மழையில் நனைந்து வந்த கழுகார், சிறகுகளைச் சிலுப்பியபடி கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டார். அவராகத் தொடங்கட்டும் என்று காத்திருந்தோம்.
”மழை, வெள்ளம் எனத் தமிழகத்தின் முக்கியமான பகுதிகள் அனைத்தும் தண்ணீரில் மிதக்கின்றன. கன மழை ஆரம்பிப்பதற்கு முன்னரே நான் உமக்குச் சொன்னேன், வெள்ள நிவாரண நிதி என்று எதையாவது கொடுத்து ‘கவர்’ பண்ணப் போகிறார்கள் என்று. அதற்கான காலம் நெருங்கிவிட்டது. விரைவில் அறிவிப்புகள் வரலாம். வாக்காளர்களை வசப்படுத்த இதைவிட நல்ல வாய்ப்பு என்ன இருக்கிறது?” – முதல் பிட்டைத் தூக்கிப் போட்ட கழுகார் தொடர்ந்தார்…
”முதல்வர் அதிகமான அப்செட்டில் இருக்கிறார்! பேராசிரியர் அன்பழகனிடம் தனிமையில் பேசிய கருணாநிதி, வருத்தமாய் சில வார்த்தைகளைச் சொல்லி அநியாயத்துக்கு உருகினாராம். ‘நிதீஷ் குமாரைப் போல சாதனைகளை மட்டும் சொல்லி நிம்மதியா ஜெயிச்சிடலாம்னு நினைச்சேன். ஆனா, எல்லாத்துலயும் இப்படி மண்ணைப் போட்டுட்டாங்களே’ என்று வருத்தப்பட்ட கருணாநிதி, நான்கு பெயர்களை வரிசையாகச் சொல்லி, ‘இவங்கதான் எனக்குத் தவறான தகவல்களைக் கொடுத்து டார்க் ரூம்ல வெச்சுட்டாங்க’ என்று சொன்னாராம். உறவில் ஒரு பெண்மணி, கட்சியில் ஒரு மன்னர், காக்கியில் ஒரு அதிகாரி மற்றும் இன்னொருவர் என்கிறார்கள். ‘இவ்வளவு விதிமீறல்கள் இருந்திருக்கும்னு தெரிஞ்சு இருந்தா, முன்னமே ராஜினாமா செய்யவைத்து விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறதுக்கு முன்னாடியே அணைச்சிருக்கலாம்’ என்றும் கருணாநிதி வருத்தப்பட்டாராம்.”
”ஆ.ராசா?”
”சென்னைக்குள் அதிகம் வர வேண்டாம். வந்தாலும், தலைவருடன் வலம் வர வேண்டாம். எங்காவது வர நேர்ந்தாலும், புகைப்படத்தில் விழ வேண்டாம் என்ற மூன்று கட்டளைகள் அவருக்குப் போடப்பட்டுள்ளதாம். ‘இது தலைவர் உத்தரவா… தளபதி உத்தரவா என்று தெரியவில்லை’ என்கிறார்கள் தி.மு.க-வில்.
அதனால்தான் ஊட்டிக்குப் போய் இறங்கினார் ஆ.ராசா. ஆனால், அங்கும் தடபுடலான கோவை விமான நிலைய வரவேற்பு ஆர்ப்பாட்டத்தை அவ்வளவாக தலைமை ரசிக்கவில்லை. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது கணக்காக அவர் நடந்துகொள்ளும் சம்பவங்களை, கருணாநிதி அதிகம் ரசிக்கவில்லை என்றே சொல்கிறார்கள்.”
”ராஜாத்தி அம்மாள், நீரா ராடியா பேசிய விவகாரத்தின் ரியாக்ஷன் என்ன?”
”அது கருணாநிதியை இன்னும் ஆட்டம் காண வைத்துவிட்டதாம். ‘எனக்கு கோபாலபுரம் வீட்டைத் தவிர எந்த சொத்தும் இல்லை’ என்று சொல்லி தனது சொத்துக்கணக்கை விலாவாரியாக விவரித்து கருணாநிதி வெளியிட்ட கணக்கு அறிக்கைக்குக் காரணமே அந்த டேப் ஆதாரம் தான் என்றும் சொல்கிறார்கள். ராஜாத்தி அம்மாள் இருக்கும் சி.ஐ.டி. நகர் வீட்டில் அநாயசமாக நடமாடும் சில நபர்கள் குறித்து, கருணாநிதியே சில மாதங்களுக்கு முன் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார். அதனால் ஏற்பட்ட வாக்குவாதங்களில் தான் ஆறேழு நாட்கள் அந்த வீட்டுப் பக்கமாகப் போகாமல் இருந்தார். அதற்குப் பிறகு கனிமொழி, கோபாலபுரம் வீட்டுக்கு வந்து கருணாநிதிக்கு சில விளக்கங்களை அளித்து அழைத்துப் போனார். அப்போதுகூட இந்த மாதிரியான சிலரைப்பற்றி கோபமான வார்த்தைகளை உதிர்த்தார். அப்போதும் ஒரு சி.டி. ஆதாரத்தை அவர் காட்டியதாகச் சொல்கிறார் கள்.”
”இங்குமா சி.டி.?”
”டெல்லியில் மட்டுமா டேப் பண்ணுவார்கள்? சென்னையில் பண்ண மாட்டார்களா? இதைத் தொடர்ந்து ஒரு அதிகாரிக்கும் ராஜாத்தி அம்மாளுக்குமே முட்டல் மோதல் எழுந்தது. அதனால் அந்த வீட்டுப் பக்கமே தலைகாட்டாமல் இருந்தாராம். இந்த நீரா ராடியா டேப் விவகாரம் வெளியான பிறகு, மெள்ள வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். அப்போது சொல்ல முடியாத வார்த்தைகள் வந்து விழுந்திருக்கின்றன. சில நிமிடங்களில் இரண்டு தரப்பும் அமைதியாகி, சமீபத்திய சுழலில் இருந்து எப்படி விடுபடுவது என்று பேசினராம்.”
”அநாயசமாக சிலர் வலம் வருவ தாகச் சொன்னீரே… யாராம் அவர்கள்?”
”திராவிடனுக்கு எதிர்ப்பதமான வார்த்தையைக் கொண்ட வட இந்திய இளைஞர் ஒருவர்தான் அங்கு ஆல் இன் ஆலாக இருக்கிறாராம். அவரது மனைவி பியூட்டி பார்லர் பெண்மணியாம். இன்னொருவர், முருகக் கடவுளின் பெயரைக் கொண்டவர். அடுத்தவர் கிறிஸ்துவ மதப் பிரமுகர் நாமம் தாங்கியவர். ஆழ்வார் பேட்டை பகுதியில் உள்ள இடத்தில் உட்கார்ந்துகொண்டு இவர்கள் செய்யும் லாபிக்களும் மீடியேட்டிங் வேலைகளும் மலைப்பைக் கிளப்புகின்றன. வட இந்தியவாலாக்கள் நிறைய பேர் எதற்கு வருகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்ற அளவுக்கு இந்த நான்கு பேரின் டீலிங் இருப்பதாக சி.ஐ.டி. காலனிக்கு வந்து போகும் தி.மு.க-வினர் திகைக்கிறார்கள். நீரா ராடியா மாதிரியான புதுமாதிரியான விவகாரங்களைக் கிளப்பி, அம்மாவை மாட்டிவிடாமல் இருந்தால் போதும் என்பது அக்கறையுள்ள கட்சிக்காரர்களின் அர்ச்சனையாக இருக்கிறது.”
”டெல்லி ரியாக்ஷன்கள் என்னவாம்?”
”டெல்லி கடுகடுப்புகள்தான் சுப்ரீம் கோர்ட்டில் தெறிக்கிறதே! இதுவரைக்கும் ஆ.ராசாவை மையப்படுத்தி, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சிங்வியும் கங்குலியும்தான் கேள்விகளால் மட்டையடி அடித்தார்கள். கடந்த புதன்கிழமை முதல் முறையாக மத்திய அரசாங்கத்தின் வக்கீல் கோபால் சுப்பிரமணியம் சேம் சைடு கோல் போட்டார், பார்த்தீரா? ‘ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் ஆட்சேபனை தெரிவித்தது, மிக மிக முக்கியமானது. அதை அமைச்சர் ஆ.ராசா அலட்சியப்படுத்தி இருக்கக் கூடாது. பிரதமரின் கருத்துக்கு முக்கியத்துவம் தந்திருக்க வேண்டும்’ என்று கோபால் சுப்பிரமணியம் சொல்லுவார் என்று தி.மு.க. தரப்பு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மத்திய அரசு வக்கீல் சொன்னதைப் பார்த்தால், பிரதமரும் ஆ.ராசாவும் முரண்படும் விஷயம் முதல் தடவையாக மத்திய அரசாங்கத்தால் சொல்லப்பட்டு இருக்கிறது.”
”இதை வைத்துப் பார்த்தால் தி.மு.க – காங்கிரஸ் உடைப்பு உறுதியானது மாதிரி தெரிகிறதே?”
”ஆ.ராசா விவகாரம் எப்படிப் போகிறது என்பதை வைத்து மட்டுமல்ல, நான் அடுத்துச் சொல்லப்போகும் விஷயத்தை கவனித்தாலும் நீர் அப்படித்தான் சொல்வீர்!
தமிழ்நாடு முழுவதும் இளைஞர் காங்கிரஸார் அதன் தலைவர் யுவராஜா தலைமையில் பாதயாத்திரை போனார்கள் அல்லவா? அவர்களை அழைத்து ராகுல் பேசப்போகிறார் என்றும் உமக்கு நான் சொல்லி இருந்தேன். கடந்த புதன்கிழமை யுவராஜா தலைமையிலான அனைத்து இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளையும் ராகுல் சந்தித்தார். அப்போது சந்தோஷத்தால் அவரது முகமே சிவந்துபோனதாம். ’40 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் செய்ய முடியாததை நீங்கள் நான்கே மாதங்களில் செய்திருக்கிறீர்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வருமா வராதா என்ற அவநம்பிக்கை பொதுமக்களுக்கு இல்லை. நம்முடைய கட்சித் தலைவர்களுக்குத்தான் அப்படி அவநம்பிக்கை இருந்தது. அதனால்தான் அவர்கள் நம்முடைய கட்சியை வளர்க்கவில்லை. இப்போது, இளைஞர் காங்கிரஸைப் பார்த்து எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. அதைவிட நம்மைப் பார்த்து தி.மு.க., அ.தி.மு.க-வுக்குப் பயம் வந்திருக்கிறது. அந்தக் கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சியில் மாறி மாறி இருந்து பழசாகிவிட்டன. அதன் தலைவர்களுக்கும் வயதாகிவிட்டது. உங்களைப் பார்க்கும்போது, நீங்கள்தான் தமிழ்நாட்டில் ஆட்சிச் சக்கரத்தை செலுத்தப்போகிறீர்கள் என நம்புகிறேன். தமிழ்நாட்டில் காங்கிரஸை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தாமல் நான் ஓயப்போவதில்லை’ என்று சுமார் 45 நிமிஷம் கொந்தளித்தாராம் ராகுல்.”
”பீகார் முடிவுக்குப் பிறகு அவர் அமைதியாகிவிட்டதாக அல்லவா சொன்னார்கள்?”
”அப்படித் தெரியவில்லையே! ‘மாநிலம் முழுவதும் பாதயாத்திரை வந்த நீங்கள் இனி 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதே யாத்திரையை நடத்தியாக வேண்டும். டிசம்பர் 28 தொடங்கி ஜனவரி 26 வரை இதை நடத்தி முடியுங்கள். மார்ச் வரைக்கும் நான் எட்டு முறை தமிழ்நாட்டுக்கு வருவேன்’ என்று சொன்னாராம். இதற்கு ‘மிஷன் தமிழ்நாடு’ என்றும் ராகுலே பெயர் சூட்டினாராம்!”
”போகிற போக்கைப் பார்த்தால், தனி ஆவர்த்தனமாகத்தான் இருக்கும்போல!”
”சில வாரங்களுக்கு முன்னதாக தமிழ்நாடு முழுவதும் டெல்லியில் இருந்து வந்த கதராடை டீம் ஒன்று, கோஷ்டி சார்பில்லாத காங்கிரஸ் பிரமுகர்களை அழைத்து ஒரு சர்வே நடத்தி, அந்த ரிசல்ட்டையும் ராகுலிடம் கொடுத்தது. ஒவ்வொரு கேள்விக்கும் 10 மதிப்பெண்களாம். யார் அடுத்த பிரதமராக வரலாம், யாரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகப் போடலாம், தமிழகத்தில் பிரபலமான அரசியல் தலைவர் யார் என்றெல்லாம் கேள்விகள். பிரதமர் பதவிக்கு ராகுல் பெயரை அதிகமானவர்கள் பரிந்துரை செய்திருந்தார்களாம். தலைவராக ப.சிதம்பரத்தைப் போடலாம் என்பது பெரும்பாலானவர்கள் கருத்தாம். தங்கபாலு பெயருக்கு நேராக பத்துக்கு பூஜ்யம் என்று பலரும் எழுதியிருந்தார்களாம். அதில் சிலர், ‘காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் யாருடைய ஆலோசனையையும் கேட்டுவிடாதீர்கள்’ என்றும் எழுதிக்கொடுத்து இருந்தார்களாம். அது ஏன் என்று ஐ.பி. மூலமாக ராகுல் விசாரிக்கச் சொல்ல… அவர்கள் கொடுத்த பட்டியலைப் பார்த்துக் கோபப்பட்டாராம் ராகுல். ‘இவங்க சரியா இருந்திருந்தால், நாம் எதுக்கு அடுத்த கட்சியை நம்ப வேண்டிய நிலைமை வருது’ என்று கமென்ட் அடித்தாராம்!” என்ற கழுகார் வானத்தைப் பார்த்தார்.
”மழை மறுபடியும் வருவதற்குள் நான் புறப்படட்டுமா? அதற்கு முன்னதாக இரண்டு தகவல்கள்… விஜய் அரசியலில் இறங்க ஆலோசனை நடத்தியதை சொன்னேன். அவரை அழைத்துப் பேச ஜெயலலிதா தரப்பு விரும்புகிறது. அநேகமாக 5-ம் தேதி கொடநாட்டில் இருந்து வருகிறார் ஜெ. அன்று அந்த சந்திப்பு இருக்கலாம்!”
”அடுத்த தகவல்?”
”வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் சென்னை நெற்குன்றத்தில் பெரிய புராஜெக்ட் ஒன்றைப் போட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வீடுகளைப் பிரித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள். அது முதல்வர் கவனத்துக்குப் போகவில்லை என்று சொன்னேன் அல்லவா? இந்த நியூஸைப் பார்த்ததும்… கேள்விகளால் குடைந்துவிட்டதாம் ஆட்சி மேலிடம். நிறையக் கேள்விகள் கேட்டு ஸ்கீமையே நிறுத்திவிடும் நிலைக்குப் போய்விட்டார்களாம்.”
”என்னது?”
விஷ்ஷ்ஷ்ஷ்க்
நன்றி ஜுனியர் விகடன்