அலெக்ஸ் போன் செய்தார் சார். கோபாலபுரம் ஏரியாவில் இருக்கிறாராம். சில நிமிடங்களில் வந்துவிடுவதாகச் சொன்னார்’’ என்று பாண்டியனிடம் இன்டர்காமில் தகவல் கொடுத்தார் அர்ச்சனா.
‘‘சரிம்மா… அவர் வருவதற்குள் சூடா இஞ்சி டீயை ஆர்டர் செய்’’ என்றார் பாண்டியன்.
சில நிமிடங்களில் டீயுடன் ஆபிஸ் பாய் நுழையவும், பாண்டியன் அறைக்குள் அலெக்ஸ் நுழையவும் சரியாக இருந்தது.
‘‘என்ன அலெக்ஸ், போன் செய்வதாக இருந்தால்கூட கோபாலபுரம் பகுதியில் இருந்துதான் போன் செய்வீர்களா?’’ என்று கிண்டலாகக் கேட்டார் பாண்டியன்.
‘‘இந்திய அரசியலே இப்போது மையம் கொண்டிருக்கும் பகுதி கோபாலபுரம்தானே. அதை மையமாக வைத்துத்தானே இன்றைக்கு ஸ்பெக்ட்ரம் புயல் வீசி, கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கும் மேலாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கி விட்டன. அரசியலில் எத்தனையோ நிகழ்வு-களையெல்லாம் சந்தித்திருக்கிறார் கலைஞர். ஏற்றத் தாழ்வுகள் என்பது அவருக்கு சாதாரணமானது. ஆனால், சமீபத்திய நிகழ்வுகள் அவரையும், குடும்பத்தினரையும் ரொம்பவே பாதித்-திருக்கிறதாம். கனிமொழியோடு பவர் புரோக்கர் பெண்மணி நீரா ராடியா பேசிய பேச்சு கலைஞர் குடும்பத்தையே தாறுமாறாக சுழற்றி அடித்திருக்கிறதாம். அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தன்னுடைய தோழி ஒருவரிடம் ரொம்பவே புலம்பி விட்டாராம் கனிமொழி’’
‘‘என்னன்னு புலம்பினாராம்?’’
‘‘தன்னுடைய நிலையைச் சொல்லித்தான் வருந்துகிறாராம். ‘வாழ்க்கையே நரகமா கழியுது. ஒவ்வொரு நாளும் போராட்டமா இருக்கு… இப்ப இருக்குற சிக்கல்ல இருந்து எப்படித்தான் விடுபடப் போறேனோ’ என்று சொல்லி வருத்தப்பட்டாராம்’’
‘‘பிரச்னையிலிருந்து விடுபட தோழி வழி சொன்னாராமா?’’
‘‘அவர் எதுவும் சொல்லவில்லையாம். இருந்தாலும், கனிமொழியை அடுத்து சந்தித்த போலீஸ் நண்பர் ஒருவர், ஆறுதலாக சில வார்த்தைகளைச் சொன்னாராம்’’
‘‘எந்த மாதிரி ஆறுதல் வார்த்தைகள்..?’’
‘‘வார்த்தைகள் இருக்கட்டும். அவர் செயலிலேயே இறங்கினாராம். ‘எல்லா விஷயங்களையும் நான் டெல்லிக்குப் போய் சரி செய்துவிடுகிறேன்’ என்று சொல்லி, டெல்லிக்குப் போய் வந்தாராம் போலீஸ் நண்பர்’’
‘‘முயற்சிகள் எதுவும் பலனளித்ததா என்ன?’’
‘‘அங்கேதான் சறுக்கல். டெல்லிக்குப் போனவர், அங்கே யாரையும் சந்திக்க முடியவில்லையாம். பிரபல ஹோட்டல் ஒன்றில் ரூம் போட்டு தங்கிவிட்டு, வெறும் கையோடு சென்னைக்குத் திரும்பியதுதான் மிச்சம்’’
‘‘அதன்பிறகு அவர் கனிமொழியை சந்தித்தாரா?’’
‘‘கனிமொழியை மட்டுமல்ல… ராசாத்தி-அம்மாளையும் சந்தித்திருக்கிறார். ‘டெல்லி போன காரியம் எதுவும் கைகூடவில்லை’ என்றும் சொல்லியிருக்கிறார். நல்ல சேதி வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு இப்படியொரு தகவல் கிடைக்க, எரிச்சலடைந்தார்களாம். ‘போதும்… உங்களை நம்பி நாங்க நாசமாப் போனது…’ என்று, சகட்டுமேனிக்கு போலீஸ் நண்பரை கடும் சொற்களால் வறுத்தெடுத்து விட்டார்களாம். கடைசியாக, ‘இனிமே, இந்தப் பக்கம் தயவு செஞ்சு வந்துடாதீங்க…’ என்றும் சொல்லி முகத்தைக் காட்ட, தொங்கிய முகத்தோடு திரும்பி விட்டாராம் போலீஸ் நண்பர்’’
‘‘விவகாரம் இத்தனை சீரியஸாகப் போகிறதாக்கும்?’’
‘‘நடப்பதென்ன அத்தனை சாதாரணமான விஷயமா? ஒட்டுமொத்த தி.மு.க.வின் எதிர்காலத்துக்கே வேட்டு வைக்கக் கூடியவை. அதனால்தான் கலைஞர் ரொம்பவே சீரியஸாகி இருக்கிறாராம். இதற்கிடையில், சமீபத்திய நிகழ்வுகளால் அண்ணனும் தம்பியும்கூட ரொம்பவே கலங்கிப் போயிருக்கிறார்களாம்…’’
‘‘எந்த அண்ணன் & தம்பி?’’
‘‘இதைக்கூட யூகிக்க முடியவில்லையா? அழகிரியும், ஸ்டாலினும்தான். ஸ்பெக்ட்ரம் விவகாரம் பெரிதாகி, ஆ.ராசா ராஜினாமா செய்த பிறகும் நாடாளுமன்றத்தில் புயல் அடங்கவில்லை என்றதும், அவர்கள் இருவருமே கலைஞர் மீது ஏக வருத்தத்தில் இருக்கிறார்களாம். ஒட்டு மொத்தமாக குடும்பத்துக்கே கெட்ட பெயர் வந்துவிட்டதே என்று இருவரும் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு வாரமாக இருவரும் கலைஞரிடம் பேசவே இல்லையாம்’’
‘‘கலைஞர்தான், மதுரையில் நடந்த துரை தயாநிதி திருமணத்துக்கெல்லாம் சந்தோஷமாகப் போய் வந்தாரே?’’
‘‘அதன்பிறகுதானே, கனிமொழி&நீரா ராடியா பேச்சு அடங்கிய சி.டி. வெளியாகி, தி.மு.க.வை ஒரு வழி செய்துவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன்னால், ஸ்டாலினுக்கு போன் போட்டு பேச முயன்றிருக்கிறார் கலைஞர். ‘நான் டூர் கிளம்பிக்கிட்டு இருக்கேன். சென்னை திரும்பியதும் பேசுகிறேன்’ என்று இணைப்பைத் துண்டித்தாராம் ஸ்டாலின்’’
‘‘மனசு உடைஞ்சு போயிருப்பாரே கலைஞர்?’’
‘‘இருக்காதா பின்னே… இருந்தாலும், மனசைத் தேற்றிக் கொண்டு அழகிரிக்கு போன் போட்டாராம். ஆனால், அவரும் போனை எடுக்கவில்லையாம். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக நண்பர்களோடு மகாபலிபுரம் ஓட்டல் ஒன்றில்தான் தங்கியிருக்கிறாராம் அழகிரி. ஆனாலும், கலைஞரிடம் பேசவில்லையாம்’’
‘‘இப்பப் புரியுது. நீங்க கோபாலபுரம் பகுதியிலிருந்து ஏன் போன் செய்தீர் என்பது. அந்த வட்டாரங்களில்தான் எத்தனை எத்தனை செய்திகள்?’’
‘‘இப்போதைய நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கும் சில யோசனைகளை, கலைஞருக்கு கட்சி முக்கியஸ்தர் ஒருவர் மூலமாக அண்ணனும் தம்பியும் அனுப்பியிருக்கிறார்களாம். அந்த விஷயங்கள் குறித்துத்தான் கலைஞர் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறாராம்… இது குறித்துத்தான் கோபாலபுரம் இல்லத்தில் சிலரோடு தொடர் டிஸ்கஷனில் இருக்கிறாராம் கலைஞர்…’’
‘
‘என்ன, ராசாவை மேல் மட்டத்திலிருந்து கொஞ்சம் விலக்கி வைப்பதுதானே?’’
‘‘அதுதான் கிட்டத்தட்ட நடந்தே விட்டதே. சில நாட்களுக்கு முன்னால், ராசாவுக்கு அந்தத் தகவல் போலீஸ் நண்பர் ஒருவர் மூலமாக சொல்லி அனுப்பப்பட்டு விட்டதாம். ‘பிரச்னைகளெல்லாம் அமுங்கி ஸ்பெக்ட்ரம் விவகாரம் நீர்த்துப் போகும் வரையில் முதல்வரை சந்திக்க வர வேண்டியதில்லை’ என்று நாசூக்காக ராசாவுக்கு சொல்லிவிட்டார்களாம். இதனால் ராசா ரொம்பவே மனம் நொந்து போயிருக்கிறாராம்…’’
‘‘இருக்கத்தானே செய்யும்…’’
‘‘இது முதல்கட்டமாக நடந்தது. அடுத்தடுத்து நடக்கப் போவதுதான் அதிர்ச்சிகரமாக இருக்கும் என்கிறார்கள் கோபாலபுரம் வட்டாரத்தில். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கல்களெல்லாம் விலகும் வரையில் ராசாவை தி.மு.க.விலிருந்து விலக்கி வைக்கப் போகிறார்களாம்…’’
‘‘நடக்குமா?’’
‘‘இந்த மாதிரி நிகழ்வுகளெல்லாம் தி.மு.க.வில் சமீபத்தில்கூட நடந்ததுதானே? நில அபகரிப்பு, அடிதடி வழக்கில் சிக்கிய அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவை முதலில் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கினார்கள். பிற்பாடு கட்சியில் இருந்து நீக்கினார்கள். அவர் மீதான வழக்கில் இருந்து அவர் விடுபடவும் மீண்டும் அவரை கட்சியில் சேர்த்து, ஈரோடு மாவட்டச் செயலாளராகவும் ஆக்கி விட்டார்களே… அதே ரீதியிலேயே ராசாவையும் செய்யலாம் என்பதுதான், அண்ணன்&தம்பி முன்மொழிந்த யோசனையாம். அதுதான் தீவிரமாக உருப்பெறப் போகிறதாம். இந்த யோசனையை ராசா சத்தமில்லாமல் ஏற்றுக்கொண்டால் பிரச்னையில்லை. இல்லாவிட்டால் இந்தக் கருத்தை வலியுறுத்தி வீரப்பாண்டியார் போன்ற தலைவர்களை வைத்து அறிக்கை வெளியிடச் செய்து இதைச் செயல்படுத்துவார்களாம்..’’
‘‘சிக்கல்தான்…’’
‘‘இதுக்கே அசந்துட்டா எப்படி? ‘கனிமொழியால்தான் இத்தனை பிரச்னையும். கட்சிக்கும் குடும்பத்துக்குமாக ஒருசேர சிக்கலை உண்டு பண்ணிவிட்டார். அதனால் அவரையும் கொஞ்ச காலத்துக்கு தீவிர அரசியலில் இருந்து விலக்கி வைப்பதுதான் சரியாக இருக்கும்’ என்றும் யோசனைகளைச் சொல்லியிருக்கிறார்களாம் சகோதரர்கள்…’’
‘‘அதற்கெல்லாம் கலைஞர் சம்மதிப்பாரா?’’
‘‘ராசாத்தியம்மாள் சம்மதிப்பாரா என்று மட்டும் கேளுங்கள். கடந்த சில ஆண்டுகளாக கட்சி வளர்ச்சிக்கு கனிமொழி ஆற்றியுள்ள பணிகள், தியாகங்கள் போன்றவற்றை மேற்கோள் காட்டி, இப்படி ஒரு யோசனையை முளையிலேயே கிள்ளி எறியுங்கள் என்று கலைஞருக்கு சொல்லியிருக்கிறார்கள் கனிமொழியின் அபிமானிகள். ஆனாலும், அந்த யோசனையை செயல்படுத்தும் மூடுக்கு வந்துவிட்டாராம் கலைஞர். விரைவில் கனிமொழியை வற்புறுத்தி அவருடைய எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் கோபாலபுர விசுவாசிகள்’’
‘‘இதெல்லாம் நடந்தால், சகோதரர்கள் இருவரும் அப்பாவோடு சமாதானமாகி விடுவார்களா?’’
‘‘அப்படியொரு எண்ணத்தில்தான் இருவரும் முரண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்களாம். இருவரும் இந்த விஷயத்தில் ஜெயிப்பார்கள் என்பதுதான், தி.மு.க.வின் உள்விவகாரங்களை நன்கு அறிந்தவர்கள் வெளிப்படுத்தும் ரகசியங்கள். இந்த நேரத்தில் டெல்லியிலிருந்து இன்னொரு குண்டு விழுந்திருக்கிறதாம்’’
‘‘கூட்டணிக்கு சிக்கலா?’’
‘‘பொறுமை ப்ளீஸ்… ஏற்கனவே டேப் விவகாரத்தில் சிக்கி அமைச்சர் பொறுப்பை ஒரு முறை இழந்த அமைச்சர் பூங்கோதைக்கு அடுத்த சிக்கல் ஆரம்பமாகப் போகிறதாம். நீரா ராடியாவோடு ராசாத்தியம்மாளுக்காக பூங்கோதை பேசியிருக்கிறாராம். அந்த உரையாடல் பதிவையும் டெல்லிக்காரர்கள் வெளியில் எடுத்துவிடப் போகிறார்களாம். இரண்டொரு நாட்களில் அந்த உரையாடல் பதிவு வெளியாகி, அடுத்த களேபரத்துக்கு வித்திடலாம் என்பதுதான் டெல்லி பக்கமிருந்து வரும் தகவல்’’
‘‘தெரியாமல்தான் கேட்கிறேன்… கலைஞருக்கு இதெல்லாமே தெரியாமல்தான் நடந்ததாமா?’’
‘‘நீங்க கேட்கும் இந்தக் கேள்வியைத்தான், தி.மு.க.வில் இருக்கும் என்னுடைய நண்பர் ஒருவரிடம் கேட்டுவிட்டேன். அதற்கு அவருடைய பதில் என்ன தெரியுமா? ‘ஆம்’ என்பதுதான்…’’
‘‘சரி, அந்த ‘ஆம்’க்கு என்ன அர்த்தம் விசாரித்தீரா?’’
‘‘விசாரிக்காமல் இருப்பேனா? கடந்த 2009&ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடந்து முடிந்து, மீண்டும் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்ததும், முதல்வரான கலைஞரை சந்திக்க வந்தார் ரத்தன் டாடா. சி.ஐ.டி. நகர் வீட்டில்தான் ரத்தன் டாடா, கலைஞரைச் சந்தித்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ரத்தன் டாடாவோடு கூடவே ஒரு பெண்மணியும் வந்திருந்தார். அவர் யார் தெரியுமா?’ & இப்படித்தான் சஸ்பென்ஸ் வைத்து என்னிடம் கேட்டார், அந்த தி.மு.க. நண்பர்.’’
‘‘நீரா ராடியாவா?’’
‘‘அவரே…அவரே… ரத்தன் டாடா, நீரா ராடியாவோடு கலைஞர் அன்றைய தினம் மதிய உணவு அருந்தினார். நீரா ராடியாவும் கனிமொழியும் வெகுநேரம் ஆங்கிலத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடினார்கள். ரத்தன் டாடாவும்கூட கனிமொழியோடு நிறைய பேசினார். இந்த சந்திப்பு முடிந்தவுடன், ராசாத்தியம்மாளிடம் கலைஞர், ‘என் மக என்னமா இங்கிலீஷ் பேசுறா பாத்தியா? அதுவும் இந்தியாவிலேயே மிகப் பெரிய தொழிலதிபர் ரத்தன் டாடா, என் மகளைப் பார்த்து ‘கனி… கனி…’ன்னு பேசுறாரு…’ என்று பெருமை பொங்கச் சொன்னார். அப்பவே இந்த நீரா ராடியாவால் தனது குடும்பத்துக்கு பிரச்னை வரும்னு கலைஞரால் யூகிக்க முடியவில்லை என்பதுதான் வேதனை’’
‘‘முதலில் ஒருவரை ஆதரிப்பதும், அவரால் தீங்கு வந்துவிட்டால், நிந்திப்பதும் மனிதர்களின் இயல்புதானே?’’ என்று பாண்டியன் சொல்லிவிட்டு சிரித்தார்.
‘‘ஏதோ சில்மிஷ செய்தியை தரப்போகிறீர்கள்’’
‘‘கடந்த வாரம் வி.ஐ.டி. பல்கலைக்கழத்தில் நடந்த விழாவுக்காக வேலூருக்குப் போயிருந்தார் கலைஞர். அந்த விழாவை முடிச்சுட்டு நடந்த பொதுக்கூட்டத்துல பேசும்போதுதான் காங்கிரஸுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை எடுத்து வைத்தார் கலைஞர். இதெல்லாம் தெரிந்த சங்கதிகள்தான். ஆனால், தெரியாத சங்கதிகளும் உண்டு…’’
‘‘என்னது தெரியாத சங்கதிகளா?’’
‘‘ஆமாம். வி.ஐ.டி. விழாவை முடிச்சுட்டு, பல்கலைக்கழக வளாகத்திலேயே இருந்த கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்த கலைஞர், லோக்கல் அமைச்சர் துரைமுருகன்கிட்ட பேசினாராம். ‘யோவ்… எவ்வளவு பெரிய கட்டடங்களையெல்லாம் விசுவநாதன் கட்டியிருக்காரு பாருய்யா…’ என்று வியந்தாராம்… ஆனால், துரைமுருகன் அதனை ரசிக்கவில்லையாம். அதுக்கு பலமான காரணம் இருக்காம்…’’
‘‘என்னவாம்..?’’
‘‘கொஞ்ச காலத்துக்கு முன்பு துரைமுருகன் காட்பாடியில் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றைத் துவங்கினார். அப்போது வி.ஐ.டி. அதிபர் ஜி.விசுவநாதனை வைத்துத்தான் துவங்கினார். அந்த சமயத்தில் துரைமுருகனை அழைத்த கலைஞர், ‘யோவ்… 91&ல் நாம தோத்து ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னாடி இந்த விசுவநாதன் பேசுனது என்ன தெரியுமா? நல்ல எதிர்க்கட்சித் தலைவர் இல்லம்மான்னு பேசி ஜெயலலிதாவை குஷிப்படுத்தினார். அவரை வெச்சுத்தான் நீ காலேஜ் திறக்கணுமா?’ன்னு கேட்டாராம். ‘அன்னைக்கு அப்படி சொன்ன தலைவருதான், இன்னிக்கு விசுவநாதனோட பல்கலைக்கழக கட்டங்களைக்கூட புகழ்ந்திருக்கிறார்’னு சொல்லி தனது நண்பர்களிடம் புலம்பியிருக்கிறார் துரைமுருகன்’
‘‘இதெல்லாம் அரசியல்ல…’’
‘‘அதை விடுங்க. வரும் டிசம்பர் 5&ம் தேதி கலைஞர் கதை&வசனத்தில் உருவாகும் ‘இளைஞன்’ படத்தின் கேஸட் வெளியீட்டு விழா பிரமாண்டமா நடக்கப் போகுது. கவிஞர் பா.விஜய் நடிக்கும் இந்தப் படத்தை லாட்டரி அதிபர் மார்ட்டின்தான் தயாரிக்கிறார். பல கோடிகளை வாரியிறைத்துத் தயாராகும் இந்த படத்தோட ஆடியோ கேஸட் வெளியீட்டு விழாவுக்காக அழைப்பிதழ் அச்சடித்திருக்கிறார்கள். ஒரு அழைப்பிதழின் விலை மட்டும் சில ஆயிரம் ரூபாய் இருக்குமாம். சினிமா வட்டாரத்தில் இதுபற்றித்தான் இப்போது வியந்து பேசுகிறார்கள். இந்த விழாவில் கலந்து கொள்ளச் சொல்லி, ரஜினியிடம் கலைஞரே பேசினாராம். அதனால் விழாவுக்கு வருவதற்கு ரஜினியும் ஒப்புக் கொண்டாராம்…’’
‘‘ஓ…’’
‘‘இன்னொரு சினிமா செய்தி… தே.மு.தி.க.வும், அ.தி.மு.க.வும் அரசியல் ரீதியில் இணக்கமாகி வருகின்றன. இருந்தாலும், விஜயகாந்த் ரொம்பவே அப்செட்டாகி இருக்கிறாராம். காரணம், அவர் ரொம்பவே ஆவலாக எதிர்பார்க்கும் ‘விருதகிரி’ படத்தின் விளம்பரக் காட்சிகளை கட்டண அடிப்படையில் எல்லா டி.வி.க்களிலும் போடுகிறார்களாம். ஆனால், ஜெயா டி.வி.யில் மட்டும் போடுவதில்லையாம்’’ என்று பாண்டியன் தனது கை கடிகாரத்தை பார்த்தார்.
அலெக்ஸ் புரிந்து கொண்டு தனது அறையை நோக்கி நடந்தார்.
நன்றி தமிழக அரசியல்