman and also higher than that expected of an advocate. In fact, even his private life must adhere to high standards or probity and propriety, higher than those deemed acceptable for others. Therefore, the Judge can ill-afford to seek shelter from the fallen standard in the society.
ஜனவரி 2011ல், நீதிபதிகள் முகுந்தம் ஷர்மா மற்றும் அனில் தவே ஆகியோர் அடங்கிய அமர்வு, அருந்ததி அஷோக் வால்வாக்கர் என்ற வழக்கில் கீழ்கண்டவாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.
In a country governed by rule of law, nobody is above law, including judicial officers. In fact, as judicial officers, they have to present a continuous aspect of dignity in every conduct. If the rule of law is to function effectively and efficiently under the aegis of our democratic setup, Judges are expected to, nay, they must nurture an efficient and enlightened judiciary by presenting themselves as a role model. Needless to say, a Judge is constantly under public glaze and society expects higher standards of conduct and rectitude from a Judge. Judicial office, being an office of public trust, the society is entitled to expect that a Judge must be a man of high integrity, honesty and ethical firmness by maintaining the most exacting standards of propriety in every action. Therefore, a judge’s official and personal conduct must be in tune with the highest standard of propriety and probity. Obviously, this standard of conduct is higher than those deemed acceptable or obvious for others.
இந்த அளவுக்கு நீங்கள் சிறப்பாக நடக்கவில்லையென்றாலும், குறைந்தபட்சம் மனிதராகவாவது நடந்து கொள்ளுங்கள். உங்களை ஒப்பிடுகையில், உங்களுக்கு முன்னால் உஸ்ஸு… உஸ்ஸு என்று கத்திக் கொண்டு செல்கிறாரே உங்கள் டவாலி… அவர் உங்களை விட எவ்வளவோ உயர்ந்தவர். தன் சக மனிதர்களை, மனிதர்களாக மதிக்கிறார் அவர்..
நீங்கள்…???????