ஜாக்சன் துரை, அண்ணா துரை அல்ல. துறை. கட்டத் துறை. ஊரக வளர்ச்சியை கவனிக்கும் துறை என்றால் ஊரக வளர்ச்சித்துறை. வணிக வரிகளை வசூலிக்கும் துறை வணிகவரித்துறை. போக்குவரத்தைப் பார்க்கும் துறை போக்குவரத்துத் துறை. கட்டப்பஞ்சாயத்து செய்யும் துறையை கட்ட துறை என்று அழைப்பது பொருத்தம்தானே ?
இப்படி கட்டப்பஞ்சாயத்து செய்யும் துறை வேறு எந்தத் துறையும் அல்ல. சென்னை மாநகரக் காவல்துறைதான் அந்த கட்ட துறை.
கட்டப்பஞ்சாயத்து செய்வதில் தமிழக காவல்துறைக்கு ஈடு இணையே கிடையாது. அதிலும் குயிக்கன் முருகன் என்றும் சரிபாதி என்றும் அழைக்கப்படும் கட்டதுரை திரிபாதியின் தலைமையில் செயல்படும் சென்னை மாநகரக் காவல்துறை இருக்கிறதே… சொல்லவே வேண்டாம். அற்புதம்.
கட்டதுரையின் கட்டப்பஞ்சாயத்து நடவடிக்கைகளைப் பற்றி சவுக்கு ஏற்கனவே சரிபாதி கேட்டாரா திரிபாதி என்ற கட்டுரையில் விரிவாக எடுத்துரைத்திருந்தது. அதில் சம்பந்தப்பட்ட துக்கையாண்டி என்ற கூடுதல் டிஜிபியின் மனைவி மீது நில மோசடிப் புகாரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்து வந்ததையும், துக்கையாண்டியைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வந்ததையும் சவுக்கு விரிவாக பதிவு செய்திருந்தது.
புரட்சித் தலைவி அம்மாவின் மனம் கோணும்படி நடந்த ராவணன் மற்றும் மிடாஸ் மோகன் மீது நில மோசடிப் புகார் என்று, அவர்களை கைது செய்த பிறகு எப்ஐஆர் போட்டார் கட்டதுரை. இது போல சென்னை மாநகர காவல்துறையில் நில மோசடிப் பிரிவில் தற்போது நடந்து வருவது கட்டப்பஞ்சாயத்தும், வசூல் வேட்டையும் மட்டுமே. மாநகரக் காவல்துறையில் முன்பெல்லாம் அதிக வசூலைத் தரும் பிரிவாக திருட்டு விசிடி ஒழிப்புப் பிரிவு இருந்தது. தற்போது வசூலில் கொடிகட்டிப் பறக்கும் பிரிவு எது தெரியுமா ? விபச்சாரத் தடுப்புப் பிரிவு. கடந்த ஆட்சியில் சிறைப்பிடிக்கப் பட்ட கன்னட பிரசாத் சோனா லட்சுமி போன்றோர் தற்போது பழையபடி தங்கள் தொழிலை அமோகமாக நடத்தி வருகிறார்கள். இதனால் விபச்சாரத் தடுப்புப் பிரிவில் பணமழை பொழிகிறது. இதில் யாருக்குப் பங்கு போகும் என்பதை சவுக்கு அதன் அறிவான வாசகர்களுக்கு சொல்லிப் புரிய வைக்க வேண்டியதில்லை. கமிஷனர் கட்டதுரையின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கிறது.
கடந்த வாரம் சென்னை ஐஐடி வளாகத்தில், மானச மெருகு என்ற 21 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டார். ஐஐடிக்களில் தற்கொலை என்றாலே அது தேசிய அளவில் இடம்பிடிக்கும் வகையில் மாறி விட்டது. ஐஐடியில் தொடர்ந்து நடந்து வரும் தற்கொலைகளே இதன் காரணம். இந்த அடிப்படையில் இம்மாணவியின் தற்கொலை தொடர்பாக செய்தி சேகரிப்பதற்காக செய்தியாளர்களும், புகைப்படக் கலைஞர்களம் பல்வேறு நேரங்களில் ஐஐடி வளாகத்தைச் சென்றடைந்திருக்கின்றனர்.
மாலை சுமார் 5.45 மணிக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் இளம் புகைப்படக் கலைஞர் ஆல்பின் மேத்யூ, சென்னை ஐஐடி வளாகத்துக்கு சென்றிருக்கிறார். அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்ட பெண்கள் ஹாஸ்டலை புகைப்படம் எடுத்து விட்டு, அங்கே கும்பலாக குழுமியிருந்த மாணவ மாணவிகளையும் படம் எடுத்திருக்கிறார். அவர் அவ்வாறு படமெடுக்கும் முன்பாக, மாணவர்களின் டீனாக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் எல்.எஸ்.கணேஷ் என்பவரிடம் அனுமதி கேட்டிருக்கிறார். அவரும் படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அனுமதி அளித்த பிறகே சென்றிருக்கிறார்.
புகைப்படக் கலைஞர் ஆல்பின் மேத்யூ
இப்படி படமெடுத்துக் கொண்டிருக்கையில் திடீரென்று அங்கே வந்த குளிர்சாதனம் மற்றும் இயந்திரவியல் துறையின் தலைவர், பேராசிரியர் பிரகாஷ் எம்.மையா என்பவர், படமெடுத்துக் கொண்டிருந்த ஆல்பினை அணுகி, யாரைக்கேட்டு ஐஐடிக்குள்ளே வந்து படமெடுக்கிறாய் ? யார் உனக்கு அனுமதி கொடுத்தது ? கேமராவைக் கொடு என்று மிரட்டியிருக்கிறார். ஆல்பின் கேமராவைத் தரமுடியாது என்று மறுத்ததும், அந்தக் கேமராவைப் பிடுங்க முயற்சித்திருக்கிறார். ஆல்பின் கேமராவை நெஞ்சோடு பிடித்துக் கொண்டு கேமராவை விடாமல் காப்பாற்ற முயற்சித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பேராசிரியர் மையா, அருகிலிருந்த செக்யூரிட்டி கார்டுகளிடம் சொல்லி மையாவைப் பிடித்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார். அருகே இருந்த செக்யூரிட்டிகள் மையாவை பிடித்துக் கொள்ள, பேராசிரியர் பிரகாஷ், ஆல்பினின் முகத்திலேயே குத்தியிருக்கிறார். வலியால் ஆல்பினின் பிடி தளர, கேமராவைப் பிடுங்கியிருக்கிறார்கள். பிடுங்கிய கேமராவை அவர்கள் ஆராய்ந்து கொண்டிருந்தபோது, ஆல்பின் செல்போன் மூலமாக தனது அலுவலகத்துக்கு தகவல் சொல்லியிருக்கிறார்.
இதற்குள் ஆல்பினைப் பிடித்து, அவர் செல்போனையும் பறித்து அவரை ஐஐடியினுள்ளே இருந்த அட்மினிஸ்ட்ரேட்டீவ் ப்ளாக்கில் அடைத்து வைத்திருக்கின்றனர். எக்ஸ்பிரஸ் அலுவலகத்துக்கு தகவல் தெரிந்து காவல்துறை உதவியோடு ஆல்பின் மீட்கப்பட்டார். ஆல்பின் தாக்கப்பட்டது தெரிந்ததும் பத்திரிக்கையாளர் சங்கங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு ஆல்பினிடம் நடந்த விபரங்கள் கேட்டு அறியப்பட்டு, கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் கொடுத்த கையோடு, ஆல்பினை கமிஷனர் கட்டதுரை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர் பத்திரிக்கையாளர்கள். ஆல்பின் மேத்யூவைப் பார்த்த கமிஷனர் கட்டதுரை இவ்விஷயமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மறுநாள் சென்னை ஐஐடியிலிருந்து ஒரு அறிக்கை வெளிவருகிறது. மீடியாக்களுக்கும் சென்னை ஐஐடிக்கும் மோதல் என்று சில ஊடகங்களில் தகவல் வெளியாகியிருக்கிறது. சிற்சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து விட்டன. நடந்த சம்பவங்களுக்காக நாங்கள் வருத்தப்படுகிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இத்தோடு அறிக்கை முடிந்திருந்தால் பிரச்சினையும் முடிந்திருக்கும். அறிக்கையின் அடுத்த பத்தியில், சம்பந்தப்பட்ட புகைப்படக் கலைஞர், ஐஐடி பெண் மாணவிகளை ஆபாசமாக, ஆட்சேபகரமான வகையில் படமெடுத்துள்ளார். இது பத்திரிக்கை கவுன்சிலின் விதிகளுக்கு முரணானது. (Press council of India) இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்து விட்டு, இந்த அறிக்கையைப் புகாராக பத்திரிக்கை கவுன்சிலுக்கும் அனுப்பியுள்ளனர்.
ஒரு பத்திரிக்கையாளனை அடித்து விட்டு, அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்காமல், அவன் மீதே குறை சொல்லுவது மட்டுமல்லாமல், இது குறித்து பத்திரிக்கை கவுன்சிலுக்கும் புகார் அனுப்பியது பத்திரிக்கையாளர்களைக் கோபமடையச் செய்தது.
அன்று மாலை கோட்டூர்புரம் காவல்நிலையத்துக்குச் சென்ற பத்திரிக்கையாளர்கள், ஆல்பின் மேத்யூ கொடுத்த புகாரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். மாலை 7.30 மணிக்கு பத்திரிக்கையாளர்கள் அங்கே சென்றனர். பத்திரிக்கையாளர்கள் அங்கிருந்த ஆய்வாளரிடம் எப்ஐஆர் பதிவு செய்யுமாறு கேட்கிறார். அவர் உயர் அதிகாரிகளைக் கலந்தாலோசிக்க முடியாமல் எப்ஐஆர் போட முடியாது என்கிறார். சற்று நேரத்தில், துணை ஆணையர் புகழேந்தி சம்பவ இடத்துக்கு வருகிறார். அவரும் அவர் பங்குக்கு, அவருக்கு உயர் அதிகாரியை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கூறுகிறார். அவரும் எப்ஐஆர் பதிவு செய்வது குறித்து எந்த உத்தரவாதமும் கொடுக்காமல், பிரச்சினை எப்படித் தள்ளிப்போடுவது என்பதிலேயே கவனமாக இருக்கிறார்.
துணை ஆணையர் புகழேந்தி
இப்படியே மணி 10 ஆகிறது. கோட்டூர்புரம் அருகேயுள்ள பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்களும் அந்த இடத்திற்கு வருகிறார்கள். இரவு 11 மணிக்கு இணை ஆணையர் சேஷசாயி வருகிறார். அவரிடம் பத்திரிக்கையாளர்கள் பேசுகிறார்கள். . புகைப்படக் கலைஞர் ஆல்பின் தாக்கப்பட்டதற்கு உரிய பிரிவுகளில் எப்ஐஆர் பதிவு செய்யுங்கள் என்று கேட்கிறார். அவரும் உயர் அதிகாரியை கேட்க வேண்டும், உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்ய முடியாது என்கிறார். (எல்லோரும் உயர் அதிகாரியைக் கேட்க வேண்டும் என்றால் அந்த உயரமான அதிகாரி எங்கேதான் இருக்கிறார் ?) அதற்குள் சேஷசாயியை புகைப்படம் எடுக்கிறார்கள் அந்த இடத்தில் இருந்த நிருபர்கள். உடனே வந்ததே கோபம் சேஷசாயிக்கு. காவல் நிலையத்தை விட்டு அனைவரும் வெளியேறுங்கள். வெளியேறாவிட்டால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று மிரட்டுகிறார். (காவல் நிலையம் என்ன உங்கள் மாமியார் வீடா சேஷசாயி ? இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து நீங்கள் ஓய்வு பெற்றால் நீங்களே காவல் நிலையத்தில் நுழைய முடியாது என்பது தெரியுமா உங்களுக்கு ?)
சேஷசாயி ஐபிஎஸ்
இதற்குள் சில பத்திரிக்கையாளர்களால் கமிஷனர் கட்டதுரைக்கு தகவல் அளிக்கப்படுகிறது. அவர் சேஷசாயியை தொலைபேசியில் அழைத்து, எப்ஐஆர் போட்டுத் தொலைய்யா என்று அறிவுரை வழங்குகிறார். அதற்குப் பிறகும் எப்ஐஆர் போடுவதில் குளறுபடி செய்கிறார்கள். கொலை மிரட்டல் விடுப்பதற்கான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 506 (ii)ன் கீழ் வழக்கு பதிவு செய்தால் ஜாமீனில் வெளிவர முடியாது. 506 (i) ன் கீழ் வழக்கு பதிவு செய்தால் ஜாமீனில் வெளிவரலாம். காவல்துறையினரின் நடவடிக்கைளைப் பார்த்து எரிச்சலடைந்த பத்திரிக்கையாளர்கள் நள்ளிரவு 12 மணிக்கு சாலையில் அமர்கின்றனர். அமரும் முன்பு, நாங்கள் சாலையில் அமர்கிறோம். எப்ஐஆர் உரிய பிரிவுகளில் போடவில்லையென்றால், போயஸ் தோட்டத்தில் சென்று அமர்வோம் என்று சொல்லுகிறார்கள்.
வேறு வழியின்றி 506 (I) என்று முதலில் போடப்பட்ட எப்ஐஆர் 506 (ii) என்று திருத்தப்படுகிறது.
இந்த சேஷசாயி இருக்கிறாரே… … அவருக்கு தன் மனதில் பெரிய அப்பாடக்கர் என்ற நினைப்பு எப்போதும் உண்டு. அவர் மனைவி, இந்து நாளேட்டில் வேலை பார்க்கிறார் என்பதால், பத்திரிக்கையாளர்கள் என்றாலே அவருக்கு ஒரு இளக்காரம். அதாவது அவர் குடும்பமும் பத்திரிக்கையாளர் குடும்பமாம். அவர் மனைவி இந்து நாளேட்டின் இணைப்பாக வெளிவரும் டவுன்டவுன் மைலாப்பூரின் எடிட்டர்.
2002ல் முன்னாள் சென்னை கமிஷனர் முத்துக்கருப்பனின் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒரு வழக்கு இருந்தது. அண்ணாநகரில் உள்ள ஒரு நிலத்தை காவல்துறையைப் பயன்படுத்தி அபகரிப்பு செய்ய முயற்சித்ததாக அவர் மீது வழக்கு. அந்த வழக்கில் முத்துக்கருப்பன் மீது துறை நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. முத்துக்கருப்பன் மீது செய்யப்பட்ட பரிந்துரையோடு சேர்த்து, அவருக்கு உடந்தையாக இருந்ததாக அப்போது அண்ணா நகரின் துணை ஆணையராக இருந்த சேஷ சாயி மீதும் துறை நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்தத் தகவல் சேஷசாயிக்கு எப்படியோ தெரிந்து விட்டது. உடனே அப்போது மத்திய சரக எஸ்.பியாக இருந்த மஞ்சுநாதாவைப் பார்க்க ஓடி வந்தார். என்னடா இந்த ஆளோடு பெரிய தொல்லையாகப் போய் விட்டதே என்று மஞ்சுநாதா சம்பந்தப்பட்ட கோப்பை எடுத்து அவரிடமே காண்பித்தார். “சார் ப்ளீஸ் ஹெல்ப் மீ சார்” என்று அவர் மஞ்சு நாதாவிடம் கெஞ்சியதை சவுக்கு நேரில் பார்த்துள்ளது. மஞ்சுநாதா, நாங்கள் எங்கள் அறிக்கையை அரசுக்கு அனுப்பி விட்டோம். நீங்கள் தலைமைச் செயலகத்தில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். அப்படிப்பட்ட வீரப்பிரதாபன்தான் சேஷசாயி.
சமீபத்தில் இந்த ஆட்சியில், தன்னுடைய மகளுக்கு ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் கேட்டிருக்கிறார் சேஷசாயி. சாதாரணமாக யார் கேட்டாலும் அப்பாயின்ட்மென்ட் கொடுப்பதற்கே 448 முறை யோசிக்கும் ஜெயலலிதா, சேஷசாயியை உடனே வரச்சொல்லியிருக்கிறார்.
ஜெயலலிதாவைப் பார்க்க சென்ற சேஷசாயி செய்த வேலை என்ன தெரியுமா ? மீசையை சுத்தமாக மழித்து விட்டார். ஏன் மீசையை எடுத்தார் என்றால் அப்போதுதான் ஜெயலலிதாவுக்கு அவர் ஐயர் என்பது தெரியுமாம். ஜெயலலிதாவைப் பார்க்கச் சென்ற சேஷசாயியைப் பார்த்து ஜெயலலிதா “நீங்கள் ஐயரா ஐயங்காரா” என்று கேட்டிருக்கிறார். உடனே சேஷசாயி “அம்மா நான் ஐயர்மா” என்றிருக்கிறார். சேஷசாயி என்ற பெயரை ஐயஙகார்தானே வைப்பார்கள் என்று கேட்டிருக்கிறார். (மனதுக்குள் பெயர் வைத்த அவர் தந்தையைத் திட்டியிருப்பார் சேஷசாயி) இல்லைமா நான் ஐயர்தான் என்று சொன்ன சேஷசாயி டெய்லி சந்தியாவந்தனமெல்லாம் பண்றேன்மா.. என்று பவ்யமாக சொல்லியிருக்கிறார். (எங்க அம்மா பேரை ஏன்யா சொல்ற என்று ஜெயலலிதா அடித்திருந்தால் என்ன செய்திருப்பார் சேஷசாயி) பிறகு, ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியில் அவர் மகளுக்கு சீட் தருவதாகச் சொல்லியிருக்கிறார் சேஷசாயி. இந்தத் தகவல்கள் தன்னைப் போலவே மற்றொரு அதிகாரியிடம் பெருமையாக சேஷசாயியே தெரிவித்த தகவல்கள்.
முதல் நாள் இரவு 12.30 மணி வரை அலைக்கழித்த காவல்துறையினர் மீதும், அடாவடி செய்த ஐஐடி மீதும் கடும் கோபத்தில் இருந்த பத்திரிக்கையாளர்கள், மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் குழுமினர். பல பத்திரிக்கையாளர்கள் கோபத்துடன் முறையிட்டனர். முதல்நாள் சேஷசாயி பத்திரிக்கையாளர்களை வழக்கு போடுவேன் என்று மிரட்டியதை எழுத்துபூர்வமான புகார் தயார் செய்யப்பட்டது.
பத்திரிக்கையாளர்கள் கூடி ஆலோசனை செய்த பிறகு கமிஷனர் கட்டதுரை வந்தார். அவர் முன்பாகவே, முதல் நாள் இரவு நடந்தது, எப்ஐஆர் பதிவு செய்ய தாமதம் செய்தது உட்பட அனைத்து விவகாரங்களையும் விவரித்தனர் பத்திரிக்கையாளர்கள். அனைத்தையும் பொறுமையாக கேட்ட கட்டதுரை, இறுதியாகப் பேசினார். அவர் பேசியதைக் கேட்டவர்கள் இவரல்லவோ அதிகாரி… காக்க காக்க சூர்யாவை விட சிறந்த காவல்துறை அதிகாரி என்ற முடிவுக்கு வந்திருப்பார்கள்.
“சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சட்டம் அனைவருக்கும் மேலானது. என்னிடம் இரண்டு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு நான் ஒன்றே ஒன்றை உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மிக மிக நேர்மையான முறையில் இந்த வழக்கை நான் விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். உங்களுக்கு நியாயம் கிடைக்கும். கவலைப்படாதீர்கள்.” என்றார்.
கேட்டதும் புல்லரிக்கிறதா… ஆனால் அங்கே குழுமியிருந்த பத்திரிக்கையாளர்களுக்கு இவர் திருநெல்வேலி அல்வாவை மேடையிலேயே கிண்டிக் கொடுக்கிறார் என்பது புரிந்தது. பத்திரிக்கையாளர்கள் நாம் அனைவரும் நேராக ஐஐடிக்கு சென்று, அவர்களிடமே நேரடியாக ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்கலாம் என்று முடிவெடுக்கின்றனர்.
உடனே இத்தகவல் அறிந்த கட்டதுரை, பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகளை அழைத்தார். சனிக்கிழமைக்குள் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஐஐடி சலோ போராட்டத்தை கைவிடுமாறும் கேட்டுக் கொண்டார். அதையடுத்து சனிக்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் கமிஷனர் அலுவலகத்தில் சந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
இதற்கிடையே வெள்ளிக்கிழமை மாலை, தான் ஏற்கனவே அளித்திருந்த வாக்குறுதிப்படி உறுதியான நடவடிக்கை எடுத்தார் கட்டதுரை. ஆல்பின் தாக்குதலில் சம்பந்தப்பட்ட மூன்று செக்யூரிட்டி கார்டுகள் கைது செய்யப்பட்டனர் !!!!
ஐஐடி சென்னையின் மகளிர் விடுதி வார்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆல்பின் மேத்யூ மீது, பெண்கள் மீதான வன்கொடுமைச் சட்டத்தின் படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
காவல் துறை தரப்பிலிருந்து பேராசிரியர் மய்யா கைது செய்யப்படவேண்டுமென்றால், ஆல்பினும் கைது செய்யப்படுவார் என்ற செய்தி பரப்பப்பட்டது.
ஆல்பின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் பத்திரிக்கையாளர்கள் கொதித்தனர். சனிக்கிழமை மீண்டும் ஆணையர் அலுவலகத்தில் கூடினர். காலை 11.30 மணிக்கு கூடிய பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கொதிப்பு கூடியது.
இதற்கிடையே சனிக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை ஐஐடியில் படிக்கும் நான்கு மாணவிகள் சார்பில் அனைத்துப் பத்திரிக்கை அலுவலகங்களுக்கும் ஒரு மின்னஞ்சல்.
அதைப்பற்றி பின்னர் விவாதிப்போம். பத்திரிக்கை அலுவலக பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடத்த கூடுதல் ஆணையாளர் தாமரைக் கண்ணனும், இணை ஆணையர் சண்முக ராஜேஸ்வரனும் அவர்களை அழைத்தனர். முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டுத் திரும்பி வந்த பத்திரிக்கையாளர்கள், ஐஐடி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த வந்திருப்பதாகவும், அவர்களோடு பேசிவிட்டு வருவதாகவும் கூறினர். இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஐஐடியின் பதிவாளர் பேராசிரியர் சிவப்பிரசாத் மற்றும் கட்டிடக் கட்டுமானம் மற்றும் கட்டுமான மேலாண்மைத் துறை பேராசிரியர் ராமமூர்த்தி ஆகியோர் வந்து நேரில் மன்னிப்புக் கேட்பார்கள் என்று சொல்லப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் இருவரும் வந்து மன்னிப்பு கேட்டார்கள். அவர்கள் சென்றபிறக, மன்னிப்பு கேட்டாலும், ஆல்பின் மீதான வழக்கு வாபஸ் பெறும் உத்தேசம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
சிலப் பல விவாதங்களுக்குப் பிறகு, பத்திரிக்கையாளர்கள் கலைந்து சென்றனர்.
ஐஐடிக்கள் இந்தியாவின் மணிமகுடங்களாகத் திகழ்கின்றன. இவற்றில் படிப்பது ஒவ்வொரு மாணவனின் கனவு. அதனால் இந்த ஐஐடிக்களின் பாடத்திட்டங்கள் மிகக் கடுமையாக இருக்கின்றன. இந்த பாடத்திட்டங்களில் தேர்ச்சியடைய மாணவர்கள் கடும் போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது. அதனால் பல மாணவர்கள் இந்த அழுத்தத்தை சந்திக்க முடியாமல் தற்கொல செய்து கொள்வ தொடர்கதையாக உள்ளது. ஐஐடிக்களின் தற்கொலைக்காக மட்டும் ஒரு இணையதளம் இயங்கி வருகிறது என்பதே இந்த வேதனைக்கான சான்று. தொடரும் இத்தற்கொலைகளைக் கட்டுப்படுத்த உருப்படியான எந்த நடவடிக்கைகளையும் ஐஐடி நிறுவனங்கள் எடுப்பதில்லை என்பதே, இத்தற்கொலைகளை பெரிய அளவில் செய்தியாக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை.
அந்த அடிப்படையில்தான் ஊடகவியலாளர்கள் மாணவி மானச மெருகு தற்கொலை செய்து கொண்ட செய்தியை சேகரிக்க ஐஐடி சென்றுள்ளனர். சென்னை ஐஐடிக்கு சென்ற பத்திரிக்கையாளர்கள் யாரைக் கேட்டாலும் அங்கு சென்ற அனுபவம் ஒரு மோசமான அனுபவம் என்றே கூறுவார்கள்.
அந்த அளவுக்கு அக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் ஐஐடி நிறுவனத்தை ஏதோ தங்கள் சொந்த கொல்லைப்புறமாகவே கருதிக் கொண்டிருக்கிறார்கள். சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகியும், இட ஒதுக்கீட்டுக் கொள்கை அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகியும், பேராசிரியர்கள் நியமனத்தில் தலித்துகளை நியமிக்கமாட்டேன் என்று ஒரு நிறுவனம் இருக்கிறதென்றால் அது ஐஐடிக்கள் மட்டுமே.
ஐஐடிக்களை பார்ப்பனர்களின் மடமாகவே இது வரை நடத்தி வந்திருக்கிறார்கள். சவுக்கில் பார்ப்பனர்களை சாடி ஏதாவது எழுதினால் கடும் கண்டனங்கள் வருகிறது. கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறார்கள். அதனால் மீண்டும் ஒரு முறை, ஐஐடிக்களை பார்ப்பனர்களின் மடமாகவே இது வரை நடத்தி வந்திருக்கிறார்கள். இந்த அகம்பாவத்தின் வெளிப்பாடே செய்தியாளர் ஆல்பின் மேத்யூ மீது நடந்த தாக்குதல்.
இந்தத் தாக்குதலை நடத்திய பேராசிரியர் பிரகாஷ் எம்.மையா ஒரு ரவுடியைப் போல நடந்து கொண்டுள்ளார். ரவுடிகளும், போக்கிலிகளும் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால் அவர்களின் கலாச்சாரம் அது, அவர்களின் கல்வியறிவு அந்த அளவுக்குத்தான். ஆனால், பேராசிரியர் பிரகாஷ் மையா மெத்தப் படித்தவர். அவர் ரவுடி போல நடந்து கொண்டதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ? மேலும், ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டால் அதைச் செய்தியாக்காமல் எப்படி இருக்க முடியும் ?
பேராசிரியர் பிரகாஷ் மையா
ஐஐடியை விட உலகின் சிறந்த கல்வி நிறுவனம் என்றால் அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சொல்லலாம். உலகெங்கும் உள்ள மாணவர்கள் அங்கே படிக்கிறார்கள். அங்கே படிப்பவர்கள் இதுபோல தற்கொலைகளில் ஈடுபடுவதில்லையே… ஆக ஐஐடியின் அடிப்படையில் ஏதோ கோளாறு இருக்கிறதென்றுதானே பொருள்.. ? சேத்தன் பகத்தின் 3 இடியட்ஸ் நாவலில் ஐஐஎம்மில் உள்ள மோசமான நிலைமையை அற்புதமாக படம் பிடித்திருப்பார்.
இதுதான ஐஐடிக்களின் நிலை. அதிலும் பேராசிரியர் பிரகாஷ் எம்.மையா, மாணவர்களின் தற்கொலையைப் பற்றி சிறிதும் கவலைப்படாதவர் என்றே சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு இதே போல ஒரு மாணவன் சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்டபோது, செய்தி சேகரிக்கக் சென்ற செய்தியாளர், ஏன் இப்படித் தொடர்ந்து தற்கொலைகள் நடக்கிறது என்று கேட்டதற்கு, பேராசிரியர் மையா, எத்தனை தற்கொலைகள் நடக்கிறது என்று பார்க்காதீர்கள்… எத்தனை பேடன்ட் வாங்குகிறோம் என்று பாருங்கள் என்று கூறியிருக்கிறார். இந்த மையாதான் புகைப்படக் கலைஞர் ஆல்பினை தாக்கியது.
பெண்களை ஆட்சேபத்திற்குரிய வகையில் ஆல்பின் புகைப்படம் எடுத்தார் என்ற குற்றச்சாட்டு ஐஐடி நிர்வாகத்தால் சம்பவம் நடந்த வியாழக்கிழமை கூறப்படவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது. மையா மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்த பிறகே, இந்தப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏதோ ஒரு ஆத்திரத்தில் புகைப்படக் கலைஞரை பேராசிரியர் அடித்து விட்டார். நடந்த சம்பவத்துக்கு வருந்துகிறோம். ஆல்பினைத் தாக்கியது தவறு. இனி இதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கலாம். அல்லது பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசியிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் இந்த விவகாரம் ஒரே நாளில் முடிந்திருக்கும்.
ஆனால், அரசியல்வாதிகளைப் போலவும், ரவுடிகளைப் போலவும், ஐஐடி பேராசிரியர்கள் நடந்து கொண்டது அவர்கள் படித்த படிப்புக்கு அழகா ? சம்பவம் நடந்த அன்று மாலையே பேராசிரியர் கணேஷ், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் பாபு ஜெயக்குமாரை அழைத்து, நடந்த சம்பவத்துக்கு வருந்துவதாகவும், விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினால், விஷயத்தைக் கைவிடுவதாக பாபு ஜெயக்குமார் கூறியதும், அவர் சரி என்றே சொல்லியிருக்கிறார். ஆனால் மறுநாள் முதல் ஐஐடி நிர்வாகத்தின் போக்கில் பெரிய மாற்றம். நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து விட்டு, புகைப்படக் கலைஞர் நடந்து கொண்ட விதம் பத்திரிக்கை நெறிமுறைகளுக்கு மாறானது என்று பத்திரிக்கை கவுன்சிலிடம் புகார். அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் ஒரு அறிக்கை. இரண்டாவது அறிக்கையில் அங்கே குழுமியிருந்த பெண்கள் தவறாக புகைப்படம் எடுக்கப்பட்டதால், அவர்களின் மானத்தைப் பாதுகாக்கவே ஆல்பின் தாக்கப்பட்டார் என்று மற்றொரு அறிக்கை. கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, வழக்கு பதிவு செய்தால் நாங்களும் புகார் கொடுப்போம். புகார் கொடுக்க மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்ற வெளிப்படையாக மிரட்டினார்கள்.
இது போன்ற அணுகுமுறையை ரவுடிகள் மட்டுமே கடைபிடிப்பார்கள். படித்த பேராசிரியர்களை இச்சமூகம் மரியாதையோடு பார்க்கிறது.
சனிக்கிழமை அன்று, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் மன்னிப்புக் கேட்ட பேராசிரியர்கள் ராமமூர்த்தி மற்றும் பதிவாளர் சிவப் பிரசாத் ஆகியோரைப் பார்க்க பாவமாக இருந்தது. பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் அவர்கள் அந்த மன்னிப்பு அறிக்கையைப் படித்தபோது சங்கடத்திலும் அவமானத்திலும் நெளிந்தார்கள். எப்வோது அந்த இடத்தை விட்டுப் போவோம் என்று நெருப்பின் மேல் நின்றது போலத் துடித்தார்கள். தாக்குதலுக்குக் காரணமான ரவுடிப் பேராசிரியர் மன்னிப்புக் கேட்டிருந்தால் இப்படி நெளிந்திருக்க மாட்டார். ரவுடிக்கு ஏது மான அவமானமெல்லாம் ?
பேராசிரியர்கள் ராமமூர்த்தி மற்றும் சிவப்பிரசாத்
இந்தச் சங்கடங்களை இந்தப் பேராசிரியர்கள் தவிர்த்திருக்கலாம் அல்லவா ? இந்தப் பேராசிரியர்களை சாலையில் ஒரு ரவுடிப்பயல் பணத்துக்காக திடீரென்று தாக்கினால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் வலிதானே ஆல்பினுக்கும் ஏற்பட்டிருக்கும் ? அவனிடம் ஒரு வார்த்தை மன்னித்து விடு என்று கேட்டிருந்தால் என்ன குறைந்து விடப்போகிறது ? நம் எல்லாரையும் விட இயக்கவியல் விதிகளை நன்கு அறிந்தவர்கள்தானே இப்பேராசிரியர்கள். நியூட்டனின் மூன்றாம் விதி தெரியாதா இவர்களுக்கு ?
இது எல்லாவற்றையும் விட மிகப்பெரிய அயோக்கியத்தனம் ஐஐடி மாணவிகள் ஊடகங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல்.
Dear Sirs,
This concerns the media reports that have appeared during the last few days about an altercation in IIT Madras. We are a few lady students who were present during that time and were deeply disturbed by some of our photographs being taken at close quarters. We expressed our displeasure and embarrassment to the photographer and called for help from our faculty members and student secretaries who were also present then. Our faculty members and student secretaries appealed that the photos be shown to them and the objectionable ones be deleted. Since the photographer attempted to leave without respecting our pleas, our faculty, in order to protect our dignity and privacy, restrained the photographer from leaving without deleting the photos. A brief altercation followed in which both our faculty and the photographer suffered minor injuries.
Being lady students who have been directly affected and witnesses to the incident, we deem it our right to brief your readers by stating the facts and correcting the media reports that have appeared on this incident.
Yours faithfully,
Aruna (PhD programme, Chemical Engineering)
Ishitha (PhD programme, Aerospace Engineering)
Pratheeba (PhD programme, Chemical Engineering)
Regina (Project Researcher, Electrical Engineering)
Sunita (Project Researcher, Electrical Engineering)
Lady students of IIT Madras.
சவுக்கு அதிகம் படிக்கவில்லை. பத்தாவது முடித்தவுடன் வேலைக்குப் போக வேண்டிய சூழல். அதனால் அதிகம் படித்தவர்களைப் பார்த்தாலே ஒரு வியப்பும் மரியாதையும் தானாகவே வரும். ஐஐடியில் ஆராய்ச்சிப் படிப்பு படிக்கிறார்கள் என்றால், இந்த மாணவிகள் மிகச்சிறந்த அறிவாளிகவே இருக்க வேண்டும். மாணவிகள் அருணா, இஷிதா, ப்ரதீபா, ரெஜினா மற்றும் சுனிதாவைப் பார்த்து சவுக்கு கேட்க விரும்புவது…. தோழர்களே.. உங்கள் ஆராய்ச்சிப் படிப்பை முடிப்பதற்காக நீங்கள் இந்தப் பேராசிரியர்களின் தயவில் இருக்கிறீர்கள் என்பது நன்கு தெரியும். அதற்காக ஒரு இளம் பத்திரிக்கையாளன் மீது இப்படி பொய்யான புகாரைக் கொடுக்கலாமா ? இதுவா நீங்கள் கற்ற கல்வி ? ஒரு படிக்காத பாமரன் கூட ஒரு பொய்ப்புகாரைக் கொடுப்பதற்கு யோசிப்பானே.. என்னைத் தவறாக படமெடுத்தான் என்று கூசாமல் எப்படி ஒரு பொய்யை எழுத முடிந்தது உங்களால் ? அப்படித் தவறாக படமெடுத்தால், இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் எடிட்டரைத் தொடர்பு கொண்டு, இதற்கு ஆட்சேபம் தெரிவிக்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் உங்களுக்கு ? சம்பவம் நடந்த அன்றே இதைச் செய்யாமல், உங்கள் பேராசிரியரின் மீது எப்ஐஆர் போட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு ஏன் இதைச் செய்கிறீர்கள் ? ஆபாசமாக படமெடுத்த புகைப்படக் கலைஞர் மீது நீங்கள் ஏன் சம்பவம் நடந்த அன்றே காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை ? உங்கள் வீட்டில் உங்கள் தம்பி புகைப்படக் கலைஞராக இருந்தால் இப்படி ஒரு பொய்ப்புகாரைக் கொடுப்பீர்களா ? சிறந்த அறிவாளி மாணவர்களான நீங்கள் நியாயத்தைப் பேசியிருக்க வேண்டாமா ? ஆல்பின் தாக்கப்பட்டபோது நீங்களல்லவா தடுத்திருக்க வேண்டும் ? உங்கள் தோழர் மானச மெருகுவின் தற்கொலை மூடி மறைக்கப்பட வேண்டும் என்றா விரும்புகிறீர்கள் ? அவள் உங்கள் தோழரல்லவா ? அவளைப் போன்ற உங்கள் தோழர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வதை அமைதியாக வேடிக்கைப் பார்க்க வேண்டும் என்றா நீங்கள் கற்ற கல்வி சொல்லித் தருகிறது ? சக மனிதனிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையைத் தெரியாத நீங்கள் விமானவியல் பொறியியல் படித்து என்ன கிழித்து விடப்போகிறீர்கள் ? சம்பவங்களெல்லாம் முடிந்து விட்டாலும், இப்போதும் நீங்கள் பொய்யான புகாரைக் கொடுத்ததற்காக தோழன் ஆல்பின் மேத்யூவிடம் மன்னிப்புக் கேட்கத்தான் வேண்டும். அதுதான் நீங்கள் கற்ற கல்விக்கு அழகு.
நம்ப கட்டதுரை விஷயத்துக்கு வருவோம். சட்டம் அனைவருக்கும் மேலானது. பாரபட்சமற்ற முறையில் சிறப்பாக விசாரணை நடத்துவேன் என்று கட்டதுரை அளித்த உறுதிமொழியின்படி பேராசிரியர் மையா கைது செய்யப்பட்டிருக்க வேண்டுமா இல்லையா ? மையாவைக் கைது செய்யாவிட்டாலும் பரவாயில்லை. வெங்கடேசன், ப்ரேம் ஆனந்த் மற்றும் சைமன் என்கிற செக்யூரிட்டி கார்டுகளை கைது செய்தது எப்படிப்பட்ட உச்சபட்ச அயோக்கியத்தனம் தோழர்களே… ? கூலிக்கு வேலை செய்யும் ஏழைத் தொழிலாளர்கள் என்றால் கட்டதுரைக்கு எவ்வளவு இளக்காரம் பார்த்தீர்களா ? ஒரு பேராசிரியர் அந்த புகைப்படக் கலைஞரைப் பிடித்துக் கொள் என்று சொல்லும்போது என்.ன செய்வார்கள் அவருக்கு கீழே பணியாற்றும் அந்தத் தொழிலாளர்கள் ? முடியாது என்று சொன்னால் அவர்கள் வேலை போய்விடாதா ?
தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அந்தத் தொழிலாளர்கள் சிறையிலிருந்து வெளியே வர எவ்வளவு சிரமப்படுவார்கள் ? பேராசிரியரைக் கைது செய்யத் துப்பில்லாத கட்டதுரையின் அயோக்கியத்தனத்தைப் பார்த்தீர்களா ? பத்மா சேஷாத்ரி பள்ளியில் இறந்த சிறுவன் ரஞ்சனின் மரணத்துக்கும் கட்டதுரை இதே நடவடிக்கையைத் தான் கையாண்டார் என்பதை மறந்து விடாதீர்கள்.
ஆல்பினைத் தாக்கிய பேராசிரியர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வைக்க இரவு 12.30 மணி வரை பத்திரிக்கையாளர்கள் போராட வேண்டியிருந்தது. ஆனால், ஆல்பின் மீது கொடுக்கப்பட்ட பொய்ப்புகாருக்கு எவ்வளவு எளிதாக எப்ஐஆர் போட்டார் கட்டதுரை பார்த்தீர்களா ? காவல் நிலையத்திற்கு வரும் அத்தனை புகார்களுக்கும் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் கூறுகிறதென்றாலும், எல்லாப் புகார்களிலும் எப்ஐஆர் பதிவு செய்யப்படுவதில்லை. அதனால்தான் வெறும் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு மட்டும், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
இதுதான் கட்டத்துரையின் கட்டப்பஞ்சாயத்து. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு வழக்கை எப்படி திசைத்திருப்பி விபரம் அறிந்த பத்திரிக்கையாளர்களையே ஏமாற்றினார் பார்த்தீர்களா கட்டதுரை ?
இது பத்திரிக்கையாளர்களுக்கும் ஒரு பெரிய பாடம். காவல்துறை அதிகாரிகளோடு கூடிக் குலவி, குடித்தனம் நடத்தி அளவளாவிக் கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்கள், அவர்களை விட அதிகாரம் படைத்த ஒருவனை காவல்துறை எப்படி நடத்துகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நடந்த சம்பவங்களில் மிகப்பெரிய குற்றவாளி பேராசிரியர் மையா அல்ல. கட்டதுரையும், கட்டத்துறையுமே. காவல்துறை அதிகாரிகளுக்கு தங்கள் நலனை விட வேறு எதுவுமே பெரிதல்ல… பத்திரிக்கையாளர்களின் நலன் உட்பட என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.
போராட்டத்தின் முடிவில் சில பத்திரிக்கையாளர்களுக்கு உடன்பாடு இல்லை. இளம் பத்திரிக்கையாளர்கள் சிலர் கடுமையாக வாக்குவாதம் செய்தனர். ஆனால், தலைக்கனத்தோடு அகங்காரமாக திரிந்து கொண்டிருந்த ஐஐடி நிர்வாகத்தை, நம் முன் வரவழைத்து மன்னிப்புக் கேட்க முடிந்ததே மிகப்பெரிய சாதனை. மய்யாவை கைது செய்தே தீர வேண்டும் என்று நாம் உறுதியாக இருந்திருந்தால், புகைப்படக் கலைஞர் ஆல்பினையும் நிச்சயம் கைது செய்திருப்பார்கள். இருவரையும் கைது செய்ததன் மூலம் சரிசமமாக நடவடிக்கை எடுத்தோம் என்று காண்பித்திருப்பார்கள். அதற்குப் பிறகு எத்தனை நாட்களுக்கு நாம் பணியாற்றும் நிறுவனங்களிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு வீதிகளில் இறங்கிப் போராட நம்மால் முடியும் என்று யோசித்துப் பாருங்கள் ?
இந்த அளவில் இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்ததே சிறந்த ராஜதந்திரம். யதார்த்த நிலைமைகளைப் புரிந்து கொண்டே முடிவெடுக்க வேண்டும் என்பதை இளம் பத்திரிக்கையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதில் விடுபட்ட அம்சம்… சேஷசாயி அய்யர் தொடர்பானது. பத்திரிக்கையாளர்களை மிரட்டியது தொடர்பாக அவர் மீது கொடுக்கப்பட்ட புகார் என்னவானது ? பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற பத்திரிக்கையாளர்களிடம், சேஷசாயியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று ஒரு பெரிய்ய அல்வாவைக் கிண்டிக் கொடுத்திருக்கிறார் கட்ட துரை.
என்ன விளக்கம் கேட்டிருப்பார் ?
இப்படித்தான் கேட்டிருப்பார்.
(மெமோ உண்மையாக கொடுக்கப்பட்ட மெமோ அல்ல. இதில் உள்ள வாசகங்களை நன்றாக படித்துப் பாருங்கள்.)
விளக்கம் கேட்டிருந்தால் இப்படித்தான் மெமோ கொடுத்திருப்பார் கட்ட துரை. ஜெயலலிதாவைச் சந்தித்து பேசும் அளவுக்கு அரசில் செல்வாக்கு உள்ள ஒருவருக்கு மெமோ கொடுக்க திரிபாதி அப்படி ஒன்றும் முட்டாள் அல்ல.
இந்தப் போராட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் காட்டிய ஒற்றுமை உணர்வு மகத்தானது. தங்கள் சகோதரன் ஒருவன் தாக்கப்பட்டான் என்றதும் கிளர்ந்தெழுந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் என்றதும் முதலில் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டவர் தோழர் வைகோ என்பதை சவுக்கு பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறது. அவரைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளன. அத்தனைக் கட்சிகளுக்கும் சவுக்கு தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இதைக் கண்டிக்காத கட்சிகள் திமுவும், அதிமுகவும். பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதில் இரண்டு கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பதால் இதில் வியப்பேதுமில்லை.
இத்தாக்குதலைக் கண்டித்து ஐஐடி முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்திய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணித் தோழர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து, ஒழுங்குக்கு கொண்டு வந்து, சிறப்பாக வழிநடத்திச் சென்ற பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
பத்திரிக்கை சுதந்திரத்தைக் காப்பாற்றுவதற்காகப் போராடுவது நமது வாழ்வாதாரமான பிரச்சினை அல்ல. இது மக்களுக்கானது. இந்த ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை அது. அந்தக் கடமையை தொடர்ந்து செய்வோம். எத்துனை இடையூறு வந்தாலும் அஞ்சோம் என்பதை மனதில் ஏற்று, நாம் தொடர்ந்து பணியாற்றுவோம் தோழர்களே… வாழ்த்துக்கள்.