நீங்கள் ஒரு வீட்டில் குடியிருக்கிறீர்கள். உங்களுக்கு வலதுபுறத்தில் ஒரு குடும்பம் குடியிருக்கிறது. இடதுபுறத்தில் ஒருவர் குடியிருக்கிறார்.
உங்கள் வலதுபுறத்தில் இருக்கும் குடும்பத்திற்கு நீண்ட நாட்களாக ரவுடிகளிடமிருந்து ஆபத்து உண்டு. திடீரென்று ஒரு நாள் ரவுடிகள் கையில் பயங்கர ஆயுதங்களோடு வந்து தாக்குகிறார்கள். அந்தக் குடும்பத்தில் உள்ள தாயை வண்புணர்ச்சிக்கு ஆளாக்குகிறார்கள். மகளையும் வன்புணர்ச்சி செய்கிறார்கள். அவ்வீட்டின் இரு மகன்களில் ஒருவனின் கண்களை நோண்டிக் கொல்கிறார்கள். மற்றொரு மகனின் காலை வெட்டுகிறார்கள். இவை அனைத்தும் உங்கள் கண்முன்னே நடக்கிறது.
அப்போது உங்கள் கையில் துப்பாக்கி இருக்கிறது. நீங்கள் நினைத்தால் துப்பாக்கியால் அந்த ரவுடிகளைச் சுட்டு அவர்களை காப்பாற்ற இயலும். ஆனால் நீங்கள் உங்கள் துப்பாக்கியை பயன்படுத்தாமல் மவுனம் சாதிக்கிறீர்கள். நான் துப்பாக்கியை பயன்படுத்துவேன், ஆனால், அதன்பிறகு போலீஸ் தொந்தரவு இருக்கும் என்று பிதற்றுகிறீர்கள்.
உங்கள் இடதுபுறத்தில் குடியிருப்பவர் என் கையில் மட்டும் துப்பாக்கி இருந்தால் இந்நேரம் நான் அவர்களைக் காப்பாற்றியிருப்பேன் என்று வீரவசனம் பேசுகிறார். நீங்கள் இருவருமே எதுவும் செய்யவில்லை, பேசுவதைத் தவிர. உங்கள் பக்கத்து வீட்டுக் குடும்பம் ரவுடிகளின் தாக்குதலில் நாசமாகிப்போய் விட்டது. அண்ணன் இறந்து விட்டார். தந்தை இரு கால்களையும் இழந்து விட்டார். தாய் பைத்தியமாகி விட்டாள். மற்றொரு மகன் ஒரு கையை இழந்து நுரையீரல் தாக்கப்பட்டு செயற்கை சுவாசத்தோடு இருக்கிறான். மகள் விலைமாதாகி விட்டாள். இச்சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் ஆகி விட்டன.
மூன்று ஆண்டுகள் கழித்து, நீங்கள் உங்கள் பக்கத்து வீட்டுக் குடும்பத்துக்கு மறுவாழ்வு அளிக்கிறேன் என்று பேசினால், உங்களை உலகம் காறி உமிழாதா ? புழுதி வாரித்தூற்றாதா ?
இதற்கும் சமீபத்தில் நடந்து முடிந்த டெசோ மாநாட்டுக்கும் என்ன வித்தியாசம் ?
கருணாநிதி டெசோ மாநாடு என்று அறிவித்ததும், அந்தப் போலி மாநாடு கூட நடைபெறக்கூடாது என்று ஜெயலலிதா அடித்த கூத்து இருக்கிறதே… அவர் கருணாநிதியையும் விஞ்சி விடுவார். டெசோ மாநாடு என்ற பெயரில், கருணாநிதி, ஜெயலலிதா, மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் அடித்த கூத்து இருக்கிறதே….. ஆசிட்டை விழுங்கியது போன்ற எரிச்சலும் கட்டுக்கடங்காத கோபமும் ஏற்பட்டது. இந்த டெசோ மாநாட்டுக்குப் பின்னால் ஆயிரக்கணக்கில், பிள்ளைகளையும், தங்கைகளையும், தம்பிகளையும், இழந்தவர்களும், தங்கள் உறுப்புக்களை இழந்து அங்ககீனமாக இருந்தவர்களும் இருக்கிறார்கள் என்பதை உயர்நீதிமன்ற நீதிபதி உட்பட யாருமே ஏன் பரிசீலிக்க மறுக்கிறார்கள் என்பது இவர்களின் ஈவிரக்கமற்ற மனதைக் காட்டுகிறது.
டெசோ மாநாடு நடத்த சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கில் அனுமதி கோரி, சென்னை மாநகரக் காவல் ஆணையாளருக்கு 03.08.2012 அன்று திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், கடிதம் அளிக்கிறார்.
இந்த மாநாடு நடந்து கருணாநிதிக்கு நற்பெயர் வந்துவிடுமோ என்று பயந்த அதிமுக அடிமைகள் இருவர், டெசோ மாநாட்டைத் தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கின்றனர். ஒரு வழக்கு, டெசோ மாநாட்டைத் தடை செய்ய வேண்டும் என்று தொடுக்கப்படுகிறது. மற்றொரு வழக்கு காவல்துறைக்கு டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று உத்தரவிடவேண்டும் என்று தொடுக்கப்படுகிறது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ் மற்றும் வேணுகோபால் ஆகியோர், ஒரு மாநாடு நடத்த அனுமதி வழங்கலாமா வேண்டாமா என்பதை பரிசீலித்து முடிவு செய்ய உரிய அதிகாரம் உள்ள மற்றும் பொருத்தமான நபர் சென்னை மாநகர ஆணையாளரே என்பதால், அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து, சென்னை மாநகர ஆணையாளர் இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகின்றனர்.
அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட ஆணையாளர், 09.08.2012 நள்ளிரவு 12 மணிக்கு அன்பழகனின் வீட்டைத் தட்டி அனுமதி மறுக்கப்படுகிறது என்ற கடிதத்தை அளிக்கிறார்கள்.
மறுநாள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் தான் நீதிமன்ற வேலைநாள். அதற்குள் எப்படி அவசர வழக்கு தாக்கல் செய்வது. அன்று காலையே வழக்கு தயார் செய்யப்பட்டு தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. அவ்வழக்கை மறுநாள் (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நீதிபதி பால் வசந்தகுமார் விசாரிப்பார் என்று உத்தரவிட்டார் தலைமை நீதிபதி.
இதன் நடுவே, தனித்தமிழ்நாடு கோரிய, அரசியல் அமைப்புச் சட்டத்தின் நகலை எரித்த, திமுக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் டெசோ மாநாடு நடத்த அனுமதி கோரியது. அக்கடிதத்திற்கு ஆர்.கே.நாக்பால் என்ற வெளியுறவுத்துறை துணைச் செயலாளர், “ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது” என்ற நிபந்தனையுடன் மாநாடுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்ற கடிதம் அனுப்பப்படுகிறது.
இதையடுத்து, சமூக வலைத்தளங்களில், திமுகவும், அதன் தலைவர் கருணாநிதியும், கிழித்து தொங்கவிடப்படுகிறார்கள்.
மறுநாள் காலை 11 மணி. சனிக்கிழமை விடுமுறை நாள் என்றாலும், நீதிபதி பால்வசந்தகுமார் அமரும் 11வது நீதிமன்றத்தில் உள்ளே நுழைய முடியாத அளவுக்குக் கூட்டம். நீதிமன்றத்தில் 50க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் குழுமியிருந்தனர். 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் குழுமியிருந்தனர். சரியாக 2.15 மணிக்கு விசாரணை தொடங்கியது.
திமுக சார்பில் முதலில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சிறப்பாகவே வாதாடினார். பல வருடங்கள் அனுபவம் மிக்க மூத்த வழக்கறிஞரைப்போல அழகாக வாதாடினார். திமுக வழக்கறிஞராக இருந்தாலும், சட்டத்தை மட்டுமே பேசினார். மாலை 4 மணி முதல் 10 மணி வரை மாநாடு நடத்த அனுமதி வேண்டி விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. மாநாட்டுக்காக 2500 அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த எண்ணிக்கையை ஒட்டியே மாநாட்டில் பங்கேற்பு இருக்கும். காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படத் தயாராக இருக்கிறோம் என்று எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளித்த பிறகும் மாநாட்டுக்கு அனுமதி மறுத்தது சட்டவிரோதம்.
வெளியுறவுத்துறை ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று முதலில் கடிதம் அனுப்பினாலும், இன்று மத்திய உள்துறை ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்த அனுமதி உண்டு என்று கடிதம் அனுப்பியுள்ளது. அதிகபட்சமாக 8 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்றே எதிர்ப்பார்க்கிறோம்.
மாநகர காவல்துறை சட்டத்தின்படி, ஒரு விழாவுக்கோ, மாநாட்டுக்கோ, போராட்டத்துக்கோ, அனுமதி மறுக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவரை அழைத்து அவரது விளக்கத்தைக் கேட்டபிறகே, அனுமதி மறுக்க வேண்டும் என்று உள்ளது. ஆனால், மனுதாரர் தரப்பு விளக்கத்தைக் கேட்காமலேயே இந்த மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்படடுள்ளது.
இது தொடர்பான பொதுநல வழக்கு விசாரணையின்போது, அரசு தலைமை வழக்கறிஞர் கூறிய சில காரணங்களைத் தாண்டி, புதிதாக சில காரணங்களை மாநகர ஆணையாளர் அனுமதி மறுத்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இப்புதிய காரணங்களைக் கூறியதாலேயே மனுதாரரைக் கருத்துக் கேட்டிருக்க வேண்டும்.
இதையடுத்து அரசுத் தலைமை வழக்கறிஞர் நவனீதகிருஷ்ணன் வாதாடுவதற்காக எழுந்தார். (இவரை உயர்நீதிமன்றத்தில் பெரும்பாலான வழக்கறிஞர்கள் வண்டு முருகன் என்று அழைக்கின்றனர். ஏன் என்பது தெரியவில்லை). திமுகவின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியைப் பாருங்கள். ஒவ்வொரு மாவட்டத்தின் சார்பாகவும், 100 வாகனங்களில் மாநாட்டுக்குச் செல்ல வேண்டும், 200 வாகனங்களில் வரவேண்டும் என்று விளம்பரங்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அப்படி இருந்தால் எப்படி வெறும் 8000 பேர் வருவார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
பதில் சொல்வதற்கு எழுந்த வில்சன், அரசு வழக்கறிஞர் வெறும் ஊகத்தின் அடிப்படையில் பேசுகிறார். ஊகத்தின் அடிப்படையில் மாநாட்டுக்கு அனுமதி மறுப்பதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்றார்.
உடனே நீதிபதி பால் வசந்தகுமார், வில்சனைப் பார்த்து 8 ஆயிரம் பேருக்கு மேல் வந்தால் நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வீர்களா என்று கேட்டார். அதற்கு வில்சன் எழுத்துபூர்வமாக கொடுத்தபிறகு எதற்கு சந்தேகம் என்றார்.
நீதிபதி, அரசு வழக்கறிஞரைப் பார்த்து, அவர்கள்தான் 8 ஆயிரம் பேருக்கு மேல் வரமாட்டார்கள் என்கிறார்களே… இன்னும் மாநாட்டுக்கு அனுமதி வழங்குவதற்கு உங்களுக்கு என்ன தடை என்று கேட்டார்.
அதற்கு வண்டு முருகன், மன்னிக்கவும், அரசுத் தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், “மை லார்ட்.. டெசோ மாநாட்டுக்கு அனுமதி அளித்தால் பாப்ரி மசூதி இடுத்தபோது நடந்ததைப் போல சம்பவங்கள் நடக்கும். நிலைமை கட்டுக்கடங்காமல் போய் விடும்” என்றார்.
மேலும் பல்வேறு கேள்விகளை இரு தரப்பினரையும் பார்த்து எழுப்பினார் நீதிபதி. அவர் கேள்வி எழுப்பும் வேகத்தைப் பார்த்ததும், விரிவான ஒரு தீர்ப்பு வழங்கப்போகிறார் என்றே அந்த நீதிமன்றத்தில் இருந்த அத்தனைபேரும் நினைத்தார்கள். அது போலவே விரிவான ஒரு தீர்ப்பை எழுதினார்.
“இரண்டு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பென்ச் இந்த வழக்கில் ஏற்கனவே இடைக்காலத் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த இடைக்காலத் தீர்ப்பின் தொடர்ச்சியாகவே இந்த வழக்கு வந்துள்ளது. ஒரு டிவிஷன் பென்ச் ஒரு வழக்கினை விசாரித்துக் கொண்டிருக்கையில், அதே பொருள் தொடர்பாக இந்த நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிப்பது சரியாக இருக்காது.”
இந்த உத்தரைவை நீதிபதி பால் வசந்தகுமார் பிறப்பிக்கையில் மணி 3.45.
இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் உடனே,
இதை ஏன் நீதிபதி 2.15 மணிக்கே இதைச் சொல்லியிருக்கக் கூடாது ?
இரண்டு மணி நேரம் ஏன் இத்தனை பேர் நேரத்தையும் வீணடித்தார் ?
பெரிய்யயய தீர்ப்பு எழுதுவது போலவே பல கேள்விகளை ஏன் கேட்டார் ?
என்றெல்லாம் கேள்வி எழுப்பினீர்கள் என்றால், நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும். உயர்நிதிமன்ற நீதிபதிகள் கடவுளுக்கு நிகரானவர்கள். அவர்களை கேள்வி கேட்கக் கூடாது.
இதையடுத்து, திமுக தரப்பு என்ன செய்யப்போகிறது என்று பத்திரிக்கையாளர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்துக் காத்திருந்தார்கள். மாலை 7 மணியளவில், மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) 11 மணிக்கு நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ் மற்றும் வேணுகோபால் அடங்கிய அமர்வு இவ்வழக்கை அவசர வழக்காகக் கருதி விசாரிக்கும் என்று தகவல் வந்தது.
மறுநாள் காலை 11 மணிக்கு நாடகம் மீண்டும் தொடங்கியது. மூத்த வழக்கறிஞர் வில்சன், தனது வாதங்களை எடுத்து வைத்தார். வில்சன் பேசிக்கொண்டிருக்கும்‘போதே நவநீதகிருஷ்ணன் குறுக்கிட்டார். அப்போது தலையிட்ட நீதிபதி எலிப்பி தர்மாராவ், கொஞ்சம் பொறுங்கள். நீங்கள் சொல்வதைக் கேட்கிறோம் குறுக்கிடாதீர்கள் என்றார். ஓ.கே மைலார்ட் என்று அமர்ந்தார்.
அடுத்து பேச எழுந்த நவநீதகிருஷ்ணன், இன்றைய செய்தித்தாள்களில் டெசோ மாநாடு, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் என்று வெளியிடப்பட்டிருந்த விளம்பரத்தைக் காட்டினார். பார்த்தீர்களா… அவர்களே இடத்தை மாற்றி விட்டார்கள் என்றார். நீதிபதி, அது மாற்று இடம். நீங்கள் என்ன சொல்ல வேண்டுமோ சொல்லுங்கள் என்றார்.
“மைலார்ட் மத்திய அரசு ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துபவர்கள் விடுதலைப்புலிகள். இந்த டெசோ மாநாட்டில் விடுதலைப் புலிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற உறுதியான தகவல் எங்களுக்கு உளவுப் பிரிவு மூலம் வந்திருக்கிறது என்று தெரிவித்தார்.
உளவுப் பிரிவு அறிக்கை என்றால் என்ன தெரியுமா ? சென்னை மாநகர ஆணையாளர் திரிபாதி முந்திரி பக்கோடா சாப்பிட்டுக் கொண்டே, மனதுக்கு வந்ததையெல்லாம் சொல்வதுதான் உளவுத்துறை அறிக்கை.
அந்த அறிக்கையை மை லார்ட். இது மிக மிக ரகசியம். இதை நீதிமன்றத்தின் பார்வைக்கு மட்டும் வைக்கிறேன் என்றார். அவர் கொடுத்த அறிக்கையை வாங்கி ஓரமாக வைத்த நீதிபதி, ஜெ.அன்பழகனின் மனுவில் பத்தி 7க்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். அந்த 7வது பத்தியில், மாநாட்டுக்கு வரும் கூட்டம் 8 ஆயிரத்தைத் தாண்டாது, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம் என்று இருந்தது.
அதைப் பார்த்த நவநீதகிருஷ்ணன், மை லார்ட், சென்னை நகரைக் காப்பாற்றுவதற்காக இந்த மாநாடு நடத்துவதை அனுமதிக்கக் கூடாது என்றார். சொல்லிவிட்டு, மிகப் பெரிய சட்ட நுணுக்கத்தை நீதிமன்றத்துக்கு விளக்கியது போல, பின்னால் திரும்பி தன்னோடு இருந்த மற்ற அதிமுக வழக்கறிஞர்களைப் பார்த்தார். அவர்கள் “தல பின்னிட்டீங்க” என்பது போல சைகை செய்தார்கள். பெருமிதத்தோடு நவநீதகிருஷ்ணன் தொடர்ந்தார்.
அப்போது நீதிபதி நவநீதகிருஷ்ணனைப் பார்த்து, சரி. அவர்கள் கலைஞர் அரங்கத்தில் நடத்தினால் உங்களுக்கு ஆட்சேபணை இல்லையா என்று கேட்டார். அதற்கு எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. அது திமுகவின் தலைமையகத்துக்குள் நடக்கிறது என்றார் நவநீதகிருஷ்ணன்.
மிஸ்டர் வண்டு முருகன், இப்போதுதானே விடுதலைப் புலிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள் என்று சொன்னீர்கள், கலைஞர் அரங்கத்தில் மட்டும் அவர்கள் கலந்து கொள்ள மாட்டார்களா… அப்படி கலந்து கொண்டால் அரசுக்கு கவலை இல்லையா என்பதை நீதிபதி கேட்க மறந்து விட்டார்.
இறுதியாக, நீதிபதி டெசோ மாநாட்டுக்கு அனுமதி மறுத்த சென்னை காவல்துறை ஆணையரின் கடிதத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், ஜெ.அன்பழகன் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ள உறுதிமொழிகளை மீறாமல், டெசோ மாநாடு நடைபெறவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதையடுத்து வழக்கு தொடர்பாக நீதிமன்றம் வந்திருந்த ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். “டாக்டர் கலைஞர் வாழ்க” என்ற கோஷங்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் முழங்கின. ஆர்.எஸ்.பாரதி, ஜெயலலிதாவை தன் பங்குக்கு திட்டிவிட்டு, கிளம்பினார்.
அதன் பிறகு மதியம் 3 மணிக்கே திமுக உடன்பிறப்புகள் சாரி சாரியாக விழா அரங்கத்தை நிறைத்தனர். எத்தனையோ இடையூறுகள் வந்தாலும், கருணாநிதி என்ற கயவர் கொடுத்த அழைப்பை ஏற்று, பெருந்திரளாக வந்திருந்த திமுக உடன்பிறப்புக்களைப் பார்க்க வியப்பாகத்தான் இருந்தது. 3 மணிக்கே அரங்கம் நிறையும் அளவுக்குக் கூட்டம். திமுகவின் இந்த அமைப்புக் கட்டமைப்பே கருணாநிதி போன்ற கயவர்களில் பலம். நாளை திமுக உடன்பிறப்புக்கள் யாவரும், ஐயப்பனுக்கு மாலை போடுங்கள் என்று ஒரு அழைப்பு விடுத்தால், 10 ஆயிரம் பேர், கருப்பு வேட்டியோடு அறிவாலயத்தில் கூடி, வாழும் ஐயப்பன் கலைஞர் வாழ்க என்று கோஷமிடுவார்கள்
கருணாநிதி தொடங்கி வைத்த இந்த டெசோ நாடகத்தில் கலந்து கொண்ட அத்தனைபேரும், எப்படித் தங்கள் பாத்திரத்தை சிறப்பாகச் செய்தார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்.
கருணாநிதியின் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி டெசோ மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறது என்றும், அதற்காக மாநாடு ஒன்று கூட்டப்படும் என்றும் அறிவித்தார். அந்த அறிவிப்பையொட்டி, கருணாநிதியின் கபட நாடகம் என்ற கட்டுரையை வெளியிட்டார் பழ.நெடுமாறன். டெசோ என்ற அமைப்பு உருவானது, அதை கருணாநிதியே கலைத்தது உள்ளிட்ட பல்வேறு விபரங்களை அந்தக் கட்டுரையில் பதிவு செய்தார் நெடுமாறன்.
முதலில் மாநாடு விழுப்புரத்தில் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், அறிஞர்கள் தங்குவதற்கும், போக்குவரத்துக்கும் சிரமம் என்று சென்னை ஒய்எம்சிஏ அரங்கத்தில் என்று அறிவித்தார் கருணாநிதி. இந்த மாநாட்டை திமுக உடன்பிறப்புக்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று சளைக்காமல் குரல் கொடுத்தார்கள் திமுவினர். மாநாட்டை வெற்றி பெறச்செய்ய, கருணாநிதியின் மகன், மகள் என்று குடும்பமே வேலை செய்தது.
மாநாட்டு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே, கொடநாட்டில் இருந்த ஜெயலலிதாவுக்கு, எப்படி கருணாநிதி இப்படி ஒரு மாநாட்டை நடத்தலாம் என்று பற்றிக் கொண்டு வந்தது. அதிமுக அடிமைகளை வைத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநாட்டை எதிர்த்து வழக்கு தொடுக்க வைத்தார்.
மாநாட்டுக்கான அனுமதி வழங்குவது பற்றி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் முடிவெடுப்பார் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன், நள்ளிரவு 12 மணிக்கு அனுமதி மறுக்கப்படும் கடிதம் கொடுக்கப்பட்டது. அதை எதிர்த்து திமுகவினர் தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது, தன் பங்குக்கு சென்னை உயர்நீதிமன்றமும், இந்நாடகத்தில் பங்கெடுத்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இரண்டு மணி நேரம் அனைவரது வாதங்களையும் கேட்டு விட்டு, எனக்கு இவ்வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லை என்று தீர்ப்பு வழங்குகிறார்.
வழக்கில் அரசுத்தரப்பில் வாதாடிய நவநீதகிருஷ்ணனோ, விடுதலைப்புலிகள் ஊடுருவி விடுவார்கள் என்று நீதிமன்றத்துக்கு பூச்சாண்டி காட்டுகிறார். நவநீதிகிருஷ்ணனின் வாதத்திறமையை புகழ்ந்து தனியாக ஒரு கட்டுரையே போடலாம்.
பழங்குடி இருளர் பெண்கள் ஐவர் பாலியல் வன்முறைக்கு ஆளான விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டி தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு விசாரணையின் போது, தலைமை நீதிபதி நவநீதகிருஷ்ணனிடம் “சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்” என்று கேட்டபோது, “ஹானரபிள் புரட்சித் தலைவி அம்மா ஹேஸ் சேங்ஷ்ன்ட் 5 லேக்ஸ்” என்றார். எரிச்சலடைந்த நீதிபதி, 5 லட்ச ரூபாய் கொடுத்தால் கற்பு திரும்பி விடுமா என்று கேட்டார். இதுபோல தொடர்ந்து அவகாசம் எடுத்தால் நாங்கள் கண்டனத்தை தெரிவிக்க வேண்டி வரும் என்று தலைமை நீதிபதி அறிவித்தவுடன், இரு கையையும் நீட்டி, “ப்ளீஸ் மைலார்ட். ஒன் வீக் டைம் ப்ளீஸ்” என்று கெஞ்சினார்.
விடுதலைப் புலிகள் ஊடுருவி விடுவார்கள் என்று சென்னை உயர்நீதிமன்றத்தை பயமுறுத்திய நவநீதிகிருஷ்ணனுக்கு, அவரின் புரட்சித் தலைவி, 04.10.1990 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் அளித்த பேட்டியை சவுக்கு நினைவூட்ட விரும்புகிறது.
“சிங்கள ராணுவமும், காவல்துறையும், இலங்கையில் தமிழ் இனத்தை அழிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகள் இயக்கம் துணிவான போராட்டத்தில் ஈடுபட்டு சிங்கள ராணுவத்தை எதிர்த்து தீரத்துடன் போர் நடத்தி வருகிறது. கடந்த இரு மாதங்களில் தமிழ்நாட்டில் புகார் கூறும் அளவுக்கு எந்தவிதமான நடவடிக்கைகளிலும் விடுதலைப் புலிகள் ஈடுபடவில்லை. இப்போது விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டால் இலங்கையில் உள்ள தமிழினம் முழுவதும் அழிந்துவிடும் என்பதை நாம் மனதில் நிறுத்த வேண்டும். விடுதலைப்புலிகளின் வெற்றி இலங்கைத் தமிழர்களின் வெற்றியாகும். அவர்களுக்கு உதவும் வகையில் எதுவும் செய்வதற்குப் பதிலாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி தன்னைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே கவனம் செலுத்தி வருகிறார். அவருடைய அனைத்து சக்தி மற்றும் கவனம் முழுவதும் முதலமைச்சரின் நாற்காலியைப் பாதுகாத்துக் கொள்வதற்கே அர்ப்பணிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் மனோபாவம் இவவ்வாறிருந்தால், இதற்கு மாறாக வேறு விதமாக செயல்படுவதை வி.பி.சிங்கிடம் எதிர்ப்பார்க்க முடியாது.
இலங்கைத் தமிழர்களின் கதி பற்றி வி.பி.சிங் எந்தவிதக் கவலையும் படுவதாகத் தெரியவில்லை. மாறியுள்ள சூழ்நிலையில் ஒரே மருந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை ஒட்டு மொத்தமாக ஆதரிப்பதுதான். தனது அதிகாரத்திற்கு உட்பட்ட இயன்ற அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் வழங்க வேண்டும். மத்திய அரசு, இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதில் குறிப்பிடப்பட்ட விதிகளின்படி சமாதானத் தீர்வு ஒன்றைக் காண வேண்டும். அல்லது விடுதலைப்புலிகளை இந்திய அரசு நூற்றுக்கு நூறு ஆதரிக்க வேண்டும்.
கேள்வி விடுதலைப்புலிகள் இயக்கம் அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்து விட்டது. ஆனால் நீங்கள் இன்னமும் விடுதலைப்புலிகளை ஆதரிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களே..
ஜெயலலிதா நம்முடைய நோக்கம் என்ன ? தமிழ் இனம் அழிக்கப்பட்டு விடக்கூடாது. இலங்கையில் வாழும் தமிழர்கள் இனப்படுகொலையிலிருந்தும், பூண்டோடு ஒழிக்கப்படுவதிலிருந்தும், பாதுகாக்கப்படவேண்டும். கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் தவறுகளைச் செய்துள்ளனர். ஆனால் நாம் விடுதலைப் புலிகளை ஆதரிக்காவிடில் அது இலங்கையில் தமிழ் இனத்திற்கு அழிவை ஏற்படுத்தும். அதை நாம் அந்த நோக்கோடு பார்க்க வேண்டும்.”
இப்படித்தான் ஜெயலலிதா பேசினார். இந்த ஜெயலலிதாதான் இன்று விடுதலைப் புலிகள் மாநாட்டுக்கு வருகை தருவதால், மாநாட்டைத் தடை செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் மூலமாக வாதாட வைக்கிறார்.
நவநீதிகிருஷ்ணன் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவது வழக்கறிஞருக்கு அழகு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். திமுகவில் எத்தனையோ பிரபலமான நல்ல வழக்கறிஞர்கள் இருந்தாலும், கட்சி சாராத பி.எஸ்.ராமன் என்ற மூத்த வழக்கறிஞரைத்தான் அரசு வழக்கறிஞராக வைத்திருந்தார் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசுக்கு ஏற்பட்ட பல்வேறு மூக்குடைப்புக்களுக்குப் பிறகும், அதற்குக் காரணமான நவநீதகிருஷ்ணன் இன்னும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராகத் தொடர்கிறார் என்றால், அது ஜெயலலிதாவின் சிறந்த நிர்வாகத் திறனுக்கு ஒரு சான்று.
ஜெயலலிதாவின் அரசியல் சாதுர்யத்துக்கு மற்றொரு எடுத்துக்காட்டு, டெசோ மாநாட்டை தடை செய்ய முயன்றது. ஒருவனுடைய எதிரி, தானாகவே தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொண்டு அழியப்போகும் வேளையில், யாராவது அவனைக் காப்பாற்றி உயிர்க்கொடுப்பார்களா ? அந்த வேலையைத்தான் செய்தார் ஜெயலலிதா.
மாநாட்டுக்கு வருவதாக வாக்களித்திருந்த பரூக் அப்துல்லா வரவில்லை என்று சொல்லிவிட்டார். சரத் யாதவ் வரவில்லை என்று சொல்லிவிட்டார். சரத்பவார் வரவில்லை என்று சொல்லிவிட்டார். இலங்கை எம்.பிக்கள் யாரும் வரவில்லை என்று சொல்லிவிட்டார்கள். பிறகு யாருக்காக இந்த மாநாடு ? இந்த மாநாட்டில் யார் கலந்து கொள்வார்கள் என்று கருணாநிதி நிம்மதியிழந்து புலம்பிக்கொண்டிருந்த வேளையில், டெசோ மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு என்று முடிவெடுத்து, மாநாட்டுக்கு உயிர் கொடுத்தார் ஜெயலலிதா. காவல்துறை மட்டும் தடை விதித்திருக்காவிட்டால், அந்த மாநாடு கேட்பாரற்று உதாசீனப்படுத்தப்பட்டிருக்கும். உலகத்தமிழர்கள் கருணாநிதியை காறி உமிழ்ந்திருப்பார்கள்.
இலங்கை எம்.பிக்களை டெசோ மாநாட்டுக்கு அழைத்த கருணாநிதியிடம் அவர்கள் வைத்த கோரிக்கைகள் நான்கு.
1) தனி ஈழம் கோரித் தீர்மானம்
2) ஐ.நா மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு
3) போர்ககுற்றங்களுக்கு கண்டனம்.
4) 13வது சட்டத்திருத்தம் தமிழர்களுக்கு எவ்விதத்திலும் பயன்தரவில்லை
இதில் முதல் மூன்று கோரிக்கைகளும் கருணாநிதியால், அரசியல் சூழல்களைக் காட்டி நிராகரிக்கப்பட்டன. குறைந்தபட்சம் நான்காவது கோரிக்கையையாவது ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற விருப்பத்தையும் நிறைவேற்ற மறுத்தார் கருணாநிதி. இதனால் மாநாட்டை முழுமையாக நிராகரிப்பது என்று முடிவெடுத்தனர் தமிழ் எம்.பிக்கள். அங்கேயிருந்த ஒன்றிரண்டு கருணாநிதியின் தொண்டரடிப் பொடிகளும், மாநாட்டில் பங்கெடுத்தால், தமிழ் மக்களின் முற்றான நிராகரிப்புக்கு ஆளாக நேரிடும் என்று மாநாட்டைப் புறக்கணித்தார்கள்.
இந்தக் காரணங்களால், மாநாட்டை எப்படி நடத்துவது என்று கடும் குழப்பத்தில் இருந்தார் கருணாநிதி.
ஆனால், மாநாட்டை தடை செய்ததன் மூலம் பேச்சுரிமையை பறித்த ஜெயலலிதாவை, வைகோ, பழ.நெடுமாறன், மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவை கண்டிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளினார் ஜெயலலிதா. மாநாட்டை தடை செய்ததால், கருணாநிதி மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானத்தை இயற்ற வழிவகை செய்தார்.
“தீர்மானம் – 14 :
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எப்போதுமே விரோதப்போக்கினைக் கடைப்பிடிக்கும் அ.தி.மு.க. வும், அ.தி.மு.க. ஆட்சியாளர்களும் – அதன் தொடர்ச்சியாக இப்போதும் நாம் நடத்த ஏற்பாடு செய்த – ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்புக்காக இலங்கை மற்றுமுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்கள், ஆர்வலர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டை சென்னையில் நடத்துவதற்குத் தடையாக பல்வகையானும் இடையூறுகளைச் செய்தனர்.
மேலும் காவல் துறையின் மூலம் அனுமதி மறுத்து, நீதி மன்றம் சென்றே அனுமதி பெற வேண்டும் என்னும் நிலையினை உருவாக்கிய தமிழக அ.தி.மு.க. அரசின் தமிழீழ எதிர்ப்புப் போக்கினை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.”
அதிமுக அரசின் “தமிழீழ எதிர்ப்புப் போக்கினை” கண்டிக்கிறதாம் மாநாடு. எப்படி இருக்கிறது ?
விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் உயிர்பெற்று எழுந்தாலேயொழிய, ஈழத்தமிழ் மக்களுக்கு எவ்வித விடிவும் கிடைக்கப்போவதில்லை. தமிழீழத் தாயகம் “புலிகளின் தாகம்”. வேறு எவருடைய தாகமும் அல்ல அது.
தமிழகத்தை ஆண்ட, ஆண்டுகொண்டிருப்பவர்களால், இலங்கைக்கு ராணுவத்தை அனுப்ப இயலாதுதான். ஆனால், குறைந்தபட்சம், வாழ வழியின்றி ஓடி வந்த அகதிகளை நன்றாக நடத்தலாம் அல்லவா ? அவர்கள் வாழ்வை செழிக்க வைக்க முடிந்ததைச் செய்யலாம் அல்லவா ? ,இங்குள்ள நிலைமை நன்றாக இருந்தால், எதற்காக இலங்கைத் தமிழர்கள் உயிராபத்தையும் மீறி ஆஸ்திரேலியாவுக்கு ஓடுகிறார்கள் ? இங்குள்ள அகதிகளுக்கு என்ன செய்திருக்கிறார்கள் ஜெயலலிதாவும் கருணாநிதியும் ?
கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில், ஆனந்த விகடனில் அகதிகள் முகாம் குறித்து, விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ ரவிக்குமார் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் ஜுன் 2006ல் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையைப் படித்த கருணாநிதியின் நெஞ்சம் உருக்கமானதாம். உடனே ரவிக்குமாரை தொலைபேசியில் அழைத்து, அய்யா நீயே போய் அந்த அகதிகள் முகாமை பார்வையிட்டு அவர்கள் குறையைத் தீர்க்க வழி சொல் என்று சொன்னார் கருணாநிதி. ரவிக்குமாரும், முகாம்களை பார்வையிட்டு ஒரு அறிக்கையை அளித்தார். அதன் பிறகு அந்த அறிக்கையின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டதா இல்லையா என்பது யாருக்குமே தெரியாது. ஆனால், ஆனந்த விகடனில் அந்தக் கட்டுரையை எழுதியதன் மூலம், விடுதலைச் சிறுத்தைகளுக்கும், திருமாவளவனுக்கும் பிடித்த தீராத பிணி இன்று வரை போகவில்லை. ஆம், அவர்கள் திமுக கூட்டணியில் இணைய அந்தக் கட்டுரை வழிவகுத்தது. கூட்டணியில் இணைந்தவர்கள், திமுகவின் தலித் பிரிவாக இன்று மாறிவிட்டார்கள்.
அதன் பிறகு, 2009ல் என்று நினைவு. இந்தியா டுடேவில், செய்தியாளர் பொன்.மகாலிங்கம், அகதிகள் முகாமைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதுவரை அகதிகள் முகாமைப்பற்றிக் கேள்வியே பட்டிராதவர் போல கருணாநிதி உடனடியாக அகதிகள் முகாமை சீரமைக்க உத்தரவிட்டார்.
தற்போது அகதிகள் முகாமின் நிலை என்ன என்பதை, கடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாமின் உண்மை நிலை குறித்து, தோழர் புதுவை சுகுமாறனின் அறிக்கையை படியுங்கள். ஈழத்தமிழருக்காக கருணாநிதி ஒன்றுமே செய்யவில்லை, நான்தான் ஈழத்தாய் என்று தன்னை அறிவித்துக் கொள்ளும் ஜெயலலிதா மட்டும் இந்த அகதிகளுக்காக என்ன செய்து விட்டார் ?
மற்ற அகதிகள் முகாமை விடுங்கள். அவர்களாவது குடும்பத்தோடு வசிக்கிறார்கள். செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லியில் சிறப்பு முகாம் என்ற பெயரில், கொடுஞ்சிறையில் இன்னமும் ஈழ அகதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
பூந்தமல்லி முகாமில் இன்று வரை இருப்பவர்களின் பட்டியல்.
1) ஜெயமோகன் 2) தங்கரூபன் 3) பாகீரதன் 4) கங்காதரன் 5) சந்திரகுமார் 6) பரமேஸ்வரன் 7) சிவதீபன் 8) செந்தூரன்.
இவர்கள் இலங்கைக்கு மருந்து கடத்த முயன்றவர்கள், சேட்டிலைட் போன் வைத்திருந்தவர்கள். ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றவர்கள் என்ற குற்றச்சாட்டுகளில் சிறையிலிருப்பவர்கள்.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருப்பவர்கள் 1) விக்ரமசிங்கம் 2) வேந்தன் 3) ஜெகதீபன் 4) நந்தகுமார் 5) செல்வராஜ் 6) சதீஷ்குமார் 7) பராபரன் 8) சேகர் 9) அருள் காசிலிங்கம் 10) சுதர்சன் 11) சதீஷ் 12) சதாசிவம் 13) அலெக்ஸ் 14) சுதர்சன் 15) சண்முகநாதன் 16) தர்மசீலன் 17) குட்டி 18) பாலகுமாரன் 19) அலெக்ஸ் 20) சிவா 21) செல்வா 22) நர்மதன் 23) செல்வம் 24) ட்யூக் 25) ராஜன் 26) இலங்கைநாதன் 27) கஜன் 28) நேரு 29) மாயூரன் 30) ரமேஷ் 31) சுதர்சன் 32) சண்முகநாதன் 33) தர்மசீலன் 34) சண்முகலிங்கம் 35) சந்திரக்குமார் 36) சிரஞ்சீவி மாஸ்டர் 37) பாய்
இவர்கள் தங்களை மற்ற முகாம்களில் இருக்கும் தங்கள் உறவினர்களோடு சேர்ந்து வாழ அனுமதியுங்கள் என்று மட்டுமே கோருகிறார்கள். இந்த குறைந்தபட்ச கோரிக்கையை நிறைவேற்றினார்களா கருணாநிதியும் ஜெயலலிதாவும் ?
உண்ணாவிரதம் இருந்த செங்கல்பட்டு அகதிகளை காவல்துறையை விட்டு தடியால் அடித்து கொடூரமான சித்திரவதை செய்தவர்தான் கருணாநிதி. செம்மொழி மாநாட்டில் ஏதாவது கலவரம் செய்து விடப்போகிறோர்களோ என்று, அவர்களை முகாமைவிட்டு வெளியே வரக்கூடாது என்று மிரட்டியது இதே கருணாநிதிதான்.
தற்போது, ஜெயலலிதாவின் காவல்துறை, இங்கே உள்ள ஈழத்தமிழர்களுக்குள்ளே சண்டை மூட்டி, அவர்களை ஒருவர் மேல் ஒருவர் புகார் கொடுக்க வைத்து, வழக்கு மேல் வழக்காகப் போட்டுக் கொண்டிருக்கிறது.
இதுதான் இந்த நடிகர்கள் ஈழத்தமிழர்கள் மீது காட்டும் உண்மையான அக்கறை.
புலிகள் இயக்கத்தின் பின்னடைவிற்குப் பிறகு, ஈழத்தமிழர்கள் தங்கள் வாழ்வின் மீதே நம்பிக்கை இழந்து விட்டார்கள். கருணாநிதி, ஜெயலலிதா போன்ற சாட்சிக்காரர்களின் காலில் விழுவதை விட, சண்டைக் காரனின் காலில் விழலாம் என்ற முடிவுக்கே அவர்கள் வந்துவிட்டார்கள். அவர்களிடம் இப்போது இருப்பது உயிர் மட்டுமே. உடைமை இழந்து, உற்றார் இழந்து, மானமிழந்து, உயிரை மட்டும் பிடித்துக் கொண்டு வாழ்பவர்களை கிண்டல் செய்வது போல மாநாடு போடுவதற்கும், அதைத் தடுத்து அரசியல் ஆதாயம் தேடுவதற்கும் எப்படி மனது வருகிறது கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் ?
தன்னை 27 நாட்கள் சிறையில் வைத்தார் என்பதற்காகத்தானே கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்தார் ஜெயலலிதா ? தன் மகள் சிறைலிருக்கிறார் என்பதால் தாங்க முடியாமல் துடிதுடித்த கருணாநிதி டெல்லியையே வட்டமிட்டுக் கொண்டிருந்தார் அல்லவா ? இவர்களைப்போலத்தானே ஈழத்தமிழனும் ? அவர்களுடையதும் உயிர்தானே… அவர்களும் மனிதர்கள்தானே… அவர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் அவர்களை ஏளனம் செய்யாமலாவது இருக்கலாம் அல்லவா ?
உங்களிடம் அவர்கள் எந்த உதவியையும் கோரவில்லை. கோரமாட்டார்கள். உங்கள் அரசியல் ஆதாயத்துக்காக அவர்களை வைத்து விளையாடாதீர்கள்.
அவர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்.