இந்தக் கட்டுரையை எழுதுவதற்கே வேதனையாக இருக்கிறது. சவுக்கின் கட்டுரைகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களால் படிக்கப்பட்ட கட்டுரை, ஜனநாயகத்தைக் காக்க வாருங்கள் பதிவர்களே என்ற கட்டுரை. கருணாநிதி ஆட்சியில் ஊடகங்களை எப்படி முடக்கி வைத்திருக்கிறார்கள் என்பது குறித்த கட்டுரையே அது. அந்தக் கட்டுரை எழுதிய நாள் 10 செப்டம்பர் 2010. இரண்டே ஆண்டுகளுக்குள் மீண்டும் ஊடகங்கள் முடக்கப்பட்டது குறித்து, ஆட்சி மாறிய ஒரு சூழலில் எழுதுவது வேதனையான விஷயமே.
தமிழகத்தில் இன்று ஒலித்துக் கொண்டிருப்பது ஆலய மணி அல்ல. ஆணவ மணி. அதிகாரம் இருக்கிறது என்ற அகந்தையில் ஒலிக்கப்படும் ஆணவ மணி இது. முட்டாள்களின் தேசத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மமதையின் ஒலி இது. இது ஜெயலலிதாவின் ஆணவ மணி.
இந்த ஆணவ மணி எங்கே ஒலிக்கிறதோ இல்லையோ… தமிழகத்தின் பத்திரிக்கை அலுவலகங்களில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆணவத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிறார் ஜெயலலிதா.
1996 தேர்தல், 2004 தேர்தல்கள் அளித்த பாடங்களை ஜெயலலிதா கற்க மறந்து விட்டார். கான்வென்டில் படித்ததால், மற்ற அரசியல் தலைவர்களைப் போல அல்லாமல், தன்னை ஒரு கற்றறிந்த மேதையாக காட்டிக் கொள்ள முனையும் ஜெயலலிதா, தான் கற்ற நூல்களிலிருந்தும், வரலாற்றிலிருந்தும், எந்தப்பாடத்தையும் கற்கவில்லை என்பதையே, அவரது நடவடிக்கைகள் நிரூபிக்கின்றன.
நக்கீரன்
தி இந்து
ஜுனியர் விகடன்
இந்தியா டுடே
டைம்ஸ் ஆப் இந்தியா
தினகரன்
முரசொலி
ஆனந்த விகடன்.
நக்கீரன் மீது தொடரப்பட்ட வழக்கு, “மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரைக்காக. நக்கீரன் விரித்த வலையில் சிக்கிய ஜெயலலிதா என்ற தலைப்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அக்கட்டுரையைத் தொடர்ந்து நக்கீரன் அலுவலகத்தில் தொடரப்பட்ட தாக்குதல் குறித்து, இந்து நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது. அச்செய்தியில் நக்கீரனில் வெளிவந்த செய்தி குறித்தும், அதனால் அதிமுகவினர் நடத்தி வன்முறை குறித்தும் வெளியிடப்பட்ட செய்திக்காக மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டிருந்தது.
ஜுனியர் விகடன் மீது இதுவரை நான்கு வழக்குகள். இரண்டு வழக்குகள், ஜெயலலிதாவின் மகள் என்று தன்னை அழைத்துக் கொண்டு மோசடி வேலையில் ஈடுபட்ட ஒரு நபரைப்பற்றி வெளியிடப்பட்ட இரண்டு கட்டுரைகள். மூன்றாவது கட்டுரை, போயஸ் தோட்டத்தில் நடத்திய ஒரு யாகம் பற்றிய கட்டுரை. நான்காவது கட்டுரை, ராவணன் கொடநாட்டில் ஜெயலலிதாவைச் சந்தித்ததாக வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை.
இந்தியா டுடே இதழின் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு, செங்கோட்டையன் அமைச்சர் மற்றும் கட்சிப்பதவியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பான செய்திக்கட்டுரை.
திமுக சார்பாக சென்னையில் பரவி வரும் காலரா மற்றும் மாநகராட்சியின் செயலிழந்த தன்மையைக் கண்டித்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத்தின் தலைநகரின் காலரா பரவி வருகையில் ஒரு முதலமைச்சரால் எப்படி நிம்மதியாக கொடநாட்டில் ஓய்வு எடுத்து வர முடிகிறது என்பதே.
இச்செய்தியை வெளியிட்டதற்காக டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் மீதும் அவதூறு வழக்கு. இதே காரணத்துக்காக தினகரன் நாளேட்டின் மீதும் வழக்கு.
கருணாநிதி கொடநாட்டில் ஜெயலலிதா ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னதற்காக அவர் மீதும், முரசொலி நாளேட்டின் மீதும் அவதூறு வழக்கு.
நக்கீரன் வெளியிட்ட கட்டுரை பற்றி விவாதிக்கத் தேவையில்லை. அந்தக் கட்டுரைக்கு அவதூறு வழக்கு நூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். ஆனால் இந்து நாளேடு மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு செய்திக் கட்டுரை வெளியிட்டதற்காக ஒரு பத்திரிக்கை அலுவலகத்தை ஒரு கட்சியின் தொண்டர்கள் நாள் முழுவதும் தாக்குவதும், காவல்துறை அவர்களை செல்லமாக தட்டிக் கொடுத்து, போங்க சார் என்று கெஞ்சுவதும், அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம். இந்து போன்ற ஒரு பத்திரிக்கைக்கு, அந்தக் கட்டுரை என்ன, ஏன் கட்சித் தொண்டர்கள் பத்திரிக்கை அலுவலகத்தைத் தாக்கினார்கள் என்பதைப் பதிவு செய்ய வேண்டியது அந்த செய்தித்தாளின் கடமை. நக்கீரன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த ஜெயலலிதா, இந்து நாளேட்டின் மீதும் வழக்கு தொடுக்க உத்தரவிட்டார். இதற்கு பின்னணி இல்லாமல் இல்லை. ராம் இந்து நாளேட்டின் ஆசிரியராக இருந்தவரை, அரசுக்கு எதிராக செய்திகள் வெளியிடாமல் அடக்கி வாசித்துக் கொண்டிருந்தார். சித்தார்த் வரதராஜன், ஆசிரியர் பொறுப்பை ஏற்றவுடன், பாரபட்சமின்றி செய்திகளை வெளியிட்டதும், அரசு அப்போது எடுத்த முடிவுகளான, சமச்சீர் கல்வியைக் கைவிடுதல், அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுதல் போன்ற விவகாரங்களைக் கண்டித்து தலையங்கம் எழுதியதில் ஜெயலலிதா எரிச்சலடைந்திருந்தார். இந்த எரிச்சலை வெளிப்படுத்துவதற்கும், இந்து நாளேட்டை அடக்கலாம் என்ற எண்ணத்திலுமே அதன் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதவாக்கில் அவதூறு வழக்குகளைத் தொடர்வதற்காகவே கே.வி.அசோகன் என்ற வழக்கறிஞர், அதிமுக அரசால் நியமிக்கப்பட்டார். இவர் நியமனத்திற்குப் பிறகு, அவதூறு வழக்குகள், ஆலங்கட்டி மழைபோல பத்திரிக்கை அலுவலகங்கள் மீது பொழியத் தொடங்கின.
அதிகமான தாக்குதலுக்கு உள்ளானது ஜுனியர் விகடன் பத்திரிக்கை. ஜுனியர் விகடன் பத்திரிக்கை. 24 ஜுன் 2012 நாளிட்ட இதழில், “யாகப்புகையில் போயஸ் கார்டன்” என்ற தலைப்பில் ஒரு அட்டைப்படக் கட்டுரை வெளியிடப்பட்டது. அக்கட்டுரையில், ‘போயஸ் கார்டன் மற்றும் பையனூரில் 11 மணி நேரம் யாகம் நடக்க உள்ளது. இந்த யாகம் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது, உடல் நலம் சிறப்பாக வேண்டும். எதிரிகளின் பலம் குறையவேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது” என்று எழுதப்பட்டுள்ளது.
செய்தியில் கூறப்பட்டுள்ள எல்லா விஷயங்களும் பொய்யானது. அதுபோன்று எந்த யாகமோ அல்லது பூஜையோ நடைபெறவில்லை. ஆனால் முதல்வருக்கு தீங்கு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அதிக ஓட்டு பெற்று ஆட்சி அமைத்துள்ள முதல்வருக்கு இப்படி ஒரு யாகம் நடத்த அவசியமில்லை. ஆனால் யாகம் நடத்தப்போவதாக அட்டை படத்தில் முதல்வரின் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது சமுதாயத்தில் முதல்வருக்கு உள்ள மரியாதைக்கும், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கமாக உள்ளது. எனவே ஜுனியர் விகடன் பத்திரிகையின் ஆசிரியர் ரா. கண்ணன், வெளியீட்டாளர் கே.அசோகன், பதிப்பாளர் எஸ்.மாதவன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று அந்த வழக்கு மனுவில் கூறப்பட்டிருந்தது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் பொதுச்செயலாளராக தற்போது இருக்கும் ஜெயலலிதாவும் சரி, இதற்கு முன்பு இருந்த எம்.ஜி.ஆரும் சரி, பெரியாரின் கொள்கைகளை காலில் போட்டு மிதித்தவர்கள். தங்களின் கடவுள் நம்பிக்கைகளை பகிரங்கமாக உலகுக்கு தெரிவித்தவர்கள்.
ஜெயலலிதாவும், சசிகலாவும், பல நூறு மக்கள் மிதிபட்டுச் சாகையில் மாற்றி மாற்றி தண்ணீர் ஊற்றிக் குளித்து அகமகிழ்ந்தவர்கள். ஜெயலலிதாவின் பூஜைப் புனஸ்காரங்கள் உலகப்பிரசித்தம். சசிகலா மீண்டும் போயஸ் தோட்டத்துக்குள் நுழைந்தபிறகு கூட, அவர்கள் இருவரும் செய்த முதல் வேலை, அடையாறில் உள்ள ஒரு பிள்ளையார் கோயிலுக்குப் போனதுதான். கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்து விட்டு, ஜெயலலிதா செய்த முதல் காரியம், கேரளக் கோயிலுக்கு யானையை நன்கொடையாகக் கொடுத்ததுதான். 1006 திருமணங்களை நடத்தி வைத்ததும், ஜோசியரின் அறிவுரையின்படியே அன்றி வேறல்ல.
ஜுனியர் விகடன் செய்திக்கு கோபப்பட வேண்டிய அவசியம் என்ன ? அதிகபட்சம், அச்செய்திக்கு ஒரு மறுப்பு அளித்திருந்தால், ஜுனியர் விகடன் நிச்சயம் வெளியிட்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஜுனியர் விகடன் மீது தொடுக்கப்பட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது வழக்கு, ஜெயலலிதாவின் மகள் என்று அழைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றிய ஒரு பெண்ணைப் பற்றிய செய்திக்கட்டுரை.
ஜெயலலிதா மகள் என்று தன்னை அழைத்துக் கொண்ட அந்தப் பெண்ணிடம் நம்பிப் பணம் கொடுத்து ஏமாந்தவர்களின் பட்டியல் மிக மிகப் பெரிது. கோடிக்கணக்கில் ஏமாந்திருக்கிறார்கள். இவ்வாறு ஏமாந்தவர்கள் மிகப்பெரிய புள்ளிகள் என்பது, மற்றொரு உண்மை. இப்பெண் கைது செய்யப்பட்டபோது, வெளியான வாரமிருமுறை இதழ்களின் கவர் ஸ்டோரி, இரண்டு வாரங்களுக்கு இப்பெண் பற்றியே வந்தது. குமுதம் ரிப்போர்டர், நக்கீரன், தமிழக அரசியல், என்று அனைத்துப் பத்திரிக்கைகளும், இப்பெண்ணைப் பற்றியே எழுதின. அவற்றில், 60 சதவிகிதம் செய்திகளும், 40 சதவிதம் ஊகங்களும் இருந்தன. அந்தப் பெண்ணோடு இருந்த சக கைதிகளிடம் அப்பெண் பேசிய விஷயங்களை ஜுனியர் விகடன் வெளியிட்டிருந்தது. இதற்காக இரண்டாவது வழக்கு.
ஜுனியர் விகடன் மீது மட்டும் வழக்கு தொடுத்த ஜெயலலிதா, நக்கீரன், தமிழக அரசியல், குமுதம் ரிப்போர்டர் ஆகிய பத்திரிக்கைகள் மீது ஏன் வழக்கு தொடுக்கவில்லை என்பதிலேயே இது பாரபட்சமான நடவடிக்கை, ஜுனியர் விகடனை மிரட்டி வழிக்கு கொண்டு வருவதற்கான முயற்சி என்பது தெளிவாகிறது.
ஜுனியர் விகடன் மீதான நான்காவது வழக்கு, “கொடநாடு வந்த குஷி ராவணன்” என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்த கட்டுரை.
அடுத்ததாக இந்தியா டுடேவில் வந்த கட்டுரை. “திருப்பிக் கொடுக்கும் நேரம்” என்ற தலைப்பில் வந்த அந்தக் கட்டுரை, அதிமுக அமைச்சரா இருந்த செங்கோட்டையனின் அமைச்சர் பதவி பறிப்பு மற்றும், கட்சிப் பதவிப் பறிப்பு பற்றிய விரிவான கட்டுரை.
செங்கோட்டையன் நீக்கம் பற்றி வாரமிருமுறை இதழ்களான ஜுனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்டர் மற்றும் தமிழக அரசியல் ஆகிய பத்திரிக்கைகள், செங்கோட்டையன் நில அபகரிப்பில் ஈடுபட்டார், அவரின் உதவியாளராக இருந்த ஆறுமுகத்தின் மனைவியோடு ஏற்பட்ட தொடர்பு காரணமாகத்தான் நீக்கப்பட்டார் என்று செய்திகள் வெளியிட்டிருந்தன. இந்தியா டுடே மட்டுமே, இதையும் தாண்டி என்ன காரணம் இருக்க முடியும் என்ற கோணத்தில் ஆராய்ந்திருந்தது.
“பெண்கள் விஷயம் இல்லாத அரசியல்வாதியை எந்தக் கட்சியிலும் பார்ப்பது கஷ்டமான விஷயம். இது அந்த அம்மாவுக்கே தெரியும். நில மோசடி பற்றிய குற்றச்சாட்டும் முகாந்திரமில்லாதது. ஜனவரி 12, 2012 அன்று பத்திரப்பதிவு நடந்ததாக சொல்கிறார்கள். செங்கோட்டையன் வருவாய்த்துறை அமைச்சாக ஆனதே 26 ஜனவரி 2012ல் ஆகவே இவையெல்லாம் லாலிபாப் சாப்பிடும் குழந்தைகளிடம் சொல்ல வேண்டிய காரணங்கள்.
சசிகலாவிற்கு செங்கோட்டையனை எப்போதுமே பிடிக்காது என்கிறார்கள் அதிமுக முக்கியஸ்தர்கள்.
கடந்த மே மாதம் 16ம் தேதி ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்றதிலிருந்து டிசம்பர் 19ம் தேதி சசிகலா வெளியேற்றப்பட்டது வரை 9 அமைச்சர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். ஆனால் டிசம்பர் 19 முதல் ஜுலை 17ம்தேதி வரை ஒரு அமைச்சர் கூட நீக்கப்படவில்லை. அம்மா கொடநாட்டுக்கு போகும்போது அவருடன் சசிகலா போகவில்லை. ஆனால் ஜுலை 18ம் தேதி இருவரும் ஒன்றாகவே திரும்பி வருகிறார்கள். அடுத்த நாள் குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களித்து விட்டு அம்மா கொடநாடு திரும்பும்போது சசிகலாவும் அவருடன் ஒன்றாகவே கிளம்பிப் போனார். ஜுலை 18ம் தேதிதான் செங்கோட்டையனின் நீக்கம் பற்றிய அறிவிப்பு வெளிவருகிறது. சசிகலாவிற்கு இதில் சம்பந்தம் இல்லையென்று நம்புவது கடினம் என்கிறார் அதிமுகவின் மாவட்டச் செயலாளர் ஒருவர்.”
செங்கோட்டையன் விவகாரத்தில் சசிகலா ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடித்து விட்டதாகக் கூறுகின்றனர். ஒன்று தனது நீக்கத்துக்கு காரணமானவரை பழிதீர்த்துக் கொண்டார். இரண்டாவது செங்கோட்டையன் மீதான நடவடிக்கை மூலம் மதில் மேல் பூனையாக இருந்தவர்களுக்கு தனது கைதான் ஓங்கியிருக்கிறது என்பதை நிரூபித்து விட்டார்.
கடந்த டிசம்பர் 30ம் தேதி சென்னை அருகேயுள்ள வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் பேசிய ஜெயலலிதா, கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான்; அவர்களுடன் தொடர்பு கொள்பவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்றார். ஆனால் தனது உறவினர்கள் ஜெவுக்கு துரோகம் செய்ததாக சசிகலாவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பிறகுதான் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். தற்போது சசிகலாவின் கை அதிமுகவில் ஓங்கத் தொடங்கி இருப்பதும், செங்கோட்டையன் போன்ற கால் நூற்றாண்டு கால ஜெயலலிதா விசுவாசிகள் பதவிப்பறிப்புக்கு ஆளாவதும், ஓரங்கப்பட்டப்படுவதும், தவறுகளிலிருந்து ஜெயலலிதா எந்தப்பாடத்தையும் கற்று மறுப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவே கருதப்படுகிறது.
கார்ல் மார்க்ஸ் சொன்னது போல ஒவ்வொரு முறையும் வரலாறு திரும்ப நிகழும். முதன் முறை அது கேலிக்கூத்தாக இருக்கும். இரண்டாவது முறை அது துன்பியல் நாடகமாக இருக்கும். மார்க்ஸ் எக்காலத்துக்குமான தீர்க்கதரிசி என்பதை ஜெயலலிதா நிரூபித்திருக்கிறார்.”
இதுதான் அக்கட்டுரையின் முக்கியப்பகுதிகள். இதற்காகத்தான் இந்தியா டுடே மீது அவதூறு வழக்கு.
சென்னை மாநகராட்சி ஒழுங்காகச் செயல்படவில்லை. சென்னையில் காலரா பரவுகிறது என்பதைக் கண்டித்து, திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பேசியதை வெளியிட்டதற்காக டைம்ஸ் ஆப் இந்தியா மீது அவதூறு வழக்கு. நாட்டில் காலரா பரவுகையில் முதல்வர் கொடநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று ஸ்டாலின் பேசிவிட்டாராம்.
இதை விட ஒரு அக்கிரமத்தைப் பார்க்கவே முடியாது. ஒரு அரசியல் கட்சித் தலைவர், முன்னாள் துணை முதல்வர், ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஆற்றும் உரை குறித்த செய்தி வெளியிடக் கூட, ஒரு நாளேட்டுக்கு உரிமை இல்லையென்றால், தமிழகத்தில் நெருக்கடி நிலையா அமல்படுத்தப்பட்டிருக்கிறது ? ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது உண்மையில்லையா என்ன ?
கருணாநிதி உடன்பிறப்புக்கு எழுதிய கடிதத்தில், முதல்வர் கொடநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று எழுதினார். அதற்காக அவர் மீதும், முரசொலி மீதும் தினகரன் மீதும் அவதூறு வழக்கு.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், முதல்வர் கொடநாட்டில் இருப்பதால், அரசு நிர்வாகமே முடங்கிவிட்டது என்று ஆனந்த விகடனில் பேட்டியளித்ததால், ராமதாஸ் மீதும் ஆனந்த விகடன் மீதும் அவதூறு வழக்கு.
ஜெயலலிதா ஆட்சியில் தொடரப்படும் இந்த அவதூறு வழக்குகளுக்கு ஒரு பெரிய பின்னணி இருக்கிறது. 2011ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த உடனேயே ஊடகங்களை மிரட்டும் வேலை தொடங்கிவிட்டது. ஆங்கிலத்தில் கேரட் அன்ட் ஸ்டிக் என்று ஒரு சொல்லாடல் உண்டு. வண்டியை இழுக்கும் குதிரையின் முன்பாக கேரட்டை ஆட்டினால், அதைத் தின்பதற்காக குதிரை முன்னோக்கிச் செல்லும். அதே நேரத்தில் பின்னால் கம்பை வைத்து அடித்தால், அந்த அடியிலிருந்து தப்பிப்பதற்காகவும் முன்னோக்கிச் செல்லும். இப்படி குதிரை முன்னோக்கிச் செல்வதால், வண்டி ஓடும்.
இந்த அணுகுமுறையைத்தான் ஜெயலலிதா அரசு கடைபிடித்து வருகிறது. முதலமைச்சர்கள் தங்கள் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய வேணடும் என்ற விதியை எந்த முதலமைச்சரும் கடைபிடிப்பதில்லை, தமிழக முதல்வர் உட்பட என்று டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழ், ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து, அந்நாளிதழின் ஆசிரியர் பகவான் சிங், தலைமைச் செயலகத்துக்கு வரவழைக்கப்பட்டு இது போன்ற செய்திகள் வெளியிடவேண்டாம் என்று கண்டிக்கப்பட்டார் என்கின்றன தகவல்கள். இதையடுத்து டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழுக்கு விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்தவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவு குறித்து செய்தி வெளியிட்டிருந்த டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு, அச்செய்தியின் அருகில் சிறிய கட்டத்தில் “டைம்ஸ் வ்யூ” என்று, அந்த முடிவை கண்டித்திருந்தது. இதையடுத்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கும் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியா விளம்பரங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை என்கின்றன தகவல்கள்.
இந்து நாளேட்டின் ஆசிரியராக சித்தார்த் வரதராஜன் பொறுப்பேற்ற பிறகு, அரசைக் கண்டித்து செய்திகள் வெளியிடவேண்டாம் என்று அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், அதற்கு அவர் செவிசாய்க்கவில்லை என்றதும், இந்துவுக்கும் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன என்கின்றன தகவல்கள். மு.க.ஸ்டாலின் மீது போடப்பட்ட நில அபகரிப்பு வழக்கில், அவர் புகார்தாரருடன் சமாதானமாகப் போனதால், அவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது தொடர்பாக முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டதற்கும், இந்தச் செய்தியை எப்படி முதல் பக்கத்தில் வெளியிடலாம் என்று அரசுத் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. என்ன இறுமாப்பு பார்த்தீர்களா ? ஒரு செய்தி ஊடகம் எந்த செய்தியை முதல் பக்கத்தில் வைப்பது என்று அரசிடம் கேட்க வேண்டுமாம்.
சில மாதங்கள் கழித்து, மீண்டும் விளம்பரங்கள் வழங்கப்பட்டன. ஜெயலலிதாவும் சசிகலாவும் மீண்டும் இணைந்தவுடன், அவர்கள் அதிகாலையில் அடையாறில் உள்ள கோவிலுக்குச் சென்றது குறித்து செய்தி வெளியிட்டதற்காக, டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழுக்கு மீண்டும் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன.
இவ்வாறு ஊடகங்களுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த அரசு அடுத்து எடுத்த நடவடிக்கை, இந்த அச்சு ஊடகங்களுக்கு லஞ்சம் கொடுப்பது. ஜெயலலிதா பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, “ஓராண்டில் நூறாண்டு சாதனைகள்“ என்று இந்தியாவில் உள்ள அனைத்துப் பத்திரிக்கைகளும் நன்றாக “கவனிக்கப்பட்டன“. இந்த மொத்த விளம்பரங்களுக்காக செலவிடப்பட்ட தொகை 75 கோடியைத்தாண்டும் என்கிறது தலைமைச் செயலக வட்டாரங்கள். டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் இந்து நாளேடுகள் சிறப்பாக கவனிக்கப்பட்டன.
இந்த விளம்பரங்களைக் கொடுத்துவிட்டு, ஜெயலலிதா அரசு செய்த வேலை மிகவும் கீழ்த்தரமானது. விளம்பரங்களைப் பெற்ற பத்திரிக்கைகளின் ஆசிரியர்களை, ஜெயலலிதா அரசின் ஓராண்டு சாதனைகளைப் பாராட்டி தலையங்கம் எழுதச் சொல்லி விடுத்த கோரிக்கை வைக்கப்பட்டது. டைம்ஸ் ஆப் இந்தியாவைத் தவிர வேறு எந்த ஊடகமும் இதற்கு செவிசாய்க்கவில்லை.
விளம்பரங்கள் வழங்கப்பட்ட அந்த நேரத்தில் தினமணி குழுமத்தைச் சேர்ந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் ஒரு சிக்கலில் மாட்டியது. உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் சோலி சோரப்ஜி 26 மே 2012 அன்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். Political marketing or political morality ? என்ற தலைப்பில் வந்திருந்த அக்கட்டுரை சிறப்பானதொரு கட்டுரை.
“தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் 30 கோடிக்கும் அதிகமான தொகையைச் செலவு செய்து ஆட்சியின் ஓராண்டு நிறைவு குறித்து விளம்பரங்கள் வெளியிட்டிருந்தார். இதற்கான பணம் எங்கிருந்து வருகிறது, யார் இதற்கான செலவைச் செய்வது என்பது பொதுமக்களுக்குத் தெரியவேண்டும். அரசுப் பணத்தில் விளம்பரம் செய்து அரசுகள் ஆதாயம் தேடுவதற்கான செலவு பொதுமக்கள் தலையிலேயே விடிகிறது என்பதால் அதை எதிர்த்து, தில்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. ஒரு பொது ஊழியர் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, தனக்கான ஆதாயத்தை தேடுவாரேயென்றால் அது லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் படி குற்றம் என்ற வாதமும் அவ்வழக்கில் எடுக்கப்பட்டிருந்தது.
சட்ட வாதத்தை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிடலாம். நாட்டின் வறுமைச் சூழலில் மக்கள் வாடிக்கொண்டிருக்கும் போது, தங்கள் சொந்த இமேஜையோ அல்லது தங்கள் கட்சியின் இமேஜையோ உயர்த்திக் கொள்வதற்காக மக்கள் வரிப்பணத்தில் விளம்பரங்கள் கொடுப்பது அருவருப்பான செயல் என்பது ஏன் இந்தத் தலைவர்களுக்குப் புரிவில்லை. இந்தச் செயல்கள் இத்தலைவர்களின் மனசாட்சியை உறுத்த வேண்டாமா ?” என்று கேள்வி எழுப்பியிருந்தார் சோலி சோரப்ஜி. இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டதையடுத்து, எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கும் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன.
ஜெயலலிதா கொடநாடு செல்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஜெயலலிதா கொடநாடு சென்று ஓய்வெடுக்க இருக்கிறார் என்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து, டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு வழக்கறிஞர் அறிவிக்கை அனுப்பப்பட்டது. டைம்ஸ் ஆப் இந்தியா, முதல் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு செய்தி வெளியிட்டது.
அதற்குப் பிறகு, ஜெயலலிதா கொடநாடு கோமலவள்ளியாக மாறியது அனைவருக்கும் தெரிந்ததே. இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் என்பதை யோசித்துப் பாருங்கள்.
விளம்பரங்களை நிறுத்துவோம் என்று முதலில் மிரட்டுவது. பிறகு வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது. அதையடுத்து அவதூறு வழக்கு போடுவது. இந்த அணுகுமுறையைத்தான் ஜெயலலிதா தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்.
ஜெயலலிதா ஊடகங்களை மிரட்டுவதும், வழக்கு போடுவதும் புதிதல்ல. 1991ல் அதிமுக ஆட்சிக் காலத்தில், அப்போது அதிமுகவின் தலைச்சிறந்த அடிமையாக இருந்து, தற்போது கருணாநிதியின் காலடியில் தஞ்சம் புகுந்திருக்கும் சேடப்பட்டி முத்தையா சபாநாயகராக இருந்தார். சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்ட்டதும், தன்னுடைய சபாநாயகர் இருக்கையில் சசிகலாவை அமர வைத்து அழகு பார்த்தவர்தான் இந்த சேடப்பட்டி. சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், ஜெயலலிதா மற்றும் சசிகலா இருவர் காலிலும் விழுந்து, சட்டசபையை பெருமைக்குள்ளாக்கியவர் சேடப்பட்டி.
89-90ல் திமுக ஆட்சி நடந்தபோது, சட்டசபையில் கருணாநிதி பட்ஜெட் தாக்கல் செய்தபோது, அதிமுக எம்எல்ஏக்களும், திமுக எம்எல்ஏக்களும் மோதிகொண்டார்கள். அந்தச் சம்பவத்தின்போது பல எம்எல்ஏக்கள் காயம்பட்டனர். இச்சம்பவங்களை அவைக்குறிப்பிலிருந்துநீக்கினார் அப்போதைய சபாநாயகர். அப்போது நடந்த தகராறில், ஒரு திமுக எம்எல்ஏவின் வேட்டி உருவப்பட்டது. . வேட்டி உருவப்பட்ட இந்தச் சம்பவம், மும்பையிலிருந்து அப்போது வெளிவந்து கொண்டிருந்த இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி வார இதழில் பத்திரிக்கையாளர் கே.பி.சுனில் என்பவரால், விரிவாக அழகான ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. “In the melee, MLA Parithi’s dhoti went missing” என்று எழுதியிருந்ததாக நினைவு.
1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, மற்ற பத்திரிகைகள் அனைத்தும் தன் வழிக்கு வந்தபோது, இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி மட்டும், தன்னையும் அரசையும் விமர்சித்து எழுதுவதைக் கண்டு எரிச்சலடைந்தார். அப்பத்திரிகையை வழிக்கு கொண்டு வர, 89-90ல் நடந்த சம்பவத்துக்காக, 1991ல் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி பத்திரிகை மீதும், அச்செய்தியை எழுதிய செய்தியாளர் கே.பி.சுனில் மீதும் உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்தார் முத்தையா. என்ன அயோக்கியத்தனம் பாருங்கள். ஒரு எம்.எல்.ஏவின் வேட்டியை உருவுவது உரிமை மீறல் இல்லையாம். அதைப்பற்றி பத்திரிக்கை செய்தி வெளியிடுவது உரிமை மீறலாம் !!! சுனிலை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தார் சேடப்பட்டி. அதை எதிர்த்து சுனில் உச்சநீதிமன்றத்தை அணுகினார். உச்சநீதிமன்றம் சேடப்பட்டியின் வாரண்டுக்கு தடை விதித்தது.
‘அப்பாடி கைது நடவடிக்கை இல்லை’ என்று சுனில் சென்னை திரும்ப எத்தனிக்கையில், சேடப்பட்டி முத்தையா தூர்தர்ஷனில் பேட்டியளிக்கிறார். “எனக்கு இருக்கும் வானளாவிய அதிகாரங்களை உச்ச நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது. கைது வாரண்ட் செல்லும். சென்னை திரும்பினால் சுனில் நிச்சயம் கைது செய்யப்படுவார்” என்று அறிவிக்கிறார்.
மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகுகிறார் சுனில். அவருக்காக ஜெயலலிதாவுக்காக பல வழக்குகளில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜரானார். சபாநாயகரின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்ததோடு, கண்டனமும் தெரிவித்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மதிக்கப்படாவிட்டால், மாநில அரசை முடக்க அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்துவது பற்றி ஆலோசிக்க வேண்டியிருக்கும் என்று அறிவித்தது. கூடங்குளம் அணு உலை பற்றிப் பேசிய நாராயணசாமி வாயை மூடிக்கொண்டது போல தன் வாயை மூடிக்கொண்டார் சேடப்பட்டி முத்தையா.
ஜெயலலிதாவின் மனதைக் குளிரவைப்பதற்காக சுனிலை கைது செய்ய உத்தரவிட்ட சேடப்பட்டி முத்தையா இன்று திமுகவில். ஜெயலலிதாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்ட சுனில் இன்று ஜெயா டிவியில். காலத்தின் விளையாட்டுக்கள் நம்ப முடியாத அளவுக்கு விசித்திரமாக இருக்கிறது அல்லவா ?
2011ல் ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்றதிலிருந்து எத்தனை முறை அமைச்சரவை மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
இம்மாற்றங்களில் சசிகலாவின் தலையீடு எந்த அளவுக்கு இருந்தது என்பதும் அனைவருக்கும் தெரியும். கட்சியிலோ, ஆட்சியிலோ எந்தப்பொறுப்பையும் வகிக்காத ஒரு நபர், நமது தலையெழுத்தை நிர்ணயிக்கும் அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் தலையிடுவதைப் பற்றி எழுதாத ஒரு பத்திரிக்கை என்ன பத்திரிக்கை ? “புரட்சித் தலைவி அம்மா அவர்கள்” காலையில் எழுந்தார். பல் விளக்கினார். குளித்தார். டிபன் சாப்பிட்டார். பேப்பர் படித்தார். கல்யாணப் பத்திரிக்கை வைக்க வந்திருந்த அமைச்சரை சந்தித்தார். போனால் போகிறதென்று ஒரு கோப்பை பார்வையிட்டார். அம்மா அவர்கள் ஒரு கோப்பை பார்வையிட்டதால், தமிழக மக்களின் துயர்கள் அனைத்தும் ஒரே நாளில் நீங்கியது என்று செய்தி வெளியிடுவதா ஒரு பத்திரிக்கையின் வேலை ? அரசு நிர்வாகத்தில் என்ன நடக்கிறது, அதில் உள்ள குறைகள் என்ன என்பதை சுட்டிக் காட்டுவதல்லவா ? குறைகளைச் சுட்டிக் காட்டத் தவறினால் வேறு எதற்காக இருக்கிறது பத்திரிக்கைகள் ?
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் மட்டும்தான், தமிழக அரசுக்கென்று ஒரு செய்தித் தொடர்பாளர் இல்லை. கருணாநிதி ஆட்சியில் செய்தித் தொடர்பாளருக்கான தேவையே இல்லை. அடிக்கடி பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பார். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா, வாரந்தோறும் பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பேன் என்று அறிவித்தார். அவரின் பல அறிவிப்புகளைப் போல, இந்த அறிவிப்பும் காற்றில் பறந்தது. ஒவ்வொரு முறையும் ஜெயலலிதா, போயஸ் தோட்டத்தை விட்டு வெளியே கிளம்புகையில் வாசலில் செய்தியாளர்கள் குழுமியிருந்து, அம்மா பேசமாட்டார்களா, அவர் தரிசனம் கிடைக்காதா என்று தவம் கிடக்கின்றனர். இந்தப் பத்திரிக்கையாளர்களுக்கு என்ன தலையெழுத்தா ? செய்தி சேகரித்து நாட்டு மக்களுக்குச் செல்வது அவர்கள் கடமை அல்லவா ?
மன்னார்குடி மாபியா விவகாரத்தையே எடுத்துக் கொள்வோம். டிசம்பர் மாதத்தில் சசிகலா உள்ளிட்டோர் நீக்கப்பட்ட பிறகு, எத்தனை எத்தனை செய்திகள் வெளியாகின ? மன்னார்குடி கும்பலோடு தொடர்பு வைத்துக் கொண்டால் அவர்களை மன்னிக்கவே மாட்டேன் என்று இதே ஜெயலலிதாதானே அறிவித்தார் ? ராவணன், மிடாஸ் மோகன், திவாகரன் என்று எத்தனை பேர் மீது நில அபகரிப்பு வழக்குகள் பாய்ந்தன ? யாருடனும் நட்போடு இருக்க ஜெயலலிதாவுக்கு உரிமை உள்ளது என்றாலும், அரசு நிர்வாகத்தில் தலையிடும், அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறிய ஒரு அதிகார மையத்தைப் பற்றி தெரிந்து கொள்ள பொதுமக்களுக்கு உரிமை இல்லையா ? அதை எழுத பத்திரிக்கைகளுக்கு உரிமை இல்லையா ?
செங்கோட்டையன் நீக்கத்துக்கு சசிகலாதான் காரணம் என்று இந்தியா டுடே எழுதியதில் என்ன தவறு இருக்கிறது ? செங்கோட்டையன் நீக்கத்துக்கான காரணத்தை ஜெயலலிதா வெளியிட்டு, அதை மீறி ஒரு பொய்யான காரணத்தையா இந்தியா டுடே வெளியிட்டு விட்டது ? மேலும், அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகாத பட்சத்தில், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை விசாரித்து கிடைத்த தகவல்களை எழுதத்தான் செய்யும். அது ஊடகங்களின் கடமை. நடந்த உண்மைகளை விளக்குவதன் மூலம் மட்டுமே அவ்விஷயங்களை மறுக்க முடியும். அவதூறு வழக்கு என்று மிரட்டுவதால் அல்ல.
ஜெயலலிதா தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகளை மிரட்டுவது என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும் ? சட்டப்படி ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைதானே இது என்று ஒரு வாதம் வைக்கலாம்.
இந்த வாதத்தை இந்த அவதூறு வழக்குகள் தொடரப்பட்ட பின்னணியில் இருந்து பார்க்க வேண்டும். மேலும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 499 மற்றும் 500ன் கீழ் ஒருவரை தண்டிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒரு கொலைக்குற்றத்திற்கு நடக்கும் வழக்கு விசாரணையை விட, விரிவான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற வேண்டும். வழக்கு நிறைவடைய பல காலம் பிடிக்கும்.
ஒரு குறிப்பிட்ட செய்தியை வெளியிட்டதால், ஒரு நபருக்கு அவமானம் ஏற்பட்டுள்ளதென்றால், அது அவதூறு செய்தியென்றால், சம்பந்தப்பட்ட நபர்தான் அந்தக் குற்றச்சாட்டை சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் மூலமாக நிரூபிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பில், புகார் கொடுத்தவரை குறுக்கு விசாரணை என்ற பெயரில் கிழித்து விடுவார்கள். அவர்கள் தரப்பில் அச்செய்தி தவறான செய்தி அல்ல என்பதற்கு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும்.
ஜெயலலிதா அரசு தொடுத்துள்ள அத்தனை வழக்குகளும், அரசு சார்பில் தொடுக்கப்பட்டிருந்தாலும், இவை அத்தனையிலும், ஜெயலலிதா சாட்சியாக விசாரிக்கப்பட்டால் மட்டுமே இவ்வழக்கு நிறைவடையும். ஜெயலலிதா தவிர, சசிகலாவும் சாட்சியாக விசாரிக்கப்படவேண்டும்.
தலைமைச் செயலகத்துக்குச் செல்வதையே கோயம்பேட்டில் மூட்டை தூக்கும் அளவுக்கு சிரமமான காரியமாக நினைக்கும் ஜெயலலிதா, சென்னையில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில், வாரக்கணக்கில் வழக்கறிஞர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பார் என்றா நினைக்கிறீர்கள் ?
ஆக ஊடகங்கள் மீது தொடரப்பட்டள்ள இந்த வழக்குகள் அனைத்தும், ஊடகங்களை மிரட்டுவதற்காகவேயன்றி வேறு எதற்காகவும் அல்ல. Either you are with us ; or against us என்று ஆணவமாக கொக்கரித்த ஜார்ஜ் புஷ் கடைபிடித்த அதே அணுகுமுறையே இது.
ஜெயலலிதாவை ஏகோபித்த ஆதரவுடன் தேர்ந்தெடுத்த தமிழக மக்கள் முட்டாள்கள் அல்ல. ஜெயலலிதாவின் கடந்தகால செயல்பாடுகளை மக்கள் மறக்கவில்லை. கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தின் அராஜகங்கள் பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு வளர்ந்த காரணத்தால் மட்டுமே ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்தார்கள். இன்னும் ஐந்தாண்டுகளுக்கு நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற இறுமாப்பில் ஜெயலலிதா இருக்கிறார். எத்தனை அநியாயங்கள் செய்தாலும், அக்கிரமங்களை அரங்கேற்றினாலும், தனது ஜோசியக்காரர்களும், தான் கும்பிடும் கடவுள்களும் தம்மைக் காப்பாற்றுவார்கள் என்ற மனக்கணக்கில் இருக்கிறார்.
தினந்தோறும் ஒரு பாராட்டுவிழாவில் கலந்து கொண்டு, ஜார் சக்கரவர்த்தியைப் போல வாழ்ந்த கருணாநிதி இன்று எப்படிச் சிறுமைப்பட்டுக் கொண்டு இருக்கிறார் என்பதைப் பார்த்தாவது ஜெயலலிதா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஊடகங்களின் மீது இப்படி ஒரு கடுமையான தாக்குதலை ஜெயலலிதா தொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் தமிழகத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள் கொதித்திருக்க வேண்டாமா ? இதற்கெதிராக போராட்டங்களை முன்னெடுத்திருக்க வேண்டாமா ? குறைந்தபட்சம் ஒரு கண்டனமாவது தெரிவித்திருக்க வேண்டாமா ? ஜெயலலிதாவை விட பல மடங்கு அகம்பாவம் பிடித்த, பல மடங்கு அதிகாரம் பொருந்திய இந்திரா காந்தியின் நெருக்கடி நிலையின்போதே இந்திய ஊடகங்கள் அந்நெருக்கடிகளை எதிர்த்து நின்று இந்திரா காந்திக்கு சவால் விட்டன.
அப்படிப்பட்ட இந்தியப் பத்திரிக்கை உலகின் ஒரு பகுதியாக இருக்கும் தமிழக பத்திரிக்கைகள் இன்று திராவிடக்கட்சிகளின் சாயங்களை தங்கள் மீது பூசிக்கொண்டு பிளவு பட்டுக் கிடக்கின்றன என்பது எத்தனை வேதனையான விஷயம் தெரியுமா ? பாராளுமன்றம், நீதித்துறை, அரசு இயந்திரம் என்ற மூன்று தூண்களை விட, இந்திய ஜனநாயகத்தைக் காப்பது ஊடகம் என்ற நான்காவது தூண் அல்லவா ? இந்த நான்காவது தூணின் வலுவில்தானே மற்ற மூன்று தூண்களும் ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கின்றன ?
என்ன செய்து கொண்டிருக்கின்றன பத்திரிக்கை அமைப்புகள் ? எங்கே போயிற்று உங்கள் ஜனநாயக உணர்வு ? பத்திரிக்கை முதலாளிகள் விளம்பரங்களுக்காக விலை போய்விடுவார்கள் என்றாலும், இந்த ஜனநாயகத்தை நேசிக்கும், இந்த மக்களை காதலிக்கும், மக்களின் நலனில் அக்கறை கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்களே…. என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? ஜெயலலிதாவின் ஆணவ மணி உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ? இந்த ஆணவ மணி பகத்சிங் போன்று உயிர்த்தியாகம் செய்தவர்களால் கட்டிக்காக்கப்பட்ட சுதந்திரத்துக்கு ஒலிக்கும் சாவு மணி என்பது உங்களுக்கு புரியவில்லையா ? என்ன செய்து கொண்டிருக்கின்றன எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர் சங்கங்கள் ? என்ன செய்து கொண்டிருக்கின்றன பத்திரிக்கையாளர் அமைப்புகள் ? இன்று நாம் ஊடக சுதந்திரத்தைக் காக்கத் தவறினோமேயானால், நாளை நம் சந்ததிகள் நம்மை எப்படி மதிப்பீடு செய்வார்கள் என்பதை சிந்தித்துப்பாருங்கள்.
He who passively accepts evil is as much involved in it as he who helps to perpetrate it. He who accepts evil without protesting against it is really cooperating with it.
Martin Luther King.