டெசோவின்போது சவுக்கு வருந்தியது இலங்கைத் தமிழர் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டபோது நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லையே என.
முள்ளிவாய்க்காலின்போது மட்டுமல்ல குஜராத் படுகொலைகள்போதோ அல்லது விதர்பா விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டபோதோகூட மனிதநேயர்கள் அதிகம் செய்யமுடியவில்லை.
கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவங்குகிறது. கட்டிடத்தொழிலாளர்கள் விபத்துக்களில் மரணமடைகின்றனர், அடிமைகள் போல் நடத்தப்படுகின்றனர். பல முனைகளிலிருந்தும் அடித்தட்டுமக்கள் மீது இடையறா தாக்குதல். இந்நிலையில் ஆள்வோரின் அராஜகத்தை அல்லது அக்கறையின்மையைத் எதிர்கொள்வதெப்படி?
நிச்சயம் புரட்சி.ஒரு வழிதான். இன ரீதியாகவோ, மொழி ரீதியாகவோ, பிராந்திய ரீதியாகவோ, ஓரிரு கட்டங்களில் வர்க்க ரீதியாகவும் கிளர்ந்தெழுந்து அக்கிரமக்காரக்காரர்களை ஆட்சியிலிருந்து அகற்ற முடிந்திருக்கிறது. ஆனால் இனி அப்படியெல்லாம் செய்வது சாத்தியமா?.
1917 புரட்சிக்குப் பிறகு முதலாளிகள் விழித்துக்கொண்டார்கள். அதனால்தான் இரண்டாம் உலகப்போருக்குப் பின் மார்ஷல் உதவித்திட்டம் என்பதெல்லாம் அமல்படுத்தப்பட்டு பலவீனமடைந்த மேற்கத்திய நாடுகளில் வர்க்கப் புரட்சி தடுக்கப்பட்டது. சீனாவில் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருந்தார்களெனில். சியாங்கே ஷேக் படுமுட்டாள்தனமாக நடந்துகொண்டிருக்காவிட்டால் அவர்கள் மாவோவையும் தடுத்து நிறுத்தியிருப்பார்கள்.
மற்றபடி ஆயுதவழியான மாற்றங்களெல்லாம் அமெரிக்க உதவியுடனேயே நடந்திருக்கிறது.
ஆள்வோர் எதிர்ப்பை பலவீனப்படுத்தப் புதிய புதிய யுக்திகளை கண்டுபிடித்துக்கொள்கின்றனர், தவிரவும் அணு ஆயுதங்கள், ராணுவம், போலீசார் என பல்வேறு வழிகளில் தங்கள் வலிமையைக் கூட்டிக்கொள்கின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் நமக்கு ஓரளவேனும் நம்பிக்கையை அளிக்கக்கூடியது அராபிய வசந்தம்தான். ஓரிரு நாடுகளிலாவது அமைதிவழியில் ஆட்சி மாற்றம். ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாய் மக்கள் வாழ்நிலையில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லையாயினும் ஓரளவேனும் சுதந்திரக்காற்றை மக்கள் சுவாசிக்கமுடிகிறது.
ஆனால் அத்தகைய மாற்றங்களுக்குக் காரணம் மிகக் கொடிய அடக்குமுறை, புரட்சியாளர்களுக்கு மேற்கத்திய அரசுகள் மற்றும் ஊடகங்களின் ஆதரவு, அப்படி ஒரு நிலை உருவாக நாம் என்ன செய்யமுடியும், செய்யவேண்டும்? எந்த ஒரு முனையிலும் மாற்றத்திற்காக சிறு பத்திரிகைகள் துண்டுப் பிரசுரங்கள், அறைக்கூட்டங்கள், ஃபேஸ் புக் உள்ளிட்ட இணைய தளங்கள் இப்படியாகப் பரப்புரை செய்து ஓரளவேனும் மக்களைத் திரட்டமுடியும் அவ்வாறு உருவாகும் ஆதரவு பெருகும்போது வேறு வழியில்லாமல் வெகு ஜன ஊடகங்களும் செய்திகள் வெளியிடத்துவங்கும்.
அன்னா ஹசாரேயின் போராட்டம் இப்படித்தான் துவங்கியது. ஆனால் பல்வேறு முரண்பாடுகள் காரணமாக அது பிசுபிசுத்துப்போயிற்று. நடுத்தரவர்க்கத்தினரின் சிந்தனையோட்டத்திற்கிசைவாக இருந்ததன் விளைவாகத்தான் அன்னாவிற்குத் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஆதரவு கிடைத்தது என்பது ஓரளவு உண்மைதான். ஆயினும் ஒரு கட்டத்தில் பெருமளவு மக்கள் திரண்டிருக்காவிட்டால் தொலைக்காட்சிகள் அவர் பக்கம் திரும்பியிருக்காது. அந்த அளவாவது மக்களைத் திரட்ட என்ன வழி?
நாம் ஏற்கெனவே விவாதித்திருக்கும் கூடங்குளம் பற்றியே இப்போது மீண்டும் பேசலாம். ஓராண்டாகிவிட்டது. குறிப்பிடத் தகுந்த அளவு மக்களை அணிதிரட்டி, ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கவைக்கமுடிந்தது. ஃபுகுஷிமா ஒரு காரணியென்றாலும் உதயகுமார் உள்ளிட்டோரின் விடாமுயற்சியின் விளைவாய்தான் அப்படியொரு மக்கள் அலை எழும்பியது. ஆட்சியாளர்களும் சற்றுத் தடுமாறிப்போனார்கள்.
ஆனால் இன்று என்ன? தேவாலய வளாகத்திற்குள் ஒடுங்கிவிட்டது போராட்டம். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றிருக்கிறது, தீர்ப்புக்காக எல்லோரும் காத்திருக்கின்றனர். ஆனால் பலகோடி ரூபாயைக் கொட்டியிருக்கும் ஒரு திட்டத்திற்கு நீதிமன்றம்க் தடைவிதிக்கும் வாய்ப்பே இல்லை. ஏதோ மக்களின் பாதுகாப்பிற்காக சிலவற்றைச் சொல்லலாம். அவ்வளவுதான்.
கூடங்குள போராட்டத்திற்குத் திருச்சபை வட்டார ஆதரவைத் தாண்டி பெரிதாக நிறுவன ஆதரவு இல்லை. மீனவ மக்கள் திரண்டிருக்கிறார்கள். ஆனால் மீனவரல்லாதோர், கிறித்தவரல்லாதோர்? துவக்கத்தில் அப்பகுதி மக்கள் பெருமளவில் வெகுண்டெழுந்தது போலவே இருந்தது, அது ஏன் பின்னர் குறைந்தது, இழந்த ஆதரவை மீட்டெடுக்க போராட்டக்குழுவினர் என்ன செய்தனர் என்பதெல்லாம் தெளிவாக இல்லை. எப்படியும் இன்றைய சூழலில் ஏதோ ஒரு கட்டத்தில் போராட்டத்தைத் திரும்பப் பெறவேண்டிய கட்டாயம் ஏற்படத்தான் செய்யும்..
போரட்டக்குழுவினர் கூட்டணி அமைத்தனர். சிறிய சிறிய அமைப்புக்களுடனும் கைகோர்த்தனர். பல்வேறு ஆர்வலர்களை அழைத்து வந்தனர். ஆனால் இறுதியில் எஞ்சி நிற்கப்போவது என்ன? குறைந்த பட்ச சலுகைகளையாவது பெற்று, அடுத்த மின் நிலையம் அங்கில்லை யென்றோ, அமைந்தாலும் மிகக்கடுமையான பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்படும் என்ற அளவிலாவது அரசிடமிருந்து வாக்குறுதி பெற்றிருந்தாலோ சரி, அந்த அளவில் வெற்றியே.. இப்போதோ நீதிமன்றத்தைமட்டுமே நம்பியிருக்கவேண்டிய சூழல்.
என்ன செய்திருக்கவேண்டுமென்பது ஒரு புறமிருக்க இனி என்ன என்பதுதான் கேள்வி. எப்போது முடித்துக்கொண்டாலும் சரி, அந்நேரத்தில். கைவிடுவதறகான சூழல் குறித்து விளக்கமாக அறிக்கையொன்று வெளியிட்டு, ஓரிருநாட்களாவது கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி சிறை செல்ல முன்வரவேண்டும். இல்லை சிறைக்கஞ்சி ஒளிந்துகொண்டிருக்கின்றனர் என்று விஷமப் பிரச்சாரத்திற்கு இச்சமூகப் போராளிகள் பலியாகிவிடலாம். ஆனால் அதைவிட முக்கியம் அணு உலை எதிர்ப்பமைப்பு அனைத்து துறைகளிலும் அரசின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து மக்களிடையே தவறுகளை அம்பலப்படுத்தும் அமைப்பாக மாறவேண்டும். மக்களைத் திரட்டி ஓராண்டு அனைவரது கவனத்தையும் திருப்பியதே மிகப்பெரும் வெற்றிதான். ஆனால் ஏதோ காரணங்களினால் முடித்துகொண்டாலும் இயக்கம் முடிந்துவிடக்கூடாது ஆளும்வர்க்கம் அஞ்சி நடுங்கும் ஒரு சவுக்காகவேண்டும்.
கருத்தியல்ரீதியாக திவாலாகிப்போன அரசியல் கட்சிகளுடன் கைகோர்க்காமல் தங்களது நேர்மையை வலியுறுத்தும் வண்ணம் தொடர்ந்து செயல்பட உதயகுமார் தலைமையிலான குழு முன்வரவேண்டும்.
தவிரவும் களத்தில் இறங்கும் எக்குழுவும், நம்பகத்தன்மைக்கு மேலதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும். அன்னா ஹசாரே குழுவின் முன்னணி உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோதும் அவர்கள் விலகத்தயாரில்லை, அவ்ர்களை விலக்க ஹசாரேயும் தயாரில்லை, ஹசாரே மீது கூட அறக்கட்டளை நிதியைத் தவறாகப் பயன்படுத்துகிறார் எனக் கூறப்பட்டது. விளைவு மக்கள் மத்தியில் அவர்களுக்கிருந்த மதிப்பு சரிந்தது.
எவ்வித் நம்பகத்தன்மையும் இல்லாமல் கட்சிகள் அரசியல் நடத்தமுடியும். ஆறுமணி நேர உண்ணாவிரதமிருக்கலாம், பிறகு என் இதயம் உங்களுக்காகவே துடிக்கிறதெனலாம், ஊரைக்கூட்டி மாநாடு போடலாம், எல்லாவித அட்டூழியங்களையும் செய்துவிட்டு தேசபக்தர்களாக நாடகமாடலாம், வாக்குக்களையும் பெறலாம், மக்களாட்சியின் மகத்துவம் அது.
ஆனால் மிகப் பெரும் சக்திகளுடன் மோதி தங்களுக்கும் ஓர் இடத்தைப் பிடிக்க முயலும் ஆர்வலர் குழுக்கள் மிகக் கவனமாகச் செயல்படவேண்டும். சிறிய சறுக்கலென்றாலும் பெரும் பின்னடைவில் முடியக்கூடும். அந்த அளவில் கூடங்குள நண்பர்கள் தேவையில்லாமல் ஏதாவது ஓர் அம்சத்தினை பூதாகாரப்படுத்த அது தவறு என்று தெரியவரும்போது போராட்டவீச்சு குறைகிறது.
நான் இன்னொன்றையும் நினைத்து வருந்துகிறேன். அவ்வப்போது உதயகுமார் ஆள்வோரை, மிகக் கடுமையாக சாடுகிறார். இப்படிச் செய்வதால் எதிரிகள் மேலும் கோபமுறக்கூடும், பொதுமக்கள் சிலரிடையேகூட அதிருப்தி ஏற்படக்கூடும்.
இலங்கை சோகத்திற்குப் பின் முகநூலிலும் மற்ற பல தளங்களிலும் மிக ஆக்ரோஷமான சொற்கள் உதிர்க்கப்படுகின்றன., கவிஞர் தாமரை முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு சிங்களவரை சபித்து எழுதிய கவிதையை ஆயிரக்கணக்கில் அச்சடித்து நமது உணர்வை காட்டிக்கொள்ளலாம். டெசோ நாடகத்தை அரங்கேற்றிய கருணாநிதியை சகட்டுமேனிக்கு சாடி கார்ட்டூன் போடலாம், சுவரொட்டிகள் ஒட்டிக்கொள்ளலாம். செங்கொடி மூட்டிய தீயில் சிங்களப் பேரினவாதம் கருகட்டும் என முகநூலில் பக்கத்திற்குப் பக்கம் எழுதித்தள்ளலாம். ஆயின் ஆகப்போவது என்ன?
சமூகம் கொந்தளிக்கும்போது நாடி நரம்பு புடைக்கப் பேசி புரட்சியை முன்னெடுக்கலாம். மற்றவைகை சூழலில் நிதானம் தவறும்போது நண்பர்கள் பலரை இழக்கிறோம், நகைப்புக்கும் உள்ளாகிறோம், வெற்றிரைச்சலாகிறது நம் முழக்கங்கள், இறுதியில் கேட்பாரில்லாமல் போய்விடுகிறோம். எது கொந்தளிப்பு, பாரதூர விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நிலை நெருங்கிவிட்டதா என்பதை சரியாகக் கணிக்கும் முதிர்ச்சி சமூக மாற்றத்தினை விழைவோருக்கு மிக அவசியம்.
எல்லாவற்றுக்கும் மேலாக நாம் ஆதரிப்போர் தவறுபுரிந்தாலும் தவறு நடந்துவிட்டது என்று ஏற்றுக்கொண்டு சரியான திசையில் செல்லவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லும் திராணி நமக்குவேண்டும்.
அப்படிச் சொல்லத் தயங்குவதால் தவறுகள் அதிகமாக, இயக்கங்களுக்கே பின்னடைவு ஏற்படலாம், ஆதரிக்கும் நாமும் நம்பகத்தன்மை இழக்கிறோம். இறுதியாக மக்களாட்சி என்பது கேலிக்கூத்தாகிவிட்ட நிலையில், ஏறத்தாழ அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆளும்வர்க்கங்களின் ஏவலாட்களாகப் போய்விட்ட நிலையில் உண்மையான சமூக மாற்றத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொள்ளும் ஆர்வலர்குழுக்களுக்கு மிகப்பெரும் பங்கிருக்கிறது. அவை நட்புசக்திகளைப் பெருக்கிக்கொள்ளவேண்டும், அறம் சார்ந்த நெறிகளிலிருந்தும், சமூகத்தால் நாகரிகம் எனக் கருதப்படும் சிலவகை அணுகுமுறைகளிலிருந்தும் பிறழக்கூடாது.
செல்லவேண்டிய தூரம் மிக அதிகம். உறங்க நமக்கு நேரமில்லை. மிகவிழிப்புடன் செயலாற்றவேண்டும்.
கானகன்.