கனவாகா நதியின் கரையில், மேற்கு விர்ஜீனியாவில் ஆண்டுக்கு 30 ஆயிரம் டன்கள் ஐசோ மீத்தைல் சயனைடை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நிறுவ முடிவு செய்தது யூனியன் கார்பைடு.
ஐந்தடுக்கு தொழிற்சாலை கட்டப்பட்டது. ஒவ்வொரு தளத்திலும் ஐசோ மீத்தைல் சயனைடு தயாரிப்பதற்கான பல்வேறு உபகரணங்கள் பொருத்தப்பட்டன. அந்தத் தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட பைப்புகளின் நீளம், பல மைல்களைத் தாண்டியது. யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மற்ற பிரிவுகளில் வேலை செய்வதை விட ஐசோ மீத்தைல் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றுவதை அந்நிறுவனத்தின் ஊழியர்கள் அதிகம் விரும்பினார்கள். ஏனென்றால், அந்த இடத்தின் அபாயகரமான தன்மையால், கூடுதல் சம்பளம் வழங்கப்பட்டது. யூனியன் கார்பைடின் அனைத்து நிறுவனங்களையும் எடுத்துக் கொண்டால், ஐசோ மீத்தைல் தொழிற்சாலையில்தான் அதிக ஊதியம்.
அந்த யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், உலகில் எந்தத் தொழிற்சாலையிலும் செய்யப்படாதவை. அங்கே ஒவ்வொரு இடத்திலும் தவறுதலாக வாயுக் கசிவு ஏற்பட்டால், அதைத் தடுப்பதற்கான அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அத்தொழிற்சாலைகளின் குழாய்களில், வாயுக் கசிவு ஏற்பட்டால், அந்தக் கசிவை ஆபத்து ஏற்படாத வண்ணம் வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மிக மோசமான ஆசிட் கசிந்தால் கூட உருகாதவண்ணம், அத்தொழிற்சாலையின் எலக்ட்ரிக்கல் சர்க்யூட்டுகள் செய்யப்பட்டிருந்தன. திடீரென்று மின்தடை ஏற்பட்டால், அடுத்த வினாடியே வேலையைத் தொடங்கும் ராட்சத ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டன. ஐசோ மீத்தைல் சயனைடு பயனிக்கும் குழாயைச் சுற்றி மற்றொரு குழாய் பயணித்தது. விஷவாயு கசிந்தால், அந்தச் சுற்றுக்குழாயினுள் இருந்த நைட்ரஜன் வாயு, அந்தக் கசிவை செயலிழக்கச் செய்யும். ஒரு சிறிய மில்லி மீட்டர் அளவு கசிவு ஏற்பட்டால் கூட, உடனடியாக கசிவு இடத்தை அறிவிக்கவும், அபாயச் சங்கு ஒலிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இரும்புத் தளவாடங்ளைத் தயாரிப்பதிலும், உலோகங்களை உருவாக்குவதிலும் உலகிலேயே மிகச் சிறந்த நிறுவனங்களான “இன்டர்நேஷனல் நிக்கல்” மற்றும் “இங்கர்சால் ராண்ட்” ஆகிய இரு நிறுவனங்களில் இருந்து யூனியன் கார்பைடு நிறுவனத் தொழிற்சாலைக்கு உலோகங்கள் வாங்கப்பட்டன.
தொழிற்சாலையின் ஒவ்வொரு மூலையிலும் ஒலிபெருக்கிகளும், சைரன்களும் அமைக்கப்பட்டன. சிறிய தீ விபத்து ஏற்பட்டாலும் உடனடியாக களத்தில் இறங்கும் ரசாயனத் தீயில் அனுபவம் மிக்க, மிகச் சிறந்த தீயணைக்கும் படை தயார் நிலையில் எப்போதும் இருந்தது. தீ விபத்துக்கான அபாயச்சங்கு ஒலித்தால், உடனடியாக தீயை அணைக்க நுரையைத் தெளிக்கும் ஏற்பாடுகள் தொழிற்சாலை முழுக்கச் செய்யப்பட்டிருந்தது. தொழிற்சாலையின் பல்வேறு மூலைகளில், விஷவாயுக் கசிவு ஏற்பட்டால் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தொழிலாளர்களுக்கென பாதுகாப்பு உடைகளும், மூகமூடிகளும், சிவப்பு நிறப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன.
தொழிற்சாலையைச் சுற்றி வரும் காற்றில் வாயுவின் கலப்பினை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை சரிபார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. காற்றில் வாயுவின் கலப்பு அபாய எல்லையைத் தாண்டினால், உடனடியாக அபாயச் சங்கு ஒலிக்க வகை செய்யப்பட்டிருந்தது. ஐசோ மீத்தைல் சயனைடு வைக்கப்பட்டிருக்கும் கொள்வைகளின் வெப்பத்தை கண்காணிக்க தெர்மாமீட்டர்கள் பொருத்தப்பட்டன. அந்தக் கொள்வைகளின் வெப்பம், ஸீரோ டிகிரியைத் தாண்டாதவண்ணம், அந்த கொள்வைகளைச் சுற்றி, க்ளோராபார்ம் சுற்றும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்கத் தொழிற்சாலையில் ஆய்வு நடக்கையில்
அந்தத் தொழிற்சாலையைப் பார்த்தவர்கள், இதைப்போல பாதுகாப்பு ஏற்பாடுகளை யாருமே செய்ய முடியாத என்று வியக்கும் வண்ணம் அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
ஆனால் இத்தனை ஏற்பாடுகளும், மேற்கு விர்ஜினியாவின் சுற்றுச் சூழலை பாதிக்காமல் இருந்ததா, அங்கு குடியிருந்த 2 லட்சத்து 50 ஆயிரம் மக்களின் உடல்நலத்தை கெடுக்காமல் இருந்ததா என்பதுதான் முக்கியக் கேள்வி. தொழிற்சாலை தனது வேலையைத் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன், அந்த இடத்தில் இருந்த அனைத்து வீடுகளுக்கும் ஒரு துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது. அந்தத் துண்டறிக்கையில் “தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. அந்த துண்டறிக்கையில், தொழிற்சாலையில் விபத்து என்ற அறிவிப்பு வந்தால் முதலில் செய்ய வேண்டியது, வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள். அனைத்து கதவுகளையும் சன்னல்களையும் மூடுங்கள். மின் விசிறியையும், குளிர்சாதன வசதியையும் நிறுத்துங்கள். உங்கள் வானொலியில் WCAW என்ற அலைவரிசையும், தொலைக்காட்சியில் WCHS என்ற சேனலையும் பாருங்கள். நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து அறிவிக்கப்படும்.
அத்தொழிற்சாலை தனது உற்பத்தியை தொடங்கியது. ஒரே வாரத்தில், மேற்கு விர்ஜினியாவில் உள்ள சார்ல்ஸ்டன் என்ற நகரில் வசித்த மக்கள், அவித்த முட்டைகோஸின் வாடை காற்றில் வருவதை உணர்ந்தனர். ஐசோ மீத்தைல் சயனைடின் வாடை அவித்த முட்டைகோஸின் வாடைபோல இருக்கும். கனவாஹா நதிக்கரையோரம் அமைந்திருந்த மேற்கு விர்ஜினியா மக்கள், அந்த அவித்த முட்டைகோஸின் வாடைக்கு பழகி விட்டிருந்தனர்.
யூனியன் கார்பைடின் மேற்கு விர்ஜினியா தொழிற்சாலைகளில் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து படித்தீர்கள் அல்லவா ? அந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவுக்கு பயனுள்ளவையாக இருந்தன என்பதைத் தெரிந்து கொள்ள இதைப்படியுங்கள்.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பு (Environmental Protection Agency) என்கிற அமெரிக்க அமைப்பு 1985 பிப்ரவரி மாதம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், 1980 முதல் 1985 வரை, மேற்கு விர்ஜினியா தொழிற்சாலையில் 190 வாயுக் கசிவு விபத்துகள் நடந்துள்ளன. 61 முறை ஐசோ மீத்தைல் சயனைடு வாயு கசிந்துள்ளது. 107 முறை பாஸ்ஜீன் வாயு கசிந்துள்ளது. 22 முறை இரண்டு வாயுவும் சேர்ந்து கசிவு ஏற்பட்டுள்ளது.
மார்ச் 1985ல் 5700 கிலோ மெசிட்டில் ஆக்சைடு என்ற வாயுக் கசிவு ஏற்பட்டது. இக்கசிவால், அப்பகுதியில் இருந்த 24 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
11 ஆகஸ்ட் 1985ல், மித்திலின் க்ளோரைடு மற்றும் அல்டிகார்ப் ஆக்சிமே என்ற வாயுக் கசிவால் 6 ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.
13 ஆகஸ்ட் 1988ல், ஏற்பட்ட தீவிபத்தால், 2000 கிலோ எதிலின் ஆக்சைட் கசிந்தது. இவ்விபத்தில் கனவாஹா நதியில் டெட்ராநாப்தலின் என்ற ரசாயனம் கலந்து, ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்தன.
பிப்ரவரி 1990ல் ஏற்பட்ட மீத்தைல் ஐசோ சயனைடு கசிவில் 7 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அத்தொழிற்சாலையை சுற்றியிருந்த 15 ஆயிரம் மக்கள் வீட்டுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
31 டிசம்பர் 1991ல் தொழிற்சாலைக்குள் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு தொழிலாளி இறந்தார். இதன் காரணமாக இத்தொழிற்சாலைக்கு 1 லட்சத்து 51 ஆயிரம் டாலர்கள் அபராதம் விதிக்கப் பட்டது.
18 ஆகஸ்ட் 1993ல் ஏற்பட்ட வெடி விபத்தில், ஒரு தொழிலாளி மரணமடைந்தார். இரு தொழிலாளிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக 1.6 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடரும்
பழைய பகுதிகளை படிக்க