திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகாவில் உள்ள மருக்கால்குறிச்சி என்ற கிராமத்தில் ஒரு படுகொலையை அரங்கேற்றியுள்ளது காவல்துறை. படுகொலையைச் செய்த காவல் ஆய்வாளரைக் காப்பபாற்ற ஒட்டுமொத்த காவல்துறையும் பகீரத முயற்சி எடுத்து வருகிறது.
மருக்கால்குறிச்சி கிராமத்தில் உள்ள குளத்திலிருந்து வண்டல் மண் எடுப்பார்கள். இந்த வண்டல் மண் செங்கல் செய்வதற்குப் பயன்படுகிறது. இந்த மண் எடுப்பதற்கு ஆண்டுதோறும் ஏலம் விடப்படும். இந்த ஆண்டு இந்த ஏலத்தில் வெற்றி பெற்றவர், அதிமுகவின் ஒன்றியச் செயலாளர் மாணிக்கராஜ். இந்த மாணிக்கராஜ், மருக்கால்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் விஜயக்குமாருக்கு மிக நெருக்கம்.
வண்டல் மண் எடுத்து வந்த மாணிக்கராஜுக்கும், அதே கிராமத்தில் குடியிருக்கும் முருகன் என்பவருக்கும் இந்த வண்டல் மண் எடுப்பது தொடர்பாக பிரச்சினைகள் இருந்து வந்துள்ளன. காவல் ஆய்வாளரோடு தனக்கு இருந்த நெருக்கடியைப் பயன்படுத்தி, மாணிக்கராஜ், முருகனை ஏதாவது ஒரு வழக்கில் கைது செய்யுமாறு விஜயக்குமாரைக் கேட்டுள்ளார். அதன்படி, விஜயக்குமார், முருகனை திங்களன்று சட்டவிரோதமாக மணல் கடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளார்.
இது தொடர்பாக திங்களன்று மாலையில், ஆய்வாளர் விஜயக்குமாருக்கு முருகனின் அண்ணன் வானுமாமலை தொலைபேசியில் பேசியுள்ளார். வானுமாமலை அதே கிராமத்தில் இருந்து தினக்கூலிக்கு ட்ராக்டர் ஓட்டும் வேலை செய்து வருகிறார். அப்போது வானுமாமலை அருகில் இருந்தவர்கள், இந்த தொலைபேசி உரையடல் சிறிது நேரத்தில் சண்டையாக மாறியது என்கின்றனர். ஒரு கட்டத்தில் ஆய்வாளர் உன்னை சுட்டுவிடுவேன் என்றதும், “தைரியம் இருந்தால் நேரா வந்து சுட்றா. வரும்போது யூனிபார்ம கழட்டி வச்சுட்டு வாடா” என்று வானுமாமலை பேசியிள்ளார். அந்த உரையாடல் முடிந்ததும் வானுமாமலை வழக்கம் போல வீடு திரும்பியுள்ளார்.
திங்களன்று இரவு, மருக்கால்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தளவாய் மற்றும் சுப்பையா ஆகிய இரு சகோதரர்கள் குடித்து விட்டு சண்டையிட்டுள்ளனர். ஆய்வாளர் விஜயக்குமார் அவர்கள் இருவரையும் திங்களன்று இரவே கைது செய்துள்ளார். மறுநாள் செவ்வாயன்று மூன்றரை மணிக்கு, கைது செய்யப்பட்ட தளவாய் மற்றும் சுப்பையாவை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு, யூனிபார்ம் போடாமல் மப்டியில், மருக்கால்குறிச்சி கிராமத்தை நோக்கி வந்துள்ளார் விஜயக்குமார்.
மருக்கால் குறிச்சி கிராமத்தின் நுழைவாயிலில் உள்ள கோயில் அந்த ஊர் மக்கள் கூடும் இடம். அதைத்தாண்டியே ஊருக்குள் செல்ல முடியும். அந்த இடத்துக்கு ஜீப் வந்ததும், அந்த கோயிலருகே, மரத்தடியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த 10 பேர் கலைந்து செல்கின்றனர். அப்போது ஜீப்பிலிருந்த தளவாய் மற்றும் சுப்பையாவிடம் விஜயக்குமார், அந்த கூட்டத்தில் வானுமாமலை இருக்கிறாரா என்று கேட்டு, அவரைக் கூப்பிடுமாறு சொல்லியிருக்கிறார்.
இவர்கள் இருவரும் அழைத்ததும், வானுமாமலை ஜீப்பை நோக்கி வந்திருக்கிறார். வானுமாமலை வருவதைப் பார்த்ததும் தன் கைத்துப்பாக்கியை எடுத்த விஜயக்குமார் வானுமாமலையை நோக்கிக் சுட, சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் வானுமாமலை வானுமாமலையை விஜயக்குமார் சுட்ட விஷயம் உடனடியாக ஊருக்குள் பரவி, மக்கள் ஜீப் செல்லும் சாலையை மறித்துள்ளனர். ஆனால் ஜீப் ட்ரைவர் சாமர்த்தியமாக வண்டியை ஓட்டி தப்பித்துச் சென்று விட்டார்.
ஆய்வாளர் விஜயக்குமார்
நடந்த இந்தச் சம்பவத்துக்கு, ஜீப்பில் இருந்த தளவாய் மற்றும் சுப்பையா ஆகியோர் சாட்சிகள். இது தவிரவும், அந்த ஊரில் கோயில் அருகே குழுமியிருந்த நபர்கள் அத்தனை பேரும் இச்சம்பவத்தை நேரில் கண்டுள்ளார்கள்.
இச்சம்பவம் நேற்று மாலை செய்தியாகக் கசிந்தபோது வந்த தகவல், மணல் கடத்ததில் ஈடுபட்ட வானுமாமலை என்ற ரவுடி, என்கவுன்டரில் கொலை என்பதே. அதன் பிறகு விசாரித்தால் மேற்கண்ட விஷயங்கள் வெளிவந்தன.
இன்று இந்து நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில், “முருகன் என்பவர் சட்டவிரோதமாக வண்டல் மண் மற்றும் மணல் கடத்ததில் ஈடுபட்டு வந்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் திங்களன்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சில நபர்கள் அதே ஊரைச் சேர்ந்த பேச்சித்தாய் என்பவர் வீட்டைத் தாக்கியுள்ளனர். இதையடுத்து, பேச்சித்தாய் தந்த புகாரை விசாரிக்க மருக்கால்குறிச்சி கிராமத்துக்கு விசாரணை செய்வதற்காக வந்த இன்ஸ்பெக்டர் விஜயக்குமாரோடு வானுமாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றி, தனது கையில் இருந்த அரிவாளால் வானுமாமலை விஜயக்குமாரை தாக்கியுள்ளார். அப்போது விஜயக்குமாருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தற்காப்புக்காக விஜயக்குமார் தனது துப்பாக்கியை எடுத்துச் சுட்டதில், சம்பவ இடத்திலேயே வானுமாமலை காலமானார்” என்று இந்து நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது கிடைத்த செய்தி, வானுமாமலை மீது முன்தேதியிட்டு ஒரு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரைக் கைது செய்ய காவல்துறையினர் சென்றபோது அவரைத் தாக்கியதால் திருப்பிச் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த கொலைச் சம்பவத்தையொட்டி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதும் சம்பவ இடத்துக்கு வந்த எஸ்.பி விஜயேந்திர பிதாரி, சப் கலெக்டர் ரோகிணி ராமதாஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் செல்வராஜ் ஆகியோர், ஆய்வாளர் விஜயக்குமார் மீது 302ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்ய முடியாது என்றும், நீதிவிசாரணைக்கு பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
நமது நாட்டில் உள்ள குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் போன்ற பல்வேறு சட்டங்களை உருவாக்கியது ஆங்கிலேயர்கள். பெரும்பாலும், அதன் அடிப்படை மாறாமலேயே அவை இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி வகிக்கும், மாவட்ட ஆட்சியர் பதவிக்கு ஏகப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தவேண்டும் என்றால் கூட, வருவாய் அதிகாரி உத்தரவு தரவேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆங்கிலேயர்கள் இப்படி ஐஏஎஸ் அதிகாரிக்கு கூடுதல் அதிகாரத்தையும், காவல்துறை அதிகாரிகளுக்கு குறைந்த அதிகாரத்தையும் தந்திருப்பதற்கு காரணமே, காவல் துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் கொடுத்தால் என்ன நடக்கும் என்பது ஆங்கிலேயருக்குத் தெரியும். அவர்கள் உருவாக்கிய படையல்லவா அது ? அதனால்தான், யாருக்கும் தனிப்பட்ட அதிகாரம் உருவாகி விடக்கூடாது என்று அவ்வாறு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இன்று வரை, மாவட்ட எஸ்.பியின் பணி குறித்த ஆய்வறிக்கையை, மாவட்ட ஆட்சியர்தான் எழுத வேண்டும். இதற்காகத்தான் இவ்வளவு தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது.
விஜயேந்திர பிதாரி
திருநெல்வேலி மாவட்டத்தின் எஸ்.பி விஜயேந்திர பிதாரியின் மனைவி, திருநெல்வேலி மாவட்டத்தின் சப்.கலெக்டர் ரோகிணி ராமதாஸ். நேற்று சம்பவ இடத்தில் பொதுமக்கள் மறியல் செய்ததும், புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும், பிக்னிக் போவது போல சென்று பார்த்து வந்துள்ளனர். சப்.கலெக்டர் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டுமென்றால், ரோகிணி தனது கணவரை மீறி அறிக்கை அளித்து விடுவாரா ?
புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரையும் இப்படி ஒரே மாவட்டத்தில், எதிரெதிர் அதிகாரங்கள் உள்ள பதவிக்கு நியமித்ததை எங்காவது பார்த்திருக்கிறீர்களா ? கொடநாடு கோமலவள்ளியின் ஆட்சியில் எது வேண்டுமானாலும் நடக்கும். அப்படிப்பட்ட “சிறப்பான” ஆட்சி இது.
இந்தப் படுகொலைச் சம்பவம் குறித்து, காவல்துறை தரப்படும் விபரங்களையே எடுத்துக் கொண்டாலும், பேச்சித்தாய் என்ற பெண்மணி கொடுத்த ஒரு புகாரை விசாரிக்க கிராமத்துக்கு செல்லும் காவல்துறை ஆய்வாளர் எதற்காக துப்பாக்கியை எடுத்துச் செல்ல வேண்டும். தமிழக காவல்துறையில், எங்கு சென்றாலும் துப்பாக்கியை எடுத்துச் செல்லும் வழக்கமில்லை.
என்கவுன்டர்களை ஆதரிக்கும் அன்புத்தோழர்கள் இந்தச் சம்பவத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று சவுக்கு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறது.
வேளச்சேரியில் ஐந்து இளைஞர்கள் திரிபாதியின் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டபோது, சவுக்கு அதை எதிர்த்து கட்டுரை எழுதியதும், பல வாசகர்கள், வங்கியை கொள்ளையடிக்கும் நபர்களை சுட்டால் என்ன என்று எழுதியிருந்தார்கள். காவல்துறை நடவடிக்கை சரியே என்று பலர் வாதிட்டார்கள்.
காவல்துறையின் என்கவுன்டர்களை ஆதரித்தால் இதுதான் நடக்கும். யாரை வேண்டுமானாலும் சுட்டுக் கொன்று விட்டு, மோதல் படுகொலை என்று கதை கட்டுவார்கள். இத்தனை பேர் நேரில் பார்த்த ஒரு சம்பவத்துக்கு எப்ஐஆர் போட்டு, இன்ஸ்பெக்டரை கைது செய்திருக்க வேண்டாமா ?
இரண்டு தனி நபர்களில் ஒருவர் மற்றொருவரை சுட்டு, இறந்தால் காவல்துறை செய்யும் நடவடிக்கை என்ன ? 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, சுட்ட நபரை கைது செய்வதுதானே ? 10 மீட்டர் தூரத்தில் வந்த ஒருவனை துப்பாக்கியால் சுட்ட ஒரு ஆய்வாளரை கைது செய்யாமல், நீதி விசாரணை, வருவாய் விசாரணை என்று எப்படிக் காப்பாற்றுகிறது பார்த்தீர்களா ?
இறந்துபோன வானுமாமலைக்கு இரண்டு சிறு குழந்தைகள். அவர் மனைவி தற்போது நான்கு மாத கர்ப்பம். கைக்குழந்தையோடு அவள் கதறும் இந்தக் காட்சியைப் பாருங்கள். அவள் குழந்தைகளைப் பாருங்கள். அவள் கழுத்தில் தங்கம் கூட இல்லை. இவளின் வாழ்க்கைக்கு யார் பொறுப்பு ?
சரி எஸ்.பிதான் நடவடிக்கை எடுக்கமாட்டார். திருநெல்வேலி சரக டிஐஜியாவது வரதராஜுவாவது நடவடிக்கை எடுப்பாரா என்பது சவுக்குக்கு தெரியவில்லை.
இவர்தான் வரதராஜு. இவர் நடவடிக்கை எடுப்பாரா இல்லையா என்பதை சவுக்கு வாசகர்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.
காவல்துறையின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தி, தவறு செய்யும் காவல்துறையினர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டியது ஒரு முதலமைச்சரின் கடமை. ஆனால் கொடநாடு கோமலவள்ளி, கொடநாட்டில் ஏடிஎம்மை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். ஜெயலலிதாவுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுபவர். 1006 இந்துக்களுக்கு திருமணம் செய்து வைத்தால், 188 வருடம் முதலமைச்சராகவே இருக்கலாம் என்று நம்புபவர். அப்படி நம்பும் ஜெயலலிதாவுக்கு, இந்த ஏழைத்தாயின் சாபம் சும்மா விடாது என்பதை மட்டும் ஏன் நம்ப மறுக்கிறார் ? அல்லது இதற்கும் ஏதாவது பரிகார பூஜை செய்து விடலாம் என்று நினைக்கிறாரா ?
ஜெயலலிதா அவர்களே… அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே
செல்வத்தை தேய்க்கும் படை
1 Response
[…] தளத்தில் வந்த இரண்டு கட்டுரைகள். இணைப்பு 1 இணைப்பு 2 . இறந்து போன […]