வினவு தோழர்கள் ஜெயலலிதாவை எப்போதுமே பாசிச ஜெயா என்றே அழைப்பார்கள். பாசிசம் என்றால் என்ன ? முதலாம் உலகப்போரின் போது இத்தாலி நாட்டில் தோன்றியதுதான் பாசிசம். உலகெங்கும் உள்ள அறிஞர்களால், வலதுசாரி தீவிரவாதம் பாசிசம் என்று அழைக்கப்படுகிறது. பாசிசத்தின் தன்மை என்று விக்கிபீடியா கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.
To achieve its goals, the fascist state purges forces, ideas, people, and systems deemed to be the cause of decadence and degeneration Fascism promotes political violence and war as forms of direct action that promote national rejuvenation, spirit and vitality. Fascists commonly utilize paramilitary organizations to commit or threaten violence against their opponents.
அதாவது தனது நோக்கத்தை அடைவதற்காக பாசிஸ்ட் அரசு, மக்களின் சுதந்திரம், சிந்தனை ஆகியவற்றை முடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும். அரசியல் ரீதியான வன்முறை மற்றும் போர் ஆகியவை தேசிய புத்துணர்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதால், அவற்றுக்கு பாசிஸ்ட் அரசு ஊக்கம் கொடுக்கும். தன் எதிராளிகளை அடக்குவதற்காக தன்னிடம் உள்ள காவல்துறை மற்றும் துணை ராணுவப்படைகளை ஏவி விடுவதாக மிரட்டும்.
ஜெயலலிதா பாசிஸ்டா இல்லையா என்பதை கட்டுரையின் இறுதியில் பார்ப்போம். கூடங்குளம் மக்களின் போராட்டம் என்ன ? அணு உலை எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும். ஏழேழு தலைமுறைகளை பாதிக்கும் என்பது அவர்களின் அச்சம். இந்த அச்சத்திற்கு அடிப்படையாக பல்வேறு காரணங்களை எடுத்து வைக்கிறார்கள் அம்மக்கள்.
கூடங்குளத்தில் சுனாமி வருவதற்கு வாய்ப்பில்லை என்று அணுசக்திக் கழகம் சொல்லுகிறது. ஆகால் 1982ல் வெளிவந்த ஒரு ஆய்வறிக்கை, கூடங்குளத்தில் சுனாமி வருவதற்கான வாய்பு இருப்பதாக தெரிவிக்கிறது. இதற்கு அடிப்படையாக மன்னார் வளைகுடா கடற்பகுதியில் அமைந்துள்ள இரண்டு மேடுகளை சுட்டிக் காட்டுகிறார்கள். இந்த மேடுகளை மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு ஒப்புக் கொண்டுள்ளது.
சிறிய எரிமலைகள் வெடிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படும் பகுதியில் அணுஉலை அமைந்துள்ளது. அணு உலை அமைந்துள்ள பூமிப்பகுதி போதுமான சிறு எரிமலைகள் காரணமாக போதுமான அடர்த்தியோடு இல்லை. சுண்ணாம்பு குன்றுகள் இருப்பதால் இப்பகுதி கர்ஸ்ட் (KARST) பகுதி என்று அழைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட பகுதியில் அணு உலைகள் அமைக்கையில் விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்று அணு சக்திக் கழகத்தின் விதிகளில் கூறப்பட்டள்ளது பின்பற்றப்படவில்லை.
2004 சுனாமியின்போது கடல் 4 முதல் 5 மீட்டர்களுக்கு உள்வாங்கியது. அதன் பிறகு ஆண்டுதோறும் கடல் உள்வாங்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட சூழல்கள் இருக்கையில், அணு உலைக்கு ஆபத்து உள்ளது. ஒவ்வொரு நிமிடமும் அணு உலைக்கு 5 ஆயிரம் க்யூபிக் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இந்த விஷயத்தை அணு சக்திக் கழகம் கவனத்தில் கொள்ளத் தவறி விட்டது.
அணு உலை தொடர்ந்து செயல்பட நல்ல தண்ணீர் தேவைப்படும். நல்ல தண்ணீருக்கு கூடங்குளம் அணு உலை நம்பியிருப்பது, கடல் நீரை நல்ல நீராக மாற்றுவதே. தொடர்ந்து 36 மணி நேரம் நல்ல தண்ணீர் கிடைப்பதற்கு மட்டுமே கூடங்குளம் அணு உலையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நல்ல நீரைத் தயார் செய்ய மின்சாரம் தொடர்ந்து வேண்டும். கடலும் சீற்றம் இல்லாமல் இருக்க வேண்டும். ஏதாவது இயற்கைச் சீற்றத்தாலோ, வேறு காரணங்களாலோ கடல் நீர் எடுக்க முடியாமலோ, மின் தடையோ ஏற்பட்டால் அணு உலையை நிறுத்த வேண்டும். அணு உலை நிறுத்தப்பட்டாலும் அது செயலிழந்து அணுக்கசிவு ஏற்படுத்தாமல் இருக்க, அதற்கு நல்ல தண்ணீர் தொடர்ந்து வேண்டும். மொத்தமாக 10 நாட்களுக்கு மட்டுமே நல்ல தண்ணீர் கிடைக்க கூடங்குளம் உலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் நிஷா என்ற புயலின்போது, பெயர்ந்து போன குடிநீர் குழாயை சரி செய்ய மட்டும் 45 நாட்கள் ஆனது. இந்நிலையில் அணு உலையை எப்படி தொடர்ந்து எவ்வித ஆபத்தும் இன்றி பராமரிக்க முடியும் ?
கல்பாக்கம் அணு உலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் அதன் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்களுக்கும் புற்றுநோய் சராசரியை விட அதிகமாகத் தாக்குகிறது என்பது ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
அணு உலையை தொடர்ந்து பராமரித்து வரும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நோய்க்கான மருத்துவ இழப்பீடு உள்ளது. சீராக பணியாற்றும் அணு உலை ஊழியர்களுக்கே இது போன்ற இழப்பீடு வழங்கப்படுவதே அணு உலையில் நிச்சயம் ஆபத்து உண்டு என்பதை காட்டகிறது.
புகுஷிமாவில், செயல்பட்டுக் கொண்டிருந்த அணு உலைகளை நிறுத்துவதற்கே 75 ஆயிரம் கோடிகளும், 30 ஆண்டுகளும் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. புதிய அணு உலையைத் திறப்பதை விட, அதை மூடுவதற்கு அதிக செலவு பிடிக்கும்.
அணு உலையிலிருந்து வரும் அணுக் கழிவை அழிக்க ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் முடியாது. சோவியத் யூனியனோடு 1988ம் ஆண்டில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, அணுக் கழிவுகள் அனைத்தும் சோவியத் யூனியனுக்கு அனுப்பப்படும். ஆனால், ரஷ்யாவோடு செய்து கொண்ட புதிய ஒப்பந்தத்தின்படி, அணுக் கழிவுகள் அத்தனையும் கூடங்குளம் அணு உலையிலேயே வைக்கப்படும்.
அணு உலை பாதுகாப்பாக இருக்கிறது என்று அறிவிக்கும் மத்திய அரசு, கள ஆய்வு அறிக்கை (Site Evaluation Report) பாதுகாப்பு ஆய்வு அறிக்கை (Safety Analysis Report) போன்றவற்றை மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்ட பிறகும் கூட தர மறுக்கிறது. அணு உலை தொடர்பான தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அணு உலை பாதுகாப்பாக உள்ளது என்று உறுதியாகக் கூறும் மத்திய அரசுக்கு இந்த அறிக்கைகளை வெளியிடுவதில் என்ன தயக்கம் ? என்பது போன்ற தீர்க்கப்படாத கேள்விகளை முன்வைத்தே 400 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
அந்த மக்களின் போராட்டம் இன்று (10 செப்டம்பர் 2012) வரை, அமைதியான வழியிலேயே நடைபெற்று வந்தது. தோழர்களோடு பத்து நாட்கள் என்று, மாவோயிஸ்டுகளோடு காட்டில் தங்கி விட்டு வந்து தனது அனுபவங்களை பதிவு செய்த அருந்ததி ராய், மாவோயிஸ்டுகளை துப்பாக்கி ஏந்திய காந்தியவாதிகள் என்று அழைத்தார். அஹிம்சை மற்றும் காந்திய வழியில் போராடுவதற்கு அதற்கேற்றார்ப் போன்ற சூழல் வேண்டும். அமைதியான வழியில் மக்கள் நடத்தும் போராட்டங்களுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும். உண்ணாவிரதம், வேலை நிறுத்தம், தர்ணா, ஆர்ப்பாட்டம், வாக்காளர் அடையாள அட்டை புறக்கணிப்பு என்று இடிந்தகரை மக்கள் கடந்த 400 நாட்களில் நடத்தாத போராட்டம்தான் என்ன ?
ஆனால், தொடக்க காலம் முதலே அரசு இந்தப் போராட்டத்தை முடக்குவதற்கான அத்தனை வேலைகளிலும் இறங்கி வந்தது. ஜெயலலிதா நம்பவைத்து கழுத்தறுத்தார். மன்மோகன் சிங் மற்றும் நாராயணசாமி என்ற கோமாளி இத்திட்டம் வந்தே தீர வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றனர். பத்தாதற்கு விஞ்ஞான வண்டு முருகன் அப்துல கலாம், அணு உலை பாதுகாப்பானது. எந்த ஆபத்தும் இல்லை என்று உரக்கக் கூவினார். அப்துல் கலாம் அணு விஞ்ஞானியே அல்ல. அவருக்கு அணு சக்தியைப் பற்றி எதுவுமே தெரியாது என்று சவுக்கு சொல்லவில்லை. 1974ம் வருடம் நடந்த இந்தியாவின் அணு ஆயுத சோதனைக்கு மூளையாக இருந்து செயல்பட்ட விஞ்ஞானி ஹோமி சேத்னா சொல்கிறார்.
ஒரு வருடத்துக்கும் மேலாக அந்த மக்கள் நடத்திய போராட்டத்தை மத்திய அரசும் மாநில அரசும் கொச்சைப் படுத்தின. வெளிநாட்டைச் சேர்ந்த கிறித்துவ அமைப்புகளில் இருந்து உதயக்குமாருக்கு கோடிக்கணக்கில் பணம் வந்தது என்றார்கள். அமெரிக்க தூண்டுதலில் இந்தப் போராட்டம் நடந்தது என்றார்கள். ஜெர்மனியிலிருந்து வந்து போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர்தான் உளவாளி. அவர்தான் உதயக்குமாருக்கு பணம் கொடுக்கிறார் என்றார்கள். உதயக்குமாரின் பள்ளியை அடித்து நொறுக்கினார்கள். ஆனாலும், அந்த மக்கள் சளைக்காமல் தொடர்ந்து அமைதி வழியில் போராடியே வந்திருக்கின்றனர்.
காந்தி 1929ம் ஆண்டு உப்பு சத்தியாகிரகம் என்பதை அறிவித்தபோது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதை வரவேற்கவில்லை. நேரு பட்டேல் போன்றோர் கூட உப்புக்கு பதிலாக நில வரி தரமாட்டோம் என்று போராட்டம் நடத்தலாம் என்றார்கள். ஆனால் காந்தி அசைந்து கொடுக்கவில்லை. உப்பு காய்ச்சுவதே போராட்டம் என்று முடிவு செய்து அறிவித்தார்.
ரிச்சர்ட் அட்டன்பரொவின் காந்தி படத்தில் உப்புச் சத்தியாகிரகத்தின் போது ஒரு காட்சி வரும். காந்தி மக்களோடு நடந்து கொண்டிருப்பார். அப்போது ஒரு பத்திரிக்கை நிருபர், தொலைவில் உள்ள காவல் துறையினரைப் பார்த்து விட்டு காந்தியைப் பார்த்து கேள்வி கேட்பார்.
உங்களைக் கைது செய்து விட்டால் எல்லாம் முடிந்து விடுமா ?
அவர்கள் என்னைக் கைது செய்தாலும், ஆயிரம் பேரைக் கைது செய்தாலும், 10 ஆயிரம் பேரைக் கைது செய்தாலும் இது முடியாது. ராணுவ தளபதிகள் மட்டும்தான் அடுத்த நடவடிக்கை பற்றித் திட்டமிடுவார்கள் என்பதில்லை என்று காந்தி பதில் சொல்லுவார்.
ஒத்துழையாமை இயக்கத்தின் நோக்கம், எதிரியைத் தூண்டுவது. எதிரி பேச்சுவார்த்தைக்கு பதில் கூறும் வரையோ, சட்டத்தை மாற்றும் வரையோ எங்களது தரப்பிலிருந்து இந்தத் தூண்டுதல் தொடரும். (இந்தப் போராட்டம் காரணமாக) கட்டுப்பாடு அவர்களிடம் இல்லை. எங்களிடம் இருக்கிறது. இதுவே ஒத்துழையாமை இயக்கத்தின் பலம் என்பார்.
காந்தியின் நம்பிக்கை வீண் போகவில்லை. அந்தப் போராட்டத்தின் இறுதியில் காந்தி இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது. உப்பின் மீது போடப்பட்ட வரியை விலக்க பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறையில் இருந்த அனைவரையும் விடுதலை செய்ய ஆங்கிலேயே அரசு சம்மதித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. நமது எதிரியான ஆங்கிலேயனிடம் நேர்மை இருந்தது. ஆங்கிலேயேன் காந்திக்கு ரகசிய கணக்கு இருக்கிறது என்றோ, ஜெர்மனியிலிருந்து பணம் வருகிறது என்றோ, காந்தி ஒரு பொய்யர் என்றோ ஒரு நாளும் குற்றம் சாட்டியதில்லை. நாராயணசாமி போன்ற அரைவேக்காட்டு அரசியல்வாதிகளை வைத்து, காந்திக்கு எதிராக பேட்டியளிக்கச் சொன்னதில்லை. நேர்மையாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து இரு தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி ஒரு தீர்வைக் காண ஆங்கிலேயே அரசால் முடிந்தது.
ஆனால்… கூடங்குளத்தில்… ? ஓரு ஆண்டு போராட்டத்தை கொஞ்ச நஞ்சமாகவா கொச்சைப் படுத்தினார்கள் ? கூடங்குளம் அணு உலையில் மத்திய அரசின் சட்டங்களிப்படியே பல்வேறு விதி மீறல் நடந்துள்ளது. அந்த விதிகளை பின்பற்றிய பிறகு, அணு உலையை திறக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே அணு உலையிலிருந்து விரைவில் மின்சாரம் வரும் என்று அறிவிப்பு வெளியிடுகிறார்கள் என்றால், நீதிமன்றத்தை எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இந்த கூடங்குளம் வழக்கு நடந்து கொண்டிருக்கையில் ஒரு சுவையான சம்பவம் நடந்தது. அணு உலை விதி மீறல்கள் தொடர்பாக வழக்கு தொடர்ந்த சுந்தர்ராஜனுக்காக வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாதாடிக் கொண்டிருந்தார். அவர் வாதாடி முடித்தபின் வாதாடுவதற்காக, டெல்லியிலிருந்து மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் மோகன் பராசரன் வந்திருந்தார். ராதாகிருஷ்ணனுக்கு அடுத்து மோகன் பராசரன் வாதாட வேண்டும். ராதாகிருஷ்ணன் வாதாடிக் கொண்டிருக்கும் போதே எழுந்த மோகன் பராசரன், நீதிபதியிடம் தனக்கு விமானத்துக்கு நேரமாகி விட்டது, நான் போக வேண்டும் என்றார். உடனே நீதிபதி ஜோதிமணிக்கு வந்ததே… கோபம்.. என்ன சொன்னார் தெரியுமா ?
அதனால் என்ன போய் வாருங்கள். உங்கள் ஜுனியர்தான் இருக்கிறார்களே… ஒரு வழக்கறிஞர் நீதிபதியிடம் இவ்வாறு கேட்பது, அதுவும் வாதாடுவதற்கு முன்பாகவே கேட்பது, அந்த நீதிமன்றத்துக்கு அவர் வைத்திருக்கும் மரியாதை அவ்வளவுதான் என்பதைக் காட்டுகிறது. என்ன வாதாடினாலும் தீர்ப்பு எப்படி வரும் என்பது எனக்குத் தெரியும்… அதற்கு எதற்கு என் நேரத்தை வீணாக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ தெரியிவில்லை… பராசரன் கிளம்பி விட்டார்.
அவர் நினைத்தது போலத்தான் தீர்ப்பும் வந்திருக்கிறது. மத்திய அரசுச் சட்டத்தின்படி, ஒரு தொழிற்சாலை தொடங்கும் முன், அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்கவேண்டும் என்று கூறுகிறது. சோவியத் யூனியனோடு போட்ட ஒப்பந்தத்துக்குப் பிறகு, அணு உலையில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதனால் பொதுமக்களிடம் கருத்துக் கேட்கவேண்டும் என்று கோரியதற்கு, உயர்நீதிமன்றம், நடந்து கொண்டிருக்கும் ஒரு தொழிற்சாலை திட்டத்திற்கு கருத்து கேட்பதால் என்ன ஆகிவிடப்போகிறது என்று தீர்ப்பு கூறுகிறது.
இப்படி நீதிமன்றங்களும் மக்களுக்கு எதிராகவே தீர்ப்பளிக்கின்றன. எங்கேயும் நியாயம் கிடைக்காத நிலையில், அந்த அணு உலையில் எரிபொருள் நிரப்பப் படப்போவதாக அறிவிப்பு வருகிறது. யுரேனியம் நிரப்பப்பட்டு விட்டால், அந்த அணு உலையை கடவுளால் கூட நிறுத்த முடியாது. இதை ஆங்கிலத்தில் Going critical என்று சொல்கிறார்கள்.
அணு உலை க்ரிட்டிக்கல் நிலையை அடைந்து விட்டால், அதற்குப் பிறகு இம்மக்கள் போராட்டம் நடத்தியது, நடத்துவது, வழக்கு தொடர்வது அத்தனையுமே வீண்தான். போராட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அம்மக்கள் என்ன செய்ய முடியும். அணு உலை முற்றுகை என்று சனிக்கிழமை கிளம்புகிறார்கள். கடற்கரை வழியாகக் கிளம்பி அணு உலைக்கு அருகாமையில் செல்கிறார்கள். கடற்கரை வழியாகச் மக்கள் செல்வதை எதிர்ப்பார்க்காத காவல்துறையினர் திகைக்கிறார்கள்.
அந்த மக்கள் அதே இடத்தில் அமர்ந்து இரண்டு நாட்களாக போராட்டத்தைத் தொடர்கிறார்கள். நாளை (11 செப்டம்பர் 2012) அன்று இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள் பரமக்குடியில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் ஆறு உயிர்களைப் பறித்த கொலைகாரர்கள் இந்த ஆண்டும் அந்த இடத்துக்கு காவல்துறை பாதுகாப்போடு செல்ல வேண்டும். இந்த நேரத்தில் கூடங்குளத்தில் காவல்துறையினரின் எண்ணிக்கை குறைந்தால் போராட்டம் நடத்தும் மக்கள் அணு உலைக்குள் நுழைந்து விடுவார்களோ என்று அஞ்சி, எப்படியாவது கடற்கரையில் கூடியிருந்த மக்களை விரட்டவேண்டும் என்று நடத்தப்பட்டதே இன்று நடந்த கண்ணீர் புகை குண்டு வீச்சும், தடியடியும்.
இந்தத் தடியடியை முன்னின்று நடத்தியது சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜார்ஜ், தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ், நெல்லை சரக டிஐஜி வரதராஜு மற்றும் மற்றும், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி.
சிங்கூரிலும், நந்திகிராமிலும் விவசாயிகளின் நிலங்களைப் பறித்து, ரத்தன் டாட்டா என்ற தரகு முதலாளிக்கு தாரை வார்க்க மார்க்சியம் பேசும் சிபிஎம் கட்சியினர் நடத்திய முயற்சியை இதே போன்ற ஒரு மக்கள் போராட்டம்தான் முடிவுக்கு கொண்டு வந்தது. மேற்கு வங்க மக்கள், கூடங்குளம் மக்களைப் போல உண்ணாவிரதமும், வேலை நிறுத்தமும் செய்து கொண்டிருக்கவில்லை. களத்தில் இறங்கி போராடினார்கள். டாடாவின் ஆலைகளை முற்றுகையிட்டு, உடைத்தெறிய முயன்றார்கள். டாடாவின் ஆலைகளைக் காப்பாற்ற, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை நிறுவுவோம் என்று பசப்பும் மார்க்சிஸ்ட் கட்சியினர் தங்கள் காவல்துறையை விட்டு, போராடும் விவசாயிகள் மீது கொடுந்தாக்குதல் நடத்தினார்கள்.
கூடங்குளத்தில் உழைப்பாளி மக்கள் மீது நடந்த தாக்குதலை கண்டிக்க வேண்டிய மார்க்சிஸ்ட் கட்சி, கூடங்குளம் மக்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மக்களுக்கு அறிவுரை வழங்குகிறது. ஒரு ஜனநாயக உணர்வு உள்ள கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் நலனுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தை கண்டிக்காமல், முன்னாள் சோவியத் யூனியன் மலத்தை விற்றால் கூட, அது உடலுக்கு நல்லது என்று வாதாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் ப்ரான்ஸ் அரசாங்கத்திடமிருந்து வாங்கி நிறுவப்படும் ஜெய்தாப்பூர் அணு உலை ஆபத்தானதாம் !!!! விஷத்தில் என்னடா நல்ல விஷம்.. கெட்ட விஷம்… ?
தமிழ்நாட்டை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி சுடுகாடாக்க முயற்சி செய்யும் இரண்டு திராவிடக் கட்சிகள், அணு உலையை ஆதரிக்கின்றன. மாற்றுக் கட்சி என்று வளர்ந்து வரும் கருப்பு எம்.ஜி.ஆரின் கட்சி, காங்கிர ஸோடு நடக்க இருக்கும் எதிர்கால கூட்டணியை மனதில் வைத்து அணு உலையை ஆதரிக்கிறது. எந்தச் சூழலிலும் மக்கள் பக்கம் நிற்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிகள், மக்களின் முதுகில் கோடரியைப் பாய்ச்சுகின்றன.
கடந்த ஒரு வருடமாக அமைதியான வழியில் போராட்டத்தை நடத்தி வந்த கூடங்குளம் மக்கள், தங்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டதும், திருப்பித் தாக்குகிறார்கள். என்ன செய்வது… இந்த அரசாங்கங்களுக்கு வன்முறை என்ற மொழி மட்டும்தானே புரிகிறது ?
சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜார்ஜ், கூடங்குளம் மக்கள் பெண்களையும் குழந்தைகளையும் கேடயங்களாகப் பயன்படுத்துகிறார்கள் என்று வருத்தப்பட்டிருக்கிறார். குழந்தைகள் இருந்ததால், மக்களை சரியாகத் தாக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் அவருக்கு. உன்னுடைய ஆயுதம் என்ன என்பதை எதிரியே தீர்மானிக்கிறான். இது மக்களுக்கும் அரசுக்கும் இடையே நடக்கும் போர். கூடங்குளம் மக்கள் கடந்த 400 நாட்களாக நடத்தி வரும் போராட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் பங்கெடுக்கவில்லை என்றால் இந்தப் போராட்டம் 4 நாட்களைக் கூடத் தாண்டியிராது என்பதே உண்மை. கடந்த 400 நாட்களாக, எத்தனையோ முறை, உதயக்குமாரையும், புஷ்பராயனையும் கைது செய்ய காவல்துறை முயற்சி செய்தபோதெல்லாம், பெண்களையும் குழந்தைகளையும் தாக்காமல், உதயக்குமாரை அடைய முடியாது என்ற ஒரே காரணத்தினாலேயே இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
கடந்த ஒரு வருடமாக அரசு அமைதியாக இருந்தது என்று பசப்புகிறார்கள் அணு உலை ஆதரவாளர்கள். அரசு கடந்த ஒரு வருடமாக அமைதியாக இல்லை. உதயக்குமார் மீது அவதூறுக் குற்றச்சாட்டுகள். வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றுள்ளார் என்று அவதூறு. அவரைக் கைது செய்ய தொடர்ந்து முயற்சி. அந்தப் போரட்டத்துக்கு ஆதரவாக களமிறங்கிய தோழர்கள் முகிலன், வன்னி அரசு, மற்றும் சதீஷ் குமார் மீது தேச விரோதச் சட்டத்தின் கீழ் வழக்கு. உதயக்குமார் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள். இடிந்தகரை மக்கள் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள். போராட்டத்தை ஒடுக்க காவல்துறையை ஏவி விட்டு, மிரட்டல்கள், கெஞ்சல்கள், திருட்டுத்தனங்கள். ஒற்றுமையை சீர்குலைக்க நாசவேலைகள் என்று அரசு இந்த 400 நாட்களில் கைகொள்ளாத சதித்திட்டங்களே இல்லை.
இப்படிப்பட்ட நாசகார அரசுகளுக்கு எதிராக எப்படித்தான் போராடுவது ? வீட்டிலுள்ள ஆண்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்து விட்டால், பெண்களும் குழந்தைகளும் வீட்டில் தனியே அமர்ந்து என்ன செய்வார்கள்… அவர்களின் எதிர்காலம் என்ன ? அணுக் கசிவு ஏற்பட்டால் அது பெண்களையும், குழந்தைகளையும் பாதிக்காதா என்ன ? தங்கள் உயிருக்கே ஆபத்து என்கிறபோது, அந்த குழந்தைகளும் பெண்களும் போராடுவதில் என்ன தவறு ? இன்று குழந்தைகளைக் கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்று நீலிக் கண்ணீர் வடிக்கும் ஜார்ஜு குஞ்சுமோனின் காவல்துறை புகையிலை ஒழிப்பு, போக்குவரத்து விதிகளைக் கடைபிடிப்பதற்காக குழந்தைகளை பயன்படுத்துவது இல்லையா ? இந்தக் காவல்துறை அதிகாரிகளின் பிள்ளைகள் சொகுசு கார்களில் பவனி வந்து, ஏ.சி அறைகளில் வாழ்ந்து, செல்வச் செழிப்போடு, ஏழைகளின் கஷ்டம் தெரியாமல் வளர்வது போல வளர்ந்த பிள்ளைகள் இல்லை இடிந்தகரை பிள்ளைகள். அவர்கள் மண்ணின் மைந்தர்கள். தங்கள் பெற்றோர்கள் வீதிகளில் இறங்கிப் போராடுகையில் அவர்களுக்கு வீட்டுக்குள் என்ன வேலை ? தங்கள் பெற்றோர்களோடு துணை நின்றால் மட்டுமே அவர்கள் தங்களின் நாளைய எதிர்காலத்தை காண முடியும்.
இடிந்தகரை மக்களின் போரட்டம் தொடர்பாக ஜெயலலிதா நேற்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கப்பட உள்ளதைக் கருத்தில் கொண்டு, இடிந்தகரை பகுதியைச் சேர்ந்தவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர். இதனையறிந்த காவல் துறை, அணுமின் நிலையத்திற்கு செல்லும் வழிகளான தாமஸ் மண்டபம் மற்றும் வைராவிக் கிணறு ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டது. ஆனால், போராட்டக்காரர்கள் இந்த இரு வழிகளையும் தவிர்த்து கடற்கரை வழியாக, அணுமின் நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் முற்றுகைப் போராட்டத்தில் 9.9.2012 அன்று ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை அணுமின் நிலையம் நோக்கி முன்னேற விடாமல் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அவர்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதும், மீண்டும் கூடுவதுமாக இருந்தனர். இந்த நிலை நேற்று இரவு முழுவதும் தொடர்ந்தது. இன்று காலை இன்னும் அதிக எண்ணிக்கையில் போராட்டக்காரர்கள் கூடினர். அவர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை நோக்கி மேலும் முன்னேற முயற்சித்ததோடு, இன்று காலை 11.30 மணியளவில் காவல் துறையினரை கட்டைகளைக் கொண்டு தாக்கத் தொடங்கினர். இந்தத் தாக்குதலில் சில காவல் துறையினர் காயமடைந்தனர். எனவே, தங்களை காக்கும் பொருட்டும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை பாதுகாக்கும் நோக்குடனும், அணுமின் நிலையத்தை போராட்டக்காரர்கள் தாக்கினால் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்தினைக் கருத்தில் கொண்டும், வேறு வழியின்றி காவல் துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் மீனவர் வாழ்வாதாரத்திற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பதால், அணு உலை எதிர்ப்பு என்ற பொதுவான கொள்கையுடைய எதிர்ப்பாளர்களின் மாய வலையில் விழ வேண்டாம் என்று அப்பகுதி மீனவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், அணு உலைக்கு எதிர்ப்பு என்ற பொதுவான கொள்கையுடைய அணு உலை எதிர்ப்பாளர்கள், மிகவும் பாதுகாப்புடன் விளங்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும், அணுமின் நிலையம் விரைவில் இயங்க தேவையான ஒத்துழைப்பினை நல்க அவர்கள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தப் பிரச்சனை தொடர்பாக இன்று தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு தற்காலிக சோதனைச்சாவடிக்கு ஒரு கும்பல் தீவைத்து அங்கு வந்த காவலர்களை தாக்கியது. இதில் தற்காப்புக்காக காவலர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து
5 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இந்தப் பிரச்சனை தொடர்பாக, யாரும் எவ்வித வன்முறையிலும் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
அணு உலை எதிர்ப்பாளர்களின் மாய வலையில் விழ வேண்டாமாம். ஏற்கனவே, நல்லாட்சி தருகிறேன் என்று ஜெயலலிதா விரித்த மாய வலையில் சிக்கித் தமிழகம் தவிக்கிறது. அணு உலை எதிர்ப்பாளர்களின் மாய வலையில் விழுவதால் என்ன குடி முழுகிவிடப் போகிறது.
மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டிக்காமல், அந்த வன்முறையை ஜெயலலிதா எப்படி நியாயப்படுத்துகிறார் என்று பாருங்கள். ஜெயலலிதாவின் ஒரு ஆண்டு கால ஆட்சியில் நடந்த பரமக்குடி சாவுகள், என்கவுண்டர் சாவுகள் என்று காவல்துறையால் நேர்ந்த அத்தனை மரணங்களையும் ஜெயலலிதா தொடர்ந்து நியாயப்படுத்திக் கொண்டே வந்திருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.
இப்போது பாசிஸ்ட்டுக்கான அளவுகோல் எது என்பது குறித்து கட்டுரையின் முதல் பத்தியில் எழுதப்பட்டிருந்ததை படித்துப் பாருங்கள். ஜெயலலிதா பாசிஸ்டா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
கூடங்குளம் மக்களுக்கு இழப்பதற்கு தங்கள் உயிரைத் தவிர எதுவுமே இல்லை. அணு உலை வந்தாலும் தங்கள் உயிர் மட்டுமல்லாமல், தங்கள் வருங்கால சந்ததியினரின் உயிரும் போகும் என்று உறுதியாக நம்புகிறார்கள். வருங்கால சந்ததியினரைக் காப்பதற்காக, தங்கள் உயிரையும் இழக்கத் துணிந்தே இப்போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அவர்களிடம் இழப்பதற்கு எதுவுமில்லை. அணு உலையை ரஷ்யாவிடமிருந்து வாங்கி, அதன் மூலம் வல்லரசாகலாம் என்ற கனவில் இருக்கும் ஆதிக்க வர்க்கத்திற்குத்தான் இழப்பதற்கு ஏராளமாக இருக்கிறது.
நேற்று, கூடங்குளத்தில் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, உடனடியாக மறியல் போராட்டத்தை அறிவித்து கொட்டும் மழையில் போராட்டம் நடத்தியது மனிதநேய மக்கள் கட்சி. பெயருக்கேற்றார்ப் போன்ற கட்சிதான் அது. 300க்கும் மேற்பட்டோர் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகினர். இன்று மதிமுக, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, பெரியார் திராவடர் கழகம் போன்ற கட்சிகள் போராட்டத்தை அறிவித்துள்ளன.
இந்தக் கட்சிகளுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளது.
கூடங்குளப் போராட்டத் தீ பரவட்டும்.
மனிதநேய மக்கள் கட்சி மறியல் காட்சிகள்
கூடங்குளத்தில் காவல்துறை நடத்திய வெறியாட்டம்