நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா, மருக்கால்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த வானுமாமலை என்ற இளைஞர் காவல்துறையினரால் கொல்லப்பட்டது குறித்து படித்திருப்பீர்கள். சவுக்கிலும் இது குறித்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படுகொலை குறித்து, ஊடகங்கள் நேற்று வெளியிட்டுள்ள செய்திகளைப் பார்ப்போம்.
தினகரன் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், “நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சி அய்யன் கோயிலைச் சேர்ந்தவர் வானுமாமலை (32) கூலி தொழில் செய்து வருகிறார். இவர் அவ்வப்போது டிராக்டரில் வீடு கட்டும் வேலையும் செய்வதுண்டு. ஒரு வாரத்திற்கு முன்பு நாங்குநேரி பெரிய குளத்தில் மணல் அள்ளியபோது போலீசார் அவரிடம மணல் அள்ள பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் போலீசாருக்கும் வானுமாமலைக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு நான்கேநேரி இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் சாதாரண உடையில், மணல் கடத்தல் குறித்து விசாரிக்க மறுகால்குறிச்சிக்கு சென்றுள்ளார். அங்கு ஊர் அருகே, அய்யன் கோயில் மரத்தடியில் சிலருடன் வானுமாமலை பேசிக்கொண்டிருந்தார். போலீஸ் ஜீப்பைப் பார்த்தவுடன் வானுமாமலையுடன் பேசிக்கொண்டிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். ஆனால் அவர் மட்டும் ஓடாமல் நின்று கொண்டிருந்தார்.
அவருடன் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அது மோதலாகவும் மாறியது. அதேநேரத்தில் கோயிலுக்குள் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு வெளியில் வந்தபோது, வானுமாமலை மட்டும் குப்புற விழுந்து கிடந்தார். இன்ஸ்பெக்டர் போலீஸ் ஜீப்பில் ஏறி சென்று கொண்டிருந்தார். பொதுமக்களில் சிலர் வானுமாமலையைப் பார்த்தபோது அவர் நெஞ்சில் குண்டு காயத்துடன் இறந்து கிடந்தார். அப்போதுதான் போலீசார் சுட்டதில் அவர் இறந்தது தெரிய வந்தது.”
தினகரன் செய்தி ஓரளவுக்கு நியாயமாக, உண்மையைச் சார்ந்து அமைந்துள்ளது. ஆனால் தினகரனின் அரசியல் சார்பு நிலையைப் பார்க்கையில் திமுக ஆட்சியில் இருந்தால் இப்படிச் செய்தியை தினகரன் வெளியிட்டிருக்குமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
திமுக ஆட்சியில் இப்படி நடந்திருந்தால் தினகரனின் தலைப்பு “மணல் கொள்ளையன் சுட்டுக் கொலை” என்று இருந்திருக்கும். ”நாங்குநேரியைச் சேர்ந்த வானுமாமலை என்பவன், பல மாதங்களாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் அவனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினருக்கு வானுமாமலை மறுக்கால்குறிச்சியில் பதுங்கியிருப்பது குறித்து ரகசிய தகவல் வந்தது. வானுமாமலையை கைது செய்ய இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் சென்றபோது, அவரை அரிவாளாளால் வானுமாமலை தாக்கியதில், விஜயக்குமாருக்கு பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. பாதுகாப்புக்காக தன் கைத்துப்பாக்கியை எடுத்து விஜயக்குமார் சுட்டபோது சம்பவ இடத்திலேயே வானுமாமலை உயிரிழந்தார். இது குறித்து, ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றே தினகரன் செய்தி வெளியிட்டிருக்கும்.
தினத்தந்தியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். தினத்தந்தியில் நேற்று வந்த செய்தி, “நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த நாற்கர சாலை ஓரத்தில் மறுகால்குறிச்சி கிராமம் உள்ளது. இந்த ஊரைச்சேர்ந்த தங்க ஆறுமுகம் என்பவருடைய மகன் முருகன் (வயது 29) ஒரு வழக்கு தொடர்பாக முருகனை நாங்குநேரி போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் முருகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி இன்னும் சிலரிடம் விசாரணை நடத்துவதற்காக மறுகால்குறிச்சி கிராமத்துக்கு நேற்று மாலை நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் தலைமையில் போலீசார் சென்றனர்.
அப்போது ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள அய்யன்கோயில் பகுதியில் சிலர் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அங்கு முருகனின் அண்ணன் வானுமாமலையும் (வயது 30) நின்று கொண்டிருந்தார். ஏற்கனவே தன்னுடைய தம்பியை கைது செய்ததால் போலீசார் மீது அவர் ஆத்திரத்தில் இருந்தார்.
அந்த நேரத்தில் போலீசாரும் அங்கு வந்து, கும்பலாக நின்றவர்களிடம் விசாரணை நடத்தினர். முருகன் மீது கூறப்பட்டுள்ள புகார்கள் குறித்து அவருடைய அண்ணன் வானுமாமலையிடம் விசாரணை நடந்தது. போலீசாரின் கேள்விகளுக்கு வானுமாமலை சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் பலி
சற்று நேரத்தில் போலீசாருக்கும் வானுமமாலை உட்பட அங்கு நின்றவர்களுக்கும் இடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றியதால் போலீசார் அங்கிருந்து அவர்களை கலைந்து போகும்படி கூறினர். ஆனால் அவர்கள் போலீசார் மீது தாக்க முயற்சித்தனர்.
அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார், தற்காப்புக்காக கைத்துப்பாக்கியால் சுட்டார். குண்டு வானமாமலை நெஞ்சில் பாய்ந்தது. அவர் அவர் அந்த இடத்திலேயே சுருண்டு கீழே விழுந்தார். மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர்.
குண்டுகாயம் அடைந்த வானமாமலை சம்பவ இடத்திலேயே பலியானார்.
இறுதியாக..
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மணல் கடத்தலுக்கும், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கிறதா ? என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது.”
இந்த தினத்தந்தி செய்தியில், காவல்துறையினரின் தரப்பைத் தவிர ஏதாவது செய்தி இருக்கிறதா ? காவல்துறையினர் சொல்லியதை அப்படியே ஒரு கமா ஃபுல்ஸ்டாப் மாறாமல் ஒப்பிக்க, தினத்தந்தி காவல்துறையின் செய்திக் குறிப்பேடா ? ஆனால், தினத்தந்தியின் வரலாறே இதுதான். காவல்துறையினர் தரும் செய்திகளை அப்படியே, கமா, ஃபுல்ஸ்டாப் மாறாமல் வெளியிடுவதுதான் தினத்தந்தி செய்தியாளர்களின் வேலை. இதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. கள்ளத்தொடர்பு, பாலியல் ரீதியான குற்றங்கள், ஆபாசமான விஷயங்கள் குறித்து தினத்தந்தியில் எப்படி விரிவாகச் செய்திகள் வரும் என்பது வாசகர்கள் அறிந்ததே. இப்படி விரிவான செய்திகளை வெளியிட காவல்துறையின் உதவி தேவையல்லவா ? ஒரு கள்ளத்தொடர்பு காரணமாக ஒரு கொலை நடந்திருந்தால், “கொலைசெய்யப்பட்டவரோடு xxxx என்பவர் நீண்டகாலமாகவே கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். கணவர் வெளியூர் செல்கையில் இவர்கள் இருவரும் சல்லாபமாக இருந்து வந்துள்ளனர்” என்பது போன்ற செய்திகளை காவல்துறையினர்தானே தர முடியும் ? குற்றவாளிகளிடம், காவல்துறையினர் அடித்து, சித்திரவதை செய்து, துன்புறுத்தி வாங்கும் பொய் வாக்குமூலங்களை அப்படியே வெளியிடுவதுதான் தினத்தந்தியின் ஊடக தர்மம்.
நடுநிலையாக செய்திகளை வெளியிடும் தினமணியும், இதற்கு விதிவிலக்கில்லாமலேயே செய்தி வெளியிட்டிருக்கிறது.
தினமணி செய்தியில், “நான்குனேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி அய்யன்கோவில் தெருவைச் சேர்ந்த தங்க ஆறுமுகம் மகன்கள் வானுமாமலை (32) முருகன் (29). இருவரும் நான்குனேரி பெரியகுளத்தில் அனுமதியின்றி கரம்பை மண்ணை அள்ளி செங்கல் சூளைகளுக்கு விற்றுவந்தனர். இந்நிலையில் மணல் கடத்தல் தொடர்பாக முருகனை நான்குனேரி காவல்நிலைய ஆய்வாளர் விஜயக்குமார் திங்கள்கிழமை கைது செய்தார். இது தொடர்பாக வானுமாமலையை கைது செய்வதற்காக ஆய்வாளர் விஜயக்குமார் மற்றும் போலீசார் செவ்வாய்க்கிழமை மறுகால்குறிச்சிக்கு சென்றனர்.
அங்குள்ள அய்யன்கோவிலில் அமர்ந்து வானுமாமலையும் சிலரும் பேசிக்கொண்டிருந்தனராம். போலீசாரைப் பார்த்ததும் மற்றவர்கள் ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது. அங்கேயே நின்றுகொண்டிருந்த வானுமாமலையை போலீசார் கைது செய்ய நெருங்கியுள்ளனர். அப்போது, ஆய்வாளருக்கும் வானுமாமலைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். அந்த நேரத்தில் மறைவான இடத்தில் இருந்து அரிவாளோடு சிலர் ஓடிவந்தனராம். அவர்களை ஆய்வாளர் எச்சரித்துள்ளார். அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் தொடர்ந்து நெருங்கியதால், வானுமாமலையை ஆய்வாளர் விஜயக்குமார் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. (யாரோ சிலர் அரிவாளோடு ஓடி வந்தால், வானுமாமலையை ஏன் சுட வேண்டும். தினமணி நிருபர் தான் என்ன எழுதுகிறோம் என்பதை தெரிந்துதான் எழுதினாரா என்று தெரியவில்லை) இதில் பலத்த காயமடைந்த வானுமாமலை சம்பவ இடத்திலேயே இறந்தார்”
தினமலரைப் பற்றிச் சொல்லவா வேண்டும் ?
“நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியிலுள்ள பெரியகுளத்தில், அனுமதியின்றி மண் அள்ளுவது தொடர்பாக இரு கோஷ்டிகளுக்கிடையே பிரச்சினை இருந்து வருகிறது.
இவ்வழக்கில் அதே கோஷ்டியைச் சேர்ந்த தங்க ஆறுமுகம் மகன் முருகனை, நாங்குநேரி போலீசார் சில நாட்களுக்குமுன் கைது செய்தனர். அப்போது, அவரது அண்ணன் வானமாமலை 32, தப்பியோடி விட்டார்.
அவரைப் பிடிப்பதற்காக நேற்று மாலை 3.30 மணிக்கு, நாங்குநேரி இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் போலீசாருடன் சென்றார். வானமாமலை, இன்ஸ்பெக்டரை அரிவாளால் தாக்கத் தொடங்கினார். இன்ஸ்பெக்டர் விஜயக்குமார், துப்பாக்கியால் வானமாமலையை நோக்கிச் சுட்டார். இதில் வானமாமலை அங்கேயே பலியானார்.”
தினமலர், இறந்துபோன வானமாமலைக்கு மாவோயிஸ்டுகளோடு தொடர்பு இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது என்று சொல்லாமல் விட்டதுதான் ஆச்சர்யம்.
தமிழ் நாளேடுகள்தான் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்கின்றன என்றால், ஆங்கில நாளேடுகள், தமிழ் நாளேடுகளைத் தூக்கிச் சாப்பிட்டு விடுகின்றன.
டெக்கான் க்ரானிக்கிள் நாளேடு…
Sand Miner shot dead in police ‘encounter’
“An alleged illegal sand miner was killed in a police encounter near Nanguneri, in Tirunelveli district, on Tuesday.
Vanamamalai (32), son of Thanga Arumugam of Marugalkurichi, near Nanguneri, who faced several cases, including robbery and murder, challenged Nanguneri inspector Vijayakumar, who, along with two constables, went to interrogate him about a clash involving Vanamamalai and his rival group in connection with illegal sand mining from the local village tank, two days ago.
Vanamamalai refused to come for police enquiry and reportedly attacked the inspector with a sickle, injuring his hand. Mr Vijayakumar then opened fire, hitting Vanamamalai in the neck.
The police refrained from disclosing the details of the encounter by just saying that their immediate objective was to disperse the Marugalkurichi villagers who blocked the busy Tirunelveli-Kanyakumari national highway demanding action against Mr Vijayakumar.
According to the villagers, Vanamamalai was shot dead when he was chatting with his friends at Ayyan temple. His relatives, who had his body, asked how they could have got the body if it was an encounter.
Around 500 policemen, including special task force personnel, have been deployed at the spot.”
இரண்டாவது பத்தியைப் பாருங்கள். தங்க ஆறுமுகம் என்பவரின் மகன் வானமாமலை (32) மீது திருட்டு, கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் நாங்குனேரி ஆய்வாளர் விஜயக்குமார் மற்றும் இரண்டு காவலர்களோடு, ஊர் குளத்தில் மண் எடுப்பது சம்பந்தமாக வானமாமலைக்கும் அவரது எதிர் கோஷ்டிக்கும் இரண்டு நாட்களுக்கு முன்னால் நடந்த மோதல் தொடர்பாக விசாரிக்கச் சென்றபோது, ஆய்வாளர் விஜயக்குமாருக்கு சவால் விடுத்துள்ளார்.
வானமாமலை விசாரணைக்கு வர மறுத்து இன்ஸ்பெக்டரை அரிவளால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் இன்ஸ்பெக்டருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதன் பிறகு விஜயக்குமார் துப்பாக்கியால் சுட்டதில், வானமாமலைக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.
கன்னியாக்குமரி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தும் மக்களை அப்புறப்படுத்துவதே முதல் பணி என்பதால் காவல்துறையினர் என்கவுன்டர் தொடர்பாக எந்த விபரங்களையும் தர மறுத்து விட்டனர்.
ஊரில் தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது வானமாமலை சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அந்தக் கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர்.”
போராட்டம் நடத்தும் மக்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதால் காவல்துறையினர் விபரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர் என்றால், வானமாமலை மீது திருட்டு, கொலை உட்பட பல்வேறு வழக்குகள் இருந்தன என்பதை டெக்கான் கிரானிக்கிளின் இந்த நிருபர் எப்படிக் கண்டுபிடித்தார் ? இன்ஸ்பெக்டர் விஜயக்குமாருக்கு கையில் காயம் ஏற்பட்டது என்பதை இந்த நிருபருக்கு யார் சொன்னது ?
இந்த நிருபரின் பெயர் அருளொளி. அருளொளி என்று வைப்பதற்கு பதிலாக இருட்டுச்சாமி என்று பெயரை மாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் எழுதிய எழுத்தில் ஒளியை விட இருளே நிறைந்திருக்கிறது.
இந்த அருளொளி பத்திரிக்கையாளர் வேலைபார்ப்பதை விட, திருநெல்வேலி சந்தையில் புளி வியாபாரம் செய்யலாம். இறந்து போன ஒரு மனிதனின் மேல் கொலை வழக்கு இருக்கிறது என்று எப்படி ஒரு பச்சைப் பொய்யை இந்த நிருபரால் சொல்ல முடிந்தது ?
டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான் நிருபரை தூக்கிச் சாப்பிட்டு விடுவார் போலிருக்கிறது.
Wanted man gunned down in Tirunelveli
Police claim Vanamamalai tried to Attack Inspector
A 35 year old man was shot dead by police near Nanguneri in Tirunelveli district on Tuesday evening when he allegedly attempted to attack an inspector with a sickle.
Police said Vanamamalai was wanted in connection with a case of illegally desilting a public tank. Besides, he had also allegedly slit the tyres of a tractor owned by his rival group and was chasing them when police intercepted him. The incident happened at Marukalkurichi, about 30 km from Tirunelveli.
நாங்குநேரி அருகே திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு 35 வயது நபர் காவல் ஆய்வாளரை தாக்க முயற்சித்தபோது காவல்துறையினரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வானமாமலை பொதுக்குளத்தில் இருந்து சட்டவிரோதமாக மண் அள்ள முயற்சித்த வழக்கில் தேடப்பட்டு வந்தார். இது தவிரவும், அவருக்கு எதிரான கோஷ்டிக்கு சொந்தமான ட்ராக்டரின் டயரை சேதப்படுத்தி, எதிர் கோஷ்டியினரை தாக்க முயற்சித்த போது காவல்துறையினர் அவரை தடுத்ததாக தெரிகிறது. திருநெல்வேலியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நாங்குநேரி.
“Nanguneri inspector Vijayakumar and two other police constables went in search of Vanamakalai. As they spotted him, the inspector asked him to surrender. But Vanamamalai attempted to attack the inspector with a sickle. Since the inspector was seated inside the police vehicle, he escaped. When Vanamamalai charged again at him, Vijayakumar opened fire” said Tirunelveli DIG V Varadaraju.
இது குறித்து பேசிய திருநெல்வேலி டிஐஜி வரதராஜு, பேசியபோது “நாங்குநேரி ஆய்வாளர் விஜயக்குமார் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் வானமாமலையைத் தேடி சென்றுள்ளனர். வானமாமலையைப் பார்த்ததும் சரண்டர் ஆகமாறு கேட்டுள்ளனர். ஆனால் வானமாமலை சரண்டர் ஆகாமல், இன்ஸ்பெக்டரை அரிவாளார் வெட்ட முயன்றுள்ளார். இன்ஸ்பெக்டர் போலீஸ் வாகனத்தினுள் அமர்ந்திருந்ததால் அவர் தப்பித்து விட்டார். மீண்டும் வானமாமலை தாக்க முயற்சித்தபோது விஜயக்குமார் துப்பாக்கியால் சுட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
He was hit in the chest and died on the spot. His accomplice Ayyappan, who was also involved in the illegal desilting activity and had allegedly attacked their rival gang, managed to escape. Police have formed a special team to nab him.
நெஞ்சில் குண்டுக் காயம் பாய்ந்த வானமாமலை சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரோடு மணல் கடத்ததில் ஈடுபட்டு எதிர்கோஷ்டியை தாக்கிய அவரது கூட்டாளி தப்பித்து சென்று விட்டார். அவரைப் பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர்.
Police said Vanamamalai and Ayyappan were in an inebriated state and had moments before the encounter damaged the tyres of tractors owned by Charles, Thalavai and Dharmaraj of the same village. Vanamamalai had nursed enmity with the trio for several years over desilting Periyakulam, an irrigation tank in the village. The silt was used for construction as well as in brick kilns.
காவல்துறையால் சுடப்படும் முன், வானமாமலையும், அய்யப்பனும் குடிபோதையில் இருந்ததாகவும், அதே கிராமத்தைச் சேர்ந்த சார்லஸ் மற்றும் தளவாய் மற்றும் தர்மராஜ் ஆகியோரின் ட்ராக்டர்களின் டயர்களை சேதப்படுத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். வானமாமலைக்கும், சார்லஸ், தளவாய் மற்றும் தர்மராஜுக்கும் பல ஆண்டுகளாக பெரியகுளத்தில் மண் எடுப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. அக்குளத்தில் எடுக்கப்படும் மண் செங்கல் சூளையில் பயன்படுத்தப்படுகிறது.
Two days ago, Vanamamalai’s brother Murugan was arrested for desilting the same tank. However Vanamamalai managed to escape. He suspected that Thalavai was behind the arrest and damaged the properties in his house. “When he chased Thalavai with a sickle in had, villagers telephoned police”, said an official.
இரண்டு நாட்களுக்கு முன்பாக வானமாமலையின் சகோதரர் முருகன், அந்தக் குளத்தில் சட்டவிரோதமாக மண் எடுத்தற்காக கைது செய்யப்பட்டார். அப்போது வானமாமலை தப்பி விட்டார். தன் சகோதரரின் கைதுக்கு தளவாய்தான் காரணம் என்று நினைத்த வானமாமலை, தளவாயின் வீட்டையும் அவர் சொத்துக்களையும் சேதப்படுத்தினார். தளவாயை வெட்டுவதற்காக அரிவாளோடு தளவாயை வானமாமலை துரத்தியரைப் பார்த்த கிராமத்தினர், காவல்துறைக்கு தகவல் அளித்தனர் என்று கூறினார் ஒரு காவல்துறை அதிகாரி. (எவண்டா அந்த அதிகாரி ?)
இந்து நாளேட்டின் செய்தியாளர் பெயர் சுதாகர். இவர் எப்போதுமே காவல்துறை சொல்வதை அப்படியே ஒப்பிக்கும் வழக்கம் கொண்டவர் என்று கூறப்படுகிறது.
அவரின் கதை என்னவென்றால்
Tension after police gun down brother of illicit sand miner
The police said that T. Murugan (25) of Marukaalkurichi was involved in illicit clay and sand mining for the past several months and cases had been registered against him. The police nabbed him on Monday night from his residence.
மருக்கால்குறிச்சியைச் சேர்ந்த முருகன் (25) பல மாதங்களாக சட்டவிரோதமாக களிமண் மற்றும் மண் அள்ளும் வழக்கம் கொண்டவர். அவரை திங்களன்று இரவு அவர் வீட்டிலிருந்து காவல்துறையினர் கைது செய்தனர்.
Soon, miscreants attacked the house of Petchithaai of Marukaalkurichi, who she filed a police complaint. When a police team, led by Nanguneri Inspector A. Vijayakumar, went to Marukaalkurichi for an enquiry on Petchithaai’s petition, Murugan’s elder brother T. Vanamamalai (30) entered into a heated argument with the Inspector.
இதைத் தொடர்ந்து மருக்கால்குறிச்சியைச் சேர்ந்த பேச்சித்தாய் என்பவரின் வீடு தாக்கப்பட்டது. அவர் காவல்துறையில் புகார் செய்தார். பேச்சித்தாயின் மனு தொடர்பாக விசாரிப்பதற்காக மருக்கால்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஏ.விஜயக்குமார் சென்றபோது, முருகனின் சகோதரர் டி.வானமாமலை (30) இன்ஸ்பெக்டரோடு ஆவேசமான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
He allegedly attacked the police officer with a sickle. Mr. Vijayakumar, who suffered an injury on his right hand, fired from his service pistol in self-defence. Vanamamalai was killed on the spot around 3.30 p.m.
அவர் ஒரு அரிவாளால் விஜயக்குமாரை தாக்கியபோது அவரது வலதுகையில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து “தற்காப்புக்காக” சுட்டதில் வானமாமலை சம்பவ இடத்திலேயே பிற்பகல் 3.30 மணிக்கு இறந்தார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் செய்தியாளர், ஒரு செய்தியாளர் எப்படி செய்தி கொடுக்கவேண்டுமோ அப்படிக் கொடுத்துள்ளார்.
Cop Guns Down Nellai Sand Miner
Police defends firing; murder, cry villagers
A young man with no criminal history was gunned down by an Inspector of Police in Nanguneri in Tirunelveli district under questionable circumstances on Tuesday afternoon. While villagers of Marugalkurichi, where the 32-year old victim Vanamamalai was shot dead, alleged that he was killed in cold blood by the Inspector after minor provocation, police claimed that the officer had acted in self-defence.
எவ்விதமான குற்றப்பின்னணியும் இல்லாத ஒரு இளைஞன் ஒரு காவல்துறை ஆய்வாளரால் சந்தேகத்திற்கிடமான வகையில் செவ்வாய் மதியம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். (தொடக்கமே எப்படி இருக்கிறது பாருங்கள்)
Vanamamalai and his younger brother Murugan hailing from Marugalkurichi were involving in small time sand mining from the Periya Kulam (Big Tank) at Nanguneri in their tractor and selling it to local brick kilns. It is alleged that the Nanguneri police on Sunday booked Murugan for mining excess sand and arrested him. Angered, Vanamamalai allegedly called the Nanguneri Inspector Vijayakumar over phone and abused him leading to a verbal duel on Monday.
மருக்கால்குறிச்சியைச் சேர்ந்த வானமாமலை மற்றும் அவரது இளைய சகோதரர் முருகன் ஆகிய இருவரும், நாங்குநேரியில் உள்ள பெரியகுளத்தில் மண் எடுத்து செங்கற் சூளைகளுக்கு விற்கும் தொழிலை சிறிய அளவில் செய்து கொண்டிருந்தனர். கூடுதலாக மண் எடுத்த குற்றச்சாட்டில் முருகன் கைது செய்யப்பட்டார். ஆத்திரமடைந்த வானமாமலை திங்கட்கிழமை நாங்குநேரி ஆய்வாளர் விஜயக்குமாரை போனில் அழைத்து திட்டியதாகவும், இதனால் கடும் வாக்குவாதம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
On Tuesday afternoon Vijayakumar came to the village in mufti in a police vehicle in search of Vanamamalai. While other villagers fled on seeing the police vehicle, an altercation ensued between Vanamamalai and the Inspector during which the latter reportedly opened fire killing the sand miner on the spot. The victim is survived by wife and two children.
செவ்வாய் மதியம் விஜயக்குமார் யூனிபார்ம் இல்லாமல் மப்டியில் போலீஸ் வாகனத்தில் அந்த கிராமத்துக்கு வானமாமலையைத் தேடி வந்துள்ளார். காவல்துறை வாகனத்தைப் பார்த்ததும் மற்ற கிராமத்தினர் சிதறி ஓடினாலும், வானமாமலை மட்டும் இன்ஸ்பெக்டரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அதன் முடிவில் விஜயக்குமார் அவரை சுட்டு அவர் சம்பவ இடத்திலயே இறந்ததாக கூறப்படுகிறது. இறந்த வானமாமலைக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
A senior police officer said that the Inspector had gone to the Marugalkurichi village to probe a complaint from a woman that two persons had attacked her. “Around the same time, he received that a call that someone was creating nuisance in the village. On seeing the Inspector, everyone fled but two persons including Vanamamalai started chasing him with sickles. The Inspector had to open fire in self-defence during which Vanamamalai died,” the officer said. A judicial enquiry had been ordered and police have also registered a case.
ஒரு மூத்த போலீஸ் அதிகாரி இது குறித்துப் பேசியபோது, ஒரு பெண்மணி தன்னை இரண்டு பேர்கள் தாக்கியதாகக் கொடுத்த புகாரை விசாரிப்பதற்காக மருக்கால் குறிச்சி கிராமத்துக்கு விஜயக்குமார் சென்றார். இன்ஸ்பெக்டரைப் பார்த்தவுடன், இரண்டு பேர்கள் அரிவாளோடு இன்ஸ்பெக்டரை துரத்தினார்கள். அவர்களில் ஒருவர் வானமாமலை. தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக இன்ஸ்பெக்டர் சுட்டதில் வானமாமலை இறந்து விட்டார் என்று கூறினார். இது குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுதான் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வந்த செய்தி. இந்தச் செய்தியை பார்த்தீர்கள் என்றால், பொதுமக்கள் கூறிய செய்தியும் உள்ளது. காவல்துறையினர் கூறிய செய்தியும் உள்ளது. ஒரு செய்தியாளர் இரு தரப்பினர் கூறுவதையும் கேட்டு, இரண்டையும் பதிவு செய்ய வேண்டும். செய்தியை படிக்கும் பொதுமக்கள் இரண்டு தரப்பு விஷயங்களையும் அறிந்து கொள்வார்கள். இந்தச் செய்தியை சிறப்பாக வெளியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் செய்தியாளர் அப்துல் ரபிக்கு சவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
இதுதான் நேற்றைய நாளேடுகளில் இந்தப் படுகொலை குறித்து வந்த செய்திகள்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் தவிர்த்து, மற்ற நாளேடுகள் அத்தனையும் செய்தி வெளியிட்ட தன்மையைப் பார்த்தீர்களா ? சென்னையில் உட்கார்ந்து கொண்டு ஒரு இணையதளத்தை நடத்தும் நபரால் சேகரிக்க முடிந்த செய்திகளைக் கூட, பெரிய ஊடகங்களில் பணியாற்றும் நபர்கள் சேகரிக்காமல், காவல்துறையினரின் புரட்டுவாதத்தை மட்டும் அச்சில் ஏற்றுகிறார்கள் என்றால் இவர்கெல்லாம் நடுநிலையான செய்தியாளர்களா ? இந்தச் செய்திகளை அப்படியே அச்சில் ஏற்றும் இந்த ஊடகங்களின் ஆசிரியர்களின் தங்கள் பணியை எப்படி சிரத்தையாக மேற்கொள்கிறார்கள் பார்த்தீர்களா ?
நாளேடுகளில் வேலைபார்க்கும் நிருபர்களும் சரி, செய்தி ஆசிரியர்களும் சரி. ஒரு செய்தியில் உண்மைத்தன்மை என்ன என்பதை சரிபார்க்க எள்ளளவும் முயல்வதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இன்று ஒரு சம்பவம் நடந்தால், அது நாளை செய்தித்தாளில் வரவேண்டும். புகைப்படக்காரரை விரட்டி புகைப்படம் வாங்க வேண்டும். சம்பவ இடத்துக்குக் கூட செல்லாமல், இருந்த இடத்திலேயே தொலைபேசி வழியாக காவல்துறையினரிடம் செய்தியை வாங்கி, மனம்போன போக்கில் ஒரு செய்தியை அடித்து அனுப்ப, அது அப்படியே மறுநாள் அச்சேறுகிறது. அதைப்படிக்கும் அப்பாவிப் பொதுமக்கள், இறந்துபோனவன் ஒரு மோசமான மணல் கடத்தல் குற்றவாளி, அவனைச் சுட்டது சரிதான். “இப்படி என்கவுன்டர் பண்ணுனாத்தான் சார் சொசைட்டி நல்லா இருக்கும்” என்று வசனம் பேசிவிட்டுச் செல்வதற்கு இந்தச் செய்திகள் வழிவகுக்கின்றன.
எல்லா ஊடகங்களிலும் க்ரைம் பீட் பார்க்கும் நிருபர்களுக்கு எப்போதுமே மவுசு ஜாஸ்தி. க்ரைம் பீட் பார்க்கும் நிருபர்களைப் பார்த்தீர்கள் என்றாலே ஒரு தனி மிடுக்கோடு அலைவார்கள். அதற்குக் காரணம் என்னவென்றால் அவர்களுக்கு காவல்துறை அதிகாரிகளோடு ஏற்படும் தொடர்பு. பெரிய ஊடகத்தில் க்ரைம் பீட் பார்க்கும் நிருபர்களை, கமிஷனர், கூடுதல் கமிஷனர், இணை கமிஷனர் போன்ற அதிகாரிகள் அழைத்துப் பேசுவார்கள். தங்களைப் பற்றி நல்ல முறையில் செய்திகளைப் போடுமாறு கேட்டுக் கொள்வார்கள். இந்த பழக்கவழக்கத்தினால், நிருபர்கள் பணியாற்றும் ஊடக முதலாளிகளுக்கு காவல்துறையில் ஏதாவது வேலை நடக்க வேண்டுமென்றால், க்ரைம் பீட் பார்க்கும் நிருபர்களை அந்த வேலைகளை முடித்துக் கொடுக்குமாறு கேட்பார்கள். அந்த நிருபர்களும் அதிகாரிகளைச் சந்தித்து, தங்கள் முதலாளிகளுக்குத் தேவையான வேலைகளை முடித்துக் கொடுப்பார்கள். இதனால், முதலாளியிடமும் நல்ல பெயர். அதிகாரிகளிடமும் நல்ல பெயர். சிறிது காலத்திற்குப் பிறகு, தான் ஒரு ப்ரோக்கரோக மாறி விட்டோம் என்பது தெரியாமலேயே அந்த நிருபர்கள் ப்ரோக்கர் வேலை பார்க்கத் தொடங்கி விடுவார்கள். முதலாளிக்காக காரியம் செய்து கொடுத்த காவல்துறை அதிகாரி சும்மா இருப்பாரா ? பதிலுக்கு தன்னைப் பற்றி ஆகா ஓஹோ என்று புகழ்ந்து செய்தி வெளியிடுமாறும், தனக்குப் பிடிக்காத அதிகாரிகளைப் பற்றி தவறாக செய்தி வெளியிடுமாறும், தன்னைப் பற்றி தவறாக செய்தி வந்திருந்தால், அது உண்மையாக இருந்தால் கூட, அதற்கு மறுப்பு வெளியிடுமாறும் ப்ரோக்கராக மாறிய நிருபரை வற்புறுத்துவார். காவல்துறை அதிகாரியின் உறவு போய்விடுமே என்று அந்த நிருபரும் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவ்வாறு காவல்துறை அதிகாரி விரும்பியவாறே செய்தியை வெளியிடச் செய்வார். இது ஊடக முதலாளிகளுக்கும், நிருபர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே நடக்கும் வியாபாரம். இந்த வியாபாரத்துக்கு பலியாவது உண்மை.
ஒரு வேளை க்ரைம் பீட் பார்க்கும் நிருபர், அதிகாரிகளுக்கு ஜால்ரா அடிக்கவில்லையென்றால், அந்த நிருபருக்கு மட்டும் செய்தி கிடைக்கவிடாமல் செய்வார்கள். ஒரு முக்கிய வழக்கில், புகைப்படமோ, செய்தியோ கிடைக்காமல் செய்து விடுவார்கள். அந்த நிருபர் பணியாற்றும் ஊடகத்தின் போட்டி ஊடகத்தில் செய்தி வந்துவிட்டால், செய்தி வழங்காமல் இருந்த நிருபருக்கு மண்டகப்படிதான். அதையும் மீறி ஒரு நிருபர் காவல் துறை அதிகாரிகளுக்கு ஜால்ரா போடாமல் இருந்தார்களென்றால், சம்பந்தப்பட்ட ஊடகத்தின் முதலாளியிடம் பேசி, அந்த நிருபரை க்ரைம் பீட்டிலிருந்து மாற்றி, அரசு செய்திக்குறிப்புகளை மொழிபெயர்க்கும் வேலையை கொடுத்து விடுவார்கள். க்ரைம் பீட்டில் பணியாற்றிய சில நேர்மையான பத்திரிக்கையாளர்கள் இது போன்ற நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
க்ரைம் பீட் பார்க்கும் பத்திரிக்கையாளர்கள் இது போல காவல்துறை அதிகாரிகளுக்கு ப்ரோக்கர்களாக மாற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒரு பத்திரிக்கையாளராக உங்கள் கடமையை நீங்கள் நேர்மையாகச் செய்யுங்கள். செய்திகள் உங்களைத் தேடி வரும். உண்மை தேவதை உங்களை அரவணைப்பாள். இந்த ஊழல் அதிகாரிகள் உங்களைக் கண்டால் அஞ்சுவார்கள். நீங்கள் அதிகாரிகளை பயன்படுத்துங்கள். உங்களை அதிகாரிகள் பயன்படுத்த விடாதீர்கள். அவர்களுக்குத்தான் பத்திரிக்கையாளர்கள் தேவை.
மேலும் க்ரைம் பீட் பார்க்கும் சில பத்திரிக்கையாளர்கள், தங்களை அந்த காவல்துறை அதிகாரியின் விசுவாசியாகவே மாற்றிக் கொள்கிறார்கள். ஒரு கடவுனின் தரிசனம் கிடைத்த பக்தனாக மாறி விடுகின்றனர். ஆயிரம்தான் நடந்தாலும், அவர்தான் அதிகாரி. நீங்கள் பத்திரிக்கையாளர் என்பதை மறந்து விடாதீர்கள். உங்களை வசியப்படுத்துவதற்காக, ஒரு காவல்துறை அதிகாரி உங்களை சிகப்பு விளக்கு சுழலும் காரில் ஏற்றிச் செல்லலாம். இன்ஸ்பெக்டர்களை உங்களுக்கு சல்யூட் அடிக்கச் சொல்லலாம். இந்த உபசாரமெல்லாம், நீங்கள் பணியாற்றும் பத்திரிக்கையில் வகிக்கும் பதவிக்காக என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் அந்தப் பத்திரிக்கையில் பணியாற்றவில்லை என்பதை சொல்லுங்களேன். அதே உபச்சாரத்தை அந்த அதிகாரி உங்களுக்கு அளித்தால் ஆயிரம் பொற்காசுகள் வழங்கப்படும்.
இந்து பத்திரிக்கை என்றால் தனி மதிப்பு. இந்து விஜயக்குமார் வந்திருக்கிறார் என்றால் திரிபாதி அவரைச் சந்திக்க உடனே அனுமதி கொடுப்பார். இவரைப் போல காவல்துறை அதிகாரிகளுக்கு விசுவாசமான நபரைப் பார்க்கவே முடியாது. ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் சேர்த்து, டிஜிபி அலுவலகத்தில், காவல் நிலையத்தில் உள்ளது போல ஒரு ரைட்டர் பதவி ஏற்படுத்தினால், அந்தப் பதவிக்கு பொறுத்தமான நபர் விஜயக்குமார். அப்படி ஒரு விசுவாசம் அவருக்கு காவல்துறையினர் மீது. டைம்ஸ் ஆப் இந்தியாவிலும் இதே நிலைதான். அங்கே ஒரு நெகட்டீவ் செய்தி வந்தால், இரண்டு பாசிட்டீவ் செய்திகளை வெளியிட்டு சரிசெய்வார்கள்.
இது தவிரவும், இந்த அதிகாரிகளை இந்த நிருபர்கள் காக்காய் பிடிக்க செய்வது என்னவென்றால், ஆங்கில ஊடகங்கள் மார்கழி கச்சேரி, இசை நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளை ஸ்பான்சர் செய்வார்கள். அந்த நிகழ்ச்சிகளுக்கான பாஸ்களை இந்த நிருபர்கள் நேரடியாகச் சென்று அந்த அதிகாரிகளுக்கு கொடுத்து மகிழ்வார்கள். இதற்கு பதிலாக, சென்னையில் கிரிக்கெட் போட்டி நடக்கும்போது, அந்த அதிகாரிகள் இந்த நிருபர்களுக்கு பாஸ் கொடுத்து மகிழ்வார்கள்.
அன்பார்ந்த பத்திரிக்கைத் தோழர்களே… மற்ற செய்திகளில் காவல்துறை அதிகாரிகளுக்கு ஆதரவாக செய்தி போடுகிறீர்கள் பரவாயில்லை. இப்படி ஒரு பச்சைப் படுகொலையை அரங்கேற்றிவரும் காவல்துறை அதிகாரிளைக் காப்பாற்றுவது உங்கள் மனசாட்சிக்கு சரியெனப்படுகிறதா ?
நான்காவது தூணான நீங்கள் இந்த அதிகாரிகள் செய்யும் தவறை சுட்டிக் காட்ட வேண்டாமா ? அம்பலப்படுத்த வேண்டாமா ? அப்படி அம்பலப்படுத்த விருப்பம் இல்லாதவர்கள், உங்கள் பத்திரிக்கை தொழிலை ராஜினாமா செய்து விட்டு, காவல்நிலையத்தில் ரைட்டராக சேர்ந்து விடுங்கள். அதுதான் உங்களுக்கு சரியான இடம்.
டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு டிஐஜி வரதராஜு கொடுத்துள்ள பேட்டியைப் பாருங்கள். நாங்குநேரி இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் வானமாமலையை சரண்டர் ஆகச் சொன்னாராம். ஆனால் வானமாமலை இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்ட வந்தாராம். இன்ஸ்பெக்டர் ஜீப்பில் இருந்ததால் வெட்டு அவர் மீது படவில்லையாம்.
வரதராஜு அவர்களே… நீங்கள் எந்த அளவுக்கு கைசுத்தமானவர் என்று சவுக்குக்குத் தெரியும். கொடுத்துச் சிவந்த கரங்களைப்போல வாங்கிச் சிவந்த கரங்கள் உங்கள் கரங்கள். எல்லா ஆட்சியிலும், யார் கையைக் காலையாவது பிடித்து, நல்ல பதவியில் நீடிப்பது உங்களின் அசாத்திய திறமை. இதற்காக எவ்வளவு கேவலமான வேலையையும் நீங்கள் செய்யத் தயங்கமாட்டீர்கள் என்பது தெரியும். ஆனால் செவ்வாயன்று நடந்தது ஒரு அப்பட்டமான படுகொலை என்பது உங்களுக்குத் தெரியாதா ?
இறந்த வானுமாமலையின் குழந்தைகளைப் பாருங்கள். அவர்கள் தங்கள் தந்தையை இழந்து கதறுவதைப் பாருங்கள். அவர் மனைவியைப் பாருங்கள். உங்கள் மகனை இது போல ஒரு இன்ஸ்பெக்டர் சுட்டால், சும்மா விடுவீர்களா ? உங்கள் மனைவி இதுபோல வீதியில் அழுதால் உங்கள் மனம் பொறுக்குமா ? உங்கள் உயிரைவிட வானுமாமலையின் உயிர் எந்த அளவுக்கு குறைந்து விட்டது ? அவனாவது ட்ராக்டர் ஓட்டி நேர்மையாக வாழ்க்கையை ஓட்டி வந்தான். தன் தம்பியை அநியாயமாக கைது செய்த இன்ஸ்பெக்டரை எதிர்த்துப் பேசினான். உங்களைப்போல கூழைக்கும்பிடு போட்டு நல்ல பதவியைப் பெறுபவன் அல்ல அவன். விஜயேந்திர பிதாரியைக் கேட்க விருப்பமில்லை. அவன் கன்னடன். அவனுக்கு தமிழனின் உயிர் மயிருக்கு சமானம். நீங்கள் தமிழர்தானே. அதையும் விடுங்கள். மனிதர்தானே… இப்படிக் கொலை செய்த இன்ஸ்பெக்டரை இதுவரை பணி இடைநீக்கம் கூட செய்யாமல் வேடிக்கை பார்க்க எப்படி உங்களுக்கு மனது வருகிறது. வானுமாமலையின் மனைவி கதறுவதைப் பார்த்து எப்படி உங்களால் இரவில் உறங்க முடிகிறது ?
போராட்டக்காரர்களை மிரட்டும் வரதராஜு
இந்த நேரத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையை குறிப்பிட வேண்டும். வைகோ அவர்கள், இந்த கொலை குறித்து உயர்நீதிமன்ற நீதிபதியை வைத்து நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். வைகோ போன்ற அரசியல் தலைவர்கள் அறியாததல்ல. நீதி விசாரணைகள், நீதிபதிகள் ஓய்வு பெற்று, எப்போது அரசு, விசாரணை ஆணையம் என்ற ரொட்டித் துண்டை வீசும் என்று காத்திருக்கும் நீதிபதிகளுக்காகவே உருவாக்கப்பட்டவை. மாஞ்சோலை தொழிலாளர்கள் மரணத்துக்காக உருவாக்கப்பட்ட விசாரணை ஆணைய நீதிபதி மோகன், போலீசார் சுட்டது சரியே என்று அறிக்கை அளித்தது நீங்கள் அறியாதது அல்ல.
நடந்திருப்பது ஒரு கொலை. சாதாரண மனிதன் கொலை செய்தால், சட்டம் என்ன நடவடிக்கை எடுக்குமோ, அதே நடவடிக்கையைத்தான் எடுக்கவேண்டி வலியுறுத்த வேண்டும். அந்த இன்ஸ்பெக்டரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். விசாரணை ஆணையம் என்ற கோரிக்கை, அரசாங்கத்துக்கு வசதியான கோரிக்கை என்பதை அரசியல் தலைவர்கள் உணர வேண்டும்.