பிள்ளையோ பிள்ளை கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் கதை வசனத்தில் அவர் பெற்ற பிள்ளை மு.க.முத்துவை வைத்து எடுத்த திரைப்படம். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக, மு.க.முத்துவை எம்.ஜி.ஆருக்கு போட்டியாக களமிறக்கிய படம். எம்.ஜி.ஆர் என்றால் ஒருவர்தானே இருக்க முடியும் ? அந்தத் திரைப்படம் மண்ணைக் கவ்வியது.
இந்தக் கட்டுரை அந்தத் திரைப்படம் பிள்ளையோ பிள்ளையைப் பற்றியது அல்ல. இது கொள்ளையோ கொள்ளையைப் பற்றியது. அதுவும் சாதாரண கொள்ளையல்ல. சட்டபூர்வமான கொள்ளை. அரசு அனுமதி பெற்ற கொள்ளை. உடனே மணற்கடத்தல் என்று எண்ணி விடாதீர்கள். மணற்கடத்தல் கொள்ளையும் ஜெயலலிதா ஆட்சியில் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறதுதான் என்றாலும், இது மணற்கொள்ளையைப் பற்றியது அல்ல.
அரசு வேலைக்குத் தகுதியில்லாத ஒரு நபர், அரசுப் பணி செய்து கொண்டு, மக்கள் வரிப்பணத்தில் அரசு ஊதியம் பெற்றுக் கொண்டிருந்தால் அது கொள்ளையா ? ஒரு நபர் இப்படி ஊதியம் வாங்குவது அப்படி என்ன பெரிய தவறு என்று கேட்பீர்கள். ஒரு நபர் அல்ல. 83 நபர்கள். இது அரசுக்கு தெரிந்தே நடந்து கொண்டிருக்கிறது என்றால் நம்ப கடினமாக இருக்கிறதல்லவா ?
மக்கள் நலப்பணியாளர்கள் போல, மாதம் இரண்டாயிரமோ, மூவாயிரமோ வாங்கிக் கொண்டிருந்தால் பரவாயில்லை. மாதம் 50 ஆயிரத்திற்கும் மேல் ஊதியம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றால் ? ஆம் தோழர்களே… 83 பேர் மாதம் 50 ஆயிரத்திற்கும் மேல் கடந்த 16 மாதங்களாக பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். வயிறு எரிகிறதா இல்லையா ?
டிஎன்பிஎஸ்சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் க்ரூப் 2, க்ரூப் 1 போன்ற தேர்வுகளை நடத்தி அரசுப் பணிக்கு ஊழியர்களைத் தேர்வு செய்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து, அந்த வழக்கில் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு,
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மட்டுமல்ல. ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தைத் தவிர இந்தியாவில் உள்ள மற்ற அனைத்துப் பணியாளர் தேர்வாணையங்களுமே ஊழலுக்குப் பெயர்போனவைதான். இதில் எந்தத் தேர்வாணையங்களும் விதிவிலக்கல்ல. குறிப்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் என்பது, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் இருந்தே ஊழலின் உறைவிடமாகத்தான் திகழ்ந்து வருகிறது.
ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், தமிழ்நாடு தேர்வாணையத்தில் 10 முதல் 25 சதவிகிதமாக இருந்த ஊழலின் பங்கு, நாட்பட நாட்பட அதிகரித்துக் கொண்டே வந்தது. 1996 கருணாநிதி ஆட்சியில், தேர்வாணைய உறுப்பினர்கள் நியமனத்தில் பெரும்பங்கு பணம் விளையாடியது. ஒரு சில உறுப்பினர்களைத் தவிர, பெரும்பாலான உறுப்பினர்கள், கருணாநிதிக்கு கப்பம் கட்டினால் மட்டுமே தேர்வாணைய உறுப்பினர்களாக முடியும் என்ற நிலை உருவாகியது.
2001ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், இந்த 25 சதவிகித ஊழல், 100 சதவிகிதத்தை எட்டியது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 100 சதவிகிதத்தை இந்த ஊழல் எப்படி எட்டியது என்று பார்த்தால், அப்போது முழுமையாக மன்னார்குடி மாபியாவின் ஆட்சி மட்டுமே நடைபெற்றது. ஆரம்பகாலத்தில் இடைக்கால முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் இருந்தபோதும் சரி, மீண்டும் ஜெயலலிதா முதல்வரானபோதும் சரி… மன்னார்குடி மாபியா சொன்ன நபர்களைத் தவிர, வேறு யாரும் நல்ல பதவிக்கு வர முடியாது என்ற நிலையே நீடித்தது.
அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையில் டிஎஸ்பியாக பணியாற்றிய தீர்த்தாரப்பன் என்ற டிஎஸ்பி, திடீரென்று ஒரு நாள் டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக நியமிக்கப்பட்டார். லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே ஒழுங்காக வேலை பார்க்காத தீர்த்தாரப்பன், தேர்வாணைய உறுப்பினராக நியமிக்கப்பட்ட போதுதான், எந்த அளவுக்கு தேர்வாணைய உறுப்பினர் நியமனத்தில் ஊழல் புரையோடிப்போயிருக்கிறது என்ற விபரம் தெரிய வந்தது.
ஆனால், தேர்வாணையம் தொடர்ந்து உயர் பதவிக்கான அதிகாரிகளை தேர்ந்தெடுத்துக் கொண்டே இருந்தது. தேர்வாணைய உறுப்பினர்களும், தங்கள் வசூல் வேட்டையை செவ்வனே நடத்தி வந்தார்கள்.
2006ல் கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும், தேர்வாணைய உறுப்பினர்கள் நியமனம் ஏறக்குறைய ஏலம் போடப்பட்டது என்றே சொல்லாம். சிஐடி காலனிக்கு இரண்டு உறுப்பினர்கள், கோபாலபுரத்துக்கு இரண்டு உறுப்பினர்கள், மதுரை மன்னனுக்கு இரண்டு உறுப்பினர்கள். இது போதாது என்று, கவிஞர் வைரமுத்துவுக்கு கூட ஒரு உறுப்பினர் ஒதுக்கப்பட்டது.
இப்படி மன்னார்குடி மாபியா மூலமாகவும், கோபாலபுரத்துக் கோமான் மூலமாகவும், கோடிக்கணக்கில் பணம் கொடுத்த வருபவர்கள் என்ன செய்வார்கள் என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தேர்வாணையம் மூலமாக அதிகாரியானவர்கள் சொன்னது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் முறைகேடுகள் அனைத்தும் எழுத்துத் தேர்வு முடிந்து நேர்முகத் தேர்வு நடைபெறும் சமயத்தில்தான் நடக்கும். அதுபோல தேர்வாணைய உறுப்பினர்களுக்கு நேர்முகத் தேர்வுக்காக பணம் கொடுத்தவர்களோடு சவுக்குக்கு அறிமுகம் உண்டு. அவர்கள் சொல்லியது என்னவென்றால், பணம் வாங்கும் உறுப்பினர்கள் பெரும்பாலானோர், வாங்கிய பணத்துக்கு தக்கபடி நேர்முகத் தேர்வில் மதிப்பெண் போட்டு விடுவார்கள் என்பதே. உதாரணத்துக்கு நேர்முகத் தேர்வில் ஒரு நபருக்கு அதிகபட்ச மதிப்பெண் 10 என்றால், பணம் வாங்கிய உறுப்பினர், ஒன்பதேமுக்கால் மதிப்பெண் வழங்குவார். அவரிடம் கேள்வி கேட்கவும் முடியாது. ஏனென்றால், எனக்கு திருப்தி அளிக்கும் வகையில் அவர் பதில் சொன்னார். ஆகையால் முழுமையாக மதிப்பெண் வழங்கினேன் என்று சொல்லி விடுவார்கள். இப்படித்தான் நடந்து கொண்டிருந்தது.
அதே நேரத்தில், யாருக்கும் பத்து பைசா பணம் கொடுக்காமல், முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும், உண்டு. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், தமிழகத்தில் இன்று இருப்பதிலேயே மிகச் சிறந்த, மிக மிக நேர்மையான அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பது இதற்குச் சான்று. தங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பணியாற்றும் அந்த அதிகாரிகள், தமிழக காவல்துறையின் மணிமகுடம் என்றால் அது மிகையல்ல.
2001ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு, எழுத்துத் தேர்விலேயே முறைகேடுகள் தொடங்கின. மன்னார்குடி மாபியா மூலமாக தேர்வாணைய உறுப்பினர் ஆனவர்கள், எதற்கு அஞ்சப் போகிறார்கள் ? அனைத்து வகைகளிலும் வசூலைக் குவித்தனர். அந்த காலகட்டத்தில் யாஸ்மின் அகமது என்ற ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி, தேர்வாணையத்தின் தலைவராக இருந்தார். 2001 முதல் 2007 வரை இவர் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் வேலை நியமனத் தடைச் சட்டம் அமலில் இருந்தது. ஆனால் 2000ம் ஆண்டில் விளம்பரம் கொடுக்கப்பட்ட க்ரூப் 1 பதவிகளுக்கு 2001ல் தேர்வு நடந்தது.
யாஸ்மின் அகமது ஐஏஎஸ், (ஓய்வு)
துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், வணிக வரித் துறை அதிகாரி, கோட்ட தீயணைப்புத் துறை அதிகாரி போன்ற 91 பதவிகளுக்காக 27.12.2000 அன்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளம்பரம் வெளியிட்டது. இதன்படி, இப்பதவிகளுக்கான பூர்வாங்கத் தேர்வு 2001ல் நடைபெற்றது. இரண்டாம் கட்டத் தேர்வு 9 பிப்ரவரி 2002 முதல் 13 மார்ச் 2002 வரை நடைபெற்றது. இந்த இரண்டாம் கட்டத் தேர்விலும் தேர்ச்சியடைந்தவர்களில் 182 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். 21 ஜுன் 2004 முதல் 24 ஜுன் 2004 வரை இந்த நேர்முகத் தேர்வு நடைபெற்றது. 5 ஜூன் 2004 அன்று இத்தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. 91 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இவர்களில் 24 துணை ஆட்சியர்கள் (Deputy Collectors), 20 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், (Deputy Superintendent of Police), 20 வணிக வரித்துறை அலுவலர்கள் (Commercial Tax Officer) 33 கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளர்கள் (Deputy Registrar of Cooperative Societies), 5 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (Divisional Development Officer) 2 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் (District Employment Officer) 1 கோட்ட தீயணைப்பு அலுவலர் (Divisional Fire Officer).
இந்தத் தேர்வு முடிவுகளை எதிர்த்து, தேர்ச்சியடையாதவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கின்றனர். அவர்கள் தொடுத்த வழக்கில் முக்கிய குற்றச்சாட்டு, இத்தேர்வில் தேர்ச்சியடைந்த 91 நபர்களும் முறைகேடாக தேர்ச்சியடைந்துள்ளனர். தேர்வாணைய விதிகளில் தெளிவாக, வண்ணப் பென்சில்கள், ஸ்கெட்சுகள், போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என்று தெளிவாக இருந்தும், இந்த 91 நபர்கள் அவ்வாறு பயன்படுத்தியுள்ளார்கள். பல இடங்களில் அடிக்கோடிட்டும், சில சந்தேகக் குறிகளை இட்டும், விடைத்தாள்களை திருத்துபவர்களுக்கு ரகசிய சமிக்ஞை அளித்துள்ளனர். பலர் பதிவு எண்ணை விடைத்தாள்களில் விதிகளுக்கு எதிராக எழுதியுள்ளனர் என்பதே அவர்களது வழக்கு.
இரண்டாம் கட்டத் தேர்வு எழுதுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என, தேர்வாணையம் வகுத்துள்ள விதிமுறைகள் என்னவென்றால்,
5.The candidates should not use colour pens, sketch pens, pencils, except those permitted in the instructions etc., to candidates for any purpose including drawing, underlining and highlighting. They should not write their Register number anywhere (including additional answer books) except in the place provided at the top of the front page of the main answer book.”
அதாவது தேர்வு எழுதுபவர்கள் அனுமதிக்கப்பட்டவைகளைத் தவிர்த்து, கலர் பேனா, ஸ்கெட்ச் பேனா, பென்சில், போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. பதிவு எண்ணை சொல்லிய இடத்தைத் தவிர்த்து வேறு எங்கும் எழுதக் கூடாது.
இதை மீறுபவர்களுக்கு என்ன தண்டனை என்பதையும் தேர்வாணையம் சொல்லியுள்ளது.
22.The application of the candidate who violates any one or more of these instructions or instructions printed on the main answer book or in the memorandum of admission, will be rejected and or his answer books will be invalidated and or he/she will be debarred for such period as the Commission considers fit.
இந்த உத்தரவை மீறும் தேர்வர்களின் விடைத்தாள்கள் தள்ளுபடி செய்யப்படும். மேலும், அவர்கள் மீண்டும் தேர்வாணையத் தேர்வுகளை எழுத முடியாத வண்ணம், எவ்வளவு தேர்வாணையம் முடிவு செய்யும் காலம் வரை, போட்டித் தேர்வில் கலந்து கொள்ள இயலாது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது, மனுதாரர்கள் சொன்ன புகார்கள் உண்மையா என்பதை ஆராய, ஒரு ஸ்டாலின் என்ற வழக்கறிஞரை நியமிக்கிறார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடமிருந்து, வெற்றி பெற்ற 91 தேர்வர்களின் விடைத்தாள்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கச் சொல்லி, அத்தனை விடைத்தாள்களையும், அந்த வழக்கறிஞரிடம் அனுப்பி அவரை ஆய்வு செய்யச் சொல்கிறார். அவர் விடைத்தாள்களை ஆய்வு செய்து, தனது அறிக்கையை 16 ஆகஸ்ட் 2007 அன்று சமர்ப்பிக்கிறார்.
இந்த அறிக்கை முழுமையானதாக இல்லை என்று மனுதாரர்கள் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. தேர்வர்கள் பல்வேறு இடங்களில் அடையாளக் குறிகள் இட்டுள்ளார்கள் என்றும், தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் விடைத்தாள்கள் வழக்கறிஞரிடம் வழங்கப்பட்டுள்ளன என்றும், விடைத்தாள்கள் திருத்துகையில் வழங்கப்படும் டம்மி பதிவெண்கள், மதிப்பீட்டாளர்களால் திருத்தப்பட்டுள்ளன என்றும், இவை அனைத்தையும் வழக்கறிஞர் ஸ்டாலின் கணக்கில் எடுத்துக் கொள்ளவிலை என்றும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
இதன் பின்னர் 23 ஜனவரி 2009 அன்று எஸ்.ஆர்.சுந்தர் என்ற வழக்கறிஞரை, சம்பந்தப்பட்ட விடைத்தாள்களை ஆராயுமாறு பணிக்கிறது உயர்நீதிமன்றம். அந்த வழக்கறிஞர் அனைத்து விடைத்தாள்களையும் ஆராய்ந்து, மொத்தம் உள்ள 91 நபர்களில் 83 பேர், தேர்வாணையத்தின் விதிமுறைகளை பல்வேறு வகைகளில் மீறியுள்ளனர் என்று அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை பரிசீலித்த நீதிபதி ஜோதிமணி, 10 ஜுலை 2009 அன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்தார்.
வழக்கறிஞர் சுந்தர் அளித்த அறிக்கையைப் பார்க்கையில், ஒரு தேர்வர் ஓம், பிறை, சிலுவை ஆகியவற்றை விடைத்தாளில் எழுதியுள்ளார். மற்றொரு தேர்வர் த.பி.பா (தயவு செய்து பின்பக்கம் பார்க்கவும்) என்று எழுதியுள்ளார். மற்றாரு தேர்வர் கருப்பு மையில், பல இடங்களில் அடிக்கோடிட்டுள்ளார். மற்றொரு தேர்வர் ஒரு வெள்ளைத்தாளில் “மணி” என்று மட்டும் எழுதியுள்ளார். ஒரு சிலர் கலர் பென்சில்களில் அடிக்கோடிட்டுள்ளனர். பல தேர்வர்கள் பென்சில் பயன்படுத்தியுள்ளனர்.
இவற்றையெல்லாம் குறிப்பிட்ட நீதிபதி ஜோதிமணி, பிறை, சிலுவை போன்றவற்றை வரைந்தவர், விடைத்தாள்களை திருத்துபவருக்கு சமிக்ஞை செய்கிறார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அது மதச் சின்னம் மட்டுமே. அதே போல பென்சில்களை பயன்படுத்தியுள்ளதையும் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது (என்ன ஒரு கண்டுபிடிப்பு…..) இந்த தேர்வர்கள் தவறு செய்துள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளதை மட்டும் வைத்து, தேர்வையை ரத்து செய்வது சரியாக இருக்காது. (உங்களுக்கு தெரியாத சட்டமில்லை மை லார்ட்).
அறிவிப்புப் பலகையை திறந்து வைப்பவர் நீதிபதி ஜோதிமணி
சில தேர்வர்கள் விடைத்தாள்களில் தேவையற்ற குறிப்புகளைச் செய்திருப்பது வழக்கறிஞரின் அறிக்கையில் தெரிய வந்தாலும் அவர்கள் இதைத் தவிர்த்திருக்கலாம். தேர்வாணையம், விடைத்தாள்களை திருத்துகையில், இனி மிகவும் கடுமையாக இருக்க வேண்டும். இது போன்ற தவறுகள் நடைபெறுவதை அனுமதிக்கக் கூடாது. இந்த வழக்கைத் தொடர்ந்த மனுதாரர்கள் இருவரும், இந்த வழக்கு ஐந்து ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருப்பதால், தேர்வெழுதும் அதிகபட்ச வயதைக் கடந்து விட்டார்கள். ஆகையால், இவர்கள் இருவருக்கும் மேலும் ஒரு முறை தேர்வெழுதும் வாய்ப்பை தேர்வாணையம் வழங்குமாறு இந்த நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது என்று தீர்ப்புக் கூறினார், நீதிபதி ஜோதிமணி. இதற்குப் பெயர் தீர்ப்பு அல்ல. கட்டப் பஞ்சாயத்து. என்னை பாலியல் வன்முறை செய்துவிட்டான் ஒருவன் என்று புகார் கூறும் பெண்ணிடம், அவனையே திருமணம் செய்துகொள் என்பதற்கும், இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. தவறாக தேர்வெழுதியவர்களையும் தண்டிக்கக் கூடாது, வழக்கு தொடுத்தவர்களுக்கும் சமாதானமாக மேலும் ஒரு முறை தேர்வெழுதும் வாய்ப்பு. இதுதான் சட்டத்தின் ஆட்சியாம்….
க்ரூப் 1 தேர்வெழுதும் தேர்வர்கள் அனைவரும் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள். நன்கு படித்தவர்கள். தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போதே, என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்ற அறிவுரைகளை படித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவு பெற்றவர்கள். அப்படி புரியாவிட்டால், அவர்களெல்லாம், டிஎஸ்பியாகவும், டெப்புடி கலெக்டராகவும் இருக்க தகுதியில்லாதவர்கள் என்றே பொருள். அப்படி அறிவுள்ள இந்த நபர்கள், விதிகளை மீறி, பொம்மை வரைகிறார்கள், இரண்டு வண்ணத்தில் எழுதுகிறார்கள், தேவையற்றவற்றை எழுதுகிறார்கள், விடைத்தாளில் பெயர் எழுதுகிறார்கள், 55 பேர், கேள்வியின் எண்ணை தவறாக எழுதி, திருத்துகிறார்கள் என்றால், இவையெல்லாம், தேர்வாணைய உறுப்பினர்களோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் விளைவாகவே இருக்க வேண்டும். தெரியாமல் தவறு செய்ய இவர்கள் பாலகர்கள் இல்லை.
இப்படி லஞ்சம் கொடுத்து, அரசு அதிகாரியாகும் இந்த அயோக்கியர்கள் எப்படி அரசுப்பணியை நேர்மையாகச் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்க முடியும் ? நியாயமாக நடந்து கொள்வார்கள் என்று எப்படி நம்ப முடியும் ? ஏழை மற்றும் உழைப்பாளி மக்களின் நலனுக்காக பாடுபடுவார்கள் என்று எப்படி நினைக்க முடியும் ?
ஆனால், நீதிபதி ஜோதிமணி, இவற்றை சாதாரண தவறு என்று சொல்கிறார். இந்த நீதிபதி ஜோதிமணிதான், கூடங்குளம் அணு உலையைத் தொடங்க உரிய சுற்றுச் சூழல் அனுமதியில்லாமல் அணு உலை வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்போகிறார். டிஎன்பிஎஸ்சி வழக்கில் அளித்த தீர்ப்பு போலவே அளித்தாரென்றால், வாங்காத அனுமதியை இப்போது வாங்குங்கள், அனுமதி வாங்கிய பிறகு, வழக்கு தொடுத்தவர்களுக்கு இலவசமாக இரண்டு கிலோ அணுக்கழிவை கொடுங்கள் என்று தீர்ப்பு வழங்குவாரோ….. !!!
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கில், நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ் மற்றும், ஹரிபரந்தாமன் ஆகியோர் 4 மார்ச் 2011 அன்று தீர்ப்பு வழங்கினர்.
அவர்கள் தங்கள் தீர்ப்பில், “பென்சில்களை உபயோகித்தால் தவறில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பது தவறு. பென்சில் என்றால், கலர் பென்சில் மற்றும் சாதாரண பென்சில்கள் ஆகிய இரண்டையும் உபயோகிப்பது தவறு என்றே பொருள் கொள்ள வேண்டும். இது டிஎன்பிஎஸ்சியின் பதில் மனுவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பென்சிலை பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிப்பதற்கான காரணமே, பென்சிலில் எழுதினால், அழித்து விட்டு, திருத்தலாம் என்பதற்காகவே. தேர்வர்கள் தவறுகளில் ஈடுபடுக்கூடாது என்பதற்காகவே இப்படிப்பட்ட விதிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விடைத்ததாள்களை ஆராய்ந்த இரண்டாவது வழக்கறிஞர் பல இடங்களில் பென்சில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளார். இதை நீதிபதி ஒப்புக் கொண்டாலும், பென்சில் பயன்படுத்தப்படுவது தடை செய்யப்படவில்லை என்ற அடிப்படையில் இதை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. எவ்விதமான அடையாளக் குறிகளும் பயன்படுத்தக் கூடாது என்பது தெளிவாக விதிகளில் குறிப்பிடப்பட்டிருந்தும், மத சின்னங்களை பயன்படுத்தியதை நீதிபதி கணக்கில் கொள்ளவில்லை. இந்தத் தேர்வு, பல்வேறு பொருள்களில் தேர்வர்களின் அறிவைப் பரிசோதிப்பதற்காகவேயன்றி, ஒரு தேர்வரின் மத நம்பிக்கையை அனுமானிப்பதற்காக அல்ல. தேர்வர்கள் கடைபிடித்துள்ள இது போன்ற மலிவான உத்திகள் அனுதாபம் தேடுவதற்காகவேயன்றி வேறு எதற்காகவும் அல்ல. இது போன்ற அடையாளங்கள் தடை செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்தும் இவ்வாறு அடையாளக் குறிகள் இட்டிருப்பது, விடை திருத்துபவர்களுக்கு அடையாளம் காட்டுவதற்காக என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், ஆயிரக்கணக்கான விடைத்தாள்களில் குறிப்பிட்ட விடைத்தாளை தேடிக் கண்டுபிடிப்பது மிகச் சிரமம்.
டிஎன்பிஎஸ்சி தனது பதில் மனுவில், ஸ்கெட்ச் பேனாக்கள், பென்சில்கள், கலர் பேனாக்கள் பயன்படுத்திய 48 விடைத்தாள்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது. 48 விடைத்தாள்களை தகுதியிழப்பு செய்துள்ளபோது, அனைத்து விடைத்தாள்களுக்கும் ஒரே அளவுகோலைத்தான் பயன்படுத்த வேண்டும். ஒரு சில தேர்வர்களுக்கு ஒரு விதியும், மற்ற சில தேர்வர்களுக்கு வேறு சில விதியும் பயன்படுத்துவது, வேலைவாய்ப்பு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யும், அரசியல் சாசனக் கூறு 14 மற்றும் 16க்கு எதிரானது. இதனால், வெற்றி பெற்ற 91 தேர்வர்களில் 83 பேர் தேர்வாணைய விதிகளை மீறியுள்ளனர் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை.
மேற்கூறிய விவாதங்களில் இருந்து நாங்கள் கீழ்கண்ட முடிவுகளுக்கு வருகிறோம்.
1) தேர்வாணையத்தின் க்ரூப் 1 தேர்வுகள் வெளிப்படையாயகவும், பாரபட்சமின்றியும் யாரும் குறை சொல்ல வழிவகை இல்லாதவாறு நடைபெற்றிருக்க வேண்டும்
2) தேர்வாணையம் விதித்துள்ள தேர்வு விதிமுறைகளை மீறிய தேர்வர்களின் விடைத்தாள்களை தேர்வாணையம் தகுதியிழப்பு செய்திருக்க வேண்டும்.
3) விதிமுறைகளை மீறிய தேர்வர்களின் விடைத்தாள்களை தகுதியிழப்பு செய்யாமல் அவை ஏன் திருத்தப்பட்டன என்ற கேள்விக்கு தேர்வாணையம் விடையளிக்கவில்லை. அப்படியென்றால் தவிர்க்க இயலாமல் நாங்கள் வரும் முடிவு, இத்தேர்வு வெளிப்படையாக நடைபெறவில்லை என்பதும், நியாயமான தேர்வர்களுக்கு எதிரான அநியாயம் நடைபெற்றுள்ளது என்பதுமே.
4) தேர்ச்சியடைந்த தேர்வர்கள், தற்போது கணிசமான காலத்துக்கு அரசுப்பபணியில் உள்ளார்கள் என்பதை நாங்கள் உணர்கிறோம். ஆனால், அதற்காக நியாயமான தேர்வர்கள் புறக்கணிக்கப்பட்டு சட்டவிரோதமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அரசுப் பணியில் தொடர அனுமதிக்க முடியாது. அதுவும், அவர்களின் தேர்ச்சி, தேர்ச்சியடைந்த நாள் முதலாக கேள்விக்குள்ளாக்கப் பட்ட நிலையில் அதை அனுமதிக்க முடியாது.
சம்பந்தப்பட்ட தேர்வர்களை நேரடியாக இந்நீதிமன்றத்தின் முன் அணுக வேண்டும் என்று, பல்வேறு முறை தாக்கீது அனுப்பப்பட்டது. இது தொடர்பாக செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தும் ஒருவரும் இந்நீதிமன்றத்தின் முன் வழக்கறிஞர் மூலம் ஆஜராகவில்லை. அவர்கள் வரவில்லை என்பதற்காக இத்தேர்வை நாங்கள் ரத்து செய்யவில்லை. ஆனால் அவர்கள் தேர்வில் தவறிழைத்துள்ளார்கள் என்ற காரணத்துக்காகவே ரத்து செய்கிறோம். தவறிழைத்தவர்களின் விடைத்தாள்களை தேர்வாணையம் தூர எரிந்திருக்க வேண்டும்.
5) இந்த வழக்கை தொடர்ந்தவர்களின் கூற்றுப்படி, தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்திந்தால், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்கள் என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். இந்தக் கூற்று தேர்வாணையத்தாலும் மறுக்கப்படவில்லை.
6) வழக்கு தொடுத்தவர்கள், எத்தனை மதிப்பெண்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று வாதிட்டிருந்தாலும், இந்த நீதிமன்றம், தேர்வு விவகாரத்தில் ஒரு நிபுணர் அல்ல என்பதால், நாங்கள் அதற்குள் செல்ல விரும்பவில்லை. ஆனாலும், தேர்வாணையத்தை, அவர்களின் விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.
மேற்கூறிய காரணங்களால், இவர்களின் தேர்வு செல்லும் என்று அறிவித்த நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்கிறோம். மொத்தம் தேர்வெழுதிய 91 நபர்களில், எவ்வித முறைகேடுகளிலும் ஈடுபடாத எஸ்.விசாகன், சி.சியாமளா தேவி, ஆர்.பாண்டியராஜன், கே.கிங்ஸ்லின், கே.பிரபாகர், டி.பத்மாவதி, எம்.ஜெயராமன் மற்றும் கே.வரதராஜன் ஆகியோரைத் தவிர, மீதம் உள்ள 83 நபர்களின் தேர்வை ரத்து செய்கிறோம்.
நியாயமான முறையில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டிருந்தால், வழக்கு தொடுத்தவர்கள் தேர்ச்சியடைந்திருப்பார்கள். அதனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை, தவறிழைக்காமல், முறைகேடுகளில் ஈடுபடாமல் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்து, புதிய பட்டியலை தயார் செய்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். அவ்வாறு புதிதாக வேலை வழங்கப்படுபவர்கள் வகிக்கப் போகும் முக்கிய பதவிகளை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு முதுநிலை வழங்குவது தொடர்பாக நாங்கள் உத்தரவு பிறப்பிக்கவில்லை. அவ்வாறு புதிதாக பணியில் சேர்க்கப்பட்டவர்கள் ஏற்கனவே பணியில் உள்ளவர்களின் பட்டியலில் கடைசியில் வைக்கப்பட வேண்டும். இந்த பணிகள் அனைத்தும், இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட ஆறு வாரங்களில் முடிக்கப்பட வேண்டும்.”
நீதியரசர்கள் எலிப்பி தர்மாராவ் மற்றும் ஹரி பரந்தாமன் ஆகியோர் அருகருகே நிற்கிறார்கள்.
என்று நீதியரசர்கள் எலிப்பி தர்மாராவ் மற்றும் ஹரி பரந்தாமன் ஆகியோர் 4 மார்ச் 2011 அன்று தீர்ப்பு வழங்கினார்கள்.
லட்சக் கணக்கில் பணம் கொடுத்து வேலை வாங்கியவர்கள் எளிதில் விட்டு விடுவார்களா ? உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள்.
உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு, 11 ஏப்ரல் 2011 அன்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முகுந்தம் ஷர்மா மற்றும், அனில் ஆர்.தவே ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பென்ச் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை கேட்டார்கள். ஆனால், நீதிபதிகள், இவ்வழக்கில் இடைக்காலத் தடை விதிப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை என்று தெளிவாகக் கூறி விட்டார்கள். தடை விதிக்க மறுத்து விட்டு, இவ்வழக்கை மே 4 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்த வருமாறு உத்தரவிட்டனர்.
ஆனால், அதன் பிறகு இவ்வழக்கு விசாரணைக்கு வரவேயில்லை. இறுதியாக, 16 மார்ச் 2012 அன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் பாதிக்கப்படும் 83 நபர்களில் பலர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பதால், அவர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, ஏப்ரல் மாதத்திற்கு இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் இதுவரை தடை விதிக்கவில்லை. தடை ஏதும் விதிக்கப்படாததால், உயர்நீதிமன்ற டிவிஷன் பென்ச்சின் தீர்ப்பு இன்று வரை அமலில் இருக்கிறது.
ஆனால், இவர்களில் ஒருவர் கூட இதுவரை பணி நீக்கம் செய்யப்படாமல் பணியில் தொடர்ந்து வருகிறார்கள். இவர்கள் அரசுப்பணியில் நீடிக்க சட்டப்படி எவ்வித முகாந்திரமும் இல்லை. உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு ஒரு நாள் கூட இவர்கள் அரசுப்பணியில் இருக்கக் கூடாது. உயர் நீதிமன்றம் இவர்கள் தேர்ச்சியை ரத்து செய்த நாள் 4 மார்ச் 2011. தற்போது ஆகஸ்ட் 2012 நடைபெற்று வருகிறது.
இப்பணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும், துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், வணிக வரி அலுவலர் போன்ற பதவிகளில் உள்ளார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் 50 ஆயிரத்திற்கும் குறையாமல் நமது வரிப்பணத்தில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
தோராயமாக இதுவரை வழங்கப்பட்டுள்ள தெண்டச் சம்பளம் எவ்வளவு என்று பார்க்கலாம். ஏப்ரல் 2011 முதல் ஜுலை 2012 வரை மொத்தம் 16 மாதங்கள் ஆகியிருக்கின்றன. ஒரு நபருக்கு 50 ஆயிரம் சம்பளம் என்றால், 83 பேருக்கு ஒவ்வாரு மாதமும் 40 லட்சத்து 50 ஆயிரம் ஆகிறது. 16 மாதங்களுக்கு 6 கோடியே 48 லட்சம்.
இந்த 6 கோடியே 40 லட்சமும், நமது வரிப்பணம். சாலையில் சாக்கடை அடைப்பை எடுப்பவனும், கூலி வேலை செய்பவனும், தேனீர் கடையில் வேலை செய்பவனும், முடி திருத்துபவனும், நம்மைப் போன்றவனும் செலுத்தும் வரிப்பணத்தில்தான் இந்த 83 பேர் ஊதியம் பெற்று வருகிறார்கள்.
நமது வீட்டிலும், நமது நண்பர்களும், உறவினர்களிலும் பலர் போட்டித் தேர்வுக்காக தயார் செய்வதைப் பார்த்திருப்பீர்கள். ஊழல் செய்த பணத்தில் தின்று கொழுத்தவர்கள் படித்து தேர்ச்சியடைய முயற்சிக்கமாட்டார்கள். நியாயமாக தேர்வு எழுத வேண்டும் என்று நினைப்பவர்கள், இரவும் பகலுமாக தங்கள் உழைப்பைச் செலவிட்டு, படித்து, எப்படியாவது அரசு அதிகாரியாக வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்வதைப் பார்த்திருப்பீர்கள். இரவு பகலாக படிக்கும் அந்த இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல், லஞ்சம் கொடுத்து, கேள்விக்கான விடையை எழுதச்சொன்னால், ஒருவர் விடைத்தாளில் சிலுவையும், பிறையும் ஓம் படத்தையும் வரைந்து வைக்கிறார். மற்றொருவர் டர்கோய்ஸ் நிறத்தில் சங்கேதக் குறி இடுகிறார். மற்றொருவர் கருப்பு மற்றும் நீலத்தில் அடிக்கோடிடுகிறார். ஒருவர் நட்சத்திர குறி இடுகிறார். ஒருவர் “VD” என ஆங்கிலத்தில் எழுதி வைக்கிறார். மற்றொருவர், ஒரு வெள்ளைத்தாளில் “மணி” என்று ஒரு வெள்ளைத்தாளில் எழுதி வைக்கிறார்.
இது போல விதிமுறைகளை மீறி, முறைகேடுகளில் ஈடுபட்டு, தேர்வில் வெற்றி பெறும் நபர்கள், உயர்நீதிமன்றத்தின் அமர்வு அவர்கள் தேர்வை ரத்து செய்தபின்னும், 16 மாதங்களாக பணியில் தொடர்கிறார்கள் என்றால்… …. ….
தற்போது தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.நட்ராஜ் என்பவர் நேர்மையான அதிகாரி. தற்போது நடைபெறும் தேர்வுகளில் எந்த முறைகேடும் நடைபெறாமல், கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிகிறது. நடைபெறும் தேர்வுகளில் கவனம் செலுத்துவதோடு, ஏற்கனவே நடந்த தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை களைய உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் ஏன் மவுனம் காக்கிறார் ? 2004ல் அதிமுக ஆட்சியில் இருந்தபோது இந்த 83 பேர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அவருக்கு தேர்வாணைய பதவியை அளித்த ஜெயலலிதா கோபித்துக் கொள்வார் என்று அஞ்சுகிறாரா ? ஜெயலலிதா கோபித்துக் கொள்வார் என்பதற்காக, தகுதியில்லாத, நீதிமன்றம் பணி நீக்கம் செய்த 83 அதிகாரிகளை, அதிகாரிகளாக அரசுப் பணியில் மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு தொடர அனுமதிக்கலாமா ?
நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தால், அதை எதிர்கொள்ளப் போவது நட்ராஜா, ஜெயலலிதாவா ? நீதிமன்ற அவமதிப்பு வழக்கையெல்லாம் விட்டு விடுங்கள். இந்த 83 பேர் பதவியில் தொடர்வது நட்ராஜின் நேர்மைக்கு விடப்பட்ட சவால் இல்லையா ? லஞ்ச ஒழிப்புத் துறை போன்ற துறைகளில் பணியாற்றிய நட்ராஜுக்கு, இது தவறு, சட்டவிரோதம் என்பது தெரியாதா ? இந்த 83 பேரை பணி நீக்கம் செய்து, உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அந்தத் தேர்வில், முறைகேட்டில் ஈடுபடாமல் தேர்வெழுதியவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பது நட்ராஜுக்குத் தெரியாதா ?
அரசு அலுவலகங்களில் வழக்கம்போலச் சொல்லப்படும் சாக்குபோக்கை நட்ராஜும் சொல்லக்கூடும். தேர்வாணையம் அரசுக்கு கடிதம் எழுதியாகி விட்டது. நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசுதான் என்று. ஆனால் இதையெல்லாம் பதிலாக ஏற்றுக் கொள்ள முடியுமா ?
இந்த 83 பேரில், துணை ஆட்சியர்கள், வணிக வரித்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சித் துறை அலுவலகர்கள் என்று பல அதிகாரிகள் இருந்தாலும்… சவுக்கு காவல்துறை ஸ்பெஷலிஸ்ட் இல்லையா.. இந்த 83 பேரில், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்களின் பெயர்களை மட்டும் வெளியிடுவதில், சவுக்கு பெருமகிழ்ச்சி கொள்கிறது.
1) ஜி.ஸ்டாலின், காவல் துணைக் கண்காணிப்பாளர், பொன்மலை, திருச்சி
2) டி.அஷோக் குமார், காவல் துணைக் கண்காணிப்பாளர், ஆரணி, திருவண்ணாமலை
3) எஸ்.அரவிந்த், காவல் துணைக் கண்காணிப்பாளர், சைபர் க்ரைம் செல், சிபி.சிஐடி, சென்னை
4) என்.ஸ்டீபன் ஜேசுபாதம், காவல் துணைக் கண்காணிப்பாளர், கமுதி, ராமநாதபுரம்,
5) பி.தங்கதுரை, உதவி ஆணையர், சேலம் வடக்கு சட்டம் ஒழுங்கு
6) எஸ்.எஸ்.மகேஸ்வரன், காவல் துணைக் கண்காணிப்பாளர், சைபர் க்ரைம் செல், ஆர்கனைஸ்ட் க்ரைம் இன்டெலிஜென்ஸ் யூனிட், தலைமையகம், சென்னை.
7) வி.ஷயாமளா தேவி, காவல் துணைக் கண்காணிப்பாளர், லஞ்ச ஒழிப்புத் துறை, விருதுநகர்
8) கே.அதிவீரபாண்டியன், காவல் துணைக் கண்காணிப்பாளர், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, சென்னை
9) வி.ஆர்.சீனிவாசன், காவல் துணைக் கண்காணிப்பாளர், பொன்மலை சரகம், திருச்சி
10) எல்.பாலாஜி சரவணன், உதவி ஆணையர், குற்றப்பிரிவு, கோவை
11) கே.பாலகிருஷ்ணன், காவல் துணைக் கண்காணிப்பாளர், கன்னியாக்குமரி
12) கே.சண்முகம், காவல் துணைக் கண்காணிப்பாளர், சிபி.சிஐடி, திருநெல்வேலி
இந்த 12 பேருக்கும் பதவி உயர்வுக்கு வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறதாம்… ஹய்யோ… ஹய்யோ……
ராமானுஜத்தை நேர்மையான அதிகாரி என்று சொல்கிறார்கள். நேர்மை என்றால் என்ன தெரியுமா ? ஹமாம் சோப்பு அல்ல. நேர்மை என்றால் தான் காசு வாங்காமல் இருப்பது மட்டுமல்ல. தனக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகளின் தவறுகளை தடுப்பதும், தண்டிப்பதும், கண்டிப்பதும் நேர்மை என்ற வரையறையில்தான் வரும். அதற்காகத்தான் எல்லோரையும் விட உயர்ந்த பதவியான டிஜிபி என்ற பதவியை கொடுத்து, ராமானுஜம் அமர வைக்கப்பட்டிருக்கிறார்.
ஆ.ராசாவையும், சுரேஷ் கல்மாடியையும், சிதம்பரத்தையும், டி.ஆர்.பாலுவையும், ப்ரபுல் பட்டேலையும், கொள்ளையடிக்க விட்டு விட்டு, அமைதியாக வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்லும் மன்மோகன் சிங்கை எப்படி நேர்மையான நபர் என்று ஏற்றுக் கொள்ள முடியாதோ… அதே போலத்தான், ராமானுஜமும். என்னைத் தொந்தரவு செய்யாதே… நான் காசு வாங்க மாட்டேன்.. மற்றவர்கள் வாங்கினால் எனக்குக் கவலை இல்லை என்று சொல்லுவது நேர்மையாகாது. அதற்கு ஒரே ஒரு பெயர்தான் உண்டு…
“கையாலாகத்தனம்”
இதற்குப் பிறகாவது, ராமானுஜம், இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறீர்களா… சவுக்குக்கு நம்பிக்கை இல்லை. பார்ப்போம்.
சரி… இக்கட்டுரையை படிக்கையில், வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் எழும். இவ்வளவு விபரமும் சவுக்குக்கே தெரிகிறதே… வழக்கு தொடுத்தவர்கள் ஏன் இன்னும், நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்காமல் இருக்கிறார்கள் என்று. இதில் சம்பந்தப்பட்ட 83 பேரும், ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய் வசூல் செய்து, வழக்கு தொடுத்தவர்களின் வாயில் ஒரு கணிசமான தொகையை வைத்து அடைத்து விட்டதாகத் தகவல் தெரிகிறது. எல்லோருக்கும் ஒரு விலை உண்டோ ?
குறிப்பு
சவுக்கு மீதான தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கு, தினசரி அடிப்படையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்குக்காக வழக்கறிஞர்களோடு தொடர்ச்சியாக ஆலோசனையில் ஈடுபட்டும், வழக்குக்கு தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டும் வருவதால், சவுக்கில் கட்டுரைகள் எழுதுவதற்கு நேரப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அன்பான சவுக்கு வாசகர்கள், சவுக்கை கைவிட்டு விடாமல், தொடர்ந்து ஆதரவு தருமாறு, அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது.