லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநராக சுனில் குமார் ஐபிஎஸ் பணியாற்றி வருகிறார். ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் தமிழகத்தில் உள்ள அரசுத் துறை ஊழியர்கள் அனைவர் மீதும் தொடரப்படும் ஊழல் வழக்குகளை மேற்பார்வை செய்வது சுனில் குமாரின் பணி.
இந்த சுனில் குமார், வருமானத்திற்க அதிகமாக 10 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளளதாக ஒரு புகார், அரசுக்கும், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கும் 15.10.2010 அன்று கொடுக்கப் பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி மீதே லஞ்சப் புகார் என்பது, ஒரு முக்கிய செய்தி. மேலும் அந்தப் புகாரில், சுனில் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்றும், சுனில் குமாரை லஞ்ச ஒழிப்புத் துறையை விட்டு மாறுதல் செய்ய வேண்டும் என்றும், நேர்மையான விசாரணை நடத்த ஏதுவாக, பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரப் பட்டிருந்தது. சுனில் குமார் தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும், வாங்கிப் போட்டிருக்கும் சொத்துக்களின் பட்டியல்.
- வேலூர் மாவட்டம் ஏலகிரியில் சுனில் குமார் பெயரில் ஒரு ஏக்கர் நிலம்.
- மணப்பாக்கத்தில் இரண்டு கிரவுண்டுகள் நிலம்.
- காஞ்சிபுரம் மாவட்டம் தையூர் கிராமத்தில் குடும்பத்தினர் பெயரில் ஒரு ஏக்கர் நிலம்.
- சோழிங்கநல்லூரில் குடும்பத்தினர் பெயரில் நாலு கிரவுண்டுகள் நிலம்.
- காரப்பாக்கத்தில் குடும்பத்தினர் பெயரில் நாலு கிரவுண்டுகள் நிலம்.
- ஊட்டியில் மூன்று இடங்களில் தலா அரை ஏக்கர் நிலம் சுனில் குமார் குடும்பத்தினர் பெயரில் (மொத்தம் ஒன்றரை ஏக்கர்)
- குற்றாலத்தில் குடும்பத்தினர் பெயரில் 25 சென்ட்டுகள் நிலம்.
- ஓசூர் அருகே குடும்பத்தினர் பெயரில் ஒரு ஏக்கர் நிலம்.
- கோவைப்புதூரில் குடும்பத்தினர் பெயரில் 20 சென்ட்டுகள் நிலம்
ஐநூறு ரூபாய் லஞ்சம் வாங்கும் ஏட்டையாவையும், தலையாரியையும், வழக்கு போட்டு, உண்டு இல்லை என்று பண்ணும் லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்கநரின் யோக்யதையைப் பார்த்தீர்களா ?
ஒன்றரை மாத காலம் ஆகியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படாததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுக்கு, சுனில் குமார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடும் படி, வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதியரசர் பால் வசந்த குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தலைமைச் செயலாளர், பொதுத் துறை செயலாளர், உள்துறை செயலாளர், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் மற்றும், சுனில் குமாருக்கு, மூன்று வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.
ஊடக நியதிப் படி பார்த்தால் இது ஒரு முக்கியமான செய்தி. ஏனெனில், இது போன்ற வழக்குகள் அடிக்கடி வருவதில்லை. ஆனால், உளவுத் துறையால், அனைத்து பத்திரிக்கைகளும் மிரட்டப் பட்டு, தினத்தந்தி மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா தவிர ஏனைய நாளிதழ்கள் இந்தச் செய்தியை வெளியிடவில்லை.
நெருப்புக் கோழி மண்ணில் தலையைப் புதைத்துக் கொள்வது போல, சுனில் குமாரும், ஜாபர் சேட்டும், மண்ணில் தலையைப் புதைத்துக் கொண்டு செய்தி வெளியிடாமல் மறைத்தால் யாருக்கும் தெரியாது என்று நினைக்கிறார்கள். பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடாமல் மறைத்து விட்டால், உயர்நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசுக்கு பதில் அனுப்ப வேண்டாமா ? சுனில் குமார் தனியாக காசு செலவு பண்ணி வழக்கறிஞர் வைக்க வேண்டுமே ? அதையும் லஞ்ச ஒழிப்புத் துறை ரகசிய நிதியிலிருந்து எடுக்கிறாரா என்பதை சவுக்கு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
நோட்டீஸ் அனுப்பி உத்தரவிடப் பட்டதும், சுனில் குமார், லஞ்ச ஒழிப்புத் துறையின் சட்ட ஆலோசகர் கண்ணப்பனோடு, காலை 11.45 மணி முதல் மதியம் வரை தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
எவ்வளவு தீவிர ஆலோசனையில் இறங்கினாலும், நீதிமன்றத்துக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் சுனில். ஜாபர் சேட்டை நம்பி நீங்கள் செய்த அயோக்கியத்தனங்களுக்கெல்லாம் இப்போது நீங்கள் தானே பதில் சொல்ல வேண்டும்… … ?
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா ?